செவ்வாய், 21 மார்ச், 2023

குறுந்தொடர் : இறைவன் இருக்கின்றான் 3/7 - ஜீவி

         

            இறைவன் இருக்கின்றான்   
   
ஜீவி    
                           
      3        
முந்தைய பகுதிகள் : 2
து ஏன் என்று தெரியவில்லை. கூப்பிட்டுப் பேசுவதாகச் சொன்ன சந்திரமோகன் அப்புறம் பேசவே இல்லை.

சிதம்பரத்திலிருந்து சுகுமாரனும் சொன்னபடியே காலை ரயிலில் வந்து விட்டார். இதுவரை பார்த்த மெடிகல் ரிப்போர்ட் எல்லாம் எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இந்த உடற் பரிசோதனை முடிவுகளை வைத்துத்தான், மேல்கொண்டு என்ன செய்வது என்கிற ஸ்பெஷலிஸ்ட் ஆலோசனைக்காக வந்திருந்தார்.

சுகுமாரனின் தம்பி மனைவி தான் பேஷண்ட். அவர் சிதம்பரம் மருத்துவமனை ஒன்றில் படுத்த படுக்கையாக இருக்கிறார். தம்பி ஆஸ்பத்திரியில் தன் சம்சாரத்திற்குத் துணையிருக்க இவர் இங்கு வந்திருக்கிறார். அந்த ஆஸ்பத்திரி டாக்டரும் நோயாளியின் உடற்கோளாறுகள் குறித்து நீண்ட அறிக்கை கொடுத்திருந்தார். அதுவும் மூடிய உறை ஒன்றில் இட்டு சுகுமாரனின் வசம் இருந்தது.

ஆச்சு. ஒன்பது மணி வரை சந்திரமோகனிடருந்து அழைப்பே இல்லை. எனக்கும் மறுபடியும் அவனைக் கூப்பிட்டுப் பேச பிடிக்கவிலலை. 'இவன் என்ன பரிந்துரைப்பது, நாமே போய் பார்த்துக் கொண்டால் போச்சு' என்று சுகுமாரனை அழைத்துக் கொண்டு டாக்டர் கிளினிக்குக்குக் கிளம்பி விட்டேன்.

ஆழ்வார்பேட்டையில் சிக்னலுக்குக் கொஞ்சம் தள்ளி இருந்தது, அந்த கிளினிக். நாங்கள் போய்ச்சேரும் பொழுது மணி பத்துக்கு மேலாகி விட்டது. வரவேற்பில் விஷயத்தைச் சொல்லி, மருத்துவரைப் பார்க்க அனுமதி வேண்டினேன். மருத்துவரைப் பார்ப்பது என்பது முன்னாலேயே பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டும் தான் என்றும், இன்று பார்ப்பதற்கான பதிவு எண்ணிக்கை முடிந்து விட்டதினால், நாளை பார்ப்பதற்கு பணம் கட்டி இப்பொழுது பதிவு செய்து கொள்கிறீர்களா என்று என் விருப்பத்தைக் கேட்டார்கள்.

இது எனக்கு எதிர்பாராத ஏமாற்றம். 'முன்னாலேயே பதிவு செய்து கொள்ள வேண்டுமாமே! இதான் முறை என்பது தெரியாமல் போச்சே' என்று வருந்தினேன். 'அடுத்து என்ன செய்யலாம்' என்று யோசிக்க வேண்டியிருந்தது. சுகுமாரனிடம் விஷயத்தைச் சொல்லி ஒரு ஏமாற்றத்தை அவரிடம் ஏற்படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

நேற்றே தொலைபேசியில் விசாரித்து வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது என் தவறு தான் என்கிற ஞானோதயம் வந்து உறுத்தியது. அந்த நியாயமான உணர்வின் அடிப்படையில் இந்த கிளினிக்கின் வழிமுறைகளைத் தாண்டி, ஏதாவது வழிகாணவும் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆக, இங்கு உட்கார்ந்திருப்பதில் அர்த்தம் இல்லை என்கிற நிதர்சன உண்மை தெளிவாகத் தெரிந்த பொழுது தான், இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று என்னை வழிநடத்த அந்த வெளிச்சம் கொஞ்சமும் நான் நினைத்துப் பார்க்காதவாறு கிடைத்தது.

தூரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் எழுந்திருந்து என்னருகில் வந்தார். வந்தவர், என்னருகில் காலியாக இருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டு ஆதுரத்துடன் என்னைப் பார்த்தார். நான் படுகிற அவஸ்த்தைகளைப் பார்த்திருப்பார் போலும். "என்ன விஷயம், சார்? நீங்கள் ஏதோ பதட்டத்தில் இருக்கிற மாதிரி இருக்கிறதே?" என்றார்.

அவர் அனுதாபத்துடன் விசாரித்தது ஆறுதலாக இருந்தது. இவரிடம் இது பற்றிச் சொன்னால் ஏதாவது வழி பிறக்கலாம் என்கிற நம்பிக்கையில் விஷயத்தை அவரிடம் சொல்லி, "நானாவது உள்ளூர்காரன். நாளைக்குக்கூட வருவேன். அந்தப் பெரியவரை சிதம்பரத்தில் இருந்து ஏதோ நம்பிக்கையில் வரவழைத்து விட்டேன். அவருக்கு இருக்கும் அவசரத்தில் இன்றே அவர் ஊர் திரும்பியாக வேண்டும். அதான் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றேன்.

"இதற்கு ஏன் வருத்தப்படுகிறீர்கள்?" என்று சாதாரணமாகச் சொன்னவர், "இந்த கட்டிடத்திலிருந்து சரியாக ஐந்தாவது கட்டிடம். வெளித்தூண்களில் சிவப்பு கலர் பெயிண்ட் அடித்திருக்கும். சதாசிவம் என்று வெளியே டாக்டரின் பெயர்ப் பலகை இருக்கும். அவரும் இதே துறையில் தான் ஸ்பெஷலிஸ்ட். அவரைப் போய் பாருங்கள். உபயோகப்படலாம்" என்றார்.

திடீரென்று மனதில், முகத்தில் பிரகாசம். கையெடுத்து கும்பிட்டு அவருக்கு நன்றி சொன்னேன். சுகுமாரனை அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு போகையில், இந்த விஷயம் தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் வாழ்க்கையில் இதுமாதிரி முன்னால் கூட பலதடவை நடந்திருக்கிறது. இதற்கு மேல் என்ன செய்வது என்று விழிக்கும் இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் 'இப்படி செஞ்சுபார்' என்று வழிகாட்டுகிற மாதிரி யாராவது முன்னே பின்னே கூட அறிமுகமில்லாதவர்கள் வலிய வந்து ஆலோசனை சொல்வார்கள். நிச்சயம் இது மனிதர்களால் நடக்கிற காரியமாக எனக்குத் தெரியவில்லை. மனிதர்களால் கைவிடப்படும் பொழுது மனுஷரூபத்தில் வழிகிடைக்கிறது. அப்படியே அலமந்து போய்விடாமல், அடுத்த கட்டத்திற்கு நம்மை உந்தித் தள்ளுகிற மாதிரி இதெல்லாம் நடந்து விடுகிறது.

பலத்த யோசனைகளுக்கிடையில் சுகுமாரனையும் கூட்டிக் கொண்டு அந்தப் பெரியவர் சொன்ன இடத்திற்கு வந்து விட்டேன். சிவப்பு பெயிண்ட் தூண்களில் பளிச்சென்று பளபளத்தது. அந்தக் கட்டிடத்துள் நுழைந்து நீண்ட ஹால் பக்கம் வந்த பொழுது நல்லவேளை டாக்டர் இருக்கும் அறிகுறி தெரிந்தது.இங்கேயும் வரவேற்பு அலுவலர் இருந்தார். அவரிடம் சென்று விஷயத்தைச் சொன்ன பொழுது தான் அந்த ஆச்சரியம் எங்களுக்காகக் காத்திருந்தது.

(இன்னும் வரும்)

15 கருத்துகள்:

  1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. //மனிதர்களால் கைவிடப்படும் பொழுது மனுஷரூபத்தில் வழிகிடைக்கிறது. அப்படியே அலமந்து போய்விடாமல், அடுத்த கட்டத்திற்கு நம்மை உந்தித் தள்ளுகிற மாதிரி இதெல்லாம் நடந்து விடுகிறது.//

    இறைவன் இருக்கின்றான், மனுஷரூபத்தில் வந்து வழி காட்டுவான்.

    பதிலளிநீக்கு
  5. நமக்கு ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் மனிதர்கள் மூலமாகத்தான் வரும்.

    ஆனால் இதன் பின்னணியில் இறைவனே வழி நடத்துகிறார்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஜீவி சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய பகுதி கதை நன்றாக தொடர்கிறது. மனம் சோர்வடைந்து இறைவனை நம்புகிறவர்களுக்கு அவன்தான் என்றும் வழிகாட்டி. அப்படியும் சமயங்களில் இப்படி கதவை சாத்துகிறானே என வருத்தப்படும் போது, மனம் சோர்ந்து கவலையுறும் போது ஜன்னல்களை திறந்து விட்டு நம்மை ஆசுவாசப்படுத்தி விடுவான். அவன்தான் இறைவன். 🙏. அவனின் கருணை உள்ளத்தை நம்மால் கணக்கிடவே இயலாது. கதை நன்றாக நகர்கிறது. அடுத்து என்ன என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. மனம் கலங்கியபோது வந்த ஒளி ....ஆவலுடன் ....தொடர....வருகிறோம்.

    பதிலளிநீக்கு
  8. நினைத்தது நடக்காமல் ஏமாற்றம் தரும் போது ஏதோ ஒரு வழிகாட்டுதல் சில சமயம் தோன்றும், நடக்கும். இப்படி நடப்பவற்றை தெய்வாதீனம் என்று நம்பிக்கை உடையவர்கள் எடுத்துக் கொள்வதுண்டு. யதார்த்தமாக நடக்கிறது என்று சிலர் கடந்துவிடக் கூடும். எனவே பொருத்திப் பார்ப்பது அவரவர் மனதில் தோன்றும் எண்ணமோ?
    ஒரு கதவு மூடினால் வேறொன்று திறக்கும் என்பது போல்...கடைசி வரி ஆச்சர்யம் என்னவாக இருக்கும் என்று ஒரு யூகம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

    பொதுவாக எழுத்தாளர்களுக்கு அவர்கள் பெறும் அனுபவங்களே கதைகளாகின்றன.
    பொதுவாகப் பெறும் அனுபவங்களிலிருந்து எழுதுபவன் தானே பெறும் சுய அனுபவம் என்று ஒன்று இருக்கிறது.
    அது அவனே பெற்ற அனுபவம் ஆதலின் அவனைப் பொறுத்த வரையில் அதற்கு தனித்தொரு சக்தி உண்டு. அந்த சுய அனுபவங்கள் அவனே எழுதும் கதைகளாக நேரிடின்
    எழுத்தில், வார்த்தை உபயோகங்களில் தனித்ததொரு வலு பெற்றுத் திகழும். தான் சொல்ல வந்ததை தான் பெற்ற அனுபவ பூர்வமான அறிவுடன் தன் மொழியில் வெளிப்படுத்த முயல்வான்.

    பதிலளிநீக்கு
  10. அதே மாதிரி தான் அதை ஆழ்ந்து வாசிக்க நேரிடும் வாசகர்களும். தானே உணர்ந்த ஒன்று இந்தக் கதையில் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது என்ற நினைப்பு அது ஒரு கதை என்ற நினைப்பை மறக்கடித்து அந்தக் கதை நிகழ்வுகளுடனான தனிப்பட்டதொரு நெருக்கத்தை ஏற்படுத்தும். இது தான் எழுதியவனும் அந்த எழுத்தை வாசித்தவனும் ஒன்றிய நிலை.

    பதிலளிநீக்கு
  11. தன்னுடையவும் மற்றவர்களுடையவும் அனுபவங்கள் தான் எழுத்தாளனின் கதைகளுக்கு அடிப்படை என்ற உங்கள் உரையை ஒத்துக்கொள்கிறேன். 
    ஆனாலும் சில சமயங்களில் பெரிய எழுத்தாளர்களும் அனுபவங்களை மிகைப்படுத்தி கற்பனை நிகழ்ச்சிகளாக்கும் கதைகளும் உண்டு.

    புதுமை பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்,  அசோகமித்திரனின் புலிக்கலைஞன் போன்ற கதைகளை இவ்வகையில் சேர்க்கலாம். 

    இறைவன் இருக்கின்றான் என்ற தலைப்புக்கேற்ற செயல் அனுபவம் இன்னும் வெளிப்படவில்லை. காத்திருக்கிறேன்.  
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை இது வரை வாசித்த உங்கள் அனுபவமாகக் கொள்கிறேன், ஜெஸி ஸார்.

      நீக்கு
  12. அந்த மாதிரியான ஒரு கதை தான் இது.
    வரும் அத்தியாயங்களிலிருந்து இந்தக் கதையை வாசிப்போர் அவரவர் பெற்ற வாழ்க்கை அனுபவங்களுக்கு ஏற்ப இந்தக் கதையின் வீச்சை உணர்வார்கள். அது தனிப்பட்ட ஒவ்வொருவர் சம்பந்தப்பட்ட அனுபவ உணர்வு
    என்பதினால் இது தான் சரியென்ற நிலைகளுக்கு அப்பாற்பட்டது. அந்த வகையில் உரிய மரியாதை கொண்டது. அதனால் இக்கதையை வாசிப்போர் தங்கள் வாசிப்பில் விளைந்த எண்ணம் எதுவாயினும் தவறாது பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
    தொடர்ந்து வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வோருக்கு என் தனிப்பட்ட மனம் கனிந்த நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!