திங்கள், 23 ஆகஸ்ட், 2021

'திங்க'க்கிழமை :   கராச்சி அல்வா    - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 முன்பு என் அண்ணன் மும்பை ஹீராநந்தினில இருந்தபோது, அங்க இருந்த டி.மார்ட் சூப்பர்மார்க்கெட்டில், ஸ்வீட்ஸ் செக்‌ஷனில், மஞ்சள்-ஆரஞ்சு கலந்த நிறத்தில் துண்டு துண்டாக அல்வா இருக்கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் ஜவ்வு மாதிரி கொஞ்சம் புளிப்பா இருக்கும்.  அதற்குப் பிறகு மும்பைக்குப் போகும் சந்தர்ப்பம் இல்லாததால்அந்த அல்வாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். 

சமீபத்துல  கார்ன் மாவை வைத்து அல்வா பண்ணும் சில ரெசிப்பீஸ் படித்தேன். அப்போ எனக்கு கராச்சி அல்வா நினைவுக்கு வந்தது. சரி இன்று கராச்சி அல்வா செய்து பார்த்துடுவோம் என்று தோன்றியது.  மனைவிகிட்ட சொல்லிட்டு, செய்ய ஆரம்பித்துவிட்டேன்.  நினைத்தது போல வந்தது.  ரொம்ப அழகாகவும் இருந்தது.  உடனே திங்கக் கிழமை பதிவுக்கு எழுதி அனுப்பினேன்.


தேவையானவை

 

Corn Flour - 1 கப்

ஜீனி 1 1/2 கப் (இனிப்பு அதிகம் வேணும்னா 2 கப் எடுத்துக்கலாம்)

நெய் 1/4-1/2 கப்

மஞ்சள் ஆரஞ்சு நிறமி

கட் பண்ணின பாதாம் மற்ற நட்ஸ்

ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு 1 மேசைக்கரண்டி


ஜீனி பாகுக்கு 1 கப் தண்ணீர்

கார்ன் மாவைக் கரைத்து வைக்க 1 கப் தண்ணீர் (அல்லது சிறிது அதிகம்)


செய்முறை


1.  பாதாம் போன்ற நட்ஸ் நல்லா கட் பண்ணினது எடுத்து வச்சுக்கோங்க.  பிறகு அல்வாவை எந்தத் தட்டுல கொட்டப் போகிறோமோ அதில் நெய் தடவி வச்சுக்கோங்க.


2. கார்ன் மாவை (ஸ்டார்ச்சை) தண்ணீர் விட்டு கட்டி தட்டாமல் விஸ்க் வைத்து நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவும்.


3. கடாயில் ஜீனியையும் தண்ணீரையும் விட்டு சூடுபடுத்தவும். ஜீனி நன்றாகக் கரைந்த பிறகு அதில் லெமென் சாறைச் சேர்க்கவும்.  அது நன்கு கலந்த பிறகு, கரைத்து வைத்திருந்த கார்ன் மாவு கலவையை இன்னொரு தடவை கலக்கிவிட்டு கடாயில் விடவும். இப்போ கைவிடாம கலக்கவேணும். கார்ன் மாவு ஜீனியோடு கலந்து கெட்டியாக ஆரம்பிக்கும். 


4. இப்போ அதில் நிறமியைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.  அதனுடன் இரண்டு மேசைக்கரண்டி நெய் விட்டுக் கிளறவும்.


5. அவ்வப்போது நெய் விட்டு கிளறவும். இப்போது அதில் எடுத்துவைத்த நட்ஸில் பாதியளவும், ஏலக்காய் பொடியையும் சேர்த்துக் கிளறவும்.


6. ஒரு கட்டத்தில் நெய் பிரிய ஆரம்பிக்கும். கலவை முழு அல்வா பதத்திற்கு வந்துவிடும்.  கலவையும் கண்ணாடி போல பளபளக்கும். கடாயில் ஒட்டாமல் வழுக்கிக்கொண்டிருக்கும்.


7. இந்த ஸ்டேஜில் அடுப்பை அணைத்துவிட்டு, கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டிவிடவும். 


8. மெதுவாக மேற்புறத்தை ஸ்பூனினால் சமப்படுத்திவிட்டு, அதன் மேல் மீதி உள்ள நட்ஸைத் தூவவும்.


9. இதை அப்படியே 1-2 மணி நேரம் விட்டுவிட வேண்டும். கலவையின் சூடு முழுமையும் குறையணும்.


10. ஒரு தட்டில் இதனை கவிழ்த்துவிட்டால் (நான் ஒரு ப்ளேட்டை அல்வா இருந்த தட்டின் மேல் வைத்து தலைகீழாகத் திருப்பி மேடையில் வைத்து மெதுவாக நெய் தடவிய தட்டை எடுத்துவிட்டேன். அல்வா ஜம் என்று ஒரு இஞ்ச் தடிமன்ல கேக் மாதிரி தட்டில் விழுந்துவிட்டது) கேக் மாதிரி விழும். பிறகு கத்தியினால் சதுரமாக கட் பண்ணிடவேண்டியதுதான்.  அல்வாவை துண்டு துண்டுகளாக எடுக்கும்போது மேல் பகுதியில் நாம் முன்பு தூவிய நட்ஸ் ஒட்டிக்கொண்டு அழகாக இருக்கும்.


எனக்கு எப்போதுமே கொஞ்சம் ஜவ்வு மாதிரி அல்வா இருந்தால்தான் பிடிக்கும். ஆனால் இந்த அல்வா அப்படி ஜவ்வு மாதிரி இருக்காது. வாயில் போட்டுக்கொண்ட உடனேயே அருமையாக கரைவதுபோல சூப்பரா இருக்கும் (ஆனால் என் விருப்பம் அதுவல்ல).  என் பசங்க, ஆளுக்கு மிகச் சிறிய துண்டை, நான் விரும்பிக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எடுத்துக்கொண்டார்கள்.  எப்போதும்போல, பக்கத்து பில்டிங்கில் இருக்கும் மாமியாருக்கும், ஷட்டகர் வீட்டிற்கும் கொடுத்து அனுப்பினேன்.


 ரொம்ப சுலபமான ரெசிப்பி இது. அரை மணி நேரத்துல பண்ணிடலாம் (துண்டு போடத்தான், அது ஆற 1 மணி நேரத்துக்கு மேல ஆகும்)  உங்களுக்கு இனிப்பு பிடிக்கும், ஜவ்வு மாதிரி இழுக்கும் அல்வா பிடிக்காது, சுலபமா செய்யக்கூடியதா இருக்கணும் என்றால் கராச்சி அல்வாவைச் செய்துபாருங்கள்.  

60 கருத்துகள்:

 1. இந்த முறையில் தான் கோழிக்கோடு ஹல்வா செய்வார்கள். கார்ன் பிளவருக்கு பதில் மைதா, நெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பார்கள். திருநெல்வேலி ஹல்வா நாக்கில் வழுக்கிக்கொண்டு இறங்கும். இந்த ஹல்வா கேக்குக்கு அண்ணன், மைசூர் பாக்குக்கு தம்பி. கடித்து சாப்பிடவேண்டும்.  ஒரு முறை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் செய்த 30 நாள் 30 ஹல்வா என்ற இலவச இணைப்பு மங்கையர் மலருடன் கொடுத்தார்கள். அதில் பச்சை மிளகாய் ஹல்வாவும் அடக்கம். 

  https://www.tarladalal.com/recipes-for-halwa-755

  https://indianfoodcritic.net/2018/03/29/27-types-of-halwa/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று முதல்வராக வந்திருக்கும் ஜெயக்குமார் சாருக்கு வாழ்த்துகள்.

   கோழிக்கோடு அல்வா ரொம்பவே கெட்டியாக இருக்கும். எனக்குப் பிடித்தமானது. குருவாயூர் செல்லும்போதெல்லாம் நான் இதனை வாங்குவேன்.

   திருநெவேலி அல்வா - அதன் சுவை சொல்லி மாளாது. சூப்பரோ சூப்பர். ஆனா பாருங்க, இரண்டு நாள் முன்பு என் பெண், அவளுடைய ஆபீஸ் நண்பன் சென்னைக்குச் சென்றிருந்தபோது கொடுத்தான் என்று அரைக்கிலோ அல்வா கொண்டுவந்து கொடுத்தாள். (நெய்/வனஸ்பதி, ஜீனி). எனக்கென்னவோ அதைச் சாப்பிடும் ஆசை போய்விட்டது.

   நீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  நல்ல இனிப்புடன் துவங்கி இருக்கும்
  இந்த நாளும் எல்லா நாட்களுக்கும்
  இறைவன் அருளால் நல்லதாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... நாம என்னவோ இறைவனிடம் வேண்டுவதில் குறையில்லை. ஆனால் அவர் கொடுக்கும் வரம்தான் அவர் சரியா செலெக்ட் பண்ணித் தருவதில்லையோ என்று தோன்றுகிறது

   நீக்கு
 3. நெல்லைத்தமிழனின் கராச்சி அல்வா மிக நன்றாக
  வண்ணமயமாக வந்திருக்கிறது.

  எனக்கும் கடித்து விழுங்கும் அல்வாதான் பிடிக்கும்.
  போனவாரம் வெள்ளிக்கிழமைக்குக்
  கோதுமை மாவு அல்வா செய்தேன்.
  இதே போலக் கரைத்துக் கொண்டு
  சர்க்கரைக் கரைசலில் சேர்த்து
  நெய்யுடன் செய்து மஹாலக்ஷ்மிக்கு ப்ரீதியாகப்
  படைக்க முடிந்தது.

  கார்ன் ஸ்டார்ச் அல்வாவும் மிக அருமையாக
  வந்திருக்கிறது.
  இத்தனை சிரத்தையுடன் நீங்கள் செய்வதைப்
  பார்க்கும் போது மிக மிக ஆச்சரியமாக இருக்கிறது.
  உங்கள் குடும்பத்தார் கொடுத்து வைத்தவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... கோதுமை அல்வாவை எதனாலும் மிஞ்சிவிட முடியாது. நீங்க சூப்பரா செய்திருப்பீர்கள்.

   எனக்கு மூடு வந்து நான் கிச்சனில் போய்ச் செய்வதுதான். சென்ற வாரம் பலாப்பழச் சுளைகளை வைத்து சக்கவரட்டி செய்தேன். பலாப்பழம் வேகவே இல்லாததால் சரியாக வரவில்லை. சீசனில் 50 ரூபாய்க்கெல்லாம் (ஏன்..30 ரூபாய்க்கும்) பலாப்பழம் வாங்கினேன். கடைசியாக வாங்கிய பழம், பழமாக ஆகவில்லை. அதனால்தான் சரியாக வரவில்லை. இனி அடுத்த சீசனில்தான் (மார்ச்) பலாப்பழம் வாங்க முடியும்.

   நீக்கு
  2. நான் செய்வது எல்லாம் கொஞ்சம் அப்படி இப்படித்தான் பல நேரங்களில் வந்துவிடும். ஆனால் கிச்சனை நீட்டாக சுத்தம் செய்துவிடுவேன். அப்போ அப்போ பாத்திரங்களை அலம்பிவைத்துவிடுவேன்.

   இப்போதைக்கு இனிப்புகள் செய்யவில்லை. தேங்காய் அல்லது கடலைப்பருப்பு சீயன் பண்ணணும்.

   நீக்கு
 4. அத்தனை படங்களும் அற்புதமாக வந்திருக்கிறது.
  இத்தனை துண்டு துண்டாகப்
  பொறுமையுடன் செய்திருக்கிறீர்கள்.
  மனம் நிறை வாழ்த்துகள் முரளிமா.

  பதிலளிநீக்கு
 5. பெருமாள் பெட்டியும் மலர்களும் வெகு அழகு.மிக ரசித்தேன் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த சமயத்தில், நாங்கள் வைத்திருக்கும் சிறிய மல்லிகைச் செடியிலிருந்து நிறைய பூக்கள் பூத்தன. இல்லையென்றால் எப்போதும்போல ரோஜா பூக்கள் மட்டும்தான் வைத்திருப்பேன்.

   நீக்கு
  2. நாங்க கொடுத்த ராமர் கூட இடம் பெற்றிருக்கார் போலவே! சந்தோஷமாக இருக்கு. அவர் தானே இவர்? வேறேயா?

   நீக்கு
 6. மிகவும் அழகாக வந்து இருக்கிறது திருநெல்வேலியின் கராச்சி ஹல்வா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லையின் கராச்சி அல்வா... அட..இந்தப் பெயர் புதுமையாக இருக்கே.

   வாங்க கில்லர்ஜி

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நிறுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு தொடர்ந்து நின்று அனைவர் வாழ்விலும் எப்போதும் போல் சகஜமான நடைமுறை தொடங்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... நாமும் ப்ரார்த்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். கொரோனா போகட்டும் என்று ப்ரார்த்தித்தால் கொரோன 2.0வை அனுப்பிடறார். அது போகட்டும் என்றால் டெல்டா வேரியேஷனாம்... இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வேறு வியாபாரம் கிடைக்கும்வரை இது தொடருமோ?

   நீக்கு
 8. இன்றைய தினம் சஹஸ்ர காயத்ரி செய்யும் அனைவரும் உலக க்ஷேமத்திற்காகவும் ஆரோக்கியத்துக்காகவும், அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறந்துவிட்டேன் கீசா மேடம்... இருந்தாலும் சொல்கின்றன் சர்வே பவந்து சுகின:... வுக்கும் அதே அர்த்தம் தானே

   நீக்கு
 9. நெல்லைத் தமிழர் ஆசைப்பட்டாப்போல் காலையிலேயே இன்னிக்கு வந்துட்டேன். வயிறு பிரச்னை ஓரளவு குறைந்தாலும் மருந்துகள் தொடர்வதால் மறுபடி பிரச்னை ஆரம்பிக்குமோ என்னும் கவலையும் இருக்கு. பார்ப்போம். என்னோட புலம்பல் தனியாக வைச்சுக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைவேற்ற மறந்த பிரார்த்தனை ஏதேனும் உளதோ கீதாமா?

   வைஷ்ணவி

   நீக்கு
  2. வாங்க வைஷ்ணவி. அப்படி எல்லாம் நான் பிரார்த்தித்துக் கொள்வதில்லை. அதிகம் போனால் ஶ்ரீராமஜயம் ஜபிக்க ஆரம்பிப்பேன். ரெங்க ரெங்க ரெங்கா என்பேன். வேண்டுதல்னா இங்கே கொஞ்சம் தள்ளிக் கோயில் கொண்டுள்ள பிள்ளையாருக்கு ஒரு தேங்காய்(சிதறு காய்) இல்லைனா கொழுக்கட்டை நிவேதனம். இதான் என்னால் முடிஞ்சது. இது எதுவும் இல்லைனா குலதெய்வத்துக்கும், பிள்ளையாருக்கும் காசு எடுத்து வைப்பேன்.

   நீக்கு
  3. எனக்கு கால்வலிக்கு, சனிக் கிழமை தோறும் ஆஞ்சநேயர் சன்னிதிக்கு நல்லெண்ணெய் விளக்கேற்ற, கொடுக்கச் சொன்னாங்க, ஒன்பது முறை ஆஞ்சநேயர் சன்னிதியை வலம் வரச் சொன்னாங்க.

   நீக்கு
 10. இங்கே ஶ்ரீரங்கத்தின் உள் வீதியில் உள்ள காடரர் ரமேஷ் அடிக்கடி கார்ன்ஃப்ளவர் அல்வா செய்வார். வாங்கிச் சாப்பிட்டதில்லை. பண்ணியும் பார்க்கலை. நெல்லையின் விடா முயற்சியும் ஆர்வமும் ஆச்சரியப்பட வைக்கிறது. அல்வா பார்க்கவும்/ருசிக்கவும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன். ஒரு பத்து நாட்கள் அவர் வீட்டில் "பெண்"களூரில் தங்கி அவருடைய விதம் விதமான சமையலைச் சாப்பிடணும்னு ஆசை. எங்காவது போய் ஒளிஞ்சுக்காமல் இருக்கணும். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடிகைகளின் படங்களைப் பார்த்துவிட்டு ஜொள் விட்டுக்கொண்டு, மேக்கப் போடாத அவர்களைப் பார்த்து வீறிட்டு அலறுவதைப் போல ஏதேனும் நடக்காமல் இருந்தால் சரிதான்.

   இந்த ஊரில், சாதாரண ஹோட்டல்கள் அனைத்திலுமே, ஏதேனும் இனிப்பு காலை உணவிற்கு தினமுமே உண்டு (கேசரி அல்லது கேரட் அல்வா). சென்னைல அப்படிக் கிடையாது.

   அல்வா பார்க்க சூப்பராக இருந்தது. ருசி.... எங்களுக்குப் பிடிக்கலை. எனக்கு ரப்பர் மாதிரி இருந்து, வாயில் கொஞ்சநேரம் வைத்துக்கொள்ளும்படி இருந்தால்தான் பிடிக்கும்.

   நீக்கு
  2. தமிழ்நாடு/ஆந்திரா தவிர்த்த மற்ற மாநிலங்களில் காலை உணவோடு இனிப்புக் கட்டாயம் இருக்கும் நெல்லை. வடக்கே போனால் விதம் விதமாகக் கொடுப்பாங்க. அதிர்ஷ்டம் இருந்தால் சூடான ஜிலேபிகள் (ஜாங்கிரி அல்ல) கிடைக்கும். சுடச் சுட ஜிலேபியைச் சாப்பிட்டுவிட்டுக் கூடவே ஆலு மடருடன் பூரி அல்லது பராந்தா சாப்பிட்டுவிட்டுத் தேநீர் குடிச்சால் சொர்க்கம். வடக்கே மட்டும் நோ காஃபி! காஃபி நன்றாகக் கலந்துட்டு மேலே கோகோ பவுடர்(வெங்கட் சொன்னார்) தூவிக் கொடுத்துடுவாங்க. குமட்டும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  3. காலைல பூரி பராந்தாவா? ஐயஹோ.... பொங்கல் ஜிலேபி, இட்லி ஜிலேபி காம்பினேஷனே நல்ல இருக்கும் போலிருக்கே. (பெங்களூர் கேசர் bபாத்துக்கும் நம்ம ஊர் கேசரிக்கும் ரொம்ப வித்தியாசம்)

   நீக்கு
  4. ஹாஹாஹா, பின்னே? வடக்கே இட்லி, சாம்பாரா எதிர்பார்க்க முடியும்? அதிலும் அயோத்தி போன்ற நகரங்களில்?

   நீக்கு
  5. எனக்கெல்லாம் எப்போதாவது காலையில் பூரி மசால்னா ஓகே (அதுக்கும், தொண்டையில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு போக, நான், அந்த மினி டிபனுடன் கொடுக்கும் காப்பியை உள்ளே தள்ளுவேன்). மற்றபடி, நம்ம ஊர் காலை உணவுபோல வருமா?

   நீக்கு
 11. பாம்பே ஹல்வா நிறையவே சாப்பிட்டிருக்கோம். பாம்பேயாக இருந்தப்போவிருந்தே உறவினர்கள் வாங்கி வருவாங்க. கோதுமை அல்வா மாதிரி இருக்காது. துண்டமாக இருக்கும். லேசான புளிப்புச் சுவையுடனும் இருக்கும். ஆனால் எங்க வீட்டில் கோதுமை அல்வா கிளறும்போதும் சர்க்கரைப் பாகில் எலுமிச்சைச் சாறு சேர்ப்பது உண்டு. என்னதான் இருந்தாலும் பாதம் அல்வா, முந்திரி அல்வா, கோதுமை அல்வாவுக்குப் பின்னரே மற்றவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாதாம் அல்வா - எனக்குப் பிடிப்பதில்லை. முந்திரி அல்வா என்று ஒன்று கிடையாது. கோதுமை அல்வாவில், முந்திரியை அள்ளிப்போட்டுக் கிளறினால் முந்திரி அல்வாவாகிவிடும்.

   காசி அல்வா - சூப்பர். கேரட் அல்வா-நம் முறையில் சூப்பராகப் பிடிக்கும். ஒரே கோவாவைச் சேர்த்துக் கிளறி வட இந்தியர்களைப்போலச் செய்வது பிடிக்காது. கேரளாவின் அரிசி அல்வாவும் நன்றாக இருக்கும். கோழிக்கோடு அல்வா, செங்கலை அடுக்கினார்ப்போல் இருக்கும், எனக்கு ஓரளவுதான் பிடிக்கும்.

   அல்வா சிறிது புளிப்புச் சுவையுடன் இருந்தால் சூப்பரோ சூப்பர்.

   இப்படி இனிப்பு என்றால் ஜொள்விட்டால், எப்போது டயபடீஸ் வருமோ என்று பயம்ம்ம்ம்ம்ம்ம்மாக் கீது

   நீக்கு
 12. நெல்லைத்தமிழர் ஒரு மாசத்துக்குக் கான்ட்ராக்ட் எடுத்திருக்காரா "திங்க"ற கிழமையை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியெல்லாம் எ.பி ல எதுவும் நடக்காது. அவங்க இ.பி (மின்சாரத் துறை) மாதிரி, எப்போ மீட்டர் செக் பண்ணுவாங்க என்று அவங்களுக்கே தெரியாதது போல, எப்போ வெளியிடுவாங்க, எப்போ இடைவெளியிடுவாங்க என்பதும் எபி ஆசிரியர்களுக்குத் தெரியாது..ஹாஹா

   நீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 14. அனைவருக்கும் காலை வணக்கம்.
  கார்ன் ஹல்வா நன்றாக வந்திருக்கிறது. அதுதான் கராச்சி ஹல்வாவா? முன்பெல்லாம் சென்னையிலிருந்து மஸ்கட்டிற்கு டைரக்ட் ஃப்ளைட் கிடையாது. சென்னை-மும்பை-மஸ்கட் என்று செல்ல வேண்டும். மும்பையில் இருந்த நாத்தனார் வீட்டில் தங்கி விட்டு ஏர் போர்ட் செல்லும் வழியில் சயானில் ஒரு கராச்சி வாலா
  கடையில் ஹல்வா வாங்கிக் கொண்டு போவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன்... மும்பை என்றதும் என்ன என்னவோ நினைவுகள்.... அங்கு ஏர்போர்ட்டில் இருக்கும் சிறிய இனிப்புக் கடையில் (செக் இன்னுக்கு முன்பே இருக்கும்) அந்தக் காலத்தில் இனிப்புகள் வாங்கியது நினைவுக்கு வருகிறது.

   நீக்கு
 15. கராச்சி அல்வா செய்முறை குறிப்புகள் அருமை.
  செய்முறை படங்கள் எல்லாம் அழகு.
  அல்வா பார்க்கவே அருமை. ருசியும் நன்றாக இருந்து இருக்கும்.
  உறவுகளுக்கு கொடுத்து வந்தது மகிழ்ச்சி.
  அவர்கள் எல்லோருக்கும் பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
  வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம்....... நான் எப்போதும் இனிப்புதான் செய்வேன். ஆனால் சாப்பிடத்தான் கஸ்டமர்கள் கிடையாது.

   நீக்கு
 16. கார்ன் ஹல்வா ரெசிபி இன்னும் வேறு இரு தளங்களிலும் கூட வந்திருந்தது. என் சகோதரியும் செய்வது மிகவும் சுலபம் என்றாள். செய்து பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பல தளங்களுக்குச் செல்வதில்லை. நேரமே கிடைக்காது. எபி மாத்திரம் (அதுவும் சமீப காலங்களில் சில நாட்கள் தவறுது) அனேகமாக தினமும் சென்று பார்ப்பேன் (அதில் வரும் தளங்களையும்தான்... துரை செல்வராஜு, அனு ப்ரேம் குமார் தளங்களுக்குப் போய் நிறைய நாட்களாகிவிட்டன. )

   நீக்கு
 17. உறவுகள் யாராவது கடன் கேட்டார்களா? அல்வா கொடுத்து விட்டீர்கள். TTV செய்தது போல.

  https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-supporters-gave-halwa-rk-nagar-voters-307343.html
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க அப்பா, என் சிறிய வயதிலேயே சொல்லியிருக்கார். நண்பர்கள் கடன் கேட்டால் 2 ரூபாய்க்கு மேல் கொடுக்காதே. நிச்சயம் திரும்பி வராது என்று நினைத்துக்கொள். கடன் கொடுக்காதே, கடன் எந்தச் சமயத்திலும் வாங்காதே.. சில நேரங்களில் கடன் கொடுத்துவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன் (சார்.. பணமில்லை என்றா மனது இளகிவிடும். இவரை ஏமாற்றலாம் என்று நினைப்பதுபோல் இருந்தால்தான் எனக்கு மன உளைச்சலாகிவிடும்).

   கடன் வாங்கியிருந்தால் (வங்கிக் கடன்), பெங்களூரில் பெரிய இடங்கள் இரண்டாவது வாங்கிப்போட்டிருக்கலாம். எவ்வளவோ தடவை என் மாமனார் சொல்லியும், நான் கடன் வாங்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். சேர்த்த பணத்துக்கேற்ற சிறிய இடம் போதும் என்றே சொல்லி, அவரை 1/2 கிரவுண்டு வாங்க வைத்தேன்.

   டி.டி.வி. தினகரன், ஆர்.கே நகரில் செய்தது ஏமாற்று வேலை. அதனால் அவர் மீதான நம்பிக்கை போனதுதான் மிச்சம்.

   நீக்கு
 18. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 19. இந்த கராச்சி ஹல்வா மிகவும் பிடித்தமானது. சாப்பிட்டிருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜு சார்... குவைத்தில் ராஜஸ்தானி இனிப்புக் கடை மற்றும் தங்கின ஹோட்டல் அருகிலிருந்த இனிப்புக் கடையில் நான் அங்கு வரும்போதெல்லாம் இனிப்புகள் வாங்குவேன்.

   நீக்கு
 20. பதில்கள்
  1. நன்றி ஜம்புலிங்கம் சார்... எப்போது வெளியூர் பிரயாணம் மேற்கொள்ளலாம் என்று தைரியம் வருகிறதோ, அப்போது கும்பகோணத்திற்குத்தான் என் முதல் வருகை.

   நீக்கு
 21. கார்ன் ஃபிளவர் அல்வா பார்க்கவே மிக அழகு! ருசியும் அது போலவே அருமையாக இருக்குமென நினைக்கிறேன்.
  hearty congrats for the excellent chef!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மனோ சாமினாதன் மேடம். பார்க்க மிக அழகு. ஆனால் ருசி எனக்குப் பிடித்தமாதிரி அமையவில்லை.

   நீக்கு
 22. நல்ல செய்முறை. இங்கே விதம்விதமான ஹல்வாக்கள் - சில பிடிப்பதில்லை! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தில்லி வெங்கட். ஹல்வாக்கள் மீதான ஆர்வம் எனக்கு ரொம்பவே குறைந்துவிட்டது. தில்லியில், பாலில் செய்த இனிப்புகள் (ரசமலாய், ரசகுல்லா.....) சூப்பரோ சூப்பராக இருக்கும், அதிலும் பிகானீர்வாலா

   நீக்கு
 23. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது சாப்பிடும் ஆசையை தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 24. சமையல் விதங்களில் நீங்கக்கள் காட்டும் தீவிரம் வியக்க வைக்கிறது. இத்தனை தெரியுமா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அப்பாதுரை சார்.

   நிறைகுடம் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.

   ஹா ஹா ஹா

   நீக்கு
 25. மிகவும் அருமை நல்ல இடுக்கை,. நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!