சனி, 12 செப்டம்பர், 2020

B + செய்திகள்

 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா நகரை சேர்ந்தவர் தனஞ்சய் குமார் (26), சமையல்காரராக பணிபுரிகிறார். இவரது மனைவி சோனி ஹெம்ப்ராம் (24), மத்திய பிரதேச வாரியத்தின் தொடக்கக் கல்வியில் டிப்ளோமா படிப்பில் (D.El.Ed) சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர். இவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இவர் ஆசிரியர் பட்டய தேர்வுக்கு விண்ணப்பத்திருந்தார். அவருக்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. பேருந்து, ரயில் இயக்கம் இல்லாத நிலையில் என்ன செய்வது என தம்பதி தவித்து வந்தனர்.

இந்நிலையில் தனஞ்சய் குமார் தனது இருசக்கர வாகனத்தில் மனைவியை குவாலியருக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார். பின் 1,100 கி.மீ கடினமாக பயணம் செய்து இறுதியில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை அடைந்தார். பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும், பேருந்துகள் இல்லாததாலும், வாகனங்களில் செல்ல, ரூ.30,000 வரை கேட்கின்றனர். இதனால் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து ரூ.10,000 கடனாக பெற்று கொண்டு, ஆக.,28 அன்று கோடாவில் இருந்து புறப்பட்டு, முசாபராபாத், லக்னோ மற்றும் ஆக்ரா வழியாக ஆக.,30 ஆம் தேதி மாலை குவாலியரை சென்றடைந்தோம். எனது மனைவிக்கு ஆசிரியராக விருப்பம் என்பதால் அவரது லட்சியத்தை நிறைவேற்ற எண்ணியே இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டதாக அவர் கூறினார்.


===

'கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு நாங்கள் தான்' என, உலக நாடுகளுக்கு ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. 'ஸ்புட்னிக்-வி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3ம் கட்டத்துக்குச் செல்லவில்லை' எனக் கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் தங்களது தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா. மேலும் தங்கள் தடுப்பூசி அனைத்து கட்ட சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டோம் என்று சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா அறிவித்தது.

இந்நிலையில்,​ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள், 'ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு சுகாதாரத் துறை ஒப்புதழ் வழங்கவுள்ளது. இந்த வாரம் அதாவது வரும் 13ம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடப்படும்' என, தெரிவித்துள்ளனர்.



புதுடில்லி: ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்து ஸ்புட்னிக்-5 குறித்த தகவல்களை அந்நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அம்மருந்தினை தயாரிக்க ரஷ்யா விருப்பம் தெரிவித்த நிலையில் அம்மருந்து குறித்த விவரங்களை அந்நாட்டின் கமாலேயா ஆராய்ச்சி நிறுவனத்திடம் இந்தியா கேட்டிருந்தது. தற்போது மருந்து குறித்த விவரங்கள் இந்தியாவுக்கு ரஷ்யாவிடமிருந்து அனுப்பப்பட்ட நிலையில் இந்திய வல்லுநர்கள் அதை ஆய்வு செய்து வருகின்றனர்.

===


1985 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண் தானம் குறித்து விழிப்புணர்வு பதினைந்து நாட்கள் நடத்தப்படுகிறது. அந்தவகையில், தேசிய கண் தானம் தினமான நாளை (செப்.,8) இந்தாண்டுக்கான விழிப்புணர்வு நிறைவடைகிறது. 35வது தேசிய கண்தான தினத்தை முன்னிட்டு தனது கண்களை தானம் செய்வதாக தமிழக முதல்வர் இபிஎஸ் அறிவித்துள்ளார். கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில் தானம் செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கான ஒப்புதல் அளித்து கண் தான படிவத்தில் இபிஎஸ் கையெழுத்திட்டார். ஒரு வயது முதல் அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


===


ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில்  9 ம் தேதி முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்படும் எனவும், சுற்றுலா பயணிகளுக்காக தனி பாஸ் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

.மார்ச், 24 முதல், ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டதால், சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த, ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்பட்டன.தற்போது மாநிலம் முழுவதும், 'இ-பாஸ்' முறை ரத்து செய்யப்பட்டு, வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதில், 'சுற்றுலா பகுதிகளான, நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல, இ-பாஸ் பெற வேண்டும்' என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.நீலகிரியில் இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை, இ-பாஸ் முறையில் அனுமதிக்கவும்; அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது.


தீவிர கண்காணிப்பு


கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டி, மாவட்டத்தில் நாளை மறுநாள் 9 ம் தேதி முதல் தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள பூங்காக்கள் அனைத்தும் திறக்கப்படும். இதனால் சுற்றுலா பயணிகள் அதிகமாக மாவட்டத்திற்கு வருகை புரியும் நிலை உள்ளதால், சுற்றுலா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பூங்காக்களில் அனுமதிக்கப்படுவர்.


latest tamil news


மாவட்டத்திற்குள் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டாயம் இ-பாஸ் நடைமுறை தற்போது உள்ள நடைமுறையில் இருக்கும். உள்ளூர் மக்களுக்கு மாவட்டத்திலுள்ள அடையாள அட்டைகளை காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.சுற்றுலா பயணிகளுக்கு என தனி பாஸ் வழங்கப்படும் இவ்வாறு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.


===

இண்டியானாபோலிஸ்: திடீர் உடல்நலக் குறைவால் மயக்கம் அடைந்த தன் பாட்டியை தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரைச் சேர்ந்த சிறுவன் பிஜே பிருவர் லே(11) இவன் தன் கோ-கார்டில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது, நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாட்டி ஏஞ்ஜெலா பிருவர் லே திடீரென மயக்கம் அடைவதை கண்டுள்ளான்.



latest tamil news


உடனே அவன் பதற்றம் அடையாமல் அவன் தன் வீட்டிலுள்ள மெர்சிடெஸ் பென்ஜ் காரை எடுத்து வந்து அதில் பாட்டியை ஏற்றிக் கொண்டு தானே காரை ஓட்டிச் சென்று வீட்டிற்கு பத்திரமாக அழைத்து வந்துள்ளான். அங்கு அவருக்கு முதலுதவி செய்து பாட்டியின் உயிரை காப்பாற்றியுள்ளான் அந்த பாட்டியின் செல்லப் பேரன்.

பாட்டி ஏஞ்ஜெலா பிருவர் லேக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு திடீரென 40 மி.கி., அளவுக்கு குறைந்ததாக தெரிகிறது. அதனால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். பாட்டி தனது பேரன் பற்றி கூறும் போது,‛ மயக்கம் அடைந்த நிலையில் நான் தடுமாறிய போது. என்னுடைய கார் எனக்கு எதிரே வருவதை பார்த்தேன். காரை என் பேரனே ஓட்டி வந்ததை கண்டு ஆச்சரியமடைந்தேன். உடனே காரில் ஏறிச் சென்று வீட்டிற்கு வந்தடைந்தேன். காரை என் பேரன் நேர்த்தியாக ஓட்டிச் சென்று வீட்டில் இறக்கி விட்டான். வீட்டில் முதலுதவி மூலம் உயிர் பிழைத்தேன்' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

latest tamil news

பாட்டி ஏஞ்ஜெலா பிருவர் லே தன் பேரனின் சமயோஜிதம் மற்றும் சாமர்த்தியத்தை பற்றி முகநூலில் பதிவிட்டார். அதையடுத்து சிறுவன் பிஜே பிருவர் லேக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


===


உலக அளவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் முன்னிலையில் உள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையில் அதன் சொந்த சாதனையை முறியடித்தது. ஸ்பெயினில் பொருளாதார நெருக்கடி ஆண்டுகளில் சுகாதாரத்திற்கான பொதுச் செலவுகள் குறைக்கப்பட்டிருந்தாலும், உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் தனது தங்கத் தரத்தை பராமரித்துள்ளது. சந்தை தலைவர்கள், சந்தை பின்பற்றுபவர்கள் மற்றும் இடையூறு செய்பவர்களின் விற்பனை வருவாயில் கொரோனா தொற்றுநோயின் வருவாய் தாக்கத்தை அறிக்கை ஆய்வு ஆய்வுசெய்துள்ளது. அறிக்கையிலும் அது எங்கள் பகுப்பாய்விலும் பிரதிபலிக்கிறது.


latest tamil news


இது தொடர்பாக ஸ்பெயின் நாட்டின் சுகாதாரதுறை அமைச்சர் கூறுகையில், ஸ்பெயின் 28 ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் முன்னிலை வகிக்கிறது. உலக அளவில் 10 லட்சத்தில் 49.6 சதவீதத்தினர் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்கின்றனர். ஆனால் ஸ்பெயினில் இந்த விகிதம் சற்று உயர்ந்து, 10 லட்சத்தினரில் 117.4 சதவீதத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்கின்றனர். ஐரோப்பிய நாடுகளின் மொத்த உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் நாட்டின் பங்கு 20 சதவீதமாகும். உலகளவில் ஸ்பெயின் நாட்டின் பங்கு 6 சதவீதமாக உள்ளது.


அதே நேரத்தில் ஸ்பெயின் அமெரிக்காவை விட இறந்த நோயாளிகளிடமிருந்து அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது. உலகளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 6 சதவீதம் உயர்ந்து, 1,46,840 ஆக உள்ளது.


===


திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த விவசாயி அழகர்சாமி, பி.ஏ.வி.எம். என தனது பெயரில் புதிய முருங்கை ரகத்தை உருவாக்கி, வேளாண் பல்கலையின் அங்கீகாரம் பெற்றுள்ளார்.
இதற்காக 25 ஏக்கரில் நர்சரி அமைத்து ஒட்டு முருங்கை ரகங்களை பதியன் இட்டுள்ளார். இந்த ரகங்கள் நட்ட ஐந்தாவது மாதத்தில் காய்ப்புக்கு வருகிறது என, தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது: பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் புதிய ரகத்தை உருவாக்கியுள்ளேன். நர்சரியில் ஏழு மாதங்கள் வரை முருங்கை ஒட்டுக்கன்று வளர்த்து, 70 ரூபாய்க்கு விற்கிறேன். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை முருங்கைக்காய்க்கு நல்ல விலையும், விளைச்சலும் கிடைக்கும்.
நட்ட ஐந்தாம் மாதத்தில் காய்க்கும். முதலாண்டில் மரத்திற்கு கிலோ 100 - 150 கிலோ காய்க்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் 300 கிலோ வரை காய்ப்புத் திறன் அதிகமாகும். பூக்கள் அதிகம் பூக்கும் வகையில் ஆர்கானிக் டானிக் தயாரித்துள்ளேன்.
முருங்கைமரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 15 மில்லியும், மற்ற பயிர்களுக்கு 20 மில்லியும் சேர்த்து ஊற்றினால் பூக்கும் திறன் அதிகரிக்கும். மார்ச், ஏப்ரலில் விலை மலிவாக இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் காய்க்கும் திறனை குறைப்பது நல்லது. ஒருமுறை நட்டால் நிரந்தரமாக காய் காய்க்கும் தன்மையுடையது என்பதால் சுற்றியுள்ள விவசாயிகள் இந்த ரகத்தை விரும்பி வாங்குகின்றனர். ஏக்கருக்கு 200 கன்றுகள் நட வேண்டும்.
இதுவரை 60 ஆயிரம் விவசாயிகளுக்கு ஒரு கோடி வரை கன்றுகள் தயாரித்து கொடுத்துள்ளேன். இரண்டடி நீளம் வரை காய் இருப்பதால், ஏற்றுமதிக்கும் உகந்தது என்றார்.
தொடர்புக்கு: 97917 74887.
-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.

===

தென்னிந்தியாவில் அனந்தபூர் முதல் புது டில்லி வரையான முதல் கிசான் ரயிலை இந்திய ரயில்வே (Indian Railways) இன்று (செப்.,9) இயக்கியுள்ளது. இந்த ரயில் நாட்டில் இரண்டாவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் கிசான் ரயில் ஆகும். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டு ரயிலை துவக்கினர். இந்த நிகழ்ச்சிக்கு ரயில்வே மாநில அமைச்சர் சுரேஷ் சி அங்கடி வீடியோ இணைப்பு தலைமை தாங்கினார். இது அனந்தபூர் நகரத்தில் இருந்து 322 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை டில்லியில் உள்ள ஆதர்ஷ் நகருக்கு எடுத்துச் சென்றது.

இந்திய அரசின் இந்த கிசான் சிறப்பு ரயிலால் ஆந்திராவின் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்களது பொருட்களை அனுப்புவதன் மூலமாக பெரிதும் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. அவர்களின் தயாரிப்புகள் டில்லியின் சந்தைகளை நேரடியாக அடைய முடியும், மேலும் அவற்றின் தயாரிப்புக்கு நல்ல விலை கிடைக்கும். விவசாயிகளுடன் வணிகர்களும் இந்த ரயிலை இயக்குவதால் பயனடைவார்கள். அவர்கள் தங்கள் பொருட்களை டெல்லியின் சந்தைகளுக்கு விரைவாக கொண்டு செல்ல முடியும்.


இது குறித்து மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், இது 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும், மத்திய பட்ஜெட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும் ஒரு படியாகும். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தோட்டக்கலை மற்றும் விவசாய விளைபொருட்களை விமானங்கள் மூலம் அனுப்பும் 'கிசான் உதான்' விரைவில் தொடங்கும். உள்கட்டமைப்பில் 1 லட்சம் கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் முதல் 'கிசான் ரயில்' ரயில் மகாராஷ்டிராவின் தியோலியில் இருந்து பீகார் தானாபூர் வரை இயக்கப்பட்டது என தெரிவித்தார்.

தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கூறுகையில், நாட்டின் பழ உற்பத்தியில் 15.6% ஆந்திராவிலிருந்து, 17.42 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது, ஆனால் 10 முதல் 15% விளைபொருள்கள் மட்டுமே உள்நாட்டில் நுகரப்படுகின்றன, மீதமுள்ளவை சாலை அல்லது கடல் வழியாக அனுப்பப்படுகின்றன. அனந்தபூர் எம்.பி. தலாரி ரங்கையாவை மேற்கோள் காட்டி முதல்வர், மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் சி.அங்கடியிடம் சரக்கு கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு கூறினார்.

கொரோனா ஊரடங்கு போது மாநில அரசு சந்தை தலையீட்டு நிதியை உருவாக்கி விவசாயிகளை மீட்க வந்தது. தற்போதைய கிசான் ரெயில் 132 போகிகளில் 322 டன் பப்பாளி, இனிப்பு சுண்ணாம்பு, மாம்பழம், வாழைப்பழம், கஸ்தூரி முலாம்பழம் மற்றும் தக்காளி ஆகியவற்றை சுமந்து செல்கிறது. இவ்வாறு கூறினார்.

குண்டகல் பிரதேச ரயில்வே மேலாளர் அலோக் திவாரி கூறுகையில், தற்போது சரக்கு கட்டணம் டன்னுக்கு, 5,136 என்றும், ஒரு ரயில் தேவைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 150 மெட்ரிக் டன் முதல் 460 மெட்ரிக் டன் வரை செல்லலாம் என்றும் கூறினார். அனந்தபூர் எம்.பி. தலரி ரங்கையா கூறுகையில், இப்பகுதியில் 58 லட்சம் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.வற்றில் 6 லட்சம் டன் மட்டுமே ஒரு வருடத்தில் நுகரப்படுகின்றன, மாவட்ட விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை மும்பை டில்லி, திருவனந்தபுரம் மற்றும் கோல்கட்டவிற்கு அனுப்ப அக்டோபர் முதல் தினமும் ஒரு ரயிலைப் பயன்படுத்த தயாராக உள்ளனர். மும்பையில் ஜே.என்.பி.டி வழியாக தேசாய் பழங்களால் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாதிபத்ரியிலிருந்து கடந்த ஆண்டு சுமார் 45,000 மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

புதிய சந்தைகளுக்கு விளை  பொருட்களை இந்த ரயில்களால் கொண்டு செல்வதன் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது. சாலையுடன் ஒப்பிடும்போது, கிசான் ரயில் வழியாக பொருட்களை அனுப்பும்போது இழப்பு குறைவாக இருக்கும். ரயிலில் பொருட்கள் மிகவும் கவனமாக வைக்கப்படுகின்றன. சாலையிலிருந்து பொருட்களை அனுப்புவதோடு ஒப்பிடுகையில், இந்த ரயில் மூலம் பொருட்களை அனுப்புவதில் குறைந்த கட்டணத்தில் பொருட்கள் விரைவாக வந்து சேரும்.
====
நன்றி : தினமலர் Telegram App.

====

39 கருத்துகள்:

  1. உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ள த்துள் எல்லாம் உளன்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. B+ செய்திகளின் தொகுப்பு அருமை...

    யாசகம் பெற்று ஊருக்கு உதவும் பாண்டியன் அவர்கள் மீண்டும் நன்கொடை அளித்திருக்கின்றார்...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் நலமுடன் வாழ இறைவனை
    வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  4. சில வாரங்களாக சனிக்கிழமை பாசிடிவ் செய்திகள் விரிவாகவும் பயனுள்ள வகையிலும் தொகுத்து வெளியிடப்படுகிறது. பல செய்திகளை நான் படித்ததில்லை.

    கேஜிஜி சார்தான் இப்போ இதை compile செய்கிறார் என நினைக்கிறேன்.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம். பல தளங்களில் பரந்து,விரிந்து தொகுக்கப்பட்டிருக்கும் பாஸிட்டிவ் செய்திகள் அருமை.

    பதிலளிநீக்கு
  7. கிசான் ரெயில் செய்தி மிக மகிழ்ச்சி தருகிறது. இந்த நல்ல
    விஷயத்தை விரிவாகப்
    பகிர்ந்திருப்பது நன்மை.

    பதிலளிநீக்கு
  8. திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த விவசாயி அழகர்சாமி, பி.ஏ.வி.எம். என தனது பெயரில் புதிய முருங்கை ரகத்தை உருவாக்கி, வேளாண் பல்கலையின் அங்கீகாரம் பெற்றுள்ளார்.//இத்துடன் ஆர்கானிக் டானிக்கும் செய்கிறார் என்பதுதான் கூடுதல் மகிழ்ச்சி.
    மிக நன்றி கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
  9. உடல் உறுப்புகள் தானத்தில் முன்னிற்கும்
    ஸ்பெயின் நாட்டுக்கு வாழ்த்துகள்.நல்ல செய்தி.

    பதிலளிநீக்கு
  10. நானெல்லாம் கார் ஓட்டுவதைக் கனவுகளுடன் நிறுத்திக் கொள்வேன்.
    இந்த 11 வயது சிறுவன் பாட்டியையே காப்பாற்றி விட்டானே.

    என்ன ஒரு வீரம்!!!
    பாட்டி அதிர்ஷ்டசாலி. இது போலப் பதற்றம் இல்லாமல் செயல் பட அந்தக் குழந்தைக்கு
    வழிகாட்டிய கடவுளுக்கு நன்றி.
    மிக மகிழ்ச்சியான செய்தி மா.

    பதிலளிநீக்கு
  11. மனைவிக்கு ஆசிரியராக விருப்பம் என்பதால் அவரது லட்சியத்தை நிறைவேற்ற உதவும் கணவருக்கும், ஆசிரியபயிற்சிக்கு கர்ப்பிணியாக இருந்தும் இவ்வளவும் தூரம் பயணம் செய்து வந்து தேர்வு எழுதும் மனைவிக்கும் வாழ்த்துக்கள்.
    லட்சியம் நிறைவேற பிரார்த்தனைகள்.

    நாங்களும் கண்தானம் செய்ய படிவத்தில் கையெழுத்துப் போட்டு கொடுத்து இருக்கிறோம். பல வருடங்களுக்கு முன்பே மாயவரம் கண் ஆஸ்பத்திரியில் ஒப்புதல் வழங்கி உள்ளோம். பிள்ளைகளிடம், உறவினர்களிடம் சொல்லி இருக்கிறோம்.


    //பாட்டி ஏஞ்ஜெலா பிருவர் லே தன் பேரனின் சமயோஜிதம் மற்றும் சாமர்த்தியத்தை பற்றி முகநூலில் பதிவிட்டார். அதையடுத்து சிறுவன் பிஜே பிருவர் லேக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.//

    பாட்டியை காப்பாற்றிய பேரனுக்கு வாழ்த்துக்கள்.

    அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள் தொகுப்பு நனறாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. அனைத்தும் நல்ல செய்திகள்.

    //விவசாயி அழகர்சாமி, பி.ஏ.வி.எம். என தனது பெயரில் புதிய முருங்கை ரகத்தை உருவாக்கி, வேளாண்பல்கலையின் அங்கீகாரம் பெற்றுள்ளார்//

    இந்த விசயம் கே.பாக்கியராஜூக்கு தெரியுமா ?

    பதிலளிநீக்கு
  13. போற்றத்தக்க வேண்டியவர்கள், பெருமைப்படவேண்டிய செய்திகள்.

    பதிலளிநீக்கு
  14. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  15. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். அவரவர் விருப்பப்படியான வேலைகளில் தேர்ச்சி பெற்றுச் சிறப்படையவும் பிரார்த்தனைகள். பாட்டியைக் காப்பாற்றிய 11 வயதுச் சிறுவன் அசர அடித்துவிட்டான். சமயோசித புத்தி! உடல் உறுப்புகள் தானம் செய்யும் ஸ்பெயினும் அதன் மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஆனால் இங்கே இது போல் நடப்பதில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.

    பதிலளிநீக்கு
  16. அம்பேரிக்காவிலும் இப்போது முருங்கைக்காய்கள் கிடைப்பது இவராலோ? இஃகி,இஃகி,இஃகி! கிசான் ரயில் பற்றி ஏற்கெனவே படித்தேன். இன்னமும் தமிழ்நாட்டுக்கு வரலை போல! அப்படியும் இங்குள்ளவர்கள் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது என்றே சொல்வார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால் உண்மையிலேயே ஆந்திராவில் பழ உற்பத்தி அதிகம் தான். அங்கே கிடைக்கும் சப்போட்டாவையும், கொய்யாவையும் போல் நான் இந்தியாவில் வேறெங்கும் பார்த்ததில்லை. வீட்டு வாசலில் தள்ளு வண்டிகளிலே சுவையான சப்போட்டாவும், கொய்யாப் பழங்களும் அபரிமிதமாக விற்பனை செய்வார்கள். இப்போல்லாம் எப்படியோ!

    பதிலளிநீக்கு
  17. மனைவிக்காக இத்தனை தூரம் வண்டி ஓட்டுவதை ஒரு பொருட்டாகக் கருதாத கணவன் பாராட்டுக்குரியவர். ஆனால் வயிற்றில் குழந்தையுடன் அந்தப் பெண் இரு சக்கர வாகனத்தில் பயணித்தது ஓர் பயங்கரமான அனுபவம் தான். நல்லபடியாகத் தாயும் சேயும் வெவ்வேறாகி அந்தப் பெண்ணின் விருப்பம் போல் வேலையும் கிடைத்து நன்கு வாழட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    மனைவியின் படிப்பிற்காக பாடுபட்ட கணவரையும். அதற்கு பக்கபலமாக இருந்து ஒத்துழைத்த மனைவியையும் வாழ்த்துவோம்.

    முருங்கை சாகுபடி எந்த மாதங்களிலும், சிறப்பாக இருக்க பாடுபட்டிருக்கும் விவசாயி அழகர்சாமி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    தன் பாட்டியை மயக்கத்திலிருந்து காப்பாற்ற காரை அஞ்சாமல் ஓட்டி வந்து வீட்டுக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிய அந்த பதினொரு வயது பேரனுக்கும் வாழ்த்துகள்.

    மற்ற அனைத்து செய்திகளும் பயனுள்ளவை. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு. பாசிட்டிவ் மனிதர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!