செவ்வாய், 11 ஏப்ரல், 2023

குறுந்தொடர் : இறைவன் இருக்கின்றான் 6/7 - ஜீவி

 இறைவன் இருக்கின்றான் 

 ஜீவி 

                                        6    
முந்தைய பகுதிகள் :  2  3  4 5

சொன்னபடியே சரியாக மணி மூன்றிற்கு ஐந்து நிமிஷம் இருக்கையிலேயே டாக்டர் சதாசிவம் என் வீட்டைக் கண்டுபிடித்து வந்து விட்டார்.

உள்ளே அழைத்து ஏதாவது டிபன் கொடுக்கலாம் என்றால், எனக்கு காப்பி போதும் என்று சொல்லி சந்தோஷத்துடன் வாங்கிக் குடித்தார்.

டாக்டரை என் மனைவிக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். இங்கிருந்து சுகுமாரன் தன் தம்பியுடன் பேசி டாக்டரும் தன் கூடவே சிதம்பரம் வருவது பற்றி அலைபேசி யில் தகவல் சொன்னார். டாக்டர் சதாசிவமும் அந்த தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் தொடர்பு கொண்டு பேசினார். டாக்டர் சதாசிவம் நேரடியாக வந்து அவர்களுடன் கலந்து கொள்வதில் அந்த தலைமை மருத்துவர் தனது மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினார். சுகுமாரன் மட்டுமே டாக்டருடன் சிதம்பரம் போவதாக பேசி வைத்திருந்தோம். அதன்படியே கால்மணி நேரத்தில் அவர்களும் எங்களிடம் விடை பெற்றுக் கிளம்பிப் போனார்கள்.

அவர்கள் போனதும்,"சொல்ல மறந்திட்டேனே?.. நீங்க உங்க 'செல்'லை வீட்லேயே வைச்சிட்டு போயிட்டீங்களா?.. நீங்க அந்தாண்ட போனதும் இந்தாண்ட அந்த சந்திரமோகன் பேசினார். நீங்க வெளிலே போயிருக்கறதா சொன்னேன். அப்புறம் பேசறதாச் சொன்னார்" என்றாள் ராதிகா.

"அடேடே.. சந்திரனா?.. 'செல்'லை எடு. அவன் கிட்டே பேசிடலாம்..'

"வேற வேலை இல்லே. பேசாம இருங்க.. ஆஞ்சு ஓஞ்சு அலைஞ்சு திரிஞ்சி இப்போத்தான் அக்கடான்னு வீட்டுக்கு வந்து உக்காந்திருக்கீங்க.. நீங்க அவரைக் கூப்பிடப்போக அவர் ஏதாவது சொல்லுவாரு. இப்போ அதுக்காக திரும்பவும் எங்கையானும் கிளம்பணும்மா. இப்ப பேசவும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். பேசாம ரெஸ்ட் எடுத்திக்கங்க.. அவரா மறுபடியும் கூப்பிட்டா ஏதாவது சொல்லிக்கலாம்."

"சந்திரமோகன் தானே கூப்பிடலேன்னு இருந்தோம். இப்ப அவன் கூப்பிடும் பொழுது இப்படிச் சொன்னா எப்படி, ராதிகா?"

"சந்திரமோகன் கூப்பிடலையேன்னு எதிர்பார்த்திட்டு இருந்தது காலைலே இருந்த கவலை. எல்லா வேலையும் முடிஞ்சிட்ட பிற்பாடு, அவரு இப்போ கூப்பிட்டா என்ன கூப்பிடாட்டாத்தான் என்ன?"

"வேறு எதுக்கானும் கூப்பிட்டானோ என்னவோ?.. என்னன்னு தெரிஞ்சிக்காம இப்படிச் சொல்லிட்டா எப்படி?"

"பின்னே எப்படிச் சொல்வாங்களாம்?.. நீங்க செய்யறது உங்களுக்கே நல்லா இருக்கா.. இந்த அலைச்சல் உங்களுக்குத் தேவையா? நமக்கு ஒண்ணுனா கவனிக்க நாதி கிடையாது; தெரிஞ்சிக்கோங்க."

"எல்லாம் தெரிஞ்சு தான் சொல்றேன்.. உனக்குத்தான் தெரியமாட்டேங்குது.."

"உங்களுக்கு என்னைத்தான் சொல்லத் தெரியும். இப்போ எனக்கு என்ன தெரியலேங்கறீங்க?.."

"சொல்றேன். கேட்டுக்கோ. நாம துரும்பைத் தூக்கிப் போடறது கூட ஒரு காரணத்தோடத் தான் நடக்கற மாதிரி எனக்குத் தெரியறது. அப்படித் தூக்கிப் போடறத்துக்குத்தான் இந்தப் பிறப்பெடுத்திருக்கோம்னு அடிக்கடி நினைச்சிக்கிறேன்."


".................................."


"முந்தா நாள் உங்க அப்பா சிதம்பரத்லேந்து பேசுவார்ன்னு நமக்குத் தெரியுமா?.. அவர் அவரோட நண்பர் சுகுமாரனை இங்கே அனுப்பி வைப்பார்னு தெரியுமா?.. முன்னேப் பின்னே தெரியாது, இந்த டாக்டர் சதாசிவம் நமக்கு அறிமுகமாவர்ன்னு தான் தெரியுமா? அந்த சதாசிவத்துக்குத் தான், தன் அப்பாவோட நண்பர் குடும்பத்துக்கு, தன் அப்பா இப்போ உயிரோட இல்லாத போது, அவர் இப்போ இருந்தார்னா என்ன செய்வாரோ அதுக்கு மேலேயான ஒரு மருத்துவ சேவை செய்ய கொடுத்து வைச்சிருக்கும்னு நெனைச்சுப் பார்த்திருப்பாரா?"

"ஏங்க, ஒரு டாக்டரைப் பார்க்கப் போயிருக்கீங்க.. அவரைப் பார்க்கமுடியாதுன்னு தெரிஞ்சதும், அவரை விட்டுட்டு இன்னொரு டாக்டரைப் பார்த்திருக்கீங்க.. அவ்வளவு தானே?.. இதைச் சாதாரணமா எடுத்துக்க வேண்டியது தானே?"

"ரொம்ப சரி, ராதிகா! நீ சொல்ற மாதிரி அவர் 'இன்னொரு டாக்டர்' என்கிற அளவில் இருந்தால், நானும் நெனைச்சுப் பார்த்திருக்க மாட்டேன். அவர் சுகுமாரன் குடும்பத்துக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவராய் இருந்தது தான் விசேஷம்.. இன்னும் சொல்லப்போனால், இன்று மாலை அந்த டாக்டரும் தெய்வ தரிசனத்திற்காக சிதம்பரம் செல்வதாக இருந்திருக்கிறார். அந்த சதாசிவம் டாக்டரைத் தான் பார்க்கணும் என்று ஏதோ சக்தி சுகுமாரனை அவரிடத்தில் கொண்டு போய்த் தள்ளியிருக்கு!.. அந்த டாக்டருக்கும் சிதம்பரம் போய் இந்த பேஷண்டைப் பார்க்க வேண்டும் என்பது அந்த டாக்டரே அறியாதவாறு முன்னாலேயே ஏதோ ஒரு சக்தியால் தீர்மானிக்கப் பட்டு விட்டது. எனக்குத்தான் தெரியலை, இதையெல்லாம் சாதாரணமா எடுத்துக்கறது எப்படின்னு.......நீயே சொல்லு."

"எல்லாம் நடந்த சமாச்சாரங்கள். நடக்கற ஒவ்வொண்ணுக்கும் நீங்களா இப்படி அர்த்தம் பண்ணிகிட்டா நான் என்ன சொல்றது?"

"அர்த்தம் பண்ணிக்கலேம்மா. நடக்கறதைப் பாத்து ஆச்சரியப்பட்டுச் சொல்றேன். ஒண்ணு நடக்கணும்னு தீர்மானம் ஆயிடுத்துன்னா, நடக்கற அந்த பிராஸஸ்லே ஏதாவது தடங்கல் ஏற்பட்டாலும் அந்தத் தடங்கலைத் தகர்த்திண்டு வழிகாட்டிண்டு அடுத்தது, அடுத்ததுன்னு போய்க்கிட்டே இருக்கு. இப்போ காலைலே நடந்ததையே எடுத்துக்கோ. 'அப்பாயிண்ட்மெண்ட்' முதல்லேயே வாங்கியிருந்தாத்தான் அந்த டாக்டரைப் பார்த்திருக்க முடியும்ங்கறதாலே நாம அந்த டாக்டரைப் பார்க்க முடியாமப் போனப்போ, ஒரு பெரியவர் மூலமா 'இங்கே போ'ன்னு வழிகாட்டல் கிடைக்கிறது. அதான் ஆரம்பம். ஒரு விஷயம் இப்படித்தான் நடக்கணும்னு இருந்திச்சின்னா, அதுவும் நம்மை வைச்சு நடக்கணும்னா, அந்த விஷயம் நடந்து முடியறது வரைக்கும் நம்மை விடறதில்லே. அதைச் சொன்னேன்."

"நம்மை வைச்சு நடக்கறதா?.. அப்படீன்னா?"

"எஸ். அதைத்தான் சொல்ல வந்தேன். பிறவிங்கறது அனுபவிக்கறதுக்குத் தான் இல்லையா?.. அனுபவிக்கறதுன்னா என்ன?.. ஒரு நிகழ்ச்சி நடக்கறது. நம்மை அறியாமலேயே, அந்த நிகழ்ச்சிப் போக்கில் நாம பங்கெடுத்துக் கொண்டு செயல்பட நேர்ந்திருந்தா, செயல்பட நேர்கிறது. அப்படி செயல்பட்ட அனுபவம் தான் அந்த அனுபவிப்பு. அப்படி செயல்பட நேர்ந்திருக்கவில்லை என்றால், செயல்படப் போவதில்லை. அவ்வளவு தான். இந்த செயல்படுதல் என்பது ரொம்ப இயல்பா நாமே விரும்பி நம்மை அதில் உட்படுத்திக்கற மாதிரி நம் விருப்பத்தின் அடிப்படையில் அந்த செயல்பாடு நடக்கிற மாதிரி நடக்கிறது. சில விசேஷ தருணங்களில், இதுக்கு மேலே என்ன செய்யறதுன்னு தெரியாமப் போனாலும் ஆலோசனையாகவோ, அபிப்ராயமாகவோ, வழிகாட்டலாகவோ வழிதெரிந்து நாம் செயல்பட நேர்கிறது. இந்த அளவுக்குப் புரியறது, இல்லையா?"

"புரியறது. சொல்லுங்க.."

"இயங்கறத்துக்கு செயல்பாடு முக்கியமில்லையா?.. இந்த உலகத்தின் உயிர் இயக்கமே அவரவர் செயல்படுவதின் அடிப்படையில் இருக்கிறது இல்லையா?.. உலகத்தின் இயக்கமான இந்த அடிப்படையான செயல் நடப்பதற்குத்தான் விருப்பம், ஆர்வம், ஆவல், இன்னொருத்தருக்கு உதவி, சுயமுன்னேற்றம், வாழ வேண்டிய நிர்பந்தம்ன்னு என்னன்னவோ உந்துதல்களின் அடிப்படையில் அடுத்ததுக்கு அடுத்ததுக்குன்னு நாம் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இந்த நகர்தல் மட்டும் இல்லையென்றால் எல்லாமே அப்படியே ஸ்டாண்ட்ஸ்டில்லா நின்னுடும்."

"அதுசரி. எதுஎது நடந்ததோ அதையெல்லாம் வரிசைபடுத்தி இதெல்லாம் நடந்தது பார்னு நடந்ததைத் தானே சொல்றீங்க.. நடக்காததைச் சொல்ல மாட்டீங்கறீங்களே."

"என்ன நடக்காததைச் சொல்லலே?.. சொல்லு."

"சொன்னா வருத்தப்படமாட்டீங்கள்லே.. அப்படினா சொல்றேன்."

"சீச்சீ.. இதுலே என்ன வருத்தப்பட இருக்கு?.. நீ இப்படி கேக்கறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு. புருஷன், பெண்டாட்டிங்கறது வாழ்க்கை வண்டிலே பூட்டியிருக்கற ரெட்டை மாடுகள் மாதிரி.. ஒண்ணு எந்திரிச்சு, இன்னொண்னு எந்திரிக்கலைனா தான் கோளாறு. ஒண்ணு எந்திரிக்கறதைப் பாத்து இன்னொண்னும் எந்திரிச்சின்னா எதையும் யாரையும் எதிர்பார்க்காம போயிகிட்டே இருக்கலாம். இப்பக்கூட எது ஒண்ணையும் நல்லா புரிஞ்சிக்கத் தானே பேசிக்கிட்டு இருக்கோம். புரிஞ்சிக்கறத்துக்கு எல்லாக் கோணங்கள்லேயும் பாக்கறது அவசியம், இல்லையா? நீ சொல்றதிலேயேயும் ஒரு புதுக்கோணம் கிடைக்கலாம். சொல்லு."


"அந்த சந்திரமோகனோட டாக்டர் தம்பியைப் பார்க்கத் தானே முதல்லே நினைச்சீங்க.. அது விஷயமா, சந்திரமோகன் ஏதாவது செஞ்சிருந்தா, அந்த டாக்டரையே பாத்திருப்பீங்கள்லே. அது ஏன் நடக்கலே?.. அது நடந்திருந்தா வரிசையா இத்தனையையும் நீங்க யோசிக்கறத்துக்கு அர்த்தம் இல்லாம போயிருக்கும்லே? நீங்க மட்டும் மாஞ்சு மாஞ்சு மத்தவங்களுக்காக சிரமப்படலாம். ஆனா, உங்களுக்கு ஒண்ணுனா, மத்தவங்க விரல் நுனியைக் கூட அசைக்க மாட்டாங்க, இல்லையா? இது எந்த விதத்திலே நியாயம்ங்க.. இதான் எனக்குப் புரியலே;இப்போ நீங்க போயிட்டு வந்த மாதிரி, அவசர பரஸ்பர உதவியைக் கூட நான் சொல்லலே. ஒன்றுமில்லாததுக்கெல்லாம், அந்த சந்திரமோகன் மாதிரி ஆட்களுக்கு எதுக்கு இழுத்துப் போட்டுகிட்டு செய்யணும்?.. அதான் எனக்குத் தெரிலே.. ஒருத்தர் இன்னொருத்தர்கிட்டே ஒரு உதவியை எதிர்பார்க்கறச்சே, அந்த இன்னொருத்தருக்கு அவர் வேண்டிய பொழுது நாம என்ன உதவி செஞ்சோம்னு நினைச்சுக் கூட பாக்க மாட்டாங்களா, என்ன?.. இந்த அடிப்படை விஷயம் கூட பல பேருக்குத் தெரியலையே? இது ஏன்?.. இதுக்காகத் தான் இப்போ கூட அந்த சந்திரமோகனோட பேசவேண்டாம்னு சொன்னேன். நானாக்கூட அப்படிச் சொல்லியிருக்க மாட்டேன். அவரோட நடவடிக்கை தான் என்னை அப்படிச் சொல்ல வைச்சது. அவரோட நடவடிக்கை தான், உங்க மூலமா இப்போ அவருக்கு நடக்க வேண்டிய அடுத்த உதவியைத் தடுத்திண்டு இருக்கு. இல்லையா?"

ராதிகாவின் கேள்வி அவள் பங்கில் நியாயம் இருப்பதாகத்தான் பட்டது. நான் அவளை யோசனையுடன் பார்த்தேன்.


(இன்னும் வரும்)





30 கருத்துகள்:

  1. இன்றைய பகுதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இரவு முழுதும் என்னென்னவோ எண்ணச் சுழல்களில் தூக்கம் சரியாக வரவில்லை. அதற்கு ஒரு தெளிவு கிடைத்ததுபோலத் தோன்றுகிறது.

    எண்ணம் தோன்றவும், பல நேரங்களில் நம்மை உந்தித் தள்ளவும், நம்மை அறியாமலேயே எதிர்வினை ஆற்றவும் அந்த இறை சக்திதான் காரணமாக, நமக்குப் பின்னாலிருந்து இயக்குகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதின் குரலான பின்னூட்டங்கள் உங்களது, நெல்லை.
      வாசித்ததும் எந்த மூடுதிரைகளையும்
      போட்டுக் கொள்ளாமல் எதை உணர்கிறோமோ அதையே பிறழாமல் சொல்லும் அந்த சத்தியத் தன்மையை நானும் உணர்ந்தேன்.
      அதை உங்களுக்குச் சொல்வதற்காகத் தான் இதுவும்.

      நீக்கு
  2. வாழ்வில் நடந்தவற்றை, முக்கியச் சம்பவங்களை (நம் வாழ்வின் போக்கை மாற்றிய) நினைத்துப் பார்த்தால் இறைவனின் கை அதில் இருப்பது புலப்படும். நம் எண்ணப்படி அந்த நிகழ்வுகளால் நாம் உயர்வை அடைந்திருக்கலாம் இல்லை தாழ்வை அடைந்திருக்கலாம். ஆனால் நடந்தது யாவும் நம் கையை மீறிய செயல்கள்தாம்.

    இதற்கு ஒரு படி மேலே போய், என் மனைவியோ, நான் தாழ்ச்சியாக நினைப்பதையும், அப்படி அல்ல, நீங்கள் இதில் ஈடுபட்டிருக்கிறீர்கள், அந்த நிகழ்வு நடக்கவில்லையானால் இதில் ஈடுபட வாய்ப்பே இருந்திருக்காது, எல்லாமே நம் நன்மைக்கே என்பாள்.

    இன்றைய பகுதியைப் படிக்கும்போது இத்தகைய எண்ண அலைகள் எழுகின்றன

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு பார்வைகள் இருக்கிறது.

    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. சில நிகழ்வுகள் நடக்காமலிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்குமே எனத் தோன்றும்.

    ராதிகா சொல்வதுபோல, நாம் இறை சக்தியின் விருப்பத்தை மீறி வேறு முடிவு எடுத்திருந்தாலும் அதற்கேற்ப மற்ற நிகழ்வுகள் மாறி, திரும்ப நம் டெஸ்டினேஷனிலேயே கொண்டு செல்லும். செல்ல வேண்டிய பாதையை விட்டு மாறினால் கூகுள் மேப், திரும்பவும் நம் பாதையைச் சீர் செய்து போகவேண்டிய பாதையில் இணைப்பதைப் போல.

    இதை எழுதும்போது, கௌதமன் வரைந்த ஓவியம் (இரண்டு விரல்கள், நடக்கும் இருவரை சாலையில் guide செய்வதைப் போன்றது) நினைவுக்கு வருகிறது. இந்தப் பகுதிக்குப் பொருத்தமானது. மீண்டும் இங்கு வெளியிடத் தகுந்தது.

    பதிலளிநீக்கு
  5. நான் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறேன். ஒரு முக்கிய விஷயமாக ஒருவரிடம் பேச இருமுறை முயற்சித்தும் முடியவில்லையென்றால், அதை அவரிடம் சொல்லுவதில், ஆலோசிப்பதில் இறைவனுக்கு விருப்பம் இல்லையென முடிவு செய்வேன். அதுபோல ஒரு விஷயத்தைப் பகிர்வதை இறை சக்தி விரும்பவில்லையென்பதை பல முறை அனுபவித்திருக்கிறேன்.

    எந்த நிகழ்வுக்கும் காரண காரியம் உண்டு. நமக்கு அவைகளைப் புரிந்துகொள்ளும் சக்தி இல்லை. அவ்ளோதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடாமுயற்சி வெற்றி பெறும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?

      நீக்கு
    2. விடா முயற்சி வெற்றிபெறும், சந்தேகமில்லை. அப்படி விடா முயற்சியாகத் தவம் செய்து பல்வேறு வரங்களைப் பெற்றவர் பலர். விடா முயற்சியினால் கிடைப்பது அதற்குரிய பலாபலன்களையும் 5நல்லது, கெட்டது) கொண்டுவரும்.

      நீக்கு
    3. 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
      எது நடக்கிறதோ..
      ..................
      (கீதை வாசகம்)

      நீக்கு
    4. நடப்பதெல்லாம் நாராயணன் செயல்..

      நீக்கு
  6. மாமயிலேறி மன்னவன் வருக..
    கனிவுடன் நல்ல அருளினைத் தருக..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கலைத் தீர்த்து வைக்கும் சிங்காரவேலவன் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும்.

      நீக்கு
  7. அதற்கும் அவன் அருள் வேண்டுமாமே?

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி..

    -- மாணிக்கவாசகர் பெருமான்

    பதிலளிநீக்கு
  8. கடமையைச் செய், பலனை எதிர் பார்...

    மெய்வருத்தக் கூலி தரும்...

    பதிலளிநீக்கு
  9. ராதிகாவின் கருத்து யதார்த்தம். அப்பகுதி மிகவும் பிடித்திருந்தது. எதையும் எதிர்பார்க்காமல் செய்வது என்பது நல்ல விஷயம். ஆனால் சில சமயம் அது Idealistic என்று தோன்றும். நம் மனதில் எதிர்பாராமல் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தாலும், சில சமயம் நம் மனம் ஒரு நொடியேனும் நினைக்காமல் இருக்குமா? அப்படி இருந்தால் உண்மையாகவே நம் மனம் பக்குவம் அடைந்துள்ளது எனலாம்.

    அதனால் ராதிகாவின் பகுதி யதார்த்தம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஆக, ராதிகாவின் பாத்திரப் படைப்பு உங்களைக் கவர்ந்து
    விட்டது, இல்லையா?

    பதிலளிநீக்கு
  11. விஜயக்குமார் மட்டும் என்னவாம்? தன் பகுதி எண்ணங்களை எவ்வளவு நிதானமாக மனைவியிடம் விளக்கிச் சொல்கிறார்?..
    இந்த மாதிரி தம்பதிகள் நிகழ் வாழ்க்கையில் எத்தனை பேர்கள் இருப்பார்கள், தெரியவில்லை.

    பதிலளிநீக்கு

  12. //"சொல்றேன். கேட்டுக்கோ. நாம துரும்பைத் தூக்கிப் போடறது கூட ஒரு காரணத்தோடத் தான் நடக்கற மாதிரி எனக்குத் தெரியறது. அப்படித் தூக்கிப் போடறத்துக்குத்தான் இந்தப் பிறப்பெடுத்திருக்கோம்னு அடிக்கடி நினைச்சிக்கிறேன்."//

    பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள், காரண காரியம் இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை என்று.
    துரும்பை கிள்ளி போட வேண்டுமென்றாலும் அவன் அருள் இருந்தால்தான் நடக்கும்.

    கணவன், மனைவி உரையாடல் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் குழந்தைகளுக்கு அதைத் தான் சொல்லி வளர்த்திருப்பீர்கள். இல்லையா சகோ?
      இதெல்லாம் தலைமுறை தலைமுறையாக நம்மில் படிந்து போன உணர்வுகள். சொல்லப்போனால் இறைசக்தி பற்றிய ஆரம்பக் கல்வியே இது தானே?

      நீக்கு
  13. சனிக்கிழமை தோறும் எபியில் கதைகள் வாசிப்பு பற்றி பகிர்ந்து கொள்ளும் ஜெஸி ஸார் ஆரம்ப பகுதியில் இந்தக் கதை பற்றிய தன் வாசிப்பு அனுபவமாய் சொல்லியிருந்தார்:

    1. கதைக்கரு என்ன என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை என்று.

    அடுத்த பகுதியில் கதை நிறைவு பெறப் போகிறது. இன்னும் கதைக்கரு என்ன என்று தெரியவில்லை எனில் கதைகளுக்கு அப்படியான கதைக்கரு என்ற ஒன்று அவசியமேயில்லையோ?.. அல்லது அப்படியான கதைக்கரு சட்டென்று புலப்பட்டு விடாமல் எழுதுவது தான் எழுத்தின் இன்னொரு வகை பரிணாமமோ?



    பதிலளிநீக்கு
  14. இறைவன் இருக்கிறான் என்ற தலைப்புக்கேற்ற செயல் அனுபவம் இன்னும் வெளிப்படவில்லை --
    என்பது அவரது அப்பொழுதிய இன்னொரு கருத்து.

    கதை நிறைவடையப் போகிற நிலையில் இதுவும் இன்னொரு முக்கியமான கேள்வி தான்.

    வாசிப்பவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா 

      நீங்கள் ஆரம்பத்திலேயே சொன்னீர்கள். கதையின் ஒவ்வொரு வரியிலும் கதை உள்ளது என்று. அதனால் தான் கரு என்ன என்று புலப்படவில்லை என்று கூறியிருந்தேன். முடிச்சு அல்லது திருப்பம் என்ற முறையில் ஒவ்வொரு வாரமும் கதை மெயின் ரூட்டில் இருந்து திசை திரும்பி பல வழிகளில் பயணித்து தற்போது முடிவில் மெயின் முடிச்சுக்கு வந்துள்ளது. கதை இன்னும் முற்றுப் பெறவில்லை எனினும் நாம் எப்போதும் கூறும் இறைவன் இருக்கின்றான் என்ற தலைப்பின் படி நல்ல முடிவில் தான் நிறைவு பெறும். 

      இரண்டு வாரங்களுக்கான கதையை சற்றே நீட்டி 7 வாரங்கள் ஆக்கி விட்டீர்கள் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். 

      கதை முடிந்தவுடன் விவரமாக அலசலாம். 
      Jayakumar

      நீக்கு
    2. கதையின் நிறைவுக்கு முன்னால் இந்த மாதிரியான ஒரு அலைச்சல் இந்தக் கதைக்குத் தேவையாக இருந்தது. இதெல்லாம் சென்ற தலைமுறை எழுத்துப் பாணி. எழுத்தாளர்கள் ஆர்வி, ரா.கி.ரா, ஜராசு போன்றவர்கள் இந்தப் பாணியில் நிறைய செய்திருக்கிறார்கள்
      குமுதத்தின் 'மாலைமதி'யில் நான் கூட இதே பாணியில் ஒரு குறு நாவல் எழுதியிருக்கிறேன்.

      தெய்வம் என்பது நம் அனுபவங்களின் மூலம் உணரக் கூடியது. வாசித்தோ பிறர் சொல்லியோ தெரியக் கூடியது அல்ல.

      நெல்லை மட்டும் இறைசக்தி என்ற வார்த்தையை உபயோகித்து கோடி காட்டியிருக்கிறார். அவர் அனுபவம் தான் அதைச் சொல்ல வைத்தது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    கதையைப் படித்தேன். கதை நல்ல பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக நகர்கிறது எதையும் எதிர்பார்க்காத ஒரு சங்கடமான தருணத்தில், தன்னிச்சையாக நல்லதாக நடத்தி தருவதும் அந்த இறைவன்தான். இதைதான் எண்ணங்கள் நல்லதாக இருந்தால் எதுவும் நல்லதாக நடக்குமென்பர். ஆனாலும் விதியின் பயனால் நடப்பது எதுவானாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் அவன் காலப்போக்கில் தந்து விடுவான். அந்த நம்பிக்கைத்தான் நம்மை சுற்றியிருக்கும் இறைசக்தி.

    /ஒரு நிகழ்ச்சி நடக்கறது. நம்மை அறியாமலேயே, அந்த நிகழ்ச்சிப் போக்கில் நாம பங்கெடுத்துக் கொண்டு செயல்பட நேர்ந்திருந்தா, செயல்பட நேர்கிறது. அப்படி செயல்பட்ட அனுபவம் தான் அந்த அனுபவிப்பு. அப்படி செயல்பட நேர்ந்திருக்கவில்லை என்றால், செயல்படப் போவதில்லை. அவ்வளவு தான். இந்த செயல்படுதல் என்பது ரொம்ப இயல்பா நாமே விரும்பி நம்மை அதில் உட்படுத்திக்கற மாதிரி நம் விருப்பத்தின் அடிப்படையில் அந்த செயல்பாடு நடக்கிற மாதிரி நடக்கிறது. சில விசேஷ தருணங்களில், இதுக்கு மேலே என்ன செய்யறதுன்னு தெரியாமப் போனாலும் ஆலோசனையாகவோ, அபிப்ராயமாகவோ, வழிகாட்டலாகவோ வழிதெரிந்து நாம் செயல்பட நேர்கிறது. இந்த அளவுக்குப் புரியறது, இல்லையா. /

    உண்மைதான்... தீடிரென இவர்கள் முதலில் சென்ற மருத்துவமனையில் அமர்ந்திருக்கும் அந்த பெரியவருக்கு இவர்களுக்கு வேறொரு மருத்துவரை வழிகாட்ட வேண்டுமென எப்படித் தோன்றியது...? அதுதான் இறைசக்தி எனும் விதி வகுத்த வழி.

    கதையில் கணவன் மனைவியிடையேபேச்சு வார்த்தை நன்றாக உள்ளது. ஒரு கருத்தென்பது ஒவ்வொருவருடைய எண்ணங்களின் வாயிலாக பல மாறுபடும் வகையில் சிதறலானவையாக தோற்றமளிக்கும்.இறுதியில் ஒரு புள்ளியில்தான் போய் முடியும்.

    கதையில்அனைத்தும். நல்லபடியாக நடக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, சகோதரி.
      நீங்கள் எதையும் ஆழ்ந்து வாசிப்பவர். இந்தப் பகுதியை படிக்கக் காணோமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. முடிந்தால் நான் உணர்ந்த சில எண்ணங்களை பின்னால் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
    2. எங்கே காணோமே என்று பார்த்திருந்தேன்.
      வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர் ந்து கொண்டமைக்கு நன்றி.
      அடுத்த நிறைவுப் பகுதி முக்கியமானது.
      எல்லாக் கதைகளின் நிறைவுப்பகுதி போல அல்லாமல் வித்தியாசமானது.
      வாசித்து விடுங்க்நள். நன்றி.

      நீக்கு
  16. எங்கே காணுமே என்று நினைத்திருந்தேன். வாசித்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி சகோதரி.

    விதி என்பதனை வினைப்பயன் என்று சொல்லலாமா? அப்படிப் பார்த்தால் மனிதர்களின் வினையாற்றல் (செயல்படுதல்) சம்பந்தப் பட்டதாக இது தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் இதனையே ஊழ்வினை என்பார் இளங்கோவடிகள்.

    கதையின் அடுத்த நிறைவுப் பகுதி தான் முக்கியமானது. நாலே அத்தியாயத்தில் முடித்திருக்கலாமில்லையா! ஏன் இவ்வளவு நீட்டல் என்று அபிப்ராயப்பட்ட ஜெஸி ஸாரும், "ஓ, இதுக்குத் தானா இந்தக் கதை.." என்று நினைக்க வைக்கும் பகுதி. வாசித்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  17. இக் கதையை படிக்கும் போது" அவனின்றி அதுவும் அசையாது' என எமது மூன்னோர்கூறிய கருத்து எமது நினைவுகளில் தொடருவதை மறுப்பதற்கில்லை.
    தொடர்வோம். .....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!