புதன், 4 ஆகஸ்ட், 2021

பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனனை மட்டும் கண்ணன் நண்பனாகவும் கருத என்ன காரணம்?

 

நெல்லைத் தமிழன்: 

ஒருவன் இன்னொருவனிடமிருந்து (அவனுடைய வீட்டிலிருந்து) கன்னக்கோல் போட்டு (அது என்ன கன்னக்கோல்? ஹிஹி) திருடி, தன் வீட்டை வளப்படுத்திக்கொள்வது அல்லது, அடுத்த வீட்டுக்காரர்களோடு சண்டையிட்டு அவர்களது பொருட்களை எடுத்துக்கொண்டு வருவதை வீரம் என்று பாராட்டுவீர்களா அல்லது அது கயமைத்தனமா?

# முதலில் கன்னக்கோல்: 

இது குறித்து பழைய (மூட?)நம்பிக்கை.

இடி வாழை மரத்தில் இறங்கினால் மரத்தில் நடுவில் புதைந்திருக்கும். அது எதையும் தொட்டவுடன் துளைக்கும் ஆற்றல் கொண்டது.  அதைக் கள்வர் வீடு புகுந்து கொள்ளையடிக்கப் பயன் படுத்துவர்.

வஞ்சனையால் பிறர் பொருளை அடைதல் கயமை அன்றி வேறில்லை.

& கன்னக்கோல் - நாம் கடப்பாரை என்று சொல்வதுதான். கன்னங்கரிய கோல் என்பது மருவி கன்னக்கோல் ஆகிவிட்டது என்று நான் நினைக்கிறேன். 

அந்தக் காலத்து மக்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தார்கள். தம் தேவைகளுக்காக வேட்டையாடுவது, போரிடுவது எல்லாமே சகஜம். Survival of the fittest என்ற அடிப்படையிலேயே அன்றைய வாழ்க்கைமுறை அமைந்தது. சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு, குடிமக்களாக வாழும் இந்த நாகரீக காலத்து மனிதர்கள், சட்டத்தை மீறி அண்டை அயலாருடன் சண்டையிட்டு அவர்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வரும் நபர்களைப் பிடித்து நையப்புடைத்தால் எல்லாம் சரியாகிவிடும். 

இதனைப் பாராட்டவில்லை என்றால், சோழன் பாண்டியனைத் தோற்கடித்தான், சேரனை பல்லவன் தோற்கடித்தான் என்று பெருமை பேசுவது மட்டும் எப்படி நியாயமாகும்?

# தன்னை, தன் சார்ந்தோரை எதிரிகளிடமிருந்து காக்க உயிருக்குத் துணிந்து எதிரிகளைத் தாக்குவது வீரம். 

& சேர சோழ பாண்டிய காலம் வேறு, இந்த நாகரிக காலம் வேறு. 

இல்லை... அரசர்களுக்கிடையிலான போர்கள் என்பது வேறு, அதில் வெற்றி பெற்ற அரசனைப் பாராட்டுவது தகும் என்று சொன்னால், ஔரங்கசீப் படையெடுத்து கோவில் சொத்துக்களைக் கொள்ளையடித்துச் சென்றது, கோவில்களை உடைத்தது, எதிர்த்தவர்களைக் கொன்றது எப்படித் தவறு என்று சொல்லமுடியும்?

# வரவிருக்கும் ஆபத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு அண்டை அரசுகளுடன் யுத்தத்துக்குப் போவது அரச தர்மமாகவும், தன் ராஜ்ஜியத்தை விஸ்தரித்துக் கொள்ள போர் புரிவது சரி என்றும் அக்காலத்தில்  வரையறுத்துக் கொண்டார்கள்.

இதனோடுகூட போர் என்றால் இன்னின்ன அக்கிரமங்கள் இயல்பு என்றும் சொல்லி வைத்தார்கள். போரின் நியாய அநியாயங்கள் அது எது கருதி செய்யப் பட்டது என்பதைப் பொருத்திருக்கும்.

ஔரங்கசீப்போ அல்லது ராஜராஜனோ ஹீரோவா வில்லனா என்பது பார்ப்பவர் யார் கட்சி என்பதைப் பொருத்தது.

ஹிட்லர் ஜெயித்திருந்தால் சர்ச்சில் வில்லன்.

Poor people's கமலஹாசன், Poor people's ரஜினி என்று சொல்லப்பட்ட, நடிகர் மோகனும், விஜயகாந்தும் வெற்றி பெற்றது எப்படி?

# சினிமாவில் வெற்றி என்பது பெரும்பாலும் ஒரு குருட்டு அதிர்ஷ்டம்.

& மக்கள் எப்பொழுதுமே மாற்றங்களை விரும்புபவர்கள். மாற்று முகம், வேறு வகை நடிப்பு இவற்றுடன் நல்ல கதையம்சம், நல்ல வசனங்கள், பாடல்கள், இசை எல்லாம் அமைந்துவிட்டால் வெற்றிதான். 

பானுமதி வெங்கடேஸ்வரன்.: 

சென்ற வாரம் கர்நாடக இசை இரட்டையர்கள், இந்த வாரம் திரையிசை இரட்டையர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, சங்கர் கணேஷ், லக்ஷ்மி காந்த் பியாரேலால், சங்கர் ஜெய்கிஷன் போன்றவர்களைப் பற்றி கூறுங்களேன்.

# எல்லா இரட்டையருமே பெரிய வெற்றி பெற்று சாதித்தவர்கள்தான். இரண்டு ஜோடி மன வேற்றுமை காரணமாகப் பிரிந்து போனது. ஒரு ஜோடியில் ஒருவர் மறைவு மற்றவரை வெகுவாக பாதித்திருக்கிறது.

ராமனோட நட்பு கொண்டவர்களில் குகன், விபீஷணன், சுக்ரீவன் இவர்களில் சிறந்த நண்பன் யார்?

# சுக்ரீவன் விபீஷணன் இருவருமே ராமனுடைய நட்பினால் பயனடைந்தார்கள்.  குகனுடைய ராமபக்தி மிகச்சிறந்தது.

பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனனை மட்டும் கண்ணன் நண்பனாகவும் கருத என்ன காரணம்?

# அர்ஜூனனை வைத்துதான் பகவத் கீதை உண்டாகும் என்று கிருஷ்ணனுக்குத் தெரியாமலா இருக்கும் ?

& தங்கச்சி (சுபத்திரை) உள்ளங்கவர்ந்த அர்ச்சுனனை  நண்பனாக சீடனாக வாஞ்சையுடன் நடத்தியதில் வியப்பு இல்லையே! 

= = = = = =

படம் பார்த்து, என்ன தோன்றுகிறதோ அதை கருத்துரை அளிக்கவும். 

                                                             

= = = = 

59 கருத்துகள்:

 1. //சினிமாவில் வெற்றி என்பது பெரும்பாலும் ஒரு குருட்டு அதிர்ஷ்டம்//

  மிகச்சரியான வார்த்தை ஜி

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். என்றும் எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருக்க
  இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பயமுறுத்தும் மூன்றாவது அலை வராமலே போகப் பிரார்த்திக்கிறோம். இன்னொரு ஊரடங்கு அமலாகப் போவதாகச் சொல்கின்றனர். அப்படி எதுவும் இல்லாமல் நோய் கட்டுப்பாட்டில் இருக்க மக்கள் ஒத்துழைக்கவும் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 4. கன்னக் கோல், கன்னம் வைத்தல்
  சுவாரஸ்யம். ஒருத்தன் கடப்பாறையால் இடிக்கும் போது
  உள்ளே உள்ளவர்கள் தூங்கவா முடியும்?
  முதல் கன்னக் கோல் சாத்தியம் என்று தோன்றுகிறது.

  உந்தன் கன்னத்தின் மீதே நானும் கன்னம் வைத்ததால்!!
  நீயும் என்னைக் கள்வன் என்று எண்ணி விடாதே'
  பாடல்கள் தோன்றியது இப்படித்தானோ:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஒருத்தன் கடப்பாறையால் இடிக்கும் போது
   உள்ளே உள்ளவர்கள் தூங்கவா முடியும்?// உடைக்கும் சத்தம் கேட்டு, முழித்துக் கொண்டாலும் தாங்கள் ஒலி எழுப்பினால் அவன் தாக்கலாம் என்று பயந்து பேசாமல் இருந்திருக்கலாம்.

   நீக்கு
  2. நாலைந்து வருடங்களுக்கு முன்பு என் மாமா பையன் திருமணம் நிச்சயமாகியிருந்த சமயத்தில் அவர்கள் மாலையில் ஷாப்பிங் செய்து விட்டு வந்திருக்கிறார்கள். அன்று இரவு ஜன்னல் க்ரில்லை கழட்டி உள்ளே புகுந்த ஒருவன் ஹால் டேபிளில் வைத்திருந்த உறவினர்கள் பர்ஸுகளிலிருந்து பணத்தை எடுத்துச் சென்று விட்டான். ஹாலில் படுத்துக் கொண்டிருந்த மாமாவின் இரண்டாவது பையன் திருடனை பார்த்திருக்கிறான், ஆனால் அவன் கையில் இருந்த பெரிய கத்தியையும் பார்த்து பயந்து பேசாமல் இருந்து விட்டானாம்.

   நீக்கு
  3. சுவாரசியமான தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
 5. சரித்திரம் முழுவதும் நிறைந்திருக்கும் போர்களும் தீ
  வைப்பதுவும்
  கொஞ்சம் படிக்கக் கடினம் தான்.

  பதிலளிநீக்கு
 6. கன்னக்கோலால் சப்தம் வராமல் சுவரைத் துளைக்க முடியும் எனப் பாட்டி கதைகளில் கேள்விப் பட்டிருக்கேன். எவ்வளவு தூரம் உண்மை எனத் தெரியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், எங்கள் பாட்டி கூட இப்படித்தான் சொல்வார்.

   நீக்கு
  2. என் மனைவியின் பாட்டி கூட அப்படிச் சொல்வாராம்.

   நீக்கு
 7. முதல் படத்தில் பெண் பிடித்திருக்கும் முத்திரை

  குயிலே!தூது செல்லாயோ பாடலோ?

  இரண்டாவது உள்ளே வர நினைக்கும் கிளி,
  தன்னைத்தானே கண்ணாடியில் கண்டு
  மயங்குகிறது.

  மூன்றாவது ஒலிம்பிக்ஸின் பாதிப்பு.

  பதிலளிநீக்கு
 8. அந்த மொட்டை மாடிப் பெண் வலக்கை விரல்கள் அபிநயம் பிடிப்பது போல் இருந்தாலும் இடக்கை விரல்கள் அதைத் தொடரவே இல்லையே? ஆகவே வேறே ஏதோ சொல்லிக் கொண்டிருக்கார் போல!
  பச்சைக்கிளி பாவம் ஒதுங்க இடம் இல்லாமல் இந்தக் கான்க்ரீட் காட்டில் தவிக்கிறது.
  அந்தப் பையர் எதுக்கு இப்படி அபாயமான கோணத்தில் எல்லாம் வித்தை காட்டணும்

  பதிலளிநீக்கு
 9. ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக்ஸில் சேரப் பயிற்சி எடுக்கிறாரோ?

  பதிலளிநீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
 11. அரசர்களின் நாடு பிடிக்கும் ஆசையால் கஷ்டப்பட்டது பொதுமக்கள் தான். அதிலும் போர் நடக்கும் ஊரின் பக்கத்தில் வசிப்பவர்களுக்குப் பலவகைக் கஷ்டங்கள்!

  அர்ஜுனனும்/கிருஷ்ணனும் நர/நாராயணர்கள் என்பார்கள். பத்ரிநாத்தில் நர/நாராயண மலையே உள்ளது. இருவருமே பகவான் விஷ்ணுவின் அம்சம். இருவரில் ஒருவர் ஆறு மாதம் தவம் செய்ய மற்றவர் தர்மத்தை நிலைநாட்டப் போர் புரிவார். தவம் புரிவதன் பெருமையையும் உலகை தர்மத்தின் வழி பரிபாலனம் செய்வதுமே அவர்கள் முக்கிய நோக்கம் என்பார்கள். இதில் நரனே மஹாபாரதத்தில் அர்ஜுனனாகத் தோன்றினான் என்பார்கள். இருவருமே ஒருவரை ஒருவர் பிரிய முடியாமல் இருப்பவர்கள் என்பதால் மஹாபாரதத்திலும் சேர்ந்தே இருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
 12. காலை வணக்கம் அனைவருக்கும்

  எப்போதும்போல தாமதமாக வந்து, யாரையும் காணோமே என்று தேடும் கீதா சாம்பசிவம் மேடத்திற்கும் சேர்த்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று என்ன வெயில் மழை இரண்டும் சேர்ந்து பெய்யப்போகிறதா? அதிகாலையிலேயே தளத்துக்கு வந்து, பதிலை போஸ்ட் செய்ய ரொம்பவே தாமதம் செய்ததால் மாட்டிக்கொண்டேன் போலிருக்கு. ஹிஹி

   நீக்கு
  2. நர, நாராயணன் கதை தெரியும். நான் எதிர்பார்த்தது தர்க்க பூர்வமான பதில்.

   நீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 14. கேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.

  அந்த பெண் கிளியை தூது விட்டாளோ , அந்த செய்தியை வீட்டுக்கு போய் சொல்கிறதோ!

  பதிலளிநீக்கு
 15. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 16. கன்னக்கோல்: லலிதா ஜுவெல்லரியில் நுழைவதற்கு முருகன் சுவரில் ஓட்டை போட உபயோகித்தது. 

  முதல் படம் அசப்பில் மம்தா பானெர்ஜீ போன்று இருக்கிறார்.

  கூண்டுக்கிளி வெளியே போய்விட்டு திரும்ப வந்து "நான் இனிமேல் இந்த மாதிரி போக மாட்டேன். என்னை மன்னித்து உள்ளே விடுங்கள் என்று கெஞ்சுகிறது.

  மூன்றாவது ஒரு illusion shot. இது நாம் கையால் சூரியனைப் பிடிப்பது போன்றெல்லாம் போட்டோ எடுக்கிறோம் அல்லவா. அது போன்றது.

  பதிலளிநீக்கு
 17. ஜெய் ஆஞ்சநேயா...! ஏ... பைத்தியம்... என்னை நீ கீழே தள்ளிட்டே... நான் ஆண்டவனுடைய கோயிலையே பாதுக்காக்க பொறந்தவன்...! பிடி சாபம்....!

  கோவில் காக்க வந்தவனே - பாவி என்று மாறிவிட்டா...
  சாமி எங்கு குடியிருக்கும்...?
  செங்கோல் பிடிக்கும் ஒருவன் - கன்னக்கோல் பிடிக்கும் கள்வனென்றால்...
  நீதியெங்கு குடியிருக்கும்...?

  நான் கேட்டு வச்ச கேள்வியிலே பொருளிருக்கு...
  அதைக் கேளாதோர் உள்ளத்திலே இருளிருக்கு...
  அதைக் கேளாதோர் உள்ளத்திலே இருளிருக்கு...

  பதிலளிநீக்கு
 18. கன்னக்கோல் : சுவரை அகழ்தற்குக் கள்ளர் கையாளுங்கருவி...

  பதிலளிநீக்கு
 19. கன்னக்கோல் பற்றி விக்கிப்பீடியா சொல்வது :

  "கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே..." கப்பல் பயணத்தில் கப்பல் மூழ்கி, பொருள் மொத்தத்தையும் இழந்து, ஒருவன் ஏழையாகி விடுவது என்பது அந்த காலத்தில் சாதாரணமாக இருந்தது... அப்போது அவனைப் பார்க்கும் பெரியவர்கள் "கப்பலே கவிழ்ந்து போனாலும் சரி, கன்னத்தில் கை வைக்காதே" என்று சொல்வார்கள். அது ஆறுதல் மொழி அல்ல. அவர்கள் அப்படிச் சொன்ன கன்னம் என்பது நமது முகத்தில் இருக்கும் கன்னம் அல்ல...

  அந்தக் காலத்தில் திருடர்கள் கன்னக்கோல் என்ற ஒரு ஆயுதத்தின் உதவியால் ஒரு வீட்டின் சுவரில் துளை போட்டு அதன் வழியே உள்ளே சென்று திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள்... அதனைத் தான் நம் பெரியவர்கள் தொழிலில் எவ்வளவு பெரிய பொருள் இழப்பு நேரிட்டு ஒருவன் ஏழையானாலும் சரி, அடுத்தவர்களின் பொருளை அவன் திருடிவிடக்கூடாது என்று சொல்வதற்காக 'கன்னக் கோல்' என்ற ஆயுதத்தில் கை வைக்கக் கூடாது என்பதற்காகச் சுருக்கமாக 'கன்னம் என்று சொல்லி வைத்தார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவாரசியம். பொருத்தமான விளக்கம். நன்றி.

   நீக்கு
 20. // வரவிருக்கும் ஆபத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு அண்டை அரசுகளுடன் யுத்தத்துக்குப் போவது அரச தர்மமாகவும், தன் ராஜ்ஜியத்தை விஸ்தரித்துக் கொள்ள போர் புரிவது சரி என்றும் அக்காலத்தில் வரையறுத்துக் கொண்டார்கள்.. //

  இது தான் சரி...

  இவன் முந்தவில்லை எனில் அவன் முந்திக் கொள்வான்.. அதற்கப்புறம் நாடு - நாடாக இருக்காது...

  பதிலளிநீக்கு
 21. //ராமனுடைய நட்பினால் பயனடைந்தார்கள். // - அப்படி இல்லை. அவர்கள் இருவரும் நட்புக் கொள்ள ஒரு நோக்கம், அதனால் விளையப்போகும் பயன் இருந்தது. ஆனால் குகன், இராமனிடம் உளப்பூர்வமான நட்பு கொண்டவன். அதனால்தான் குகனோடு ஐவரானோம் என்ற வார்த்தையை கம்பர் எழுதியிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.

  அந்தப் பெண் மரங்களை பார்வையாளார்களாக வைத்துக் கொண்டு பரதம் கற்று தேர்கிறாரா?

  கிளி என்ன தவறு செய்து விட்டதென்று அதற்கு இந்த வெளிநடப்பு தண்டனை? பாவம்... ஒரு விழியால் வளர்த்தவர்களை கண்ணாடி வழியாக சிரமப்பட்டு பார்த்து மன்னிப்பு கேட்கிறதோ ?

  அந்தப் பையன் உலகளந்த பெருமாளின் கதையை கேட்டு உணர்ந்த பின் தானும் வீட்டிலேயே அத்தகைய முயற்சியில் ஈடுபடுகிறாரோ ?
  பகிர்வினுக்கு நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 23. முதல் படக்காரருக்கு முதுகு வலியோ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!