செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

சிறுகதை  : வேண்டுதல் - அப்பாதுரை 

 

வேண்டுதல்

-அப்பாதுரை -

        த்தாம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறை. காரைக்கால்-தரங்கம்பாடி எல்லையம்மன் கோயிலில் ஆனி மாதம் நடைபெறும் வருடாந்திர விழா. மஞ்சள் நீர் குளியல், மல்லுக்கட்டு, செம்மறி ஆட்டுச் சண்டை, வில்லுப்பாட்டு, நிலாச் சோறு என்று நிகழ்ச்சிகள் பல நடந்தாலும், கூட்டம் சேர்வதென்னவோ கடைசி நாள் நள்ளிரவுக்கு முன் தொடங்கி கிழக்கு வெளுக்கும் வரை கோயில் வெளி மண்டபத்தில் நடைபெறும் பேயோட்டும் சடங்கிற்குத் தான்.

இரவு பதினொரு மணி போல் தொடங்கி ஆறிலிருந்து அறுவது வரை வயது வித்தியாசமில்லாமல் பேயோட்டுவார்கள் என்றாலும் பதினாறு வயதுக்கு இளையவர்களை வீட்டிலோ மற்றவர் பாதுகாப்பிலோ இருத்தி விட்டு, கிராமத்து மக்களும் மற்றவரும் பேயோட்டு மண்டபத்திற்கு வந்து விடுவார்கள். பதினாறு வயதுக்குட்பட்ட இளையவர்கள் மண்டபத்தில் நள்ளிரவு நேரத்தில் இருந்தார்கள் என்றால், ஒன்று அவர்களுக்குப் பேய் பிடித்திருக்க வேண்டும், இல்லையென்றால் திருட்டுத்தனமாகப் பதுங்கியிருக்க வேண்டும்.

நானும் என் நண்பர்கள் மணியும் ரத்தினமும் இரண்டாவது ரகம். அன்றைக்கு இரவு பேயோட்டு சடங்கைப் பார்த்து விடுவது என்று தீர்மானித்திருந்தோம். இத்தனை வருடங்களாக அவரவர் சொன்னதை வைத்து ஒரு ஒப்பனையை அறிந்திருந்தோமே தவிர, உண்மையான சடங்கை நேரில் பார்க்கும் வாய்ப்பு இன்று தான். முதல் இரண்டு வரிசைகளில் இருந்த ஓலக்காரிகளுக்குப் பின்னால் உட்கார்ந்தோம். மண்டபக் கூரையின் நிழலிருட்டு எங்கள் மேல் படியுமாதலால் இது சரியான இடமென்று தோன்றியது. ஓலக்காரிகளுக்கு அப்பால் எதிரே ஒரு வட்டக் குழி வெட்டி சுற்றிலும் வெள்ளை மாக்கோலம் இட்டிருந்தார்கள். கோலத்தின் மேல் வேப்பிலைக் கொத்துகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. வேப்பிலைக் கொத்துகளை குத்துமதிப்பாக எண்ணி, "டேய், இன்னக்கு பத்து பேய்ங்களுக்கு மேலே ஓட்டுவாங்கடா" என்றான் மணி. "கம்முனு இருடா" என்று அடக்கினான் ரத்தினம். குழியில் காய்ந்த வரட்டி, கருஞ்சுள்ளி, பனை இலை எல்லாம் பரப்பி அதன் மேல் கரித்துண்டுகளைப் பரப்பி இருந்தார்கள். அருகில் 'லீகோ கரி' என்று எழுத்துகள் தெரிந்தபடி மூட்டையொன்று கிடந்தது. அதனருகில் சில பானைகள். பானைகளுக்கருகில் சில சட்டிகளில் மஞ்சள், குங்குமம், கரிப்பொடி என்று என்னென்னவோ இருந்தன. குழியின் நான்கு முனைகளிலும் ஐந்தடி உயரத்துக்கு மூங்கில் கழிகள் கட்டி கயிற்றுப் பந்தல் நடப்பட்டிருந்தது. அதையும் கடந்து, கோயிலின் மூடிய கதவுகள். உள்ளே என்ன நடந்து கொண்டிருந்தது என்று தெரியாது. அவ்வப்போது ஏதாவது ஒலி கேட்கும், கூடியிருக்கும் மக்கள் பேச்சை நிறுத்தி அமைதியாவார்கள். கதவு திறக்கவில்லையென்றால் மறுபடி பேசத் தொடங்கி விடுவார்கள்.

"தள்ளுங்க, தள்ளுங்க" என்றபடி எங்களுக்குப் பின்னால் வந்து உட்கார்ந்தார் ஒரு கிழவர். என் தோளைத் தட்டி "கணிசம் வெலகாம்ல?" என்றார். இடம் கொடுத்து விலகி உட்கார்ந்தேன். என்னைப் பார்த்துச் சிரித்தார். நான் பதிலுக்குச் சிரித்து அவசரமாக வேறு புறம் திரும்பிக் கொண்டேன். என்னையும் மணியையும் இரு கைகளாலும் தொட்டு, "பொய் மீசையா? ஓட்டாதுன்றேன்" என்றார் மெல்லிய குரலில். நாங்கள் நடுங்கி விட்டோம். இன்னும் நெருங்கி எனக்கும் மணிக்கும் இடையில் வசதியாக அமர்ந்து கொண்டார் கிழவர். "கலங்காண்டா, நான் ஊரக் கூட்டல. ஆனா இங்கன நடக்குறது நெஞ்சக் கலக்கும்ல, தாங்குவியளா?" என்றார். நாங்கள் நன்றியுடன் தலையசைத்தோம்.

பதினொன்றரை சுமாருக்கு கோயில் கதவு திறந்து இரண்டு பூசாரிகள் வந்தனர். அவர்கள் பின்னே ஒருவன் ஒரு ஆட்டை இழுத்துக் கொண்டு வந்தான். பூசாரிகள் குழிக்கருகில் வந்து நின்றனர். ஒரு சட்டியை எடுத்து அதிலிருந்த மஞ்சள் பொடியை மூங்கில் கழிகளின் மேலிருந்த கயிற்றின் மேல் அள்ளி வீசினர். "ஆத்தா மனமிறங்கி வந்து எங்களைக் காத்து கரை சேக்கணும் ஆத்தா!" என்றனர். ஓலக்காரிகள் "ஊலஊலஊல" என்று பின்னோலமிட்டுக் கொண்டிருக்கையில், பூசாரிகள் இருவரும் கயிற்றை அவிழ்த்து மூங்கில் கழிகளின் மேல் ஒரு பந்தல் போல் கட்டினர். "நீலி, சூலி, காளி" என்று மறுபடி கத்தினர். ஒரு சட்டியிலிருந்த மண்ணெண்ணையைக் குழியில் கொட்ட குப்பென்று நாலடிக்கு நெருப்பெழுந்தடங்கியது. "வந்துட்டா, ஜக்கம்மா வந்துட்டா" என்று ஒரு பூசாரி சட்டியிலிருந்த குங்குமத்தை நாலு புறமும் வீச, உள்ளிருந்து ஒரு பெரிய இரும்பு சட்டியை எடுத்து வந்து குழி மேல் வைத்தான் இன்னொரு பூசாரி. கூட்டம் திடீரென்று "ஆத்தா, ஆத்தா" என்று அலறியது. பயத்தில் என் நிஜார் ஈரமானது போல் தோன்றியது.

ஆட்டைக் கொண்டு வந்தவன் அதை மூங்கில் பந்தல் மேலெறிந்து இழுக்க, கிணற்றுக் குடம் போல் ஆடு மெள்ள உயரே எழும்பியது. ஒரு பானையை எடுத்து மூடியை விலக்கிய பூசாரி, பானையிலிருந்த நீரை ஆட்டின் மேல் வீசினார். ஒலக்காரிகள் மறுபடி "ஊலஊலஊல" என்று பின்னோலமிட ஆடு "பேஏஏஏஏ" என்றது. ஆட்டின் மேல் பட்ட நீர் எங்கள் மேலும் தெளித்தது. தெளித்த நீரை நாங்கள் துடைத்துக் கொண்டிருக்கும் போதே, எதிர்பாராத வகையில் ஆட்டுகாரன் ஒரு வெட்டறிவாளை எடுத்து வந்து "ஜக்கம்மா" என்றபடி துள்ளிக் குதித்து ஆட்டின் தலையை ஒரே வீச்சில் வெட்டியெறிந்தான். தலை கீழே சட்டியில் விழுந்தது. வெட்டு காயத்தில் வெளிவந்த ரத்தம் அக்கம் பக்கத்தில் தெறிக்க, எங்கள் மீதும் தெறித்தது. ஓலக்காரிகளின் இடைவிடாத ஓலத்திற்கு மேல் இப்போது கூட்டம் "ஆத்தா, ஆத்தா" என்று அலறத் தொடங்கி விட்டது. நான் நடுங்கி ரத்தினத்தைத் தொட்டு, "போயிறலாம்டா" என்றேன். "கம்முனு இருடா" என்று அதட்டினான். கிழவர் என்னையும் மணியையும் நெருக்கினார்.

ஆட்டுக்காரன் ஆட்டை இறக்கி, தலையையும் முண்டத்தையும் எடுத்துக் கொண்டு விலகினான். பூசாரிகள் இருவரும் சட்டியின் எதிரெதிரே உட்கார்ந்தனர். ஆட்டிலிருந்த ரத்தம் சட்டியில் இறங்கிக் கொதிக்கத் தொடங்கி விட்டது. ரத்தக்கறியின் வாடை எழும்பி வயிற்றைக் குமட்டியது. கொட்டிய ரத்தம் சூட்டில் குறைந்து சிறிய உருண்டைகளாக மாற, "ஆத்தா குடிச்சிட்டா. அவ வயிறு நெறஞ்சிடுச்சி. இனி மனசும் நெறஞ்சுறும். அருள் செய்யத் தயங்கமாட்டா" என்றபடி சட்டியை எடுத்துச் சென்றனர். கூட்டமும் அவர்கள் சொன்னதை நம்பி ஆரவாரம் செய்தது. ரத்தினத்துக்கு அருகிலிருந்த ஒரு பாட்டி, "ஆத்தா அப்படியே குடிச்சிட்டா பாரு, கொட்டின ரத்தம் எங்கே போவும்? ஆத்தா, ஆத்தா" என்றாள். "ஆத்தா, ஆத்தா" என்றான் ரத்தினம் பதிலுக்கு என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி.

திரும்பி வந்த பூசாரிகள் ஒரு பானையிலிருந்து நீரை எடுத்துக் குழியில் கொட்ட, நெருப்பு அணைந்து புகைந்தது. அதன் மேல் மண்ணையும் மஞ்சளையும் அள்ளிக் அள்ளிக் கொட்டினர். பிறகு ஆண், பெண் என்று வரிசையாக ஒவ்வொருவராக வரவழைத்து குழியில் நிற்க வைத்து பேயோட்டத் தொடங்கினர். "ஓடு, ஆத்தா சொல்லுறா ஓடு" என்று வேப்பிலைக் கொத்தினால் அடி அடி என்று அடிக்க, வலி பொறுக்காமலோ இல்லை உண்மையாகவே பேய் பிடித்தோ அவர்கள் அலறினர். நான் பயத்தில் ரத்தினத்தின் ஒரு கையை அவன் எத்தனை முயன்றும் விடாமல் பிடித்து இணைத்துக் கொண்டு விட்டேன். இது முடியும் வரை திறப்பதில்லை என்று என் கண்களை மூடிக் கொண்டு விட்டேன்.

"கண்ணைத் தொறடா, பல்லிமுட்டை" என்று ரத்தினம் என்னைத் தட்டி எழுப்பினான். திறந்த போது அருகில் இருந்த கிழவர் ஆடத் தொடங்கினார். என்னவென்று கவனித்தேன்.

எதிரே ஒரு சிறு பெண்ணை, பத்து வயது கூட இருக்காது என்று தோன்றியது, பேயோட்டிக் கொண்டிருந்தனர். "என் மவ வயித்துப் பேத்தி, என் மவ வயித்துப் பேத்தி" என்று கிழவர் கூச்சல் போடத்தொடங்கினார். "ஊல ஊல" என்று ஓலக்காரிகள் இன்னும் கூச்சல் போட, கிழவர் மணியையும் என்னையும் எழுப்பிக் கட்டிக் கொண்டு ஆடத் தொடங்கினார். "ஓடுறீ நீலி, மலையேறு, மலையேறு. ஆத்தா ரத்தம் குடிச்சு கோவமா இருக்கா. மலையேறு காட்டேறி.. பாட்டன் மனசு குளிற இறங்கிவா ஆத்தா" என்று பூசாரிகள் வேப்பிலை அடிக்கத் தொடங்கினர். ரத்தினமும் விளையாட்டாக, "இறங்கி வா ஆத்தா" என்று கத்தத் தொடங்கினான். அந்தப் பெண்ணோ தலையை இடமும் வலமும் ஆட்டி, "ம்..ம்" என்று மிதமாகவும் கோபமாகவும் முனகிக் கொண்டிருந்தாள்

திடீரென்று அந்தப் பெண் "டேய், நிறுத்துடா" என்று அலறினாள், கிழக்கட்டைக் குரலில்.

திடுக்கிட்ட ஒரு பூசாரி கையிலிருந்த வேப்பிலைக் கொத்தைத் தவற விட்டு திரும்பி எடுக்கக் குனிந்த போது, அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு விட்டாள். "எங்கே என்னோட சூலக்கட்டி? சூலக்கட்டி எங்கடா?" என்று பூசாரியின் தலையைத் தட்டித் தட்டி ஆடத் தொடங்கினாள்.

"யாரு நீ? சூலியா, காட்டேறியா அடையாளம் சொல்லு தாயே" என்றார் இன்னொரு பூசாரி.

"நான் அவனோட ஆத்தாடா" என்று என்னருகில் இருந்த பெரியவரைச் சுட்டினாள் பேய்ப்பெண்.

"ஆத்தா, ஆத்தா, சூலக்கட்டி என்னாண்ட இருக்குது தாயே" என்று அலறினார் எங்களைப் பிடித்துக் கொண்டிருந்த பெரியவர். தன் பையிலிருந்த ஒரு சிறிய பெட்டியை எடுத்துக் காட்டினார்.

"வேணாம், அது எனக்கு சொந்தமான கட்டி. எடுத்துரு. கொடுத்துரு" என்று அலறினாள் பேய்ப்பெண்.

"மலையேறு, குடுப்பாரு" என்று வேப்பிலைக் கொத்தினால் ஓங்கி அடித்தார் பூசாரி.

அதற்குள் தன்னை விடுவித்துக் கொண்ட மற்ற பூசாரி, ஒரு பானையை எடுத்து வந்து கோபத்துடன் அவள் மேல் கவிழ்த்தார். தண்ணீரோ என்னவோ அதிலிருந்து கொட்ட, பேய்ப்பெண் இன்னும் அலறினாள்."நான் யாருடா, ரத்தக் காட்டேறி. என் சொத்தையா எடுக்குறே? என் சூலக்கட்டிய கொடு, ஓடறேன்" என்று இரண்டடிக்கு எட்டி எட்டிக் குதித்தாள். பூசாரி மேல் காறித் துப்பினாள்.

"ஆச்சு தாயே, இதோ கொடுத்தேன்" என்ற பெரியவர், நான் எதிர்பாராத செயலொன்றைச் செய்தார். என்னை இழுத்து என் சட்டைப் பையில் அந்தப் பெட்டியைப் போட்டார். "இதோ, இவன் கிட்டே இருக்கு ஆத்தா. மலையேறு மலையேறு" என்றார். என்னிடம் மட்டும் கேட்கும்படி "மாப்ளே.. பெறவொரு நாளு திரும்பி வந்து வாங்கிக்கிடுறேன்.. தொலச்சிராத மாப்ளே.. தொலச்சா கொன்னுருவேன்" என்றார்.

நான் வெலவெலத்துப் போய் என்னை விடுவித்துக் கொண்டேன். பாக்கெட்டில் விழுந்த பெட்டியை எடுத்து ரத்தினத்தின் பையில் போட முயன்ற போது அவன் விலகினான். பெட்டி தவறியது. ஓலக்காரிகள் பலமாகப் பின்னோலமிட, என்னருகில் இருந்த பெரியவர் மயங்கி விழுந்தார். கூட்டத்தில் பரபரப்பு. "ஆத்தா ஆத்தா" என்று அவரவர் எழுந்து வர, நாங்கள் மூவரும் எடுத்தோம் ஓட்டம்.

     று நாள் காலை வழக்கம் போல் ரெயில் நிலைய ஓடைக்கு வந்த போது, ரத்தினம் என்னைப் பார்த்து, "டேய், நேத்து ஏன் அப்படி பயந்து செத்து சுண்ணாமாவுனே?" என்றான். நான் ஏதோ பதில் சொல்ல, ஒருவரையொருவர் கிண்டல் செய்தபடி நீந்திக் குளித்தோம்.

மணி என்னைப் பார்த்து, "டேய் அது என்னாடா சூலக்கட்டி, எங்கடா அது?" என்றான்.

"அதை ஏண்டா கேக்குற? நான் தான் பயந்து நடுங்குனன்னா, இதா நம்ம வீரன் ரத்தினம் என்ன விட மோசம். இவன் பாக்கெட்டுல அத்த போடப் போனா, ஐயா எட்டடிக்கு ஒதுங்குறாரு" என்று ரத்தினத்தைக் கிண்டல் செய்தேன். ரத்தினம் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு குளித்து முடித்து உடையணிந்து கிளம்பத் தயாரானோம்.

ரெயில் நிலயம் அருகே வந்ததும் ரத்தினம் திடீரென்று தன் பையிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து "இது என்னா தெரியுதா? ஆத்தா, ஆத்தா" என்றான். அவன் கையில், முதல் நாளிரவு அந்தக் கிழவர் கொடுத்த பெட்டி!

"அதான் சூலக்கட்டியா? காட்டுறா பாப்போம்" என்றான் மணி.

"வேணாம்டா, தூக்கியெறிடா" என்றேன்.

"என்னனு தான் பாக்கலாமுல்ல?" என்றான் மணி. ரத்தினம் அந்தப் பெட்டியை மணியிடம் கொடுத்தான். ஏ.ஆர்.ஆர் வாசனை சுண்ணாம்பு என்று பட்டியெழுதிய சாதாரண சுண்ணாம்புப் பெட்டி. உள்ளே காய்ந்த சுண்ணாம்புக் கட்டி ஒன்று இருந்தது. ஆனால், குங்கும நிறத்தில் பந்து போல் இருந்தது. "ஆத்தாவோட ரத்தமா இருக்கும்டா" என்றான் மணி.

"நிறுத்துறா. வெறும் கலர் சுண்ணாம்பு, இதப் போய்.." என்ற என்னைத் தடுத்தான் ரத்தினம். "டேய், காலைல எழுந்தப்ப எங்க ஆத்தா கைல கேட்டேன். நேத்து மண்டபத்துல ரகளையாமே, என்ன வெசயம்னு சொம்மா கேட்டனா? ஆத்தா சொல்லிச்சு.. நினச்சதை நடத்திக் கொடுக்கும் சூலக்கட்டிய கொடுத்துட்டு காட்டேறிப் பேய் மலையேறிடுச்சு. ஆனா சூலக்கட்டிய காணோம்.. மீசை வச்ச வெளியூர் காரனுவ எவனுவளோ எடுத்துட்டு ஓடிட்டதா சொல்றாங்கனுச்சு. இப்ப என்ன சொல்றே?" என்றான்.

"ஆமடா, நெனச்சத நடத்திக் கொடுக்கும் சூலக்கட்டி... இதெல்லாம்" என்று இழுத்த மணியை மறித்த ரத்தினம், "டேய், மணி. ஒனக்கு அந்த திலகம் பொண்ணு மேல ஒரு இது தானே? இந்தா இந்த சூலக்கட்டியை வச்சுக்கிட்டு அவள வசியம் பண்ணிடு, இந்தா பிடி" என்றான்.

"போடா, போடா. தண்டக் கருமாந்திரம்" என்றான் மணி.

"என்ன குறஞ்சு போயிடும்? அவ உனக்கு வசியமாவல இது வெறும் சுண்ணாம்புனு வச்சுக்க, அவ்வளவு தானே?" என்றேன் நான், தைரியம் வந்தவனாக.

"அப்டியா, நீ தான் புத்திசாலியா எதுனா வேண்டிக்கயேன்.." என்று மணி அந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்தான்.

எனக்கு பயமிருந்தாலும் இதில் எல்லாம் நம்பிக்கையில்லை. அதனால் பெட்டியை எடுத்து, "எனக்கு பத்தாயிரம் ரூபாய் கிடைக்கட்டும்" என்று பலமாக உரக்க வேண்டினேன்.

"அடப்பாவி! பத்த்த்தாயிரம் ரூபாயா, டேய் எங்கந்துரா வரும்?" என்று வாய் பிளந்தான் ரத்தினம்.

"பாத்துருவமே, சூலக்கட்டியோட மகிமயை?" என்றேன் கிண்டலாக.

மணி என்னிடமிருந்து பெட்டியைப் பிடுங்கி, "திலகம் என்னோட பொஞ்சாதியாவணும்" என்று உரக்க வேண்டிக்கொண்டான். பிறகு எங்களிடம், "திலகம் மட்டும் எனக்கு பொஞ்சாதியாவட்டும், மவனே இந்தப் பெட்டியை கோவில் கட்டிக் கும்பிடுவேன்" என்றான். "நீ எதுனா வேண்டிக்க" என்ற மணி, ரத்தினத்திடம் சுண்ணாம்பு டப்பியைக் கொடுத்தான்.

"எனக்கு நல்ல எச்எம்டி கடியாரம் வேணும்" என்றான் ரத்தினம் உரக்க.

"இன்னாடா நீ? வேண்டுறதோ வேண்டுற, கெடக்காத ஒண்ணா வேண்டக் கூடாது?" என்றான் மணி.

"சரி, அதான் மூணு பேரும் வேண்டிக்கிட்டோமுல்ல? அந்த பெட்டியை தலைய சுத்தி கடாசுடா" என்றேன். "அந்தக் கிழவன் வேறே பெட்டியைத் தொலைச்சா கொன்னுருவேன்னு சொல்லியிருக்கான்".

ரத்தினமும் கண்ணை மூடி அந்தப் பெட்டியை வீசி எறிந்தான். அது சரியாக ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர் வெளியே வரும் போது அவர் முகத்தில் விழ, அவர் கோபம் வந்து "கொக்கால" என்று எங்களைத் திட்டத் தொடங்க நாங்கள் ஓட்டமெடுத்தோம். "இதெல்லாம் நடக்குற கதையாடா? எனக்கு பத்தாயிரம் ரூவா கெடச்சாலும் கெடைக்கும், திலகம் உனக்கு எப்டிரா கழுத்த நீட்டுவா?" என்று கிண்டல் செய்தபடி வீட்டை நோக்கி ஓடினோம்.

முதலாவது ரத்தினத்தின் வீடு. அவன் வீட்டு வாசலில் கூட்டம். அருகில் வந்ததும் மரண ஓலம். பதட்டத்துடன் உள்ளே ஓடினோம். அவனுடைய பாட்டி அலறிக் கொண்டிருந்தாள். என்னவென்று விசாரித்ததில் ரத்தினத்தின் அப்பா தொழிற்சாலை விபத்தில் அடிபட்டு இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். திடுக்கிட்டோம்.

ஒரு வாரம் பொறுத்து மணியும் நானும் விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தான் ரத்தினம். "எப்படிரா இருக்க?" என்றான் மணி.

"டேய், எங்கப்பாரு கம்பெனில எனக்கு ஒரு வேலை கொடுத்துட்டாங்கடா. கம்பெனிலந்து ஆளுங்க வந்து சொன்னாங்க. அடுத்த வாரத்துலந்து வேலக்குப் போறண்டா" என்றவன் எங்கள் முன் கைகளைக் காட்டினான். அவன் இடது கையில் புத்தம் புதிய எச்எம்டி கைக்கடியாரம்! "என்னடா இது?" என்று அதிர்ந்தோம்.

"எங்க அப்பாரு கம்பெனில கொடுத்தாங்கடா, அவுரோட இருவது வருச சர்வீசுக்கு இந்தக் கைக்கடியாரமும் வீட்டுக்கு ஒரு கிரைண்டரும் கொடுத்தாங்கடா" என்றான். "எங்கப்பாரு எறந்து போய் இந்த வாச்சு எனக்கு வந்திருக்க வேணாம்டா".

அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க, மணி விவரமில்லாமல் "டேய், எங்கப்பாரு செத்தாவது எனக்கு திலகம் பொஞ்சாதியானா சர்தான்" என்றான்.

"பெனாத்தாதறா" என்று அவனை அடக்கினோம்.

ரத்தினம் வேலைக்குப் போகத் தொடங்கியதும், மணியும் நானும் நட்பை வளர்த்தோம் என்றாலும், ப்ளஸ்-டூ படிக்க வெவ்வேறு பிரிவில் சேர்ந்ததால் முன் போல் அடிக்கடி சந்திக்கவில்லை. கல்லூரிக்குப் போகும் கலவரமும் சூழ்ந்து கொள்ள, சூலக்கட்டி வேண்டுதலை மறந்தே விட்டோம்.

ப்ளஸ்-டூ தேர்வுகள் தொடங்கிய முதல் நாள் திடிரென்று மணியைக் காணோம். அவன் வீட்டில் ஒன்றும் தெரியாதென்றனர். கிராமம் முழுவதும் ஒரே பேச்சு. திலகமும் மணியும் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டே ஓடி விட்டார்கள் என்று பேசிக் கொண்டார்கள். நான் கல்லூரி சேர்ந்த பின், முதல் விடுமுறையில் கிராமத்துக்கு வந்த போது மணியை சந்தித்தேன். திலகத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொன்னான். "எல்லாம் சூலக்கட்டி மகிமை தாண்டா" என்றான்.

"உளறாதடா. என்னடா ஆச்சு, உண்மைய சொல்லு? எப்படிரா... உனக்கு பதினெட்டு வயசு கூட ஆவல.. டிகிரி கூடப் படிக்கல.. நல்ல வேல இல்லாம அவளை எப்படிரா காப்பாத்துவ?" என்றேன். அதற்குள் திலகம் ஒரு சிறு தட்டில் முறுக்கும் காபியும் கொண்டு வந்து கொடுத்தாள். அவளைப் பார்த்து விட்டு, மணியைப் பார்த்தேன்.

திலகம் விலகியதும், "ஆமாடா, அவ கர்ப்பமா இருக்கா" என்றான்.

"டேய், கவனமா இருடா. இது ரொம்ப சீக்கிரம்டா" என்று சொல்லிவிட்டு வந்தேன். வீட்டுக்கு வரும் வழியில் சூலக்கட்டி நினைவுக்கு வந்தபடி இருந்தது.

அதன் பிறகு படிப்பில் கவனமாக இருந்ததால் கிராமப் பக்கம் செல்லவே இல்லை. படித்து முடித்து பம்பாயில் வேலை கிடைத்ததால், வேலையில் சேருமுன் ஊருக்குச் சென்ற போது மணியைச் சந்தித்தேன். திலகம் அவனை விட்டு ஓடி விட்டதாகச் சொன்னான். அதிர்ச்சியாக இருந்தது. "அப்புறம் உன்னை ஏண்டா கட்டிக்கிட்டா?" என்றேன்.

"டேய், அது வேறே கதைடா" என்றான். "ஒரு நா திலகமும் அவ ஆத்தாவும் எங்க வீட்டுக்கு வந்து திலகத்தை நான் கெடுத்துட்டதா சொன்னாங்கடா. திலகம் என்னைக் காட்டி நான் அவளைப் படுக்க வச்சதாவும் அதனால கர்ப்பமாயிட்டதாயும் சொன்னா. அதனால காதும் காதும் வச்ச மாதிரி எங்க வீட்லயும் அவ வீட்லயும் பேசி எங்களுக்கு கல்யாணம் கட்டி வச்சுட்டாங்கடா. நீ வந்தப்ப திலகம் கர்ப்பமா இருந்தது மெய்யால என்னோட கர்ப்பம் இல்லடா" என்றான்.

என் அதிர்ச்சி அதிகமானது. "இப்ப எங்கடா அவ?"

"தெரியலடா. ஒரு நாள் பொழுது விடிஞ்சு பாத்தப்ப ஆளக்காணோம். எங்கியோ ஓடிட்டா"

"அப்ப கொழந்த?"

"அது... அந்த கர்ப்பம் கலச்சுக்கிட்டு ஓடிட்டா".

"அந்த திலகம் உன்னை நல்லா பயன்படுத்திட்டிருக்கா" என்றேன். எனக்கு ஆத்திரம் வந்தது.

மணி அமைதியாக, "ஆனா, ஓரளவுக்கு அது எனக்கு பிடிச்சு தாண்டா இருந்துச்சு. திலகத்தை கட்டிப்பேன்னு நான் கனவுல கூட நினைச்சதில்ல" என்றான்.

     ம்பாய் சென்று பத்து வருடமாகி விட்டது. ஊரை மறந்து விட்டேன். மாதம் ஒரு முறை என் தாய் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதுவதோடு சரி. திடீரென்று அப்பா இறந்து விட்டதாக ஒரு நாள் தந்தி வந்து ஊர் திரும்பினேன். சடங்கெல்லாம் முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அம்மா சொன்னாள். "டேய். தரங்கம்பாடிலந்து ஒனக்குப் பொண்ணெடுக்கணும்னு ஒங்கப்பாரு ஆசைப்பட்டாருடா. அப்பா அம்மா இல்லாத பொண்ணுடா, தாத்தா வளத்து நல்லா படிக்க வச்சிருக்காப்ல. இந்தா போட்டோ" என்று என்னிடம் கொடுத்தாள்.

படத்தில் பெண் மிக அழகாக இருந்தாள். நான் பதில் சொல்லாமல் திருப்பிக் கொடுத்தேன். முதலில் பம்பாய் ஓட வேண்டும். இந்தக் கிராமத்திலிருந்து விடுதலை. நான் நினைத்துக் கொண்டிருந்த போது அம்மா, "அவங்களை இன்னக்கு வரச் சொல்லியிருக்குறேன். பொண்ணைப் பாரு. பிடிச்சிருந்தா கட்டிக்க" என்றாள். "உனக்கும் வயசாயிடுச்சில்ல? அந்த அய்யாவுக்கும் நிம்மதியா இருக்கும்".

அன்று மாலை அந்தப் பெண்ணும் அவளுடைய தாத்தாவும் என் வீட்டிற்கு வந்தார்கள். அந்த அய்யாவை எங்கேயோ பார்த்தது போலத் தோன்றினாலும் நினைவுக்கு வரவில்லை. பெண் அழகாக இருந்தாள். பி.காம் முடித்து பொதுத் தேர்வு எழுதி கேனரா வங்கியில் வேலை பார்ப்பதாகச் சொன்னாள்.

"பத்தாயிரம் ரூவா வரதட்சணை தர முடியும் மாப்ளே.." என்ற தாத்தாவை நிமிர்ந்து பார்த்தேன். கண்களை அகல விரித்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

---------

26 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் ஆரோக்கியமாக இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. அப்பாதுரையின் மூன்றாம் சுழிக்கதை.
    பேயோட்ட ஆரம்பித்துக் கிழவனார் வந்து,
    பொட்டலம் கொடுத்துக்
    காணாமல் போய், பேயோட்டப் பட்ட பேத்தியோடு
    வந்து நிற்கிறார்.

    இவர் என்ன செய்யப் போகிறாரோ.
    மண மேடையா அல்லது????

    பதிலளிநீக்கு
  4. ஆடி கடைசி செவ்வாய். 'ஆத்தாடி மாரியம்மா"
    பாட்டு பின்புலத்தில் ஓடுவது போல ஒரு
    உணர்ச்சி.
    துரையின் கற்பனையே பிரமாதம். எங்கிருந்து வருகிறது இந்த
    எழுத்து.
    களம் அமர்க்களம்.
    விவரணை எல்லாம் out of the world.

    மீண்டும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. இவ்வாறான உறவும் நட்பும் என்றுமே மனதில் நிற்கும்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. சூலக்கட்டியை பத்திரமாக வைத்து இருக்க சொன்ன தாத்தாவின் பேத்திதான் அந்த பெண் . எல்லோரும் வேண்டியது கிடைத்து இருக்கு அந்த சூலக்கட்டியால்.

    பதிலளிநீக்கு
  8. //"மாப்ளே.. பெறவொரு நாளு திரும்பி வந்து வாங்கிக்கிடுறேன்.. தொலச்சிராத மாப்ளே.. தொலச்சா கொன்னுருவேன்" என்றார்.//
    முன்பே தெரிந்து விட்டதா ரத்தினம் தான் தன் பேத்திக்கு மாப்பிள்ளை என்று.

    நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  9. கதை விறு விறுப்பாக இருந்தது. வாராந்தரி ராணியில் பிரசுரம் ஆக வேண்டிய கதை.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராணி பத்திரிகை பெயர் மறந்தே விட்டது! இன்னும் இருக்கிறதா?

      நீக்கு
  10. ஆஹா... அப்பாதுரை அவர்களின் கதையா? பேயோட்டும் காட்சிகள் கண்முன்னே! :)

    கதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. கதை நன்றாக இருந்தது. அப்பாதுரை அவர்களின் குறும்புக்கும் பஞ்சமில்லை.

    இந்தக் கதை எந்தப் பத்திரிகையில் பிரசுரமாகும்? தேவி? ராணி?

    பதிலளிநீக்கு
  12. ஆஹா! அப்பாதுரை பழையபடி ஃபார்முக்கு வந்துட்டார் போல! அருமையான பேய்க்கதை! திகிலுக்கும் பஞ்சம் இல்லை. ஆங்காங்கே இழையோடும் ஹாஸ்யத்துக்கும் பஞ்சமில்லை. முடிவும் அருமை. கடைசி இரு வாக்கியங்கள் மிக அருமை! கதை உயிரோட்டத்துடன் இருந்தது. ஆனாலும் ரத்தினத்தின் அப்பா இறந்து அவனுக்குக் கைக்கடிகாரம் கிடைச்சதை மனசு வருத்தத்துடனே ஏற்றுக் கொண்டது.

    பதிலளிநீக்கு
  13. பேயோட்ட காட்சிகளின் வர்ணனனை பிரமாதம்! மற்றவர்களின் பிரார்த்தனை விரைவில் நிறைவேறிவிட, கதாநாயகனின் வேண்டுதல் மட்டும் நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறது. அது சரி அந்த சூலக்கட்டி இப்போது எங்கே இருக்கிறது? எனக்கு சில வேண்டுதல்கள் இருக்கின்றன. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரைக்கால் ரெயில்வே ஸ்டேஷன் பக்கம் புதைந்து இருக்கலாம்.

      நீக்கு
  14. படித்ததற்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் முகம் மலர இனிய மாலை வணக்கங்கள்! இன்றைய திகில் கதை அருமை. இந்த கதையில் வருகின்ற superstitious atmosphere கதைக்கு அழகு சேர்க்கிறது! (Coleridge ன் கவிதை போல). நல்லதொரு கதையை எங்களுக்கு அளித்த திரு.அப்பாதுரை அவர்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  16. // ...எங்கப்பாரு எறந்து போய் இந்த வாச்சு எனக்கு வந்திருக்க வேணாம்டா"... //

    மனதை நெகிழ வைத்த வரிகள்...

    பதிலளிநீக்கு
  17. நிஜத்துல சூலக்கட்டி....ங்கறது வேற ஏதோ ஒன்னு.. போன ஜென்மத்தோட சம்பந்தப் பட்டது..

    அது இந்தக் கிழவனுக்குத் தெரியாததால சுண்ணாம்பு டப்பிய வெச்சிக்கிட்டு வெளையாடுனதால விஷயம் விபரீதமாப் போயிடிச்சி...

    பாவம் பசங்க!..

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    திகில் கதை அருமை. பேயோட்டிய சம்பவங்களை விவரிக்கும் போதே திகிலாகத்தான் இருந்தது. ஆனாலும் அத்தனை சிறப்புகள் நடைபெற்ற அந்த கோவில் விழாவில் இதற்குத்தான் முக்கியத்தும் தந்து ஜனத்தொகை கூடுதலாக குவிகிறது என்பதை பார்க்கும் மக்களுக்கு இந்த பேயோட்டும் சடங்கின்பால் உள்ள ஈர்ப்பு புரிகிறது அதே ஈர்ப்பு கதை முடிகிற வரை நமக்கும் இருந்தது. கடைசி முடிவு வரிகளை படிக்கும் போது மனசு திக், திக்கென இருக்கிறது. பிறகு என்ன ஆகுமோ? சுவாரஸ்யமான கதையை தந்த சகோதரர் அப்பாதுரை அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. வரக்கூடாத எடத்துக்கு சின்னப்பசங்கள வரவளைச்சு, வெளயாடிட்டுப் போயிருக்கு காட்டேறி, அந்த அர்த்தராத்திரில..

    பதிலளிநீக்கு
  20. பேயோட்டும் கதை சுவாரசியம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!