சனி, 22 ஆகஸ்ட், 2020

குமாரும் நதியாவும் ஒரு வருடமாக....


1)  கொரோனாவைக் கண்டு தனியார் மருத்துவமனைகளே நடுங்கும்போது, இவர் தாமாக முன்வந்து உதவுவது பாராட்டுக்குரியதே.   கொரோனா காலத்தில் 150 நாட்களாக பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்கி சித்தமருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகிறார் பழநி அரசு மருத்துவர் மகேந்திரன்.




2)  திருவாரூர் வாளவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.வி.குமார். 
இவரின் மனைவி நதியா. இருவரும் நாட்டுப்புற இசைக் கலைஞகள். வள்ளலார்மீது கொண்ட பற்றால் ஆதரவற்றவர்களின் பசியைப் போக்க, கடந்த ஒரு வருடமாக தங்களது வருமானத்தின் ஒருபகுதியில் இருவரும் இலவச உணவு வழங்கி வருகின்றனர்.




3)  உடலும் மனமும் சோர்ந்து தன்னைக் கவனித்துக்கொள்ளவே பலரும் சிரமப்படும் 85 வயதிலும் சமூகசேவை செய்வதற்காக, காலையிலேயே கிளம்பிவிடுகிறார் லலிதாம்மா.



4)  2010–ஆம் ஆண்டு சென்னை மதுரவாயில் காவல்நிலையத்துக்குப் பதவி உயர்வில் ஆய்வாளராக வந்த ஆனந்த்பாபு, சூளைமேடு பகுதியில் இருக்கும் திருநங்கைகளுக்கு ஆனந்த்பாபு ஒரு உற்ற தோழனாகவே இருக்கிறார். அவர்களின் மறுவாழ்வு, மாற்றுத்தொழில் ஏற்பாடு என உதவி செய்து வருகிறார்.




===================================================================================================


தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ரமா ஸ்ரீநிவாசன் 

என் அன்பு மிக்க தந்தையின் வருஷ திவசம் இம்மாதம் 9ஆம் தேதி
எப்போதும் போல் நடைபெற இயலாமல் ஓர் இரண்ய சிரார்த்தமாக
நடந்தேறியது. கொரோனா கலக்கத்தால் புரோகிதர்களும் வர மறுத்தனர்.
சமையல் செய்ய வெளி மனிதர்களை அனுமதிக்கும் தெம்பும் தைரியமும்
என் சகோதரனுக்கு இல்லாததால் இவ்வருடம் என் தந்தைக்கு இரண்ய
சிரார்த்தமாக அமைந்து விட்டது. அவர் அதை அவசியம் ஆமோதிப்பார் என்று நம்புகின்றேன்.

இந்நிகழ்ச்சியே என் இன்றய கட்டுரையின் தூண்டுகோல்.

என் கண்ணோட்டத்தில் என் தந்தை எனக்கு “one and only” ஹீரோ. நாம்
பிறந்ததிலிருந்து முடிவு வரை ஒரு புல் பூண்டைக் கூட எதிர்பார்க்காமல்
நமக்கு நன்மை ஒன்றயே செய்பவர் நம் தந்தையன்றி யாரும் இல்லை.
ஒரு தாயின் கடமை தன் பிள்ளைகளை திறம்பட வளர்த்து, ஆளாக்கி
நற்குணங்களை கற்பித்து நன்மக்களாக உலகுக்கு அளிப்பதில் இருக்கிறது.

ஆயின்  தந்தையின் வழி காட்டும் பயணம் பிள்ளை பேறு முதல்
அவன் / அவள் வாழ்நாள் முழுக்க தொடருகின்றது.

இன்று வரை நான் குழப்பமான தருணங்களில் என் தந்தையின்
புகைப்படத்திற்கு எதிரே நின்று வணங்குவது இயல்பான ஒரு செயல். விடை கொடுப்பார் என்பதில் சிறிதளவும் ஐயமே இல்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் எனக்கு தீர்க்கமான விடை கொடுத்திருக்கின்றார்.
குழந்தைகள் யாவரும் தங்கள் நான்காம் வயது முதல் ஓடிபஸ்
காம்பிளக்ஸ் (Oedipus Complex) தாக்கத்தின் விளைவுகளை உணர்ச்சி பூர்வமாக அனுபவிப்பவர்கள். அம்முறையில்தான் நானும் என் அப்பாவிடம் ஒட்டிக்கொண்டேன். அவர் எது செய்தாலும் அது அதிசயம். அவர் எது சொன்னாலும் அது வேத வாக்கு.

ஒரு தாய் என்பவள் எப்படி பலப் பல பரிமாணங்களை எடுத்துத் தன்
பிள்ளைகளை சீரும் சிறப்புமாய் வளர்க்கின்றாளோ அதே போல் தந்தையும் அஷ்டாவதாரங்களை அனாயாசமாக எடுக்கும் ஓர் அரிய மனிதன்.

பிள்ளையின் வாழ்க்கையில் தந்தையின் பங்கானது அவன் / அவள்
பிறப்பில் தொடங்கி அவர்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த நிலையை
அடையும் வரை எதிர் கொள்ளும் ஒவ்வொரு போராட்டத்திலும் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் வியர்வைத் துளிகளாக, உழைப்புத் துளிகளாக பொறிக்கப் பட்டுள்ளவை.

தந்தை என்பவர் முதலில் ஓர் அன்னைக்குப் பிள்ளையாகவும்,
மனைவிக்கு கணவனாகவும் பின்னர் ஒரு பிள்ளைக்கு தந்தையாகவும் வடிவெடுக்கின்றார். எனவே, தந்தையாவதற்கு முன்பே அதற்கு வேண்டிய நெளிவு சுளிவுகளை கற்கும் பள்ளியாக அவரது வாழ்க்கை அமைகிறது.

ஒரு குழந்தை பிறந்ததன் மகிழ்ச்சியில் திளைக்கும் போதே அதன் சுகமான வாழ்வுக்கான வாழ்வாதாரத்தை தயார் செய்யும் அதி அவசியமான வேலையில் இறங்குகின்றார். அக்குழந்தையின் கல்விக்கு வேண்டிய பணம்குழந்தை வெளிநாடு சென்று கல்வி கற்க வேண்டுமெனில் அதற்கான பண சேமிப்பு, பின்னர் அக்குழந்தை வளர்ந்ததும் அவன் / அவளின் திருமணத்திற்கான சேமிப்பு, அவர்களுடைய சுகமான வருங்கால வாழ்விற்கான வருமானம், வசதியிருந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடுசுகமாக வளைய வர ஒரு கார் என ஆதி முதல் அந்தம் வரை வழி முறைகளை யோசித்து சேர்க்கும் ஓர் அரிய மனிதர் தந்தைதான்.

இவை யாவையும் தாண்டி, அவர் தன் பிள்ளைகளுக்கு குருவிற்கு முன்னால் வரும் குருவாவார். குழந்தை பிறந்தது முதல் ஒரு தாய் அவனை அல்லது அவளை ஊட்டி சீராட்டி வளர்ப்பாள். ஆயின் தந்தை என்பவர் தன் நடத்தையால் தன் பிள்ளைக்கு வாழ்வின் எதிர் காலத்திற்கு வழி வகுப்பவர்.

குழந்தை தத்தி தத்தி நடை பயிலும் முதல் தன் அன்னையையும் தந்தையையும் கூர்ந்து கவனித்து வளர்கிறது.

அம்மா நற்குணங்களையும் வாழ்க்கை முறைகளையும் போதிக்கும்
வேளையில் தந்தையானவர் அதே குழந்தைக்கு நேர்மை விதிகளையும்
நிதானமான சிந்தனைகளையும் தன் அன்றாட வாழ்க்கையின் போக்கில்
ஏட்டுக் கல்வியாக இல்லாமல் வாழ்க்கை நெறிகளாக அதன் மனதில் ஆழப் பதிய வைக்கின்றார்.

நண்பர்களே, நான் பேசுவது என் அனுபவத்திலிருந்து. ஏனெனில் நானும்
பெண்தான். நானும் ஒரு தாய். ஆனால் நான் என் பெண்களை
உட்கார்த்தி வைத்து பல நேரங்களில் கூறும் அறிவுரைகளை அதி சுலபமாக தன் நடத்தையால் என் கணவர் அவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதையும் அது அவர்களின் மனதில் இன்று வரை ஆழமாக
பதிந்திருப்பதையும் காண்கிறேன்.

என் தந்தை தமிழ்நாடு எலெக்டிரிசிடி போர்ட் (TNEB) அலுவலகத்தில்
எக்ஸிகூடிவ் எஞ்சினியராகப் பணி புரிந்தவர். என் சிறு வயது முதல் அவர்
தன் சக அலுவலர்களிடமும் தன் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களிடமும் எவ்வாறு பழகுகின்றார் என்று பார்த்தறிந்தவள் நான்.

தன் அதிகாரி எங்கள் வீட்டிற்கு வந்தாலும் எழுந்து நிற்பார். அதே போல்
தொழிலாளி வந்தாலும் எழுந்து நின்று வரவேற்பார். அதற்கு அவர் சொல்லும் காரணைம் : “அதிகாரமும் தொழிலாளித்தனமும் அலுவலகத்தின் வாசலோடு முடிந்து விடுகின்றன. அவர்கள் என்னைத் தேடி என் வீடு வரும்போது அவர்கள் என் விருந்தாளிகள். எனவே இருவருக்கும் ஒரே மரியாதைதான்என்பதாகும். இந்த மிக அழகிய குணத்தையும் சமத்துவத்தையும் கற்று தந்தது என் தந்தையின் நடத்தைதான்.

மேலும் அவருடைய நண்பர்கள் அவரைப் பற்றி பேசும்போது மறக்காமல் மேற்கோள் காட்டிக் கூறுவது அவரின் நேர்மையைதான்.  அன்று அது எனக்கு பெருமையைத் தந்தது.  இன்று அது என் வாழ்க்கை போக்காகி
விட்டது. எங்கள் தந்தை எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முதல் பாடம் :
தனியாக வேலை செய்யும்போது நேர்மையைக் கடை பிடியுங்கள்; பின்னர் மற்றவருடன் வேலை செய்யும்போது அது தானாக உங்கள் நடைமுறையாகி விடும்என்பதுதான். சொன்னவர் மட்டும் அல்ல. அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர். அவர் தன் நேர்மையினால் பல இன்னல்களைச் சந்தித்திருக்கின்றார். இருந்தும் என்றும் அசைந்து கொடுக்காத அஞ்சா நெஞ்சர்.

பள்ளிக்கு / கல்லூரிக்கு செல்லும் வயது முதிர்ந்ததும் அவர் கற்றுக்
கொடுத்த அடுத்த பாடம் படிப்பிலும் தேர்விலும் நேர்மையை கடைப்
பிடிப்பதுதான். எங்கள் தந்தையின் ஃபேமஸ் வாக்கியம் :  “நீங்கள் தேர்வில் வெற்றி பெறா விட்டால் சிறிது மன வருத்தத்துடன் போகும். ஆனால்தப்பாக தேர்வெழுதி வெற்றி பெற்றால், என்றும் மன வருத்தத்துடன் போகும்” என்பது. இது எங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து இன்று வரை காத்துள்ளது.

மற்றும் எங்கள் தந்தையில் மிகச் சிறந்த குணமானது பிள்ளைகளுக்குள்
ஆண் பெண் வித்தியாசம் பாராதது. என்னையும் என் சகோதரனையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பார். 1970களிளேயே எங்கள் உறவினர் யாவரும் எதிர்த்தும் கேளாமல் என்னை ஒரு கோ எஜுகேஷன் (co-education) பள்ளியில் சேர்த்து அனைத்து லூட்டிகளையும் அடிக்க வைத்து பட்டைத் தீட்டிய வைரமாய் வெளி கொணர்ந்தார்.



நான் ஆண்களிடம் சகஜமாகப் பழகுவதிலும் எந்தக் கட்டுப்பாடும்
விதிக்காதவர். ஆனால் அதன் உட்புகுந்து நன்மைகள் யாவை, தீமைகள்
யாவை என்பதை விரிவாகவும் விளக்கமாகவும் புரிய வைத்தவர்.

என்னிடமும் என் சகோதரர்களிடமும் அவர் அடிக்கடி கூறுவது : “அந்தந்த
வயதில் அந்த வயதிற்கேற்ற கேளிக்கைகளை தவறாமல் அனுபவித்து விட்டு சூடு படாமல் வெளி வருவதுதான் பிற்காலத்தில் உங்களை வலுவாக்கும்” என்னும் பொன் வாக்கியம். வளர்ந்து திருமணமாகி இப்போது நான் இரு பெண்களுக்கு தாயான பின் அவர்களுக்கு கூறும் அறிவுரையும் இதுதான்.

என் தந்தை கூறிய ஒவ்வொரு அறிவுரையும் எனக்கு வளர வளர
மிகவும் உதவியாகவும் வலிமை மிக்க, ஏறுவதற்கேற்ற ஏணிப்படியாகவும் திகழ்ந்தது.

நான் திருமண பந்தத்தில் காலெடுத்து வைத்து இரு சுட்டிப் பெண்களை
பெற்றெடுத்த பின்னர், அவரது ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் பொதிந்திருந்த அர்த்தத்தையும் உண்மையையும் உணர்ந்தேன்.

என்றுமே பிள்ளைகளுக்கு நாம் எடுத்துக் காட்டாகவும் முன்மாதிரியாகவும் வாழ வேண்டும். இந்த வரியைச் சொல்வது சுலபம்.  ஆனால், நடைமுறை படுத்துவது மிகவும் கடினம். ஏனெனில் பல நேரங்களில் வேலை முடிய வேண்டும் என்ற அவசரத்தில் பெற்றோர்களாகிய நாம் சிலப் பல தவறுகளை செய்து விடுகின்றோம். அவை நம் பிள்ளைகளின் மனதில் பதிந்துஇப்படி செய்வது சரிதான்என்ற முத்திரையைக் குத்தி விடுகின்றன. அதை மாற்றுவது என்பது மிகவும் கடினம். எனவே, பெற்றோராகிய நாம் இருபத்தி நான்கு மணி நேரமும் எச்சரிக்கையுடன் செயல்களை கையாள வேண்டும்.

என் கணவர் என்கின்ற தந்தை தன் பெண்களுக்கு விவரம் புரியும் நாளிலிருந்து கூறும் ஒரே அறிவுரை இதுதான் : “நீ செய்யும் காரியம் சரியானது என்ற மனதார நம்பிக்கை உன்னுள் இருந்தால், உச்ச நீதிமன்ற நீதிபதி கேட்டாலும் உண்மையைச் சொல். பின் விளைவுகளை பற்றி பயம் கொள்ளாதே”. நான் இவ்வார்த்தைகளை மிக நேர்த்தியானவையாக கருதுகின்றேன். உண்மையிலேயே பெருமைப் படுகின்றேன். இவ்வளவு நல்ல ஒரு தந்தை என் பெண்களுக்கு வாய்த்தமைக்கு.

ஒரு தந்தை என்பவர் தன் பிள்ளைகளுக்கு பயமின்றி ஏறி உலகை
ஆராய வலு மிகுந்த தன் தோள்களை ஏணியாக்குகின்றார் (You can climb on to his firm shoulders and stand tall to explore the wide world).

என் தந்தையும் அப்படித்தான் என்னை வளர்த்தார்.  என் கணவரும்
அப்படித்தான் தன் பெண்களை வளர்த்திருக்கின்றார்.

ஆகவே, நண்பர்களே, கண்டிப்பாக தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை. ஆயின்தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”.

சத்தமே போடாமல் வரலாறு படைப்பவர்கள் தந்தைகள்.  உலகிலுள்ள அத்தனை தந்தைமாரையும் என் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.

38 கருத்துகள்:

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   வணக்கம்.  நன்றி.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம், அன்பின் துரை,
      அன்பு சகோதரி கமலா
      அனைவருக்கும் இனிய வினாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
      உச்சிப் பிள்ளையார், லஸ் பிள்ளையார்,மதுரைப் பிள்ளையார்
      என்று எல்லாப் பிள்ளையார்களும் உலக மக்களைக் காக்க வேண்டூம்.

      நீக்கு
    3. பழனி மருத்துவர் மகேந்திரனின்
      உதவி மக்களுக்கு அருமருந்தாக
      உபயோகமாயிருக்கும் என்பதில் சந்தேகம்
      இல்லை. நல்ல மனங்கள் என்றும் சிறந்த வாழ்வைப் பெற வேண்டும்.

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  விநாயகர் நம்மை அனைவரையும்  காத்தருளட்டும்.

      நீக்கு
  4. குமார் நித்யா தம்பதிகளைப் பற்றி முன்பே படித்தேன்.
    உலகில் மிகச்சிறந்த ,தானம் அன்ன தானம். வள்ளலார் வழி
    அவர்கள் நடப்பது மிகச் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். காக்கும் கடவுள் கணபதி அனைவரையும் பிணிகளின்றி சகல சௌபாக்கியங்களை தந்து காத்தருள வேண்டுமென மனதாற அவன் பாதங்களை தொழுது வேண்டிக் கொள்கிறேன்.

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

    கொரானாவிற்காக மக்களுக்கு உதவியாக இருந்து வரும் பழனி அரசு சித்த மருத்துவருக்கும், வள்ளலார் வழியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட தம்பதிகளுக்கும், வயது முதிர்ந்த பிறகும் சமூக சேவை செய்து வரும் லலிதாம்மா அவர்களுக்கும், திருநங்கைகள் வாழ்விற்காக பல உதவிகள் செய்து வரும் மதுரவாயல் காவல்துறை அதிகாரி ஆனந்த் பாபு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

    சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் கட்டுரை மிக நன்றாக உள்ளது. நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவரவர்களின்
    தந்தையர்களின் பங்கேற்பு மிகச் சிறந்ததுதான். தாயின் அன்பும், தந்தையின் அறிவுரைகளும் என்றும் நம்மை சிறப்பாக வாழ வைக்கும். மிக அழகாக அதை விளக்கிய சகோதரிக்கு நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் யாவருக்கும் இவ்வுலக வாழ்க்கையின் பிள்ளையார் சுழியே அவர்கள்தானே போட்டார்கள். அவர்களுக்கு தல் வணங்கும் மடல் இது்

      நீக்கு
  6. மதிப்பு மிக லலிதாம்மா,
    பற்றிப் படிக்கப் படிக்க மனம் உயர்கிறது.
    இப்படியும் ஒரு ஆத்மா இருக்க முடியுமா
    என்ற அதிசயம் நெகிழ வைக்கிறது.
    நடந்தே சென்று இத்தனை உயிர்களுக்கு
    நன்மை செய்கிறார் என்றால் சாதாரணமில்லையே.
    அவரைப் பற்றி இங்கு சொன்னதற்கு மிக நன்றி மா ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. மதுரவாயல் நண்பர் இன்ஸ்பெக்டரின் அன்பு மனம் உயர்ந்தது.

    திரு நங்கைகளை நினைக்கும் போது ஒரு வருத்தம்
    வரும். இவர் அவர்கள் துன்பத்தை மாற்ற உதவி செய்கிறார் என்றால்
    அந்த உதவி மகத்தானது.
    அவருக்கு நம் மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. வழக்கம் போல்
    ரமாஸ்ரீயின் தந்தையர் தின நினைவுகள்
    மிகச் சிறப்பு.
    அவரது தந்தைக்கும், திரு ஸ்ரீனிவாசனின் தந்தைக்கும்,,
    திரு ஸ்ரீனிவாசனுக்கும் நம் அன்பு.

    பதிலளிநீக்கு
  9. நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம். இன்றைய பாசிடிவ் செய்திகள் அருமை.

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கம்.

    அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    இன்றைக்கு பகிர்ந்து கொண்ட பாசிட்டிவ் செய்திகள் அனைத்துமே சிறப்பு. ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்களே!

    தந்தை பற்றிய கட்டுரை வெகு சிறப்பு. குடும்பத்தின் பாரத்தினைச் சுமக்கும் தந்தையின் அன்பு பெரும்பாலும் பேசப்படுவதே இல்லை. கட்டுரை ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் சார், தந்தைகளாகிய நீங்கள் யாவரும் unsung heroes. எனவேதான் இந்த கட்டுரை.

      நீக்கு
  11. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  12. இன்றைய + நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்...

    கட்டுரை அருமை...

    வாழ்வின் ஏணியாக விளங்கும் தந்தைக்கும், ஏணியாக மாற்றிய தாய்க்கும் வணக்கங்கள்...

    பதிலளிநீக்கு
  13. கட்டுரை சிறப்பாக இருக்கிறது...

    //அவர் தன் நேர்மையினால் பல இன்னல்களைச் சந்தித்திருக்கின்றார்//

    இதுதானே இந்திய நியதி.

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்திய நியதி மட்டும் அல்ல..
      இவ்வுலகின் நியதியும் இதுவே ஆகும்...

      நீக்கு
  14. வழக்கம்போல போற்றத்தக்கோரைப் பற்றிய அரிய பதிவு.

    என்னைப் போல பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்று நண்பர்கள் என்னை மேற்கோள் காட்டிக்கூறும்போது நான் நெகிழ்ந்ததுண்டு. என் மகன்களை இப்படித்தான் வளர்த்தேன். அவர்கள் தம் பிள்ளைகளை இவ்வாறு வளர்க்கவேண்டும் என்று கூறிவருகிறேன். எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் அவள் என்னைப் பற்றி இப்படித்தான் எழுதியிருப்பார் என பெருமையோடு கூறிக்கொள்கிறேன் அம்மா. தந்தைக்குப் புகழாரம் சூட்டிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் உங்கள் மகள் ஸ்தானத்திலிருந்து எழுதினேன் என்று கொள்ளுங்கள்.

      நீக்கு
  15. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    நன்மனம் கொண்டு உதவும் கரங்களுக்கும் வாழ்த்துகள்.
    ரமா ஸ்ரீனிவாசன் கட்டுரை தந்தையர் ஒவ்வொருவரையும் நினைவு கொள்ள வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் மிக அருமை.மனிதநேயம் உள்ளவர்கள் ஆறும் சேவைகளை சொல்கிறது.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. ரமா ஸ்ரீனிவாசன் கட்டுரை மிக அருமை.
    தந்தையின் அருமை பெருமைகளை அழகாய் சொன்னார்.
    என் தந்தையின் நினைவு வந்தது.
    அவர் தந்தைக்கு வணக்கம்.

    பதிலளிநீக்கு
  19. பாசிடிவ் செய்திகள் எல்லாம்நன்று
    ஒரு தந்தை தன்மகனைத் தன் தோள் மேலேற்றி கோவில் கடவுளைக்காண்பித்தாராம் பின் அந்தமகன் சொன்னனாம் தந்தை தோளில் அமர்ந்து கடவுளை தரிசித்தபோது கடவுளின் தோள் மேல் இருந்திருக்கிறேன் தெரியாம்லேயேஇருந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி. எம். பி சார், என்ன ஒரு அருமையான கருத்து. வணங்குகிறேன்

      நீக்கு
  20. அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள். விக்னங்களைக்களையும் விநாயகன் இப்போது வந்திருக்கும் பேரிடரில் இருந்தும் காத்தருளப் பிரார்த்தனைகள். நல்லவர்கள் என்றும் நல்லவர்களே என இன்றைய பாசிடிவ் செய்திகள் உணர்த்துகின்றன. அனைவருக்கும் வாழ்த்துகள். ரமா ஸ்ரீநிவாசனின் கட்டுரையும் அருமை. அப்பாவின் அருமைகள் பற்றி அவர் சொல்லி இருப்பவையும் மனதை நெகிழ்த்தியது.

    பதிலளிநீக்கு
  21. கீதா,இவை யாவும் நாம் யாவரும் அனுபவிப்பது. அவைகளை நான் எழுத்து வடிவமாக்கினேன்.

    பதிலளிநீக்கு
  22. பாசிடிவ் செய்திகளாக படிப்பது மனதற்கு சந்தோஷம் தருகிறது அதை தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்

    விநாயகப்பெருமானை பற்றிய பல அறிந்த அறியாத விஷயங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!