அந்த மாலை 3/4
முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; :
[ 3 ]
காலியாய் இருந்த இருக்கையில் அமர்ந்த வினோத் அப்பாவைப் பார்த்துச் சிரித்தான். பாலாஜியிடம் மரியாதையாய் கைகொடுத்தான்.
"என்னப்பா சொல்றா வினோ?"
"சாயங்காலம் நாம பேசிட்டு வந்த இந்த நேரத்துக்குள் எவ்வளவு விஷயம்... நீ ஏண்டா இதை என்கிட்டே சொல்லலை?"
"சும்மா ஒரு சுவாரஸ்யம்தான்பா..."
"கல்யாண நாள் கூட பார்த்திருப்பீங்க போல... எனக்கு அழைப்பு உண்டா?"
"அப்பா... இதான வேணாங்கறது... உன் ட்ரேட் மார்க் பேச்சை பேசறே பார்த்தியா?"
"உன் தம்பிக்கு அம்மாக்கு இதெல்லாம் தெரியுமா?" மூர்த்தி கேட்டார்.
வினோத் பேசவில்லை. வினோதினி பேசினாள்.
"அங்கிள்.. நீங்க கோபப்படக் கூடாது... உங்க கோபத்துல அர்த்தம் இருக்கு.. ஒத்துக்கறேன்... ஆனா யோசிச்சுப் பாருங்க... திடீர்னு ஒருநாள் நல்ல விஷயம் முடிவானா நல்லதுதானே? இப்போ பாருங்க எங்களுக்கே முப்பது நடக்குது... இவனுக்கு முடிஞ்சாதான் ரவிக்கும் வழி கிளியராகும். அவனுக்கும் 28 ஆகுது.."
"ஓ... அவனுக்கு வழி கிளியராகணும்தான் நீங்க அவசர ஸ்டெப் எடுக்கறீங்களா? உங்க அவசரத்துக்கு அவன் பெயரைச் சொல்றீங்களாக்கும்... நான் சொல்றப்பல்லாம் ஒண்ணும் தெரியலை... அவன் உங்களைத் தூண்டி விட்டிருக்கானா?"
"அவனுக்கும் எங்க விஷயம் தெரியும் அங்கிள்... அங்கிள்... பீ பிராக்டிகல்... அவனுக்கு தெரியாம இருக்குமா?"
"எது? இப்போ பேசறது கூட அவனுக்கும் தெரியுமோ? அவன் என்ன குண்டு வச்சிருக்கானோ?"
வினோதினி வினோத்தையும், தன் அப்பாவையும் பார்த்தாள்.
முதல் முறையாக அவளிடம் ஒரு தயக்கம் தெரிந்தது.
"ஆமாம் அங்கிள்... அவனும் ஒரு... ஒரு... அவனும் ஒரு பொண்ணை விரும்பறான்."
மூர்த்தி இருக்கையில் பின்னால் சாய்ந்து அமர்ந்து கொண்டார். இன்னும் என்னென்ன விஷயங்கள் இந்த மாலையில் நாம் சந்திக்க இருக்கிறோமோ என்று அயர்ந்தார்.
இடையில் வினோத் தனக்கும் பாலாஜிக்கும் ஏதோ ஆர்டர் கொடுத்திருக்க சர்வர் வந்து வைத்துச் சென்றார்.
"அங்கிள்... நீங்க எதிர்பார்க்கற குண்டு அங்கதான் இருக்கு. ஸாரி... அவன் விரும்பற பொண்ணு நம்ம பொண்ணு இல்லை... ஆனா ஹிந்துதான். சைவம். போதுமா?"
மூர்த்தி தலைகுனிந்து அமர்ந்தார். எதுவும் பேசத் தோன்றவில்லை. அவருக்கு ரேணுவிடம் பேச வேண்டும் போல இருந்தது. அவளுக்கும் தெரியுமா இதெல்லாம் என்றும் தெரியவில்லை.
"அங்கிள்..." வினோதினி கைநீட்டி மூர்த்தி கையைத் தொட்டாள்.
"இதுல ஒண்ணுமில்ல அங்கிள்... இப்பல்லாம் இது சகஜம்.. எனக்கு உங்க வருத்தம் புரியுது. ஆனா வேற வழி இல்ல... டேக் இட் ஈஸி அங்கிள்... நாமதான அவங்களுக்கு.. ரவி நம்ம பையன் இல்லையா... அவனுக்குப் பிடிச்சுருக்குன்னு சொன்னப்புறம் நம்மளால என்ன பண்ண முடியும்? அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு... இவன்மேல உயிரையே வச்சுருக்கு..."
திடீரென வினோதினி தன்னைச் சேர்ந்த பெண் போல தோன்றியது மூர்த்திக்கே ஆச்சர்யமாக இருந்தது. அப்படித் தோன்றும் வகையில் அவள் பேசுவதாகத் தோன்றியது. கொஞ்ச நேரம் அவரவருக்கு எதிரே இருந்ததை மௌனமாகச் சாப்பிட்டார்கள். வினோதினி, வினோத் இருவரும் செல்லை நோண்டிக் கொண்டிருந்தார்கள். பாலாஜி மூர்த்தி முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.
"அவங்க எத்தனை நாளாய்ப் பழகறாங்களாம்?"
"அவன் எனக்கெல்லாம் அண்ணன்பா... மூணு வருஷமா பழகறாங்க..."
"என்னது?" மூர்த்தி திகைத்துதான் போனார். அவர் தன் மகன்களுக்கும் தனக்கும் ரகசியம் எதுவும் இருக்காது என்று இதுநாள் வரை நம்பியிருந்தார்.
"அப்போ நாம வீட்டுல பேசி அவனைக் கிண்டல் செய்தது எல்லாம் உண்மைதானா?"
"இல்லப்பா... நாம அல்லது நீங்க சந்தேகப்பட்டு கேட்டது வேற பொண்ணு... இவ வேற பொண்ணு..."
"இதுல இது வேற... ஆனா என்கிட்டே நேரா யாருமே சொல்லலையேடா... நான் உங்க கிட்ட அப்படியா பழகினேன்?" ஆதங்கத்துடன் கேட்டார் மூர்த்தி.
"தெரில்லப்பா... சொல்லலாம்னு எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு தயக்கம் வந்துடும். நாங்க பழகறது சில மாசங்களுக்கு முன்னாலதான் ரவிக்குத் தெரியும். அப்புறம்தான் அவன் விஷயமும் எங்களுக்குத் தெரியும். அதைக்கூட வினோதான் அவன் கிட்டேருந்து தெரிஞ்சுக்கிட்டா..."
அவனே தொடர்ந்தான். "வினோ அவனுக்கு ரொம்ப தைரியம் கொடுத்தா... அந்தப் பொண்ணையும் பார்த்துப் பேசினா... "
"அவங்க அப்பா அம்மா? அவங்களுக்குத் தெரியுமா?"
"வினோ அவங்க கிட்ட அதெல்லாம் போட்டு உடைச்சிட்டா... அங்கே முதலில் கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது. அவங்க அம்மாவுக்குதான் கொஞ்சம் அதிருப்தி இருந்தது. அதையும் வினோ சரிப்படுத்தி சமாதானப்படுத்திட்டா... ரவிக்கும் அவளுக்கும் ரொம்ப சந்தோஷம்..."
"அவ பேரு? ஊரு?"
"அவளையே கேட்டாப் போச்சு... " வினோ கையைத் தூக்க உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண். படபடப்புடன் வந்து மூர்த்தியை வணங்கி நின்றாள். பாலாஜியையும் வணங்கினாள். அவள் முகத்தில் தவிப்பும் பதட்டமும் தெரிந்தது. வினோவின் அமைதி அவளிடம் இல்லை.
அந்த மாலையின் நிகழ்வுகளில் நிலைகுலைந்து அமர்ந்திருந்தார் மூர்த்தி. ஏமாற்றமா? அதிருப்தியா? திருப்தியா? மகிழ்ச்சியா? எது தனக்கான உணர்வு என்று தெரியாமல் அமர்ந்திருந்தார். நிச்சயமாக மகிழ்ச்சி ஒன்று இருப்பதை மனம் சொல்லியது.
சர்வர் வந்து அந்தப்பெண்ணுக்கு ஒரு இருக்கை போட்டு விட்டு நகர்ந்தார்.
"இன்ட்ரொட்யூஸ் யுவர்செல்ஃப் சந்தி..." என்றாள் வினோ.
"ஒரு நிமிஷம்..." என்று கையமர்த்தினார் மூர்த்தி. "ரவி இங்கேதான் எங்கேயோ இருக்கான்னு நினைக்கறேன். அவனையும் கூப்பிடு. அப்புறம் யாரு இருக்கா? இந்தப் பொண்ணோட அப்பாவா, அம்மாவா? அவங்களையும் ஒரேயடியா கூப்பிட்டுடு... இவ்வளோ பேரைக் கூப்பிட்ட நீ ரேணுவை மட்டும் ஏன் விட்டே? இல்லை, அவளும் காத்திருக்காளா வெளியே?" குரலில் லேசான கோபமும் இருந்தது.
புன்னகைத்த வினோ செல்ஃபோனை இயக்க, ரவியும், ரேணுவும் உள்ளே நுழைந்தனர். வேறு யாரும் வரவில்லை.
"இந்தப் பொண்ணோட அப்பாம்மா வெளியூர் போயிருக்காங்க... ஆனா அவங்களுக்கு விவரம் தெரியும். (ரேணுவைக் காட்டி) ஆண்ட்டிக்கு சாயங்காலம்தான் அவசரமா கதை வசனம் சொல்லி அழைச்சு வந்திருக்கோம்... ஆண்ட்டி என்ன நினைக்கறாங்கன்னு ஒண்ணும் இன்னும் சரியாச் சொல்லலை... ஓகே, சந்தி... கமான்.."
"என் பேர் சந்தியா அங்கிள்... நான் ரவியை... ரவியை... நான் க்ரூப் டூ பரீட்சை எழுதி பாஸ் பண்ணி கவர்மெண்ட் வேலை பார்க்கறேன். நானும் பீ ஈ தான் படிச்சிருக்கேன். ரவியை நீங்க கவர்மெண்ட் வேலைக்கு போகச் சொன்னீங்களாம். அவர் போகலை. நான் பாஸ் பண்ணி அங்க வேலை பார்க்கறேன். என் அப்பா ஜான்சன் அண்ட் ஜான்சன்ல வேலை பார்க்கறார். அடுத்த வருஷம் ரிடையர் ஆகிறார். எனக்கு ஒரு அக்கா. கல்யாணமாகி வெளிநாட்டுல இருக்காங்க. ஒரு தம்பி. இப்போதான் வேலைக்குப் போக ஆரம்பிச்சுருக்கான்.. நான் உங்க வீட்டுக்குத் தகுந்த மாதிரி, உங்க மனசு கஷ்டப்படாம நடந்துப்பேன் அங்கிள்..." கடைசி வார்த்தை சொல்லும்போது அவள் குரல் சற்றே இடறியது.
"எங்க மனசு கஷ்டப்படறது இருக்கட்டும்மா... நீங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் மனஸ்தாபம் இல்லாம இருக்கணும்கறதுதான் முக்கியம். இளமைக் கவர்ச்சில ஆசைப்பட்டுட்டு நடுவுல சண்டை போட்டுட்டு பெத்தவங்களையும் நோகடிக்காம இருந்தா அதுவே போதும்.."
"அங்கிள்..." ஆச்சர்யமாகப் பார்த்தாள் வினோதினி. "அவ்வளவுதானா? ஓகேயா உங்களுக்கு? நான் ரொம்ப எதிர்ப்பு எதிர்பார்த்து நிறைய லெக்சர் எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன்..."
"வேற வழி? எதிர்த்து ஏதாவது பயன் உண்டா சொல்?" வினோவைப் பார்த்துக் கேட்டார். "ஆனா நான் இதை சுத்தமா எதிர்பார்க்கலை. ரெண்டு பேருமா?"
ரேணு சந்தியாவையும், விநோதினியையும் மாறி மாறிப் பார்த்து எடை போட்டுக் கொண்டிருந்தாள். மூர்த்திக்கு அவள் மேலேயே சந்தேகமாகத்தான் இருந்தது. எல்லோரும் தெரிந்து வைத்துக்கொண்டு நாடகம் ஆடுகிறார்களா?
சர்வர் ரேணுவுக்கு காபி மட்டும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனார். கட்டளைகள் திட்டமாய் இருந்தன போலும். "இதெல்லாம் ரெண்டு ஞாயித்துக்கிழமையாய் பிளான் பண்ணி பிளான் பண்ணி மிஸ் ஆனது ஸார்.." சர்வர் புன்னகையுடன் சொல்லி விட்டுச் சென்றார். வினோ அவரைப் பார்த்து கைகாட்டிப் புன்னகைத்தாள். ஓ... நாடகத்தில் இவருக்கும் பங்குண்டா?
"என்ன அங்கிள்... ஆண்ட்டிக்கு முன்னாடியே தெரியுமான்னு யோசிக்கறீங்களா? தெரியாது. முன்னாடியே அவர் கிட்ட சொல்லி இருந்தா அவர் உங்க கிட்ட சொல்லாம இருக்கமாட்டாங்கன்னு தெரியும். வினோத், ரவி ரெண்டு பேருமே சொல்லி இருக்காங்க... முதல்ல அவங்க மூலமாத்தான் வர்றதா இருந்தோம். அப்புறம் வினோத் ஆசைப்பட்ட மாதிரி ஒரு சஸ்பென்ஸோட இருக்கணும்னு முடிவு பண்ணினோம். நீங்க இப்படித்தான் வீட்டுல எதற்கெடுத்தாலும் சஸ்பென்ஸ் கொடுப்பீங்களாமே... ஆனா ஒண்ணு அங்கிள்... வினோத் உங்க குணம் பத்தி சொன்னதால தைரியமா இறங்கினேன். ரொம்ப நல்ல அப்பான்னு சொல்வான். இல்லாட்டா ஏடாகூடமா ஆயிடுமோன்னு பயந்தேன்"
"ஐஸ் வைக்காதே... நான் எதுவும் சொல்லக்கூடிய நிலையில் இல்லை. எனக்கு வேலையே வைக்கலை. சந்தோஷம்... கல்யாணம் எங்கேன்னு சொல்லுங்க... நானும் வரலாமில்ல?"
"அங்கிள்..." வினோதினி முகத்தில் லேசான வேதனையைக் காட்டினாள்
"ஏம்மா.. ரெண்டு பையனைப் பெத்த அப்பன்காரன் இது கூட பேசமாட்டான்னு நினைக்கறியா?" மனசுல தோணாதா? நான் என்ன விக்ரமன் பட கேரக்டரா என்ன?"
"ஸாரி... அங்கிள்... " வினோ தலைகுனிந்து அமர்ந்தாள்.
மூர்த்திக்கு அவளை அந்நிலையில் பார்க்கப் பிடிக்கவில்லை.
"கல்யாண நாள் பார்த்துட்டீங்களா?" என்றார் மறுபடியும்.
வினோதினி கைப்பைக்குள்ளிருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினாள். அதில் நான்கு தேதிகள் குறிக்கப் பட்டிருந்தன. திகைப்படைந்த மூர்த்தி கோபத்துடன் மகனைப் பார்த்தார்.
"என்ன இது?"
"அங்கிள்... இதெல்லாம் சஜஷன்ஸ்தான். நாம ஒவ்வொண்ணா பேசலாம்..'
"இங்கேயா.. இப்போதா? இப்போதான் தலைகுனிஞ்சு உட்கார்ந்திருந்தே..."
"பின்ன எனக்கும் வருத்தம் வராதா அங்கிள்... அதே சமயம் அதை எல்லாம் பார்த்தா முடியுமா? நாங்க இதற்கு மேலயே பிரச்னை எதிர்பார்த்தோம்... ஸோ... "
"இதோ பாரும்மா.. நாங்க நாளு கிழமை பார்க்கறதுன்னு எப்பவுமே ஒருத்தர் கிட்டதான் பார்ப்போம். எங்க வெல்விஷர் அவர். ... நான் அவரைப் போய்.."
"வைத்தியநாதன் மாமாதான அங்கிள்... அவர் குறிச்சுக்க கொடுத்த நாட்கள்தான் இது..."
மயக்கம் வராத குறை மூர்த்திக்கு.
[ அடுத்த வாரம் நிறைவு பெறும் ]
==============================================================================================
மேலே உள்ள தொடர்கதை அப்புறம் என்ன ஆச்சு என்று கேட்பது போல இல்லை? ஹி ஹி ஹி... கவலை வேண்டாம்... அடுத்த வாரம் முடிந்துவிடும்!
சுந்தர பாகவதர் சுந்தர பாகவதர் என்றொரு எழுத்தாளர் இருந்தார். லோகத்திலே... அல்லது ஆதௌ கீர்த்தனாரம்பரத்திலே என்று காலட்சேபம் செய்வது போல தொடங்குவார். ஆனால் கதை நவநாகரீகமாக இருக்கும்! சுந்தர பாகவதர் வேறு யாரும் இல்லை. சண்முகசுந்தரம் என்கிற இயற்பெயரைக்கொண்டிருந்த எழுத்தாளர் புனிதன்தான் அவர்.
=======================================================================================
இதயன் என்கிற எழுத்தாளர் தொடங்கிய தொடர்கதை. இவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஜீவி ஸார், வல்லிம்மா, கோமதி அக்கா சொல்லக் கூடும். இதற்கு கோபுலு ஓவியம். கதாநாயகி முதல் அத்தியாயத்தில் இப்படி இருக்கிறார்.
அடுத்த இரண்டாவது மூன்றாவது அத்தியாயத்தில் அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள் போலும். அவளது தோற்றம் அப்படியே மாற்றி வரைந்திருக்கும் கோபுலு...
இந்த வார ஜோக்ஸ் அயல் தேசத்து ஜோக்ஸாக அப்போது வெளிவந்த ஒரு தொகுப்பு...!
மணிக்கொடி எழுத்தாளர் கு ப ராவின் சகோதரி சேது அம்மாளும் கதைகள் எழுதி இருக்கிறார்.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
சரி..சரி... இப்போ பின்னூட்டம் போடலை. என்ன சொல்லலாம், தீமை இல்லாம என யோசிச்சு அப்புறம் பின்னூட்டம் போடறேன். ஆனால் இடுகையைப் படித்துவிட்டேன்
நீக்குநல்ல குறள் நன்றி. நெ த பின்னூட்டம் என்றாலே தீமையாக இருக்கவேண்டுமா!
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்..
பதிலளிநீக்குஅன்பு துரை, அன்பு ஸ்ரீராம் இன்னும் வரப்போகிறவர்கள் அனைவருக்கும் இந்த நாள்
நீக்குஇனிய நாளாக பிரார்த்தனைகள்.
வணக்கம்; எல்லோரும் இனிதே வாழ்க !
நீக்குஅதிர்ச்சி மிகுந்த கதை.
பதிலளிநீக்குஇத்தனையும் தாங்கி உட்கார்ந்து
ஏற்றுக்கொள்ளும் அப்பா மூர்த்திக்கு
மனம் நிறை வாழ்த்துகள்.
விசு சினிமாவில் தான் ஒவ்வொரு கதவாகத் திறக்கும் .
ஒவ்வொருத்தரும் வந்து வசனம் பேசிச் செல்வார்கள்.
பாவம் இந்தத் தந்தை.
இந்தக் காலத்து வாலிபர்களுக்கு எல்லாமே
புது வழி போல இருக்கிறது.
சரி என்று சொல்வதைத் தவிர தந்தைக்கு வேறு
வழி இல்லையே.
எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. அவர் கவலைப்பட வேண்டிய விஷயம் யாவுமே சட் சட் என்று முடிவதைப் பார்த்து அவருக்கு உள்ளூர சந்தோஷம்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
நீக்கு
பதிலளிநீக்கு"ஏம்மா.. ரெண்டு பையனைப் பெத்த அப்பன்காரன் இது கூட பேசமாட்டான்னு நினைக்கறியா?" மனசுல தோணாதா? நான் என்ன விக்ரமன் பட கேரக்டரா என்ன?"///
இதுதான் ஒரிஜினல் அப்பா ஸ்டேட்மெண்ட்.
கொஞ்சமாவது கோபம் வரணுமே:)
அதானே!
நீக்குவெளியிட்டிருக்கும் படம் மிகத் தெளிவாக நினைவிருக்கிறது.
பதிலளிநீக்குமனைவியின் நண்பன் டைட்டிலும் தான்.
அந்தப் பெண் பெயர் வெண்ணிலா வா?
ராஜேந்த்ர குமார் எழுதி இருப்பாரோ.
மணியன் எழுதினாரோ?
நீக்குஇருவருமே இல்லை. "இதயன்" என்ற பெயரிலேயே எழுதின நாவலாசிரியரின் உண்மைப் பெயர் மறந்து விட்டது. "நடைபாதை" என்றொரு நாவலும் எழுதினார். நடைபாதையில் வசித்த ஒரு இளைஞனும் ஒருஇளம்பெண்ணும் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி. அவன் பெயர் "ராஜா" என்றும் அவள் பெயர் "ராணி" என்றும் வரும். மும்பையில் நடைபாதைவாசிகளாக இருந்தார்கள் என நினைவு.
நீக்குமேற்கண்ட நாவல் ஒரு டென்னிஸ் வீராங்கனையையும் அவள் நண்பனையும் பற்றியது. இருவருக்கும் திருமணம் ஆன பின்னர் டென்னிஸ் வீராங்கனையின் கணவனுக்கு அவள் நண்பனுக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வரும். இந்தக் கதையில் தான் சாமன் பிங்க் என்றொரு நிறம் இருப்பதை அந்தக் காலத்திலேயே தெரிந்து கொண்டேன். ஆனால் மேற்சொன்ன நடைபாதையும், மனைவியின் நண்பனையும் பக்கங்களைக் கிழித்துவிட்டுத் தான் அப்பா படிக்கக் கொடுப்பார். ஆனந்த விகடனில் அந்தக் காலத்தில் வந்த புரட்சிக் கதைகள் இவை. இதயன் அதன் பிறகு தினமணி கதிரில் சாவி ஆசிரியராக இருக்கையிலும் சில கதைகள்/நாவல்கள் எழுதி இருக்கார் என நினைவு.
நீக்குஅவரே நடைபாதைவாசி என்பதாக "ஹரன் பிரசன்னா" குறிப்பிடுகிறார். ஆனால் டென்னிஸ் விளையாட்டின் நுணுக்கங்களை "மனைவியின் நண்பன்" நாவலில் அவர் விவரித்திருப்பதைப் பார்த்தால் யாருக்கும் அப்படித் தோன்றாது. பலருக்கும் நடைபாதை பற்றித் தான் தெரிந்திருக்கிறது. தினமணி கதிரில் "க்ரான்ட் ரோட்"என்னும் தலைப்பில் எழுதினாரோ என நினைவு. இவரா, புஷ்பா தங்கதுரையா?
நீக்கு//நடைபாதையும், மனைவியின் நண்பனையும் பக்கங்களைக் கிழித்துவிட்டுத் தான் // - எனக்கு பத்திரிகைகள் படிப்பதில் அலாதி ஆவல். வேலைக்குச் சேர்ந்தபிறகு நான் வாங்காத பத்திரிகை திருமணப்பத்திரிகை மட்டும்தான். எல்லாவற்றையும் வாங்கிப் படிப்பேன். அதே ஆவலில் துபாயில் 94ல் குமுதம் வாங்கினால், அதை டிஸ்டிரிபியூட் செய்பவர்கள், நிறைய பக்கங்களில் கறுப்பு மை அடித்துத்தான் தருவாங்க. பெண்கள் படத்தில் புடவை இல்லை என்றால் மேற்பகுதியில் கறுப்பு மை என்று அட்டஹாசம் செய்வார்கள். (விகடன், மற்ற பத்திரிகைகளுக்கும் இதே கதிதான்) இந்த வழக்கம் 2000க்குப் பிறகு இல்லை என்று நினைக்கிறேன். ஏன்... நான் பஹ்ரைனில் தசாவதாரம் பார்த்தபோது 'கல்லை மட்டும் கண்டால்' அந்த முழுப்பகுதியே - பாட்டு மட்டுமல்ல, அந்தப் பார்ட்டே கிடையாது.
நீக்குசுந்தர பாகவதர் நன்றாக நினைவிருக்கிறது.
பதிலளிநீக்குபுனிதன்'' ஆ அவர்.? எல்லாம் புதிய செய்தி. நன்றி ஸ்ரீராம்.
ஸ்ரீராம் சார்பில் நன்றி.
நீக்குசுந்தர பாகவதர் என்ற பெயரில் எழுதியது புனிதன் இல்லை, ஜ.ரா.சுந்தரேசனாகிய பாக்கியம் ராமசாமி என்று நினைக்கிறேன்.
நீக்குகடலுக்கப்பால் நகைச்சுவை,
பதிலளிநீக்குரசிக்கும் படி இருக்கும்.
அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க
பிரார்த்தனைகள்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குஎழுத்துக் கலை திரு .கு.ப.ராஜகோபால் அவர்கள் குடும்பத்தில்
பதிலளிநீக்குஊறி இருந்திருக்க வேண்டும்.
அப்படியும் இருக்குமோ!
நீக்குமூர்த்தியை இப்படி மிக்சர் மட்டும் சாப்பிட வைச்சிட்டீங்களே...!
பதிலளிநீக்குஹா ஹா அதானே!
நீக்குபல வீடுகளில் தலைவர்களுக்கு மூர்த்தியின் நிலைதான்.
பதிலளிநீக்குஎன்னவொன்று சிலர் மருமகள் வந்த பிறகு செல்லாக்காசு ஆவார்கள்.
இங்கு முன்பே.....
ஹா ஹா 'வருத்தப்படாத மாமனார்கள் சங்கம்' ஆரம்பிக்க வேண்டியதுதான்!
நீக்குசரியாக சொல்லியிருக்கிறீர்கள் கில்லர்ஜி.
நீக்கு//பல வீடுகளில் தலைவர்களுக்கு மூர்த்தியின் நிலைதான்// - கில்லர்ஜி.. இதற்கு ஒரு காரணம் இருக்கு. (நான் பார்த்த வரையில்). ஆண் 50 வயசுன்னா பெண் பெரும்பாலும் 42-43 வயது (அல்லது அதற்கு சிறிது அதிகமாக இருக்கலாம்). ஆண் எப்போதுமே ரொம்பவே மெச்சூர்ட் ஆகிவிடுகிறான், அதாவது வயதான நினைப்பு அவனுக்கு அதிகம், பெண் எப்போதுமே தன்னை இளையவளாக எண்ணிக்கொள்வாள். அதனால அவங்களுக்குப் பிறக்கும் பசங்கள்ட, அம்மா என்பவள் தோழி போல, பசங்க நிறைய ஷேர் பண்ணும்படியான நிலையில் தன்னை வைத்துக்கொள்வாள். ஆண், கொஞ்சம் கடு கடு மிதப்பில், பசங்களுக்கு அந்நியமாகிவிடுவான். அதனால்தான் என்ன நடக்குது, பசங்க என்ன நினைக்கிறாங்க என்பதே அவனுக்கு ரொம்ப ரொம்ப தாமதமாகத்தான் தெரிய வரும் (மனைவி சொல்ல மாட்டாள். சொன்னா, உடனே இவன் நாட்டாமையாகி பசங்கள்ட பஞ்சாயத்துக்குப் போயிடுவான். பசங்க, அம்மா எல்லாத்தையும் அப்பாகிட்ட சொல்றா போலிருக்குன்னு ஷேர் பண்ணமாட்டாங்க. அம்மா என்பவள் பெரும்பாலும் பசங்களுக்கு நண்பியாத்தான் இருப்பா. அப்பா கடுவன் பூனை)
நீக்குஆனா பொதுவா மருமகள்கள், மாமனார் கிட்ட நல்லாவே நடந்துக்குவாங்க, காரணம், மாமியாரை கம்பேர் செய்யும்போது இது பாவம் அப்பாவி என்ற நினைப்புதான்.
இதற்கு விதிவிலக்குகள் உண்டு.
//இது பாவம் அப்பாவி என்ற நினைப்புதான்//
நீக்குநல்லவேளை புள்ளப்பூச்சி என்று சொல்லாமல் விட்டீர்களே... மகிழ்ச்சி.
நான் கணிணி கற்று முடித்து முதலில் பயிற்சியாளனாக படித்த இடத்தில் வேலைக்கு அமர்ந்த சமயத்தில் சென்னைப் பெண்களின் அட்வான்ஸ்ட் கல்சரை பார்க்கும் சந்தர்ப்பம் நேர்ந்தது. (நான் சொல்வது பிராமின் பெண்கள்)
பதிலளிநீக்குஒரு பெண் ரிசப்ஷனில் இரண்டு ஜாதகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். தான் காதலிக்கும் பையனின் ஜாதகம் பொருந்துவதற்காக அவனுடைய ஜாதகத்தை புதிதாக எழுதி வாங்கி வந்திருப்பதாகவும், இதைத்தான் அவர்கள் வீட்டிலிருந்து கொடுக்கச் சொல்லப்போவதாகவும் சொன்னாள். இதுபோல பல சம்பவங்கள். அதனால் கதைப் பெண் ரொம்ப அட்வான்ஸ்டாக இருப்பது அதிசயமல்ல.
கணவன் தம்பியும் மூணு வருடம் காதலிப்பதாகவும், அவர்களையும் அன்றே முன்நிறுத்துவது....ஒரு வாரத்தில் காது இவ்வளவு பூமாலைகள் தாங்குமா? வீரம் (?) அஜீத் படத்தின் காட்சிகள் போலப் போகுதே.
நல்ல ஃபேமிலி... அப்பாக்கு நல்ல மரியாதை. கவுண்டமணி நாட்டாமை படத்தில் பெண் பார்க்கப் போகும்போது, மிக்சர் சாப்பிடும் பெண்ணின் அப்பா நினைவுக்கு வருகிறார். (அந்தப் படத்தின்போது அந்தக் காட்சியில் நடிப்பவருக்கு வசனம் சொல்லி பயிற்சி கொடுக்க நேரமில்லை. காட்சியை உடனே ஷூட் பண்ணணும் என்பதால் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் பேசாம அந்தக் கேரக்டருக்கு மிக்சர் கொடு. சாப்பிட்டுக்கிட்டே இருக்கட்டும் என்றாராம். கவுண்டமணியின் புத்திசாலித்தனத்தால் காட்சி மிகச் சிறப்பாக வந்ததாம்)
அட! சுவையான மிக்சர் தகவல்!
நீக்குஅந்த காலத்தில் அரசர்கள் மகனுக்கு பட்டம் கட்டியவுடன் வானப்பிரஸ்தம் சென்று விடுவார்களாம், வானப்பிரஸ்தம் செல்லாவிட்டாலும், சீனியர் சிட்டிசன் ஹோமுக்கு சென்று விடலாம்.
நீக்கு//வானப்பிரஸ்தம் சென்று விடுவார்களாம்,// - சும்மா இல்லை. பெண்டாட்டிகளையும் கூட்டிக்கிட்டே. இல்லைனா அரசன், அவன் வேலையைப் பார்க்க முடியாது, அம்மாக்களோட பஞ்சாயத்தே பெருசா இருக்கும். ஹாஹாஹா.
நீக்குஅரசன் வானப்ப்ரஸ்தம் போவது ஒரு காரணமாத்தான். ஒரு உறையில் இரு வாட்கள் இருக்க முடியாது. அதிகாரத்தில் இருந்த அரசன், அவனுக்கு அடுத்த வாரிசு take over பண்ணியஉடன் அரண்மனையை விட்டு விலகினால்தான் அரசாட்சி ஒழுங்காக நடக்க முடியும். இதன் காரணமாகத்தான் (பழைய பெத்த பெருசுகளைப் பொறுக்க முடியாமல்தான்) ராஜேந்திரசோழன் தஞ்சையை விட்டு விலகி, கங்கைகொண்ட சோழபுரத்தை ஸ்தாபித்து அங்கு சென்றுவிட்டான்.
/பெத்த பெருசுகள்/ - வரலாறு என்பதால் தெளிவாகச் சொல்லியிருக்கணும். இராஜ ராஜ சோழன் காலத்தில் அதிகாரத்தில் இருந்த பெரியவர்கள். அவங்களுக்கு ராஜேந்திரன் எப்போதும் சின்னப் பையன்'தான்.
நீக்குமீசைக்கார நண்பரின் கருத்தை வழிமொழிகின்றேன்
பதிலளிநீக்குநன்றி
உங்களுக்கும் நன்றி.
நீக்குகதை ராக்கெட் வேகத்தில் செல்கிறதே..! நம்ப முடியவில்லை என்று என்னால் சொல்ல முடியாது ஏனென்றால் இதைப் போலவே ஒரு சம்பவத்தை நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஎங்கள் நண்பர் ஒருவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அவருக்கு இரண்டு மகன்கள் (கதையில் வருவது போலவே) அவர்கள் தெலுங்கு பிராமணர்கள். அவருடைய இரண்டாவது மகன் ஒரு அய்யங்கார் பெண்ணை காதலித்திருக்கிறான். இந்தக் கதையில் வருவது போலவே ஒரு நாள் அவர் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண் வந்திருக்கிறாள். அப்பொழுது வீட்டில் வேறு யாரும் இல்லை(எல்லாம் ப்ரீ பிளான்ட்). வந்தவள் நண்பரிடம்,"அங்கிள் கொஞ்சம் டி.வி.ஐ நிறுத்துகிறீர்களா? உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்." என்றாளாம். இந்தக் கதையில் வருவது போலவே அவள் பேசப் பேச மற்றவர்கள் வந்து சேர்ந்து கொண்டனராம். Truth is stranger than fiction என்பது எவ்வளவு உண்மை!
கதை போன்ற நிஜம்! ஆச்சரியமாக இருக்கிறதே!
நீக்குமூர்த்தியின் நிலைதான் இந்தக் கால அப்பாக்களுக்கு.
பதிலளிநீக்குஅயல் நாட்டு ஜோக்ஸ் ரசனை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குசுந்தர பாகவதர் கதைகளை குமுதத்தில் படித்திருக்கிறேன். பெரும்பாலும் கொஞ்சம் அப்படி இப்படி கதைகளை எழுதுவார்.
பதிலளிநீக்குசில வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன். அதிலும் பாகவதர் கதை சொல்வது போல ஆரம்பித்து ஆபாசமா படம் எடுத்திருப்பாங்க. ஆனால் படம் ஓரளவு நல்லா இருந்தது, பசங்களோடு பார்க்கும்போதுதான் நெளியணும். அப்போ எனக்கு இந்த சுந்தரபாகவதர் நினைப்புதான் வந்தது.
சுந்தர பாகவதருக்குப்பின் அவர் பாணியில் வேறு யாரும் எழுதிப் படித்ததில்லை. ஆனால், ஒரு பதிவு மூன்றாம் சுழியில் அப்பாதுரை அந்தப் பாணியில் பல வருடங்களுக்கு முன்பு எழுதினார் என்று ஞாபகம்.
நீக்குவெளிநாட்டு நகைச்சுவைகள், நம் கல்சரை பிரதிபலிப்பதில்லை என்பதால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லையோ?
பதிலளிநீக்குநம் கல்ச்சரை பிரதிபலித்தால் ஓ கே யா!
நீக்கு//"ஏம்மா.. ரெண்டு பையனைப் பெத்த அப்பன்காரன் இது கூட பேசமாட்டான்னு நினைக்கறியா?" மனசுல தோணாதா? நான் என்ன விக்ரமன் பட கேரக்டரா என்ன?"//
பதிலளிநீக்குஅது தானே! எல்லோரும் சேர்ந்து மறைத்து விட்டார்களே ! இவ்வளவு நாளாக என்ற எண்ணம் தோன்றாமல் இருக்குமா?
//"வைத்தியநாதன் மாமாதான அங்கிள்... அவர் குறிச்சுக்க கொடுத்த நாட்கள்தான் இது..."//
அப்புறம் எப்படி பேச முடியும் ! மூர்த்தி அவர்களுக்கு வேலை மிச்சம்.
நல்லதே நடக்கட்டும்.
ஆம்! அதே, அதே!
நீக்கு//இதயன் என்கிற எழுத்தாளர் தொடங்கிய தொடர்கதை. இவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. //
பதிலளிநீக்குவிகடனில் வந்த கதையா? மணியன் கதையாக இருக்குமோ?
எனக்கு தெரியவில்லையே ! கதைகள் நிறைய படித்து இருக்கிறேன், நினைவில் இல்லை இது எந்த வருடம் வந்த கதை?
அறுபதுகளின் ஆரம்பத்தில் வந்திருக்கலாம். விகடனில் வந்தது தான். நிச்சயமாய்த் தெரியும். பின்னாட்களில் பைண்டிங்கில் படித்திருக்கேன். கதை கொஞ்சம் ரசாபாசம் அதிகம் ஆகத் தான் இருக்கும் அப்போதே! மணியன் எல்லாம் இல்லை. இவரைக் கிறித்துவ எழுத்தாளர்களில் ஒருவர் எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் இவர் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. கிறித்துவ எழுத்தாளர்களில் ஜெகசிற்பியன், கார்த்திகா ராஜ்குமார் எல்லோரும் இருக்காங்க. இவர் பெயர், விலாசம் கிடைக்கலை.
நீக்கு60 ல் வந்த கதை என்றால் நான் படித்து இருக்க மாட்டேன்.கதை படிக்கவே ஆரம்பிக்கவில்லை, 70 ல் இருந்து தான் கதை படிக்க ஆரம்பித்தேன்
நீக்குவிகடன் என்றால் அம்மா பைண்ட் செய்து இருப்பார்கள் நல்ல கதை என்றால்
நல்லா இல்லை என்று பைண்ட் செய்யவில்லை போலும்.
எங்கே ஸ்ரீராமைக்காணோம் மறு மொழியிலாவது பார்கலா0ம்எனறால் முடிய வில்லையே ஒரு சமய்ம்திருமணத்துக்கு பெண்கள் கிடைப்பதே கடினமென்று சொன்ன நினைவு அதுவே கற்பனையில்வித்தியச சிந்தனையை தூண்டியதோ
பதிலளிநீக்குஸ்ரீராம் நெட் கனெக்ஷன் பிரச்சனை. பிறகு வரும்போது இதற்கு பதில் சொல்வார் என்று எதிர்பார்ப்போம்.
நீக்குசில விஷயங்களைக் கேள்விப்பட்ட பிறகு
பதிலளிநீக்குமனம் எதிலும் ஒட்டவில்லை..
உண்மை.
நீக்கு????
நீக்குயாயும் ஞாயும் யாரா கியரோ
நீக்குஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இதுதான் 'கலக்கத்திற்கு'க் காரணம்.
இப்போ சுத்தமா குழம்பிடுச்சு
நீக்குநல்ல கதை. தாங்களே எல்லாவற்றையும் முடிவு செய்து கொண்டு மூர்த்திக்கு யோசிக்கக் கூட நேரம் கொடுக்கவில்லை. அவர் வரையில் இதை ஏற்றுக்கொண்டாலும் மகன்கள், மருமகள்கள் சேர்ந்து போட்ட திட்டத்தினால் வருத்தம் அதிகம் இருக்கத்தான் செய்யும். பிள்ளை விநோத் கல்யாணமே வேண்டாம் எனச் சொன்னவன் கடைசியில் காதல் குட்டையில் விழுந்திருக்கான். அப்பா கேட்டப்போ ஒழுங்காச் சொல்லி இருக்கலாமே! எனக்கே மனது வலிக்கிறது. :( இப்படியும் பிள்ளைகள்!
பதிலளிநீக்குகீசா மேடம்.. எனக்குத் தெரிந்தவர் அவர், என்னைவிட 20+ வயது பெரியவர். அவருக்கு ஒரு பெண், பிறகு பையன். பெண் கொஞ்சம் exploring type. பையன் பார்க்க ரொம்ப கட்டுப்பெட்டி(யாக வளர்த்திருந்தார்னு நினைக்கிறேன்). பையன் த்ரிகால சந்த்யாவந்தனம், பெரும்பாலும் முழு நெற்றி திருநீற்றோடுதான் பார்த்திருக்கேன். பெண் Professional Course படித்தபோது அவருக்கு பயம், காதல் கீதல்னு ஆரம்பித்துவிடுவாளோ என்று. ரொம்பவே பயத்துடன் இருந்தார். பெண் படித்து முடித்த பிறகு வெளிநாட்டில் வேலை செய்யும் நல்ல பையனுக்குத் திருமணம் செய்துவித்தார். அவருக்கு மனத்தளவில் கொஞ்சம் நிம்மதி. பையன் professional course முடித்து வெளிநாடு படிக்கச் சென்றவன், அங்கேயே சம்பந்தமில்லாமல் ஒரு காதல் திருமணம் செய்துகொண்டான். அவர், அதை அங்கீகரிக்கவில்லை, பையன் அம்மாதான் ரெகுலராக தொடர்பிலும், வெளிநாட்டுக்கு அவன் வீட்டுக்கும் போய்வந்துகொண்டிருக்கிறார்.
நீக்குஅதுனால எந்தக் குட்டைல எந்தப் பாம்பு இருக்கு என்று நமக்குத் தெரியவே தெரியாது.
// எந்தக் குட்டைல எந்தப் பாம்பு இருக்கு.. // எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ என்று அல்லவா பழமொழி?
நீக்குஎந்தக் குட்டைல எந்த மட்டை இருக்குன்னு - ஹா ஹா. தனுர் ராசிக்காரங்களுக்கு கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுத்தான் படிக்கணும் என்பது விதி போலிருக்கு.
நீக்கு:)))
நீக்குஇந்த விஷயத்தில் எப்போதுமே பெற்றோருக்குப் பெண்ணிடம் தான் கவனம் இருக்கும். எனக்கு ரொம்ப நெருங்கிய ஒரு பெண், கிட்டத்தட்ட என் வயது உள்ளவர் எல்லோரிடமும் சகஜமாகப் பேசும் இயல்பு கொண்டவர், அந்தக் கால கட்டத்தில் இதை ஏற்றவர்கள் மிகக் குறைவு. அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் கூட அந்தப் பெண்ணைப் பற்றி இழிவாகவே பேசுவார்கள். இவளெல்லாம் கல்யாணம் பண்ணிக் கொண்டு ஒருத்தனோடு குடும்பம் நடத்த மாட்டாள்; ஆறே மாசத்திலே திரும்பிடுவாள் என்றோ, ஆறே மாசத்திலே எவனோடவாவது ஓடிவிடுவாள் என்றோ சொல்லுவார்கள். கடைசியில் அந்தப் பெண்ணுக்குப் பெற்றோர் பார்த்து வைத்த பிள்ளை தான். இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளைச் சொன்னவர்களின் பெண்கள் அந்தக் காலத்திலேயே காதல் கல்யாணம், சிலர் வேறு இனம், விவாகரத்து, குடும்பத்தில் மாமனார், மாமியாருடன் எப்போதும் சண்டை, சச்சரவு. ஆகவே ஒருத்தர் சகஜமாகப் பழகுவதை வைத்துத் தீர்மானிக்க முடியாது.
நீக்குசமீபத்தில் கூட இப்படித் தான் நெருங்கிய சிநேகிதியின் பெண் மிக அடக்கமானவள், அம்மாவுக்குப் பரிந்து பரிந்து வேலை செய்வாள். நாங்களெல்லாம் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்க திடீரென ஒரு நாள் வேற்று ஜாதியில் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றாள்.
அப்பா கேட்பதில் தப்பே இல்லை. நல்ல அப்பாவிடமே இப்படி எல்லாமா நடந்துப்பாங்க? அவனவனுக்குக் கல்யாண ஆசையை மனதில் வைத்துக்கொண்டு வெளியில் ஏன் நடிக்கணும்? அதான் புரியலை!
பதிலளிநீக்குகதைல ஒருத்தரோட முழு கேரக்டரையும் கொண்டுவரலைனு நான் நினைக்கிறேன். பசங்க, அப்பா அம்மாவோடயே இருப்பதால் இருவரையும் பற்றி ரொம்பவே நல்லா தெரிந்துவைத்திருப்பாங்க. அந்த ஸ்டடிதான் எதை யார்கிட்ட சொல்லமுடியும் என்பதற்கு அடிப்படை. உதாரணமா எங்க அப்பாகிட்ட சில நேரம் நேர்ல சொல்ல தயக்கமோ பயமோ இருந்தாலும் கடித்தத்துல எழுதிக் கொடுத்தோம்னா, நிச்சயம் அதை நேர்மையாக அணுகுவார். அப்பாட்ட பயம் உண்டு, ஆனால் எதையும்-எதையும் சொல்லலாம், அவரது ஆலோசனையைக் கேட்கலாம். ஒன்றை ஆரம்பித்த உடனேயே அதைப் புரிந்துகொண்டு பேசுவார். (அதே சமயம் மறைமுகமாக என்னை எப்போதும் கண்காணிப்பார், இவன் சரியான லைன்லதான் போறானா என்று) அவரைப் பற்றி எழுதும்போது அவருக்குச் செய்யத் தவறியவைகள் (அந்த மெச்சூரிட்டி இல்லாததுனால) நினைவுக்கு வந்து மனதை வருத்துது.
நீக்குநல்ல அலசல்!
நீக்குவெளிநாட்டு நகைச்சுவையை ஆழ்ந்து படிச்சுட்டு ரசிக்கணும். சுந்தர பாகவதர் ரா.கி.ர. இல்லையா?
பதிலளிநீக்குகுமுதத்துல ஆசிரியர் குழுவில் யார் எந்தப் பெயரில் எழுதுவார்கள் என்று யாராலும் சரியாகச் சொல்ல இயலாது!
நீக்குகு.ப.சேது அம்மாளையும் நிறையப் படிச்சிருக்கேன்.
பதிலளிநீக்குநான் இதுவரைக் கேள்விப்பட்டதே இல்லை.
நீக்குமூர்த்தியின் மனநிலையை அருமையாகச் சித்தரித்துள்ளீர்கள். இத்தகு சூழல்களில் ஏற்படும் மன வருத்தங்கள் தவிர்க்க முடியாதவையே. தொடரக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குபதிவாசிரியர் சார்பில் நன்றி.
நீக்குகதை ஸ்வாரஸ்யமாகவே செல்கிறது. என்னதான் நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ள நானும் அந்த மூர்த்தி போலவே காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குமற்ற பகுதிகளும் சிறப்பு. ஓவியங்கள் அழகு.
நன்றி, நன்றி!
நீக்கு