வியாழன், 15 ஜூலை, 2021

நான் யார் நான் யார் நீ யார்...

 நம்ப முடியாத  விநோதங்கள் கதையிலும் திரைப் படங்களிலும்தான் நடக்குமா என்ன!  நிஜ வாழ்வில் நடக்காதா?  நிஜ வாழ்வில் நடப்பவைகளைதானே திரைப்படங்களில் காட்டுகிறார்கள்?  அப்படி ஒரு ருசிகரமான சம்பவம் ஒன்றை அறிய நேர்ந்தது.

65 வயது அலெக்ஸ்.  பிரிட்டிஷ் கொலம்பியா-  இசைக்கலைஞர்.  ஐந்து குழந்தைகளும் ஏராளமான பேரக்குழந்தைகளும்!  அன்பான கணவன்தான்.  ஆனால்..

ஒருநாள் அலெக்ஸின் பெண் லீலா தன் கணவனுடன் ஷாப்பிங் செல்லும் வழியில்  தந்தை அலெக்ஸின் கார் ஊருக்கு வெளியே ஆற்றங்கரையோரத்தில் நிற்பதைப் பார்த்தாள்.

லீலா பீட்டரிடம் கூவினாள்.

"காரை நிறுத்துங்க...    அப்பாவோட ட்ரக் அங்க நிக்குது...   பாத்துப் பேசிட்டுப் போயிடலாம்"

பீட்டர் காரை நிறுத்தினான்.  "ஏற்கெனவே லேட் லீலா...  ஏற்கெனவே நீ ஷாப்பிங் செய்ய ரொம்ப லேட்டாகும்...சீக்கிரம் கிளம்பணும்"

ஆனால் அங்கு சென்று பார்த்தால் வண்டிதான் நின்றதே தவிர சுற்றிச் சுற்றி எங்கு தேடியும் அப்பாவைக் காணோம்.  மீன் பிடித்துக் கொண்டிருப்பாரோ என்று பார்த்தால் அவரையே யாரோ பிடித்துக் கொண்டு போய்விட்டார்களா?  அவர் வேறு இதய நோயாளியாச்சே...

அம்மாவுக்கு போன் செய்தால் அவள் கணவனைப் பார்த்து 'முழுசா 24 மணி நேரத்துக்கு மேல ஆச்சுடி பொண்ணே' என்றாள்.

மெதுவாக நிலைமையின் தீவிரம் உரைக்கத்தொடங்க, போலீசுக்கு போன் செய்ய, அவர்கள் அலெக்ஸைத் தேடி விசாரணையைத் தொடங்கினார்கள்.

கார் நின்ற இடத்துக்கு ஒரு மைல் தூரத்தில் இருந்த ரெஸ்ட்டாரெண்ட்டில் அவர் சாப்பிட்டிருக்கிறார் என்கிற தடயம் மட்டுமே சிக்கியது.  அப்புறம் துப்புரவாக தேடத் தொடங்கினார்கள்.  

எப்பவும் கைல கட்டு பணம் வச்சிருப்பாரே....

அலெக்ஸை யாரோ கொன்று விட்டார்கள் என்று மனைவி மார்கரெட் உட்பட குடும்பத்தார் நினைக்க, மகளோ இதய நோயாளியான தந்தை, மீன் பிடிக்கப் போய் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டாரோ என்று விசனப்பட்டாள்.  

தொலைக்காட்சியில் எல்லாம் விவாதம் தூள் பறக்க, 'இவர் மாதிரி ஒருத்தரை அங்க பார்த்தேனுங்க...   இங்க கண்ல பட்டாருங்க" என்று ஆளாளுக்கு தகவல் கொடுக்கத் தொடங்கினார்கள்.

காவல்துறைக்கோ, அலெக்ஸ் என்னவோ தானாகவே விரும்பித்தான் எங்கேயோ காணாமல் போயிருக்கிறார் என்று சந்தேகம்.   குடும்பத்தார், "அதெப்படிங்க போலீசு...   அவர் க்ரெடிட் கார்ட், ஹார்ட்டு மாத்திரை, மற்றும் நோயோட டீட்டெயில் எல்லாம் வீட்டிலதானுங்களே இருக்கு" என்று மேலும் குழப்பினார்கள்.

ஒரு வருஷம் கடந்துவிட, அவர் இறந்து விட்டார் என்று சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பித்து அதையும் பெற்றார்கள்.

வாரிசு சான்றிதழ் மேலும் இன்னபிற தேவைகளுக்காக அலெக்ஸின் சான்றிதழ்களைத் தேடியபோது அவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.  அவர்  பெயரில் பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் உட்பட எதுவுமே கிடைக்கவில்லை.  

இல்லை.  

இன்னும் சொல்லப் போனால் இவர்கள் திருமணத்துக்கு முன் அவர் பற்றிய எந்த விவரங்களுமே இல்லை.  அலெக்ஸ் என்கிற மனிதர் அங்கு இருந்ததற்கான எந்தவிதமான தடயங்களும் முன்விவரச்சுருக்கம் கொடுக்கமுடியவில்லை.

மார்கரெட் குழம்பிப் போனாள்.  யாரென்று தெரியாமலேயே இருந்த ஒரு மனிதனுடன் 35 வருடங்கள் தான் வாழ்ந்திருக்கிறோமா?  அலெக்ஸ் என்பது அவர் நிஜப்பெயர் இல்லை என்பது அவர்களுக்கு உரைக்கத் தொடங்கியது.

இந்தப் பைத்தியக்கார நிலை மேலும் சில வருடங்களுக்குத் தொடர்ந்தது.

சில வருடங்களுக்குப்பின் பல கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஊரில் காணாமல்போன மனிதர் பற்றிய புகார் ஒன்று வந்தபோது, அந்த விவரங்கள் அலெக்ஸ் விவரங்களோடு ஒத்துப் போனது தெரிய வந்ததது.  அவரும் விற்பனையாளராகத்தான் இருந்திருக்கிறார் என்றும் தெரிய வர, அங்குபோய் தேடியபோது இவர் உருவமும் அவர் உருவமும் ஒத்துப்போனது தெரிய வந்தது.  அலெக்ஸ் காணாமல் போன சில நாட்களுக்குப்பின் அங்கு ஒரு மேன்ஷனில் குடியேறியிருந்திருக்கிறார் இவர்.  அவர் ரூமைத்தேடியபோது அலெக்ஸ் தனது பேத்தியுடன் இருந்த புகைப்படம் ஒன்றும் சிக்கியது.  

இவரும் அவரும் ஒருவரே என்று முடிவு செய்தார்கள்.

அவர்கள் கிளம்பிச்சென்ற சில மணி நேரங்களில் திரும்பி அறைக்கு வந்த அந்த நபர், அறை கலைந்து கிடைப்பதைக் கண்டு விசாரித்து, போலீஸ் வந்து விசாரித்ததை அறிந்து மறுபடி காணாமல் போனார்.

மறுபடி தேடிவந்த போலீஸ் இவர் ஏன் மறுபடி மறுபடி தலைமறைவு ஆகிறார் என்று அவர் பூர்வீகத்தை ஆராய ஆரம்பித்தது.

பல்வேறு நகரங்களிலும் இவர் புகைப்படம் ஓட்டப்பட அதைப் பார்த்த ஒருவர் வந்து கொடுத்த தகவலில் உண்மை வெளிவரத் தொடங்கியது.

  

அவர் நிஜப்பெயர் ஆல்பின்.  ஒரு அலுவலகத் திருட்டுக் குற்றம் அவர்மேல் சுமத்தப்பட, செய்யாத குற்றத்துக்கு சிறைத் தண்டனையை விரும்பாத ஆல்பின் தனது ஓட்டத்தைத் தொடங்கினார்.

பெயர் மாற்றி அலெக்ஸ் ஆகி மார்க்ரெட்டை மணந்து, வேறு வேலையில் அமர்ந்து செட்டிலானார்.  பின் எப்போது பிரச்சனை வந்தது?  முப்பது வருடங்களுக்கும் மேலாக கட்டிக்காத்த ரகசியம் உடைபடவேண்டிய காரணம் அவர் 60 வது பிறந்த நாள் வந்தபோது, அவர் பென்ஷனுக்கு பிறப்பு, கல்விச் சான்றிதழ் முதலானவற்றைக் கொடுக்க வேண்டி இருந்தபோது வந்தது.  இந்த விவரங்களை குடும்பத்தாரிடம் சொல்ல முடியாமல் காணாமல் போனார் அலெக்ஸ்.


போலீஸ் விசாரணையில் விவரங்கள் தெரியவர, சில பல தடங்கல்கள், தயக்கங்களுக்குப்பின் மீண்டும் வந்து குடும்பத்துடன் இணைந்தார் அலெக்ஸ். 
================================================================================================================

தான் வரைந்த ஓவியத்துக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசு பெற்றார் அந்த ஓவியர். 





பரிசு வாங்கிய கலைஞர்களுக்கு மன்னர்பிரான் நத்திய விருந்தில் சுதேச மன்னர்களுக்கும் கிடைக்காத பாக்கியமாக ஷாஜஹான் சக்கரவர்த்தி மயிலாசன மண்டபத்தில் மன்னருடன் நெருங்கி அமர்ந்து விருந்துண்ட அந்த ஓவியர் ஒரு கவிஞரும் கூட.. அவர் பெயர் கருப்பண்ணன்.  எல்லோராலும் அறியப்பட்ட பெயர் நாமக்கல் கவிஞர்.  

அவர் வரைந்த ஓவியம் ஜார்ஜ் மன்னர் ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போலவும் இந்தியத் தாய் அவருக்கு முடிசூடுவது போலவும்.  

இது நடந்தது 1912 ல்.

======================================================================================================

யோவ்...   கலாய்க்க வேற ஆள் கிடைக்கலையா உனக்கு...!

பொதுவுடைமை..     பின்னாளில் இவன் நிச்சயம் அரசியல்வாதியாகி இருப்பான்...


கணக்குப்பிள்ளை!

====================================================================================================

ஓரிரு வாரங்களுக்கு முன் விக்ரமாதித்தன் கேள்வி என்று எழுதி இருந்தபோது, இதற்கு இரண்டு விக்ரமாதித்யன் கவிதைகள் வெளியிட்டிருக்கலாம் என்று சொல்லி இருந்தார் ஜீவி ஸார்.  இதோ இரண்டு விக்ரமாதித்யன் கவிதைகள்...

நம்பமுடியாத அளவுக்கு வாழ்க்கை

நம்ப முடியாத அளவுக்கு
சலிப்பூட்டுகிறது
சொல்ல முடியாத படிக்கு
சாரமற்றிருக்கிறது
விழுங்கிவிட முடியாத அளவுக்கு
கசப்படிக்கிறது
துப்பிவிட முடியாத படிக்கு
சிக்கிக் கொண்டு விட்டிருக்கிறது
கனவுகாண முடியாத அளவுக்கு
வறண்டு போயிருக்கிறது
கற்பனை செய்ய முடியாதபடிக்கு
எரிச்சல் படுத்துகிறது
தீர்த்து வைக்க முடியாத அளவுக்கு
பிரச்சனை கொண்டிருக்கிறது
அணைக்கவே முடியாதபடிக்கு
கனன்று பற்றி எறிந்து கொண்டிருக்கிறது
காற்று போல நீர்போல இல்லாத
இந்த மிருகத்தை என்னதான் செய்வது


இந்த பிரபஞ்சம் பற்றி

இந்த பிரபஞ்சம் பற்றி
எனக்கு
தெரிந்ததெல்லாம்
வெறும் தகவல்கள்
இந்த உலகம் குறித்து
எனக்கு
தெரிந்ததும்
புஸ்தகப் படிப்பு
இந்த நாடு பற்றி
நான்
அறிந்தவையெல்லாம்
கல்வி கேள்வி
எங்கள் ஊர்
எங்கள் தெருபற்றியெல்லாம்
அனுபவம்
கொஞ்சம் கொஞ்சம்தான்
எங்கள் வீடு குறித்தே
என் அனுபவத்தில்
புரிந்து கொண்டது   
          கொஞ்சம் தான்   
இவ்வளவு எதுக்கு
என்னைப் பற்றி
எனக்குத் தெரிந்ததே
கொஞ்சத்திலும் கொஞ்சம்
இதில் எதைப்பற்றியும்
யார் குறித்தும்
அபிப்ராயம் சொல்ல
நான் யார்

=======================================================================================================


இப்பவும், இங்கேயும் பதில் சொல்லலாம்!




ஞாயிறுகளில் எக்கச்சக்க செடிகள் பற்றி பார்க்கிறோம்...  இங்கே இப்போது..


======================================================================================================

திரு கிருஷ்ணமூர்த்தி ஸார் மறைவைப் பற்றி நேற்றுதான் கேள்விப்பட்டேன்.  கீதா அக்கா மூலம் தகவல் அறிந்தேன்.  மிகவும் அதிர்ச்சியான, வருத்தமான செய்தி.  அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.






145 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    எப்போதும் போல இன்றைய வியாழன் கதம்பம் சிறப்பு

    பதிலளிநீக்கு
  2. கிருஷ்ணமூர்த்தி சாரின் மறைவு... உண்மையில் திடுக் என இருக்கிறது. கவனிக்கப்படாத அரசியல் செய்திகள், காணொளிகளைத் தன் தளத்தில் பகிர்வார்.. உடனுக்குடன் மறுமொழியும் எழுதக்கூடியவர்.

    சட் என்று மறைந்துவிட்டார். அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட எட்டு ஒன்பது வருடங்களாக பழக்கம். அவரின் திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

      நீக்கு
  3. அபிப்ராயம் கவிதை உண்மையைச் சொல்கிறது. மனைவி மகன் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கூட அறிந்துகொள்ளாமல் ஊரைப் பற்றி மட்டும் எப்படி அபிப்ராயம் சொல்லலாம்?

    வாழ்க்கையை இவ்வளவு கசப்பாக உணரவேண்டியதில்லை. ரொம்பவே எதிர்மறையாக இருப்பதாகத் தோணுது.

    இரண்டு கவிதைகளும் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விக்ரமாதித்யன் கவிதைகள் வேறு ரகம்.  சில தினங்களுக்குமுன் ஜீவி  சார் இரண்டு விக்ரமாதித்தன் கவிதைகள் பகிர்ந்திருக்கலாம்  என்று சொன்னதிலிருந்து எடுத்து வைத்திருந்தேன்.  இன்னும் சிலவும் இருக்கின்றன.  பின்னர் மெதுவாக அவ்வப்போது பகிர்கிறேன்!

      நீக்கு
    2. விக்ரமாதித்யன் சமகாலக் கவிஞர்களில் எனக்குப் பிடித்தமானவர். அவரது இரண்டு கிண்டில் கவிதைப் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். ஒன்றுபற்றிய கருத்தும் அமேஸானில் எழுதியிருக்கிறேன். அவர்பற்றி ஒரு சின்னக் கட்டுரை எழுத எத்தனித்து மாதங்களாகிறது.

      எதிலும் நிற்காத மனத்தை வைத்துக்கொண்டு என்னத்தைச் சொல்வது..எழுதுவது..

      நீக்கு
    3. மேலே கொஞ்சம் தவறு. இரண்டல்ல. விக்ரமாதித்யன் கவிதை நூல் ஒன்றுதான் அமேஸானில் வாங்கியிருக்கிறேன் (மற்றுமிரண்டு: ‘ழ’ கவிதைத் தொகுப்புகள்). நான் வாங்கிய அவரது கவிதை நூல்: 'சும்மா இருக்கவிடாத காற்று'.
      அதிலிருந்து சின்னதாக ஒன்று:

      சூட்சுமம் புரிந்தவர்

      சிதறித் தெறிக்கின்றன
      பரல்கள்
      சுடலையில்
      ஆடிக்கொண்டிருக்கிறான்
      காளியுடன்
      தனித்திருக்கிறாள்
      உமை

      **

      நீக்கு
    4. நீங்கள் பகிர்ந்திருப்பது விக்ரமாதித்யன் கவிதையா ஏகாந்தன் ஸார்?  நன்றாய் இருக்கிறது.

      நீக்கு
    5. விக்ரமாதித்யன் கவிதைதான்.

      நீக்கு
  4. கணக்குப்பிள்ளை..... சிலவற்றை வாங்கும்போது நல்ல லாபம், இதற்கு முந்தைய தடவையைவிட சல்லிசு விலை... என்றெல்லாம் நிகழும்போது மனதுக்கு ஏற்படும் சந்தோஷம்போல, சிறிது குறைந்தாலும் வரும் வருத்தம். நல்ல நகைச்சுவை.

    இந்த வார இறுதியில் நூறு ரூபாய்க்கு (அதுக்கு எத்தனை யோசை, பேரம்) வாங்கிய பலாப்பழம்... அதன் சுவை சொல்லி மாளாது. அவ்வளவு இனிப்பு. வேறு இடத்தில் வாங்கிய இன்னொரு பலாப்பழம் எப்படி இருக்கும்னு தெரியலை.. இன்று உரிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு சென்னையிலும் முழுப் பழமாகவே விற்கிறார்கள்.  வாங்கி உரிக்கும் பொறுமை இலலாததால் வாங்கவில்லை!

      நீக்கு
  5. முன் கதை தெரியாத ஆளுடன் முப்பது வருட வாழ்க்கை... மேற்கில்தான் இதெல்லாம் சாத்தியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... ஹா... கதை போல ஒரு நிஜம்!

      நீக்கு
    2. எதற்கெடுத்தாலும் அது என்ன மேற்கு?

      1. 18 வயது ஆனால் தான் அங்கு மது அருந்த முடியும். அதுவும் அதற்காக தனி லைசன்ஸ் வாங்கி. அந்த லைசன்ஸை காட்டினால் தான் மது.

      2. அந்த சீதோஷ்ண நிலைக்காக மது அதுவும் வீட்டில், பார்ட்டிகளில் தான்.

      3. ரோடில் யாரும் தன் நினைவற்று விழுந்து கிடப்பதில்லை.

      4. இங்கிருக்கிற இலட்சணங்கள் நமக்குத் தெரியும்.

      5. பெண்களுக்குக் கூட வெண்சுருட்டு பழக்கம் இப்பொழுது காணக்கிடைக்கிறது.

      6. லிவிங் டுகெதர் -- வாழ்க்கை நிலைகள் அதிகரித்திருக்கின்றன.

      7. மது அருந்த வயது வரம்பே கிடையாது என்பதால் இது விஷயத்தில் சர்வ சுதந்திரம் இங்கு.

      தம்பி துரை வாசித்து வருந்துவாரே என்பதற்காக இது மட்டும் இப்போதைக்கு.

      நீக்கு
    3. ஜீவி சார்... நான் மேற்கு என்று எழுதியது, அந்தக் கலாச்சாரத்தைக் குறைத்துச் சொல்ல அல்ல. மேற்கு, கிழக்கு, பாரத கலாச்சாரம் என்று வெவ்வேறு கலாச்சாரங்கள். அதில் இது தவறு, இது சரி என்பதெல்லாம் நாம் எந்த இடத்தில் இருந்து பேசுகிறோம், நம் மதிப்பீடு என்ன என்பதைப் பொறுத்தது.

      நீங்க சொன்னவைகள் எல்லாமே, அங்கிருந்து வந்தவை. நம்மிடம் பெரும்பாலும் இருந்தவை, பெண்களை அடிமைப்படுத்தி, 'ஆண்..ஆண்' என்று ஆணவம் காண்பித்ததுதான். அதனால்தான் வாய்ப்பு வரும்போது, தங்கள் மன அழுத்தத்திலிருந்து வெளிவரும் விதமாக, வெண்சுருட்டு பழக்கம் பெண்களுக்கு இருக்கிறது. (கூடவே ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண் என்ற மதுவும்தான்)

      //சீதோஷ்ண நிலைக்காக மது// - இதெல்லாம் சப்பைக்கட்டு. மேற்கத்தையவர்களுக்கு மதுப் பழக்கம் உண்டு. அவ்ளோதான். //தன் நினைவற்று// - பாவம். நீங்க காணொளிலாம் பார்ப்பதில்லை போலிருக்கு. நம் இந்திய வம்சாவழிப் பெண், அங்கு மருத்துவராய் படித்துக்கொண்டிருந்தவர்-அல்லது இண்டர்ன்ஷிப். டாக்சிக்காரனிடம் மதுபோதையில் அடாவடி செய்து, பிறகு அந்த மருத்துவக்கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். நான் இதைக் குறை சொல்வதற்காகச் சொல்லவில்லை. ஒவ்வொரு கலாச்சாரமும் வேறு வேறு.

      லண்டனில், ஒருவர் (பிஸினெஸ் விஷயமாகத் தொடர்பு உள்ளவர்) தன் மகன் இறந்த நாள் அன்று என்று சொன்னார். நீங்கள் இருவரும்-கணவன், மனைவி, சிமெட்ரிக்கும் சர்ச்சுக்கும் செல்லவேண்டியிருந்தால், நாளை சந்திக்கலாம் என்று சொன்னதற்கு, அது முதல் மனைவியின் மகன், அவளை டைவர்ஸ் பண்ணிவிட்டேன் என்று மேட்டர் ஆஃப் ஃபேக்ட் ஆகச் சொன்னார். இன்னொருவர், என் மகனை என்னுடன் தங்க அனுமதித்திருக்கிறேன் (மகன் 22 வயது), அவனிடம் வாடகை வாங்குவதில்லை, அவனுடைய கரண்ட் செலவுக்கும் நான் சேர்த்து பணம் கட்டுகிறேன் என்று சொன்னார் (எனக்கு அட.. என்றிருந்தது. இதுபோல பல அனுபவங்கள்). இது கலாச்சார வித்தியாசம். அவ்ளோதான்.

      நாம வருந்தணும்னா, நம்ம கலாச்சாரத்துல பிற கலாச்சாரத்தின் நல்லது மட்டும் சேராமல், முதலில் கெட்டவைகள் அதிகமாகச் சேர்ந்துகொண்டே போகிறதே என்பதை நினைத்துத்தான்.

      நீக்கு
  6. திருமணமாகி, முப்பது வருடங்களாக கணவன் சொல்லைத் தட்டாத மனைவி, திடுமென, தன் விருப்பம் என்ற ஒன்றையே இதுவரை யோசிக்கவில்லையே என சட் என மனதில் பொறி பறக்க கணவனை விவாகரத்து செய்துவிட்டாளாம்... இதுவும் மேற்கத்தைய மனோநிலை.

    ஒருவேளை, கணவனை இழந்த பிறகு, நம் ஊரிலும் பலருக்கு அந்த மாதிரி விடுதலை பெற்ற உணர்வு வருமோ? தெரியலை (பணம் சேர்த்துவிட்டு கணவன் போயிருக்கணும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பாராவுக்கு உதாரணம் நான் கண்ணெதிரே பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. கணவனை இழந்து வாழ்கையில் சோகத்தில், அவன் நினைவாக இருப்பவர் பலர் நம் நாட்டில். விட்டது சனியன் என்று வெளியே சொல்லாவிட்டாலும், விடுதலை உணர்வுடன் ஆனந்தமாக வாழ்பவரும் உண்டு இதே நாட்டில்!

      நீக்கு
    3. அதே...   அதே...   அதையேதான் நானும் சொல்லவந்தேன்.

      நீக்கு
    4. ஶ்ரீராம் சொல்வது போல் நானும் பார்த்திருக்கேன்.

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நெல்லை ஸ்ரீராம் சம்பாஷணை சுவாரஸ்யம்.

    அனைவரும் நோய் நொடி இல்லாமல் என்றும் ஆரோக்கிய நல்வாழ்வு பெற
    இறைவன் அருள வேண்டும்.
    மீண்டும் கீதாமா, இங்கே சீக்கிரம் வந்து
    வலி இல்லை என்று சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா.. வாங்க.. கீதா அக்காவின் "நல்லாயிருக்கேன்" ரிப்போர்ட்டுக்காக நானும் வெயிட்டிங்.

      நீக்கு
    2. ரிப்போர்ட் இப்போத் தான் வந்தது. கவலைப்படும்படியாக ஏதும் இல்லை. சர்க்கரை அளவு தான் 200+ இருக்கு/காலை உணவுக்குப் பின்னர். அதுவும் பயம் தரும்படியா இல்லை.

      நீக்கு
    3. அப்படி எதுவும் பிரச்சனை இருக்காது என்றுதான் நான் நினைத்தேன் கீசா மேடம். கால் வலி-நரம்பு சம்பந்தமானது...அதற்கு ஏதேனும் தீர்வு வந்ததா?

      நீக்கு
    4. நன்றி நெல்லை. கால்வலி நரம்பு சம்பந்தமானதே தான். இப்போது வலக்காலில் வலி/வீக்கம் குறைந்து வருகிறது. இடக்கால் பாதத்தில் நரம்புகள் புடைத்துக்கொண்டு வலியைத் தருகின்றன. கொஞ்சம் நாட்கள் எடுக்கும் போல! எல்லாம் சரியாக. பொறுத்திருப்போம். நேற்றைக்கு இன்று பரவாயில்லை. கொஞ்சம் நடக்கிறேன்.

      நீக்கு
    5. இன்னிக்குக் காஃபி, தேநீர் எல்லாம் நானே போட்டேன். :))))) பெரிய சாகசம் இல்லையோ? :))))

      நீக்கு
    6. //கவலைப்படும்படியாக ஏதும் இல்லை.//

      நிம்மதி.

      //இன்னிக்குக் காஃபி, தேநீர் எல்லாம் நானே போட்டேன். :))))) பெரிய சாகசம் இல்லையோ? :))))//

      கஷ்டப்பட்டபின் இது மாதிரி வேலைகளை செய்ய முடியும்போது வரும் சந்தோஷமே அலாதிதான்.  சாதனைதான்.

      //கால்வலி நரம்பு சம்பந்தமானதே தான்.//

      இதற்கு வாரம் ஒரு ஊசி போட்டுக்கொள்ளச் சொல்வார்களே...

      நீக்கு
    7. முன்னர் வந்தப்போ ஊசி தான் கிட்டத்தட்ட 2,3 மாதங்கள் போட்டுக் கொண்டிருக்கேன் ஶ்ரீராம். இப்போது சித்தா/ஆயுர்வேத மருத்துவம் என்பதால் ஊசிகள் எல்லாம் இல்லை. இன்றைய நிலவரம் கால் வீக்கம் குறைந்து கொஞ்சம் நடமாடினேன். காஃபி, தேநீர்/வேலை செய்யும் பெண்ணிற்குப் போட்டதோடு நெய் காய்ச்சி இன்னிக்கு சாதமும் நானே வைத்தேன். பெரிய விஷயம் இல்லையோ? இதுவே நல்லபடி தொடரணும் எனப் பிரார்த்தனை பண்ணிண்டு இருக்கேன்.

      நீக்கு
  8. முப்பது வருட தாம்பத்யம். நிஜப் பெயர் தெரியாமலேயே!!
    மிக மிக அதிசயம். ஆனால் இது எல்லாம் தூக்கி
    சாப்பிடறமாதிரி தினம் ஒரு செய்தி இங்கே.

    சித்தம் போக்கு சிவன் போக்கு என்று வாழ்பவர்களும் உண்டு.
    டயமண்ட் ஜூபிலீ, 75 வருட தாம்பத்ய பாட்டி தாத்தாக்களும் உண்டு.

    மனம் எப்போது வேண்டுமானாலும் சலித்துப் போகலாம் என்றால்

    அந்த மண வாழ்க்கை எதற்காக?
    நம்மூரிலும் வித வித தம்பதிகளைப்
    பார்த்திருக்கிறேன். குழந்தை இல்லாததால் கணவனை
    வெறுத்த மனைவி கோவையில் எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருந்தார்.
    அவர் முன்னால் குழந்தைகளோடும்
    இவரோடையும் வரவே பயமாக இருக்கும்.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விக்ரமாதித்யன் கவிதைகளில்
      அழகில்லை. வெறுப்பு தெரிகிறது.

      நீக்கு
    2. நான் தெரிவு செய்தது தவறோ?!! மேலும் அதை வெறுப்பு என்று சொல்லலாமா, தெரியவில்லை!

      நீக்கு
    3. மண வாழ்க்கை சலிக்கத்தான் செய்யும். அதனால்தான் இறைவன், எப்போதும் ஏதேனும் ஒரு காரணம், அந்த வாழ்க்கையைத் தொடர காரணமாக வைத்துள்ளான். ஆரம்பத்தில் மோகம், கௌரவம், பிறகு குழந்தைகள், பிறகு அவர்களின் எதிர்காலம், திருமணம், பேரன் பேத்தி, பிறகு தங்களுக்கு மற்றவர் கொழுகொம்பாக.

      முடிந்தவரை, நடு வயதுக்குப் பிறகு இருவரும் ஓரளவு ஒருவரை ஒருவர் சாராத வாழ்க்கையாக வாழ வேண்டும் (சாக்சை எடுத்துட்டு வா, கண்ணாடியை எங்க வச்சேன், ரிமோட்டை என்னிடம் கொடு, என் ரூம்ல ஒரே குப்பை...சரி செய்துடு என்றெல்லாம் வேலைப்காரியாக ட்ரீட் செய்யாமல், பசங்க வளர வளர அதிகரிக்கும் வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கிட்டு...என்றெல்லாம்)

      நீக்கு
    4. ஸ்ரீராம்- உங்களது தெரிவு தவறானதல்ல!

      அவரது கவிதைகளில் வெறுப்பு? நிச்சயம் இல்லை. வாழ்வின் ஆழ்தரிசனத்தில், நிதர்சனத்தின் காட்சிகள் தெரிகின்றன; வெறுமையின் வறட்சி ஆட்கொகிறது.. அவ்வளவுதான்!

      நீக்கு
    5. ஆழ்தரிசனம் செய்யும்போது விருப்புமின்றி வெறுப்புமின்றி இருக்காதோ?

      நீக்கு
  9. கணக்குப் பிள்ளை எண்ணி எண்ணியே
    காலத்தைக் கழிப்பார் போலிருக்கிறது.:)))))

    பதிலளிநீக்கு
  10. பொதுவுடமைப் பையனின் பதில் நல்ல நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  12. // மீன் பிடித்துக் கொண்டிருப்பாரோ என்று பார்த்தால் அவரையே யாரோ பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.. //

    ஆகா .. அருமை...

    பதிலளிநீக்கு
  13. நாமக்கல் கவிஞர் - ஓவியர் என்பது தெரியும்.. ஆனால் அவரது தூரிகை இப்படியும் செய்ததா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :-)). ஆம். அதற்காகத்தான் பகிர்வே!!!

      நீக்கு
    2. அவர் ஓவியம் வரைந்த, அதனால் பெற்ற பெரிய சன்மானத்தை அவரே நெகிழ்ச்சியுடன் விவரித்திருப்பார். அதுபோல அவரது வேண்டா வெறுப்பான திருமணம்....அவரது மனநிலை சில வருடங்களுக்குப் பிறகு திடுமெ மாறியது....

      நீக்கு
    3. ஆம்.  அப்படிதான் தெரிகிறது.  நான் 'என் கதை' பிடித்ததில்லை.  இது அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்த சிறு பகிர்வே.

      நீக்கு
    4. இந்த ஓவியம் பற்றி நாமக்கல்லார் தன் வரிகளாக எழுதியிருப்பதை படம் எடுத்துப் போடவும்.
      இது

      நீக்கு
    5. நான் 'என் கதை' படித்ததில்லை. இது அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்த சிறு பகிர்வே. பகிரப்பட்டிருப்பது பழைய விகடனில்.

      நீக்கு
  14. நாமக்கல் கவிஞரா அப்படி ஓவியம் வரைந்தார்?
    என்ன இது!!! அவர் பிம்பமே கலைகிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்ப காலமாயிருக்கலாம். பின்னர் மனோதர்மம் மாறியிருக்கலாம்.

      நீக்கு
    2. அவரது சொந்தக்கார்ருடன் ஆப்கான் பார்டர் வரை சென்றது, மன்னரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது என்பதையெல்லாம் அவர் தன்வரலாறில் எழுதியிருக்கார். எப்போதும் அவருக்கு அடிமைப் புத்தி இருந்ததில்லை. நாட்டுக்காக எல்லாவற்றையும் இழந்தது, அவரது பணக்கார நண்பர்கள் அவருக்கு உதவி செய்ய நினைத்தபோதெல்லாம் அவருக்குக் கொடுப்பினை இல்லாதிருந்தது என்றெல்லாம் அவர் மனம் திறந்து எழுதியிருக்கிறார்.

      கடுகு சார் ரெகமென்ட் செய்து அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தருக்கிறேன்.

      நீக்கு
    3. ஓஹோ..  நான் மேலே சொல்லி இருப்பது போல புத்தகம் படிக்கவில்லை.  ஜீவி ஸார் நெல்லை சொல்லி இருப்பதை கவனிக்கவும்!

      நீக்கு
    4. ஐந்தாம் ஜார்ஜ் படம் வரைந்து பதக்கம் பெற்றார் என்பது நானும் அறிந்தது தான். 'இந்தியத் தாய் முடி சூட்டுகிற மாதிரி' என்பதில் தான் குழப்பமாக இருந்தது.
      இப்பொழுது தரவு தந்திருக்கிறீர்கள். நன்றி.
      இது யார் எழுதிய புத்தகம் என்பது
      தான் அடுத்த கேள்வி.

      நீக்கு
    5. அவரே எழுதியது.  என்கதை என்கிற பெயரில் தன்வரலாறு.

      நீக்கு
    6. அவரே எழுதிய புத்தகத்தில் அவரே தன்னை --

      அவரை என்றும் நாமக்கல்லார் என்றும்
      நாமக்கல்லரை என்றும் குறிப்பிட்டுக் கொள்கிறாரா?

      நீக்கு
    7. நீங்கள் கொடுத்துள்ள தரவுப் பகுதியைப் படித்துப் பாருங்கள்.

      நீக்கு
    8. நீங்கள் கொடுத்திருப்பது அந்த நூலுக்கு முன்னுரை மாதிரி இருக்கிற வேறு யாரோ எழுதியது.

      நீக்கு
    9. அல்லது குமுதம், விகடன் மாதிரி வேறு ஏதோ புத்தகத்தில் வெளிவந்த அந்த 'என் கதை' நூலைப் பற்றிய குறிப்பு.

      நீக்கு
    10. முன்னரே தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன்.  என்னிடம் என் கதை புத்தகம் இல்லை.  நெல்லை அனுப்பினால் வெளியிடுகிறேன் என்றும் சொல்லி இருந்தேன்.

      நீக்கு
  15. அந்த ஓவியர் ஒரு கவிஞரும் கூட.. அவர் பெயர் கருப்பண்ணன். எல்லோராலும் அறியப்பட்ட பெயர் நாமக்கல் கவிஞர். //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////அவர் ராமலிங்கம் பிள்ளை தானே.கருப்பண்ணன் என்று ஒரு பெயரா?

    பதிலளிநீக்கு
  16. திரு. கிருஷ்ணமூர்த்தி நற்கதி அடையப் பிரார்த்தனைகள்.
    எல்லாமே அதிர்ச்சி தருவது போல
    நடக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நம்பமுடியாத செய்தி. வதந்தி, செய்தி பொய் என்று யாரேனும் சொல்ல மாட்டார்களா என்று நப்பாசை.

      நீக்கு
  17. திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களது மறைவு அதிர்ச்சி..

    அவரது ஆன்மா இறைநிழல் அடையட்டும்..

    பதிலளிநீக்கு
  18. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    நிஜக்கதை வியக்க வைக்கிறது. எத்தனை விதமான மனிதர்கள் நம்மைச் சுற்றி உள்ளார்கள் என ஆச்சரியப்பட வைக்கிறது.

    இரு கவிதைகளும் அழகாக உள்ளது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய கவிதைகள். "என்னைப் பற்றியே நான் இன்னமும் அறிந்து கொள்ளாத போது பிறரைப்பற்றிய அபிப்ராயம் சொல்ல நான் யார்?" என்ற தன்னடக்க கவிதை அருமை. இந்த "நான் யார்" என்ற ஆராய்ச்சியின் முடிவில் பிறந்ததோ "என்ன வாழ்க்கை" என்ற தத்துவார்த்தமான முதல் கவிதை. இரண்டையும் இப்படி ஒரு கோணத்தில் வித்தியாசமாக தொடர்புபடுத்தி பார்த்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  நீங்கள் கவிதையை ரசித்திருக்கிறீர்கள்.  நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  20. வியாழன் கதம்பத்தில் ஒரு செய்தி தவிர மற்ற‌ செய்திகள் சுவாரஸ்யம்.
    நாமக்கல் கவிஞர் ஓவியர் என்பது இதுவரை அறிந்த‌தில்லை. அதைப்பற்றி எழுதியிருந்த‌ தகவல் வியப்புக்குள்ளாக்கியது.
    திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலிகள்!

    பதிலளிநீக்கு
  21. கவிதைகள் ஈர்க்கவில்லை. என்னைப் பற்றி தோணுவது என்ன, நன்றாகவே எனக்குத் தெரியும். பழ வண்டிக்காரன் முதல் ரியல் எஸ்டேட் விற்பனையாளர் வரை ஏமாற்றியிருக்கின்றனர். நான் ஒரு ஏமாளிங்க.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /நான் ஒரு ஏமாளிங்க./

      ஹா..  ஹா...  ஹா...   ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை JC சார்...

      நீக்கு
  22. கிருஷ்ணமூர்த்தி சாரின் பதிவுகள் 3, 4 நாட்களுக்கும் முன்னேயும் வந்திருக்கின்றன. திடீர் முடிவு போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அவர் பதிவு வெளியானவுடன் நான் பார்த்து / படித்து விடுவது வழக்கம்.  சில பதிவுகளில் நான் வீடியோ செய்திப் பகிர்வுகளை பார்க்காமல் தவிர்த்து விடுவேன் என்று தெரியும் என்பதால், என் பெயர் சொல்லி விடீயோவைப் பார்க்கச் சொல்லி இருப்பார்.

      நீக்கு
  23. அலெக்ஸின் வாழ்க்கை வினோதமாக இருக்கிறது.

    திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் ரொம்ப காலம் சமாளித்திருக்கிறார் பாருங்கள்...  நன்றி ஜி.

      நீக்கு
  24. ..அவர் வரைந்த ஓவியம் ஜார்ஜ் மன்னர் ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போலவும் இந்தியத் தாய் அவருக்கு முடிசூடுவது போலவும். //

    தங்கப்பதக்கம் எப்படி ’வாங்குவது’ என்று தெரிந்திருந்த, அந்தக்காலத்திய தன்மானத் தமிழன்.

    ..இந்தியத் தாய் அவருக்கு முடிசூடுவது போலவும்..//

    ’இந்திய ஏமாளி’ அவருக்கு முடிசூடுவதுபோலவும் - என்றிருக்கவேண்டும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இதான் கேள்வியாக இருந்தது, ஏகாந்தன் சார்.

      'கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று சுதந்திர தாபக்
      கவிதை பாடிய கவிஞரா?

      இப்படியான ஓவியம் அது என்பதற்கு தரவு ஏதானும் உண்டா, ஸ்ரீராம்?

      நீக்கு
    2. அவர் எழுதிய தன்வரலாறு புத்தகத்தில் இருப்பதாகத்தான் பகிர்வு படித்தேன் ஜீவி சார்.
      n the 1911 Delhi Darbar, Ramalingam presented his portraits of King George V and the Queen and was honoured with a gold medal. Inspired by Bal Gangadhar Tilak and Aurobindo, Ramalingam entered plitics as an extremist but later become an ardent follower of Mahatma Gandhi. As a boy, he had a taste for poetry and wrote songs for operas.

      https://www.filmibeat.com/celebs/namakkal-v-ramalingam-pillai/biography.html

      முடிந்தால் பதிவில் நான் படித்த பக்கத்தைப் பகிர்கிறேன்.

      நீக்கு
    3. //தங்கப்பதக்கம் எப்படி ’வாங்குவது’ என்று தெரிந்திருந்த// - தவறாக ஒரு நல்லவரை அனுமானித்துவிடக் கூடாது. அவருடைய நண்பர் (உறவினர்?, கொஞ்சம் பணம் இருக்கின்ற, வாழ்க்கையை கொஞ்சம் அனுபவிக்கும்) பைக்கில், சென்னையிலிருந்து இந்தியாவின் கடைக்கோடி வரை செல்கிறார். அதற்குத் துணையாக இராமலிங்கத்தையும் அழைத்துச் செல்கிறார். அந்தச் சமயத்தில் ஜார்ஜ் மன்னர் நிகழ்ச்சியையும் காணப் போகலாம் என்று நினைத்து இராமலிங்கத்தை ஒரு படம் வரைந்து எடுத்துக்கொள்ளச் சொல்கிறார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவராகத் தானும் செல்லமுடியும் என்று நினைத்தது, அந்தப் படத்தை மேலிடத்தில் விரும்பி, பரிசு கொடுத்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் வாய்ப்பைக் கொடுத்தது. அப்போது அவர் இளைஞர், உல்லாச விரும்பி. அதற்கு முன்பு, அவருடைய அப்பா, தன் தொடர்புகளை வைத்து ஒரு அரசு வேலையில் இராமலிங்கத்தை நுழைக்க எவ்வளவோ முயற்சிகள் எடுக்கிறார். கிடைத்த வேலையிலும் இராமலிங்கம் கவனம் செலுத்தவில்லை. ஒரு வெள்ளைக்கார அதிகாரி, தன் குழந்தையை இழந்துவிடுகிறார், மிகச் சிறிய போட்டோ மட்டும்தான் அவரிடம் இருக்கிறது, அதை வைத்து, குழந்தையை விவரித்து பெரிய படமாக வரைந்துதரும்படி இராமலிங்கத்திடம் சொல்கிறார். 50 ரூபாய் தருவேன் என்று சொல்கிறார். இராமலிங்கம் வரைந்த படத்தைப் பார்த்து, அவரால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் குழந்தை எப்படிச் சிரிக்குமோ அப்படியே படம் வந்திருப்பதைப் பார்த்து உணர்வினால், தன் பர்ஸிலிருந்து ரூபாயை (125 ரூ என்று நினைத்து) எடுத்துத் தருகிறார். இராமலிங்கம் எண்ணும்போது 625 ரூ இருக்கிறது. அவர் தயக்கத்தைப் பார்த்து, பணம் போதவில்லையா என்று கேட்கும்போது உண்மையைச் சொல்லவும், யாருக்கோ கொடுக்க இன்னொரு பகுதில் இருந்த பணம் உங்களுக்குக் கொடுத்துவிட்டேன். இது இறைவனின் சித்தம் என்று சொல்லிவிடுகிறார். இதையெல்லாம் அவர் எழுத்தில் படிக்கும்போது உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியாது.

      பிறகு காந்தீயத் தத்துவங்களில் கவரப்பட்டு அவரின் உண்மைத் தொண்டராகவே ஆகிவிடுகிறார் (இது அவரது வேண்டா வெறுப்பான திருமணம்-அப்பா தாள முடியாமல் ஒரு நாள் கண்ணீர் விட்டுக் கதறியதும், சரி சரி என்று மணந்துகொண்டது, மனைவியை முழுவதுமாக ஆண்டுகளாக ஒதுக்கி வைத்தது, எப்போதும் சிரிக்கச் சிரிக்க புன்னகையுடன் இவரை நோக்கி வரும் மனைவியை நோகடித்தது... ஒரு நாள் இரவில், நான் என்ன தவறு செய்தேன்..ஏன் இப்படி என்மீது பாராமுகமாக இருக்கிறீர்கள் என்று மனைவி கேட்டதும், அவரது அகக்கண் திறந்து, அன்றிலிருந்து அவள் மீது அன்பு செலுத்தில் சில மாதங்கள் வாழ்ந்தது..என்பதெல்லாம் அவர் எழுத்தில் படிக்கவேண்டும்).

      பிறகு விடுதலைப் போராட்டத்தின் தன்னாலான பங்குபெற்று (இரண்டாவது திருமணத்துக்குப் பிறகு) பணமே இல்லாமல் வறுமையில் இருந்தது, தன் பணக்கார நண்பர் லட்சத்தில் கொடுக்க முன்வந்தபோது, அது நடைபெறமுடியாமல் இறை சக்தி தடுத்தது, பிறகு அவருக்கு பணம் வர மற்றவர்கள் எடுத்த முயற்சிகளெல்லாம் கைகூடாமல் போனது என்று மிக ரசனையான வாழ்க்கைப் பகுதிகள்.

      15 வயசுல தங்கத்தைத் திருடியவனையா ஒரு தேசம் மஹாத்மா என்று கொண்டாடுகிறது? திருடனுக்கா முடிசூட்டல்? என்று காந்தியைப் பற்றி விமர்சித்தால் அதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?

      நீக்கு
    4. ஸ்ரீராம்,
      ஐந்தாம் ஜார்ஜ் படத்தை வரைந்து கொடுத்து பதக்கம் பெற்றார் என்பது நானும் அறிந்தது தான். ஆனால் இந்தியத் தாய் முடி சூட்டுகிற மாதிரி -- என்ற வர்ணனை தான் கேள்விக் குறியாயிற்று. அது பற்றி ஆதார பூர்வமாக தகவல் ஏதானும் இருப்பின்
      பகிர்ந்து கொண்டால் மனம் ஏற்றுக் கொள்கிற மாதிரி இருக்கும்.

      நீக்கு
    5. நான் படித்த பக்கத்தை கொஞ்ச நேரம் முன்பு பகிர்ந்து விட்டேன்.

      நீக்கு
    6. .. தவறாக ஒரு நல்லவரை அனுமானித்துவிடக் கூடாது. //

      நான் அனுமானிக்கவில்லை எதையும். எது வாசிக்கக் கிடைத்ததோ அதற்குத்தான் பதில் இங்கே! நாமக்கல் கவிஞர்பற்றி ஸ்ரீராம் குறிப்பிட்டிருந்த வரிகள் (..அவர் வரைந்த ஓவியம் ஜார்ஜ் மன்னர் ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போலவும், இந்தியத் தாய் அவருக்கு முடிசூடுவது போலவும். .) என்னையும் அதிரவைத்ததால்தான் எழுதினேன். இப்படி முன்பு கேள்விப்பட்டதில்லை. ஸ்ரீராம் எழுதுகிறார் என்றால் எங்கேயோ படித்து, அதிலிருந்து எடுத்துத்தான் போட்டிருக்கிறார். அதைப் படித்ததும், சே.. நாமக்கல்லும் இப்படித்தானா.. எனவே தோன்றியது. பதிலும் இப்படித்தானே இருக்கவேண்டும்!

      ”In the 1911 Delhi Darbar, Ramalingam presented his portraits of King George V and the Queen and was honoured with a gold medal.” (ஸ்ரீராம் பிற்பாடு ‘கோட்’ செய்திருப்பது) - 1911-ன் டெல்லி தர்பாரில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரையும், ராணியையும் படமாக வரைந்துகொடுத்தார் ராமலிங்கம். சன்மானமாகத் தங்கப்பதக்கம் கிடைத்தது - இவ்வளவுதான் இதில் இருக்கிறது. - இப்படி பதிவில் ஆரம்பத்திலேயே தரப்பட்டிருந்தால், வாசித்துவிட்டுக் கடந்திருப்பேனே!

      அவர் ஏதும் அறியாப் பருவத்தில் இப்படியெல்லாம் காரியங்கள் செய்திருந்தார். பின்னர்தான் பெரும் விடுதலைவீரராக, காந்தியவாதியாகத் தன்னை உருவாக்கிக்கொண்டார் என்பதெல்லாம் தன்வரலாறு படித்தவர்களுக்குத்தானே ஐயா தெரியும்.

      நான் கொஞ்சமாக, வெகு பஞ்சமாகப் படிப்பவன். இத்தனையெல்லாம் அறிந்திலேன்...!

      நீக்கு
    7. உண்மைதான் ஏகாந்தன் சார்... அவருடைய திருக்குறள் அறிவும் எனக்கு அதிசயமாகத் தெரிந்தது.

      தன் வாழ்க்கையையே ஒரு லட்சியத்துக்காக (தேச விடுதலை) அர்ப்பணித்து வறுமையைத் தழுவியவர், இப்போது தேசத்தின் அரசியலையும் மக்களின் மனப்போக்கையும் கண்டால், என்ன நினைப்பாரோ. ஹாஹா

      நீக்கு
    8. தேசத்திற்காகத் தன் வாழ்வையே முன் வைத்து, தங்களையே தகர்த்துக்கொண்டு நகர்ந்தவர்கள், இப்போது இந்தியா பக்கம் திரும்பியும் பார்க்காமல் இருப்பது அவர்களுக்கு நல்லது! பாவிகள் உலவும் நாடு ஆகிவிட்டது, பாருக்குள்ளே நல்ல நாடாக ஒருகாலத்தில் மகாகவியால் பார்க்கப்பட்ட நாடு.

      அந்தக்காலத்தைப்பற்றிப் புத்தகங்களில் படித்து சிலிர்த்துக்கொண்டு, இந்தக் காலக்கோலத்தை டிவி-லைவ்-இல் பார்த்து அழ விதிக்கப்பட்டவர்களே நாம்.

      நீக்கு
  25. கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் மறைவு அதிர்ச்சியை தருகிறது...

    பதிலளிநீக்கு
  26. எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன் சினிமாவின் மூலக்கதையும் நாமக்கல் கவிஞரது தான். அவர் ஒரு நாவலாசிரியரும் கூட.

    பதிலளிநீக்கு
  27. கவிஞர் விக்கிரமாதித்யனின் புகைப்படத்தையும் போட்டு அவரது கவிதைகளை வெளியிட்டிருக்கலாம்.
    அந்தளவிற்கு கவிஞர்களிடையே வித்தியாசமானது அவரது புகைப்படம்.
    வேறோரு தருணத்தில் கூட செய்யலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விகடனிலோ எங்கோ அவர் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன்.  நீள்முடியுடனும், தாடியுடனும் இருப்பார் என்று நினைவு!

      நீக்கு
    2. நான் கடவுள் படத்தில் நடித்திருப்பார்.

      நீக்கு
  28. தோழர் கிருஷ்ணமூர்த்தி ஐயாவின்
    நினைவுகள் நேற்றையிலிருந்து சுற்றி சுற்றி வருகின்றன. நான் கடைசியாக அவருடன் சில மாதங்களுக்கு முன் மொபைலில் பேசிய பொழுது முதுகு வலி அதிகமிருக்கிறது என்றார்.
    நல்ல விமர்சகர். அதுவும் துணிச்சலான விமர்சகர். மேலாண்மை நிர்வாக துறையில் ஆர்வமுண்டு. அரவிந்தர், அன்னை பக்தர். முரண்பட்ட கருத்துக்கள் கொண்டோரிடமும் தன் நிலையை விளக்கிச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். பொதுவுடமை சித்தாந்தப் பள்ளியில் பயின்ற பழக்கக் கல்வி வாழ்க்கை பூராவும் துணையாயிருக்கும் என்பது உண்மை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  மிகவும் நிதானமாகப் பேசுவார்.  ஆனால் ஆணித்தரமாகப் பேசுவார்.

      நீக்கு
  29. நாமக்கல் கவிஞர் பற்றிய செய்திகள் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுக்கிறது. விக்கிரமாதித்தன் கவிதைகள் நன்று. தன்னைத் தானே உணர்ந்தவர்களால் தான் இப்படி எல்லாம் எழுத முடியும். பட்டாணியை எண்ணுபவர் பார்த்து ஆச்சரியம் வரலை. ஏனெனில் என் அப்பா கிட்டத்தட்ட இந்த ரகம். எதானாலும் கணக்குப் பார்த்துத் தான் செய்யணும் என்பார். பையர் புத்திசாலி, மார்க்குகளை அள்ளிக் கொடுத்துட்டு வந்துட்டார். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு நெல்லை கொடுத்திருக்கும் விளக்கம் நல்ல பதில் கீதா அக்கா.

      நீக்கு
  30. இன்னிக்குக் காலம்பர சீக்கிரம் எழுந்தாலும் பரிசோதனைகள் செய்ய வேண்டி இருந்ததால் லாபரடரியிலிருந்து ஆள் வருவார் எனக் காத்திருந்தோம். ஆகவே கணினியைத் திறக்கவேஇல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசோதனைகள் நல்லபடி முடிந்தனவா? ரிசல்ட் எப்போது தெரியும்?

      நீக்கு
  31. திரு கிருஷ்ணமூர்த்தியை எனக்குப் பத்து வருடங்களுக்கும் மேலாகத் தெரியும். ஆரம்பத்தில் எல்லாம் சுமுகமாகவே போய்க் கொண்டிருந்தது. அவர் சொன்ன சில யோசனைகள் என் வரை சரியாக வராததால் நான் அதைத் தவிர்த்தேன். இவங்களோடு பழக்கம் வைச்சுக்காதே! இப்படிப் பதிவு எழுது, என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். எனக்கு அது சரிப்படவில்லை என்பதால் ஒதுங்கிட்டேன். என்றாலும் அவர் மறைவு அதிர்ச்சியைத் தான் தருகிறது.

    பதிலளிநீக்கு
  32. என்னைப் பொறுத்தவரையில் அவரிடம் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இப்போத் தான் சுமார் நாலைந்து வருஷங்களாக ஜாஸ்தி அவர் என்னோடு தொடர்பில் இல்லை. நான் அவர் வலைப்பக்கங்களுக்குப் போய்ப் படித்ததே இல்லை. குழுமங்கள் மூலமே பழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அப்போதிலிருந்தே அவர் வலைப்பக்கம் செல்வது வழக்கம்.

      நீக்கு
  33. @ நெல்லை...

    // நான் என்ன தவறு செய்தேன்..ஏன் இப்படி என்மீது பாராமுகமாக இருக்கிறீர்கள் என்று மனைவி கேட்டதும்,.. //

    கண்கள் கலங்கி விட்டன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கிருந்தோ வந்தாள் பாடல் வரிகள் சட்டென நினைவுக்கு வந்தன.  இந்தஹச் சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ள பக்கத்தையும் இப்போது சேர்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. தாங்கள் இணைத்துள்ள பக்கத்தைப் படித்ததும் வேதனை தான் இன்னும் அதிகமானது..

      எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கின்றார்கள்!..

      நீக்கு
    3. கவிஞருக்கு ஏன் மனைவியை வேம்பாக வெறுத்து பேசாமலும் சேராமலும் இருந்தோம் என்பதற்கான காரணமே தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

      எனக்கும் சில சமயங்களில் வாயை விட்டு வார்த்தைகள் வந்துவிடும், கோபத்தில் சிதறடித்துவிடுவேன். ஏன் அப்படி நடந்தது, ஏன் அவ்வளவு கோபப்பட்டோம் என்பதற்கான விளக்கமே மனதில் தோன்றாது. சில மாதங்களுக்கு முன்பு அப்படி எனக்கு ஒரு நாள் காலையில் கோபம் வந்து வார்த்தைகளைச் சிதறடித்துவிட்டேன் (மனைவியிடமல்ல). அது உறவில் விரிசலை நிரந்தரமாக்கிவிட்டதா இல்லை காலத்தில் சரியாகிவிடுமா, அதன் impact என்னவாகும் என்பதெல்லாம் தெரியவில்லை.

      வாழ்க்கைல பல நிகழ்ச்சிகள் ஏன் நடந்தது, ஏன் இப்படி ஆனது என்பதெற்கெல்லாம் விளக்கமே கிடைப்பதில்லை. இன்னொருவர் மனதில் என்ன நினைக்கிறார், நல்லவரா கெட்டவரா என்பதெல்லாம் புரிவதில்லை. நம் அளவில் நாம் உண்மையாக இருந்தோமா என்பது மட்டும்தான் நமக்கான அளவீடு என்பது புரிகிறது.

      இதனை, புத்தி கர்மானுசாரணை என்று சிம்பிளாக என் அம்மா சொல்லுவார்.

      நீங்கள், நாமக்கல் கவிஞரின் கதையைப் படித்தால், அதுவே பல சிறுகதைகள் எழுத உங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும், அவருடைய காதல்(?) தோல்வி முதல்கொண்டு.

      நீக்கு
    4. சபாஷ் நெல்லை.. அருமையான வரிகள். மிக அருமையாய் உணர்ந்து சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
    5. @ அன்பின் நெல்லை அவர்களுக்கு...

      // புத்தி கர்மானுசாரணை // இந்த வார்த்தையை செவ்வாய்க்கிழமையன்றும் - யாராவது சொல்லுங்கள் - கதைக்கான கருத்துரையில் எழுதியிருந்தீர்கள்..

      பொறுப்புள்ள சந்தானமூர்த்தியும் சிக்கலில் மாட்டிக் கொண்டது இப்படித் தான்!..

      நீக்கு
    6. காணாமல் போன கல்யாணப் பெண் -- நாமக்கல்லார் எழுதிய நாவல் ஒன்றின் பெயர்.

      இந்த மாதிரி பெயரை நீங்கள் யோசிக்கக் கூட மாட்டீர்கள் தானே, தம்பீ?

      நீக்கு
    7. நான் என்ன!..
      நமது எழுத்தாளர் திலகம் ஸ்ரீராம் அவர்களே யோசித்திருக்க மாட்டார்!..

      நீக்கு
    8. //எழுத்தாளர் திலகம் ஸ்ரீராம் //

      :>))))))))

      நீக்கு
    9. செல்வராஜூ சார்..   நீங்கள் என்னை அவர்கள் என்றெல்லாம் ஓவராக மரியாதை தருவது நன்றாயில்லை...   ஸ்ரீராம் என்று சொல்லுங்கள்.

      நீக்கு
    10. ..காணாமல் போன கல்யாணப் பெண் -- நாமக்கல்லார் எழுதிய நாவல்..//

      10 பவுன் நகை, மொய்ப்பணத்துடன் மாயமான மணப்பெண்..! - இரண்டு நாள் முன்பு தலைகாட்டிய தமிழ்நாட்டுச் செய்தி! ஒருவேளை, நாமக்கல்லாரின் நாவலை படித்துவிட்டிருப்பாரோ...

      நீக்கு
    11. நானும் நினைத்தேன்! அப்புறம் குஜராத்....!!

      நீக்கு
  34. @ ஜீவி அண்ணா...

    // ஆனால் இந்தியத் தாய் முடி சூட்டுகிற மாதிரி -- என்ற வர்ணனை தான் கேள்விக் குறியாயிற்று... //

    அதே.. அதே தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் இணைத்துள்ளேன். மேலும் நெல்லை ஒரிஜினல் புத்தகத்திலிருந்து சொல்லக்கூடும். எடுத்து அனுப்ப முடியும்.

      நீக்கு
    2. அந்தப் புத்தகமும் நான் டொனேட் (பஹ்ரைனில்) செய்த புத்தகங்களுள் ஒன்று.

      துரை செல்வராஜு சார்... இந்த மாதிரி வரைந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையை அவர் கேட்டிருப்பார். நான் +1ல், ஹாஸ்டலில் ஓவியம் வரைவதில் முதல் பரிசு பெற்றேன். எனக்கான பரிசை, என் அண்ணன் மேடைக்குச் சென்று பெற்றுக்கொண்டார் (அவர் அப்படி கேட்டுக்கொண்டார். நானும், அடுத்த வருடமும் நாந்தான் முதல் பரிசு வாங்குவேன் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தேன்). அடுத்த வருடம் நான் பிள்ளையார் படம் வரைந்தேன். (வரையலாமோ? செயிண்ட் சேவியர் விடுதியில்?). பரிசு கிடைக்கவில்லை. மிக சிம்பிளாக ஒரு சிலையின் ஒரு பகுதியை வரைந்தவனுக்கு பரிசு கிடைத்தது. இதுபோலவே, பாட்டுப் போட்டிகளிலும், பாடல் தேர்ந்தெடுப்பதில் சொதப்பியிருக்கிறேன் (எனக்கு guidance கிடையாது என்பதால்). நிகழ்ச்சிக்குப் பொருத்தமான படத்தை அந்த சமயத்தில் அவர் வரைந்திருந்தார். நம் காந்தி மஹான், பிரிட்டிஷ் இராணுவத்துடன் இந்திய இராணுவம் சேர்ந்து, பிரிட்டிஷ் எதிரிகளுடன் மோதும் என்று ஒரு நிலை எடுத்திருந்தாரே (1935-40 களில்).

      நீக்கு
    3. அழகாக யோசிக்கிறீர்கள்.

      நீக்கு
  35. நாமக்கலார் அந்த ஓவியம் பற்றி தன் எழுத்துக்களில் என்ன குறிப்பிட்டிருக்கிறார் என்பதை படம் எடுத்துப் போடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னிடம் இல்லை. அட்டென்ஷன் நெல்லை..

      நீக்கு
    2. ஊஹூம். நெல்லை இந்தப் பக்கம் வருவதாகவே தெரியவில்லை.

      நீக்கு
    3. ஸ்ரீராம்,
      கூகுள் தேடுதலில் கிடைக்கக் கூடுமோ?

      நீக்கு
    4. காலையே தேடிப்பார்த்து விட்டேன்.  விலைக்கு கிடைக்கிறது.  160 ரூபாய்!

      நீக்கு
    5. எனக்கு நெருக்கமான சந்தியா பதிப்பகத்தில் இந்த 'என் கதை'யைப் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  36. விக்ரமாதித்யனிடமிருந்து இன்று வாசித்த இன்னொன்று:

    கதைசொல்லி

    யாரோ
    யாருக்கோ சொன்ன கதை
    எல்லாக் கதைகளுமே
    இப்படித்தான்
    யாரோ
    காலமாகிவிடலாம்
    யாருக்கோ
    பிறந்துவரலாம்
    கதை
    நிரந்தரமானது

    **

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார்.. இந்தக் கவிதையைப் படித்ததும் எனக்கு சட்னு தோன்றியது, "பசு மாடு மேய்ச்சலுக்கு அனுப்பினாலும், அதுவாக ஒரு இடத்துக்குச் சென்று பாலைச் சொறிந்தது. வீட்டிற்குத் திரும்பி வரும்போது பால் இருப்பதில்லை. பிறகு அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது புற்று இருந்தது. அதைத் தோண்டினால் இறைவன்/இறைவி திருவுருவச் சிலை கிடைத்தது. அதை வைத்துக் கட்டிய கோவில்தான் இது", ஓரிடத்தில் தோண்டும் போது இரத்தம் பீய்ச்சி அடித்தது. ஜாக்கிரதையாகத் தோண்டியபோது இந்தக் கோவிலின் மூலவர் கிடைத்தார்.

      இந்த மாதிரியான கதைகள் பல கோவில்களுக்கும் இருப்பது நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    2. கவிதை ஈர்க்கிறது. நெல்லையின் பதில் ரசிக்க வைக்கிறது.​

      நீக்கு
    3. @ நெல்லைத்தமிழன்:
      திருச்சிக்கருகே குணசீலம் வெங்கடேசப் பெருமாள் கோவில் அப்போதைய மன்னனால் கட்டப்பட்டதும் இப்படி ஒரு பின்னணியில்தான் எனப் படித்த நினைவு..

      நீக்கு
  37. நம்ப முடியாத விநோதங்கள் கதை படித்து வியந்தேன். இப்படியும் ஒரு மனிதர்!

    //மீண்டும் வந்து குடும்பத்துடன் இணைந்தார் அலெக்ஸ்.//

    மகிழ்ச்சி.


    //அந்த ஓவியர் ஒரு கவிஞரும் கூட.. அவர் பெயர் கருப்பண்ணன். எல்லோராலும் அறியப்பட்ட பெயர் நாமக்கல் கவிஞர். //
    பன்முக திறமை உடைய நாமக்கல் கவிஞ்ர் பற்றி புதிய செய்தி தெரிந்து கொண்டேன்.

    விக்கிரமாதித்தன் கவிதைகள் நன்றாக இருக்கிறது.




    பதிலளிநீக்கு
  38. இப்பவும், இங்கேயும் பதில் சொல்லலாம்!, இங்கேயும் இப்போது எல்லாம் நன்றாக இருக்கிறது.
    விகடன் பசுமை தோட்டம் பெரிய மனிதர்கள் வீட்டுத்தோட்டம் எல்லாம் நன்றாக இருக்கும் பார்ப்பேன். வீட்டில் சின்ன இரண்டு செடியாவது இருக்க வேண்டும் அவை மனதை, சுற்றுப்புறத்தை நன்றாக வைத்து இருக்கும். ஞாயிறு எங்கள் ப்ளாக் தோட்டமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் யாருமே சொல்லவில்லை!!!! நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  39. திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  40. இன்றைய பதிவு வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கிறது.
    அலெக்ஸ் கூப்பர்... இப்படியும் ஒரு மனிதர்!
    நாமக்கல் கவிஞர் பற்றிய செய்திகள் புதியவை. அவர் ஒரு ஓவியர், மனைவியை ஏரெடுத்து பார்க்காமல் இருந்தவர், பின்னர் மனம் மாறினார் போன்ற தகவல்கள் ஆச்சரியமூட்டுகின்றன.
    மார்க் குறைவாக வாங்கினால் என்ன? அதை திறமையாக சமாளிக்கத் தெரிந்திருகிறதே? புள்ள பொழச்சுக்கும்.
    நம் ஸ்ரீராம் கவிதையில் ஒரு கங்காரு ஜம்ப் அடித்து விட்டாரே என்று நினைத்தேன், விகிரமாதித்தயன் கவிதைகளா?

    பதிலளிநீக்கு
  41. திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்தனைகள்!

    பதிலளிநீக்கு
  42. திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவு - வேதனை. இந்த வேதனையிலிருந்து மீள, அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தேவையான மனோபலத்தினை எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு

  43. அவர் வரைந்த ஓவியம் ஜார்ஜ் மன்னர் ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போலவும் இந்தியத் தாய் அவருக்கு முடிசூடுவது போலவும்.முலஸ்துதிக்குமகிழாதர் குறைவு
    கிருஷ்ண்மூர்த்திசார் என் பதிவுகள்சிலவற்றுக்கு பின்னூட்டம் இட்ட நினவுபதிவின் முதல் பகுதி நீங்களெழுதிய கதை அல்லது கட்டுரை யின் முதல் பகமோ என்று எண்ண வைத்தது

    பதிலளிநீக்கு
  44. கிருஷ்ணமூர்த்தி சாரின் திடீர் மறைவு வாழ்க்கை எவ்வளவு அநித்யம் என்று காட்டுகிறது! comment களுக்கு உடனுக்குடன் பதில் போடுவதிலும், பற்பல தகவல்களை தொகுத்து வழங்குவதிலும் நான் மிகவும் நேசிக்கும் பதிவர் மறைந்தது மிக வருத்தம்!

    அவர் வணங்கிய அரவிந்தர் / அன்னை பாதம் சேர்ந்திருப்பார் இப்போது!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!