செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

சிறுகதை : அங்கீகாரம் - ஜீவி 


அங்கீகாரம்

ஜீவி 

 "நேர்மை..நேர்மை..நேர்மையா இருந்து என்னத்தைச் சாதிச்சிட்டே?" என்று எரிந்து விழுந்தான் தங்கராஜ், மனைவியைப் பார்த்து.

சத்யா பதிலே பேசவில்லை.

விஷயம் இதுதான். அவள் பணிபுரியும் மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியர் குழந்தைகள் கல்வி உதவிநிதியாக வருடத்திற்கு ரூபாய்  பன்னிரெண்டாயிரம் தருகிறார்கள்.   ஊழியரின் கணவரோ அல்லது மனைவியோ பணிபுரிந்தால் அவர்கள் இருவரின் அடிப்படைச் சம்பளம் ரூபாய்
பதினைந்தாயிரத்திற்கு மேல் இருப்பின், அவர்கள் இந்த உதவி பெறத் தகுதியில்லை என்பது அரசு வகுத்திருக்கும் விதி.

தங்கராஜ் மாநில அரசு ஊழியன். இருவர் அடிப்படைச் சம்பளமும் சேர்த்து ரூபாய் பதினைந்தாயிரத்துக்கு மேல் இருப்பதால் சத்யா இந்த உதவிநிதிக்கு விண்ணப்பிக்கவில்லை.

இதுதான் இன்றைக்கு தங்கராஜை உசுப்பி விட்டுவிட்டது.   இது என்று இல்லை. சத்யாவிற்கு நேர்மையற்ற வழிகள் எதுவும் கட்டோடு பிடிக்காது. அவளின் இந்தக் குணத்திற்காக தங்கராஜ் பல தடவைகள் இப்படி உசுப்பப்படுவதுண்டு.

"புருஷன் வேலைலே இல்லேன்னு 'க்ளீனா'ச் சொல்லிடறதுதானே?.. நீ நேர்மையை தலைலே தூக்கிண்டு ஆடினதாலே, பன்னிரெண்டாயிரம் போச்சு...   சேச்சே..  பன்னிரெண்டாயிரம் ரூபாய்...  எவன் தருவான் இந்தக் காலத்திலே?"-- தங்கராஜ் துடித்தான். "மாசத்திற்கு ஆயிரம்!   காய்கறிச் செலவுக்கு எவனோ தர்றான்னு  இருந்திருக்கலாம்.." அவன் மனம் சமாதானமே ஆகாமல் பொருமியது.

"அதுக்கில்லீங்க.. நீங்க அரசாங்க வேலைலே இருக்கீங்க.. எப்படி இல்லேன்னு, மனச்சாட்சியை வித்திட்டு பொய் சொல்லியானும்...  அதுவும் சம்பள சர்ட்டிபிகேட்லாம் வேறே தரணும்.."

"அட! பொல்லாத சர்ட்டிபிகேட்!  கொறைச்ச சம்பளம் போட்டு ஒண்ணு ஏற்பாடு பண்ணிட்டாப் போச்சு!..  அந்த மாதிரி உனக்கு எத்தனை சர்ட்டிபிகேட் வேணும்ங்கறே?.. சொல்லு.."  உறுமினான்.

"ஏங்க, இப்படி ஒண்ணும் தெரியாம இருக்கீங்க? பின்னாடி எதுக்காச்சும் ஒண்ணுக்கு குழந்தைங்களுக்கு அவங்க அப்பா உத்தியோக விவரம்லாம் தெரிவிக்க வேண்டி இருந்ததுன்னு வைச்சிக்கங்க.."

"இதோ பாரு..  இப்படில்லாம் அப்ப என்ன செய்யறது, இப்ப என்ன செய்யறதுன்னு  யோசிச்சிக்கிட்டிருந்தேனா,  இந்தக் காலத்திலே ஒரு வேலையையும் செய்ய முடியாது.. தெரிஞ்சிக்க..  இப்பக் காரியம் ஆச்சா.. சரின்னு போய்க்கிட்டே இருக்கணும்..  இன்னொரு  நேரத்துலே இன்னொரு காரியத்துக்கு எது வேணுமோ அப்போ அதுக்கு என்ன செய்யணுமோ,  அதுக்கேத்த மாதிரி செஞ்சிக்கலாம்.. தெரிஞ்சிக்க.."

"நீங்க என்ன சொன்னாலும் என்னாலே இதெல்லாம் முடியாதுங்க..  எங்கப்பாரு என்னை அப்படி வளக்கலே..  அவ்வளவு தான் சொல்ல முடியும்..  ஏதாவது தப்பித் தவறி தப்பு செஞ்சிட்டேன்னா என்னாலே அதைத் தாங்கிக்கிட்டு இருக்க முடியாது..  அதை   நெனைக்கறச்சே  நெனைக்கறச்சே, உறுத்திண்டே இருக்கும்..  சோறு திங்க முடியாது.. என்ன இப்படி அறிவில்லாம செஞ்சிட்டேன்னு எப்பப் பார்த்தாலும் நெனைப்பு வந்து வந்து...."

அவள் முடிக்கக்கூட இல்லை..  தங்கராஜ் சீறினான்: "ஆ! பெரிய சத்யத்திலகம்! நாலுபேர் புகழ்ந்தா  போதுமே, ஒனக்குத் தலைகால் புரியாதே!..  இதுதான் போகட்டும்.. போனவாரம் பக்கத்து வீட்டுக்காரர் காரியம் முடியுமான்னு உன்னைத்தானே கேட்டார்?.. படியேறி வந்த ஸ்ரீதேவியை நீ சீந்தலே..  உன்னோட வேலை செய்யறவங்க தானே, அந்த கஸ்தூரி?.. அவங்க கிட்டே தள்ள வேண்டியதைத் தள்ளி அவர்  உங்க ஆபிஸிலே தனக்கு வேண்டிய காரியத்தைச் சாதிச்சிக்கலே?..அவங்க புத்திசாலி... நோகாம சம்பாதிக்கறாங்க..  ஊர் உலகத்திலே என்ன நடந்திக்கிட்டுருக்குன்னு அறிவானும் வேண்டாம்?..  ராமராஜ்யம் நடக்குதுன்னு நிரூபி.. நானும் சத்தியவந்தனா நடந்துக்கறேன்..  நா மட்டும் அப்படி இருக்கணும்னு நீ எதிர்பார்த்தா எப்படி?.. ஒவ்வொரு விஷயத்திலேயும் தோத்துத் தானே போவேன்?.. ஊர் உலகம் இருக்கற மாதிரி தானே நாம்பளும் இருக்க முடியும்..  நாம மட்டும் என்ன தனித் தீவுலேயா வாழறோம்?... சொல்லு.. அந்த கஸ்தூரியைப் பாத்தானும் அறிவு வர வேணாம்?...." என்று ஆற்றாமையில் புழுங்கினான்.  

"கஸ்தூரியைப் பத்தி எங்கிட்டே சொல்லாதீங்க.. இங்கே அங்கே வாங்கறதை பாவம்,அவங்க ஆஸ்பத்திரிக்கு அழறது எனக்குத்தானே தெரியும்?"

"எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறே?..  உன்னை மாதிரி வாய்ப்பு மட்டும் எனக்கு இருந்திச்சின்னா...அடடா!.."

சத்யா பதில் சொல்வதற்குள் வாசலில், "சார்..போஸ்ட்.." என்று குரல் கேட்டது.

கடித்ததை வாங்கிப் பிரித்துப் படித்த சத்யாவின் முகத்தில் சந்தோஷம்.. கணவனைப் பார்த்து நொடித்தாள்.

தங்கராஜ் கடிதத்தைப் பிடுங்கிக்கொண்டான்.

தனியார் டி.வி. நிறுவனம் ஒன்றிலிருந்து அந்தக் கடிதம். அவளது அலுவலக சிபாரிசில், அக்டோபர் இரண்டு காந்தி ஜெயந்தி விசேஷ ஒளிபரப்பு பேட்டி நிகழ்ச்சி ஒன்றிற்கு அவளை அழைத்திருந்தார்கள்.

"ப்பூ.." என்று உதட்டைப் பிதுக்கினான் அவன். "உனக்கு இது போதும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்; உன்னை 'நேர்மைத்திலகம்'ன்னு ஒரு பக்கம் புகழ்ந்திண்டே அவங்க ரெண்டு கையாலேயும் வாங்கிப் போட்டுகிட்டு இருக்காங்க...தெரிஞ்சிக்கோ.."   தங்கராஜ் தலைக்கேறிய ஆத்திரத்தில் கொதித்தான்.

'சின்னத்திரை'க்காரர்களுக்கே சந்தேகம்...."ஆத்மதிருப்திக்காக நேர்மையா?" என்றார்கள்.. கொஞ்ச நேரம் தாமதித்து, "இல்லை, பயமா?" என்றார்கள்.

அவங்க 'பயமா?' என்று கேட்ட பொழுது கொல்லென்று சிரிப்பலை எழுந்து அரங்கம் பூராவும் நிறைத்தது.

நேரடி ஒளிபரப்பு...  தயாரிப்பு எதுவுமில்லாமலேயே, எந்தக் கேள்விக்கும் தயாராயிருந்தாள் சத்யா.

"இரண்டும் இல்லை. என் மனச்சாட்சியின் குரலுக்குச் செவிசாய்த்து நேர்மைக்காக நேர்மையாய் இருக்கிறேன்" என்றாள் சத்யா.

"புரியவில்லையே?" உண்மையிலேயே சத்யா சொன்னது புரியாது போலத் தான் கேள்வி கேட்டவரின் முகம் கோணியது.

"நேர்மையா இருக்கறதுலே வாழ்க்கைலே எனக்கு எந்த இழப்பும் இல்லை.  மாறா, அதுக்கு சோதனை வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், என்னோட மகிழ்ச்சிதான் பலமடங்கு கூடியிருக்கு. அது தான் எனக்கு போதிய பலத்தைத் தந்திருக்கு...."


"என்ன மேடம் சொல்றீங்க?" என்று மடக்கினார்கள், நிகழ்ச்சியை நடத்தியவர்கள்...     "நேர்மையாய் இருப்பதில் இழப்பில்லையா? உங்கள் அலுவலகத்தில் கூடச் சொன்னார்களே?..  'கணவர் வேலைலே இருக்காரு.. இவ்வளவு சம்பாதிக்கிறாரு'ன்னு நேர்மையா உண்மை சொனனதினாலே, உங்கக் குழந்தைங்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகை கூடக் கிடைக்கலேன்னு?.. அது உங்களுக்கு இழப்பு தானே?"

"சத்தியமாய் இல்லை" என்று சிரித்தாள் சத்யா.

"பேச்சுக்கு வைச்சிக்கிட்டாலும், பண சமாச்சாரத்தில் கூட எந்த இழப்பும் இல்லை. என் நேர்மைக்காகத்தானே என் அலுவலகம் சொல்லி என்னை இங்கே அழைச்சிருக்கீங்க?.. இங்கே  வந்ததும் தான் எனக்குத் தெரியவந்தது. இந்த நேரடி ஒளிபரப்புக்கு வெகுமதியா எனக்கு பத்தாயிரத்திற்கு செக் தரப்போறீங்கன்னு..  இது என் நேர்மைக்குக் கிடைச்ச பரிசு இல்லையா?.. ஆக, பண சமாச்சாரத்தில் கூட எனக்கு இழப்பு இல்லை..  இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  இந்த சத்திய உணர்வை விட்டுக் கொடுத்திடக் கூடாதுன்னு மனசுக்கு ஒரு உந்துசக்தி கிடைச்சிண்டு தான்  இருக்கு.."

கரகோஷம்.. நேரடி ஒளிபரப்பு பார்வையாளர் பகுதியிலிருந்து தங்களை மீறி பலத்த கரகோஷம்...

வீட்டில், டி.வி.யில், இந்த நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த தங்கராஜூம் தன்னை மீறிப் புன்முறுவல் பூத்தான்.

= = = = 

51 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை வணக்கம்.

  நேர்மையாக இருப்பதில் இழப்பு எதுவும் கிடையாது என்பது என் எண்ணம். பண இழப்பு கண்ணுக்கு பூதாகரமாகத் தோன்றலாம். ஆனால் நம் மனசாட்சி நம்மை எதைப் பற்றியும் கவலையுறச் செய்யாது.

  கதைக்காக தொலைக்காட்சி 10,000 ரூபாய் அந்த நிகழ்ச்சிக்காக வழங்கியது என வழக்கம்போல சிறுகதைக்காக ஆசிரியர் எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்து தொலைக்காட்சிகள், அல்வாதான் கொடுக்குமே தவிர, காசு கொடுப்பதாகத் தெரியவில்லை. பெரிய அட்டையில் இத்தனை பணம், விளம்பரதாரர் கொடுப்பதாகக் காண்பிப்பார்கள்.. அவ்ளோதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, நெல்லை..

   கதைக்காகத் தானே 'கதை' பண்ணுகிறோம்...
   வாசிப்பவர்களுக்கும் இது ஒரு கதையே என்ற எண்ணம் மறக்கக் கூடாது எனில் நிகழ் உண்மைகளை மறக்க வேண்டும் இல்லையா?
   அப்படி மறக்க முடியாதவர்கள் கதைகள் வாசிக்க முயற்சிக்கக் கூடாது என்றாவது கொள்ளலாமா?
   சொல்லுங்கள்.. இதில் ஏதாவது ஒன்று தான் சாத்தியம்..
   எது சாத்தியம் என்பதை அவரவர் சாஸ்க்கு விட்டு விடலாமா?
   சொல்லுங்கள்.
   நம் மனசாட்சி எதைப் பற்றியும் கவலையுறச் செய்யாது என்ற முத்தான அனுபவ பூர்வமான உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள்..
   முக்காலும் உண்மை, உண்மை..

   நீக்கு
 2. அரசு அலுவலர் நேர்மையாக இருப்பார் என்பதே நம்பிக்கைக்கு உரியது அல்ல. இது பாம்பு புலிகளுக்கிடையே ஒரு ஆட்டுக்குட்டி வாழ்ந்தது என்று சொல்வது போன்றது.

  உரையாடல்களிலும், அந்த அந்த சமூகப் பேச்சுகள் வரும்போதுதான் மிளிரும் என்பது என் எண்ணம். //உறுத்திண்டே //

  என் மகனின் ஒரு விஷயத்திற்காக (முன்பு வெளிநாட்டில் படிக்க யத்தனித்தபோது) நான் அவன் சமூகப் பங்களிப்பைச் செய்தான் என்று ஒரு சர்டிபிகேட் 'பெற்றுத்' தந்தேன். அவன் என் உதவியை appreciate பண்ணறேன், ஆனால் இதனை உபயோகிக்க மாட்டேன்... செய்யாத எதையும் நான் சொல்ல மாட்டேன் என்று சொல்லிட்டான். என் பெண்ணும் அதேபோலத்தான். ஒரு வேளை, என் அனுபவம் சேரும்போது அவங்க மாறுவாங்களா என்று தெரியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அரசு அலுவலர் நேர்மையாக இருப்பார் என்பதே நம்பிக்கைக்கு உரியது அல்ல// இருக்கிறார்கள் நெல்லை. என் தோழிகளில் சிலர் நேர்மையான அரசு அதிகாரியாகவே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

   நீக்கு
  2. 2 கிலோ அரிசில, 4 அரிசி நல்லா இருக்கு என்றாலும், அரிசியைத்தான் குற்றம் சொல்வோம். அடுத்தவன் கொலை செய்வதைப் பார்க்கிறோம், நமக்கென்ன என்று பேசாமல் செல்வதும், அமைதியாக இருப்பதும், குற்றத்திற்கு உடந்தையாக இருக்கும் பாவத்தைத்தான் தரும்.

   இப்போ சொல்லுங்கோ மேடம் பா.வெ...... அரசு அலுவலர் நேர்மையா இருக்காங்களா?

   நீக்கு
  3. எல்லா மட்டத்திலும் டக்கென்று துணிந்து தவறான காரியங்களைச் செய்ய தயங்கிற ஒரு கூட்டம் இருக்கிறது, நெல்லை.

   'உண்டால் அம்ம, இவ்வுலகம்' என்ற புறநானூற்று வரி போல இவர்களால் தான் இவ்வுலகம் இயங்குகிறது, நெல்லை...

   நீக்கு
  4. அருமையான பதில் ஜீவி சார்... அவர்களால்தான் உலகம் இயங்குகிறது. எவ்வளவு நாளாயிற்று இந்த 'உண்டால் அம்ம, இவ்வுலகம்' என்ற வார்த்தையைப் படித்து.

   நீக்கு
  5. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
   பாடியது.

   இந்தப் பாடலை நினைக்கும் பொழுதெல்லாம், 'அவன் ஏன் கடலுள் மாய வேண்டும்?' என்ற சோகம் என் மனசைக் கவ்வும், நெல்லை...

   நீக்கு
  6. @நெல்லை தமிழன்: தவறான உதாரணத்தை காட்டியிருக்கிறீர்கள். செய்ய வேண்டிய வேலைக்கே சுற்றி இருப்பவர்கள் லஞ்சம் வாங்கும் பொழுது, அப்படி எதையும் எதிர்பார்க்காமல், அனாவசியமாக அலைய விடாமல் தன்னுடைய வேலையை முடிப்பது ராஜ சூய யாகம் செய்வதற்கு ஒப்பானது. அப்படியும் சிலர் இருக்கத்தான் இருக்கிறார்கள். 

   நீக்கு
  7. ராஜ சூய யாகம்! அம்மாடி!
   என்னவொரு எடுத்துக்காட்டு?
   புராண காலத்து பெருமைகள்?
   மனப்புரவி அடங்கா வேகத்தில்
   கால யந்திரத்தில் பயணிக்கிறதே!

   நீக்கு
  8. நேர்மையாக அனுதின வாழ்க்கைப் போக்கை சமாளிப்பது ராஜ சூய யாகம் செய்த மாதிரியான சிரமான யக்ஞம் என்ற ஒப்பு நோக்கலும் நியாயமாகத் தான் இருந்தது.

   நீக்கு
 3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 5. கதை நன்றாக இருக்கிரது.
  நேர்மையாக இருக்க விரும்புபவர்கள் எந்த அங்கீகாரத்தையும் எதிர்ப்பார்த்து நேர்மையாக இருப்பது இல்லை. இருந்தாலும் நேர்மையாக இருப்பவர்களை அழைத்து பரிசு கொடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேர்மையாக இருப்பவர்களை அழைத்துப் பரிசு கொடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அந்த நிகழ்வின் மேன்மையை அனுபவித்து
   சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

   தவறான அணுகுமுறைகளே வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி -- என்ற நிகழ் உண்மை ஒரு சாபக்கேடே.

   நல்ல சிந்தனைகளுக்கு நன்றி, கோமதிம்மா.

   நீக்கு
 6. //என் நேர்மைக்காகத்தானே என் அலுவலகம் சொல்லி என்னை இங்கே அழைச்சிருக்கீங்க?.//


  ஓவிய பெண் கேள்வி கேட்கும் பாவத்தில் தலை சாய்த்து இருப்பது அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதிம்மா.

   அந்த ஓவியத்தில் உன்னிப்பாக சில விஷயங்களை நானும் கவனித்து
   வியந்தேன்.

   1. அந்த கழுத்துச் சங்கிலியை ஏனோ தானோவென்று நேர்கோடாக தொங்கிற மாதிரி போடாமல் நெளி நெளிளியாக நெளித்து விட்டிருக்கிறார், பாருங்கள். அந்த செயினின் இன்னொருப்பக்க பகுதியை புடவைக்குள் மறைத்து விடாமல் கழுத்துப் பகுதியில் லேசாக நைஸ் புடவையின் கீழே தெரிகிற மாதிரி காட்டியிருக்கிறார், பாருங்கள்.

   முகம் சாய்ந்த அந்த போஸூக்கு ஏற்ற மாதிரி கண்கள், மூக்கு, காதுகள், வாய்ப்பகுதி, கூந்தல் என்று அத்தனையும் சாய்ந்த நிலையில்...

   ஓ.. ஒண்டர்புல், கேஜிஜி... !!

   நீக்கு
  2. காது ஜிமிக்கி கூட வழவழ கன்னத்தை முத்தமிட்ட மாதிரி...

   என்று யாராவது சொல்ல மாட்டார்களா என்று எதிர்பார்ப்பு வேறே!!

   நீக்கு
 7. //நேர்மைக்காக நேர்மையாக இருக்கிறேன்.// நேர்மை, உண்மை எல்லாவற்றிர்க்கும் காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

  ஒரு பரிசாகருக்கு எத்தனை பேருக்கு சமைக்கிறோம் என்பது தெரிந்திருக்க வேண்டும், ஒரு பாடகருக்கு எப்படிப்பட்ட சபையில் பாடுகிறோம் என்று புரிய வேண்டும். அதைப் போலத்தான் எழுத்தாளரும். எப்படிப்பட்ட வாசகர்களுக்கு எழுதுகிறோம் என்பதை தெரிந்து கொண்டால்தான் ஜெயிக்க முடியும். அந்த வகையில் ஜீ.வி.சார் தான் ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். நன்றியும், வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பா.வெ.

   ஒரு விஷயத்தை கருவாக எடுத்துக் கொண்டு எழுதி முடித்த பின் எழுதியவனின் மனசோடு பேசுவது போன்ற பின்னூட்டம் உங்களது.

   அதற்காகவே மீண்டும் நன்றி.

   நீக்கு
 8. //நேர்மையாக இருப்பதில் இழப்பு எதுவும் கிடையாது என்பது என் எண்ணம். பண இழப்பு கண்ணுக்கு பூதாகரமாகத் தோன்றலாம். ஆனால் நம் மனசாட்சி நம்மை எதைப் பற்றியும் கவலையுறச் செய்யாது.//

  நான் நெல்லை கூறியதை ஆமோதிக்கிறேன். சாதாரணமாக  தொலைக்காட்சியில் அரசு ஊழியர்களை பேட்டி காண்பதில்லை. அரசு ஊழியர்கள் அரசு அனுமதியின்றி பேட்டி கொடுப்பது முடியாது. அப்படி அனுமதியுடன் பேட்டி கொடுத்தால் சன்மானத் ( இருக்குமானால்) தொகையை அரசுக்கு தொலைக்காட்சி நிறுவனம் செலுத்தும். அதில் இருந்து ஒரு பங்கு அலுவலகம் சன்மானமாக பேட்டி கொடுத்தவருக்கு கொடுக்கும். இதுவே நடைமுறை.

  பணியில் நேர்மையாக இருந்ததில் என்னுடைய அனுபவம். 

  என்னுடைய பதவியுயர்வு 15 வருடங்களுக்கு தடைப்பட்டு கடைசியில் ஒய்வு பெறுவதற்கு 3 மாதம் முன்பு போனால் போகட்டும் என்று கொடுத்தார்கள். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சட்டத்தின் விதிகள் வேறே. நூல் கோர்க்கிற மாதிரி ஒவ்வொன்றையும் உற்று நோக்கி சரி பார்க்கிற மாதிரி எழுதினால் அது கற்பனை கதையாக இருக்காது. ஒரு செய்தியைச் சொல்வது போன்ற உரையாகி விடும்.

   நேர்மையாக இருப்பது என்பது ஒரு வாழ்க்கை நெறி.

   அதை வலியுறுத்துவதற்கான ஒரு கற்பனை முயற்சி என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

   நீக்கு
 9. // நேர்மையா இருக்கறதுலே வாழ்க்கைலே எனக்கு எந்த இழப்பும் இல்லை... //

  உண்மை..

  2004 ல் இங்கிருந்து தாயகம் திரும்பிய பின் - 2010 ல் மீண்டும் இங்கே அழைக்கப் பட்டதற்கு எது காரணம்?..

  இறையருள், அதிர்ஷ்டம் - என்றாலும், இவை என்னுள் விதைத்த நேர்மை தான் காரணம்!..

  பதிலளிநீக்கு
 10. நான் நேர்மையாக இருந்ததால் தான்
  இங்கே - வளைகுடா நாட்டில் நிறுவனத்தில் மேல்நிலை அலுவலன் ஒருவன் 2000 ல் எனக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைத்தான்.. அவனும் இந்தியனே... நமக்கு மேற்கில் உள்ள மாநிலத்துக்காரன் என்பது கூடுதல் சிறப்பு...

  பதிலளிநீக்கு
 11. நேர்மை என்பது தர்மம்..
  தர்மம் தலை காக்கும்...

  நமது தர்மம் நம்மை நலமுடன் வாழ வைத்தே தீரும்...

  தர்மம் என்றால் வாழும் வழி.. பிச்சையிடுவதல்ல...

  மனோ தர்மம், தர்மம் தவறி விட்டான்.. என்றெல்லாம் சாதாரண மக்கள் பேசிக் கொள்வார்கள்...

  ஆங்கிலம் கலந்த அவியல் மொழியில் மக்கள் பேச ஆரம்பித்ததும் இப்படியான வார்த்தைகள் வழக்கொழிந்து போயின...

  பதிலளிநீக்கு
 12. தம்பி துரை.

  தங்கள் சத்திய வார்த்தைகளுக்கு தலை வணங்குகிறேன்.

  இந்தக் கதையின் சத்யா வேறு யாருமல்ல. நானே தான்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வஞ்சமில்லா வாழ்க்கையிலே
  தோல்வியும் இல்லை!..
  - என்று பாசமலர் படத்திற்காகவும்

  நேர்மையாய் வாழ்வதில்
  தோல்வியே இல்லையே!..
  - என்று வேறொரு படத்துக்காகவும் கவியரசர் பாடல்களில் எழுதியிருப்பார்...

  பதிலளிநீக்கு
 14. நெஞ்சம் உண்டு
  நேர்மை உண்டு ஓடு ராஜா..
  நேரம் வரும்
  காத்திருந்து பாரு ராஜா!..

  நேர்மையான நெஞ்சத்துக்கு காலம் வந்தே தீரும்... சத்தியம்...

  பதிலளிநீக்கு
 15. என்னைப் போல் ஒருவன் திரைப் படத்தில் இடம் பெற்ற - தங்கங்களே.. நாளைத் தலைவர்களே.. - எனும் பாடலில் தான் இந்த வரிகள்..

  நேர்மையாய் வாழ்வதில்
  தோல்வியே இல்லையே!

  பதிலளிநீக்கு
 16. சுவாரசியமான சிக்கல். ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எத்தனையோ பச்சிளங்குழந்தைகள் இருக்கும் பொழுது நாம் நன்றாக உண்டு சினிமா பார்த்து ஊர் சுற்றி செலவழிப்பது மனசாட்சிக்கு ஒத்து வருகிறதே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கை வசதிகளில் மாற்றமுண்டு
   அரிசி அட்டையில் மாற்றமில்லை
   இலவசங்களை இழக்க மனசில்லை
   பண்டிகைக் கால புடவை வழங்கலை
   வீட்டு வேலைப் பெண்மணிக்கு
   பரிசாய் அளித்திடுவோமென்ற
   பெருமைக்குக் குறைச்சலில்லை!

   நீக்கு
  2. நேர்மையான திருடன் என்கிறோமே?

   நீக்கு
  3. நேர்மையாய் இருப்பது என்பது மனசு சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் தான் கவிதை இழக்க மனசில்லை என்று மென்மையாய்ச் சொன்னது.

   நீக்கு
 17. முன்னாள் நடிகை பல்லவியின் சாயலில் ஓவியப்பெண் அழகுதான்,ஆனால் மத்தியதர வயதினளாக  படைத்திருக்கலாமோ?

  பதிலளிநீக்கு
 18. கதை அருமை...

  (இன்றைக்கு) நேர்மையாய் வாழ்வதே சாதனை தான்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது இன்னொரு ஒலிம்பிக் சாதனை!
   தங்கம், வெள்ளி, தாமிரம் இன்னோரன்ன பதக்கங்களில்லா
   வாழ்க்கை விளையாட்டு!!

   நீக்கு
 19. ஓவியம் அழகு. முக உணர்ச்சி அருமை.

  நவீன ஹரிச்சந்திரிகையாகக் கதா நாயகி.
  இன்னும் சிலர் இது போல இருப்பதால்
  நாம் பிழைக்கிறோம்.

  நேர்மை என்றும் வளரட்டும். பாசிட்டிவ் கதைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெகட்டிவ் வாழ்க்கைச் சூழல் சமுத்திரத்தில்
   பாசிட்டிவ்கள்
   அலை மோதி அலை மோதி
   அல்லாட வேண்டியது தான்!

   நீக்கு
 20. நேர்மையாய் வாழ்கிறவர்கள்
  எள்ளி நகையாடப்படும் காலமிது!
  ஒரு வேலையும் நடக்காமல்
  ஒய்ந்து போய் உட்கார்ந்து விடுவார்கள்

  பதிலளிநீக்கு
 21. நேர்மைக்கு தலை வணங்குவோம். கதை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 22. வழக்கம் போலத் தவறாமல் வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி, வெங்கட்..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!