திங்கள், 11 ஏப்ரல், 2022

"திங்க"க்கிழமை :  எலுமிச்சை ஊறுகாயும் இஞ்சி மொரப்பாவும் -  கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 சாதா எலுமிச்சை ஊறுகாய்/ உப்பு எலுமிச்சங்காய்.

நாங்க இதை உப்பு எலுமிச்சங்காய் என்போம். ஏனெனில் இதில் மிளகாய்த்தூளோ/அல்லது மிளகாய் வறுத்துப் பொடித்தோ சேர்ப்பதில்லை. மிளகாயே போடாமல் பச்சை மிளகாய், இஞ்சி, வெந்தயம் மட்டும் போட்டுப் பண்ணும் ஓர் ஊறுகாய். வாயில் போட்டுக்கலாம் எப்போ வேணாலும். வாய் ருசி மாறினால் இதில் ஊறி இருக்கும் இஞ்சியை எடுத்து மென்று சாப்பிடலாம். குழம்பு சாதம்/ரசம் சாதத்துக்குத் தொட்டுக்கலாம். சப்பாத்தி/பராத்தா போன்றவற்றோடும் சாப்பிடலாம். நெல்லை/இங்கே தேப்லாவுக்கும் தொட்டுக்கலாம்னாலும் உங்களுக்காக நான் அதைச் சொல்லாமல் விட்டிருக்கேனாக்கும்.



தேவையான பொருட்கள்:

நல்ல சாறுள்ள எலுமிச்சம்பழங்கள் பத்து
உப்பு தேவைக்கு
பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப 10 முதல் பதினைந்து வரை
இஞ்சி சுமார் 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பெருங்காயம் தூளாக ஒரு தேக்கரண்டி முழுவதும் சேர்க்கலாம்.
மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி
வெந்தயம் முழுசாக 2 தேக்கரண்டி
தாளிக்க
நல்லெண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்த ஊறுகாய்க்கு எண்ணெய் செலவு ஆகாது.
கடுகு இரண்டு தேக்கரண்டி. பெருங்காயத்தை எண்ணெயைக் காய வைக்கையில் கூடச் சேர்க்கலாம்.

எலுமிச்சைகளை உங்களுக்குத் தேவையான அளவில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைச் சுத்தம் செய்து பெரியதாக இருந்தால் மூன்றாகவும் சின்னதாக இருந்தால் அடிப்பகுதியில் குறுக்கே நறுக்கிவிட்டு அப்படியேயும் போடவும். இஞ்சித்துண்டங்களைச் சேர்க்கவும். உப்பு,மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும். வெந்தயத்தை முழுசாக அப்படியே சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வைக்கவும். நான்கைந்து நாட்களாவது ஊற வேண்டும். தினம் காலையில் குளித்துவிட்டு வந்ததும் ஒரு தரம் மூடியைத் திறந்து கிளறி விடவும். எலுமிச்சை ஊறிவிட்டதா எனப் பார்த்துவிட்டு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும் ஊறுகாயில் சேர்த்துக் கிளறவும்.  இப்போது ஊறுகாய் உங்கள் உபயோகத்திற்குத் தயார். நல்லதொரு பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் ஊறுகாயைச் சேமித்து வைக்கவும். ப்ளாஸ்டிக் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட பாட்டில்களில் எந்த ஊறுகாயையுமே வைக்கக் கூடாது.  இதையும் நீங்கள் வெளியேவே வைக்கலாம். கெட்டுப் போகாது.

அடுத்து ஒரு வட இந்திய ஊறுகாய்த் தயாரிப்பு

இது ராஜஸ்தானில் ரொம்பப் பிரபலம். பச்சை மிளகாய்ப் பருவத்தில் பச்சை மிளகாயில் போடுவார்கள். 
பச்சை மிளகாய் குறைந்தது கால் கிலோ. அளவைப் பொறுத்து அப்படியே வைச்சுக்கலாம். அல்லது இரண்டாகக் கீறிக் கொண்டு நீள வாக்கில் குறுக்கேயும் கீறி வைக்கவும். ஏனெனில் ஊறுகாய்க்கான மசாவை நாம் அதில் தான் அடைத்து வைக்கப் போகிறோம். இதில் கொஞ்சமாக உப்பு, எலுமிச்சைச் சாறு, மஞ்சள் பொடி கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும். மிளகாய்த் தோலின் மிருதுத்தன்மை அதிகம் ஆகும். அடுத்து மசாலாப் பொருட்கள்


தனியா 2 மேஜைக்கரண்டி
ஒரு தேக்கரண்டி அல்லது பிடித்தால் 2 தேக்கரண்டி வெந்தயம்
இரண்டு தேக்கரண்டி சோம்பு
பெருங்காயப் பவுடர் ஒரு தேக்கரண்டி
அம்சூர் பவுடர்  இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் பொடி இரண்டு தேக்கரண்டி'
உப்பு தேவைக்கு
நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் தேவைக்கு ஏற்ப

இதற்கு வினிகர் கட்டாயம் தேவை. ஆகவே ஒயிட் குக்கிங் வினிகர் ஒரு மேஜைக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். 
தனியா, வெந்தயம், சோம்பு ஆகியவற்றைக் கொரகொரவென மிக்சி ஜாரில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும். ரொம்பவே கொரகொரப்பு வேண்டாம். ரவை பதத்துக்கு இருக்கலாம். இதோடு மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, உப்பு, அம்சூர் பவுடர் ஆகியவற்றைச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.  எண்ணெயைச் சுட வைத்து மசாலாப் பொருட்களின் மேல் ஊற்றிக் கலக்கவும். ஆற விடவும். இப்போது வினிகர் தேவையான அளவு அல்லது ஒரு மேஜைக்கரண்டி எடுத்துக் கொண்டு மசாலாவில் விட்டு நன்றாகக் கலக்கவும்.

பச்சை மிளகாயை ஏற்கெனவே ஊற வைச்சிருக்கோம். அவற்றை எடுத்துக் கொண்டு இந்த மசாலாவை ஒரு தேக்கரண்டியால் மிளகாய்களுக்குள் போட்டு நன்கு அடைக்கவும்.  எல்லாவற்றையும் அடைத்து முடித்த பின்னர் தேவையானால் எலுமிச்சைச் சாறைச் சேர்க்கவும். ஒரு ஜாடி அல்லது கண்னாடி பாட்டிலில் போட்டு ஊற வைக்கவும். 2 நாட்கள் நன்கு கிளறிவிட்டு ஊறியதும் எடுத்து வெயிலில் வைத்துப் பின்னர் பயன்படுத்தலாம். வெயில் பிடிக்காதெனில் அப்படியே பயன்படுத்தலாம். காலை வேளையில் அல்லது இரவில் என்றாவது சப்பாத்திக்குத் தொட்டுக்க எதுவும் பண்ணவில்லை எனில் இதைத் தொட்டுக்கலாம்.  மிளகாயிலேயே காரம் இருக்கும் என்பதால் இதற்கு மிளகாய்ப் பொடி தேவை இல்லை.

இஞ்சி மொரப்பா



கால் கிலோ குருத்து இஞ்சியைத் தோல் சீவிக்கொண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இது 2 கிண்ணம் இருந்தால் நான்கு கிண்ணம் சர்க்கரை எடுத்துக் கொண்டு ஒற்றைக் கம்பிப் பதத்தில் சர்க்கரைப் பாகு வைக்கவும். அதில் நறுக்கிய இஞ்சித் துண்டங்களைப் போட்டு ஒரு கொதி விடவும்.  கொஞ்சம் கெட்டிப் பட்டதும் எடுத்து ஆற வைத்துப் பின்னர் ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தேவையான போது பயன்படுத்தவும். 

படங்களுக்கு நன்றி கூகிளார். 

63 கருத்துகள்:

  1. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வாழ்கவே...


      வாங்க துரை செல்வராஜூ சார்.. வணக்கம்.

      நீக்கு
  3. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இறைவன் கருணையால் அனைவரும் ஆரோக்கியம் சூழ
    வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. மிகப் பிடித்தது மசாலா அடைக்கப் பட்ட ப.மிளகாய். மும்பையில் எங்களுக்குக்
    கிடைத்தது. சம்பந்தியும் தில்லியிலிருந்து
    கொண்டு வந்து கொடுப்பார். அவர்கள் பயன் படுத்தும்
    மிளகாயே வேறு மாதிரி இருக்கும்.

    எங்கள் சிங்கத்துக்கு மிகப் பிடித்த ஊறுகாயை
    இங்களித்த அன்பின் கீதாவுக்கு மிக நன்றி.
    வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரேவதி. ஆமாம், வடக்கே மிளகாய் வேறே மாதிரித் தான்.நாங்க சப்பாத்தி, பராந்தா, தேப்லா, சில/பல சமயம் பூரி போன்றவற்றிற்குத் தொட்டுக்க இந்த மிளகாய் ஊறுகாயே போதும்னு வைச்சுப்போம்.

      நீக்கு
  5. பித்தம் அதிகரிக்கும் காலங்களில்
    எலுமிச்சையும் நார்த்தையும் உதவுவது போல் வேற
    எதுவும் உதவாது.
    உப்பு சுவை நாவில் படும்போது உமிழ் நீர் ஊறி

    தண்ணீர் சத்தும் அதிகரிக்கும். இப்போதுதான்
    எங்கேயோ படித்தேன்.
    அஜீரணத்துக்கும் நல்ல மருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பஹ்ரைனில் தனியாக இருந்தபோது.. ஒரு தடவை உணவே பிடிக்காமல் போயிற்று. எதைச் சாப்பிட்டாலும் வாமிட் பண்ணும்படி இருந்தது. ரொம்பத் தயக்கத்துடன் மனைவிட்ட சொன்னேன்.(மறுநாள் ஆபீசில் இருந்து போன் பண்ணினேன்). உடனே எதிர் கன்வீனியன்ஸ் ஸ்டோர்ல தென்னமரிக்க பெரிய எலுமிச்சை வாங்கி, கட் பண்ணி முழுதும் சாப்பிடச் சொன்னா. தோலோடு சாப்பிட்டேன். அன்றே பிரச்சனை தீர்ந்தது. அதிலிருந்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெரிய எலுமிச்சையை பச்சையாகத் துண்டம் போட்டுச் சாப்பிடுவேன்.

      நீக்கு
    2. இனியொரு முறை உணவில் நாட்டம் இல்லை எனில் புதினா இலைகளோடு இஞ்சி, சோம்பு, கொத்துமல்லி விதை சேர்த்துக் கழுவிக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துச் சாறு எடுத்துக் கொள்ளவும். இதை மொத்தமாக எடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுக்கலாம். எப்போத் தேவையோ அப்போ அரைத் தம்பளர் சாறை எடுத்துக் கொண்டு அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து பனங்கல்கண்டொ, நாட்டுச் சர்க்கரையோ போட்டுக் கலந்துகுடித்தால் தேவாமிர்தம்.

      நீக்கு
  6. எலுமிச்சை படம் பார்க்கும் போதே ஆரோக்கியமாக
    இருக்கிறது.

    சின்னச் சின்னதாக நறுக்கி , இப்படி செய்வது நெடு நாட்கள்
    காணும்.
    கிணற்று மேடையில் கற்சட்டியோடு காயவைத்த நாட்கள்
    நினைவில்.... வேடு கட்டித் தூசி படாமல்
    வைத்து ஜாடியில் சேர்ப்பதும் பெரியவர்களிடம் கற்க வேண்டிய
    கலை. அருமையான செய்முறைக்கு மிக
    நன்றி கீதாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரேவதி. ஆமாம் கற்சட்டியோடு தான் வெயிலில் காய வைப்போம். முன்னெல்லாம் இது இல்லாத நாட்களே இல்லை. இப்போ நான் ஊறுகாய்ப் பயன்பாட்டைக் குறைத்துவிட்டதால் அதிகம் போடுவதில்லை.

      நீக்கு
  7. இஞ்சி மொரப்பா நான் செய்ததே இல்லை.
    மிக அருமையாகச் செய்முறை சொல்லி இருக்கிறீர்கள் கீதாமா.
    அப்படியே வேப்பம்பூ உலர்த்தி சேமிப்பு செய்வதையும்
    சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! அது ஒண்ணும் பிரமாதமே இல்லை ரேவதி. வேப்பம்பூவைப் பறித்துச் சுத்தம் செய்து நீரில் போட்டு நன்கு கழுவிக் காய வைத்துப் பின்னர் மோரில் உப்புச் சேர்த்து வேப்பம்பூவை அதில் ஊற வைத்துக் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே!

      நீக்கு
    2. மிக நன்றி கீதாமா.
      எனக்கு மாவடுச் சாறு வேப்பம்பூ ரொம்பப் பிடிக்கும்.
      வீட்டில் வேப்ப மரம் இருந்த காலம் அப்போது,.

      நீர் நெல்லிக்காயும் நிறைய செல்லுபடியாகும்.

      நீக்கு
    3. எலுமிச்சையை வேகவைத்துத் துண்டங்களாக்கி உப்புக்காரம் எண்ணெய் சேர்த்து தாளித்து விசேஷநாட்களில் தயாராகும் இன்ஸென்ட் ஊறுகாயை விட்டு விட்டீர்களே. எலுமிச்சையில் இனிப்புத் தொக்கும் ,செய்யலாம்.வடஇந்தியர்கள் ஓமம் போட்டு உப்பு எலுமிச்சை முழுசு முழுசாக ஊறுகாய் போடுவார்கள். கீ.சா விற்கு தெரியாததே ஒன்றும் இல்லை.எல்லாமே அருமை. கடைசியில் வந்து விட்டு எதை எழுத எதை விட.இன்னும் எழுதலாம்.இப்போது முடிந்தது அவ்வளவுதான். நல்ல ஊறுகாய்ப்பதிவு. அன்புடன்

      நீக்கு
    4. ஆமாம் அம்மா, அதைக்கல்யாண ஊறுகாய் என என் பிறந்த வீட்டில் சொல்லுவார்கள். சமாராதனை நடக்கும்போதெல்லாம் அம்மா இப்படித்தான் எலுமிச்சை ஊறுகாய் திடீர் ஊறுகாயாகப் போடுவார். அந்த ருசியே தனிதான். இனிப்புத் தொக்கும் நான் போட்டிருக்கேன். அதில் கொஞ்சம் போல் சோம்புப் பொடி சேர்ப்பேன். ஓமம் போட்டு முழுசாக எலுமிச்சை ஊறுகாய் பார்த்திருக்கேன்/சாப்பிட்டதில்லை/போட்டதில்லை. உங்கள் வரவும் கருத்துமே எனக்குக் கிடைத்திருக்கும் பாராட்டுகள்.

      நீக்கு
    5. ரேவதி, மாவடு ஜலத்தில் வேப்பம்பூவை ஊறவைத்துக் காய வைத்து எடுத்து வைச்சுக்கலாம் என்பதை இப்போதே அறிந்தேன். அம்பத்தூர் வீட்டில் வேப்பம்பூ கொட்டிக்கிடக்கும் வீடே மணக்கும். இங்கே நான் கடையில் வாங்கினால் தான் வேப்பம்பூ. :(

      நீக்கு
  8. அருமையான ரெசிப்பி... நல்ல நேரத்துல வெளியிட்டிருக்கீங்க.

    சாதா சைஸ் எலுமி, டஜன் 120-150 ரூபாய்னு சொல்றான். சிறிய சைஸ் எலுமிச்சம்பழம் கெஞ்சாத குறையா 7-50 ரூபாய்க்கு நேற்று வாங்கினேன். இதுல எங்க உப்பு எலுமிச்சங்காய் போடறது? சீசனைப் பொறுத்து இந்த கீசா மேடம் ரெசிப்பி அனுப்ப மாட்டாங்களோ? ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே எலுமிச்சம்பழங்கள் விலை அதிகம் தற்போது. அதிகம் கிடைப்பதும் இல்லை.

      நீக்கு
  9. இஞ்சி கிலோ 40 ரூபாய்தான். பொடிப்பொடியா நறுக்குவதற்குப் பதில் அரைத்துவிடுவது சுலபமே. இஞ்சிச் சாற்றோடு பாகில் விட்டுக் கிளறலாமே.

    சின்ன வயசில் இனிப்பின்மேல் இருந்த ஆசையால் வீட்டில் செய்துவைத்திருந்த இஞ்சிமுரப்பாவில் நாலை எடுத்து ;திருடி) ட்ரௌசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஸ்கூல் சென்றதும், அதில் ஒன்றைச் சாப்பிடாமல் மறந்துபோய், இரவு எரறும்புகள் மொய்த்ததை வைத்து அம்மா கண்டுபிடித்ததும் நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சார். நீங்க கமர்கட் செய்முறை அனுப்பி எவ்வளவு நாளாயிற்று. அது பற்றிய மூச்சே காணோம். நேற்றைக்கு எழுதிய ஊறுகாயும் மொரப்பாவும் உடனே வெளியாகிறது பார்த்தீர்களா? 
      மூட்டியாச்சு. ஓடிப்போறேன்.

       Jayakumar

      நீக்கு
    2. நான் இன்னும் கமர்கட் பண்ணலை. இந்த வருடம் ஒரு செய்முறையும் நான் அனுப்பலை. வரிசைக்கிரமமாகத்தான் எங்கள் பிளாக்கில் வெளியிடுவாங்க. அதனால பல நேரங்களில் மாதங்கள் கழித்தும் வெளியாகியிருக்கிறது.

      எனக்கு பயணங்கள், அசைன்மெண்ட் போன்ற வேலைகள் இருப்பதால் இன்னும் எழுதி அனுப்பலை. அனுப்பணும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.

      நீக்கு
    3. ஜேகே அவர்களே! நேற்றுத்தான் ஊறுகாயும் மொரப்பாவும் எழுதி அனுப்பினதாக நீங்க நினைச்சால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் அனுப்பியதுமே இதை எல்லாம் மறந்துடுவேன். திடீர்னு நினைத்துக்கொண்டு பார்ப்பேன். தேதி பின்னால் கொடுத்திருப்பார் ஶ்ரீராம்.

      நீக்கு
    4. இன்னிக்கு எ.பி. வாட்சப் குழுவிலே திரு கௌதமன் திங்கட்கிழமைக்குச் செய்முறைகள் கேட்டிருக்கார் நெல்லை. உங்க கமர்க்கட்டை அப்போ அனுப்பி வைங்க. உடனே வந்தாலும் வந்துடும். ஜேகேக்கும் திருப்தியா இருக்கும். :)

      நீக்கு
    5. //சின்ன வயசில் இனிப்பின்மேல் இருந்த ஆசையால் வீட்டில் செய்துவைத்திருந்த இஞ்சிமுரப்பாவில் நாலை எடுத்து ;திருடி) ட்ரௌசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஸ்கூல் சென்றதும், அதில் ஒன்றைச் சாப்பிடாமல் மறந்துபோய், இரவு எரறும்புகள் மொய்த்ததை வைத்து அம்மா கண்டுபிடித்ததும் நினைவுக்கு வருது// இஞ்சி மொரப்பா செய்முறை நான் எழுதி அனுப்பியதை முன்பு எ.பி.யில் வெளியிட்டிருந்தார்கள். அப்போதும் நீங்கள் இதே பின்னூட்டம் தான் அளித்திருந்தீர்கள் நெல்லை.

      நீக்கு
    6. அம்மா நினைவும் இனிப்பின் மீதான என் காதலும் தான் காரணம்

      நீக்கு
  10. பச்சைமிளகாய் ஊறுகாய் சாப்பிட்டதே இல்லை.

    பஹ்ரைனில் டோக்ளா வாங்கும்போது அதன் மீது வைத்துக்கொடுக்கும் இரண்டு வாட்டிய மிளகாயே ருசியாக இருந்தாலும் பின்னர் வயிற்றைப் பதம் பார்க்கும். இதில் மிளகாய் ஊறுகாயா? எனக்கு புளிமிளகாய் தவிர வேறு பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளிமிளகாய் ஹும்ம் அது தேவாமிர்தம் ஆச்சே

      நீக்கு
    2. அது அவ்வப்போது செய்துவிடுகிறோம் மதுரைத் தமிழன் துரை. பெங்களூரில் பலவித மிளகாய்கள் கிடைக்கின்றன. எது ரொம்பக் காரம், எது காரமில்லாதது என்று பார்த்து வாங்குவதில் குழப்பம் நேர்ந்துவிடுகிறது. சென்றமுறை காரமிருக்காது என்று நினைத்து வாங்கிய மிளகாய் (கிலோ 80 ரூ), சுத்தமாகக் காரமில்லை. வற்றல் மிளகாய்களிலும் இந்தப் பிரச்சனை, பெங்களூரில் ஏற்பட்டுவிடுகிறது.

      சென்றமுறை மனைவி புளிமிளகாய் செய்தபோது, வேறு வேலையையும் பார்த்துக்கொண்டிருந்ததனால், முதலில் மிளகாயை வதக்கும்போது அதிகமாக வதங்கியது (கொஞ்சம் கருப்பாகிவிட்டது). அதுவும் தனி ருசியாக இருந்தது.

      இன்று மீண்டும் செய்யச்சொல்ல வேண்டியதுதான்.

      நீக்கு
    3. புளிமிளகாய் எங்க வீட்டிலே (அப்பா வீட்டிலே) கல்தோசைக்குத் தொட்டுக்கப் பண்ணுவாங்க. அன்றே அரைத்து அன்றே வார்க்கும் அந்தப் புளிப்பே இல்லாத தோசைக்கு இதைவிடச் சிறந்த துணை வேறே எதுவும் இல்லை. அதுவும் சின்னச் சின்ன மிளகாய்களாக ஒரே மாதிரிக் கிடைக்கும். மிளகாய்க் காரமே இருக்காது.

      நீக்கு
    4. பச்சை மிளகாய் ஊறுகாய் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் இப்போல்லாம் சாப்பிட முடியறதில்லை. புளி மிளகாய் மோர் சாதத்துக்குத் தொட்டுக்கக் கூட நன்றாய் இருக்கும். நாங்க கஞ்சிக்கும் தொட்டுப்போம்.

      நீக்கு
    5. மிளகாய் கட்பண்ணிக் கொடுத்தேன்.புளிமிளகாய் ரெடி. மோர் சாதம் தோசை புளி மிளகாய் இப்போ உணவு

      நீக்கு
  11. //தினம் காலையில் குளித்து விட்டு வந்ததும் ஒரு தரம் மூடியைத் திறந்து கிளறி விடவும்//

    ஏன் குளிக்காமல் கிளறக்கூடாதா ?

    ராஜஸ்தான் ஊறுகாய் எனக்கு மிகவும் பிடிக்கும் சாப்பிட்டு இருக்கிறேன்.

    இஞ்சி முரப்பா சாப்பிட்டு வெகுகாலமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி. ஊறுகாய் போன்ற நீண்ட நாட்கள் வைத்திருக்கும் பதார்த்தங்களைக் குளித்துச் சுத்தமாக இருக்கையில் தான் தொட்டுக் கிளறியோ வெயிலில் காய வைப்பதோ செய்ய வேண்டும். படுக்கையிலிருந்து எழுந்து வந்ததும் ஊறுகாயை எல்லாம் தொடவே கூடாது. வீணாகிவிடும். ஏதானும் எச்சில் கரண்டி, ஸ்பூன், கிண்ணங்கள் பட்டாலே மேலே வெள்ளாடை பூத்துக் கொள்ளும். பொதுவாக ஊறுகாய்களை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதும் நல்லதல்ல. வெளியே வைக்கவேண்டும். ஆகவே சமையலறையில் தனியானதொரு மேடையில் வைக்கணும். காலையிலேயே அன்றைய தேவைக்கான ஊறுகாயை எடுத்து வைச்சுடணும். பின்னர் தொடக் கூடாது.வெயிலில் வைப்பதானால் அந்த ஜாடியோடு அல்லது கல்சட்டியோடு வைத்து மேலே சுத்தமானத் தோய்த்து உலர்த்திய வெள்ளைத் துணியை வேடு கட்டி வைக்கணும்.

      நீக்கு
    2. கில்லர்ஜி ஊறுகாய் என்பது மிகவும் சுத்தமாகச் செய்ய வேண்டும் அப்போதுதான் அது கெடாமல் இருக்கும் எனப்தற்காக எங்கள் வீடுகளில் இப்படித்தான் கீதாக்கா சொன்னது போல்தான் செய்வார்கள். நான் மகனுக்குப் போட்டு அனுப்பியது கெடவும் இல்லை. ப

      ஈரப்பதம் ஆகவே ஆகாது....பூஞ்சான் வந்துவிடும் தினமும் கிளறிக் கொடுப்பது எல்லாம் மிகவும் சுத்தமாகச் செய்ய வேண்டும். அதுதான் கீதாக்கா சொல்லிருக்காங்க

      கீதா

      நீக்கு
    3. கீதாக்காவே கொடுத்துட்டாங்க

      கீதா

      நீக்கு
  12. @ கில்லர் ஜி!..

    // ஏன் குளிக்காமல் கிளறக் கூடாதா?.. //

    !?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை துரை. அதான் கேட்டிருக்கார். அதனால் என்ன?

      நீக்கு
  13. ஊறுகாய்கள், இஞ்சி மொரப்பா இரண்டுமே சூப்பர் கீதாக்கா

    எலுமிச்சை இப்படித்தான் போடுவதுண்டு னம் வீட்டிலும் மகனுக்கு இப்படிப் போட்டு கொஞ்சம் ட்ரையாக அனுப்பிக் கொடுத்தேன். அது போல காரம் போட்டதும்..

    மொராப்பா சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  14. நம் வீட்டில் எனக்கும் மகனுக்கும் வட இந்திய வகை ஊறுகாய் ரொம்பப் பிடிக்கும். போடுவதுண்டு. அது போல இனிப்பு கலந்த ஊறுகாயும்.

    இப்போது போட்டுக் கொண்டிருக்கிறேன் வட இந்திய ஊறுகாய்களும்....

    மொராப்பாவிற்கு நான் துருவிக் கொண்டுவிடுவேன் இல்லைனா அரைத்துக் கொண்டுவிடுவேன்.

    மொரப்பா சாப்பிட்டு ரொம்ப நாளாகிவிட்டது. வீட்டில் சுக்குப் பொடி போலச் செய்து வைப்பதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சர்க்கரை சேர்த்தும் எலுமிச்சை ஊறுகாய் போடலாம். எலுமிச்சைம்பழங்களை நறுக்கிக் கொண்டு தேவையான உப்புச் சேர்த்து அதோடு சர்க்கரையையும் சேர்த்துக் கொஞ்சம் ஊறிய பின்னர் வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். தேவையான போது கொஞ்சமாக எடுத்துக் கொண்டு கொஞ்சம் போல் காரப்பொடியுடன் தாளிப்பைச் சேர்த்துச் சாப்பிட்டுக்கலாம். சர்க்கரைப் பாகிலும் ஊற வைப்பார்கள்.

      நீக்கு
    2. நெல்லிக்காயையும் இப்படிச் சர்க்கரை சேர்த்துத் தேன் கலந்து ஊற வைத்துத் தினம் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது. குரலும் பண்படும்.

      நீக்கு
    3. //எனக்கும் மகனுக்கும் வட இந்திய வகை ஊறுகாய் ரொம்பப் பிடிக்கும்// - வேற வழி? காலைல, ஜிலேபி, சாயா, மதியம் பராந்தா ஊறுகாய்... இதெல்லாம் பிடித்துத்தானே ஆகணும். ஹா ஹா ஹா

      நீக்கு
  15. எலுமிச்சை வாந்தி வருவது போலவோ பசியின்மை இருந்தாலோ எலுமிச்சை நல்ல பலன் தரும் அது போல சுக்கு,இஞ்சி ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பொதுவாக நாரத்தங்காயை வாயில் அடக்கிப்பேன்.

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம்.

    எலுமிச்சை ஊறுகாய் சாருஹாசன் மனைவி போட, அனுஹாசன் காணொளியாக வெளியிட்டிருந்தார். எனக்கு பிடிக்கும், என் மகனுக்கு பிடிக்காது என்பதால் போடுவதில்லை.

    பச்சை மிளகாய் ஊறுகாய் வட இந்திய உணவகங்களில் கொடுப்பார்கள். அப்படியே எடுத்து வைத்து விடுவேன்.சாப்பிட பயம்!
    இஞ்சி மொரப்பா - என்னுடைய செய்முறை எ.பி.யில் முன்பு வெளியாகியிருக்கிறது.


    பதிலளிநீக்கு
  17. என் மாமியார் இதே போன்று உப்பு எலுமிச்சை போன்று பாகற்காய், இஞ்சி எலுமிச்சை சேர்த்துச் செய்வதை நானும் கற்று செய்வதுண்டு. நெல்லியும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. ஊறுகாய், வற்றல் எல்லாம் போட்டு வருடம் பல ஆச்சு.
    முன்பு சீஸனுக்கு ஏற்றார் போல ஊறுகாய் போட்டு விடுவேன். கடாரங்காய் , எலுமிச்சை எல்லாம் திருவெண்காடு, மாயவரத்தில் அக்கம் , பக்கம் வீடுகளில் காய்க்கும் கொடுத்து விடுவார்கள்.

    கொழு எலுமிச்சை கொடுத்து விடுவார்கள்(கமலா ஆரஞ்சு போல இருக்கும்) எலுமிச்சை சாதம் போல செய்யலாம், நன்றாக இருக்கும், சர்பத் செய்யலாம்.


    கீதாசாம்பசிவம் கொடுத்த ஊறுகாய் வகைகளை படித்தவுடன் செய்ய ஆசை. ஆனால் சாப்பிட ஆள் இல்லை. அம்மாவீட்டில் பெரிய பெரிய ஜாடிகளில் ஊறுகாய் போட்டு வைத்து இருப்பார்கள். உப்பு நாரத்தை உண்டு கண்டிப்பாய், மாமியார் வீட்டிலிம் உப்பு நாரத்தை உண்டு காய்ச்சல், வாந்தி என்றால் உப்பு நார்த்தங்காய் நல்ல மருந்து.

    இஞ்சி மொரப்பா செய்து இருக்கிறேன். அரைத்து வடிகட்டி நார் இல்லாமல் பாகில் கலந்து செய்து இருக்கிறேன். நீங்கள் சொல்லும் முறை எளிதாக இருக்கிறது செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. படத்தையெல்லாம் இணையத்தில் சுட்டிருக்காங்களே... செய்முறையாவது இவருடையதுதானா என்றெல்லாம் ஸ்ரீராம் செக் பண்ணுவதில்லையா?

    பதிலளிநீக்கு

  21. இந்த வார புதன் கேள்விகள்:

    1. உயிர் போன பின் ஆண், பெண் பேதமில்லை. எல்லாம் ஒன்றே.
    பேய், பிசாசு, பூதம் என்று ஏன் பிரித்து சொல்கிறோம்? என்ன வித்தியாசங்கள்?

    2. ‘குடியும் குடித்தனமும்’ - குடி என்பது இங்கு என்ன?
    இன்றைய கால கட்டத்தில் இதை எப்படி சொல்லணும்?

    3. சமீப காலமாக தமிழ் வெகுவாக மாறியுள்ளது. உதாரணமாக:
    பிரயோஜனம் - ப்ரோஜனம், நியாயம் - நாயம், விளையாடி இருக்கேன் - விளையாண்டிருக்கேன், முருங்கை - முரிங்கை…
    நீங்களும் எழுதலாம்.


    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! இப்போப் பேசுவது/பேத்துவது தமிழா? முதலமைச்சராக இருக்கும் திரு ஸ்டாலின் என்பதற்கு முதலமைச்சராக இருக்கக் கூடிய திரு ஸ்டாலின் என்பார்கள் அவங்களுக்கே சந்தேகம். சொல்ல மாட்டாங்க என்று சொல்ல மாட்டார்கள். சொல்ல மாட்ராங்க என்பார்கள்.உன்னைத் தான் கல்யாணம் செய்துப்பேன் என்றோ கல்யாணம் பண்ணிக்கப் போறேன் என்றோ சொல்லாமல் உன்னைத் தான் கல்யாணம் பண்ணுவேன். என்பார்கள். என்னவோ தமிழ். இன்னும் எத்தனையோ இருக்கு.

      நீக்கு
  22. அதிகம் போணி ஆகலை போலவே! :)))) இப்போல்லாம் சமையல் பதிவுகள் எடுபடவில்லையோ? கண் திருஷ்டினு நினைக்கிறேன். இஃகி,இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
  23. சாதா எலுமிச்சை ஊறுகாய்/ உப்பு எலுமிச்சங்காயும், இஞ்சி மொரப்பா இரண்டுமே செஞ்சது இல்லை ..

    குறிப்பு மிக அருமையாக இருக்கிறது மா கண்டிப்பா செய்து பார்க்கிறேன் ,..

    இப்பொழுது தான் வத்தல் போடும் வேலைகள் முடிந்தன ..அடுத்து ஊறுகாய் செய்ய வேண்டும் ...

    பதிலளிநீக்கு
  24. சுவையான குறிப்புகள். இங்கே இந்த மாதிரி பச்சை மிளகாய் ஊறுகாய் அதிக அளவில் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!