சனி, 3 ஏப்ரல், 2021

பூக்கார கனகாவும், பால்கார சரோஜாவும்..

 

பூக்கார கனகாவும், பால்கார சரோஜாவும்..

ஒரு வருட கால கொரோனா மவுனத்திற்கு பிறகு நடந்த பிரம்மாண்ட விழா அது.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளிக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்ததை பாராட்டி சென்னையில் உள்ள சபாக்கள் ஒன்றினைந்து கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரமத்தில் விழாவினை கடந்த 27 ந்தேதி நடத்தினர்.

நகரில் உள்ள பிரமுகர்கள் பலரும் விருந்தினர்களாக வந்திருந்தனர்.விதவிதமான கார்களில் பூங்கொத்துக்களுடன் வந்திறங்கினர்.

அப்படி ஒரு விலை உயர்ந்த காரில் வந்திறங்கிய இரண்டு மூதாட்டிகள் பலரின் கவனத்தை கவர்ந்தனர்.அவர்கள் உடையும் உருவமுமே சொல்லியது மிக எளியவர்கள் அவர்கள் என்று.

யார் அவர்கள் என்பதற்கான விடை விழா ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கிடைத்தது.

பாராட்டு விழா மேடையில் இயக்குனர் முத்துராமன் துவங்கி பாடகி சுதா ரகுநாதன் வரை தங்களில் யாரை முதலில் பாராட்ட அழைக்கப் போகின்றனர் என்று எதிர்நோக்கியிருந்தனர்.

அந்த நேரத்தில்தான் நிகழ்ச்சி தொகுப்பாளரின் குரல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி தெரிந்து பலருக்கு உதவுகிறார் என்றால் தெரியாமல் பலருக்கு உதவி வருகிறார்.

அவரின் உதவி பெறுபவர்களில் அன்றாடம் வீடுகளில் பால் போடும் சரோஜா அக்காவும்,பூக்கட்டி வியாபராம் செய்யும் கனகாவும் அடங்குவர்.

இவர்கள் இருவருக்கும் என்ன விருப்பம் என்று கேட்ட போது முரளி அவர்களின் பாராட்டு விழாவினை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களை அழைத்து வருவதில் இருந்து கொண்டு விடுவது வரை ஒரு தனி கார்,அவர்களை சிற்றுண்டி கொடுத்து உபசரித்து கவனித்துக் கொள்ள ஒரு உதவியாளர் என்பது போன்ற ஏற்பாடுகளுடன் அவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.

இருவருக்குமே கிட்டத்தட்ட எண்பது வயது ஆகவே மூத்த சகோதரிகள் போன்ற அவர்களின் ஆசியை முதலில் பெற முரளி விருப்பப்படுகின்றார் என்று சொல்லி, காரில் அழைத்து வரப்பட்ட இரு மூதாட்டிகளையும் மேடைக்கு அனுப்பினர்.


மேடைக்கு வந்த அந்த மூதாட்டிகள் இருவரையும் வணங்கி வரவேற்ற முரளி அவர்களுக்கு புடவை உள்ளிட்ட பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார் .

இரு மூதாட்டிகளும் தங்களது சேலையில் முடிந்து எடுத்து வந்திருந்த திருநீறை எடுத்து பூசி முரளியை மனதார ஆசீர்வாதித்தனர், மைக்கில் இரண்டு வார்த்தை நானும் பேசுறேம்பா என்று மைக்கை வாங்கிய பால்கார சரோஜா ‛ஐயா நீங்க நீடுழி நல்லாயிருக்கணும்' என்ற நாத்தழுதழுக்க வாழ்த்தினார்.

மேடையை விட்டு இறங்கிய அந்த மூதாட்டிகள் இருவரும் காரில் திரும்பச் செல்லும் வரை அனைவரது பார்வையும் அவர்கள் மீதுதான் இருந்தது அதன் பிறகு இதற்கு காரணமான முரளி மீது விழுந்தது.

பின்னர் பேசிய இயக்குனர் முத்துராமன்,இந்த நிகழ்ச்சியை நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு அவர்களின் அந்த உளமார்ந்த வாழ்த்திற்கு நிகரான வாழ்த்து இனி இருக்கப் போவதில்லை என்றார்.

உண்மைதான் என்பது போல சபை ஆராவாரமாக கைதட்டி அவரது வார்த்தையை ஆமோதித்தது,

-எல்.முருகராஜ் (தினமலர்)

= = = = 

தேவை இன்னும் நிறைய யோகநாதன்கள்...

எந்த வேலையில் இருந்தாலும் சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் அதைச் செயலாற்றும் திட்டமும் மட்டும் இருந்தால் போதும், இந்திய பிரதமரின் மனதிலேயே இடம் பிடித்துவிட முடியும் என்பதற்கான உதாரணம்தான் யோகநாதன்.

கோவையைச் சேர்ந்த அரசு பஸ் நடத்துனர் , காந்திபுரம்-மருதமலை வழித்தடத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர். இதல்ல இவரது பெருமை இந்த வேலையின் மூலம் வருமானத்தில் கணிசமான பகுதியை ஒதுக்கி அதில் மரம் வளர்ப்பிற்கான செடிகள் வாங்கி மாணவர்கள் பொதுமக்கள் உதவியுடன் பல இடங்களில் மரம் வளர்த்து வருகிறார்.

கடந்த 33 வருடங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் இவரது முயற்சியால் வளர்க்கப்பட்டு உள்ளது.சிறு வயது முதலே மரம் வளர்ப்பில் ஆர்வம் கொண்டிருந்தவருக்கு அரசு வேலை கிடைத்ததும் மரம் வளர்ப்பு ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொ்ண்டார்..கடந்த 22 வருடங்களாக பஸ் நடத்துனராக இருக்கும் இவர் எப்போதும் பஸ்சில் மரக்கன்றுகள் வைத்திருப்பார் ஆர்வம் உள்ள பயணிகளுக்கு அந்த மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவார்.

விடுமுறை நாட்களில் பள்ளி கல்லுாரி மாணவர்களை சந்தித்து மரங்கள் பற்றி முக்கியத்துவத்தை விளக்குவதுடன் அவர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் மரங்களை நடுவார்.பொதுமக்கள் அழைப்பின் பேரிலும் அவர்கள் இருக்குமிடத்திற்கு சென்று மரங்களை நட்டு அதை வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறுவார்.இப்படி கோவை மட்டுமின்றி கோவையைத் தாண்டியும் தனது மரம்நடும் பணியை செய்துவருகிறார்.

சரியாக கணக்கு வைத்துக் கொள்ளாவிட்டாலும் தனது முயற்சியால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் இப்போது பலன் தந்து கொண்டிருக்கிறது என்கிறார் பெருமையுடன்.

தனது செயலுக்கு எந்த பாராட்டையும் விருதையும் எதிர்பார்ப்பவர் அல்ல ஒரு முறை இவருக்கு சுற்றுச்சுழல் விருது அறிவிக்கப்பட்டது அதனை வாங்கிக் கொள்ள டில்லி வருமாறும் அழைப்பு விடப்பட்டது, நமக்கு மரம் நடற வேலையிருக்கு அதனால வரமுடியாது விருதை தபாலில் அனுப்புங்க என்று சொல்லிவிட்டார். உதவி ஜனாதிபதி விருது வழங்குகிறார் என்றார் அடித்து பிடித்து குடும்பத்தோடு போய் விருது வாங்கிக் கொள்ளத்துடிக்கும் மனிதர்கள் மத்தியில் இப்படியும் ஒருவர் அதன்பிறகு அவரை வற்புறுத்தியதன் பேரில் டில்லி போய் விருதை பெற்றார்.

மரங்களின் மைந்தன் என்றழைக்கப்படும் யோகநாதனின் மரம் வளர்ப்பு பணி பற்றிக் கேள்விப்பட்ட பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ‛மன் கி பாத்' (மனதின் குரல்) ரேடியோ நிகழ்ச்சியில் பேசும் போது யோகநாதனைப் பற்றிக் குறிப்பிட்டு பாராட்டி பேசினார்.

அவரது பாராட்டிற்கு பிறகு இன்னும் உற்சாகம் வரப்பெற்றுள்ள யோகநாதன் ஐந்து மரத்திட்டம் என்று ஒரு திட்டம் ஒன்றை செயல்படுத்த எண்ணியுள்ளார் இந்த திட்டத்தின்படி கிராமப்புறங்களில் உள்ளவர்களின் வீடுகளில் மா, பலா, வாழை, மாதுளை, கொய்யா போன்ற ஐந்து மரங்களை வளர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து மரம் என்று இந்த திட்டத்தால் மக்களும் பலன் பெறுவார் மண்ணும் வளம் பெறும் என்கிறார்.

என்னைப் பாராட்டுவதை விட என்னைப் பார்த்து மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுங்கள் அதுதான் நாம் இந்த சமுதாயத்திற்கு செய்யும், செலுத்தும் நன்றி என்று சொல்லும் யோகநாதனைப் பார்த்து இன்னும் பல ‛யோகநாதன்கள்' வரவேண்டும்.

-எல்.முருகராஜ். (தினமலர்) 

= = = = =

இங்கிலாந்தில் இந்திய சிறுவனின் கண்டிபிடிப்பு. 

வால்செல்: இங்கிலாந்து: இங்கிலாந்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று வால்செல். இது 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடலடியில் இருந்ததாக பழம்பொருள் ஆராய்ச்சி புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

இங்கு பழம் பொருள் ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது புதையுண்ட பழம் பொருட்களை கண்டெடுப்பது உண்டு. தற்போது இந்திய பூர்வீகம் கொண்ட ஒரு சிறுவன் விலங்கின் கொம்பு போன்ற ஒரு தொன்மையான பொருளைக் கண்டு எடுத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


சித்தார்த் சிங் ஜமாத் என்ற பரம்பொருள் ஆராய்ச்சி ஆர்வம் கொண்ட 6 வயது சிறுவன். வால்செல் பகுதியில் இந்த பழங்காலத்து விலங்கு கொம்பை தனது தந்தையுடன் சேர்ந்து கண்டுபிடித்துள்ளான். புழுக்களை தேடி ஈரமண்ணில் தான் குழி தோண்டியபோது இந்த கொம்பு கட்டுப்பட்டதாக அவன் கூறியுள்ளான்.


இவனது தந்தை விஷ் சிங் பழம்பொருள் ஆராய்ச்சி நிபுணர் ஆவார். 251 முதல் 458 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த விலங்கின் கொம்பு இது என அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு பிரிவுக்கு தனது மகனின் கண்டுபிடிப்பை அனுப்பி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
= = = = =
குழந்தையின் குதூகலத்தில் 80ஐ தாண்டிய வாக்காளர்கள்!


'முடியுமோ... முடியாதோனு கவலையா இருந்தேன்... இப்ப என்னோட கவலையே தீர்ந்துச்சுப்பா...' என, சின்னக் குழந்தை போல், 'ஹேப்பி' ஆகிவிட்டார் அந்த, 90 வயது பெண்மணி.தேர்தல் கமிஷன், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளரின் விருப்பத்தை கேட்டு, விருப்பம்இருந்தால் தபால் ஓட்டு போடும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், 3,871 வாக்காளரை தேடி, 1,085 பேர் அடங்கிய, 155 'டீம்' களத்தில்இறங்கியுள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதியில், முத்துநகர் பகுதியில், 90 வயதான மூதாட்டிக்கு, தபால் ஓட்டு வீடு தேடிச் சென்றதால், எல்லையில்லா ஆனந்தம் தாண்டவமாடியது. 'தேர்தல் அவசரம்' ஸ்டிக்கர் ஒட்டிய வாகனம், வீட்டின் முன் நின்றதும், குடும்பத்தினர் வரவேற்றனர்.கட்டிலில் அமர்ந்திருந்த மூதாட்டிக்கு, தேர்தல் அலுவலர்களை கண்டதும், அவ்வளவு சிரிப்பு. 'கையெழுத்து போடுவீங்களா...?' என, அலுவலர்கள் சந்தேகமாக கேட்டபோது... ''ஓ...மீனாட்சினு கையெழுத்து போடுவேன்...'' என்றவர் தட்டுத்தடுமாறி, கையெழுத்து போட்டார்.

தடுப்பு அட்டையை வைத்ததும், ''ரொம்பா இருட்டா இருக்கே...'' என, தனது வீட்டாரை பார்த்து கேட்டார். உடனடியாக ஒயர் எடுத்து வந்து, கட்டில் அருகே, 'எல்.இ.டி., லைட்' போட்டனர்.தபால் ஓட்டுச்சீட்டை கையில் வாங்கியதும், தனது அருகில் யாரும் இல்லை என்பதை சுற்றிலும் பார்த்து உறுதி செய்துவிட்டு, வேகமாக, 'டிக்' அடித்து மடித்து கொடுத்தார். ''காமராஜர் காலத்துல இருந்தே ஓட்டுப்போடறேன்... நடக்க முடியாம போனதால, ஸ்கூலுக்கு போயிஓட்டுப்போட முடியுமானு, ரொம்ப கவலையா இருந்தேன்... மகராசனுங்க வந்து கவலையபோக்கிட்டாங்க... என்னோட கவலையே தீர்ந்துபோச்சு,'' என, குழந்தை போல் மகிழ்ச்சியடைந்து, மெதுவாக எழுந்து நின்று நன்றி கூறினார். ஜனநாயக கடமையாற்றுவதில் பக்கபலமாக இருந்துள்ளதாக, அலுவலர்கள் பெருமிதத்துடன் காரில் அடுத்த இடம் நோக்கி புறப்பட்டு சென்றனர்.

= = = = 

சீட்டுக்கட்டிலிருந்து மின்சாரம். 


விரைவில், 5ஜி அலைக்கற்றை பரவலாக பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. காற்றலையெங்கும் பரவியிருக்கும் 5ஜி அலைகளிலிருந்து, மின்னாற்றலைத் தயாரிக்க முடியும் என்கின்றனர் அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

அது எப்படி முடியும்? 5ஜி அலைக்கற்றை, மற்ற அலைவரிசைகளைவிட மிக அதிகமான மின்காந்த ஆற்றலைக்கொண்டது. சீட்டுக் கட்டு அளவே உள்ள ஒரு அட்டை மீது, இங்க் ஜெட் அச்சியந்திரம் மூலம், 'ஆண்டெனா சர்க்யூட்'டை அச்சிட்டால் போதும். இந்த அச்சுக் காகிதகத் கருவியால், காற்றில் மிதக்கும் மின்காந்த அலைகளிலிருந்து, 6 மைக்ரோவாட்கள் அளவுக்கு மின்னாற்றலை தயாரிக்க முடியும்.

இந்த சீட்டுக் கட்டு ஆண்டனாவை, குறிப்பிட்ட திசையில்தான் பிடித்திருக்கவேண்டும் என்ற அவசியமும் கிடையாது. அச்சிடப்பட்ட சர்க்கியூட்டுக்கு நடுவே உள்ள, 'ராட்மேன்' லென்ஸ் என்ற கருவி, அலைக்கற்றை சமிக்ஞைகளை குவிக்கும் வேலையைச் செய்கிறது. இதனால், 590 அடி தொலைவிலுள்ள கருவி அனுப்பும், 5ஜி அலைவரிசையிலிருந்து கூட மின்சக்தியை உற்பத்தி செய்துவிடுகிறது.

இக் கருவி உற்பத்தி செய்யும் மின்னாற்றல், மிகச் சிறிய உணரிகள், போன்றவற்றை இயக்கப் போதுமானவை என ஜார்ஜியா பல்கலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

= = = = 
விவசாயியுடன் 'பேசும்' பயிர்கள். 


பயிர்களுக்கு வாயில்லை. எனவே, விவசாயி தான் அவற்றுக்கு என்ன தேவை என்று பார்த்துப் பார்த்துத் தரவேண்டும். இந்த நிலையை 'இன்னர் பிளான்ட்' தொழில்நுட்பம் விரைவில் மாற்றத்தைக் கொண்டுவரவிருக்கிறது.

பயிர்களுக்கு நீர் போதவில்லை, பூச்சி, தொந்தரவு அதிகரித்து விட்டது என்றால், அவை 'ஒளிர்வதன்' மூலம் விவசாயிக்கு, தங்கள் வேதனையை தெரிவிக்க முடியும்.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இன்னர் பிளான்ட் நிலையத்தின் விஞ்ஞானிகள். இந்த புதுமையை உருவாக்கியுள்ளனர்.

முதலில், தக்காளிச் செடியை இந்த வகையில் உருவாக்கி, விளைவித்து வெற்றி கண்டுள்ளனர். அடுத்து சோயா பயிர்களுக்கும் ஒளிரும் தன்மையை தர ஆய்வுகள் நடந்து வருகின்றன.நீர் போதாமை, பூச்சி தாக்குதல், சத்து பற்றாக்குறை போன்ற மூன்று நிலைகளை தெரிவிக்க, மூன்று வகையில் இன்னர் பிளான்டின் பயிர்கள் ஒளிரும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பயிர்கள் ஒளிர்வதை, சிறப்பு கேமரா மூலம், செயற்கைக்கோளிலிருந்தே படம் பிடிக்க முடியும்.எனவே தான், பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கே ஒளிரும் தொழில்நுட்பம் பயன்படும்.

இப்போதே, ஜப்பானிய முதலீட்டாளர்கள், சோயாவை ஒளிர வைக்கும் நுட்பத்தில் ஆர்வம் காட்டியுள்ளதாக, இன்னர் பிளான்ட் அதிகாரிக்கள் தெரிவித்துள்ளனர்.
= = = =

விண்ணில் தயாராகும் செயற்கைக் கோள். 



விண்வெளியில் இருந்தபடி, பூமியை சுற்றி வருபவை செயற்கைக் கோள்கள். அவற்றை, அதே விண்வெளியில், பூமியைச் சுற்றி வரும் ஒரு தொழிற்சாலையில் வைத்து தயாரிக்க முடியுமா என்று ஐரோப்பிய ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இதற்கான மாதிரி தொழிற்சாலையை, சிறிய அளவில் விண்வெளியில் செய்து பார்க்கும் பொறுப்பை, 'ஏர்பஸ்' நிறுவனம் ஏற்றுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், விண்வெளியில் தனியார் கூட்டுறவை நாட ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில், செயற்கைக் கோள்களை ராக்கெட் மூலம் அதிக செலவில் ஏவுவதற்கு பதில், விண்வெளியில் ஆலையை நிறுவி, அங்கிருந்தே ரோபோக்கள் மூலம் தயாரித்து விண்வெளிப் பாதையில் ஏவிவிட திட்டமிடுகிறது ஐரோப்பிய விண்வெளி அமைப்பு.

தனியார் விமான தயாரிப்பாளரான ஏர்பஸ், இந்த சோதனைக்காக, 35 லட்சம் டாலர்கள் நிதியையும் அண்மையில் பெற்றுள்ளது. ராக்கெட் செலவை குறைத்து, ரோபோக்கள் மூலம் செயற்கைக்கோளை, 'அசெம்பிள்' செய்து, ஏவும் உத்தி நடைமுறைக்கு வந்தால், எலான் மஸ்க் நடத்தும், 'ஸ்பேஸ் எக்'சின் கதி அவ்வளவுதான்!
= = = = 

38 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    பாசிட்டிவ் செய்திகள் படிக்கும் முன்
    அனைவருக்கும் என்றும் உடல் உள்ள நலன்
    கூடி இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய செய்திகள் நான் படிக்கத் தவறியவை. நன்றாகத் தேர்ந்தெடுத்து வெளியிட்ட கேஜிஜி சாருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. எத்தனை உண்மையான நேசம். அந்த மூதாட்டிகளுக்கும் ,
    மரளி சாருக்கும்
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.என்றும் வாழ்க
    வளமுடன்.

    பதிலளிநீக்கு
  4. கோவை யோக நாதன் அவர்களின் சேவை மகத்தானது.
    எத்தனை நிலங்களை வளப்படுத்தி மக்களின் மனங்களையும்
    செழிப்பாக்குகிறார்.
    அபூர்வ மனிதருக்கு மனம் நிறை பாராட்டுகளும் நன்றிகளும்.
    இவரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அரிய பழம் பொருளைக் கண்டு பிடித்த சித்தார்த்த சிங்க்
    அவர்களுக்கு மனம் நிறை வாழ்த்துகள். குழந்தை
    நல்ல ஆராய்ச்சி செய்து நல்லபடியாக முன்னுக்கு வர
    வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. 90 வயதில் ஓட்டுப் போட விழைந்த திருமதி மீனாக்ஷி அம்மாள்
    அதிசயப் பிறவி. வாழ்வின் நம்பிக்கைகளுக்கு உதாரணம் அவர்.
    மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

    நம் வாழ்வு உயர இவர்களைப் போல மனிதர்களே தேவை.

    பதிலளிநீக்கு
  7. ஜார்ஜியா பல்கலைக் கழக கண்டுபிடிப்பான மின் அட்டை
    இன்னோரு அதிசயம். நம் முன்னேற்றம் இன்னும் வளரட்டும்.

    பதிலளிநீக்கு
  8. எல்லா நற்செய்திகளுக்கும் மிக நன்றி.
    இணையம் வழி எங்களை வந்தடையும் இந்த செய்திகளை வழங்கிய உங்களுக்கும் இக நன்றி கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலமே வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  10. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து செய்திகளும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  11. யோகநாதன் போன்ற ஆர்வலர்கள், சேவார்த்திகள்தான் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலைப் பராமரிப்பவர்கள். போற்றி போற்றி எனப் புகழப்படவேண்டியவர்கள். அவர்களின் நற்செயல்கள் செழிக்கட்டும்.

    ஆனால்.. நாட்டில் மணல் சுரண்டிகளும், மரம் வெட்டி, காடழித்துக் கடத்துபவர்களும் அதிகம் உலவுகின்றனரே. அவர்களது சந்ததிகள் அல்லவா நாள்தோறும் செழித்து வளர்கின்றன? என் செய்வேன் ஐயனே!

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்! இன்றைய பதிவில் எளிய மனிதர்களைப் பற்றிய செய்திகள் மிகவும் கவர்ந்தது. இவர்களை தான் நாம் இன்று நல்வாழ்வு வாழ்கின்றோம்! வியக்க வைக்கும் செயற்கைக் கோள் பற்றிய பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை அமையப் பிரார்த்தனைகள். அனைத்து நற்செய்திகளும் புத்தம்புதியவை. தெரியாத அறியாத புதிய செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்/பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. யோகநாதன் சிறந்த உதாரண புருஷர்.. கோடாலி மண்வெட்டி இவற்றை விட அவரது கையில் இருக்கும் பூவாளி உயர்ந்தது.. சிறந்தது..

    வாழ்க அவரது தொண்டு...

    பதிலளிநீக்கு
  15. //அவர்களின் அந்த உளமார்ந்த வாழ்த்திற்கு நிகரான வாழ்த்து இனி இருக்கப் போவதில்லை என்றார்.//
    உண்மை. வாழ்த்துக்கள்.

    இந்த செய்தி புது செய்தி.

    //என்னைப் பாராட்டுவதை விட என்னைப் பார்த்து மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுங்கள் அதுதான் நாம் இந்த சமுதாயத்திற்கு செய்யும், செலுத்தும் நன்றி//

    திரு .யோகநாதன் அவர்கள் சொல்வது சரியே. அவருக்கு வாழ்த்துக்கள்.
    அவரைப்பற்றி முன்பே படித்து இருக்கிறேன்.


    //புவியியல் ஆய்வு பிரிவுக்கு தனது மகனின் கண்டுபிடிப்பை அனுப்பி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்//
    சிறுவன் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

    ஜார்ஜியா பல்கலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    விவசாயியுடன் 'பேசும்' பயிர்கள்

    விண்ணில் தயாராகும் செயற்கைக் கோள்.

    எல்லாம் நல்ல நல்ல செய்திகள் புது செய்திகள்.
    நன்றி.


    பதிலளிநீக்கு
  16. அருமை. அருமை. இன்றைய தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  17. அனைத்து செய்திகளும் சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுகள்.

    காலை வணக்கம் சொல்லிவிட்டு பிறகு வர முடியவில்லை. இப்போது தான் படித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!