கீதா சாம்பசிவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீதா சாம்பசிவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.5.26

"திங்க"க்கிழமை : சீரக ரசம் வெங்கடேஷ் பட் பாணி

சமையல் செய்யும்போது நாம் சமைப்பதே நன்றாயிருக்கும்தான்.,  ஆனாலும் பிரபலமானவர்கள் சமையல் என்றால் ஒரு மயக்கம்.  செய்கிறோமோ இல்லையோ, பார்த்து விடுவோம்..  வெங்கடேஷ் பட் சொல்வது மாதிரி..   இன்று அவர் பக்குவத்தில் சீரக ரசம் ஒன்று..  ஆனால் சொல்லி இருப்பவர் யார் என்று கண்டுபிடியுங்கள்.   சட்டென தெரிந்து விடும்!

1.11.21

13.9.21

'திங்க'க்கிழமை :  திப்பிசங்கள் - கீதா சாம்பசிவம் 

 "திங்க"ற கிழமை எனில் திங்கத் தான் சமையல் குறிப்புப் போடணுமா என்ன? ஒரு சில மாறுதல்களோடு சில திப்பிச வேலைகளை இங்கே தரப் போறேன். பிடித்தவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும். கட்டாயம் எல்லாம் இல்லை. 

30.3.21

சிறுகதை : பாச வலை - கீதா சாம்பசிவம்

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்த வித்யாவையே பார்த்துக்கொண்டிருந்தார் ஸ்வாமிநாதன். அவர் மனதில் இவளிடம் எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்னும் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. வித்யா அவரின் மூத்த மருமகள்.

29.11.16

கேட்டு வாங்கிப்போடும் கதை :: அப்பாவின் கம்பீரம்


     எங்களின் இந்த வார 'கேட்டு வாங்கிப் போடும் கதை'ப் பகுதியில்  வயதிலும் பதிவுலகிலும் மூத்த பதிவர்களில் ஒருவரான திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் கதை இடம் பெறுகிறது.

     அவர்கள் தளம் எண்ணங்கள்.

     கண்ணனுக்காக, சாப்பிடலாம் வாங்க, பேசும்பொற் சித்திரமே, என் பயணங்களில், ஆன்மீகப் பயணம் என்று பல்வேறு தளங்களுக்குச் சொந்தக் காரர்.  நகைச்சுவை உணர்வு மிக்கவர்.  ஆன்மீக விஷயங்களில் கில்லாடி.  அதில் மட்டுமா?  சமையல் விஷயத்திலும் இவரை அடித்துக் கொள்ள முடியாது!  பெருமையும், நட்புணர்வும் மிக்க எங்கள் வாசகிகளில் ஒருவர்.  எங்களின் எல்லாப் பதிவுகளையும், எதையும் மிஸ் செய்யாமல் இவர் எங்களை ஊக்குவிப்பதில் முதலிடத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

     இவர் கதை எதுவும் எழுதியதாய் எனக்கு நினைவில்லை.  எனினும், இவரிடமிருந்து கதை எழுதி  வாங்காவிட்டால் எப்படி என்று விடாமல் அவரை நச்சரித்ததில், பார்த்தால் ஏற்கெனவே ஒன்று எழுதி இருக்கிறார்!

     கேட்டு வாங்கிட்டோம்ல....!

     அவரின் முன்னுரையைத் தொடர்ந்து அவர் எழுதிய கதை...


===================================================================


எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் நம்மளைப் பத்தித் தெரிஞ்சுதான் கதை கொடுங்கனு கேட்கலைனு நினைச்சால்!  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விடலை! விடாக்கண்டன் கொடாக்கண்டனாகக் கதை, கதைனு புலம்பல்.  நமக்கோ மேல் மாடி காலி!  என்னத்தை எழுதறது!


இது ஏற்கெனவே முன்னர் ஒரு பதிவாக எழுதி ஜீவி சார் கூடப் பாராட்டி இருந்தார்.  'ஆஹா'னு இதைப் பத்தி நினைவில் வரவே ஒரு சில திருத்தங்களுடன் ஶ்ரீராமுக்கு அனுப்பி  வைச்சிருக்கேன்.  இனி அவர் பாடு, உங்க பாடு!  பெரிசாக் கருத்துகள் எதையும் எதிர்பார்க்கலை.  சட்டியில் ஏதும் இல்லாதபோது அகப்பையில் என்ன வரும்?  ஆகவே யாரும் எதுவும் சொல்லலைனாக் கூட வருத்தம் இல்லை!


================================================================

டிஸ்கி:  சில பல பழைய விஷயங்களைத் தோண்டிக்கொண்டிருந்தப்போ கிடைச்ச ஒரு விஷயத்தைக் கதை மாதிரி, கவனிக்கவும், கதை மாதிரிதான். ஆக்கி இருக்கேன்.


பெரிய டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கி:  ஹிஹிஹி, இது மலரும் நினைவுகள் இல்லை.


================================================================



அப்பாவின் கம்பீரம்!
கீதா சாம்பசிவம்


அப்பாவைப் பார்த்தாலே எங்களுக்கு நடுக்கம் தான்.  தொலைவில் வரும்போதே தெரிந்து விடும்.  இன்னிக்கு என்ன மூடில் வராரோனு பயமாவும் இருக்கும்.  யார் மாட்டிப்பாங்களோனு நினைப்போம்.  அநேகமா அம்மா தான் மாட்டிப்பா.  அம்மாவை அப்பா உண்டு, இல்லைனு பண்ணிடுவார்.  அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு தூசி கூட அந்தண்டை, இந்தண்டை நகர முடியாது;  நகரவும் கூடாது.  சமையலறையில் கூட அம்மா ஒரு பாத்திரத்தைத் தன் செளகரியத்துக்கு ஏற்ப இடம் மாற்ற முடியாது.  அப்பா கத்துவார்.  அந்தப் பாத்திரம் முன்னிருந்த இடத்துக்கு வரும் வரையிலும் விட மாட்டார்.  ஒரு விதத்தில் பிடிவாதம்னு தோன்றும் இது இன்னொரு விதத்தில் சாமான்களை வைச்ச இடத்தில் வைக்கத் தானே சொல்கிறார்னும் தோணும்.  அம்மா என்ன இதுக்குப் போய் அலட்டிக்கிறானும் நினைச்சுப்பேன்.

எங்கள் அனைவரையும் அடக்கி ஆளும் அப்பாவின் சாமர்த்தியத்தையும், கம்பீரத்தையும் நினைச்சால் கொஞ்சம் பெருமிதமாக இருக்கும்.  அவருக்கு அடங்கிப் போகும் அம்மாவை நினைச்சால் கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கும்.  அப்பா சொல்வது தான் சரி; செய்வது தான் சரி;  இந்த எண்ணம் எனக்குள் ஊறிப் போயிருந்ததுனு சொல்லலாம்.  அம்மாவிடம் அன்பு இருந்தாலும் அப்பாவுக்கு அடங்கித் தானே போறா என்ற அலக்ஷியமும் இருந்தது.  ஒரு தரம் அம்மா கிட்டேக் கேட்டேன். "நீ பெரியவளா? அப்பா பெரியவரா?

"சந்தேகமே இல்லாமல் அப்பாதான் பெரியவர். என்னை விட வயசிலேயும் பெரியவர்! இந்தக் குடும்பத்தை அவர் தானே கவனிச்சுக்கிறார்!" 

"அப்போ நீ?"

"அப்பாவுக்கு அப்புறம் தானே நான்!" சகஜமான குரலில் தான் அம்மா சொன்னாள்.

"ஆனால்..... மாதா, பிதா,குரு, தெய்வம்னு சொல்லிக் கொடுக்கிறாங்க.  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னும் படிக்கிறேனே.  என்னோட படிக்கிற எல்லாருமே அவங்க அவங்க அம்மாவைப் பத்தித் தான் பேசறாங்க.  இங்கே சமையல் கூட அப்பா சொல்றது தான் நீ செய்யறே. எங்களுக்கும் செய்து கொடுக்கிறே!  ஏன் அப்படி?"

"ஏன்னா, அப்பா ஒருத்தர் தானே நம்ம வீட்டிலே சம்பாதிக்கிறார்.  அதான்."

"என்னோட நண்பர்கள் வீட்டிலேயும் அவங்க அவங்க அம்மா சும்மாத் தான் வீட்டிலே இருக்காங்க.  எல்லாரும் வேலைக்குப் போகறதில்லை."

"என் கண்ணே," என அணைத்துக் கொண்ட அம்மா, பதிலே சொல்லவில்லை. எனக்கு என்னமோ எதுவும் புரியவில்லை. ஆனாலும் அம்மா மேற்கொண்டு விளக்கவில்லை! அக்கம்பக்கம் உள்ளவர்கள் கூட எல்லாம் சகஜமாக சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு பேசும் அப்பா வீட்டில் மட்டும் ஏன் இப்படி இருக்கணும்! அதான் எனக்குப் புரியாத புதிர்! அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் எங்க அப்பா இப்படினு சொன்னால் நம்பக் கூட மாட்டாங்க! ஆனால் அம்மா சொல்வதை மட்டும் கேட்கும் அப்பாவாக அவரை நினைத்தும் பார்க்க முடியவில்லையே! எதுவானாலும் அப்பாதான் முடிவு செய்யணும்! நாங்கல்லாம் லீவுக்குத் தாத்தா வீட்டுக்குப் போறதுனாலும், சரி, தீபாவளிக்குப் பண்ணின பக்ஷணத்தைத் தின்பதாக இருந்தாலும் சரி, அப்பாவின் உத்தரவு இல்லாமல் முடியாது! சர்வ வல்லமை படைத்தவர் நம்ம அப்பா! இவரை மாதிரி மத்த அப்பாக்களெல்லாம் இல்லை! அவங்கல்லாம் அசடுனு நினைச்சுப்பேன். 

அன்று சாயங்காலமாக அலுவலில் இருந்து வந்த அப்பா காபி சரியில்லை என ஒரு பாட்டம் அம்மாவோடு சண்டை போட்டார்.  இது கூடத் தெரியாமல் என்ன பொம்மனாட்டி! என்ற வழக்கமான கத்தல்.  பின்னர் வழக்கம் போலக் கோயிலுக்குப் போய் விட்டார்.  வீட்டிலே என்ன சண்டை நடந்தாலும், அப்பா தன் வரையில் எதுவும் பாதிக்காதவராகவே இருப்பார்.  அம்மாதான் அழுது கொண்டிருப்பாள்.  அப்பா அதையும் லக்ஷியம் செய்ததாகத் தெரியவில்லை.  அன்று விளையாடும்போது என் சிநேகிதர்களில் யாரோட அப்பா வீரமானவர்னு ஒரு பேச்சு வரவே, நான் "எங்க அப்பா தான்!" என்று அடித்துச் சொன்னேன்.  அதற்கான காரணங்களையும் கூறினேன்.  பக்கத்து வீட்டு கோபு சிரித்தான்.  "உங்க அப்பா பயந்தாங்க்கொள்ளி!" எனச் சீண்டினான்.  எனக்கு வந்த கோபத்தில் அவனோடு "டூ" விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

ராத்திரி ஏழு மணி இருக்கும்.  அம்மா கொல்லையிலே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.  திடீர்னு ஒரு அலறல்.  "என்னம்மா, என்ன கொஞ்சறியா?  என்ன அங்கே சப்தம்?" அப்பா கடுமையாகக் கேட்க, அம்மா, "ஒரு பெருச்சாளி, எப்படியோ சமையலறையில் புகுந்திருக்கு.  அது காலில் ஏறிடுத்து.  கத்தவே எங்கேயோ போய் ஒளிஞ்சுண்டிருக்கு."  என்றாள்.

அப்பா திடுக்கிட்ட குரலில், "என்ன பெருச்சாளியா?" என்றார்.

"ஆமாம், அப்படித் தான் இருந்தது."

"சரியாச் சொல்லித் தொலை;  நிஜம்மா பெருச்சாளியா?"

"ஆமாம், ஆமாம், இதோ மறுபடி வெளியே வரப் பார்க்கிறது.  அடுப்பு மேடைக்குக் கீழே போய் ஒளிஞ்சிட்டு இருக்கு."

அப்பா படபடவென எங்களை எல்லாரையும் அழைத்தார்.  நாங்க வேடிக்கை பார்க்கச் சென்றவர்கள், அப்பா இப்போ அதை அடிக்கப் போகிறார்;  குறைந்த பக்ஷமாக அதை விரட்டவாவது முயற்சி செய்வார் என நினைத்துக் கொண்டு, "என்ன அப்பா, உனக்கு நாங்களும் உதவி செய்யட்டுமா?" எனக் கேட்டோம்.  அப்பா எவ்வளவு கம்பீரமானவர்!   அம்மாவையும் அடக்கி ஆள்பவர்.  இந்த வீட்டில் எதுவும் அவருக்குத் தெரியாமல் எதுவுமே நடக்காது.  அப்படி இருக்கையில் ஒரு பெருச்சாளி எம்மாத்திரம்!  விரட்டித் தள்ளிட்டுத் தான் மறு வேலை பார்ப்பார். அவரைக் கேட்காமல் இந்தப் பெருச்சாளி உள்ளே வந்ததற்கு இன்னிக்கு அதுக்கு இருக்கு மண்டகப்படி! இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டு தம்பியிடமும் மெதுவாகச் சொன்னேன். 

"பார், இப்போ வேடிக்கையை! அப்பா அந்தப் பெருச்சாளியை ஒரு கை இல்லை இரண்டு கையாலேயும் பார்க்கப் போகிறார்!" என்றேன் பெருமையுடன். அப்பா மறுபடியும் எங்களை எல்லாம் அழைக்கவே எங்களையும் அம்மாவையும் உள்ளே உட்கார்த்தி வைத்துவிட்டுப் பெருச்சாளியோடு யுத்தம் செய்யப் போகிறார் என்று மகிழ்ச்சியுடன் சென்றேன். கூடவே அண்ணாவும், தம்பியும். 

நாங்கள் வந்ததும் அப்பா எங்களை அழைத்துக்கொண்டு, கிட்டத்தட்டத் தரதரவென இழுத்துக்கொண்டு, படுக்கை அறைக்குள் சென்றார்.  எங்களை அங்கே தள்ளிக் கதவைச் சார்த்தப் போகிறார் என நினைத்தேன்.  கிட்டத்தட்ட நடந்ததும் அதுவே.  ஆனால் அப்பாவும் கூடச் சேர்ந்து எங்களோடு உள்ளே வந்துவிட்டார்.  கம்பு ஏதானும் தேடறாரோனு நினைச்சேன்.  இல்லை; கம்பெல்லாம் தேடலை. கதவை அழுத்தித் தாழ்ப்பாள் போட்டுவிட்டுக் கீழே சுவர் ஓரத்தில் ஓட்டைகள் ஏதும் இல்லையேனு பார்த்துக் கொண்டார். பாதுகாப்பாக ஓர் மூலையில் போய் நின்று கொண்டார். எங்களையும் ஓரமாக உட்காரச் சொல்லிக்  கட்டளை இட்டார்.  பின்னர்  இங்கிருந்தே அம்மாவுக்குக் குரல் கொடுக்கிறார். 

"மெதுவா அந்தப் பெருச்சாளியை விரட்டப் பாரு.  உன்னால் முடியலைனா அக்கம்பக்கம் யாரையானும் அழைச்சுக்கோ.  நான் இங்கே குழந்தைங்களை பத்திரமாப் பார்த்துக்கறேன்."

கடவுளே, இதுவா என் அப்பா? இதையா நான் எதிர்பார்த்தேன், ஜன்னல் வழியாக அம்மா என்ன செய்கிறாளோ என்று கவலையுடன் பார்த்தேன். அங்கே அம்மா எதுக்கும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால்........

அம்மாவின் இதழ்களில் இகழ்ச்சியான (?) சிரிப்பு ஓடியதாக எனக்குத் தோன்றியது.

அப்பா கம்பீரம் இழந்து விட்டார்.