சனி, 28 ஆகஸ்ட், 2021

குழந்தை ஒன்றின் சிகிச்சைக்காக தான் பெற்ற பதக்கத்தை ஏலம் விட்ட மரியா

 கொரோனா காரணமாக சம்பாதிக்கும் தலைமையை இழந்த குடும்பங்களை தாங்கிப் பிடிக்கும் புனிதப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது சாரதா அறக்கட்டளை.  

சென்னையைச் சார்ந்த சாரதா அறக்கட்டளையின் நிறுவனராக உஷா ஸ்ரீதர் இருக்கிறார் தங்களுக்கு புகழோ விளம்பரமோ தேவைப்படாத பல நல்ல உள்ளங்களைக் கொண்டவர்கள் இவரோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்.  இவர்கள் அனைவரும் தங்களது வருமானத்தில் ஒரு பங்கை அறக்கட்டளைக்கு வழங்கி அதன் மூலம் சிறிதும் பெரிதுமாக தங்களால் முடிந்த நற்பணிகளை செய்து வருகின்றனர்.


========================================================================================================================

வீட்டில் சும்மா இருந்து பொழுதை கழிக்கும் பெண்கள் பலர் மத்தியில் உருப்படியாக நேரத்தை செலவிட்டு வருவது பற்றி கோவை பெண் அப்ரிதா: கல்யாணத்திற்கு பின், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 'செட்டில்' ஆகி விட்டேன். என் கணவர், 'ஷூ' தயாரிக்கும் நிறுவனம் வைத்து உள்ளார். அவரின் நிறுவனத்திலிருந்து காலணிகளை வாங்கி வந்து, சமூக வலைதளங்களில் எனக்கு பரிச்சயமான நண்பர்கள், உறவினர்களின் தேவைக்கு ஏற்ப, நிறம், 'டிசைன்' போன்றவற்றை மாற்றி 'பிசினஸ்' செய்கிறேன்.இதற்காக, 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில், 'காலணி' என்ற பெயரில் ஒரு பக்கத்தை திறந்து, அதில் நான் தயாரித்த காலணிகளின் படங்களை போட்டு வருகிறேன். 'ஆர்டர்'கள் குவியத் துவங்கி விட்டன. துவக்கத்தில் என் கணவரின் தொழிலில் ஒரு பகுதியாக இயங்கி வந்த நான், இப்போது தனியாக தொழில் நடத்தும் அளவுக்கு உயர்ந்து விட்டேன். சினிமா பிரபலங்கள் பலருக்கும், அவர்கள் விரும்பிய டிசைனில் காலணிகள் உருவாக்கிக் கொடுத்துள்ளேன். இப்போது, மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பிசினஸ் செய்கிறேன்.சென்னை பெண் சீரின்: படித்தது எம்.பி.ஏ., கல்யாணத்திற்கு பின், என் கணவர் நடத்தி வந்த 'ரெஸ்டாரென்ட்' பிசினசை பார்த்து வந்தேன். கொரோனா ஊரடங்கால் ரெஸ்டாரென்டை மூட வேண்டிய நிலைமை வந்து விட்டது.அந்த நேரத்தில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினேன். 

ஊரடங்கு தளர்வு அறித்த நாட்களில் மீன் வாங்க மக்கள் கூட்டம் குவிவதை பார்த்தேன். ஆன்லைனில் மீன் வியாபாரம் செய்தால் பலரும் வாங்குவரே என எண்ணி, இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதில் மீன்களை பட்டியலிட்டேன்.சென்னை காசிமேடு, கோவிலம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு, கடலில் அவர்கள் பிடித்து வரும் மீனை, 'பிரெஷ்'ஷாக என்னிடம் தர கேட்டுக் கொண்டேன்; அதன்படி அவர்களும் கொடுத்தனர்.முதல் நாள் இரவு வரை ஆர்டர்களை வகைப்படுத்தி, அவர்கள் விரும்பும் மீன்களை அதிகாலையில் வாங்கி வந்து, கழுவி சுத்தம் செய்து, சுகாதாரமாக 'பேக்' செய்து, குறிப்பிட்ட நேரத்தில் அவர்களின் வீடுகளுக்கு சென்று கொடுக்கும் தொழிலில் இறங்கினேன்.முதலில் ஒரு சில கிலோ மீன்களைத் தான் விற்க முடிந்தது. இப்போது தினமும் 75 கிலோவுக்கு மேல் விற்பனையாகிறது. இவ்வளவும் சென்னையின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பிசினஸ் செய்கிறேன்.வெறும் 30 ஆயிரம் ரூபாயில் துவங்கிய பிசினஸ் இப்போது, மாதம் 7 லட்சம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. சும்மா வீட்டில் இருந்தால் இவ்வளவு பணம் கிடைக்குமா... பெண்கள் தங்களால் இயன்ற தொழிலை, சமூக வலைதளங்களின் உதவியுடன் செய்தால் வெற்றி நிச்சயமே!

===============================================================================================

குழந்தை ஒன்றின் இருதய சிகிச்சைக்காக  ஒலிம்பிக்கில் கிடைத்த வெள்ளிப்பதக்கத்தை  ஏலம் விட்ட போலந்து நாட்டு விராங்கனை 

 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில், பெண்களுக்கான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மரியாதான் ( Maria Andrejczyk) இன்று விளையாட்டு உலகின் சென்சேஷன். தன்னுடைய செயலால் வானளவு உயர்ந்து நிற்கிறார்.


போலந்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்து எட்டு மாதமே ஆன மிலோசெக் மலிசா என்ற ஆண் குழந்தைக்கு உடனடியாக இருதய சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதற்கு தேவையான தொகை எவ்வளவு தெரியுமா? 3,85,088 டாலர். அதாவது, இந்திய ரூபாய்க்கு கிட்டத்தட்ட 3 கோடி. இந்த தகவலை பேஸ்புக் மூலம் அறிந்த மரியா, அந்த குழந்தைக்கு எப்படியாவது உதவி புரிய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு, ஒலிம்பிக் போட்டியில் தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார்.

எனினும், 3 கோடி ரூபாயில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை குழந்தையின் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் திரட்டி விட்டனர். மீதமுள்ள தொகையை தன் பதக்கத்தை ஏலம் விடுவதன் மூலம் திரட்ட முடிவு செய்தார். இதுகுறித்து அவர், "பதக்கத்தின் உண்மையான மதிப்பு என்றும் என் இதயத்தில் இருக்கும். பதக்கம் என்பது வெறும் பொருள் மட்டுமே. ஆனால், பலருக்கு அது மிகவும் மதிப்பு வாய்ந்தது. என்னுடைய வீட்டில் இருந்து தூசி அடைவதை விட இந்த வெள்ளிப் பதக்கம் ஒரு உயிரை காப்பற்றட்டும். அதனாலேயே நோய்வாய்பட்ட குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இதை ஏலத்தில் விட முடிவு செய்தேன்" என்று தன் பதக்கத்தை ஏலத்தை விடுத்தார்.

இந்நிலையில், போலந்து நாட்டைச் சேர்ந்த Zabka எனும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் 1,25,000 அமெரிக்க டாலர் செலுத்தி அவரது மெடலை ஏலத்தில் வென்றது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார் மரியா. குழந்தையின் பெற்றோரிடம் அந்த பணத்தையும் அவர் ஒப்படைத்தார். இதில் வியக்கத்தக்க மற்றொரு தகவல் என்னவெனில், ஏலத்தில் வென்ற அந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனம் வெள்ளிப் பதக்கத்தை மீண்டும் மரியாவிடமே கொடுத்துவிட்டது. இதுகுறித்து அந்த நிறுவனம், "மரியாவின் மனிதநேயத்தை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். டோக்கியோவில் வென்ற அவரது வெள்ளிப் பதக்கம் என்றும் அவரிடமே இருக்கட்டும்" என்று கூறி நெகிழ வைத்திருக்கிறது.

= = = = = ====================================================================================================
நான் படிச்ச கதை -  ஸ்ரீராம் 

விடை  - ஒரு வித்தியாசமான கதை.

சமீபத்தில் சிலிகான் ஷெல்பில் ஆர்வி பகிர்ந்த இந்த சிறுகதை என்னைக் கவர்ந்திருந்தது.  ஏதோ ஓர் வகையில், ஒரு கவர்ச்சியில்.   நாம் எல்லோருக்குமே சில மர்மங்களை அறிவதில் விருப்பமிருக்கும்.  பழங்கால ரகசியங்களை அறிவதில், அல்லது அது தொடர்பாக செல்லும்போது ஏற்படும் அனுபவங்களில்...

தருணாதித்தன் எழுதி இருக்கும் இந்தக் கதை சொல்வனத்தில் இருக்கிறது.  உங்களில் பலர் ஏற்கெனவே கூட இந்தக் கதையைப் படித்திருக்கலாம்.  தருணாதித்தன் யார் என்று எனக்குத் தெரியாது.  இப்போதுதான் படித்தேன் - ஆர்வியின் அறிமுகத்தில்.

எதிர்காலக் கதையாக சுஜாதா கூட திமலா போன்ற கதைகளை எழுதி இருக்கிறார்.  இது வேறு ரகம்.

கதையில் காலம் சொல்லப்படவில்லை.  உங்கள் யூகங்களால் அறிந்து கொள்ளலாம்.  ஆனால் முடிவு?

வங்கக்கடலில் அந்தமான் தீவுகளுக்குத் தெற்கே இருக்கும் திரிவிக்ரமன் தீவில் இருக்கும் ஸ்வாமியை சந்திக்கச் செல்கிறார்கள் ரஜினியும் சத்யாவும்.  அங்கு கிளம்பும்போதே மொபைல் போன் எல்லாம் முன்னரே வாங்கிவைத்துக் கொண்டு விடுகிறார்கள்.  இந்த ஸ்வாமியைப் பற்றி அறிய வருவதே ஒரு விதி.  அதாவது உங்களுக்குத் தெரியவேண்டும் என்று இருந்தால்தான் அவர் பற்றி நீங்கள் அறிவீர்கள்.  அதே போல சிரமம், அவர்களைத் தொடர்பு கொள்வதும், அவர்கள் இருக்குமிடம் செல்வதும். 

சத்யாதான் அதைக் கவனித்து விசாரித்தாள். “ அங்க போய்ப் பாருங்க, வாமன சுவாமியின் தத்துவம் மிக அரிதானது, த்ரிவிக்கிரமன் தீவு எல்லோரும் வாழ்க்கையில் பெற வேண்டிய அனுபவம் “ என்றார்.

“ அவங்க வெப் சைட் இருக்குதா ? இல்ல ஃபேஸ் புக்குல இருக்காங்களா ? 

“ அவங்க இன்டெர் நெட்டிலோ , டீவியிலோ, பத்திரிகைகளிலோ விளம்பரம் கொடுப்பது இல்லை”

“அப்ப எங்க விவரம் கிடைக்கும் ?”

“வேளை வரும்போது சுவாமி தானாக அழைப்பார் “

அழைப்பு வரும் முன் சில கேள்விகள் வரும்.  அதற்கு தரும் விடைகளை பொறுத்தே அழைப்பு வரும்.

இப்போது இவர்கள் கண்ணில் இந்த விளம்பரம் பட்டுவிட்டதால் இவர்களும் விதிக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்று சொல்லலாமா?  நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

வினாக்கள் வந்தன

 1. கையில் நூறு கோடி ரூபாய் பணம் இருந்தால் , வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வாய் ?
 2. உனக்கு ஆயுள் இன்னும் நூறு நாள்தான் என்றால் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வாய் ?
 3. அதற்குத் தடையாக இருப்பது எது ?

சத்யாவுக்கு அன்றைக்கே இரவில் தூக்கம் வரவில்லை. முதல் இரண்டு கேள்விகளுக்கு ஓரளவு பதில் தெரிகிற மாதிரி இருந்தது. உலகம் முழுவதும் சுற்ற வேண்டும், நடனம் கற்றுக் கொள்ள வேண்டும் அதுவும் ரஷ்ய நாட்டு பாலே, இமய மலையில் நதிக்கரையில் பாறை மேல் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும், ஏதாவது சரணாலயத்தில் அனாதையான விலங்குகளைப் பராமரிக்க வேண்டும், தெருவில் ஒரு வண்டியில் இட்லிக்கடை நடத்த வேண்டும், பட்டியல் நீண்டது. மூன்றாவது கேள்விக்கு விடை உறுத்தியது. நள்ளிரவில், விடியற்காலையில் விழித்துக் கொண்டு யோசித்தாள்.

திரிவிக்ரமன் தீவுக்கு சென்று விடுகிறார்கள்.  அவர்களை அழைத்துச் சென்ற ஹெலிகாப்டர் பறக்கும்போது அந்தத் தீவில் தெரியும் மாபெரும் பெருமாளின் சுண்டுவிரல் சைசில் இருக்கிறதாம்,.

ஒரு ஸ்வாமி வரவேற்கிறார் 

“ வாருங்கள், த்ரிவிக்கிரமன் தீவுக்கு நல்வரவு. இங்கே உங்களுக்கு நிறைய அனுபவங்கள் காத்திருக்கின்றன “ என்றார் புன்னகையுடன்.

அவர்களைத் தங்கும் குடிலுக்கு அழைத்துச் சென்றார்.

“இன்று மாலை நீங்கள் சங்கத்துக்கு வரலாம், அது வரை ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், இப்படியே கடற்கரையில் வேண்டுமானால் காலாற நடக்கலாம் “

அறை சுத்தமாக வசதியாக இருந்தது, அறையில் வெட்டி வேர் மாதிரி ஒரு மூலிகை வாசம்.

துறவி ஒரு பக்கம் இருந்த தண்ணீர்ப் பானையைக் காண்பித்தார். “ இதில் இருக்கும் தண்ணீரையே குடியுங்கள், இயற்கையான மலை அருவித் தண்ணீர். இங்கே மினரல் வாடர் பாட்டில்கள் கிடையாது “

தண்ணீரும் மூலிகை மணத்துடன் புத்துணர்ச்சியாக இருந்தது.

கடற்கரையில் நடந்து விட்டு மதிய உணவுக்குப் பின் அருவித் தண்ணீரைக் குடித்து விட்டு சுகமாக தூக்கம் வந்தது.

அந்த இடத்தைச் சுற்றி பார்த்தபின் மறுநாள் வாமன ஸ்வாமியைப் பார்க்கிறார்கள், அவர் உரையைக் கேட்கிறார்கள்.  அவர் அந்தத்தீவில் இரண்டு இடங்களுக்குச் செல்லச் சொல்கிறார்.  சில கேள்விகள், சந்தேகங்களுக்குப்பின் தனித்தனிக் குழுவாக இரண்டு இடங்களுக்குச் செல்கிறார்கள். 

சத்யா சென்ற இடத்தில தன்னையே மறக்கிறாள்.

மறுநாள் கேள்வி வருகிறது..  

“வாங்க, எங்க உங்கள் கணவர் வரவில்லையா ?”

“இல்ல அவர் கடற்கரையில் இப்படியே ஒரு நடை போனாரு “

“சொல்லுங்க உங்க அனுபவம் எப்படி இருந்தது ? எங்கல்லாம் போனீங்க ?”

“வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அனுபவம், மிக்க நன்றி “

“ மறுபடியும் அனுபவத்துக்கு விருப்பமா ?”

“கட்டாயம், எனக்கு இங்கேயே இருந்து விட வேண்டும் என்று தோன்றுகிறது

“அப்படித்தான் நிறையபேர் கேட்கிறார்கள், நீங்கள் யோசித்து செய்ய வேண்டிய முடிவு “

இதை எதிர்பார்க்காத சத்யா யோசித்து சில கேள்விகள் கேட்கிறாள்.  பின்னர் அவள் சொல்வது எதிர்பாராதது!

இங்கு சென்று படித்துப் பாருங்களேன்...

= = = = 

39 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
  எப்பொழுதும் நல்ல செய்திகளே நம்மை வந்தடைய
  இறைவன் அருள வேண்டும்.
  சகோதரி கமலா ஹரிஹரன், அன்பின் கீதா சாம்பசிவம்
  இன்னும் எல்லோரும் சீக்கிரம் குணமடையப்
  பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலமடைய பிரார்த்திப்போம். வாங்க வல்லிம்மா.. வணக்கம்.

   நீக்கு
 2. திருமதி ஷிரீன் மற்றும் அப்ரீதாவின் முயற்சிகள்
  வெற்றி பெற்றது
  அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
  அவர்களின் உத்வேகம் எல்லோரையும் சென்று அடையட்டும்.
  வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  போலந்து வீராங்கனையைப் பற்றி ஊடகங்களில்
  படித்தேன்.

  ஒலிம்பிக் கொண்டு வந்த நற்செயல்
  என்றும் நிலைத்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. தருணாதித்தன்...கிருஷ்ணன்?
  கதை மிக மிக வித்தியாசம். முடிவை

  முடிக்காமல் ஆச்சரியப் பட வைத்திருக்கிறார்.
  இன்னோரு நபர் அதாவது கேள்வி கேட்டவர் ரஜினியாகத்
  தான் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //முடிக்காமல் ஆச்சரியப் பட வைத்திருக்கிறார்.  இன்னோரு நபர் அதாவது கேள்வி கேட்டவர் ரஜினியாகத்தான் இருக்க வேண்டும்.//

   ஹா..  ஹா..  ஹா... 
    
   கிருஷ்ணன்?  பி ஏ கிருஷ்ணனா? 

   நீக்கு
  2. அந்தக் கதைக்கு வந்த பின்னூட்டங்களில்,
   கிருஷ்ணன் என்று ஒருவர் அழைத்திருந்தார்.
   அதனால் சொன்னேன்.மா.பி ஏ .கிருஷ்ணனாக இருக்குமோ?

   நீக்கு
  3. தெரியவில்லை அம்மா...   யாரோ நா(ம்)ன் அறியாத எழுத்தாளர்!

   நீக்கு
 4. சொல்வனம் மீண்டும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
  இது மாதிரிக் கதைகளை சமீபத்தில் படிக்கவில்லை. அந்தத் தீவின் விவரங்கள்

  ஆச்சரியப் பட வைக்கின்றன.
  மிக மிக நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா.  நானும் கொஞ்ச நாட்களுக்கு முன் படித்தேன்.  ஜீவி சார் ஆரம்பித்த நான் படிச்சா கதையில் பகிர இது ஒருஆய்ப்பாக அமைந்தது.  முன்பு இப்படி ரசித்த, எரிச்சலடைந்த கதைகளை வியாழனில் பகிர்ந்திருக்கிறேன்.

   நீக்கு
  2. ரசித்த, எரிச்சலடைந்த கதைகளை :)))))))))))))உண்மைதான், கதை என்றால் ஒரு முடிவு தீர்மானம்
   வேண்டும்.
   நாம யோசிக்கிறதுக்கு இவர் கதை எழுதுவானேன்:)))

   நிறைய ரசிகர்களுக்குப் பிடித்திருக்கலாம்.
   நன்றாக எழுதி இருக்கிறார்.

   நீக்கு
  3. இந்தக் கதை நான் ரசித்த கதைதான் அம்மா...  உங்களால் ஒரு முடிவுக்கு வரமுடியாது.  என்ன வேண்டுமானாலும் யூகிக்கலாம்!

   நீக்கு
  4. ஶ்ரீராம்.... கர்ர்ர்ர்ர்ர்... நேரம் கிடைத்தால். நான் எழுதி அனுப்பி உங்களைக் கடுப்பேற்றுகிறேன்.

   நீக்கு
  5. Haahhhaaahhaa. Please write ma Ne tha. ada! your first letters sound like Netha!!!!leader.

   நீக்கு
 5. கதையின் நடை வித்தியாசம். ஏதோ புதிதாகச் சொல்லப் போகிறார் என்று பார்த்தால்... முடிவில்லாத முடிவு.

  நித்தியானந்தாவின் நாடு மனதில் வந்து போனது.

  கடைசி அத்தியாயம் (அல்லது க்ளைமாக்ஸ்) எழுத்த் தெரியாமல் மர்ம நாவல்களை ஸிட்னி ஷெல்டன் எழுதியிருந்தால் இரண்டு நாவல்களுக்கு மேல் அவரால் எழுதியிருக்க முடியுமா எனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 6. சுவர்க்கம் - ஒரு சில மதங்களில் இதன் விளக்கம் மிக அசிங்கமாக, மூன்றாம் தரச் சிந்தனையாக இருக்கிறது.

  சுவர்க்கம் என்பதற்கு ஒவ்வொருவர் மனதிலுமே வெவ்வேறு விளக்கம் எதிர்பார்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். பலருக்கும் தங்கள் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலம்/பகுதி சுவர்க்கமாகத் தோன்றும், இதில் சோகம் என்னன்னா, அந்த "சுவர்க்க" ப் பகுதியில் அந்தச் சமயத்தில் எல்லையில்லாத சந்தோஷத்தை அனுபவித்திருப்பார்களா? உணர்ந்திருப்பார்களா? - புதன் வாசகர் கேள்வி

  பதிலளிநீக்கு
 7. புதன் - 1. எனக்குப் பிடித்து எல்லோருக்கும் பிடிக்கணும் என மனித மனம் ஏன் எதிர்பார்க்கிறது? அப்படிப் பிடிக்கவில்லையானால், ஏன் குறை கூற விழைகிறது,

  2. சுவர்க்கம், நரகம் என்பதற்கு விளக்கம், உங்கள் பார்வையில்?

  3. நம் இரத்த சொந்தங்களால் வெறுக்கப்படுவதைவிட நரகம் கஷ்டமாக இருக்குமா? எல்லோராலும் விரும்பப்படுவதைவிட சுவர்க்கம் நன்றாக இருந்துவிட முடியுமா?

  4. 50 ரூபாய் கொடுத்தால் ஒரு கட்டு கீரை, 1கிலோ வெண்டை, 1/2 கிலோ கத்தரி (மூன்றும் சேர்த்து) வாங்கிவிட முடியும்போது, மனித மனம், ஏன் 300 ரூபாயும், உழைப்பும் சேர்த்து இதில் பாதியை அறுவடையாக வீட்டுத் தோட்டத்தில் அறுவடை செய்து மகிழ எண்ணுகிறது?

  5. எழுதி எழுதி (வடுவூர் துரைசாமி ஐயங்கார். திஜர..... சாரு நிவேதிதா வரை....) எழுத்தாளர்கள் சாதித்தது என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்கு முந்தைய பின்னூட்டத்தில் உள்ள கேள்வியையும் சேர்த்துக்கோங்க

   நீக்கு
 8. மரியா செய்தது மிக மிகச் சரியான செயல். எந்தப் பொருளுக்கும் மதிப்பில்லை, காலத்தினால் அது பிறருக்கு உபயோகப்பட்டாலொழிய....


  ஆனால் இதைவிட தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்துகொண்ட செயல் மிகப் பெரிது.

  இரண்டுமே சக உயிரைக் கௌரவப்படுத்தும் செயல்.

  அது சரி...மிலியனுக்கும் அதிகமாகச் செலவழித்துப் பெறப்பட்ட பதக்கத்தின் விலை பத்தில் ஒரு பங்குதானா?

  பதிலளிநீக்கு
 9. கதையின் முடிவை வாச்கிகப் போகிறேன் ஜி

  பதிலளிநீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  எங்கெங்கும் நலம் சூழ்வதற்கு வேண்டிக் கொள்வோம்...

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 12. சாரதா அறக்கட்டளை நிறுவனர் உஷா ஸ்ரீதர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  கோவை பெண் அப்ரிதாவுக்கு வாழ்த்துக்கள்.
  மரியாவின் மனித நேயம் வாழ்க !


  பதிலளிநீக்கு
 13. சாரதா அறக்கட்டளை மேன்மேலும் சிறப்படைய வேண்டும்.. நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. போலந்து வீராங்கனை மரியா செய்ததைப் பற்றிப் படித்த போதே மனம் நெகிழ்ந்தது...

  பதிலளிநீக்கு
 15. செய்திகள் அருமை... முடிவில் கொடுத்த இணைப்பிற்கு செல்கிறேன்...

  பதிலளிநீக்கு
 16. இந்த பாசிட்டிவ் உங்கள் கண்ணில் படாமல் எப்படிப் போனது.

  http://aarurbass.blogspot.com/2021/08/blog-post_27.html


  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன் சில வாரங்களுக்கு முன்பு. செய்தி பழைய செய்தியாக இருந்ததால் இந்த வார செய்திகள் பகுதியில் சேர்க்கவில்லை. சின்னி ஜெயந்த், சார்லி எல்லோரும் வித்தியாசமான பாஸிடிவ் மனிதர்கள்.

   நீக்கு
 17. கதை படித்து இருக்கிறேன் ஸ்ரீராம். வெங்கட் இந்த கதை சுட்டி கொடுத்து இருந்தார் ஒரு முறை என்று நினைக்கிறேன். அப்போது போய் படித்தேன்.

  வித்தியாசமான முடிவு.

  பதிலளிநீக்கு
 18. கதை போய்ப் படிக்கணும். நல்ல செய்திகளில் அனைவருமே இந்த வாரம் பெண்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் ஒரு வார வாழ்க்கை நிகழ்ச்சியை எழுதுங்க என்று யாரேனும் சொன்னால், காலைல பல் தேய்த்தேன், முகம் அலம்பிக்கொண்டேன், சாயந்திரம் முகம் அலம்பி, கால் அலம்பிக்கொண்டு பூஜை அறையில்.... என்றெல்லாம் தினம் நடக்கும் விஷயங்களையா எழுதுவீங்க? அபூர்வமா பெண்களும் நல்ல செய்திகளில் அடிபடும்போது அதனை முதன்மையா செய்தில வெளியிடறாங்க. ஆண்கள்தான் அனேகமா எல்லோரும் நல்லவர்கள்தான் இல்லையா?

   நீக்கு
 19. ரஜினிக்காக சத்யாவும், சத்யாவுக்காக ரஜினியும் கேட்டிருக்கலாமோ? கதை நல்ல விறுவிறு. சத்யாவின் அனுபவங்கள் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 20. சாரதா அறக்கட்டளையின் சேவை சிறப்பானது. வீட்டில் இருந்தபடியே ஆன் லைனில் மீன் வியாபாரம் செய்து சம்பாதிக்கும் அப்ரிதா பாராட்டுக்குரியவர். ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற தான் ஒலிம்பிக்சில் பெற்ற வெள்ளி பதக்கத்தை ஏலம் விடுத்த துணிந்த மரியா பிரமிப்பூட்டுகிறார். அதை ஏலத்தில் எடுத்து, மரியாவின் பதக்கத்தை அவரிடமே திருப்பி கொடுத்த நிறுவனத்தை  பாராட்ட  வார்த்தைகளில்லை. 

  பதிலளிநீக்கு
 21. முன்னேறும் பெண்களையும் உதவும் கரங்களையும் வாழ்த்துவோம்.

  வித்தியாசமான கதை.

  பதிலளிநீக்கு
 22. சிறப்பான தகவல்கள்.

  படித்த கதை - சொல்வனத்தில் நானும் படித்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!