சனி, 1 ஆகஸ்ட், 2020

பொத்தக்குடியில் ஒரு குருவிக்கூடு 


1) பறவை குஞ்சு பொரித்து கிளம்பும் வரை யாரும் சுவிட்ச் பாக்ஸ் பக்கம் போகவேண்டாம் தெரு விளக்கு எரியாமல் நாம் இருளில் இருந்தாலும் பராவாயில்லை பறவையை தொந்திரவு செய்யவேண்டாம் என்று ஒருமித்த குரலில் முடிவு செய்தனர்....    குருவிக்கூட்டை கலைக்கக்கூடாது என்பதற்காக அது கூடுகட்டிய ஸ்விட்ச் பாக்ஸ் பக்கமே போகாமல் கடந்த நாற்பது நாட்களாக இருளில்  வசிக்கின்றனர் சிவகெங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியத்தில் உள்ள பொத்தக்குடி கிராம மக்கள்.




2)   .....சாதாரண, எளிய மக்கள் எப்படி கைகளைப்பெறுவார்கள் என்ற கேள்வியும் மற்றவர்களின் கிண்டலையும் புறக்கணிப்பையும் பொருட்படுத்தாத மன உறுதியும் இவரது இலக்கை, ஒரு உயர்ந்த இலக்கை நோக்கி முன்னேற வைத்தன. இடை விடாது நிதி திரட்டி ஆயிரம் கைகளை இவர் முதன் முதலாக தயாரித்தார். இதில் 700 கைகளை இலவசமாகவும் மீதமுள்ள 300 கைகளை விற்று வந்த பணத்தில் மறுபடியும் கைக‌ள் செய்து அவற்றையும் இலவசமாக கொடுத்தார்......  (நன்றி மனோ சாமிநாதன் மேடம்)






3)  தஞ்சை அருகே, விபத்தில் காயம் அடைந்தவரிடம் இருந்த, 4 லட்சம் ரூபாயை, பத்திரமாக குடும்பத்தாரிடம் ஒப்படைத்த, ஆம்புலன்ஸ் ஊழியர்களை, பலரும் பாராட்டினர்.




=====================================================================================




ஏதோ மனிதன் பிறந்து விட்டான்
ரமா ஸ்ரீநிவாசன் 



எங்கள்பிளாக் நண்பர்களே, வித்தியாசமாக இவ்வாரம் நான் மனித குணத்தைப் பற்றியும் மறைந்திருக்கும் அவனது இரட்டை முகத்தைப் பற்றியும் எழுத முற்படுகிறேன்.

ஒரு நாள் மாலை நேரம் நிதானமாக அமர்ந்து மொட்டை  மாடியில் திரையிசை கேட்டுக் கொண்டிருந்தேன். “ஏதோ மனிதன் பிறந்து விட்டான்” என்ற பழைய பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த்து.  அதன் தாக்கம்தான் இந்த கட்டுரை.

மனிதன் என்பவன் இறைவனால் படைக்கப் பட்டவன்.  ஒப்புக்கொள்கின்றேன். ஓர் மிக முக்கியமான காரணத்தையும் கருத்தையும் மனதில் கொண்டு இறைவன் நம்மை இவ்வுலகில் படைத்திருக்கின்றான்.

ஒவ்வொருவரும் ஓர் நோக்கத்துடன் படைக்கப் பட்டிருக்கின்றோம் என்று
நான் நம்புகின்றேன்.

` ஆனால், “மனிதனோ ஏதோ பிறந்து வளர்ந்து சீரழிந்துக் கொண்டிருக்கின்றான். பேச்சில்லாமல் நிற்கும் மரம் போலும்உணர்வில்லாமல் ஓடும் நதி போலும் அவன் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டு உலகிற்கும் உற்ற நண்பருக்கும் பயனில்லாமல் வெறுமனே உயிருடன் ஜடமாய் இருந்துக் கொண்டிருக்கின்றான்”. இதுதான் மனிதனைப் பற்றிய ஒருமித்தக் கருத்தாக இருக்கின்றது.

இருந்தும், நான் வேறு ஓர் வித்தியாசமான கோணத்திலிருந்து மனிதனின் பரிமாண வளர்ச்சிகளையும் அவனது முன்னேற்றத்தையும் பார்க்கின்றேன்.

ஏனெனில், எங்கோ நடுவில் பல புதுக் குருத்துகளும் தென்படத்தான்
செய்கின்றன.

வெறும் குரங்காய் திரிந்துக் கொண்டிருந்த மனிதன் தன் தேவைக்காக இரு கற்களை உரசியதால் உலகையே வியக்க வைக்கும் மின்சாரத்தைக் கண்டு பிடித்தான்.

தன் வயிற்று பசியைத் தீர்ப்பதற்காக மண்ணைப் பிளந்து பயிர் செய்து விவசாயத்தை பூமியில் மிளிர விட்டான். அன்று முதல் இன்று வரை விவசாயமின்றி நாமில்லை என்ற நிலை மாறவில்லை.

பசியாறிய பின்உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு” என்பதற்கேற்ப காலை நீட்டி படுத்து ஓய்வெடுக்கும் போது பறக்கும் பறவையைக் கண்ணுற்று யோசித்து தன் மூளையைக் கசக்கி பறக்கும் விமானத்தை நமக்கு அறிமுகப் படுத்தினான். உலகின் பல நாடுகளையும் சில மணி நேரங்களில் இணைக்கும் விந்தையை புரிந்தான்.

அடுத்த படியாக பசிக்கு மீன் பிடிக்கச் சென்றவன் அதன் நீச்சலை ஆராய்ந்து அதே விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து படகுகளையும் கப்பல்களையும் தன் கற்பனையிலிருந்து நிஜமாக்கினான்.

பரிமாண வளர்ச்சியானது மேலை செல்ல செல்ல அவன் மேலும் தீர்க்கமாக யோசிக்கத் தொடங்கினான்.


பறந்த காடுகளுக்கும் மலைகளுக்கும் நதிகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வந்த அவன் காற்று வீசும் இரைச்சலையும் மலைகளின் மேல் மோதித் தெறிக்கும் எதிரொலியையும் வைத்து ஒலியின் வலிமையை உணர்ந்தான்.

ஒரு சமயம் தன் கால் மீது விழுந்த கல்லின் வலி தாங்காமல் ஒருவன் அலற, அதே செய்கையை மீண்டும் மீண்டும் நகல் படுத்தி அதன் மூலம் ஒலிவழிப் பேச்சையும் கண்டு பிடித்தான்.

இவை யாவையும் தாண்டி அறிவியல், கணிதம், தொழில் நுட்பம்விண்வெளி அறிவியல், போர்க்கால நுணுக்கங்கள் என பலப் பல துறைகளையும் துவங்கி முன்னேற்றத்தில் பல மைல் கற்கள் கடந்து இறுமாப்புடன் நிற்கின்றான்.

எந்நேரமும் பெண்ணையும் பெண்மையையும் பெருமைப் படுத்திப் பேசுவது போல் ஒரு காலத்தில் நடித்துக் கொண்டிருந்தவன், பெண் என்பவள் தெய்வத்திற்கிணை என்றும் அம்மா என்பவர் பூலோகத்தில் நடமாடும் கடவுள் என்றும் மேடையில் இடைவிடாது சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தவன்தன் இல்லத்தில் மட்டும் மனையாளான பெண்ணையும் தன் அன்னையாகிய பெண்ணையும் அறிவற்றவள் என்றும் பயந்தவள் என்றும் ஏசிக் கொண்டிருந்தவன், அவளின் மேலோங்கிய அறிவை அடையாளம் கண்டு கொண்டு அவளைத் தனக்கு நிகராகவும் ஏன் தனக்கு மேலும்
உயர்த்திப் பார்க்கும் மன நிலமையை வளர்த்துக் கொண்டான்.

இவை யாவும் உண்மையாக இருப்பினும், தன் அடிப்படை இயல்பான பயத்தை மட்டும் அவனால் இன்று வரை விடுக்க முடியவில்லை.

எப்பொழுதும் பயத்தையும் சந்தேகத்தையும் தன் உடைகளாகத் தரித்து யாவரையும் ஓர் ஐயக் கண்ணுடன் பார்க்கின்றான்.  தான் நினைத்தபடி
காரியம் நடை பெறவில்லையென்றவுடன் வாடி வதங்கி ஓய்ந்து உட்கார்ந்து விடுகிறான். ஓர் மாறுபட்ட சிந்தனையையும் தனக்கிருக்கும் இயற்கையான அறிவையும் தன் அவசரத்தினாலும் சுயமான சிந்தனையின்மையாலும் மூடத்தனம் என்னும் போர்வையால் போர்த்தி காரியம் விளங்காமல் அடிக்கின்றான்.

அதே போல், உலகு தழுவிய அனைத்து நாடுகளிலுமுள்ள இன்றைய மனிதர்களிடத்தில் நாயைப் போல நன்றியும் இல்லை, நரியைப் போல தந்திரமும் இல்லை, காக்கையைப் போல் ஒற்றுமையும் இல்லை. எந்தப்
பயனுமின்றி தனித்திருந்து தானும் கெட்டு மற்றவரையும் எப்படி கெடுப்பது
என்று ஒவ்வொரு நாடும் ஆராய்கின்றது.


பஞ்ச பூதங்களில் மூன்றான காற்றாகவோ, நெருப்பாகவோ, நீராகவோ ஜனித்திருந்தால் மனிதனால் பல நன்மைகள் இவ்வுலகிற்கு கிடைத்திருக்கும்.  காற்றாய் இருந்தால் யாவருக்கும் சுவாசிக்கும் வசதியையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருப்பான்.

நெருப்பாய் இருந்திருந்தால் எல்லோருக்கும் வெப்பத்தின் சக்தியை உணர்த்தி உணவு சமைக்கவும், உபகரணங்களை இயக்கவும் ஏதுவாய் இருந்திருப்பான்.

நீராய் அவதரித்திருந்தால், யாவருக்கும் தாகம் தீர்க்கும் மழையாய் பொழிந்திருப்பான்.

மனிதப் பிறவி என்பது ஓர் மகத்தானப் பிறவி. பேசவும் பாடவும் நினைக்கவும் எழுதவும் யோசிக்கவும் கூடிய ஒரே பிறவி மனிதப் பிறவிதான்.  அது ஓர் அபூர்வ பிறப்பு.

ஆறறிவையும் சேர்த்து மனிதனைப் படைத்த இறைவன் அவன் நல்லவனாகவும் வல்லவனாகவும் வாழ வேண்டும் என்று விரும்பியிருப்பாரோ என்னவோ? ஆனால் தன் மதியீனத்தினாலும் மடமையினாலும் அந்த உன்னதமான ஆறாம் அறிவை ஓர் ஓரத்தில் மூட்டைக் கட்டி வைத்து விட்டு மிருகத்தையும் தோற்கடிக்கும் கேடு கெட்ட பிறவியாய் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கின்றான் என்றால் அது மிகையாகாது.

இதற்கு முதல் உதாரணம் இந்த கேடு கெட்ட கொரோனா உயிர்க் கொல்லியே ஆகும்.

இவனா அன்றொரு நாள் பிரமிப்பூட்டும்படி உலகமே விக்கித்து நிற்கும்படி முதல் முதல் நிலவில் காலூன்றும் போது “A gentle step for me, but a giant leap for mankind” என்று கூறி வரலாறு படைத்தான் என்று எண்ணத் தோன்றுகின்றது.

நண்பர்களே, கொரோனா என்னும் ஓர் பயங்கர நோய்தான் இன்று, இந்த கால கட்டத்தில் நம் முன் நிற்கும் நிதர்சனமான, உண்மையான சர்வ தேசப்பரவல் (pandemic).

இப்போதாவது உலக மக்கள் தங்கள் மடமையைப் புரிந்துக் கொண்டு சீர் திருந்தி ஓர் புத்தம் புது வாழ்க்கையைத் துவங்கினாலே ஒழிய சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் தெரிய கண்டிப்பாக வாய்ப்பில்லை.

இருப்பினும் நல்ல செய்தி என்னவென்றால், மக்கள் சிறிது சிறிதாக தங்கள் மாசு பட்ட வாழ்க்கை முறையை விடுத்து ஆரோக்கியமான பாதைக்கு மாறி வருகின்றார்கள் என்பதுதான்

அதன் காரணம் இந்த கொரோனாவின் சர்வ தேசப் பரவலாகக் கூட இருக்கலாம். இருக்கட்டுமே.  மாற்றம் ஒன்றே மாறாததுஎன்பதற்கேற்ப இந்த வாழ்க்கை முறையே பழகிப் பழகி நம்முடைய புதிய இயல்பு வாழ்க்கையாக மாறலாம் அல்லவா?.

உலக மக்கள் யாவரும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் உய்ய இந்த கொரோனா நோயும் அதன் தாக்கமும் ஓர் அவஸ்தையான ஆனால் அவசியமான அடிக்கல் நாட்டு என்று எடுத்துக்கொண்டுபுதியதோர் உலகம் செய்வோம்நண்பர்களே.

ஆகவே கொரோனா தாக்கத்திலும் ஓர் விழிப்புணர்வும் ஓர் அற்புதமான விடியலும் மிளிறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன்
இக்கட்டுரையை முடிக்கின்றேன்.   நன்றி.

===============================================================================================

எங்கள் வாழ்த்துகளும் இணைகிறது...



சிநேகிதியே.....
மஹா ரவி 


எனக்கொரு தோழி....  என்னுயிர்த் தோழி...   

இன்று 60 வது வயதில் தன் பணியிலிருந்து ஓய்வு  பெறும் என் உயிர்த்தோழி ரமாவிற்காக என் மனதில் தோன்றிய சில வரிகளை எ​​ழுதுகிறேன்.

குன்றின் மேல் இருக்கும் விளக்கு எல்லோர் கண்ணுக்கும் தெரியும். வெளிச்சத்தை தன்னுள்ளே கொண்ட எந்த ஒரு பொருளும் எல்லா இடத்திலும் ஒளி கொடுக்கும். அதுபோலவே சிறப்புகள் பல இருக்கும் ஒருவரை நாம்  அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அவர்களை எல்லோருமே தாமாகவே கண்டு தெரிந்து கொள்வார்கள். ரமாவும் அதுபோலத்தான். அவரிடம் இருக்கும் கலகலவென்ற சுபாவமே எல்லோரையும் அவரிடம் ஈர்த்துவிடும். . 

பாரதியின் இந்த வரிகளை கேட்டவுடன் என் மனதில் தோன்றிய பிம்பம் யார் என்றும் நான் சொல்லவும் வேண்டுமோ ?


"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்னி உரைப்பது 
கேட்டீரோ!"


"நிமிர்ந்த நன்னடை  நேர்கொண்ட பார்வை^ இவை இரண்டையும் அவரைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் . "அஞ்சாத நெறிகள் திமிர்ந்த ஞானம்" இவை இரண்டையும் அவருடன் பேசிப் பழகும் போது புரிந்து கொள்ளலாம்..  பாரதி கண்ட புதுமைப் பெண்ணே நீ முப்பத்தைந்து வருடங்கள் பணி செய்துவிட்டு இன்று பணி நிறைவு பெரும் நன்னாளில் உன உயர் அதிகாரியின் புகழ்ச்சி களையும் சக நண்பர்களின்அன்பையும் தேடித்தந்த ரகசியம் இதுதானோ.

அலுவலகத்தில் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தை நடத்துவதிலும் தன் குழந்தைகளை வளர்ப்பதிலும் கூட இவர் பாரதி கண்ட புதுமைப் பெண்ணேதான்.
இவரது சிறந்த அறிவாற்றலையும் உலக அறிவையும்  இவர் எழுதிய பல  கட்டுரைகள் வாயிலாக காணலாம்.  இதற்கு சமீபத்தில் இவர் வெளிநாடு   சென்று திரும்பி வந்தவுடனே எழுதிய கட்டுரையே சான்று.  

கீழே உள்ள பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் வீரப்பெண்மணியே நீ வாழ்க..

"௨லக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும், ஓது பற்பல நூல்வகை கற்கவும், இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுத லார்நங்கள் பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம் விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்."

என்றோ ஒருநாள் பாரதி கண்ட கனவை மெய்ப்பிக்கும் உம்மைப் போன்ற பெண்களே எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பது போல ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே ஒரு ஆண் இருப்பார் என்பதே என் கருத்து.  அந்தவகையில் இவரின் கணவர் திரு ஸ்ரீநிவாசன்  அவர்களுக்கு  நான் தலைவணங்குகிறேன்.

சாதனைகள் பல செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி ரமா அவர்களை பாரதியின் வரிகள் கொண்டே இங்கு வாழ்த்துகிறேன்..

"போற்றி,போற்றி!ஜயஜய போற்றி! இப் புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே! மாற்றி வையம் புதுமை யுறச்செய்து மனிதர் தம்மை அமர்க ளாக்கவே ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல் அருளி நாலொரு கன்னிகை யாகியே தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்."

44 கருத்துகள்:

  1. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் தலை..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. பறவைகளுக்காக....
    பொதக்குடி மக்களின் உள்ளமே உள்ளம்...

    பதிலளிநீக்கு
  3. பிறரது பொருளுக்கு ஆசைப்படாதப் -
    ஒரத்தநாடு கர்ணன், தவக்குமார் ஆகியோரது செயல் பாராட்டுக்குரியது...

    பதிலளிநீக்கு
  4. கை கொடுத்த கை...
    மீண்டும் பதிவில்...
    சிறப்பானது இன்றைய தொகுப்பு..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இந்த நாளும் எல்லா நாட்களும் இறைவன் கருணையுடன்
    நன்மை செழித்தோங்க பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. சிறு குருவிகளுக்காக ஒளியைத் தியாகம் செய்யும்
    பொத்தாங்குடி கிராம மக்களை
    எத்தனை பாராட்டினாலும் தகும்
    ஓரத்த நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்
    செய்த உதவி எத்தனை பெரியது.
    அவருக்கு நஷ்டம் இல்லாமல்
    பணத்தை அத்தனை பெரிய தொகையை அடிபட்டவரின்
    தந்தையிடம் சேர்த்த சிறப்பை என்ன சொல்வது!!!

    உலகில் இன்னும் மனிதம் வாழ்கிறது.

    கைகள் கொடுத்து வாழ்வையும் கொடுக்கிறார்
    இனாலியின் கணவர்.
    அவர் கற்ற விஞ்ஞானம் வாழ்வில் மறு நம்பிக்கையைக் கொடுக்கிறது.
    செய்தியைப் பகிர்ந்த மனோ சாமினாதனுக்கும் ,
    எங்கள் ப்ளாக் ஸ்ரீராமுக்கும் மனம் நிறை வாழ்த்துகள்.
    என்றும் நற்செய்திகள் வாழ்வில் மாறுதலை உண்டாக்குகின்றன.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துகள் ஸ்ரீமதி ரமா ஸ்ரீனிவாசன்.
    என்றும் வாழ்க்கை உயிருள்ள நதியாகவும்,
    பலன்கள் பல கொடுக்கும் மரம் போலவும்,

    இனிமை கொடுக்கும் தோழமை போலவும்
    சிறந்து விளங்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லீ மாமி, உங்கள் யாவரையும் நிறுத்தி நிதானமாக ரம்பம் போட பணி ஓய்வு பெற்று வந்து விட்டேன்ன்ன்ன்ன்.

      நீக்கு
    2. ரமா ஸ்ரீ,
      பல ரம்பங்களைத் தாண்டி வந்திருக்கிறோம்.:)
      ஆரம்பம் இனிமையாக இருக்கட்டும்.

      நீக்கு
  8. ஒருபக்கம் பொத்தக்குடி கிராம மக்களின் சிறப்பான ஆக்கம்... மறுபக்கம் EIA 2020 எனும் அழிவிற்கான பாதை...

    பழைய பாடல்களில் சிறப்பான கட்டுரைகள் பிறக்கும்...

    திருமிகு ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  9. பொத்தக்குடியைப்பற்றி தொலைக்காட்சியில் பார்த்தேன்.

    மனிதனைக் குறித்த பார்வை ரமா ஸ்ரீநிவாசன் அவர்களின் கட்டுரை சிறப்பு.

    பதிலளிநீக்கு
  10. இவ்வாரச் சிறந்த மனிதர்கள் ஏற்கெனவே அறிமுகம் ஆகி இருந்தாலும் மீண்டும் விரிவாகப் படித்துத் தெரிந்து கொண்டேன். திருமதி ரமா ஸ்ரீநிவாசனின் கட்டுரை ஆக்கபூர்வமாக உள்ளது. அவரைப் பாராட்டி அவர் சிநேகிதி எழுதி இருப்பதும் அருமை. இருவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. கரிச்சான் குருவிக்காக இருளில் வாழும் பொத்தக்குடி மக்கள் மனிதர்கள் அல்ல, தேவர்கள். 
    எளிய மக்களுக்கு சகாய விலையில் கைகள் வழங்கும் அந்த இளைஞரையும், அவருக்கு கை கொடுக்கும் அவர் மனைவி இனாலியையும் கையெடுத்து கும்பிடலாம். 
    மிகப்பெரிய தொகையான நாலு லட்சத்தை பாதிக்கப்பட்டவரிடம் திருப்பிக் கொடுத்த ஆம்புலன்ஸ் டிரைவர் வாழ்க பல்லாண்டு.

    பதிலளிநீக்கு
  12. சும்மா சொல்லக்கூடாது,பழைய பாடல் ரமாவின்  எண்ணக் குதிரையை  நன்றாகவே தட்டி விட்டிருக்கிறது. ஒரு பெரிய ரவுண்டு அடித்து விட்டார். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமேல் ஒரே ரவுண்டுதான். பணி ஓய்வு வந்து விட்டதே.

      நீக்கு
  13. உங்கள் கட்டுரையில் எனக்கொரு சந்தேகம், ரமாஸ்ரீ.
    என்ன சந்தேகம் என்று நான் கேட்டு அதற்கு நீங்கள் பதில் சொல்வதானால் கேட்கலாம்.
    கேட்கட்டுமா?..

    பதிலளிநீக்கு
  14. மனிதன் என்பவன் இறைவனால் படைக்கப் பட்டவன். ஓர் மிக முக்கியமான காரணத்தையும் கருத்தையும் மனதில் கொண்டு இறைவன் நம்மை இவ்வுலகில் படைத்திருக்கின்றான்.

    -- என்று சொல்கிறீர்கள். ஆனால் பின்னால் சில காரியங்களை விவரிக்கும்
    பொழுது----

    //மனிதன் தன் தேவைக்காக இரு கற்களை உரசியதால் உலகையே வியக்க வைக்கும் மின்சாரத்தைக் கண்டு பிடித்தான். //

    மனிதனுக்கு இங்கே ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? இறைவன், மின்சாரத்தை கண்டு பிடிக்க வைத்தார் என்று ஏன் நீங்கள் நினைக்கவில்லை?

    //வயிற்று பசியைத் தீர்ப்பதற்காக மண்ணைப் பிளந்து பயிர் செய்து விவசாயத்தை பூமியில் மிளிர விட்டான். //

    மிளிர வைக்க இறைவன் ஏற்பாடு செய்தான். (அது இறைவனின் ஏற்பாடு என்று ஏன் நினைப்பதில்லை?..)

    //இவை யாவையும் தாண்டி அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், விண்வெளி அறிவியல், போர்க்கால நுணுக்கங்கள் என பலப் பல துறைகளையும் துவங்கி முன்னேற்றத்தில் பல மைல் கற்கள் கடந்து இறுமாப்புடன் நிற்கின்றான்.//

    பல துறைகளில் மனிதன் முன்னேற்றதைக் காண இறைவன் வழி வகுத்தார். -- என்று ஏன் நினைப்பதில்லை?

    படைத்தவன் இறைவன் என்கிறீர்கள். அவனால் படைக்கப்பட்ட மனிதனின் எல்லாப் பெருமைகளுக்கும் காரணம் அந்த மனிதனே என்கிறீர்கள்.

    இது உங்களில் ஏற்படும் முரண்பாடாக எனக்குத் தோன்றுகிறது. விளக்குவீர்களா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.வி சார், உங்கள் கேள்விகள் யாவையும் சிந்திக்க வைப்பவை.
      இதோ நான் சரியென நினைக்கும் பதில்.
      நம்மை ஆட்டுவிப்பவர் இறைவன். அந்த ஆட்டத்தைத் தொடங்கி வைப்பவரும் அவரே.
      ஆயின், நமக்கென்று ஒரு பொருப்பை நம்முள் வைத்து நம்மை படைத்திருக்கின்றார். நாம் என்றுமே முயற்சி செய்ய வேண்டும். நம் முயற்சிக்கு பயனையும் பரிசையும் அவர் தருவார். "பெருமாள் பார்த்துக் கொள்வார்" என்று நாங்கள் எங்கள் பெண்களை படிக்க வைக்காமல் இருக்க முடியுமா அல்லது அதே காரணத்திற்காக நம் முயற்சியை பூஜியமாக வைக்க முடியுமா? நம் முயற்சியும் அவர் ஆசியும் சேர்ந்தது கண்டுபிடிப்பு என்று நான் எண்ணுகிறேன்.
      இது முரண்பாடு என்று எண்ணுகிறீர்களா, முயற்சி என்று எண்ணுகிறீர்களா?

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. கேள்விகள் உங்கள் மனசிற்குப் பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்பதினால்
      மேலே இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டன.

      //நாம் என்றுமே முயற்சி செய்ய வேண்டும்..//

      முயற்சிகளில் எந்த அபிப்ராய பேதமும் இல்லை. அந்த முயற்சி உங்களால் தான் விளைகிறது என்று நினைக்கிறீர்களா? என்பதே எனக்கேற்பட்ட சந்தேகம்.
      உங்களால் தான் அந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றால் நம்மை ஆட்டுவிப்பவர் இறைவன் என்று நீங்கள் கொள்ளும் பொருள் என்ன?

      நீக்கு
    5. நம்மை ஆட்டுவிப்பவர் இறைவன் என்பதற்கு நீங்கள் கொள்ளும் பொருள் என்ன என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  15. மூன்று செய்திகளும் படித்த, பார்த்த செய்திகள்.


    பொத்தக்குடி கிராம செய்தி தினமலர்ப் பத்திரிக்கையில் படித்தேன், தொலைக்காட்சியில் பார்த்ததேன். வாலாட்டி குருவி கூடு கட்டி இருக்கிறது.மனோசாமிநாதன் அவர்கள் வலைத்தளத்தில் வந்த செயற்கை கை கொடுத்தும் உதவும் நல்ல மன செய்தி. கிராம மக்களுக்கும், கஒகொடுத்த வள்ளலுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. ரமா ஸ்ரீநிவாசன் அவர்கள் எழுதிய அருமையான கட்டுரைக்கும் பொருத்தமான பாடல் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.

    பணி ஓய்வு பெற்ற ரமாவை தோழி மஹா ரவி அவர்கள் பாராட்டி, வாழ்த்தி எழுதிய கட்டுரையும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி, மிக்க நன்றி.
      இனி பணி ஓய்வு பெற்ற எனக்கு இன்பம்தான். கனவருக்குத்தான் தொல்லை.

      நீக்கு
  17. மூன்று செய்திகளும் மிக அருமையான பாசிட்டிவ் செய்திகள்.

    சகோதரி ரமா ஸ்‌ரீனிவாசன் அவர்களின் கட்டுரை மிக நன்றாக இருக்கிறது கூடவே தேர்ந்தெடுத்த பாடல்களும் சிறப்பு.

    அவரின் பணி ஓய்வுக்கான அவரது தோழியின் வாழ்த்துரை அருமை. வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. மூன்று பாசிட்டிவ் செய்திகளில் முதல் இரண்டும் அறிந்தது. இரண்டாவது நம்ம மனோ அக்காவின் பதிவில் வாசித்த நினைவு. மூன்றாவது ஆம்புலன்ஸ் ஓட்டியவர்களுக்கு வாழ்த்துகள்.

    பெத்தக்குடி கிராமத்து மக்கள் செய்தி என்னை மெய்சிலிர்க்க வைத்த செய்தி! வாசித்த போது மக்கள் நிஜமாகவே என்ன சொல்லிப் பாராட்ட என்று தெரியவில்லை. ஒருவர் இருவர் என்றால் வேறு ஒரு கிராமமே முழுமனதோடு செய்வது சூப்பர் இல்லையா

    இது போல ஒரு கூந்தன்குள கிராமத்து மக்கள் பட்டாசு வெடிக்கவே மாட்டார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ரமா உங்க கட்டுரை ரொம்ப நல்லாருக்கு. பாட்டுகள் பொருத்தம்.

    உங்களை வாழ்த்திய மஹா ரவி (க்ரூப்புல கூட இருக்காங்களே) ரொம்ப நல்லா எழுதியிருக்காங்க வாழ்த்துரை. இருவருக்கும் வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  20. ஓ..! ’ரமா ஸ்ரீனிவாசன் சிறப்பிதழ்’!

    பதிலளிநீக்கு
  21. குருவிக்கூடு விஷயம் காணொளியில் கண்டு வியந்தேன், மகிழ்ந்தேன், மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றிகள் . கைகொடுக்கும் கை பாராட்டுக்குரிய சேவை. ஆம்புலன் ஓட்டுனரின் நேர்மை மனிதாபிமானம்.

    பதிலளிநீக்கு
  22. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  23. பாசிட்டிவ் மனிதர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!