செவ்வாய், 14 ஜூன், 2022

​படித்த கதை - குதிரைக்கொம்பு - அப்பாதுரை

 

குதிரைக் கொம்பு


இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும் தர்மிஷ்டராகவும் இருந்து, இகத்தில் இன்பங்களை எல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்.

அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவனாகிய பரதனுக்குப் பட்டம் கட்டாமல் தனக்கே பட்டம் கட்டிக் கொள்ள விரும்பி, தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்குப் பெருங்கோபமுண்டாகி, ராமனையும் லக்ஷ்மணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான்.

அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிப்போய், அந்நகரத்து அரசராகிய ஜனகனைச் சரணடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகைக் கண்டு மோகித்து, அவளைத் திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டகாரண்யம் புகுந்தான். அங்கு ராம லக்ஷ்மணர்கள், முனிவர்களை எல்லாம் பல விதங்களிலே ஹிம்சை செய்தனர். யாகங்களைக் கெடுத்தனர்.

இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்துவந்த சூர்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமண குலமானபடியாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்க மாட்டாதவளாய், அவள் ராமனையும் அவன் தம்பி லக்ஷ்மணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வரும்படி தன் படையினிடம் உத்தரவு கொடுத்தாள். அப்படியே ராம லக்ஷ்மணரைப் பிடித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்பநகையின் சன்னிதியில் கொண்டு சேர்த்தனர். அவள் அவ்விருவரையும் கட்டவிழ்த்து விடும்படி செய்து, பல விதமான கடூர வார்த்தைகள் சொல்லி பயமுறுத்திய பிறகு, ராஜபுத்திரர்களாகவும் இளம் பிள்ளைகளாகவும் இருந்தபடியால் இதுவரை செய்த துஷ்ட காரியங்களையெல்லாம் க்ஷமிப்பதாகவும், இனிமேல் இவ்வித காரியங்கள் செய்தால் கடுந்தண்டனை கிடைக்குமென்றும் சொல்லி நானாவிதமான புத்தி புகட்டிய பின்பு, அவர்களைச் சிறிது காலம் அரண்மனையிலிருந்து விருந்துண்டு போகும்படிச் செய்தாள்.

அப்போது சீதை, ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தான் என்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சூர்பநகையிடம் தனியாக வார்த்தை சொன்னாள். இதைக் கேட்டு சூர்பநகை மனமிரங்கி, ராமன் மறுபடியும் திருட்டாகக் கவர்ந்து கொண்டு விடக் கூடும் என்று நினைத்து, சீதையை இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து பாதுகாப்புடன் மிதிலைக்கு கொண்டு சேர்க்கும் படி அண்ணன் ராவணனுக்கு சொல்லி அனுப்பினாள்.

சீதை பத்திரமாக ராவணனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தவுடனே, அவளை மிதிலைக்கு அனுப்ப நல்ல நாள் பார்த்தார்கள். அந்த வருஷம் முழுவதும் நல்ல நாள் அகப்படவில்லை. மறு வருஷமும் நல்ல நாள் கிடைக்கவில்லை. ஆகையால் சீதையை இரண்டு வருஷம் தனது அரண்மனையிலேயே தங்கி விட்டுப் போகும்படி ராவணன் ஆக்கினை செய்தான்.

தண்டகாரண்யத்தில் ராமன் சூர்பநகையிடம் "சீதை எங்கே?" என்று கேட்டான். மிதிலைக்கு அனுப்பி விட்டதாகச் சூர்பநகை சொன்னாள். "எப்படி நீ இந்தக் காரியம் செய்யலாம்?" என்று கோபித்து லக்ஷ்மணன் சூர்பநகையை நிந்திக்கலானான். அப்போது சூர்பநகை தன் இடுப்பில் இருந்த பழம் நறுக்கும் கத்தியை எடுத்து லக்ஷ்மணனுடைய இரண்டு காதுகளையும் கால் கட்டை விரல்களையும் நறுக்கி விட்டாள். இவளுடைய வீரச் செய்கையைக் கண்டு ராமன் இவள் மேல் மோகம் கொண்டு, "அட! சீதையைத் தான் மிதிலைக்கு அனுப்பி விட்டாய், என்னை நீ விவாகம் செய்து கொள்ளு" என்றான். இதைக் கேட்டவுடனே, சூர்பநகை கன்னமிரண்டும் சிவந்து போகும்படி வெட்கப்பட்டு "நீ அழகான பிள்ளை தான். உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் அண்ணா கோபித்துக் கொள்வார். இனிமேல் நீ இங்கிருக்கலாகாது. இருந்தால் அபவாதத்துக்கு இடமுண்டாகும்" என்றாள்.

அப்போது ராமன், "சீதையை எப்போது மிதிலைக்கு அனுப்பினாய்? யாருடன் அனுப்பினாய்? அவள் இப்போது எவ்வளவு தூரம் போயிருப்பாள்?" என்று கேட்டான். அதற்கு சூர்பநகை, "இனிமேல் சீதையின் நினைப்பை விட்டு விடு. அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பி இருக்கிறேன். அவன் அவளை மிதிலைக்கு அனுப்பக் கூடும். எது வேண்டுமானாலும் செய்யக் கூடும். மூன்றுலகத்துக்கும் அவன் அரசன். சீதையை மறந்து விடு" என்றாள். இதைக் கேட்டு ராமன், எப்படியேனும் சீதையை மீட்க வேண்டுமென்று நினைத்து அங்கிருந்து வெளியேறி, வழியில் கிஷ்கிந்தா நகரத்துக்கு வந்து சேர்ந்தான்.

அந்தக் கிஷ்கிந்தா நகரத்தில் அப்போது சுக்ரீவன் என்ற ராஜா அரசு செலுத்தி வந்தான். இவனுக்கு முன் இவனுடைய தமயனாகிய வாலி ஆண்டான். வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சிநேகம். இரண்டு பேருமே ஒரே வகுப்பில் கணக்கு வாசித்தார்கள். மூன்று உலகிலும் கப்பம் வாங்கின ராவணன் கிஷ்கிந்தா பட்டினத்துக்கு வாலி யாதொரு கப்பமும் செலுத்த வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டான். இந்த வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்ரீவன் இவன் கழுத்தை மண் வெட்டியால் வெட்டி எறிந்துவிட்டு, அவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்து கொண்டு, அனுமான் என்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்ஜியத்தை வசப்படுத்திக் கொண்டான்.

இதைக் கேட்டு ராவணன் மகா கோபத்துடன், சுக்ரீவனுக்கு பின்வருமாறு ஓலை எழுதி அனுப்பினான்: " கிஷ்கிந்தையின் சுக்ரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது. நமது சிநேகிதனைக் கொன்றாய். உனது அண்ணனைக் கொன்றாய். அரசைத் திருடினாய். இந்த ஓலையைக் கண்டவுடன் தாரையை இலங்கையில் உள்ள கன்யா ஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்ஜியத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும். நீ சந்நியாசம் பெற்றுக் கொண்டு ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறி விட வேண்டும். இந்த உத்தரவுக்கு கீழ்ப்படாத விஷயத்தில் உன் மீது படையெடுத்து வருவோம்" 

உத்தரவு கண்டவுடன் சுக்ரீவன் பயந்து போய் அனுமானை நோக்கி "என்ன செய்வோம்?" என்று கேட்டான். அனுமான், "வாலியிடம் பிடித்துக் கொண்ட தாரையையும், பதினேழு வயதுக்குட்பட்ட வேறு பதினேழரை கோடிப் பெண்களையும், ராவணனுக்கு அடிமையாக அனுப்ப வேண்டும். ராவணனாலே ஆதரித்துப் போற்றப்படும் வைதீக ரிஷிகள் யாகச் செலவுக்காக நாற்பது கோடி ஐம்பது லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இருநூற்று நாற்பது ஆடு மாடுகளும், தோற் பைகளில் ஒவ்வொரு பை நாலாயிரம் படி கொள்ளக் கூடிய அளவு நானூறு கோடிப் பைகள் நிறைய சோமரசம் என்ற சாறும் அனுப்பி, அவனைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும். இளவரசுப் பட்டம் அங்கதனுக்குச் சூட்டுவதாகவும், வருஷந்தோறும் நாலாயிரம் கோடிப் பொன் கப்பம் காட்டுவதாகவும் தெரிவிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் பிழைப்போம்" என்றான்.

சுக்ரீவன் அப்படியே எல்லாவற்றையும் சேகரம் பண்ணி, அனுமான் சொன்னபடி தூதர்களிடம் கொடுத்தனுப்பினான். தூதர்கள் ஆடு மாடுகளையும், வழியில் குடித்தது போக மிச்சமிருந்த சாறையும், ராவணன் அரண்மனையில் சேர்த்தார்கள். ஏகமாகக் குடித்து விட்டு தாறுமாறாக வேலை செய்ததால், பெண்களையும் பணத்தையும் முனிவர்களிடம் கொடுத்தார்கள். ஓலையை ராவணனிடம் கொடுத்தார்கள்.

ராவணன் தன் நண்பர்களுடன் ஆடுமாடுகளைக் கொன்று தின்று விட்டு, சாறையும் குடித்து விட்டு, ஓலையைப் பிரித்து வாசித்துப் பார்த்தான். அடிமைப் பெண்களும் பணமும் ஏன் தன் வசம் வந்து சேரவில்லை என்று விசாரணை செய்தான். அதை எல்லாம் முனிவர்களின் மடங்களில் சேர்த்து விட்டதாகவும், அவர்கள் உடனே அந்தப் பணங்களை எல்லாம் யாகத்திலே தக்ஷிணையாக்கி எடுத்துக் கொண்டபடியால் இனிமேல் திருப்பிக் கொடுப்பது சாஸ்திர விரோதமென்று சொல்லுவதாகவும், அடிமைப் பெண்கள் பெரும்பாலும் ஓடிப் போய்விட்டதாகவும், செய்தி கிடைத்தது.

கோபம் கொண்ட ராவணன், தூதர்களை உடனே கொல்லச் சொல்லிவிட்டு, அந்தக் க்ஷணமே சுக்ரீவன் மேல் படை எடுக்குமாறு சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான். நல்லதென்று சொல்லி சேனாதிபதி படைகளைச் சேகரித்தான். படைகளைச் சேர்த்த பிறகு நல்ல லக்னம் பார்த்து அனுப்ப வேண்டுமென்று, ராவணன் காத்துக் கொண்டிருந்தான். இந்த விவரமெல்லாம் வேவுக்காரர் மூலமாகக் கிஷ்கிந்தைக்கு எட்டி விட்டது. உடனே அனுமான் சொற்படி சுக்ரீவன் தனது படைகளை சேர்த்தான். இதற்குள்ளே அனுமான் தன்னுடைய ஜாதி லேசான குரங்கு ஜாதியாகையினால், விரைவாக குரங்குப் படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். அந்த வழி வந்த ராம லக்ஷ்மணரும், ஆகா, நல்லதாகப் போனதென்று, அந்தக் குரங்குச் சேனையிலே போய்ச் சேர்ந்தனர்.

இவர்கள் இலங்கைக்கு வருமுன்னாகவே ராவணன் சேனையில் இருந்த ஒரு பகுதியினர், இவர்களை எதிர்த்து அநேகம் பேரைக் கொன்று முடித்து விட்டனர். ராம லக்ஷ்மணர் மாத்திரம் சேனையின் சில பகுதிகளை வைத்துக் கொண்டு, வேஷம் போட்டு ராவண சேனையுடன் கலந்து ரகசியமாக இலங்கைக்குள் வந்து நுழைந்து விட்டார்கள். உள்ளே வந்ததும் வேஷத்தைக் கலைத்தார்கள். உடனே ராவணன் 'ஹா ஹா ஹா' என்று கத்தினான். 'நமது நகரத்துக்குள் துஷ்ட மனித சேனை வருவதா? ஹா, ஹா, ஹா!' என்று பேரிரைச்சல் போட்டான். அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாகி விட்டான். சூரிய மண்டலம் தரை மேல் விழுந்தது.

ராமனுடைய சேனைகளை எல்லாம் அழித்து, அவனையும் அவன் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, பின் அவர்கள் ராஜகுமாரர் என்று இரக்கப்பட்டு அவர்களைக் கொல்லாமல் விட்டான். ராம லக்ஷ்மணர்களை இரக்கத்தினால் கொல்லாமல் விட்ட ராவணன், அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்தான். பின்னர் சில நாள் கழித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள். ஜனகன், மிகுந்த கிருபை கொண்டு, திருட்டாகக் கவர்ந்து கொண்டு போன அந்த ராமனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்தான்.

ராம லக்ஷ்மணர்கள் அயோத்திக்குப் போய், பரதனுக்கு அடி பணிந்து நடந்தார்கள். இது தான் நிஜமான ராமாயணக் கதை.


&nbsp &nbsp நீங்கள் இதுவரைப் படித்தது 'குதிரைக் கொம்பு' கதையின் ஒரு கிளைக்கதை. சிலருக்கு இந்தக் கதையின் உட்கருத்து புரிந்திருக்கலாம். சிலருக்கு முற்றிலும் புதுமையாக இருந்திருக்கலாம். இதுவரை பொறுமையாகப் படித்ததற்கு நன்றி. இனி 'குதிரைக் கொம்பு' கதை.


&nbsp &nbsp சிந்து தேசத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன், சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் என்று சொல்லிக் கொண்டனர். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்த பல பண்டிதர்கள் விளங்கினார்கள்.

ஒரு நாள் சபையாரை நோக்கி அரசன், 'குதிரைக்கு ஏன் கொம்பில்லை?' என்று கேட்டான். 

பண்டிதர்கள் எல்லோரும் திகைத்துப் போய் நிற்கையில், வக்கிரமுக சாஸ்திரி என்னும் பண்டிதர், தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். "கேளீர் ரீவண மகாராஜா, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட உமது மூதாதையர் ராவணேசுவரன் ஆக்கினைப்படி பிரம்மதேவன் குதிரைகளுக்கு கொம்பு வைக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டான்" என்றார் வக்கிரமுக சாஸ்திரி.

இதைக் கேட்டவுடன் ரீவணன் உடல் பூரித்துப் போய், "அதென்ன விஷயம்? அந்தக் கதையை விஸ்தாரமாகச் சொல்லும்" என்றான்.

அரசன் அனுமதி தந்தவுடன், மேற்படி வக்கிரமுக சாஸ்திரி "இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும் தர்மிஷ்டராகவும் இருந்து, இகத்தில் இன்பங்களை எல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்" என்று கதை சொல்லத் தொடங்கி, "இது தான் நிஜமான ராமாயணக் கதை" என்று ரீவணன் சபையிலே சொல்லி முடித்தார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டபின், ரீவணன், "சாஸ்திரியாரே, குதிரைக்கு ஏன் கொம்பில்லை என்றால் அதற்கு மறுமொழி இன்னும் வராமல், ஏதோ கதை சொல்லி முடிக்கிறீர்களே?' என்றான்.

அதற்கு வக்கிரமுக சாஸ்திரி, "ராமன் இலங்கைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த செய்தி கேட்டு, ராவணன் 'நமது நகரத்துக்குள் துஷ்ட மனித சேனை வருவதா? ஹா, ஹா, ஹா!' என்று பேரிரைச்சல் போட்டான் என்று சொன்னேனே? அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாகி விட்டான். சூரிய மண்டலம் தரை மேல் விழுந்தது என்றும் சொன்னேனன்றோ? அப்படி விழுந்த போது, சூரியனுடைய குதிரை ஏழுக்கும் கொம்பு முறிந்து போய் விட்டது.

சூரியன் ராவணனுடைய பாதத்திலே வந்து விழுந்து, 'சுவாமி, என் குதிரைகள் சாகா வரமுடையன. இவற்றைப் போல வேறு கிடையாது. உங்கள் கூச்சல் கேட்டு பயந்து கீழே விழுந்து இவற்றுக்கு கொம்பு முறிந்து போய் விட்டது. இனி உலகத்தாரெல்லாம் என்னை நகைப்பார்களே, என்ன செய்வேன்?' என்று அழுது முறையிட்டான்.

ராவணன் அந்தச் சூரியனிடம் கிருபை கொண்டு, பிரம்ம தேவனை அழைத்து, 'இனி மேல் ஒரு குதிரைக்கும் கொம்பில்லாதபடி படைக்க வேண்டும்' என்று ஆக்கினை இட்டான். அது முதலாக இன்று வரை குதிரைக்குக் கொம்பில்லாமல் பிரம்மதேவன் படைத்து வருகிறான்" என்றார்.

இவ்விதமாக வக்கிரமுக சாஸ்திரி சொல்லியதைக் கேட்டு ரீவணன் பெரும் மகிழ்ச்சி கொண்டு மேற்படி சாஸ்திரிக்கு அக்ஷரத்துக்கு லக்ஷம் பொன்னாக, அவர் சொல்லிய கதை முழுவதிலும் எழுத்தெண்ணிப் பரிசு கொடுத்தான்.

கதை எழுதியவர் யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா? ர்யாதிரபா.

பத்து வருடங்களுக்கு முந்தைய மூசு மீள்பதிவு.

27 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. வாழ்க வளமுடன்!

      நீக்கு
    2. கணையே, காலையில, கலக்கமூட்டுவதாக இருக்கிறதே.. கதையைப் படித்துவிட்டுத்தானே கருத்து எழுதினீர்கள் கமலா ஹரிஹரன் மேடம்? ஹா ஹா ஹா

      நீக்கு
    3. நீங்க தான் ஒண்ணில்லை, நான்கு கண்ணாடி போட்டுக்கணுமோ நெ.த.? அவங்க கதை குறித்த கருத்தே இன்னமும் சொல்லலை. காலை வாழ்த்துகள் தான் தெரிவிச்சிருக்காங்க. :))))) கவனமாகப் படிங்க. இங்கேயே இப்படின்னா பள்ளிக்கூடம், கல்லூரியில் எல்லாம் எப்படிப் படிச்சிருப்பீங்களோ? :))))))))) இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா. காலை நேரத்து அவசரத்தில் கதையை (ஆமாம்... கணையா.. கதையா... ஆனால் முதலில் படிக்க ஆரம்பிக்கும் போதே கணை மாதிரிதான் தாக்குகிறது. முழுதும் படித்து விட்டு வருகிறேன்.) படிக்கவில்லை. இப்போதுதான் படிக்கிறேன். நன்றி.

      நீக்கு
  2. பாரதியின் இந்தக் கதையைப் படிச்சிருக்கேன். ஹிஹிஹிஹி, காலை வேளையில் அப்பாதுரை நன்றாகச் சிரிப்பு மூட்டிட்டார். இதை நான் இன்று எதிர்பார்க்கவே இல்லை. :)))))

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொற்றுத் தொடராமல் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கும்படியும் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. இதுக்கு மத்தவங்க என்ன கருத்துச் சொல்லப் போறாங்கனு தெரிஞ்சுக்க ஆவலுடன் இப்போப் போயிட்டுப் பின்னர் வரேன். பாரதியார் இப்படியும் எழுதி இருப்பாரானு தோணும். :)))))

    பதிலளிநீக்கு
  5. படித்தவுடன் மனதில் தோன்றியது. என்னதான் satire என்றாலும் சகிப்புத் தன்மை சிறிதும் இல்லாத இக்காலத்தில் பாரதியார் உயிரோடு இருந்தால் நடக்கும் கதை : நினைக்கவே பயமாக இருக்கிறது.

    அடுத்த காமெடி "ஸ்ரீராம்" இந்த கீமாயணத்தை வெளியிட்டது. பார்த்து. ஆட்டோ ஏதாவது வரப்போவது?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதன் உள் கருத்தைப்புரிந்து கொண்டால், "கீமாயணம்" என்று சொல்லி இருக்க மாட்டீர்கள். :)

      நீக்கு
  6. பாரதியும் வித,தியாசமாகத்தான் எழுதியிருக்கிறார். முழுக்கதை படித்த நினைவு இல்லை

    பதிலளிநீக்கு
  7. புதிய ராமாயணம் படிக்க சுவையாகத்தான் இருக்கிறது. இதேபோல் மகாபாரதத்தையும் எழுதுவீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதினது பாரதியார்! அப்பாதுரை இல்லை. என்றாலும் அவருடைய பதில்களும் இங்கே கொடுப்பார் என நம்புகிறேன்.

      நீக்கு
  8. இதுவரை நான் அறிந்திராத கதை. குதிரை படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  9. இதுவும் நல்லாத்தான் இருக்கு...! இதிலிலும் இராவணனின் கற்பு காப்பாற்றப்பட்டு விட்டதே...! அடடே...!

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  11. பாரதியார் எழுதிய கதையா? படித்த நினைவு இல்லை.
    குதிரைக்கு கொம்பில்லாமல் போன கதையும் இப்போதுதான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. எந்த இராமாயணமென்றாலும், இராவணன் கற்றறிந்த பிராமணன் என்பதை மாற்றவில்லையே

    பதிலளிநீக்கு
  13. குதிரைக்கொம்பு எவ்வாறு கிடைத்தற்கு அரியதோ அம்மாதிரி தன்னலமற்ற தலைவர்களைக் காண்பது அரிது என்பதை பாரதி அக்கால அரசியல் சூழலுக்கேற்பச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இதன் முழு வடிவம் முன்னாடி தஞ்சாவூரில் இருந்த/இருக்கும் பாரதி சங்கம் பாரதியாரின் கதைகளைத் தொகுத்து வெளியிட்ட போது இதுவும் இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்சமயம் அந்த வலைத்தளமே திறப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  14. மேலும் இந்தக் கதை எழுதிய தருணம் பற்றியும் திரு சீனி.விஸ்வநாதன் அவர்கள் எழுதி இருக்கார். நான் அறிந்தவரையில் கையில் ஒரு தம்பிடி கூட இல்லாத நிலையில் சுப்ரமண்ய பாரதியாருக்குக் கட்டுரை எழுதும்படி சுதேசமித்திரன் ஆசிரியர் கட்டளை இட்டதாகவும், அவர் தொனி பிடிக்காமல் பாரதியார் இப்படி ஒன்றை எழுதிக் கொடுத்ததாகவும் கூறுவார்கள். ஒரு வார்த்தைக்கு இத்தனை காசு என பாரதிக்கு அப்போது கொடுத்து வந்ததாகவும் கேள்விப் பட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. படித்தவுடன் கொஞ்சம் 😇 மட்டும் வந்தது. மற்றபடி நகைச்சுவையாக இருந்தது. இந்த இராமாயண மாற்ற கதையில் விபீஷணன் மட்டும் ஏன் எந்த ஒரு "நல்ல" பெயரையும் எடுக்கவில்லை என்ற ஐயம் வந்தது. ஹா.ஹா.ஹா.

    அவரை இராமாயண புராணத்திலிருந்து முற்றிலுமாக நீக்கி விட்டார்களா? நல்ல வேளை இந்த மட்டும் அவர் மட்டும் எப்படியோ தப்பித்தார் எனவும் எண்ணத் தோன்றுகிறது

    நடிகர் ராஜேஷ் நடித்த ஒரு இராமாயணத்தில் சீதை அவர் மகளாக பிறந்திருப்பதாக கதையை முற்றிலும் மாறுபட்டு காண்பித்திருந்தார்கள். நான் அந்த படத்தை பார்த்துள்ளேன். இந்தக்கதையை படிக்கும் போது அந்த நினைவு வந்தது. ஒரு வேளை இதன் தழுவலோ அந்த திரைப்படம்.? தெரியவில்லை.

    கதையின் உபகதையும் நன்றாக உள்ளது. குதிரை கொம்பு கிடைப்பதற்கு அரிதாக சொல்லபடுவதால் இந்த கதைக்குப் பொருத்தமாக உள்ளது.

    சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் கொடுத்த விபரங்களும் படித்து தெரிந்து கொண்டேன். அவர்தான் இந்த கதையை எழுதியது பாராதியார்தான் எனவும், கதையை தானும் படித்துள்ளதாகவும் பாரதியார் எந்த சூழலில் இதை எழுதினார் எனவும் கூறியுள்ளார். அவரின் கருத்து விபரங்களுக்கும் கொடுத்த வித்தியாசமான கதை பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. பாரதியாரின் கோணத்தில் புதிய இராமாயணம் சுவை.

    பதிலளிநீக்கு
  17. sho(rt/ck)story ! பாரதியின் இலக்கிய விஷமம்! இப்படி அடிக்கடி ஆடியிருப்பாரோ அந்தப் பொல்லாதகாலத்தில். புரிந்துகொண்டிருந்திருக்கமாட்டார்கள் பெரும்பாலும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!