ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை– பகுதி 11

ஜ்வாலா நரசிம்மர் கோவிலை மலைப்பாதையில் ஏறி தரிசனம் செய்த பிறகு, திரும்ப வராஹர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.  அங்கிருந்து எங்கள் பேருந்து இருக்கும் இடமான காரஞ்ச நரசிம்மர் கோவிலை நோக்கிய நடைப்பயணம் தொடர்கிறது.

வராஹ நரசிம்ஹர் கோவிலிலிருந்து திரும்பும் வழியில், பாவநாசனி ஆற்றில் (காட்டாறு) மிகப் பெரிய ஒற்றை பாறை இருந்தது. (15க்கு 15 அடிக்கு மேல் இருக்கும்) மலையிலிருந்து முன்காலத்தில் விழுந்ததா இல்லை வெள்ளப் பெருக்கில் உருட்டிவரப்பட்டதா என்று தெரியவில்லை. பார்க்க வித்தியாசமாக இருந்ததால் படமெடுத்துக்கொண்டேன்.

அஹோபில நரசிம்மர் கோவிலை அடைவதற்கு முன்பாக, அங்கு ஒரு பெரிய மண்டபம் இருந்ததைப் பார்த்தேன். அது பூட்டிக்கிடந்தது. ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு, காலக்ஷேபம் என்று சொல்லப்படுகிற, இறைவனைப் பற்றிய உரைகள் நிகழ்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மண்டபமாம் அது.





எல்லோரும் காரஞ்ச நரசிம்மர் கோவில் அருகே பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த தும், பேருந்தில் 2 ½ மணிக்குக் கிளம்பி, யோகாநந்த நரசிம்ஹர் ஆலயத்திற்கு 3 மணிக்குப் போய்ச்சேர்ந்தோம்.

ஆதிசேஷன் மீது கால்களை ஊன்றி, யோக பட்டையுடன், மேற் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும், இரண்டு கைகளை யோக முத்திரையுடனும், கண்களை மூடிய நிலையில் தெற்கு முக மண்டலத்துடன் சேவை சாதிக்கிறார் யோகாநந்த நரசிம்ஹர். பிரகலாதனுக்கு யோகநெறி கற்பித்தவர் இவர் என்பது ஐதீகம். அஹோபிலத்தில் பல கோயில்களில் (அஹோபில நரசிம்ஹர் தவிர) புதிதாக ஒரு நரசிம்ஹர் விக்ரஹமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பழைய சிலை பழுதுபட்டிருக்கலாம், அல்லது தொடர்ந்து கையாண்டால் பழுதுபட்டுவிடும் என்பதற்காகவும் இப்படிச் செய்திருக்கலாம்.

இந்த ஆலயத்தின் பின் பகுதியில், பால யோக நரசிம்மர் என்றொரு ஆலயம் இருக்கிறது. அந்த ஆலயத்தின் அருகிலேயே அதனை ஸ்தாபித்தவர் அன்னதானம் நடத்திவந்தாராம். இப்போதும் அது தொடர்வதாகச் சொல்கின்றனர்.  அந்தக் கோயிலுக்கும் போய் தரிசனம் செய்தோம்.

யோகாநந்த நரசிம்மர் கோவிலுக்கு அருகிலேயே சமீப காலத்தில் கட்டப்பட்டுள்ள நவ நரசிம்மர் கோயில் உள்ளது. இந்தத் தடவை அந்தக் கோவிலுக்கு நாங்கள் செல்லவில்லை. சென்ற முறை இந்தக் கோவிலுக்குள் சென்று நவ நரசிம்மர்களையும் தரிசனம் செய்தோம். அங்கு நவ நரசிம்ஹர் விக்ரஹங்களையும், நவக்ரஹம் போல வெவ்வேறு திசைகளில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதுபோல் நவ நரசிம்மர் கோவில்களையும், ஒவ்வொரு கிரகத்துக்கான கோவிலாக தற்காலங்களில் சொல்கிறார்கள். இவையெல்லாமே சமீப காலங்களில் ஏற்பட்ட வழக்கம் போல்தான் எனக்குத் தோன்றுகிறது.

பிறகு அங்கிருந்து கிளம்பி, 3 ½ மணிக்கு சத்ரவட நரசிம்ஹர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். அஹோபில யாத்திரையில் ஏதாவது ஒரு நரசிம்ஹர் கோயிலில் முழு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யும் வழக்கம் உண்டு. இந்தத் தடவை, சத்ரவட நரசிம்ஹர் கோயிலில் மாலையில் திருமஞ்சனம் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். யாத்திரைக்கு வருபவர்கள் விருப்ப்பட்டால், தேன், பழங்கள், பாதாம் போன்ற பருப்பு வகைகள், பேரீட்சை, வெல்லம் போன்றவைகளைக் கொண்டுவரலாம் என்று சொல்லியிருந்தார்கள். அது தவிர டெட்ராபேக் பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகள் கொண்டுவந்திருந்தார்கள்.

இந்த் தடவை, சத்ரவட நரசிம்மருக்கு திருமஞ்சனம் என்று ஏறபாடாகியிருந்தது. திருமஞ்சனம் சுமார் அரை மணி நேரமாக நடைபெற்றது. பிறகு அலங்காரம் ஆகி, பஞ்சாம்ருதம், கேசரி, தயிர்சாதம் போன்றவை கண்டருளப்பட்டு பிறகு பிரசாதமாக எங்களுக்கு வழங்கினார்கள். நான் செல்லும் யாத்திரையை நடத்துபவர், எப்போதுமே போதும் போதும் என்று சொல்லும் அளவு எல்லோருக்கும் உணவு தரும் குணம் உடையவர். காலையில் 7 மணிக்கு பொங்கல் சாப்பிட்டு, பிறகு நிறைய நடந்து பல கோவில்களைச் சேவித்துவிட்டு வந்த எங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே பிரசாதம் கிடைத்தது. 


சத்ரவட நரசிம்ஹர். இவருக்குத்தான் திருமஞ்சனம் நடைபெற்றது. மூலவரை புகைப்படம் எடுப்பதில்லை என்பதால் எடுக்கவில்லை. சென்றமுறை அஹோபில யாத்திரையில் கலந்துகொண்டிருந்தபோது, திருமஞ்சனம் காலையில் 10 மணிக்கு காரஞ்ச நரசிம்ஹருக்கு நடந்தது. அப்போது ஒரு சிலர் புகைப்படம் எடுத்தனர். அதைப் பிறகு நான் எனக்கு அனுப்பச் சொல்லியிருந்தேன்.


கோவில் வளாகத்திலேயே பிரசாதம்லாம் சாப்பிட்டபிறகு, 5 ½ மணிக்கு  சத்ரவட நரசிம்மர் கோயிலிலிருந்து கிளம்பி, தங்குமிடமான அஹோபில மடத்திற்கு வந்தோம்.  கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு, 8 மணிக்கு இரவு உணவுக்கு வரவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். வயிற்றில் எங்க இடம் இருந்தது?  எல்லோரும் 8 1/4க்கு சாப்பிட உட்கார்ந்தோம்.  பரங்கி சாம்பார், கத்தரி கறி, சௌசௌ கூட்டு, தக்காளி ரசம், உளுந்து போண்டா, ஜவ்வரிசி பாயசம், மோர் என்று விஸ்தாரமான உணவு. அனேகமாக எல்லோருக்குமே பசி இருந்திருக்காது.  பொதுவா 4 மணிக்குத் தரவேண்டிய இனிப்பு, கார பாக்கெட்டும் (பாதுஷா மற்றும் ஓமப்பொடி) கொடுத்தார்கள்.  (யாத்திரைக்குக் கூட்டிச் சென்று weightஐ ஜாஸ்தி ஆக்கிடறாங்கப்பா)

எல்லோருக்கும் 5 பேருக்கு ஒரு அறை வீதம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரவு ஓய்வு எடுத்துக்கொண்டுவிட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு அறையைக் காலி செய்துவிட்டு காலை உணவுக்கு வந்துவிடவேண்டும் என்றும், அதன் பிறகு உடனேயே காட்டுக்குள் வெகு தூரத்தில் இருக்கும் பாவன மற்றும் பார்க்கவ நரசிம்ஹர் கோவில்களுக்கு ஜீப்பில் சென்றுவிட்டு, பிறகு இரண்டு மணிக்கு மதிய உணவு, உடனேயே அஹோபிலத்திலிருந்து கிளம்பிவிடுவோம் என்று சொல்லியிருந்தார்கள். இரு நாட்களாக அஹோபிலத்தில் ஏகப்பட்ட யாத்ரீகர்கள் வந்திருந்தார்கள் என்பதால் அறை கிடைப்பதே கஷ்டமாக இருந்ததாம். நான் அஹோபில மடத்திலேயே தங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

அலைச்சலினால் நல்ல தூக்கம். காலை 4 மணிக்கு எழுந்து குளித்து, நித்ய கடமைகளைச் செய்து 5 ½ மணிக்கெல்லாம் தயாராகிவிட்டேன்.  அருகிலிருந்த பிரகலாத வரதன் கோயில் நடை திறக்க இன்னும் நேரமாகும் என்றார்கள். அதனால் தினப்படி நடைப்பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன்.  6 ½ மணிக்கு காபி, பால், டீ கொடுத்தார்கள். பிறகு அரை மணி நேரத்தில் போய் பிரகலாத வரதனை தரிசனம் செய்துவிட்டு வரச்சொன்னார்கள்.  உடனே சாப்பிட்டுவிட்டு பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லவேண்டும் என்றார்கள்.


காலையில் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நன்றாகக் கிட்டியது.. அந்தக் கோவிலில் நிறைய புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டேன் (விட்டுப்போன சிற்பங்களை). காலை உணவாக சுடச் சுட தயிர்சாதமும், புளி இஞ்சியும் கொடுத்தார்கள்.  சாப்பிட்டுவிட்டு, எங்கள் லக்கேஜ்களை பேருந்தின் பின்பகுதியில் வைத்துவிட்டு, சாப்பாட்டுத் தட்டு, டம்ளர் மாத்திரம் அஹோபில மடத்தில் ஒரு அறையில் வைத்தோம். மதியம் வந்து சாப்பிட்டுவிட்டு உடனே சென்னை நோக்கிக் கிளம்பிவிடுவது என்ற திட்டம்.

இன்று அதிகமாக நடக்கவேண்டாம். ஜீப்பில்தான் மிகுதியிருந்த இரண்டு நரசிம்மர் கோவிலுக்குச் செல்லப்போகிறோம். பாவன, பார்க்கவ நரசிம்மர் ஆலயங்களை நோக்கிய எங்கள் ஜீப் பிரயாணம் எப்படி இருந்தது என்று அடுத்த வாரம் பார்க்கலாமா?

 

29 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. படங்கள், விவரங்கள் அனைத்தும் அருமை.
    பாவநாசனி ஆற்றில் உள்ள பெரிய பாறை படம் இரு கோணங்களில் நன்றாக இருக்கிறது. காலக்ஷேபம் செய்யும் மண்டபம், மற்றும் தூண் சிற்பங்கள் அருமை.
    அஹோபில நரசிம்மர் கோவில், நரசிம்மர் திருமஞ்சனம் காட்சிகள் எல்லாம் தரிசனம் செய்து கொண்டேன்.
    பிரசாதங்கள் கிடைத்தது மகிழ்ச்சி. அங்கு நல்ல வயிறு நிறைய பிரசாதங்கள் உண்ட பின் இரவு உணவு எப்படி செல்லும்? அதுவும் நிறைய உணவு வகைகள் ! மனம் எல்லாம் நிறைந்து போய் இருக்கும் போது வயிறும் நிறைந்து இருக்கும் உணவு தேவைபடாது.

    விஸ்வரூப தரிசனம் மற்றும் பிரசாதம் கிடைத்தது அற்புதம்.

    அனைத்தும் அருமை. தொடர்கிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தடவை எல்லாம் சிறப்பாக அமைந்தது.

      சென்ற முறை போயிருந்தபோது காலையில் திருமஞ்சனம் முடிந்தபிறகு, இதேபோல பிரசாதங்கள் சாப்பிட்டுவிட்டு ஜ்வாலா நரசிம்மர் ஆலயத்துக்கு மலயேறிச் சென்றோம். கேசரியில் இருந்த நெய் காரணமாகவும், ருசியாக இருந்தது என்று நிறைய சாப்பிட்டதாலும், மலையில் ஏற கடினமாக உணர்ந்தேன். (நெய் எண்ணெய்ப் பண்டங்கள் சாப்பிட்டால் ஏறுவது கடினம்). அதனால் இந்தத் தடவை கையில் சிறிய டப்பாக்கள் இரண்டு கொண்டு சென்றிருந்தேன், பிரசாதம் கொடுத்தால் வாங்கிவைத்துக்கொண்டு, கீழே இறங்கியபின் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று.

      மாலையில்தான் திருமஞ்சனம் நடைபெற்றதால் அந்தச் சந்தர்ப்பமே வரவில்லை.

      நீக்கு
  3. ஓம் ஹரி ஓம்..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. நல்ல விவரங்களுடன் அழகின் படங்கள்... திருத்தல சுற்றுலா செல்வோர்க்கு பயனுள்ள பதிவு..

    மகிழ்ச்சி..

    அன்பின் நெல்லை அவர்களுக்கு
    நன்றி..

    பதிலளிநீக்கு
  5. //பரங்கிக் காய் சாம்பார், கத்தரி கறி, சௌசௌ கூட்டு, தக்காளி ரசம், உளுந்து போண்டா, ஜவ்வரிசி பாயசம், மோர் என்று விஸ்தாரமான உணவு.//


    ஆகா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ...உணவையும் குறிப்பெடுத்து வைத்து அதையும் பயண விவரங்களில் சேர்த்துவிடுகிறேன். படிக்கிறவர்களுக்கும் இந்த யாத்திரை நடத்துபவர் நல்லா சாப்பாடு போடுகிறார் என்ற எண்ணமும் வரும் அல்லவா?

      நீக்கு
  6. பாறை படம் செம....கூடவே சிற்பங்கள் படங்கள் எல்லாம் அழகு!

    இந்தப் பூட்டிக் கிடந்த மண்டபம் அந்த வியூ செமையா இருக்கு, நெல்லை.

    பாலயோக நரசிம்மர் அந்த இடம் இப்ப கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. நாங்கள் சென்றிருந்த போது அன்னதானம் என்று சொன்னார்கள்தான். ஆனால் அந்த வியூ வித்தியாசமாக இருக்கு. பலவருடங்கள் ஆனதால் எனக்குச் சரியாக நினைவில் இல்லையோ என்னவோ..ஆனால் மலை வழி பாறைகள், சிற்பங்கள் எல்லாம் இருந்தவை நினைவுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்(க்கா). அங்கு அன்னதானம் உண்டாம். நாங்கதான் வெளியில் சாப்பிட வாய்ப்பே இல்லையே. ஒவ்வொரு இடத்திலும் மாறுதல்கள் வந்துகொண்டேதான் இருக்கிறது. சென்ற வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் ஒவ்வொரு இடத்திலும் முன்னேற்றம் காண்கிறேன்.

      நீக்கு
  7. சாப்பாடு பிரமாதம் போல!!! நாங்களும் அஹோபிலமடத்திலேயே தங்கினோம். இரு இரவுகள். அங்கு கொடுக்கப்படும் சாப்பாடுதான்.. எனவே இடையில் தேவைக்கு எதுவும் கிடையாது. குழுவாகச் செல்லவில்லையே நாங்கள் குடும்பம்தானே!!! தண்ணீர் மட்டும் வைத்துக் கொண்டோம். பொதியோடு ஏறுவது சிரமம் என்பதால் கையில் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.

    இரண்டாவது இப்படியான பிரயாணங்களில் வயிறு லெகுவாக இருப்பது நல்லது.

    படங்களுடன் நீங்கள் விரிவாக நல்லா சொல்லியிருக்கீங்க நெல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவருடைய யாத்திரையில் இரண்டு சிறப்புகள். 1. தெய்வ தரிசனங்கள் மிகச் சிறப்பாக அமைந்துவிடும் 2. உணவு சூப்பர், அதிகமாகவே இருக்கும். குறை இருக்காது. உடலுக்கு ஒன்றுமே செய்யாது. குறை என்று பார்த்தால், தங்குமிடம்/டாய்லெட் சில இடங்களில் நன்றாக அமையாது.

      நீக்கு
  8. மலை ஏற்றம், நடைப்பயணம் இவற்றில் நெய், எண்ணைப் பண்டங்கள் தவிர்ப்பது நல்லது. லெகுவாகச் ஜீரணிக்கும் உணவுதான் நல்லது. இன்று இயற்கை உபாதைகள் வந்தால் செல்வதும் கடினம் என்பதோடு இப்படியான பிரதேசங்களை நாம் அசுத்தப்படுத்தாமல் இருக்கலாம் என்பதால் உபாதைகள் ஏற்படா வண்ணம் உணவு இருந்தால் நல்லதுதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று இயற்கை உபாதைகள் வந்தால் //

      இன்று - இங்கெல்லாம் ..என்னவோ அடிக்க கூகுள் எதையோ அடிக்க...

      கீதா

      நீக்கு
    2. இது உண்மைதான் கீதா ரங்கன். இருந்தாலும் எண்ணெய் அதிகமுள்ள பட்சணங்கள் போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு மலையேறினால் மூச்சுவாங்கும் (எனக்கு).

      நீக்கு
  9. படங்களும், தகவல்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  10. வாசித்தேன். இயல்பான எழுத்து.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. இறைவனிடமிருந்து உயிர் ஜீவன்களை தனியாகப் பிரித்துப் பார்க்காத சிந்தனை கூட வேண்டும். 'நடைப்பயிற்சி செய்தேன். உண்டேன், உறங்கினேன்..' என்பது போலவான தன்னை முழுமையிலிருந்து பிரித்துப் பார்க்கும் போக்கு இந்த மாதிரி இறை சிந்தனை கூடி வருகிற நேரங்களிலாவது மனதில் படிய வேண்டும் என்ற நினைப்பு மேலோங்கியது. போகப் போக அதெல்லாம் சித்திக்கும். தொடர்ந்து எழுதுங்கள், நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். யாத்திரை அனுபவங்களை எழுதும்போது இவற்றைத் தவிர்க்க இயலவில்லை

      நீக்கு
  12. ** தன்னை முழுமையிலிருந்து பிரித்துப் பார்க்காத போக்கு -- என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தமாதிரிச் சிந்தனை வர இன்னும் நாளாகும் என்று தோன்றுகிறது ஜீவி சார்... இப்போதுதான் வீட்டிலிருந்து (குடும்பத்திலிருந்து) மனதளவில் விலகும் மனநிலை வர ஆரம்பித்திருக்கிறது.

      நீக்கு
  13. யாத்திரை படங்களும் விபரணங்களும் நன்று.

    செல்ல இருப்பவர்களுக்கு மிகவும் உதவியாக தகவல்களைப் பற்றி கூறி இருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!