செவ்வாய், 31 மே, 2022

சிறுகதை - நாலு சாத்து - வானம்பாடி

 நாலு சாத்து

 - வானம்பாடி -

பொழுது புலர்ந்து, வசந்தம் குடியிருப்பின் அன்றாட வாழ்க்கை ஆரம்பம் ஆயிற்று. எட்டு வீடுகள் உடைய அழகிய  அடுக்குமாடி குடியிருப்பு. நவீன வசதிகளுடன், சுற்றியும் மணம்கமழும்  பூந்தோட்டமும், பெண்கள் பூஜை செய்ய எழில்மிகுந்த துளசி மாடமும் தோட்டத்தின் நடுவே உண்டு. சாமிக்கண்ணு இந்த குடியிருப்பின் கட்டிட வேலை தொடங்கியதிலிருந்தே உடன் இருப்பவர். அவருக்கு  இரவு  காவல் புரியவும், காலை மற்ற வேலைகளுடன் தோட்ட வேலை  புரியவும் , மதியம் ஓய்வெடுக்கவும் சரியாக இருக்கும். மாதம் இருமுறை வியாழன் அன்று தன் கிராமம் சென்று வெள்ளிக்கு திரும்பி விடுவார். 

சாமிக்கண்ணுவுக்கு தேவைகள் அதிகம் இல்லை. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. குடிக்க டீ முதல் சாப்பிட உணவு, துணிகள் என குடிருப்புவாசிகளே பார்த்துக்கொண்டனர். சம்பாதிக்கும் பணத்தை தன் வீட்டு மகராசியிடம்( அவர் சொல்வது போல) கொடுத்து விடுவார். அந்த அம்மாளும் கட்டு செட்டாய் குடும்பம் நிர்வகித்து நாலு பிள்ளைகளையும் படிக்க வைத்து, ஒவ்வொருவராய் கரை சேர்க்கின்றாள். கிராமத்தில் பூந்தோட்டம் போட்டு பராமரித்து வருகின்றாள். இந்த தம்பதிகளின் எளிமையும், தாயாய் சேயாய் பழகும் தன்மையும் அனைவரையும் வியக்க வைக்கும்.

வசந்தத்தில்  வசிக்கும் குழந்தைகள் தாத்தா என்று இவரை அன்பாய் அழைப்பர். சாப்பிடாத குழந்தைகளுக்கு பூச்சாண்டியாகவும் மாறுவார். அங்கு இரண்டாவது தளத்தில் வசிக்கும் தொழிலதிபரின் குடும்பத்தில் சுதீப்  என்னும் சிறப்புக்குழந்தையும் உண்டு. சுதீப்  பிறந்ததில் இருந்தே அவனை பார்த்து வரும் சாமிகண்ணுவுக்கு அவன் மேல் அலாதி பிரியம். பதிமூன்று வயதாகும் அந்த சிறுவனுக்கு நான்கே மாதங்கள் ஆகும் ஒரு குட்டி தங்கை சுசிந்தாவும் உண்டு. சுதீப்பின்   முகம் சூரியனைப்போல பொலிவாய் விளங்கும். அவனது அகன்ற, ஒளிரும் கண்கள் ஆயிரம் மொழி பேசும். அவனுக்கு பேசும் திறன் இல்லை என்று சொன்னால் மட்டுமே தெரியும். சுருள் முடியில், கம்பீர நடையில் ஒரு வசீகரம் அனைவரையும் ஈர்க்கும். நீச்சல் அடிப்பது அவனுக்கு மிகப்பிடிக்கும். அவன் அம்மா சொல்கின்றவற்றை  வேகமாக தட்டச்சு  செய்து கொடுப்பான். சிறிய விஷயங்கள் அவனுக்கு புரிபடுவதில்லை. நாம் நினைத்து பார்க்காத பெரிய விஷயங்களை அனாயாசமாக முடிப்பான், அவனை அனுதினமும் பார்க்கின்ற சாமிக்கண்ணு, அவனுடைய அம்மாவிடமும் , அப்பாவிடமும்  எப்பொழுதும்  இதனையே சொல்வதுண்டு, "ஏதோ கிரகம் சரியில்லை, சீக்கிரம் சரியாகிடுவான் பாருங்க". 

சாமிக்கண்ணு  எந்த கோவிலுக்கு சென்று வந்தாலும் சுதீப்பிற்காக  அங்கிருந்து  பிரசாதமும், கயிறும் வாங்கி வருவார். அவனுக்கு   இந்த பாசமிகு தாத்தாவிற்கு குளிரூட்டும் கண்ணாடியை   போட்டு பார்க்க மிக பிடிக்கும். 

எப்பொழுது அவர்கள் வீட்டிற்கு சென்றாலும் கண்ணாடி போட சொல்லி அடம் பிடித்து அமர வைப்பான். " டேய் என்ன விடு டா. எனக்கு வேலை இருக்கு. தெனமும் உன்கூட இதே ரோதனையா போச்சி. இரு, இரு,  எங்கயாவது கண்ணாடியை ஒளிச்சு வெச்சிடறேன் " என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும், மனம் மிகுந்த வேதனையுறும் அவருக்கு. அவன்  அம்மாவும் அப்பாவும் ஒரு முறை கூட முகம் சுளித்து பார்த்ததில்லை. எப்பொழுதும் அமைதியாய் விளங்கும் சுதீப், அம்மாவாசை, மற்றும் பௌர்ணமி  நாட்களில் கட்டுக்கடங்காத பிள்ளையாய் இருப்பான். இங்கு வாழ்கின்ற அனைவருக்கும் அவனைப்பற்றி தெரியும் என்பதால், யாரும் அவர்கள் குடும்பத்தை புண்படுத்தமாட்டார்கள். 

நான்காவது தளத்திற்கு புதியதாய் சென்ற வாரம்  குடி  வந்துள்ளனர்  ஒரு ஆசிரியர் குடும்பம். வேலை மாற்றலாகி இவ்வூருக்கு புதியதாய் வந்திருப்பவர்கள். அவர்களுக்கு கல்லூரி செல்லும் இரு மகன்கள். சுதீப்பிற்கு புதியதாய் வந்திருப்பவர்களை, அவனது பெற்றோர் முன்பே அறிமுகம் செய்து வைத்துள்ளனர். 

இன்று ஒரு பௌர்ணமி நாள். ஆசிரியர், தன் பணிக்கு சென்றிருந்தார். சுதீப் , கைகளில் குளிரூட்டும் கண்ணாடியை  எடுத்துக்கொண்டு , வேகமாக படிகள் ஏறி  திறந்திருந்த ஆசிரியரின் வீட்டிற்குள் சென்று அவர்களின் தொலைகாட்சி முன்பு உட்கார்ந்தான். ஆசிரியரின் வயதான தந்தை முறைத்தபடியே, உள்ளிருந்து வெளியே வரவும் நேரே சென்று கண்ணாடியை அவருக்கு அணிவித்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எங்கே பிள்ளையை காணவில்லை என அவனது அம்மாவும் தேடிக்கொண்டே வந்துவிட்டாள்.அந்தப் பெரியவர், "என்ன பிள்ளையை வளத்துருக்கீங்க? அவன் பாட்டுக்கு வந்து எப்படி இங்க ஒக்காரலாம்?" என்று காட்டு கத்தல் கத்த ஆரம்பித்தார். சத்தம் கீழ் தளம் வரை கேட்க, சாமிக்கண்ணுவும் அங்கே சென்றுவிட்டார். சுதீப்பின் அம்மாவுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. அவனை இழுத்து வந்து வீட்டில் விட்டு விட்டு, மேலே சென்று மன்னிப்பு கேட்டாள். 

அப்போதும் கோபம் தணியாத அந்த முரட்டு பெரியவர், "நீங்க உங்க பையனை வெளியிலே விட்டது தப்புங்க. எனக்கு இரத்த கொதிப்பு அதிகமாகுதில்ல? இந்த பித்து பிடிச்ச பிள்ளையை இனி கட்டி போடுங்க"" என திரும்ப ஆரம்பித்தார். இவ்வளவுக்கு அவரும் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். சட்டென்று சாமிகண்ணுவுக்கு கோபம் தலைக்கேறியது. "நீ வாம்மா இந்த ஜடம் கிட்ட பேசி புண்ணியமில்லை" என ரௌத்திரம் கண்களில் பொங்க  கத்துகின்றார். ஏளன சிரிப்புடன், அந்த பெரியவர் "டீக்கும் , சோத்துக்கு இங்க வந்து தானே ஆகணும்" என்று தன் எஜமான கர்வத்தை சீரும் பாம்பின் தொனியில்  வெளிப்படுத்துகிறார். சாமிக்கண்ணு தானும் அதை விட சீற்றம் கொண்ட பாம்பினை போல, " ஓஞ்சோறு எனக்கு விஷம்தான்யா போ" என்று  அடிக்கமாட்டாத குறையாக பேச, சுதீப்பின்  அம்மா அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு கூட்டி வந்தாள். 

"எனக்கு அந்த ஆள் மேல கூட கோபமில்லை மா. அவனை பேச விட்டு , நம்ம பையனை  இப்படி பேசாம வெச்ச  அந்த சாமி மட்டும் எங்கண்ணுக்கு சிக்குனா, நாலு சாத்து சாத்துவேம்மா..." என நா தழு தழுக்க, கண்கள் பனிக்க நின்றார். சுதீப்பிற்கு என்ன தோன்றியதோ, அவர் பக்கம் வந்து கைகள் பிடித்து நின்று சிரித்தான். அவன் அம்மா, கவலைப்படாதீங்க சாமியண்ணா...எனக்கு யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. பித்தனுக்கெல்லாம் பித்தன், அந்த சிவன் இருக்கான். அவன் அருளால் பிறந்தவன் இவன். இவனை நல்லா பாத்துகறதை தவிர வேற நெனைப்பில்லை. மத்ததை அந்த சிவன் பாத்துக்குவான் என்று சொல்லி, தீர்க்கமாய் சிரித்தாள்.

35 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. இறைவன் படைப்பில் ஆயிரம் விதம். ஒன்றைத்தரும் இறைவன் மற்றொன்றை தர அப்போது மறந்து விடுவான். உரிய நேரத்தில் அதையும் தந்து நம்மையும் சந்தோஷமடையச் செய்து அவனும் சந்தோஷிப்பான். இதுதானே உலக நியதி.

    அந்த நம்பிக்கையுடன் காத்திருக்கும் சுதீப் தாய்க்கும் அவன் கண்டிப்பாக கருணை செய்வான். கதையை நன்றாக முடித்திருக்கும் சகோதரி வானம்பாடி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    கதைக்கேற்றபடி ஓவியம் வரைந்திருக்கும் சகோதரர் கெளதமன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. சுதீப்பிற்கு எல்லாம் நலமாகும் என்று நம்புவோம். சிறிய கதை நிறைவாக...

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அனைவரும் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். இறை அருள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  6. கண்முன்னால் நடப்பது போல ஒரு சம்பவக் கதை.
    அழகாக எழுதி இருக்கிறார் வானம்பாடி.

    சித்தம் சரியில்லாமல் போனாலும் காக்க ஒரு அன்னையும் ,சாமிக்கண்ணுவும் இருப்பது நலமே.
    சுதீப் வளமாக இருந்து
    அவன் பெற்றொருக்கும் நிம்மதி கொடுக்க வேண்டும்.
    இந்த மாதிரி பெற்றோரையும் குழந்தைகளையும் அருகிருந்து
    பார்த்த அனுபவம் உண்டு.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் அன்பின் வணக்கம் ...

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  8. இது மாதிரியான மூடர்களைப் பார்த்திருக்கின்றேன்..

    கதையை நன்றாக நடத்திச் சென்றிருக்கும் வானம்பாடி அவர்களுக்கு பாராட்டுக்கள்...

    வெகு நாட்களுக்குப் பிறகு நல்ல கதை..

    பதிலளிநீக்கு
  9. கதை மிக அருமை.
    "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே" என்பது போல வானம்பாடி சாமி கண்ணு அவர்களுக்கும், சுதீப் பாசபிணைப்பு முன்பே சொல்லி விட்டார். கெளதமன் சாரும் அந்த பாசப்பிணைப்பை படம் வரைந்து இருக்கிறார்.

    "எனக்கு அந்த ஆள் மேல கூட கோபமில்லை மா. அவனை பேச விட்டு , நம்ம பையனை இப்படி பேசாம வெச்ச அந்த சாமி மட்டும் எங்கண்ணுக்கு சிக்குனா, நாலு சாத்து சாத்துவேம்மா..." என நா தழு தழுக்க, கண்கள் பனிக்க நின்றார். சுதீப்பிற்கு என்ன தோன்றியதோ, அவர் பக்கம் வந்து கைகள் பிடித்து நின்று சிரித்தான். //

    இந்த மாதிரி சிறப்பு குழந்தைகளிடம் அன்பு செலுத்துபவர்கள் வேண்டும்.
    கதை நன்றாக இருக்கிறது.
    கடைசியில்

    பதிலளிநீக்கு
  10. நல்ல கதை...

    செவிச் செல்வம் மேன்மையாக இருக்கும்... அதுவும் சிறப்பாக பெருகட்டும்...

    பதிலளிநீக்கு
  11. நல்ல கதை. சில குழந்தைகள் இவ்வாறாக அமைந்து விடுவது கவலை .

    சாமிக் கண்ணுக்கு உள்ள அன்பான புரிந்துணர்வு அப் பெரியவருக்கு இல்லை என்பதுதான் கவலை தரும் விஷயம்.
    படமும் நன்று.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  13. கதை படித்து, கருத்து தெரிவித்த அனைத்து அண்புள்ளங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  14. கதைக்கு ஏற்றபடி மிக அருமையான ஓவியம் !

    பதிலளிநீக்கு
  15. நல்ல கதைக்கரு. ஆனால் இன்னும் எதுவோ சொல்லாமல் விட்டுப் போன உணர்வு. சுதீப் போன்ற குழந்தைகளை நிறையவே பார்த்தாச்சு. இப்போல்லாம் மக்கள் மாறி வருகின்றனர் என்றாலும் இன்னமும் சிலர் மாறாமல் இருப்பதை அந்த ஆசிரியரின் தந்தை மூலம் அறிய வருகிறது. பித்தனுக்குப் பித்தனே அருள்வான் எனப் பொறுமையுடன் காத்திருக்கும் சுதீப்பின் அம்மாவுக்கு விரைவில் அவன் அருள் கிட்ட வேண்டும்.கூடவே துணை நிற்கும் சாமிக்கண்ணுவின் பெருந்தன்மை அளவிட முடியாதது. முடிக்கும்போது அவசரப் பட்டுட்டாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி கீதாம்மா. நிஜத்தில் நாம் காணும் சில சம்பவங்கள், மனதில் திரும்ப திரும்ப தோன்றி என்றும் நினைவில் நிற்கும். அவ்வாறான ஒரு சம்பவம் இந்த கதை. கதையில் குறை இருப்பின் மன்னிக்கவும். இக்கதையில் நான் சொல்ல வந்த கருத்து, எளிய மனிதகளுக்கு இருக்கும் அன்பும், பரிவும் மெத்த படித்த, சமூகத்தில் சகலமும் தெரிந்தவர்களாக வலம் வரும் மனிதர்களுக்கு பண்பட்ட மனது இருப்பதில்லை...மனிதர் உணர்வுகளை மனிதர் மதிக்காத போக்கு அதிகமாகிவிட்டது.

      நீக்கு
  16. கதை நல்ல கதை. குறிப்பாகச் சிறப்புக் குழந்தை பற்றி சொல்லியிருப்பது. என் தங்கையின் மகன் சிறப்புக் குழந்தைகளில் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்ட குழந்தை.

    அந்தப் பெரியவரையும் அதிகமாகக் குற்றம் சொல்ல முடியாது ஏனென்றால், பல பெரியவர்களுக்கு இந்தப் பிரச்சனை புரிவதில்லை. ஏன் பெற்றோருக்குமே கூட. Awareness என்பது வேறு. அது இருந்தாலுமே புரிந்துகொள்ளுதல் என்பது வேறு.

    பாதிக்கப்பட்ட குழந்தை ஆண் என்றாலும் பெண் என்றாலும் கஷ்டம் அதுவும் பருவ வயது வரும் போது பாதுகாப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு அனுபவம் உண்டு....அதை வைத்து ஒரு கதை எழுதத் தொடங்கி ஹிஹிஹிஹி....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்துகொண்டாலும் கையாளுதல் என்பது இன்னும் வேறு. அசாத்திய பொறுமை வேண்டும். அதாவது அகராதியில் சொல்லப்பட்டிருக்கும் பொறுமை என்பதையும் மீறி அளவு கடந்த பொறுமை, அன்பு அதே சமயம் கண்டிப்பு. இவர்களுக்குக் கண்டிப்பும் மிக அவசியம் அதை கத்தி மேல் நடப்பது போன்று கையாளவேண்டும். இது பொறுமை மிக மிக மிக எத்தனை மிக வேண்டுமானலும் போட்டுக் கொள்ளலாம்....அவசியம்.

      கீதா

      நீக்கு
    2. என திரும்ப ஆரம்பித்தார். இவ்வளவுக்கு அவரும் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.//

      ஆசிரியராக இருந்தாலுமே கடினம்தான்.

      கீதா

      நீக்கு
    3. தங்கள் கருத்துக்கு நன்றி கீதக்கா...இத்தகைய குழந்தைகளை கையாள்வது கடினமே...அன்பும், பொறுமையும் நிறைய வேண்டும். இவர்களிடம் ஒளிந்திருக்கும் தனித்திறமையை கண்டுபிடித்து ஒவ்வொன்றையும் செய்யவைப்பது சுலபம் அல்ல. எல்லா முயற்சிகளும் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் மேற்கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பாகவும் உணரவைக்க வேண்டும்.இக்கதையில் வருகின்ற சுதீப்பின் அம்மாவும் அத்தகையவளே...தெய்வத்தின் மீதான நம்பிக்கை மனதிற்கு அமைதி தரும். நம் கைகளில் எதுவுமில்லை என அறிந்த பக்குவமும், கள்ளம் கபடமற்ற குழந்தை தனக்காகவே தெய்வம் கொடுத்திருக்கிறார் என்கின்ற நினைவும் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்க்கு முனைப்பை தருகின்றது. புற உலகில் இவர்களுக்கு ஏற்படுகின்ற சிறு சிறு தொல்லைகள் இவர்களை பாதிப்பதில்லை. இவற்றை விட அவர்கள் மேற்கொள்ள வேண்டிய மலைக்கு ஈடான செயகள் அதிகம்.

      நீக்கு
  17. திரு கௌதமன் அவர்களின் ஓவியம் நன்றாக இருக்கிறது. சாமிக்கண்ணு/அல்லது அந்தத் தாத்தா? முகம் மட்டும் ஃபோட்டோ போல் தெரிகிறதே! !!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துகள் வானம்பாடி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. கௌ அண்ணா கதைக்கு ஏற்ப படம் வரைந்தது நன்று

    கீதா

    பதிலளிநீக்கு
  20. வானம்பாடிக்கு கதை நன்றாகச் சொல்லியிருக்கீங்க. இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாமோ. என்றும் தோன்றியது. ஏதோ ஒன்று குறைவது போல .இடையில்?..முடிவில்?

    இக்குறைபாடுகளுக்குத் தீர்வு உண்டா என்றால் என் சிறிய அறிவிற்கு எட்டியவரை இல்லை. யதார்த்தாமாக எடுத்துச் செல்வதுதான் நல்லது என்பது என் தனிப்பட்டக் கருத்து. பிரார்த்தனைகள் நம் மனதை அமைதியாகப் பொறுமையாகக் கையாள வைக்குமே அன்றி...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. என்னோட கருத்துகள் எல்லாம் எங்கே போனதோ! ஏதோ இரண்டானும் வந்திருக்கு. அதுவரை சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  22. கருத்துள்ள கதை. பாராட்டுகள் காயத்ரி சந்திரசேகர் ஜி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!