சனி, 30 மே, 2020

தனியாக வந்த சிறுவன் 


1)  நிஜமோ, பொய்யோ...   அவர்கள் இதைதான் முதலில் கண்டுபிடித்தார்களோ என்ன அரசியலோ...    இன்றைய அளவில் இது கொஞ்சம் முக்கியத்துவம் பெறும் செய்தி...  

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக சீனா அறிவித்துள்ளது.




2)  ஐ.ஏ.எஸ்., லட்சியத்துடன் தேர்வுக்கு தயாரான நான், இரண்டாவது முறையாக எழுதிய தேர்விலேயே வெற்றி பெற்றேன்.மொத்தம், 577 ஆண்கள், 182 பெண்கள் என, மொத்தம், 759 பேர் தேர்வானதில், நான், 410-வது இடம் பிடித்தேன். இதன் மூலம், கேரளாவின், வயநாடு மாவட்டத்திலிருந்து தேர்வாகும் முதல் ஐ.ஏ.எஸ்., என்ற பெருமை பெற்றேன்.....




ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகியுள்ள, கேரளாவின், குரிசியா என்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா.

3)  கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு, ரூ.650 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் வழங்கி, உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.




4)  வீட்டை விட்டு பக்கத்து கடைக்கோ அல்லது தெருவுக்கோ விளையாடச் சென்றால் வழிதெரியாமல் குழந்தைகள் திகைக்கும் போது, நெகிழ வைக்கும் சம்பவம்...  "முகத்தில் முகக்கவசம், கையில் கையுறை அணிந்து, ஸ்பெஷல் கேட்டகரி என்ற அட்டையைச் சுமந்து, சிறிய சூட்கேஸ் பிடித்து சர்மா வெளியே வந்தார். சிறப்புப் பிரிவில் பயணித்தார். இந்தத் தகவல் அறிந்த பெங்களூரு கெம்பகவுடா விமான நிலைய நிர்வாகம் தனது ட்விட்டர் தளத்தில், “விஹான் சர்மாவை வரவேற்கிறோம். அனைத்துப் பயணிகளையும் பாதுகாக்க பெங்களூரு விமான நிலையம் தொடர்ந்து பணியாற்றும்” என ட்விட்டரில் தெரிவித்தது..."

எனக்கு கு. கு ஞாபகம் வந்தது.





5)  மொத்த கிராமமே எல்லைக்கு வந்து கண்ணீர் மல்க இருவரையும் வரவேற்றது.

பதினைந்து வயது பெண் 1200 கிமீட்டர் துாரம் சைக்கிளில் அப்பாவை வைத்து ஒட்டிக்கொண்டு வந்த விஷயம் வேகமாகப் பரவ மொத்த மீடியாவும் கிராமத்தில் குவிந்துவிட்டனர்.  ஜோதி குமாரி!




6)  டில்லியை சேர்ந்த பப்பன் கெக்லாட் என்ற பண்ணை விவசாயி, காளான் விவசாயம் செய்து வந்தார். அவரது பண்ணையில், பீகாரை சேர்ந்த 10 பேர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கால் தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்பிய அவர்களுக்கு விமானத்தில் டிக்கெட் எடுத்து கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். கெக்லாட் விமான டிக்கெட்டுக்காக சுமார் 68 ஆயிரம் ரூபாய் செலவிட்டதுடன், தொழிலாளர்களின் செலவுக்காக தலா ரூ.3 ஆயிரமும் கொடுத்து அனுப்பி உள்ளார்.





==================================================================================================



மனதில் ஓர் மணி மண்டபம்
ரமா ஸ்ரீநிவாசன் 


“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை
நன்று” என்ற திருக்குறளையே புரட்டிப் போடும் அளவிற்கு ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் தோன்றி தன் சுய முயற்சியால் முன்னேறி இன்று எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு முன்னோடியாய் திகழும் எழுத்தாளர் லக்ஷ்மிக்கு நாம் ஒரு மணி மண்டபமே எழுப்பலாம். ஆனால், என்னால் முடிந்தது நான் அர்ப்பணிக்கும் இச்சிறு கட்டுரை.




எஸ்.திரிபுரசுந்தரி என்கிற லக்ஷ்மி அவர் காலத்தின் ஸ்டார்
எழுத்தாளர் என்று மிதப்புடன் கூறலாம். ஏனெனில் அவர் தமிழ்
மண்ணைச் சேர்ந்தவர்.  ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன
நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார். அவர் பின் பற்றிய பாதை ஒன்றே – “பத்தினிக்கு இன்னல் வரும் ஆயின் முடிவில் தீரும்”.

இக் கருத்தை ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்குப் போக ஆரம்பித்த பெண்கள் அனைவரும் உள் வாங்கும்படி அவர்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். எனவே, 1960களிலும் 1970களிலும் வீட்டிக்கு வீடு மிகப் பழக்கமாகவும் பிரபலமாகவும் திகழ்ந்த எழுத்தாளர் லக்ஷ்மி என்றால் அது மிகையாகாது.

அவர் இயற் பெயர் எஸ்.திரிபுரசுந்தரியானாலும் கதை எழுதுவதற்காக
புனையப் பட்ட பெயர் ‘லக்ஷ்மி’.  தமிழ் மண்ணான சிதம்பரத்தில் பிறந்த
இவர் பள்ளிப் படிப்பை ஹோலி க்ராஸ் பள்ளியிலும் பின்னர் மேற்
படிப்பான மருத்துவப் படிப்பை சென்னை ஸ்டேன்லி மருத்துவக்
கல்லூரியிலும் முடித்தார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது
உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள்
எப்படியிருந்தன என்பதை ‘கதாசிரியையின் கதை’ என்ற தமது சுய
சரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார் லக்ஷ்மி.  லக்ஷ்மியின்
சுயசரிதையை படித்தால்தான் புரியும் அவருடைய இலக்கிய
சாதனையைத் தாண்டி அவருக்கு வாழ்க்கை பல இடங்களில்
முட்பாதையாக இருந்தது என்பது.

பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்தி ஐந்து
ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து, ஆயிரத்துக்கும் மேலான
சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார்.
மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள்
எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார்.  

மார்ச் மாதம் 1940ல் லக்ஷ்மியின் முதல் சிறு கதை “தகுந்த
தண்டனையா?” ஆனந்த விகடன் நாளிதழில் வெளியானது. இது தந்த
உற்சாகத்தில் அவர் பல சிறு கதைகளை கட்டவிழ்த்து விட, அவை
ஆனந்த விகடனிலேயே வெளியாயின. இப்படித்தான் அவரது எழுத்தாளர் பயணம் தொடங்கியது. அவருடைய முதல் நாவல் “பவானி”யும் ஆனந்த விகடனில்தான் வெளியானது.

1955ல் அவர் கண்ணபிரான் என்பவரை மணந்துக் கொண்டு தென்
ஆப்பிரிக்காவிற்கு குடி பெயர்ந்தார். இருபது வருடங்களுக்குப் பிறகு அவர் கணவர் இறந்த பின், 1977ல் இந்தியாவிற்கு திரும்பி, முழு நேர
எழுத்தாளராக மாறினார். பல சாதனைகளை எழுத்து வடிவாக
இலக்கியமாக படைத்த லக்ஷ்மி அவர்கள் 1987ல் காலமானார்.

லக்ஷ்மி ஒரு மிகச் சிறந்த நிறைவான எழுத்தாளர். அவருடைய
நாவல்களான “பெண் மனம்” மற்றும் “மிதிலா நிவாஸ்” ‘தமிழ் வளர்ச்சி
கழகம்’ பரிசைத் தட்டிச் சென்றன.

மிதிலாவிலாஸ் நாவலில் மாமன் வீட்டில் வளரும் தேவகி
ஏறக்குறைய வேலைக்காரிதான். அவளுக்கு மாமன் மகன் ஈஸ்வரன் மேல் ஈர்ப்பு, ஈஸ்வரனோ கிரிஜா பின்னால். தேவகியின் நல்ல குணம் எல்லார் மனதையும் மாற்றி, பிறகென்ன, சுபம்தான்! சரளமாகவும் நிதானமாகவும் போகும் நாவல் புத்தகத்தை கீழே வைக்க முடியா வண்ணம் விறுவிறுப்பான நடை கொண்டது.




1984ல் இந்திய அரசு அவருடைய நாவலான “ஓரு காவேரியைப்
போல”விற்கு “ஸாஹித்யா அகாடமி” விருதையளித்து கௌரவித்தது.
இருந்தும் என் மனதில் பெரும் தாக்கத்தையும் கெட்டியான
இடத்தையும் பிடித்தது அவரது நாவல் ‘ஸ்ரீமதி மைதிலி’தான்.  அவரது
வழக்கமான கதைதான். மைதிலியை அடக்கி ஆளும் அத்தனை பேரும்
கடைசியில் அவளிடமே வந்து கெஞ்சி கூத்தாடி உதவி பெறுகிறார்கள்.
ஆனால், அவர் மைதிலி என்னும் கதாபாத்திரத்தை வடித்த விதமும்
கொண்டு சென்ற பாணியும் என்னை மிகவும் ஈர்த்தது. ஒவ்வொரு
வீட்டிலுமுள்ள பெண்களின் சொல்ல முடியாத இன்னல்களை மிக
நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தார்.




காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா,
இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென் மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படம் வெகு சிறப்பாகவும் அழகாகவும் எடுக்கப் பட்டு சக்கை போடு போட்டது. இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியது முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி.






அவரது கதைகள் யாவுமே பெண் இனத்தைச் சுற்றி வந்தன.

ஆயினும் அவரது பெண் சித்திரங்கள் பலவீனமானவர்களாக சித்தரிக்கப்
படவில்லை. அப்பெண்கள் பாதிக்கப் பட்டவர்களாக இருந்தாலும்
தைரியமாகவும் நேர் பாதையில் செல்பவர்களாகவுமே இருந்தார்கள்.
அவரின் நாவல்களில் முத்திரைக் குத்திய வில்லிகளும் அடக்கம்.
அவ் வில்லிகள் உபயோகிக்கும் சில சொற்களும், வாக்கியங்களும்
லக்ஷ்மியின் சிறு கதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்தமாகிப் போயின.

லக்ஷ்மியின் எல்லாக் கதைகளுக்கும் மேலும் மெருகு சேர்த்தது
கலைஞர் கோபுலுவின் சித்திரக் கைவண்ணம்தான். அவருடைய எழுத்தும் இவருடைய சித்திரமும் போட்டிப் போட்டுக் கொண்டு யாவர் மனதிலும் பசு மரத்தாணி போல் பதிந்தன.

லக்ஷ்மியின் கதைகளில் வரும் ஆண்கள் பெரும்பாலும்
மென்மையாகவும் கம்பீரமாகவும் சித்தரிக்கப் பட்டார்கள். தோள்
கொடுக்கும் வயது முதிர்ந்த ஆண்கள் நல்லவர், கெட்டவர், வில்லன் என
எல்லா வர்ணங்களிலும் இருந்தார்கள்.

முடிவு வரை, லக்ஷ்மி ஒரு நேர்மறையான எழுத்தாளராகவே
திகழ்ந்தார். அவர் கதைகளில் என்றுமே நல்லவையே ஜெயிக்கும். காதல்
அனுபவங்களும் மென்மையாகவும் மரியாதையாகவும் பட்டும் படாமலும் சித்தரிக்கப் பட்டதால், படிப்பவரின் கற்பனை சிறகடித்துப் பறந்தன.

எழுத்தாளர் லக்ஷ்மியின் கதை நடை தெளிவானதும் நகம் கடிக்கும்
சுபாவத்தை கொடுப்பதாகவும் அமைந்திருந்தது. அவருடைய எழுத்துக்கள் என்றுமே பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்தன. அவருடைய கதாநாயகிகள் யாவரும் நெறி தவறாமல் உண்மையான வழியில் சென்று முடிவில் ஜெயிப்பதாகவே இருக்கும். அவர் தீட்டிய எழுத்தோவியங்கள் யாவுமே எளிமையாகவும் ஆயின் அழுத்தமாகவும் இருந்தன.

அவரது கதாபாத்திரங்கள் யாவரும் லக்ஷ்மியின் விசிறிகளின்
மனதில் இன்று வரை குடி கொண்டிருக்கின்றார்கள். இன்றும் அவரது
கதைகளும் நாவல்களும் தேடிப் பிடித்து படிக்கப் படுகின்றன என்பதே
இதற்கு ஓர் பெரிய அங்கீகாரமாகும்.

சென்னையில் 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி
எல்லோர் மனதிலும் இடம் பிடித்த எழுத்தாளர் லக்ஷ்மி இயற்கை
எய்தினார். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள்
பதிப்பு ஆ.வி.11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்ந்தது மிகவும்
எழுச்சியாகவும் தொடர்புடையதாகவும் இருந்தது :

“வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ
சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்ச போது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.” என்று சொல்லும்போதே திருமதி பட்டம்மாள் வாசனின் குரல் தழுதழுத்துக் கண்கள் பனித்தன.

இவரைப் போல சிறந்த எழுத்தாளர்கள் இன்னும் நிறைய பேர்
உருவாக வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அதே
போல், இந்தத் தலைமுறை இளைஞர்களும் வாட்ஸ் ஆப், ட்விட்டர்,
முகநூல் பார்ப்பது போல் நல்ல கதைகளையும், கட்டுரைகளையும் படிக்க
வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றேன்.

47 கருத்துகள்:

  1. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின்ன் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. இன்றைய செய்திக் கதம்பம் அருமை..

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான காலை வணக்கம் கமலா அக்கா...   இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களைப் பற்றிப் படித்தததும் அவர்களுக்காக ஒரு நிமிடம் தலை வணங்கியது நெஞ்சம்...

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் மனதிற்கு மிக ஊக்கம் அளிக்கின்றன்.
    தந்தையை அழைத்து வந்து சைக்கிள் ராணி ஜோதி குமாரிக்கு முதல் பரிசு.
    வீராங்கனைகள் இப்படித்தான் உருவாகிறார்கள்.
    நினைக்க நினைக்கப் பெருமை.

    மூன்று மாதம் பிரிந்திருந்த விஹானுக்கு அன்பும் ஆசிகளும்.
    தனியே விமானத்தில் வந்திருக்கிறான் அதற்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பெருந்தன்மை
      அளவிட்டுச் சொல்ல முடியாது.
      இது போல இன்னும் எத்தனையோ நபர்கள் முன் வரலாம். வருவார்களாக
      இருக்கும்.

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா...   இனிய வணக்கம்.  ஆம்..    அவருக்குதான் முதல் பரிசு தரவேண்டும்.  விஹான் தாயைப் பார்த்தபோது எப்படி உணர்ந்திருப்பான்?

      நீக்கு
  7. காளான் பண்ணை பப்பன் கெய்க்வாட் போற்ற வேண்டிய மனிதர்.
    ஊருக்கு இவர் போல பத்து மனிதர் இருந்தால் போதும்
    பல நூறு மக்கள் நன்மை அடைவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமாஸ்ரீயின்
      திருமதி லக்ஷ்மி பற்றிய கட்டுரை
      மிகப் பெருமை கொள்ள வைக்கிறது. நாங்கள் எல்லாம் அவர்கதைகளில்
      வளர்ந்தவர்கள். எனக்கு முன்னால் என் அம்மா ,பாட்டி இவர்களுடைய அபிமான எழுத்தாளர்.

      இப்போதும் அவர் புத்தகங்கள் என்னை மகிழ்விக்கின்றன.
      அத்தனை ஜீவன் அவர் எழுத்தில்.
      மிக நன்றி ரமா.

      நீக்கு
    2. எல்லோருக்கும் காலை வணக்கம். நன்றி வல்லிம்மா. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். எந்த முரன்பாடும் (controversy) இல்லாமல் மிக எளிமையான நடையுடன் எழுதுவார்.

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.இன்றிலிருந்து இனி வரும் நாட்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் தரப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...  காலை வணக்கம்.  பிரார்தனைகளில் அனைவரும் இணைவோம்.

      நீக்கு
  10. கொரோனா தொற்றுக்கு மாற்று மருந்து கண்டுபிடித்தது உண்மையானால் அது வெற்றி பெற்று உலகில் அனைவரும் பயனடையும்படி சந்தைக்கு வரட்டும் எனப் பிரார்த்தனைகள். செய்திகள் அனைத்தும் விஹான் சர்மாவைத் தவிர்த்து படித்தவை. ஜோதிகுமாரியைப் படிக்க வைக்கவும் பலர் முன் வந்துள்ளனர். அனைத்து மனிதர்களும் தங்களிடம் உள்ள மனிதாபிமானத்தைக் காட்டி உள்ளனர். அடிப்படையில் அனைவரும் நல்லவர்களே என்பதையும் எடுத்துச் சொல்லுகிறது.

    பதிலளிநீக்கு
  11. மருத்துவப் படிப்பிற்கான மேற்செலவுக்காகக் கதைகள் எழுத ஆரம்பித்ததாக "லக்ஷ்மி" ஒரு பேட்டியில் சொல்லி இருந்த நினைவு. ஆரம்பகாலங்களில் தந்தைக்குத் தெரியாமலேயே எழுதி வந்ததாகவும், அதனாலேயே தன் பெயரை "லக்ஷ்மி" என்னும் புனைப்பெயரில் மாற்றிக் கொண்டதாகவும் சொல்லி இருக்கிறார். அவர் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்தது "அரக்கு மாளிகை" நாவலும் அவர் தென் ஆப்ரிக்கா போய்த் திரும்பியதும் எழுதிய பயணக்கட்டுரை, "இருண்ட கண்டத்தில் எட்டு ஆண்டுகள்" இரண்டும் பிடித்தவை.

    பதிலளிநீக்கு
  12. லக்ஷ்மியின் தோட்டத்து வீடு சிறப்பான நாவல் ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  13. எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களின் விவரங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  14. அக் காலத்தில் பெண்களின் மனம் கவர்ந்த எழுத்தாளராக விளங்கிய லட்சும் அவர்களைப் பற்றிய விவரங்க்ளை அறிந்ததில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முரளி அவர்களே, எனக்கு இவரைப் பற்றி வெகு நாட்களாக எழுத வேண்டும் என்று ஒரு ஆசை. என் சிறு வயது நாட்களில் டீ.வியும் மொபைல் போனும் கிடையாது. ஒரே பொழுது போக்கு புத்தகங்கள்தான். என் அம்மா எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் எழுத்தாளர் லக்ஷ்மியை.

      நீக்கு
  15. ஜோதி குமாரியின் தன்னம்பிக்கை போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு
  16. விஹான் சர்மாவும் ஜோதி குமாரியும் மரியாதையும் மதிப்பும் கலந்த வணக்கத்திற்குரியவர்கள். என்ன ஒரு இளம் வயதில் என்ன ஒரு தன்னம்பிக்கை.

    பதிலளிநீக்கு
  17. லக்‌ஷ்மி அவர்களின் கதைகள் பெரும்பாலும் பெண்கள் ஆர்வமாகப் படிக்கும்படி இருந்தது என்பது என் நினைப்பு. என் அம்மா 'மிதிலா விலாஸ்' பற்றி முன்பு சொல்லியிருக்கிறார்.

    அவரைப் பற்றி எழுதியது சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் ஆர்வமாகப் படிக்கும்படியா?..

      அப்படிப் பெண்கள் ஆர்வமாகப் படிக்க வேண்டுமானால் கதைகள் எப்படி இருக்க வேண்டும், நெல்லை? ஒரு சின்ன டிப்ஸ் கொடுங்களேன். அதன்படி ஏதாவது எழுதலாமா என்று பார்க்கிறேன்.

      நீக்கு
    2. மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
    3. ஜீவி சார்... இதை ரொம்ப விவரிக்கலாம். Family drama. அறிவு ஜீவித்தனமா இருக்கக்கூடாது. உறவுகள், செண்டிமெண்ட்ஸ் இருக்கணும்.

      எங்கப்பா, எனக்கு சின்ன வயசுல, குமுதம் புத்தகம் தொட்டாலே, என்னடா பொம்பளைப் பத்திரிகை படிக்கற என்று கோபமாச் சொல்லுவார். துக்ளக், கல்கி படிக்கும்போது அப்படி சொல்லவே மாட்டார்.

      இந்த ஹிண்ட் போதுமா?

      உங்களுக்குத் தெரியாததா?

      நீக்கு
  18. ரமாஸ்ரீ, தமிழில் எழுதுவதில் உங்கள் முன்னேற்றம் பிரமிக்க வைக்கிறது. அதுவும் நாவலாசிரியை லஷ்மி பற்றி இவ்வளவு சிறப்பான கட்டுரை ஒன்றை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை. லஷ்மி என்றவுடனேயே ஒரு சினிமா நடிகையைப் பற்றிய நினைப்பு ஏற்படுவதையும் தாண்டிய ஒரு காலத்தில், அக்காலத்தின் 'பெண்மனம்' நாவல் படைத்த லஷ்மி பற்றி எழுதியிருக்கிறீர்கள். பழைய நினைவுகளைக் கிளறி விட்டமைக்கு நன்றி, நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவெ சார், சொல்வதற்கு மன்னிக்கவும். இது என் தலையின் மேல் சூட்டிய ஓர் மகுடமாகும். நீங்கள் யாவரும் அனுபவம் மிக்க எழுத்தாளர்கள். "வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி" பட்டம் பெற்ற ஓர் உணர்ச்சி. ஊக்குவித்தலுக்கு மிகப் பெரிய நன்றி.

      நீக்கு
  19. தந்தையை சைக்கிள் காரியரில் வைத்துக் கொண்டு 1200 கிலோ மீட்டர் பயணித்த அந்த சின்னப்பெண்ணின் மன உறுதி வியக்க வைக்கிறது. தன் சொந்த செலவில் பண்ணை ஆட்களை  சொந்த ஊருக்கு  அனுப்பி வைத்ததோடு நிற்காமல் அவர்கள் கை செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்பியிருக்கும் பப்பன் கேக்லாட் பாராட்டுக்குரியவர். ஏழை குழந்தைகளின் குடும்பத்திற்கு மளிகை சாமான்கள் வாங்கி தந்திருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் நல்ல முன்மாதிரிகள். ஐ.ஏ.எஸ்.அதிகாரியாகியுள்ள தன்யாவைப் பற்றி முக நூலில் படித்தேன். பாராட்டுக்குரியவர். இவரைத் தொடர்ந்து இன்னும் பல பெண்கள் அவர்கள் இனத்திலிருந்து மேலே வர வேண்டும். டில்லியிலிருந்து சென்னைக்கு தனியாக வந்திருக்கும் விஹான் சர்மா சமத்து குழந்தை. விமானத்தில் un accompanied child என்று குழந்தைகளை தனியாக அனுப்பும் வசதி உண்டு. கோவிட்-19க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதல் நிலையில்  சீனா வெற்றி பெற்றிருக்கிறதா? எனக்கு முதல்வன் படத்தில்  ரகுவரன் பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது  (இவரே  வெடிகுண்டை வைப்பாராம், இவரே எடுப்பாராம்..) எனக்கு மீம்ஸ் பண்ணத் தெரியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.    

    பதிலளிநீக்கு
  20. எழுத்தாளர் லக்ஷ்மி பற்றி ரமா ஸ்ரீனிவாசனின் கட்டுரை நன்றாக இருக்கிறது. அவருடைய கதைகளுக்கு ஒரு டெம்ப்லேட் உண்டு. அவருடைய சுய சரிதம் போல ஒன்று எனக்குப் பிடிக்கும். அவரை நீண்ட நாட்கள் எழுதாமல் இருந்து விட்டு, இந்தியாவிற்கு திரும்பியதும் 'அத்தை' என்று ஒரு தொடர்கதை குமுதத்தில் எழுதினார்.  அது எனக்கு பிடித்தது. 

    பதிலளிநீக்கு
  21. லக்ஷ்மி நடுவில் எழுதாமல் இருந்தாலும், மீண்டும் எழுத ஆரம்பித்த பொழுது அப்போதய ட்ரெண்டை பின்பற்றியது சிறப்பு. லக்ஷ்மியின் என் பெயர் டி.ஜி. கார்த்திக், சிவசங்கரியின் ஒரு சிங்கம் முயலாகிறது(இந்தக் கதை 'அவன் அவள் அது' என்று படமாக்கப்பட்டது),இந்துமதியின் மணல் வீடுகள் மூன்றும் ஒரே கருவைக் கொண்டு, ஒரே சமயத்தில் வெளியாகி, வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நாவல்கள். 

    பதிலளிநீக்கு
  22. கதைஉலகில் வெற்றி பெற்றவகளுக்குத்தெரியும் NOTHING SUCCEEDS LIKE SUccess

    பதிலளிநீக்கு
  23. லக்ஷ்மி சிறந்த எழுத்தாளர் அவரை சிறப்பித்து பதிந்தது நன்று.
    அனைத்து சாதனையாளர்களையும் வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. தன் தந்தையை சைக்கிளில் வைத்து 1200 கிலோ.மீட்டர் பயணம் செய்து தன் சொந்த கிராமத்தை வந்தடைந்த ஜோதி குமாரியின் துணிச்சல் வியக்க வைக்கிறது.

    தனியாக விமான பயணம் செய்து தன் தாயிடம் வந்தடைந்த சிறுவனின் தைரியமும் கண்டு வியப்படைந்தேன். தைரிய மனம் படைத்த இருவருக்கும் பாராட்டுக்கள்.

    மற்றும் தங்களிடம் படிக்கும் ஏழை மாணவர் குடும்பத்திற்கு, உதவி செய்த பள்ளி ஆசிரிய பெருமக்களுக்கும, ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்று வாகை சூடியிருக்கும் தன்யா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    எழுத்தாளர் லஷ்மி அவர்களுடைய எழுத்துலக பயணங்கள் பற்றிய கட்டுரையை அழகாக தொகுத்து தந்த சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். கட்டுரையிலிருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். எனக்கும் லஷ்மி அவர்களின் குடும்ப கதைகள் மிகவும் பிடிக்கும். சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்கள் குறிப்பிட்டுள்ள கதைகளை நானும் அப்போது ஆர்வத்துடன் படித்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் நம்பிக்கையை தருகிறது. மருந்து கண்டுபிடிக்க பட்டு விட்டது கொரோனா ஓடி விடும் என்ற நம்பிக்கை, முயற்சி வெற்றியை பெற்றும் தரும் என்றும். எளிய மாணவ குடும்பங்களுக்கு உதவிய ஆசிஎய்யர்கள், தொழிலாளிக்கு உதவிய முதலாளி இவர்களின் மனித நேயத்தை காட்டுக்கிறது.

    குழந்தை நிலமையை புரிந்து கொண்டு மன உறுதியுடன் தனியாக பயணம் செய்து வந்தது எல்லாம் அருமையான செய்திகள்.

    பதிலளிநீக்கு
  26. ரமா ஸ்ரீநினிவாசன் அவர்கள் எனக்கு பிடித்த எழுத்தாளரைப்பற்றி அருமையாக சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள்.
    அவர் கதையின் நாயகி எளிமை, வறுமையிலும் செம்மை,மன உறுதி, சிக்கனம் அன்பு உடையவராக இருப்பார்.

    பதிலளிநீக்கு
  27. கட்டுரையும் அனைத்து பாசிட்டிவ் செய்திகளும் நன்றாக இருக்கின்றன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  28. எழுத்தாளர் லக்ஷ்மி பற்றிய கட்டுரை மிக நன்றாக இருக்கிறது ரமா.

    அந்தக் குட்டிப் பையன் தனியாக வந்த செய்தி கூகுள் செய்தில் வந்தது வாசித்தேன்.

    ஜோதிகுமார் மனதை நெகிழ வைத்துக் கண்ணில் கண்ணீர் கசிய வைத்துவிட்டார். அவர் தந்தைக்கும், குமாரிக்கும், அவர்கள் குடும்பத்திற்குப் பிரார்த்தனைகள்

    பப்பன் கெக்லாட் வாழ்க அவர் நல்ல மனம்! வாவ் போட வைத்தார்.

    மற்ற செய்திகளும் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  29. பாஸிட்டிவ் செய்திகளின் தொகுப்புக்கு நன்றி.

    எழுத்தாளர் லக்ஷ்மியைப் பற்றிய விரிவான தகவல்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!