புதன், 26 ஆகஸ்ட், 2020

ஒவ்வொருநாளும் புதிதாய் பிறக்கின்றோம் என்பது உண்மையா ?


இதோ கேட்கப் போகிறேன் என்று போன வார புதன் பதிவில் சொல்லிய யாருமே கேள்வி கேட்கவில்லையே என்று திங்கட்கிழமை மதியம் வரை தேடித் தேடி இளைத்தேன். அதற்கப்புறம் ..  


வாட்ஸ் ஆப் கேள்விகள் கேட்பவர்கள் கூட ஏனோ விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டையோடு வாபசாகிவிட்டார்கள். நல்லவேளை ஏஞ்சல் மட்டும் திங்கள் பகல் இரண்டு மணிக்கு மேல் ஆறு கேள்விகள் கேட்டிருந்தார். அவருக்கு நன்றி. 

ஏஞ்சல் : 

1, நமக்கு ஒரு சிந்தனை தோணுது அந்த சிந்தனை கொஞ்சம் நேரத்தில்  மறந்தும் போகுது என்னுடைய கேள்வி நம்மில் உதித்த சிந்தனை எங்கே போகின்றது ?

# குளத்தில் இருந்த அலைகள் இல்லாமல் போகுமானால் கூட குளத்தில் தானே இருக்கும் ? சிந்தனை மூளையின் செயல்பாடு. மூளை அமைதியாகும்போது சிந்தனை காணாமல் போகும்.

& எங்கிருந்து உதித்ததோ அங்கேயே திரும்பிப்போய்விடுகிறது. 

2, தவறுகள் நம்மை திருத்திக்கொள்வதற்கு என்றால் எதற்கு தவறு செய்ய மக்கள் பயப்படறாங்க ?

# தவறு செய்து விட்டோம் என்ற உணர்வோடு சிந்தித்தால் மட்டுமே திருத்தம் வரவியலும்.  மற்றபடி தவறுகள் செய்தவண்ணம் இருப்போமாகில் தண்டனை தான் வரும்.

& தவறுகள் நம்மை திருத்திக்கொள்வதற்கு .. என்று யார் சொன்னார்கள்? இதில் ஏதோ ஒரு சிந்தனைக் குழப்பம் இருக்கிறது. தோல்விதான் வெற்றிக்கு முதல் படி என்று சொல்லுவார்கள். அது ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு தோல்வி என்பது நமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது. ஒன்று - நம்முடைய எந்த வழிமுறை குறிக்கோளை அடைய உதவாது என்று தெரிந்துகொள்ளலாம். இரண்டு குறிக்கோளை அடைய மாற்று வழிகள் பற்றி ஆராய ஒரு சந்தர்ப்பத்தை ஒரு தோல்வி நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. 

தவறுகள் பற்றி குறிப்பிடப்படுவது என்ன என்றால் - One has to learn lessons from his mistakes and must avoid that mistakes in future என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் ஒவ்வொருவரும் தவறுகள் இழைத்துவிட்டுத்தான் பிறகு திருந்தவேண்டும் என்று  கட்டாயம் இல்லை. ஒருவர் மற்றவர்களின் தவறுகளை அலசி ஆராய்ந்து அதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளலாம். அவரே அந்தத் தவறை செய்து பிறகுதான் திருந்தவேண்டும் என்று சொல்லப்படவில்லை.

3, ஒவ்வொரு மனிதரும் தனிப்பட்ட குணாதிசயங்களோடு இருக்கிறார்களே இதில்  நம்மை நாமாக வைப்பது எது ?

# நம் குணாதிசயங்கள்தாம்.

4, ஒவ்வொருநாளும் புதிதாய்  பிறக்கின்றோம் என்பது உண்மையா ? 

& உண்மையாகத்தான் இருக்கும்.  யாராவது பழையதாய்ப் பிறக்கமுடியுமா! 

# ஒவ்வொரு நாளும் இறந்து பட்டால் அடுத்த நாள் புதிதாகப் பிறக்கத்தான் வேண்டும். அன்றாட  வருத்தங்கள், மனக்குறைகள் மறைந்துவிடுமானால் அடுத்த நாள் புது ஜன்மமாக "துடைத்து விட்ட" ஸ்லேட் மாதிரி இருக்கும்..

5, சிறு குழந்தைபோல்  போல தூங்கினார் தூங்கினாள் என்பது எப்படி பொருத்தமாக வரும் ? பெரும்பாலான சின்ன குழந்தைகள்  அமைதியா இரவில் தூங்குவதில்லையே ?

# சிறு குழந்தைகள் விழித்திருக்கும் நேரத்தில் வேண்டுமானால் அமைதி இழக்கலாம். தூங்கும்போது அசாத்தியமான அமைதியுடன்தான் தூங்கும்.

& சரிதான் போங்க! ஏதோ ஒரு பேச்சுக்கு, கவலை இல்லாமல் தூங்குகிற ஒருவரை, ' சிறுகுழந்தைபோல முகத்தில் ஒரு மோகனப் புன்னகையோடு தூங்கினார்' என்று யாரோ எழுதியிருக்கிறார்கள்.  

நீங்க எழுதியவரைப் பிடித்து உலுக்கி - எங்க ஊர் இரண்டாம் குறுக்குத் தெரு இன்னாசி வீட்டுக் குழந்தை இரவு முழுதும் வீல் வீல் என்று அலறிக் கொண்டிருக்கும். அப்படி இருக்கையில் நீ எப்படி இவ்வாறு எழுதலாம்? என்று கேட்கமுடியுமா? அந்த இன்னாசி வீட்டுக் குழந்தை இரவில் அலறி - பகலில் அமைதியாகத் தூங்கும் அல்லவா! அந்தத் தூக்கத்தைத்தான் இவர் எழுதியிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் ! 

எழுதியவர், " சிறுகுழந்தைகள் இரவில் தூங்குவதைப்போல இவர் தூங்கினார் " என்றா எழுதினார்? அவர் பாட்டுக்க தேமேன்னு " சிறு குழந்தைபோலத் தூங்கினார்" என்றுதானே எழுதினார்!  

6, பழைய சிண்ட்ரெல்லா கதையை இப்போ புதிதா எழுதும்போது ஷூவுக்கு பதில் என்ன ப்ராப்பர்டி வரக்கூடும் ?எதுக்கு கேட்கிறேன்னா இப்போதுள்ள குழந்தைங்க எதை சொன்னாலும் நம்புவதில்லை :) காலில் பொருந்திய அளவான ஷூ எப்படி கழண்டு விழுந்துச்ன்னுலாம்  ?  கேட்கிறாங்க

 # மொபைல் போனை மறந்து விட்டு விட்டதாக மாற்றிச் சொல்லலாம். வேறு ப்ராபர்ட்டி எதுவும் பொருத்தமாக இல்லை !

& ditto ditto! 

=======
இந்த வாரம் உங்கள் கேள்விகள் அதிகம் காணப்படாததால், இதோ எங்கள் கேள்விகள் சில, உங்களுக்கு. 

உங்கள் பதில்களை இங்கே பதியவும். எங்கள் கேள்விகளும், உங்கள் பதில்களும் தொகுத்து மின்நிலா அடுத்த இதழில் வெளியிடுகிறோம். 

1)  உங்கள் உறவினர் அல்லது நண்பர்கள் இருவர் - ஒருவருக்கொருவர் ஏதோ மனஸ்தாபத்தினால் ஒருவரை விட்டு ஒருவர் விலகியுள்ளனர்  என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 

a ) அவர்களிடையே மீண்டும் சுமுகமான உறவு / நட்பு திரும்ப உங்களால் ஆன முயற்சிகள் செய்வீர்களா? 

b) அவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் உங்கள் தொடர்பை அவர்கள் இருவரோடும் தொடர்வீர்களா? 

c )  அந்த இருவரில் உங்கள் favorite  ஆளுடன் மட்டும் தொடர்பு வைத்துக்கொண்டு  மற்றவரை நீங்களும் விலக்கி  வைக்க முயற்சி செய்வீர்களா? 

d ) இவைகள் தவிர வேறு ஏதாவது செய்வீர்களா? அப்படியாயின், அது என்ன? 

2)  ஒரு சினிமாவைப் பார்க்கவேண்டும் என்று எதை வைத்து முடிவு செய்வீர்கள்? 

a ) உங்களுக்குப் பிடித்த நடிகர் / நடிகை நடித்த படம் என்பதால் ?

b ) பத்திரிக்கை விமரிசனங்கள் / நண்பர்கள் பரிந்துரை நல்ல படம் என்று கூறியதால் ?

c )  காமெடி படம் என்பதால் ?

d ) பொழுது போக்க ஏதோ ஒரு படம் என்பதால் ?

e ) இவைகள் தவிர வேறு ஏதேனும் ?


3)  மேற்கண்ட வகையில் உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு .. நீங்கள் பதில்கள் அளிக்கும்போது 

a ) உண்மையாக மனசாட்சிப்படி பதில்கள் அளிப்பீர்கள்?

b ) உண்மையோ பொய்யோ - அந்த நேரத்திற்கு என்ன தோன்றுகிறதோ அந்த பதில் அளிப்பீர்கள்?

c ) எந்த பதில் எல்லோராலும் பாராட்டப்படும் என்று நினைக்கிறீர்களோ அந்த பதிலைத் தேர்வு செய்து சொல்வீர்கள் ?

d ) உங்கள் வாழ்க்கையில் உண்மையில் இந்த வகையில் நடந்த நிகழ்வுகளை மனதில் வைத்து அதன் அடிப்படையில் பதில் சொல்வீர்கள்?

e ) இவற்றைத் தவிர்த்து வேறு காரணங்கள்  என்றால் அது என்ன? 

=======

மின்நிலா 014 ஆகஸ்ட் 24 2020 இதழ் எல்லோரும் படித்துவிட்டீர்களா? 

திங்கள் பதிவில் கொடுக்கப்பட்டது:  doctroid தள சுட்டி. 

இன்று இங்கே கொடிக்கப்பட்டுள்ளது:  google தள சுட்டி. 

எது உங்களுக்கு  பிரச்சனை இல்லாமல் பார்க்க, படிக்க, பதிவிறக்கம் செய்ய முடிகிறதோ, அந்தத் தளத்திலிருந்து எல்லாம் செய்துகொள்ளவும்! நன்றி. 

======= 
மீண்டும் சந்திப்போம்! 
=======

76 கருத்துகள்:

 1. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செவிகள் படைக்கபட்டதே அறிவுச்செல்வத்தை கேள்வியறிவாக பெறத்தான் அதை செய்யவில்லை என்றால் அவை கேட்கும் தன்மையிருப்பினும் செவிடுகள் என்று கூறிகிறார் திருவள்ளுவர்.

   கேள்விச்செல்வத்தால், அதாவது கேள்வி அறிவால் துளைக்கபடாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் கேளாதத்(/செவிட்டுத்) தன்மையைக் கொண்ட செவிகளாகவே கருதப்படும். அதாவது அறிவுச் செல்வத்தை கற்றறிந்தார் வாய்மொழியாக கேட்டறியாதவர்களின் செவிகள் அதன் உண்மை செயலை செய்யாது பயனற்று இருப்பதால் அவை வெறும் பொம்மை செவிகள். முகத்தில் புற முழுமைக்காக இருக்கிறது என்றும் நாம் கருதலாம்.

   நீக்கு
 2. கேள்வி 4க்கான பதில் குறளமுதம்

  உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
  விழிப்பது போலும் பிறப்பு

  இதை வைத்துத்தான் எழுத்தாளர்கள் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று தாங்கள் கண்டுபிடித்ததுபோல எழுத்தில் ஜல்லியடிக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 3. எபி இடுகைகளின் பின்னூட்டங்களை கேஜிஜி சார் படிப்பதில்லை போலிருக்கு. பின்னூட்டங்களில் நானே கேள்வி கேட்டிருந்த நினைவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதன் பதிவுகளை மட்டுமே உற்று நோக்குவேன். ஏதாவது கேள்வி விட்டுப் போயிருந்தால் தயவு செய்து எனக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பவும். சென்ற ஒரு வாரம் கணினி பிரச்சனை காரணமாக அதிகம் நெட் பக்கம் வர இயலவில்லை.

   நீக்கு
 4. //தவறுகள் நம்மைத் திருத்திக் கொள்வதற்கு என்றால்// - என்னாபா... இந்தம்மா ரிவர்சில் சிந்திக்கறாங்க? கொஞ்சம் விட்டால், பாவமன்னிப்பு நம் குற்றங்களை முழுவதுமாக்க் களையும் என்றால் மக்கள் ஏன் ஆர்வமுடன் குற்றங்கள்/பாவல்கள் செய்துவிட்டு பாவமன்னிப்பு கேட்கச் செல்வதில்லை? என்றும் கேட்டு நாட்டில் குற்றவாளிகள் எண்ணிக்கையை அதிகரிச்சுடுவார் போலிருக்கே

  பதிலளிநீக்கு
 5. //சிறு குழந்தைபோலத் தூங்கினான்// -இதுல்ல்லாம் சந்தேகம் வந்தால் இனிமேல் எளுத்தாளர்கள் மூட்டை முடிச்சோடு கிளம்ப வேண்டியதுதான். பூவைப் போல புன்னகை புரிந்தான், சூரியன் போல முகம் பிரகாசித்தது, பகலவனைக் கண்ட பனிபோல, ஜூலி நாவல் முழுவதும் கிடைக்கப் பெற்ற உடனே கேஜிஜி முகம் ஆச்சர்யத்தில் கனவா நனவா என்று தவித்தது போல...... இந்த மாதிரி எந்த உதாரணத்தையும் யாரும் எழுதுவதற்கு முன்னால் ரொம்பவே யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஜூலி நாவல் முழுவதும் கிடைக்கப் பெற்ற உடனே கேஜிஜி முகம் ஆச்சர்யத்தில்// - இந்த உள்குத்தை கவனிக்கலையா?

   நீக்கு
  2. ஜூலி / திரிசூலி எல்லாம் எனக்குத் தெரியாது. ஆகையால் அதைக் கண்டுகொள்ளவில்லை.

   நீக்கு
 6. இருவரிடத்தில் மனஸ்தாபம் தவறுதலாக வளர்ந்தால், அதில் யார் தன் பேச்சைக் கேட்பார்களோ அவர்களிடத்தில் உண்மை பேசி, நல்லன சொல்லி பிரிந்தவர்களைச் சேர்த்துவைக்க முயற்சிக்கலாம். ஆனால் பெரும்பாலும் மீடியேட்டர்களுக்கு கெட்ட பெயர்தான் மிஞ்சும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை
   வணக்கம்.
   அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க
   இறைவனிடம் பிரார்ர்த்தனைகள்.

   நீக்கு
  2. நன்றி நெல்லை. காலை வணக்கம் வல்லிசிம்ஹன்.

   நீக்கு
 7. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு உண்மையாகத்தான் பதில் சொல்ல வேண்டும் .
  இன்னோருத்தர் நம்மைப் பற்றி நன்றாக இருக்க வேண்டும்
  என்று சொல்லிப் பலன் ஏதும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கேள்விகளுக்கு உண்மையாகத்தான் பதில் சொல்ல வேண்டும்// - சில கேள்விகளுக்கு மெளனமே பதிலாகச் சொன்னால்தானே சரியாக இருக்கும் வல்லிம்மா? எல்லாத்துக்கும் புத்தகத்தைத் திறந்து காண்பிப்பதுபோல் மனசைத் திறந்து காண்பிக்க முடியுமா?

   நீக்கு
  2. பதிலுக்கும் அது பற்றிய கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. இரண்டாவது கேள்விக்கு///
  ரெவியூக்கள் படிப்பது முன்னாளில் வழக்கமாக இருந்தது.
  இப்போது அதைப் பற்றிய டிரெய்லர்களே வந்து விடுகின்றன.
  சிலசமயம் நல்ல நடிகர்கள்
  நடித்த படம், உ..ம்.
  ரேவதி, ரோஹிணி, விஜய் சேதுபதி போல.
  வயலென்ஸ் இருக்கும் என்றால் தலைவைத்தும் படுக்க
  மாட்டேன் அந்தப் பக்கம்:)

  பதிலளிநீக்கு
 10. சுவாரஸ்யமான பதில்கள் ரசித்தேன் ஜி

  பதிலளிநீக்கு
 11. முதல் கேள்விக்கு,
  உறவுகளில் ஒத்துப் போகாதவர்கள் இருந்தால்
  அவர்கள் இருவரிடமே தொடர்பில் தான் இருப்பேன்.
  சேர்த்து வைக்கும் முயற்சிகள் அபத்தமாக முடியும்.

  ஏதோ ஸ்டிராங்க் காரணம் இருக்கக் கொண்டே விலகுகிறார்கள்.
  என் உறவுகளில் நிறைய பேர் என்னை விட வயதானவர்கள்.
  அதனால் அந்த நினைப்பே வராது.:)

  பதிலளிநீக்கு
 12. ஏஞ்சலின் கேள்விகளுக்கு உங்கள் பதில்கள்
  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. மீண்டும் வருகிறேன்,.

  பதிலளிநீக்கு
 13. சிலருக்கு தவறுகள் செய்து, செய்து, அதை ரசிக்கவே ஆரம்பித்து விடுவார்கள். புகைப்பது, மது அருந்துவது போன்றவற்றிர்க்கு அடிமையாவது இதனால்தான். புராணங்கள் இதைத்தான் அசுர  குணம் என்கின்றன.  அதனால்தான் தவறு செய்ய பயப்பட வேண்டும் என்பது. இதற்கு & அவர்க கொடுத்திருந்த பதில் சிறப்பு. குழந்தை போல் தூங்கினான் என்பதற்கும்  & அவர்கள் கூறியிருந்த பதிலை ரசித்து சிரித்தேன். 

  பதிலளிநீக்கு
 14. ஒரு டெர்மடாலஜிஸ்ட் ஒரு முறை அலர்ஜி பற்றி பேசும்பொழுது," சில பேரிடம் நீங்கள் உபயோகப்படுத்தும் சோப்பை மாற்றுங்கள், அது உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், டாக்டர் நான் முப்பது வருஷமா இந்த சோப்பைத்தான் உபயோகப்படுத்துகிறேன் என்பார்கள். ஆனால் நம் உடம்பில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான செல்கள் இறக்கின்றன, ஆயிரக்கணக்கான செல்கள் புதிதாக பிறக்கின்றன. நம் உடம்பு தினமும் புதிது " என்றார். எனவே தினமும் பிறக்கிறோம் என்பது உண்மைதான்.  

  பதிலளிநீக்கு
 15. சிறு வயதில் கருத்து வேற்றுமையால் பிரிந்த நண்பர்களை சேர்த்து வைத்ததுண்டு. இதில் ஐரனி  என்னவென்றால் பிரிந்த இருவரும் சேரும் பொழுது சேர்த்து வைத்த என்னை ஒதுக்கி விடுவார்கள். இப்போது நண்பர்கள் இருக்கிறார்கள் ஆனால் எந்த நண்பர்கள் குழுவிலும் நான் இல்லை , எனவே யாருக்கும் யாருக்கும் பகை என்பதெல்லாம் தெரிவதில்லை. என் நட்பு எல்லோருடனும் தொடர்கிறது. பானு ஹாப்பி. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல அணுகுமுறை ! வாழ்த்துகள் !

   நீக்கு
  2. இதைத்தான் நான் வேறு முறையில் சொல்ல நினைத்தேன். இரு காதலர்களுக்கு இடையே தூது போய் திருமணத்துக்கு உதவும் நண்பனை (நண்பியை) பெரும்பாலும் திருமணத்துக்குப் பிறகு கழட்டிவிட்டுடுவாங்க, நட்பை வீடுவரை தொடர மாட்டாங்க. (அல்லது once in a blue moon, நான் இந்தக் கோவில்லதான் இது நடக்கணும்னு வேண்டிக்கிட்டேன், நடந்தது என்று, அது நடந்தபிறகு கழட்டிவிடும் கோவில் போல)

   இதுக்கு இன்னொரு உதாரணம் சொல்லலாம். ஆனா பா.வெ போன்றவர்கள்தான் அது சரியான்னு சொல்ல முடியும்.

   தனக்கு முதல் படம் கொடுத்த பெருமாளை, அதற்கு அப்புறம் வருஷா வருஷம் ஜிவாஜி போய்ப் பார்த்து மரியாதை செய்வாரே தவிர, அவருக்கு அதற்கு அப்புறம் எந்தப் படமும் கொடுத்ததில்லை என்பது போல.

   நீக்கு
 16. எழுத்தாளர் ர.சு. நல்லபெருமாள் அவர்களது நாவலின் பெயர் -

  இன்று புதிதாய்ப் பிறந்தோம்...

  நான் தினமும் இந்த வார்த்தைகளை நினைத்துக் கொள்வேன்..

  பதிலளிநீக்கு
 17. உறவுகளையும் நட்புகளையும் பற்றி கவியரசர் நிறைய எழுதியிருக்கின்றார்..

  எனக்குப் பிடித்த சில வரிகள்..

  கடலில் விழுந்த நண்பனுக்கு
  கை கொடுத்தேன் அவன் கரையேற..
  கரைக்கு அவனும் வந்து விட்டான்
  கடலில் நான் தான் விழுந்து விட்டேன்..

  சிந்தித்துப் பார்த்தஸ்ல் உலகம் புரியும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேசாம குளத்துல அல்லது குட்டையில விழுந்த நண்பனுக்குக் கை கொடுத்திருக்கலாம். கடல் எல்லாம் ரொம்ப ரிஸ்க்.

   நீக்கு
 18. நண்பர்களும் பகைவர்களும் அருகில் இல்லாத இடத்தில் அவர்களைப் பேசாதிருப்பது நல்லது..

  பதிலளிநீக்கு
 19. இந்த வாரம் கேள்விகள் குறைவு தான்! அதனால் நீங்கள் கேட்டு விட்டீர்களே! :)

  பதிலளிநீக்கு
 20. படத்தை இயக்கியிருப்பவர் யார் என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா,  பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், சங்கர், கௌதம் மேனன், ஏ.ஆர். முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், நளன் குமாரசாமி,  மிஷ்கின், ராதா மோகன், செல்வராகவன்  போன்றவர்களின் படங்கள் பிடிக்கும். மணி ரத்தினமும் இந்த லிஸ்டில் இருந்தார். முன்பெல்லாம் குமுதம் விமர்சனத்தை நம்பிக் கொண்டிருந்தேன். இப்போது யூ டியூப் விமர்சனங்கள்,குறிப்பாக நீலச்சட்டையின் விமர்சனம். சில உறவினர்களும், நண்பர்களும் ஏதாவது ஒரு படத்தை மோசமாக விமரிசித்திருந்தால் நிச்சயமாக அந்தப் படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்வேன் and vice versa. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்று : டி ராஜேந்தர் தவிர மீதி எல்லோருமே உங்க பட்டியலில் வந்துவிட்டார்கள்!
   இரண்டு : // சில உறவினர்களும், நண்பர்களும் ஏதாவது ஒரு படத்தை மோசமாக விமரிசித்திருந்தால் நிச்சயமாக அந்தப் படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்வேன் and vice versa. // கொடுமைடா சாமி!!

   நீக்கு
  2. //டி ராஜேந்தர் தவிர மீதி எல்லோருமே உங்க பட்டியலில் வந்துவிட்டார்கள்!// அதற்காக எல்லோருடைய எல்லா படங்களையும் பார்ப்பேன் என்று சொல்ல முடியாது. என் preference இயக்குனர்கள் என்று சொல்ல வந்தேன். இப்போதெல்லாம் என் மகன் அழைத்துச்  செல்லும்  படங்கள்தான். 

   நீக்கு
  3. //// சில உறவினர்களும், நண்பர்களும் ஏதாவது ஒரு படத்தை மோசமாக விமரிசித்திருந்தால் நிச்சயமாக அந்தப் படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்வேன் and vice versa. // கொடுமைடா சாமி!!//இதில் கொடுமை என்று சொல்ல என்ன இருக்கிறது என்று புரியவில்லை. சில நண்பர்கள், உறவினர்கள் ரசனையும், என் ரசனையும் வெவ்வேறானவை என்று சொல்லியிருக்கிறேன். 

   நீக்கு
  4. நண்பர்களையும் உறவினர்களையும் நீங்க நம்புவது இல்லையோ என்று நினைத்தேன். இப்போதான் 'சில' என்ற வார்த்தையை அதன் முக்கியத்துவத்தை கவனித்தேன். அப்போ நீங்க சொல்வது சரிதான்!

   நீக்கு
  5. // இப்போதெல்லாம் என் மகன் அழைத்துச் செல்லும் படங்கள்தான். // மகன் தாய்க்கு ஆற்றும் உதவி படங்கள் தேர்ந்து அழைத்துச் செலல்!

   நீக்கு
 21. முடிவில் உள்ள கேள்விகளும், பதில்களும் அருமை...

  ஸ்ரீராம் அவர்களுக்கு இரண்டு நாட்களாக வேலைப்பளு அதிகமோ...?

  பதிலளிநீக்கு
 22. கேள்விகளைத் தெரிவு செய்யும் விதம் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து வாசிக்கிறேன். இறுதியாக வாசகர்களையும் கேட்டுள்ளீர்கள். நல்ல உத்தி.

  பதிலளிநீக்கு
 23. அனைத்து கேள்விகளும் , பதில்களும் அருமை.

  குழந்தை தூங்கும் போது இடை இடையே புன்னகை பூக்கும்,அது பார்க்க அழகாய் இருக்கும்.
  அதனால் பெரியவர்கள் தூங்கும் குழந்தையை கண் கொட்டாமல் பார்ப்பது தப்பு என்பார்கள்.
  இறைவன் குழந்தைக்கு விளையாட்டு காட்டுகிறான் என்பார்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 24. அனைவரின் உடல் நலனுக்காகவும் பிரார்த்தனைகள். ஸ்ரீராம் விரைவில் வேலைப்பளு, அயர்ச்சி குறைந்து பதிவுகளுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கிறேன். அனைவருக்காகவும் மறுபடியும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 25. போன வாரம் நான் கேட்க நினைத்திருந்த கேள்விகளை எழுதுவதற்குள்ளாக வேறு வேலைகள் அடுத்தடுத்து வந்துவிட்டன. அதுக்கப்புறமாச் சூடான எண்ணெய் கொட்டி அமர்க்களமாகி எல்லாம் மறந்தே போச்சு! :( இந்த வாரம் எப்படியானும் கேட்க முயற்சி செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 26. 1. தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? & தொலைக்காட்சியே பார்ப்பதில்லை என்று சொன்ன நினைவு.

  2. சீரியல்களைப் பெண்களை விட ஆண்களே அதிகம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா? ஏன்?

  3. தொலைக்காட்சித் தொடர்களில் வரும் ஆண்களைப் போலவும், பெண்களைப் போலவும் இப்போவும் இருக்காங்களா? உதாரணத்திற்கு நேற்றுச் சாப்பிடும்போது ஒரு தொடரின் காட்சி ஒன்றில் கிராமத்தின் பணக்கார எஜமானி கிராமத்தாரைப் பார்த்துத் தோலை உரித்துவிடுவேன். என்றெல்லாம் சொல்லுவதோடு அந்த கிராமத்தில் யாரேனும் காதலித்துக் கல்யாணம் செய்துக்கறவங்க இருந்தால் காலையும் உடைத்துவிடுவாராம்! இதெல்லாம் இப்போவும் நடக்குதா? எனக்கு வந்த கோபத்தில் மொபைலை எடுத்து வைத்துக்கொண்டு முகநூலில் "வேல் வகுப்பு" பற்றி மோகன் ஜி எழுதி இருப்பதைத் திரும்பவும் படிக்க ஆரம்பித்தேன்.

  பதிலளிநீக்கு
 27. 4. இப்போது கடந்த சில வருடங்களாக அறிமுகம் ஆகி இருக்கும் "விதைப்பிள்ளையார்" நல்லதா? அல்லது பழைய முறையில் நீர் நிலைகளில் களிமண் பிள்ளையாரைக் கரைப்பது நல்லதா? (என்னோட பதில் பின்னர்)

  5.சமீபத்தில் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரை மரத்தில் கட்டி வைத்துப் பின் கைகளைக் கட்டிப் போட்டுச் சாணியைக் கரைத்து ஊற்றி சாம்பலில் குளிப்பாட்டி, மதுபானங்களால் அபிஷேஹம் செய்து மகிழ்ந்தவர்கள் என்ன மாதிரி மனிதர்கள்? இவர்களுக்கெல்லாம் மனிதத் தன்மையை யார் போதிப்பார்கள்? தமிழில் எந்தத் தொலைக்காட்சிச் சானலுக்கு மாற்றினாலும் அங்கே இதைத் தான் திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தார்கள்! இதன் மூலம் சமூகமே மனதளவில் பாதிக்கப்பட இடம் உண்டு அல்லவா? இதெல்லாம் எப்போது மாறும்?

  இதிலேயே நாலைந்து கேள்விகள் வந்திருக்கின்றன. அதனால் பின்னர் வந்து கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓசி என்பதற்குப் பொருள் தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன். ஆனாலும் நாம் ஏன் இன்னமும் பயன்படுத்துகிறோம்.?

   அதே போல "SIR" என்பதன் விரிவாக்கம் "SLAVE I REMAIN" என்பது தெரிந்தாலும் நம்மால் ஏன் மாற்றிக்கொள்ள முடியவில்லை? நானுமே கௌதமன் சார் என்றே சொல்லுகிறேன். அதை மாற்றிக்கொள்ளாததற்கு அடிமை புத்திதான் காரணமா?

   நீக்கு
  2. அடக் கடவுளே! இப்படி எல்லாம் விபரீத அர்த்தங்கள் எங்கேயிருந்து பிடித்தீர்கள்?

   நீக்கு
  3. சரியாப் போச்சு போங்க, இதெல்லாம் விபரீத அர்த்தங்கள் இல்லை. நான் படிக்கையிலேயே எல்லோரும் சொன்னது/சொல்லிக் கொடுத்தது தான். இப்போ சமீபத்தில் கூட ஃபேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் இவை சுற்றின. இது தவறான கேள்வி என உங்களுக்குப் பட்டால் பதில் சொல்ல வேண்டாம். ஆனால் இவை பல காலமாகப் புழக்கத்தில் இருப்பவை. நான் பள்ளியில் படிக்கையில் எங்க வாத்தியாரை "சார்" எனக் கூப்பிடும்போதெல்லாம் அவர் இதன் விளக்கத்தைச் சொல்லி இருக்கார். எனக்கு இன்னொரு முறை இந்தச் செய்தி வந்தால் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். :(((((((

   நீக்கு
 28. "குழந்தை மாதிரித் தூங்கினான்." என்பதன் உள் அர்த்தம் மனதில் எந்தக் கவலையும் இல்லாமல் நிச்சிந்தையாகத் தூங்குவதைச் சொல்கிறார்கள் என்றே என் புரிதல்.

  பதிலளிநீக்கு
 29. உங்கள் கேள்விகளுக்கு பதில்/
  உறவுகள்/நண்பர்கள் இடையே நிறையப் பேரிடம் மனஸ்தாபம்/பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கிறது. இப்போவும். நாங்க அதைப் பற்றிப் பேசாமல் இருவரிடமும் பொதுவாகப் பேசிவிடுவோம். இவரிடம் அவர் பற்றியோ அவரிடம் இவர் பற்றியோ எதுவும் சொல்வதில்லை/ கேட்டுக் கொள்வதும் இல்லை. அவரவர் விருப்பம். அவரவர் விருப்பமின்மை. அதை அவங்க தான் பேசித் தீர்த்துக்கணும். அப்படி ஒன்று சேர்ந்தாலும் கண்டுக்க மாட்டோம். சகஜமாகவே இருப்போம். இது ஒரு உறவினரிடம் உண்மையாகவே நடந்ததும் கூட.

  சினிமா விமரிசனங்கள் படிப்பதுண்டு. இப்போதெல்லாம் இணையத்திலேயே வருகின்றன. பிடித்த நடிகர், நடிகைனு யாரும் இல்லை. அந்தத் திரைப்படம், அதன் கதை அமைப்பு, எடுத்திருக்கும் பாணி, இயக்குநர், பாடல்கள், வசனங்கள் என ரசித்துப் பார்க்கையில் சில நேரம் சிலரின் படங்கள் பிடிக்கும். அந்த வகையில் ஸ்ரீதரின் அநேகப் படங்கள் பிடித்தமானவை. அநேகமாகப் பார்த்திருப்பேன். பாலசந்தரின் ஆரம்பகாலப்படங்கள்/அதாவது அவரும் நடுத்தர வர்க்க மனப்பான்மையை விட்டு விலகாதவரை எடுத்த படங்கள். அதன் பின்னர் அவரின் தகுதி ஏற ஏற அதற்கேற்பப் படங்களின் கதைக்கரு, எடுக்கும் விதம் எல்லாவற்றிலும் மாற்றங்கள் படிப்படியாக வந்திருக்கும். "கண்ணா நலமா!" படத்துக்குப் பின்னர் அநேகமாக அவர் படங்கள் பார்க்கப் பிடித்தது இல்லை.

  3. மனசாட்சிப்படித்தான் பதில்கள். மற்றபடி என் வாழ்க்கையில் இப்படி நடந்தது எனக் குறிப்பிட வேண்டுமெனில் அது முதல் கேள்விக்குத் தான். ஒரு சில உறவினர்கள் இப்படி மனஸ்தாபங்களோடு இருப்பார்கள்/இருந்தார்கள். இவர் இருக்கும் இடத்தில் அவர் இருக்க மாட்டார். அவர் இருக்கும் இடத்தில் இவர் இருக்க மாட்டார். இது ஒன்று மட்டும் தான். மற்றபடி திரைப்படத்துக்கெல்லாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சில சமயம் ரொம்பவே மன மாறுதலுக்கு என ஏதாவது காமெடி படம் பார்ப்பதுண்டு. அது அபூர்வமாகவே நேரும். ஏனெனில் இங்கே இந்தியாவில் அப்படிப் பார்க்க இயலாது. யு.எஸ்ஸில் இருந்தப்போப் பார்ப்பேன்.

  பதிலளிநீக்கு
 30. மூன்றாவது கேள்விக்கு பதில் a & d. டியில் ஒரு அடிஷன் என் சொந்த அனுபவமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, தெரிந்த மற்றவர்களின் அனுபவங்களாகவும் இருக்கலாம். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மற்றவர்களின் அனுபவம் என்று அவர்கள் சொல்வதை நம் அனுபவமாக பார்ப்பது இயலாது. ஒரே நிகழ்வு ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட அனுபவத்தையும் பாடத்தையும் தரும். மற்றவர்கள் அவர்களின் அனுபவம் அண்ட் feelings பற்றி சொல்லும்போது அதில் பாசாங்குகளும் மிகைப்படுத்தலும் நிறைந்திருக்கும்.

   நீக்கு
 31. 1. All right  என்னும் ஆங்கில வார்த்தை எப்படி, ஏன்  OK ஆனது?
  2. வெட்டியாக இருப்பதை ஓபி அடிப்பது என்கிறார்களே? அப்படியென்றால் என்ன?  அது OB யா? OP யா?

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் சகோதரரே

  கேள்வி பதில்கள் அருமை. இது பற்றி அவரவர் கருத்துரைகள் அதை விட ஸ்வாரஸ்யமாக உள்ளன. அனைத்தையும் படித்து ரசித்தேன்.

  2,4,5 வது கேள்விகள் நன்றாக இருந்தது. அவற்றுக்கு ஆசிரியர்கள் அளித்த பதிலும் பொருத்தமாக, விளக்கமாக இருக்கிறது.

  நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னாலான பதில்.

  1.இந்த முதல் கேள்விக்கு b தான் சிறந்த பதில். அவர்களுக்குள் ஆயிரம் வடிவத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதுகூட காலப்போக்கில் மாறுபட்டு அவர்கள் இருவரும் சுமூகமாக பேசி சேரும் வாய்ப்பும் அமையலாம். அதை விட்டு நாம் இடையே குறுக்கிட்டு அவர்கள் இருவரும் எதிரிக்கு எதிரி நண்பனாக போய், நாம் எதிரியானலும் பரவாயில்லை. ஆனால். அவர்களை சேர்த்து வைக்கும் போது,எழுகின்ற பேச்சுக்கள் திரிந்து அது அவர்களை காலம் முழுக்க சேராமலே செய்து விடுவதென்றால், அந்த குற்ற உணர்ச்சியை நாமும் சுமந்து கொண்டே இருக்க நேரிடும். அதைவிட அவர்களிடையே இருக்கும் பகைமையை கண்டு கொள்ளாமல் அவர்கள் இருவரிடமும் அன்பாக பழகி வந்தாலே காலம் அந்த பகைமையை சரி செய்யும் போது அந்த சந்தோஷத்தில் நாமும் இயல்பாக கலந்து கொள்ளலாம் என நான் நினைக்கிறேன்.

  2. இந்த கேள்விக்கு பிடித்த நடிகர்கள் என்றில்லாமல் இதிலும் b க்குதான் முதலிடம். முன்பெல்லாம் நட்பு, மற்றும் உறவுகள் இந்தப்படம் நன்றாக இருக்கிறது எனச் சொல்லும் போது பார்க்கத் தோன்றும். இப்போது திரையரங்குகளுக்கு வலியச் சென்று பார்ப்பதில்லை. அவ்வளவாக எந்த படங்களையும்,ரசிக்கும் மன நிலைமையும் இல்லை.

  3.இந்தகேள்விக்கு a தான் என்னுடைய பதில். மனசு என்ன சொல்கிறதோ அதுதான் எப்போதும் பதிலாக வரும். மனசாட்சி எங்கே என தேடக் கூடாது. அது அவரவர்களுடன் மட்டும் வாழ்பவை. ஹா.ஹா.

  இந்த வாரம் கேள்விகளும் (எங்களிடம் கேட்கப்பட்டவையும்.) பதில்களும் அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுகளுக்கும், உங்கள் விரிவான பதில்களுக்கும் நன்றி.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!