வியாழன், 13 ஏப்ரல், 2023

எனக்கு ஒரு காலயந்திரம் வேண்டும்!

 பொக்கிஷம் பகுதிக்கு பைண்டிங் புத்தகத்திலிருந்து கலெக்ஷன் செய்து கொண்டிருந்தபோது இந்த விளம்பரம் கண்ணில் பட்டது. 

அதிகம் கேள்விப்படாத பெயராக இருந்தது.  அப்போதைய உயர் ரக சிகரெட்டில் ஒன்று என்று நினைத்து கடந்த ஞாயிறில் பேஸ்புக்கில் பகிர்ந்தேன்.  சேட்டைக்காரர் கொடுத்த பதிலிலிருந்து அது சாதா சிகரெட் என்று தெரிந்தது..  நடராஜன் என்கிற நண்பர் கேட்ட கேள்வி பழைய நினைவுகளைக் கிளப்பி விட்டது.

ஒரு சிகரெட் மூன்று பைசா.
விலை அதிகமா, குறைவா? 10 சிகரெட்டுகள் முப்பது பைசா.
அந்தக் காலத்து கதையில் நாயகர்களோ, வில்லனோ ஸ்டைலாக 'பர்க்லி சிகரெட்' எடுத்து பற்ற வைத்திருக்கக் கூடும்!
நல்ல சுவை! மணமுள்ள புகை!!
சுவை? மணம்? ஆண்டவா...
"சிகரெட் ஸ்மோக்கிங் இஸ் இஞ்ஜூரியஸ் டு ஹெல்த்!"


திரு நடராஜன் கேட்ட கேள்வி...


அதற்கு என் பதில் ..


ஆறாம் வகுப்பு படிக்கும்வரை இந்த கோலி குண்டு விளையாட்டு விளையாடியதாய் நினைவு.  அதை நாங்கள் அப்போது 'பலிங்கி' என்று அழைப்போம்.  ஏனென்றோ, பெயர்க்காரணமோ தெரியாது.  பலிங்கி விளையாட வர்றியா என்பதுதான் பேச்சு வழக்கு.  அப்பா அம்மா சொல்லும்போது கோலிக்குண்டு விளையாடுகிறான் என்று சொல்வார்கள்.  ரசகுண்டுவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை!

பலிங்கி விளையாட்டு - இந்த விளையாட்டை இரண்டு விதமாக விளையாடுவோம்.  ஒன்று, ஒன்பது குழி.  இன்னொன்று ஒற்றைக்குழி.  இதில் பேந்தா என்று எதையோ அழைப்பார்கள்.  ஒருவேளை ஒற்றைக்குழி விளையாட்டைச் சொல்லியிருப்போம் என்று நினைக்கிறேன்.  ஒன்பது குழி விளையாட்டை 'லாக்' என்று சொல்வோம் என்று நினைவு.

பல்வேறு சைசில் பலிங்கிகள் கிடைத்தாலும் நார்மல் சைஸ் என்று நாங்கள் ஒரு சைஸை தீர்மானித்து அதைத்தான் நிறைய வாங்கி வைத்திருப்போம்.  ரொம்ப குட்டி சைஸ் வேலைக்காகாது.  அப்புறம் சற்றே பெரிய பலிங்கி ஏழெட்டு வாங்கி வைத்துக் கொள்வோம்.  அதற்கு மோதி என்று பெயர்.  தற்போதைய பிரதமர் பெயருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.  மோதி என்றால் பெரியது என்று பொருள்.  பல்வேறு நிறங்களில் கவர்ச்சிகரமாக கிடைக்கும் பலிங்கிகள்.

முதலில் ஒற்றைக்குழி விளையாட்டு பற்றி.  தெருவின் ஓரத்தில் அல்லது வீட்டு தோட்டத்தில் ஒரு ஒற்றைக்குழி ஒன்று போடப்படும்.  அதிலிருந்து சில அடி தூரம் அளக்கப்பட்டு எல்லைக்கோடு போடப்படும்.  அங்கு நின்று நார்மல் சைஸ் பலிங்கிகளில் ஒன்றை அந்தக் குழியை நோக்கி உருட்டுவோம், போடுவோம்.  பாக்கெட்டில் ஸ்டாக் பலிங்கிகள் இருக்கும்.  ஏன் என்று அப்புறம் என்று சொல்கிறேன்.  

எப்போதாவது எல்லைக்கோட்டில் நின்று உருட்டும்போதே குழிக்குள் விழுந்து விடும் சில பலிங்கிகள்.  அவர் ராஜா ஆகிவிடுவார்!  மற்றவர்கள் போடுவது ஆங்காங்கே நிற்கும்.  குழிக்கு அருகில் நிற்பவர் முதல் முயற்சியைத்தொடங்க வேண்டும்.  அதாவது குழிக்குள் பலிங்கியை போடும் முயற்சி.  கோட்டிலிருந்து போடும் போது மெதுவாக தூக்கிப் போடுவோமே தவிர அப்புறம் குழியை நோக்கி முன்னேறும் போதும் விளையாட்டின்போதும் பலிங்கியை உபயோகிக்கும் முறை வேறு!!  இடதுகை நடுவிரலில் பலிங்கியை வைத்து வலதுகையைக் குவித்து வலதுகை கட்டைவிரல், ஆள்காட்டிவிரல், நடுவிரலால் இழுத்து எதிரிகளின் பலிங்கிகளை குறிபார்த்து அடிக்க வேண்டும்.  அடித்து விட்டால் மறுஆட்டம் உண்டு.  அடிக்காமல் குழியை விட்டு தூரம் சென்று விட்டால் ராஜாவையே குழிக்கு அருகே வரவிடாமல் போட்டியாளர்கள் அடிப்பார்கள், குழியை நெருங்குவார்கள்.  இரண்டுபேர் குழியில் போட்டு விட்டால் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள மாட்டார்கள்.  வெளியில் தூரம் சென்ற ராஜ மறுபடி குழிக்குள் போடவேண்டும் என்று அவசியமில்லை.  ஆனால் மற்றவர்களிடமிருந்து அடிவாங்காமல் தப்பி குழியை நெருங்கி மறுபடி பாதுகாக்கலாம்.  எல்லோரும் குழிக்குள் போடுவது வரை ஒரு ஆட்டம் நீடிக்கும்.  இதில் எதிராளி நம் பலிங்கியை அவர் பலிங்கியால் அடிக்கும்போது அவர்தரும் Force ஸால் நம் பலிங்கி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துண்டுகளாய் உடைந்து விடும்.  அதற்குதான் டிராயர் பாக்கெட்டில் ஸ்டாக்.  என் குழுவில் சற்றே வயது மூத்த மணி என்று ஒருவர் அடிக்கடி மற்றவர்களின் பலிங்கிகளை உடைத்து நொறுக்குவார்.அவர் இடது கைக்காரர்.  வலது கை நடுவிரலில் பலிங்கியை வைத்து, சற்றே கையைச் சாய்த்து இடதுகையால் நொறுக்குவார்!  நமக்கு முன்னால் ஒருவன் குழிக்கு அருகே சென்று விட்டால் பின்னால் இருபப்வன் அவனையும் அடித்து தூர துரத்தலாம்!  சற்றே பங்கு ஆட்டமா து என்றாலும் அனுமதிக்கப்பட்டது தான்.  அப்படி நடைபெறாமல் இருக்க சில சமயங்களில் பலிங்கி உடைந்த நண்பனுக்கு நான் பலிங்கி தானம் செய்ததுண்டு!

இப்போது மேற்சொன்ன விளையாட்டுக்கு சிகரெட் அட்டைகள் தேவை இல்லை.

அடுத்து ஒன்பது குழி விளையாட்டுக்கு வருவோம்...

வீட்டின் வெளியே சுவரை ஒட்டி மூன்று மூன்று குழிகளாக மூன்று வரிசை போடப்படும்.  அதைச் சுற்றி லாக் எனப்படும் ப வடிவ கோடு போடப்படும் 

ஆட்டகளம் தயார்.

தூரம் அளந்து சற்று தூரத்தில் எல்லைக்கோடு நிர்ணயிக்கப்படும்.  அங்கிருந்து ஒன்பது நார்மல் சைஸ் பலிங்கிகளை உள்ளங்கையில் கட்டைவிரல் தவிர்த்த நான்கு விழிகளுக்குள் பகுத்தானமாய்ப் பொதித்து, சூதானமாய் அந்த லாக்குக்குள் கால்கள் கோடு தாண்டாமல் போடவேண்டும்.  தாண்டினால் பவுல்!  எத்தனை பலிங்கிகள் குழிக்குள் விழுகிறதோ அத்தனை நமக்கு ஆபத்தில்லை, புள்ளிகள்.  நான் மேலே சொல்லி இருபிப்பது போல ஒவ்வொரு சிகரெட் அட்டைக்கும் ஒவ்வொரு மதிப்பு.  அவை இங்கு வாங்கும், கொடுக்கும் அடிகளுக்கு ஈடாக கொடுக்கப்படும்.  ஸ்கூல் விட்டு வரும்போது வழியில் சிகரெட் அட்டை கிடந்தால் பாய்ந்து பொறுக்குவோம்.  ஓரங்களைக் கிழித்து நாடு அட்டை மட்டும் வாகவாரியாய்ப் பிரித்து ரப்பர் பேண்ட் போட்டு பணக்காரர்களாகி விடுவோம்!

இந்த விளையாட்டின் விதிகள் சரியாக நினைவில்லை.  ஓரத்தில் கோடுகளில் நின்றால் நாம் அதை உள்ளே அனுப்ப முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  ஆளுக்கு ஒரு முயற்சி என்று ரவுண்டில் வரும் என்று நினைவு.  அடுத்த முயற்சியில்  லாக்கில் இருக்கும் நம் பலிங்கியை மோதியால் அடித்து நொறுக்குவார் அடுத்த ஆட்டக்காரர்.  குறிப்பாக மணி அண்ணன்.  அந்த முயற்சியில் மோதி லாக்கில் நின்று விடக்கூடாது.   மோதி குழியின் உள்ளேயே மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைவு.  சுவரில் அடித்து உள்ளே இருக்கும் பலிங்கிகளை இழுத்துக் கொண்டு வெளியில் வந்து விடவேண்டும் என்று நினைவு.  அல்லது மோதி உள்ளே இருக்கும் பலிங்கிகளை தொடவேண்டும்.  கோட்டில்தான் நிற்க கூடாது.  கோட்டில் நின்றால் மற்றவர்கள் மோதியால் அடிவாங்கி வெளிவரவேண்டும்.  நம் மோதி வெளி வரும் வரை நமக்கு ஆட்டம் கிடையாது!  சரியாக நினைவுக்கு வரவேண்டுமானால் இந்த விளையாட்டு விளையாடிய மற்ற நண்பர்கள் சொல்வதற்கு துணைவரவேண்டும்.  ஆனால் ஒவ்வொரு ஊரில், ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு ரூல்.  இல்லையா, எனக்கு  ஒரு காலயந்திரம் வேண்டும்!

அண்ணனிடம் கேட்டு விதிகளை ஞாபகப்படுத்திக் கொண்டேன்.  இதோ அப்டேட்..  

நான்கு கோலிகளைத்தான் குழிக்கு உள்ளே தூவவேண்டும்.  தூவி விட்டு நின்றால், சக ஆட்டக்காரர் நாம் எதை மோதியால் அடிக்க வேண்டும் என்று சொல்வார்.  நாம் அதை மட்டும் மோதியால் அடிக்க வேண்டும்.  அடித்து விட்டால் அடிக்கச் சொன்னவர் நமக்கு விதிப்படி ரூபாய் தரவேண்டும் (வேறென்ன, சிகரெட் அட்டைதான்) அடிக்கா விட்டால் நாம் அவருக்கு.  ஆட்டம் போச்.  அடுத்தவர் நான்கு கோலிகளுடன் கோட்டுக்கு விரைவார்.  மோதியோ, இல்லை அடிபட்ட சிறு கோலியோ இன்னொன்றின் மீது பட்டுவிட்டால் 'பச்சா'.  அடித்தவர் சொன்னவருக்கு பணம் தரவேண்டும்.  கோட்டில் நிற்கும் கோலியை அடிக்க 'லாக்' என்று குறிப்பிடவேண்டும்.  அதை அடிக்கும்போது மோதி கோட்டில் அதாவது 'லாக்'கில் நின்று விடக்கூடாது.  அதற்கேற்ப பணப்பரிமாற்றம்.  

நான்கு கோலிகளை உள்ளே போடும்போது எல்லாமே வெளியில் நிராக வாய்ப்பில்லை.  மூன்று வெளியில் இருந்தால் ஆட்டம் போச்சு என்று நினைவு.  இரண்டுஅல்ளது ஒன்று வெளியில் இருந்தால் பங்காளிகள் அதை சுண்டு விரலையும் கட்டை விரலையும் இணைத்து சுண்டு விரலாலோ, கட்டை விரலாலோ கோலியை உள்ளே சுண்டி விடுவார்கள்.  அது ஏற்கெனவே கோலி இருக்கும் குழியில் விழுந்து இரட்டையானால் ஏதோ கணக்கு உண்டு.  சமயங்களில் சில அநியாயவாதிகள் அந்த இரட்டையில் வலது பக்கம் இருப்பதை மட்டும் அடிக்க வேண்டும் என்பார்கள்.  அதற்கும் வழி வைத்திருப்பார்கள் கோலி ஜாம்பவான்கள்!

மணி அண்ணன் வந்தால் நாங்கள் "குத்துதல் கூடாது, தூவல்தான்" என்று சொல்லி விடுவோம்!  அவர் பலிங்கி கொண்டுவர மாட்டார்.  நம் பலிங்கி தான்.  சற்றே வலதுபுறம் சாய்ந்து நின்று வலது விழியருகே மோதியை வைத்து குறிபார்த்து நாம் சொல்லும் கோலியை நச்சென்று தாக்குவார்.  அது அங்கேயே சட்னியாகிவிடும்.  அதைத்தான் குத்துதல் என்று அழைப்போம்.  தூவுதல் என்றால் பாடகர் கையசைப்பைப்பது போல கையை வயிற்றின் அருகேயிருந்த சற்றே மேலாக கோலியை நோக்கி வீசுதல்.  மென்மை.  எவ்வளவு கோலிதான் கடையில் வாங்க அப்பாவை நச்சரிப்பது...  

சுமார் ஐந்தாம் வகுப்பு வரைதான் இந்த விளையாட்டுகள் (கோலிகுண்டு, கிட்டிப்புள், டயர் ஓட்டும் போட்டி)  விளையாடிய நினைவு.  அப்புறம் விளையாட்டுகள் மாறி விட்டன.

இப்போது பலிங்கி வைத்து விளையாடும் விளையாட்டு..  இப்போதெல்லாம் லாக், பேந்தா எல்லாம் விளையாடுகிறார்களா, தெரியவில்லை!


====================================================================================================

கடைசி வார்த்தை ட்விஸ்ட்..!


இம் மாதிரியான வாசகர்களைப் பார்க்கும்போது கு.ப.ரா. கதை சம்பந்தமான ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.

‘மின்னக்கலை’ என்ற சிறுகதையை கு.ப.ரா. கலைமகள் பத்திரிகையில் எழுதி இருந்தார். டிராமில் அவர் போய்க்கொண்டிருந்தபோது முறையாக தமிழ் படித்த ஒருவர் அந்தக் கதை வெகு நன்றாக இருப்பதாகப் பாராட்டிப் பேசினாராம். அந்தக் காலத்தில் கதைகளை ரசித்துச் சொல்பவர்களே அபூர்வம். கு.ப.ரா.வுக்குத் திருப்தியாக இருந்தது.

டிராமிலிருந்து இறங்கவேண்டிய சமயம் வந்ததும் அவர் எழுந்து போகையில், கு.ப.ரா.விடம், “ஆமாம் அந்தக் கதை அடுத்த இதழில் தொடருமோ இல்லையோ” என்று கேட்டாராம்! கு.ப.ரா. அப்படியே அயர்ந்து உட்கார்ந்துவிட்டார். இதைப் பிறகு கு.ப.ரா. தன் நண்பர்களிடம் சொல்லிச் சிரித்தார்.

- எழுத்து 25 (ஜனவரி 1961) இதழில் 'இலக்கிய வம்பு' பகுதியிலிருந்து

ராஜு RV - FaceBook

================================================================================================

இணையத்தில் வண்ணதாசன் போகன் சங்கர் கவிதைகள் சில படித்தேன்.  அப்போது கிட்டத்தட்ட அந்த பாணியில் தோன்றியதை எழுதி வைத்தேன்..  நிச்சயம் குற்றவாளிகள் அவர்கள் அல்ல...  சரியாக உள்வாங்காத நான்தான்!

எனக்கு அவனைப் பிடிக்கவில்லை 
அவனுக்கு என்னைப்
பிடிக்காது என்பதால் அல்ல 
எப்போதும் 
இடது பக்கம் 
தலையைச் சாய்த்தே 
என்னைப் பார்க்கிறான் 

எதிர்ப்பு காட்டி 
ஒரு பக்கமாகவே 
ஒதுங்கி நின்று 
என்னதான் செய்யப்போகிறாய் 
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் 
என்று எல்லாப் பக்கமும் 
சென்றால்தானே 
உண்மை தெரியும் 
வாழ்க்கை தெளியும் 


பிடிக்காததைப் 
படிக்க மாட்டேன் என்றால் 
பிடித்ததில் 
பொய் இருக்கிறதே 
அறியவேண்டாமா 
அடுத்த பக்கம்?

அன்பாயிருப்பதை 
போதித்துக் கொண்டிருந்த 
ஆசிரியர் 
அப்படி இப்படி 
பராக்கு பார்த்துக் கொண்டிருந்த 
அறிவரசனைப் பார்த்து 
பெயரில் மட்டும் இருந்தால் 
போதுமா 
என்று கோபப்பட்டார்.

===================================================================================================

இணையத்தில் ரசித்த நகைமுரண்கள்..  எப்படி அமைகிறது பாருங்கள்...

அறிவுரை அடுத்தவர்க்கு மட்டும்....!

தன்னைத்தானே படிக்காதவர்கள்...

=========================================================================================================

சென்ற வார யானை பற்றிய பகிர்வின் தொடர்ச்சி...!


===================================================================================================

கோலிகுண்டு விளையாட்டு பற்றி படித்த உடன் அந்த விளையாட்டை விளையாடிய தஞ்சை நினைவு வந்து விட்டது!  நான் பலிங்கி வாங்கும் ரோட் கடையிலிருந்து அப்படியே டவுன் நோக்கி நடந்தால் ரேஷன் கடை, மசூதியைத் தாண்டி நம்ம ஈஸ்வரி நகர் சமீபம் இந்த ஆஞ்சநேயர் கோவில்.  சனிதோறும் செல்வோம்.  


=======================================================================================================

நியூஸ் ரூம் :  பானுமதி வெங்கடேஸ்வரன் 

நம் நாட்டில் குறிப்பாக தென்னிந்தியாவில் சொமாட்டோ Zomato,  swiggy,  போன்ற்வற்றால் அதிகம் வினியோகம் செய்யப்படும் உணவு எது தெரியுமா? யூகிப்பது சுலபம்தான். முடியாவிட்டால் கொஞ்சம் பொறுங்கள்.

பெங்களூரில் உ.பா அருந்திய ஒரு பெண் தனக்கு பிடித்த உணவை மும்பையிலிருந்து வரவழைத்தாளாம். நாம் கூட இருட்டு கடை அல்வாவையும், கோபு ஐயர் கடை கார சட்னியையும் வரவழைக்கலாம் பர்ஸ் கொஞ்சம் கனமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

வெயில் காலத்தில் ஜில்லென்று பியர் குடிப்பது குடிமகன்களின் விருப்பம். அதற்கேற்ப டாஸ்மாக்கில் பியர் விற்பனை சக்கைபோடு போடுகிறதாம். ஒரு நாள் விற்பனை லட்ச ரூபாய்க்கும் மேலாம். ஆனால் டிமாண்ட் அதிகம் இருப்பதால் அவசரமாக தயாரிக்கப்ப்டும் பியர் தரமாக இல்லை என்று குடிமகன்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். போதை ஏறவில்லையா?

லண்டனில் தனியாக வசித்த ஒருவர் ஒரு நாய் வளர்த்திருக்கிறார். தினமும் மது அருந்தி விட்டு உறங்குவாராம். அவர் மிச்சம் வைத்த மதுவை அருந்திய அவருடைய செல்லம் மதுவுக்கு அடிமையாகி விட்டதாம். அவர் இறந்ததும் மது கிடைக்காததால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருகிறது. அதற்கு வைத்தியம் பார்த்தபொழுதுதான் அந்த நாய் மதுவுக்கு அடிமையான விஷயம் தெரிந்திருக்கிறது. இப்பொழுது ரிஹெபிலிடேஷன் சென்டரில் வைத்து அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதாம். அது இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டதும் அதை தத்து எடுத்துக் கொள்ள தயாராக ஆட்கள் இருக்கிறார்களாம். காலக்கொடுமையடா!

கர்னாடகாவில் 45000(நாற்பத்தைந்தாயிரம்) ரௌடிகள் இருப்பதாக அந்த மாநில போலீஸ் உயரதிகாரி அறிவித்திருக்கிறார். இது மிரட்டலா?

இந்த வருடம் இந்தியாவில் பருவ மழை குறைவாகத்தான் பொழியும் என்று தனியார் பருவ நிலை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அறிவித்திருந்தது. ஆனால் இந்திய அரசு பருவ நிலை ஆராய்ச்சி நிறுவனம் பருவ மழை தாராளமாக இருக்கும், கவலை வேண்டாம் என்று சொல்லியிருகிறது. வானம் பொழிய வேண்டும், ஸ்வாமி மழை ரொம்ப பெய்ய வேண்டும், பூமியில் போட்டது பொன்னாய் விளையனும் என்று பிரார்த்திக்கலாம்.

ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு விடை:


[அந்த ஒருவர் எவ்வளவு ரூபாய்க்கு ஒரு வருடத்தில் இட்லி சாப்பிட்டார் என்பதைத் தெரிவித்திருக்கலாம்!]
============================================================================================================


பொக்கிஷம்.....

வேகமான வளைவுகள், கோடுகளால் ஆன ராமுவின் சித்திரம்...


காமராஜர் மறைந்தபோது குமுதத்தில்...

முடிவு நான் வேறு மாதிரி யூகித்தேன்.  அது இல்லை!  நீங்களும்தானே?

மாருதியின் பழைய ஓவியங்கள்..  1970 களில் 



ஓடுவதிலேயே உடம்பு சரியாகிவிடும்!

பயங்கர ஆக்சிடென்ட்!!  எங்கள் சிறு வயதில் பொறாமைக்கார நண்பன் வேண்டுமென்றே இடிக்க வேகமாக டயரை 'ஒட்டிக்'கொண்டு அருகில் வரும்போது கடைசி நொடியில் நம் டயரை லேசாக தடம் மாற்றி கீழே விழாமல் ஒட்டிக்கொண்டு போகும் தக்கினிக்கி அறிந்து வைத்திருந்தோம்.


 


134 கருத்துகள்:

  1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனகவேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியினில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. குபரா சிறுகதை.... பல நேரங்களில் இணையத்தில் கதையைச் சரியாக வாசிக்காமல் விமர்சனம் எழுதும்போது, கதை எழுதிய ஆசிரியருக்கு எப்படி இருந்திருக்கும் என நினைத்துக்கொள்வேன். சில வாரங்களுக்கு முன் ஒருவர் என்னை அழைத்து, பையனுக்கு பெண் பார்க்கிறோம், நட்சத்திரப் பொருத்தம் இருக்கு, பொண்ணு கார்த்திகை நட்சத்திரம்தானே... இல்லையே என்றேன் நான். என்சினீயரிங்தானே படிச்சிருக்கா? நான் கடுப்பாகிவிட்டேன். நீங்க யாரையோ நினைத்து என்னை அழைத்திருக்கிறீர்கள். இல்லையே... சரியான நம்பரில்தானே கூப்பிடுகிறேன் என்றார். நிறைய ஜாதகங்கள் இருப்பதால் கன்ஃப்யூஸ் ஆயிட்டேன் என்றார். எல்லாத் தகவலையும் சரியா படிச்சு பிறகு போன் செய்யுங்க, யாருக்குமே.. என்று கடுப்படித்தேன். அது நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்ணைப்பெற்றவர்..  நீங்கள் கடுப்படிக்கலாம்!!!.  நான் பிள்ளையைப் பெற்றவன்..  தணிந்துதான் போகவேண்டும்...  நிறைய இது போன்ற அனுபவங்கள் உண்டு!

      நீக்கு
    2. நான் பையனுக்குப் பார்த்தாலும் இதே மாதிரித்தான் ரியாக்ட் செய்வேன். பெண், பையன் இருவருக்குமே திருமணம் செய்வதில் அதே அளவு பிரச்சனை கவலை இந்தக் காலத்தில் உண்டு.

      ஹலோ... நீங்க ஶ்ரீராம்தானே. புத்தக விமர்சனம் எழுதுவீங்க.. பத்திரிகைகள்லாம் எழுதியிருக்கீங்களே.

      இல்லை. நான் இணைய பிளாக் வைத்திருக்கிறேன். எங்கள் பிளாக் என்று. அதில் எழுதுவேன்.

      ஆமாம். தெரியுமே. நான் படித்திருக்கிறேன். ரொம்ப நல்லா எழுதுவீங்க. சமீபத்தில்கூட ரப்பர் தோட்டம் எப்படி ரப்பர் தயாரிக்கறாங்க என்று நல்லா புரியம்படி எழுதியிருந்தீங்க..

      இந்த ரீதியில் ஒருவர் பேசினால் கடுப்பாகாதா?

      நீக்கு
    3. ஹா.. ஹா... ஹா... அதற்கு கூட நான் கூலாக பதில் சொல்லி விடுவேன்! நான் பெண்ணைப்பெற்றவர் என்று சொன்னது நான் பேசிய பல அனுபவங்களை வைத்து!

      நீக்கு
    4. அந்த அனுபவங்களையே மறைமுகமாக ஒரு வியாழனில் எழுதலாம்.

      நீக்கு
    5. அப்படித்தான் எழுத நினைக்கிறேன்.  எதை எழுதுவது என்று குழப்பமாகி விடுகிறது!

      நீக்கு
  4. கோலி வைத்திருந்தேன். விளையாடி நினைவில்லை. ஏழாம் வகுப்பு படித்தபோது, ஆளுக்கு ஒரு குச்சியை வைத்து விளையாடும் விளையாட்டை ஆடிக்கொண்டிருந்தபோது, வீட்டுக்கு வந்தபின் தராதரம் தெரியாமல் எல்லோருடனும் விளையாடுவயா? எனக் கேட்டு அப்பாவிடம் அடி கிடைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குச்சி வைத்து விளையாடுவது என்பது குச்சியைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கும் விளையாட்டு என்று நினைக்கிறேன்.  கிட்டிப்புள் அல்ல.  அது கொஞ்சம் சீரியஸான, ஆபத்தான விளையாட்டு.  கிரிக்கெட்டின் மூதாதையர்.

      நீக்கு
    2. ஒருத்தன் குச்சியைத் தள்ளி விணும். அவன் நம்மைப் பிடிப்பதற்குள் கல்லின்மீது நம் குச்சி இருக்கணும். நம்மைத் தொட வருவதற்குள் இன்னொருவன் அந்தக் குச்சியைத் தள்ளுவான்... கடைசியில் குச்சி இருந்த இடத்திலிருந்து ஆட்டம் ஆரம்பித்த இடம் வரை அவன் நொண்டிக்கொண்டு வரணும்.. என நினைவு

      நீக்கு
    3. ஆம்.  கேள்விப்பட்டிருக்கிறேன்.  நான் விளையாடியயதில்லை!

      நீக்கு
  5. நகைச்சுவை நன்றாக இருந்தது.

    பழைய மாருதி ஓவியங்கள் ரசிக்கவுல்லை.

    மாருதி வரையும் பெண் ஓவியங்களின் பெரும் ரசிகர் நமக்குத் தெரிந்தவர். ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  மாருதியின் ஓவியங்களில் ஒரு செயற்கைத்தன்மை இருப்பதாக எனக்குத் தோன்றும்!  துரை செல்வராஜூ அண்ணாவின் இஷ்ட ஓவியர் என்பது நமக்கு தெரியும்!

      நீக்கு
    2. பெண் முகம் லக்ஷ்மீகரமாக இருக்கும். அதீத மேக்கப். லதாவும் அப்படியே வரைவால் (கழுத்துக்குக் கீழே சுமார்...இருவரும். நான் ஜெயின் ரசிகன்)

      நீக்கு
    3. சாண்டில்யன் கதைகளுக்கு லதா வரையும் ஓவியங்கள் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக யவனராணி, ராஜதிலகம் போன்றவை.

      நீக்கு
  6. இட்லி அதிக அளவில் ஆர்டர் செய்யப்படுவது வியப்பில்லை. சென்னையில் ஒரு சில ஸ்விக்கி ஆர்டர் எடுக்கும் கடையைப் பார்த்து எனக்கு வாந்தி வராத குறை. என் பெண் பல விஷயங்களை கவனத்தில் எஒள்ளாமல் ஸ்விக்கியில் டிஸ்கவுன்டை நினைத்து ஒரு கடையில் ஆர்டர் செய்யக்கூடாது என்பாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்கைந்து நாட்களுக்கு முன் ஒருவரிடத்தில் இட்லி மட்டுமே ஆகிடந்த வருடத்தில் ஒன்றிரண்டு லட்சத்துக்கு சாப்பிட்ட நபர் பற்றிய செய்தி வந்திருந்தது.  ரூபாய் அளவு சரியாக நினைவில்லை.  நான் ஸ்விக்கியில் போடும் கடைகள் தெரியாத கடைகளில் போடமாட்டோம்.  தெரிந்த பெரிய கடைகளில் மட்டுமே...  பெரம்பூர் ஸ்ரீநிவாஸா, முருகன் இட்லி, A2B இபப்டி...!

      நீக்கு
    2. தம்பி பிள்ளைகளோ, எங்க பையர் குடும்பமோ வந்தால் தான் ஸ்விக்கி, ஜொமோட்டோ எல்லாம். அதிலும் ஸ்விக்கி மூலம் சங்கீதாவில் வாங்கி அவதிப் பட்டப்புறம் பையர் குறைச்சுட்டார்.

      நீக்கு
    3. நான் நேரில் சென்று விடுகிறேன்!  ஆனந்த் பவன், சரவணபவன், சங்கீதா வசந்த பவன் இல்லாத கடைகளை நாடுகிறேன்!

      நீக்கு
  7. யானைக் குட்டியுன் சோபாவில்... ரொம்ப தைரியம்தான். பாகன்களே யானையின் அருகில் படுக்க மாட்டோம், அது குழந்தை மாதிரி, காலைத் தெரியாமல் நம் மீது வைத்தால் சட்னி என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டிதானே?  பாதிக்காது.  மேலும் தூங்க எல்லாம் வேறு இடம் சென்று விடுவார்களாயிருக்கும்.  இந்தப் படம் சென்ற வாரம் கிடைத்திருந்தால் சேர்த்திருப்பேன்.  தாமதமாக கிடைத்தது!

      நீக்கு
    2. இந்தப் பெண்ணும் இந்தக்குட்டி ஆனையும் உள்ள வீடியோ எனக்கு அடிக்கடி வரும். நன்றாக இருக்கும்.

      நீக்கு
    3. அடடே... இதில் வீடியோ எல்லாம் உண்டா என்ன?

      நீக்கு
  8. கிதைகள்... சுமார் ரகமாகத் தோன்றியது. அன்பு, அறிவு.... சாதாரணச் சிந்தனை

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் சிறு அகவையில் பலிங்கு விளையாடிய நினைவுகள் வந்தது. காரணம் இவ்விளையாட்டில் நான் கில்லாடி.

    மேலும் பலிங்கு விளையாட்டில் பிரதமரை கொண்டு வந்து அடித்து நொறுக்குவது மறைமுக அரசியலாக தோன்றுகிறது ஜி.

    கவிதைகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   பெரிய கோலிகுண்டின் பெயர் மோதி.   அவளவுதான்   நன்றி ஜி.

      நீக்கு
  10. பளிங்கி அல்லது பலிங்கி marble என்ற ஆங்கிலப் பெயரின் தமிழாக்கம். 3ஆம் வகுப்பு வரை கடலூரில் இருந்தேன். என் வயது பிள்ளைகளுடன் பழகுவது பள்ளியில் மாத்திரமே. ஆகவே அந்த வயதில் தாய் வழி தாத்தாவுடன் வீட்டு தோட்டத்தில்  கிட்டிப்புள் விளையாடியது உண்டு, 

    3ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை திருச்சி வாசம். பீமநகர், உறையூர் தையல்காரத்தெரு (நடு, மற்றும் வடக்கு) என்று பல வீடுகள் மாறியதால் பள்ளிகளும் மாறியது. குப்பைத்தொட்டி பள்ளி (municipal), பல RC பள்ளிகள், என்று மாறி கடைசியில் 6, 7 வகுப்புகள் ஆரியன் செகண்டரி ஸ்கூலில் படித்ததால் பல நண்பர்கள். வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்து காத்திருந்த காலம். அன்று மதியம் வகுப்புகள் இல்லாமல் பஜனை நடக்கும், பொங்கல், புளியோதரை போன்ற பிரசாதங்கள் கிடைக்கும். விளாயாட்டுகள் கோலி, பம்பரம். கிட்டிப்புள் (தெரு) என்பவை எங்கள் (பையன்கள்) விளையாட்டுகள். 


    8 முதல் 11ஆம் வகுப்பு வரை கடலூர் மஞ்சக்குப்பம் கர்னல் தோட்டம் சென்ட் ஜோசப் பள்ளி. பெரிய வளாகம். எல்லா விளையாட்டுகளும் விளையாடலாம் (football, ஹாக்கி, பாஸ்கெட்பால், வாலிபால், பேஸ்பால) என்னு பல கிரவுண்டுகள். அப்போதுதான் இத்தகைய விளையாட்டுகளும் உண்டு என்று அறிந்து கொண்டேன். எல்லாப் பிள்ளைகளும் PT period கட்டாயம் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாட வேண்டும். ஒரு தடவை பந்து மாரில் அடித்து மயங்கி விழுந்து விட்டேன். pt சார் காபி கொடுத்து எனக்கு விளையாட வேண்டியதில்லை என்று உட்கார வைத்து விட்டார். 
    மீதி பின்னர். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பளிங்கு - நான் சொல்ல நினைத்ததை JKC சொல்லிவிட்டார். நன்றி.

      நீக்கு
    2. முதலிலிருந்து அழகாய் தொகுத்து இருக்கிறீர்கள்.  படிப்படியாய் நாங்களும் இந்த விளையாட்டுகள் எல்லாமே ஆடி இருக்கிறோம்.  வாலிபால் பேஸ்கெட்பால் ஆட என் உயரம் ஒத்துழைத்ததில்லை.  கால்பந்து விளையாடி இருக்கிறேன்.  அதாவது பந்தைத் துரத்திக்கொண்டே மைதானத்தின் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடுவேன்.  என்றாவது ஒரு நாள் என் காலில் பந்து படும்போது வகுப்பில் அதே பேச்சாயிருக்கும்.  வேறு யார்..  நான்தான் சொல்லிச் சொல்லி மாய்ந்து போவேன்!

      நீக்கு
    3. பலிங்கி...   சிறுவயதில் நாங்கள் கொச்சையாக சொல்வதை அப்படியே எழுதி விட்டேன்.  கஷ்டபப்ட்டு எழுத்தில் கொண்டு வரவேண்டி இருந்தது!

      நீக்கு
    4. /வாலிபால் பேஸ்கெட்பால் ஆட என் உயரம் ஒத்துழைத்ததில்லை. கால்பந்து விளையாடி இருக்கிறேன்.// - ஹாஸ்டலில் இருந்ததால் எல்லா விளையாட்டுகளிலும் கலந்துகொண்டிருக்கிறேன். கால்பந்து விளையாட வராது. டென்னிகாயிட்டில் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். ஹாஸ்டலில் 4 பிரிவுகளாகப் பிரித்து நிறைய போட்டிகள் நடத்தி ஹாஸ்டல் டேயின்போது பரிசு வழங்குவார்கள். என் பிரிவில், ஜான்சன் என்ற பையன் கால்பந்து கேப்டனாக இருந்து, என்னை gகோலியாக இரு என்றான் (+1). நான் வேண்டாம், எனக்குத் தெரியாது என்றேன். நான் எல்லாம் பார்த்துக்கறேன் என்று சொல்லிவிட்டான். மிக எளிதான பந்தைத் தடுக்காமல் காலால் உதைக்க நினைத்து கோல் போஸ்டுக்குள் விட்டுவிட்டேன். ஜான்சன் such a good guy. வெறும்ன சிரித்தான். ஒன்றுமே சொல்லலை. ஹாக்கிலயும் gகோலியாக இருந்தேன். தடுத்திருக்கிறேன்.

      நீக்கு
    5. சமயங்களில் இத்தனைபேர் விளையாடவேண்டும் என்றால் அந்த எண்ணிக்கையை நிரப்புவதற்கு நம்மைச் சேர்த்துக் கொள்வார்கள்.  அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் கிரிக்கெட்டில் நான் சில ரன்கள் சேர்த்து அசத்தி இருக்கிறேன்.  தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட் கபடிப்போட்டியில் ஒரு எவர்சில்வர் டம்ளர் பரிசு வாங்கினேன்.  அம்மா ரொம்ப நாள் அதை பத்திரமாக வைத்திருந்தார்.

      நீக்கு
  11. எப்போதும்
    இடது பக்கம்
    தலையைச் சாய்த்தே
    என்னைப் பார்க்கிறான் //

    பாவம். ஏதோ அவனால் முடிந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் இல்லை, இதனால் என்று ஏதோ சாக்கு!

      நீக்கு
    2. ஒருவேளை காதோரம் அலைபேசியை அணைத்து பேசிக்கொண்டு இருக்கலாம்.

      நீக்கு
    3. ஹா.. ஹா... ஹா.. அலைபேசியை வைத்து வைத்து தலை அப்படியே நின்று விட்டது போலும்!

      நீக்கு
  12. சிகரெட்டைக் குடிக்க பயம். தொடை நடுக்கம்! ஆனால் அதுகளைப்பற்றிய விஸ்தாரமான அறிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலிங்கியினால் ஒரு மாளிகை...   பருவத்தால் அட்டை சேர்த்தது...   அதனால் வந்த அறிவு...!

      நீக்கு
  13. பதிவில் எழுத மறந்த விஷயம்.  சிசர்ஸ் அட்டை பெட்டியில் என்று நினைவு..  அல்லது வேறு பிராண்டோ...  அட்டையின் உள்ளே கவனமாகக் கிழித்தால் உள்ளே ஒவொரு எழுத்தாகக் கிடைக்கும்.  எல்லா எழுத்துகளும் கிடைத்து சேர்த்தது விட்டு கடைக்காரரிடம் கிடைத்தால் வியத்தகு பரிசுகள் கிடைக்கும் என்கிற செய்தி எங்களிடையே பரவி இருந்தது.  எவ்வளவு சேர்த்தால் ஓரிரு எழுத்துகள் தவிர மற்ற எழுத்துகள் கிடைக்காது!

    பதிலளிநீக்கு
  14. பளிங்கு புராணம் அருமை..

    விதவிதமான பளிங்குகள் சேர்த்திருக்கின்றேன்..

    ஆனால் விளையாடியதில்லை.. விளையாட முயன்றதும் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நான் சொல்லி இருக்கும் இந்த விளையாட்டை விளையாடி இருக்கிறேன் என்று யாரும் இதுவரை சொல்லவில்லை!

      நீக்கு
    2. நான் இவ்விளையாட்டில் கில்லாடி என்று சொல்லி இருக்கிறேன் ஜி

      நீக்கு
  15. @ ஸ்ரீராம்..

    // மாருதியின் ஓவியங்களில் ஒரு செயற்கைத் தன்மை இருப்பதாக எனக்குத் தோன்றும்! ..//

    அவரவர் பார்வை..

    எனக்குக்
    காற்றொடு
    காற்றாய்
    கதையைக்
    கொடுத்தன..
    கவிதையைக் கொடுத்தன..

    அடுத்தொரு
    பிற்வியிலும்
    அள்ளிக் கொடுப்பன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியும்.  உங்களுக்கு பிடித்த ஓவியர் என்று தெரியும்.  அவரவர் ரசனை, அவரவர் பார்வை.  இதில் குறைகாண ஏதுமில்லை!

      நீக்கு
  16. கனமான பதிவு...
    வழக்கம் போல பதிவைப் பெரிதாக்கிப் படிப்பதில் தான் சிரமம்..

    குண்டு சட்டிக்குள் குதிரை போல கைப் பேசிக்குள்
    கடல் அலைகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  கனமான பதிவு என்றால் இப்படி அர்த்தமா? ஹிஹிஹி..   இத்தனைநாள் நான் ஏதோ பொருள்பொதிந்த பதிவு என்றெல்லாம் சொல்கிறீர்கள்.  இதில் என்ன இருக்கிறது என்று நினைத்துக்கொள்வேன்!

      கைபேசிக்குள் கடலலைகள்..   நல்லது!

      நீக்கு
    2. ஹி..ஹி...
      கனவான் என்றால்?

      நீக்கு
    3. கணவன், சமத்துப் பையனா இருந்தால், மனைவி நல்லா சமச்சுப் போட்டு கனவானா மாத்துவா. எக்குத் தப்பா இருந்தான்னா, சுமாரா பண்ணிப்போட்டு கனம் இல்லாதவனா அவனை வச்சிருப்பா

      நீக்கு
  17. பளீரென்று இருப்பதால் பளிங்கு என்பதே சரியான வார்த்தையாகும் என்று நினைத்தேன்.

    தாங்கள் எழுதியதை வைத்து பலிங்கு என்று எழுதி விட்டேன்.

    பிழையின்றி தமிழ் எழுதுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பளிங்கு என்றெல்லாம் கடையில் சென்று கேட்டதுமில்லை, பேசியதுமில்லை.  கோலிகுண்டு அல்லது பலிங்கி தான்!  பெரிய சைசுக்கு மோதி என்றே கேட்போம்.  சற்று விலை கூடுதல்.

      நீக்கு
    2. கோலி அல்லது கோலிக்குண்டு என்றுதான் நாங்கள் சொல்வோம். பலவண்ணத்தில் அவை இருந்தாலும் அதில் ஒன்று கருநீலத்தில், கொஞ்சம் குண்டாக இருக்கும். அதைப் பிடிக்கும்!

      நான் கொஞ்சம் நன்றாகவே கோலிக்குண்டு ஆடுவேன். தீவிரம் காட்டுவேன். பெரிய பையனாக ஆனபின்பும், பொடியன்களுடன் சேர்ந்து ஆடுவது பிடிக்கும். அதற்காக கிராமத்தில் மற்ற தடியன்களால் கேலி செய்யப்பட்டிருக்கிறேன்!

      நீக்கு
    3. அப்படிதான் மணி அண்ணன் எங்கள் கோலிகளை துவம்சம் செய்வார்!

      நீக்கு
  18. கனமான பதிவு என்றால் கனமான பதிவு தான்..

    வேறு குறைவாக ஒன்றும் இல்லை..

    பதின்ம வயதின் ஓட்டங்களை அள்ளியெடுத்து

    சுவை குன்றாமல் தருவது என்றால் சும்மாவா!..

    பதிலளிநீக்கு
  19. இந்த விளையாட்டை அந்தக் காலத்திலேயே ரவுடித் தனமான பசங்க தான் விளையாடுவார்கள்..

    மூனு காசு அஞ்சு காசு என்று பெட் கட்டுவதும் உண்டு..

    சமயத்தில் அடிதடியில் முடிந்து விடும் ..

    இதனாலேயே இதற்கு மதிப்பு கம்மி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசு வைத்து விளையாடுவதற்கு பதில்தான் நாங்கள் சிகரெட் அட்டை வைத்து சாத்வீகமாக விளையாடுவோம்.  ஆனால் தீவிரமாக விளையாடுவோம்.

      நீக்கு
  20. பளிங்கு என்ற வார்த்தை
    திருக்குறளில்
    பயின்று வருகின்றது..

    பதிலளிநீக்கு
  21. கோலிகுண்டு எப்படி விளையாடினோம் என்று நினைக்க வைத்து விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  22. // சிகரெட் அத்தைக்கும் // என்று ஓரிடத்தில் வந்துள்ளது...

    பதிலளிநீக்கு
  23. சிகரெட் அட்டைகளைச் சேர்த்து நானும் கோலி விளையாடியதுண்டு ஸ்ரீராம்....அப்புறம் அட்டைகளை வைச்சு கார்ட் விளையாடுவது போல...அப்புறம் அடுக்கி வைச்சு கீழ விழாம உருவுவது, ஃபூ என்று ஊதினால் எல்லாம் விழ வேண்டும் பில்டிங்க் விழாம கட்டுதல்னு நிறைய...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுக்கு வந்த போஸ்ட் கார்ட்களை ரயில் போல அடுக்கி தள்ளி விடுவோம்.

      நீக்கு
  24. நான் கலர் கலராக கோலிக் குண்டுகள் வைத்திருந்தேன். என் மகனும் சேர்த்திருக்கிறான். இப்போதும் அதை பத்திரமாக வைத்திருக்கிறேன்....ஆனா இப்ப வீடு மாறியதில் எல்லாம் பரணில்....எந்த டப்பால இருக்குன்னு தேடணும் பாருங்க....கோலி அழகு!

    முன்ன எல்லாம் கோலி சோடான்னு பாட்டில் கழுத்துல இருக்கும் அதைத் தட்டிக் குடிப்பாங்களே இப்பவும் இருக்கா?
    அப்படி சில சமயம் அந்தக் கடைகளில் கோலிகள் வெளியில் மண்ணில் தன் மொட்டைத் தலையை மட்டும் காட்டிக் கொண்டு புதைந்திருக்கும். என் கண்ணில் கண்டிப்பாகப் படும். அவ்வலவுதான் என் காலால் அதை மூடிக்கொண்டு கட்டை விரலால் மெதுவாக மண்ணைத் துளைத்து அதை மேலே ஆக்கி விரல்களால் அமுக்கிப்பிடித்துக் கொண்டு நொண்டி கொஞ்ச தூரம் வந்து கையில் எடுத்துக் கொண்டுவிடுவேன்.

    இப்பல்லாம் கோலிக் குண்டு கண்ணில் படுவதே இல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பவும் வீட்டில் கோலிக்குண்டு இருக்கிறியாது - போர்ன்விட்டா விளையாட்டு விளையாட..

      நீக்கு
    2. அதென்ன போர்ன்விட்டா விளையாட்டு?!!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. பலிங்கி பாதித்த கடைசி படத்தைப் பார்க்கவும்!

      நீக்கு
  25. குழிக்குள் உருட்டுவோம் அலல்து போடுவோம்//

    ஸ்ரீராம் நாங்க ஒரு கோலியை வைத்துக் கொண்டு இடக்கை நடுவிரலில் வைத்து வளைத்து தரையில் உள்ள அந்தக் கோலியை அடிப்போம்...கையில் கொஞ்சம் பெரிய கோலி....தரையில் அதைவிடச் சின்ன கோலி...அதை அப்படி அடித்து அடித்து குழிக்குள் தள்ளுவோம். கிட்டத்தட்ட கேரம் போல....

    ஸ்னூக்கர் போலவும் விலையாடியதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. இடதுகை நடுவிரலில் பலிங்கியை வைத்து வலதுகையைக் குவித்து வலதுகை கட்டைவிரல், ஆள்காட்டிவிரல், நடுவிரலால் இழுத்து எதிரிகளின் பலிங்கிகளை குறிபார்த்து அடிக்க வேண்டும்.//

    அதானே பாத்தேன்....இது இல்லாம எப்படின்னு....முதல் வரிகளைப் பார்த்ததும் excitement மேலே கருத்து!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இடது கையை விரித்து வைத்து ஆட்காட்டி விரல், கட்டி விரல் இடைவெளிக்குள் கோலியை சுண்டி ஆட்டம் முடிப்பதும் உண்டு. 

      நீக்கு
  27. இதில் எதிராளி நம் பலிங்கியை அவர் பலிங்கியால் அடிக்கும்போது அவர்தரும் Force ஸால் நம் பலிங்கி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துண்டுகளாய் உடைந்து விடும். அதற்குதான் டிராயர் பாக்கெட்டில் ஸ்டாக்.//

    ஆமாம் நான் ஒரு சுருக்குப் பை வைச்சிருப்பேன் ஸ்கர்ட் னா இடுப்புல தொங்கவிட்டபடி...இல்லைனா கவுன் பாக்கெட்ல இருக்கும்...ஆனா என் கோலி மட்டும் உடைஞ்சுச்சு அவ்வளவுதான்....அழுகை வரும்..சண்டை போடுவேன்... என் கோலிய யாரு உடைச்சாங்களோ அவங்க வாங்கித் தர வரைக்கும் விட மாட்டேன்!! ஹாஹாஹா ...பின்ன கஷ்டப்பட்டுச் சேர்த்து வைச்சிருப்பேன்ல...வீட்டுல வாங்கித் தரமாட்டாங்களே...பொண்ணு உனக்கு எதுக்கு கோலின்னு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் அழமாட்டோம்.  வன்மம் வைப்போம்.  எங்களுக்கு அடுத்த சான்ஸ் எப்போது வரும்னு காத்திருப்போம்.

      நீக்கு
  28. ஆமா இதுக்கு அட்டைகள் தேவை இல்லை..

    ஸ்கூல் விட்டு வரும்போது வழியில் சிகரெட் அட்டை கிடந்தால் பாய்ந்து பொறுக்குவோம்.//

    ஹாஹாஹா மீ டூ ஸ்ரீராம். வீட்டுல திட்டு விழும்..சரி இதை ஒரு பதிவாகவே போட்டுரலாம்....நன்றி ஸ்ரீராம் ஒரு பதிவுக்கு மேட்டர் கொடுத்ததுக்கு. எழுத நிறைய இருந்தும், எழுத மனம் இல்லாமல் மழுங்கிப் போய்.....இப்ப நீங்கள் இதைச் சொன்னதும் சில்லுசில்லாய்ல போட்டுர்லாமேன்னு தோணுது...எழுதணுமே...அங்கதானே கஷ்டமாக இருக்கு. பதிவுகளுக்கு வந்து கருத்துகொடுத்துட்டுப் போனா அவ்வளவுதான் அதன் பின் வேறு வேலைகளுக்குப் போய்விடுகிறேன்....எழுதத் தோன்றுவதில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் புத்தக அலமாரி சிகரெட் நாத்தம் அடிக்கும்!  ரப்பர் பேண்ட்  ரப்பர் பேண்டாக கட்டி நூறு ரூபாய், இருநூறு ரூபாய், முன்னூறு ரூபாய் கட்டெல்லாம் இருக்கும்!

      நீக்கு
  29. ஆனால் ஒவ்வொரு ஊரில், ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு ரூல். //

    இந்த ரூல் புதிதாக இருக்கு ஸ்ரீராம்....நாங்கள் விலையாடியது வேறு...குழிகள் அதேதான் கணக்கு...ஆனால் விளையாடிய விதம்...
    நினைவுக்குக் கொண்டுவருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​இருக்கலாம். பெரும்பாலும் இதுதான் பொதுவிதி!

      நீக்கு
  30. இந்த விளையாட்டைப் பற்றி விராட் கோலிக்கு கூடுதல் விபரம் தெரியலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ்காவின் அனுமதி பெற்று அவரும் சொல்லலாம்!

      நீக்கு
    2. நீங்க சொல்றதைப் பார்த்தால் கிரிக்கெட் தவிர மற்ற எல்லாமே விராட் கோஹ்லிக்குத் தெரியும் போலிருக்கே

      நீக்கு
  31. இந்தக் கோலிக்குண்டு ஆட்டம் நான் நிறைய விளையாடி இருக்கேன். ஆனால் எனக்காக இல்லை. தம்பிக்காக! :) அவன் சின்னவனா இருந்தப்போ இந்த ஆட்டம் ஆட ஆசைப்படுவான். ஆனால் சின்னவன் என்பதால் ஆட்டத்தில் சேர்த்துக்க மாட்டாங்க. எப்படியோ வகை வகையான கோலிக்குண்டுகளையும் சேர்த்திருப்பான். நாங்க கோலிக்குண்டுகள் என்றே சொல்லி இருக்கோம். அவன் சேமிப்பைக் காட்டி அவனுக்குப் பதிலாக நான் ஆடுவேன். சிகரெட் அட்டைகள் கலெக்ஷனும் உண்டு. அதிலேயே கார்ட்ஸ் போல் வரைந்து கார்ட்ஸும் விளையாடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னாலேயே சொல்லி இருக்கிறீர்கள் என்றாலும் பெண்கள் கோலிகுண்டு விளையாடி இருபிப்பது ஆச்சர்யம்.  நாங்கள் விளையாடிய காலங்களில் எங்களுடன் அவர்கள் சேர்ந்ததில்லை.  அவர்கள் பாண்டி ஆடுவார்கள்!

      நீக்கு
    2. பாண்டி, கல்லாட்டம் எல்லாம் எங்க தெருவில் நான் விளையாடினால் அம்புடுதேன்! பூகம்பமே ஏற்படும். அதெல்லாம் தாத்தா வீட்டில் என்னோட கசின்களோடு விளையாடுவேன். கல்லாட்டம் உட்கார்ந்து விளையாடுவதால் அவ்வளவாய் எதுவும் சொல்ல மாட்டாங்க. இதைத் தவிர்த்தும் பல்லாங்குழி, ட்ரேட், தாயக்கட்டம் போன்றவையும் விளையாடி இருக்கோம். அப்போல்லாம் அதாவது நான் பத்து வயதுக்கு உட்பட்ட பெண்ணாய் இருக்கையில் இந்த ஸ்டவ் நகர்கிறது/பேசுகிறது என்றெல்லாம் சொல்வாங்க. அதைத் தவிர்த்து சாய்பாபா படத்திலிருந்து விபூதி கொட்டுகிறது என்பார்கள். இதை எல்லாம் எங்க கடைசி மாமா அதன் சூக்ஷ்மத்தைப் புரிந்து கொண்டு எங்களுக்குச் செய்து காட்டுவார். இந்த............... அது என்ன? ம்ம்ம்! ப்ளாஞ்செட் அதுவும் உண்டு. அதுவும் மாமா தேர்ந்தெடுப்பது இரவு நேரங்களில். ஒரே கலாட்டாவாக இருக்கும். ராத்திரி கொல்லைப்பக்கம் கழிவறைக்குப் போகப் பயம்மா இருக்கும். நான் "கீதா!"கீதா!" என்று கூப்பிட்டுண்டே இருக்கேன். நீ போ என்பார் மாமா. நம்பிப் போனால் அவ்வளவு தான்! குரலை எல்லாம் மாற்றிப் பேசிக் கடைசியில் எங்க பாட்டி (நாங்க தாத்தாம்மா என்று கூப்பிடுவோம்) வந்து ஒரு சதம் போட்டதும் எல்லோரும் படுப்போம். பொன்னான காலம் அதெல்லாம்.

      நீக்கு
    3. அப்போல்லாம் மதுரையையே கிராமம் என்பார்கள். தஞ்சாவூர் எல்லாம் பட்டிக்காடு இல்லையோ? அதான் பெண்கள் பாண்டி மட்டும் ஆடி இருக்காங்க போல! :)))))))

      நீக்கு
    4. So, எல்லோர் வீட்டிலும் சில நிகழ்வுகள் ஒரே மாதிரிதான் நடந்திருக்கின்றன.  பாண்டி, கல்லாங்காய் தவிர மற்றதெல்லாம் எங்கள் வீடுகளிலும் உண்டு.  ஓஜோ போர்ட் கூத்தும் உண்டு.    நான் விளையாட்டுகளைவிட, முக்கிய விஷயமாக அந்த சிகரெட் அட்டை கலெக்ஷன் பற்றியும், அது எங்கு உபயோகப்பட்டது என்றும் சொல்ல வந்தேன்!

      நீக்கு
    5. இருக்கலாம்.  சென்னையே சிறு கிராமங்களால் ஆன ஒன்றிய நகரமாகத்தான் இருந்திருக்கும்!!!

      நீக்கு
  32. இது இல்லாமல் கோலிக்குண்டுகளைத் தவிர்த்துக் கற்களை வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட இதே ஆட்டம் போலவே விளையாடுவோம். ஏழு கல், ஒன்பது கல் தேவைப்படும். அடிக்க வழவழப்பான கூழாங்கல்! இதற்கும் பண்டமாற்றத்தில் சிகரெட் அட்டைகளே!...

    நான் இன்னொரு ஆட்டத்திலும்வல்லமை பெற்றவளாக்கும். அது தான் பம்பரம். நடுவில் ஓர் சின்னக்குழியில் பெரிய பம்பரத்தை வைத்திருப்பார்கள். அதைக் குத்தணும். ஸ்ரீராம் சொல்வது போல் அதன் விபரங்களும் அரைகுறையாய் நினைவில். நம்பம்பரத்தைக் கீழே சுற்றவிட்டு அது சுற்றும்போதே மேலே எடுத்து அது சுற்று முடிந்து கீழே விழுவதற்குள்ளாக நம் உள்ளங்கையில் ஏந்தணும். இதற்கு "அப்பீட் எடுத்தல்"னு பெயர்னு நினைக்கிறேன்.

    ஆனால் இந்த விளையாட்டுக்கள் எல்லாமே தம்பிக்காகத் தான். என்றாலும் அப்பா ஊரில் இல்லை எனில் தைரியமா விளையாடுவோம். ஊரில் இருந்தால் அவர் வெளியே போகும் சமயங்களில். நான் வாசலில் இருப்பதைப் பார்த்தால் கத்துவார் என்பதால் தம்பியின் நண்பர்கள் சத்தமாகப் பேசிக் கொண்டு என்னை மறைத்து மெதுவே உள்ளே அனுப்பிடுவாங்க. நானும் சமர்த்தாக மாடியில் போய்ப் புத்தகமும் கையுமா உட்கார்ந்துப்பேன். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆணாயிருந்தாலென்ன, பெண்ணாயிருந்தாலென்ன..  அப்பா வந்தால் எல்லோருமே அப்படிதான் பம்முவோம்.    அபாபாவுக்கும் தெரிந்திருக்கும்.  ரொம்ப விரட்டினால் கைமீறிவிடும் என்று கண்டுக்காமல் இருந்திருப்பார்!

      நீக்கு
  33. இப்போதெல்லாம் கிராமத்துக்குழந்தைகள் கூடத் தெருக்களில் விளையாடிப் பார்க்கலை. தி.நகரில் உள்ள மைதானம் ஒன்றில் முன்னெல்லாம் குழந்தைகள் நிறைய விளையாடுவாங்க. இப்போ அந்த மைதானமே இருக்கோ இல்லையோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை.  இப்போதெல்லாம் தெருவில் விளையாடும் குழந்தைகளே சென்னையில் அபூர்வம்.  அபப்டியே விளையாடினாலும் கிரிக்கெட்தான்!

      நீக்கு
    2. எங்கள் தெருவில் மாலையானால் தெருக் குழந்தைகள் பெற்றோர் எல்லோருமே பேட்மின்டன் விளையாடுவாங்க. அது போல பார்க் முழுவதும் தினமுமேஎ குழந்தைகள் பெற்றோர்....குழந்தைகள் எல்லாம் ஓடி விளையாடுவதைப் பார்க்கலாம். சறுக்கு மரம், சீ சா, ஊஞ்சல் கம்பியில் ஏறித் தொங்கி நடப்பது என்று பார்க்கலாம்

      கீதா

      நீக்கு
  34. இப்போது எங்கள் ஊர் கிராமத்தில் பார்க்கவில்லை ஆனால் வேறு பேருந்தில் சென்ற போது வழியில் ஒரு இடத்தில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்தேன் ஆனால் இப்படி எல்லாம் இல்லை. சும்மா ஒரு குழி நோண்டி அதற்குள் போடுவது அவ்வளவுதான் விரலில் வைத்து வளைத்து ட்ரிகர் செய்வது....

    எங்கள் ஊரில் தெரு சிமென்ட் ஆனபிறகு எங்க குழி நோண்ட முடியும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் எப்படியும் குழி ஏற்படுத்தி விடுவோம்.  தெருவில் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

      நீக்கு
  35. கு பா ரா வின் தகைதை வாசித்தவரின் கடைசியில் கேட்ட கேள்வி.....ஹாஹாஹாஹா ராமாயணம் படித்துவிட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்பது போல் இருக்கிறது!!!!!

    கீதா..

    பதிலளிநீக்கு
  36. கவிதைகளில் முதல் கவிதை தவிர மற்றவற்றை ரசித்தேன். அதுவும் இரண்டாவதும் மூன்றாவதும் சூப்பர். முதலாவது புரியலையே, ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  37. அறிவுரை அடுத்தவர்க்கு மட்டும் - ஹாஹாஹா ஹா உலகத்துல இலவசமா கிடைக்கிறது இது மட்டும்தான்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  38. அடுத்த படம்...ஹாஹாஹா அதான் இப்படி நுழையமுடியாட்டாலும் பாலத்தை இடிச்சுட்ட்டாச்சும் போவோம்ம்னு

    ரெண்டு படமுமே நகை முரணை ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  39. இன்றைய பதிவிலே ரொம்ப ரசித்த படம் செல்ல ஆனைக்குட்டி படுத்திருக்கும் அழகு!!! தன்னைக் காப்பாற்றியவருடன்....ரசித்து முடியலை ஸ்ரீராம்...என்ன அழகு பாருங்க அந்தக் குட்டிச் செல்லம்!!! அந்த முக expressions!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..   கோபத்துக்கும் யானைதான்...  அன்பு, செல்லத்துக்கும் யானைதான்.

      நீக்கு
  40. ஆஞ்சு கோயில் பயணத்தில் எடுத்தீங்களோ?!!!

    நியூஸ் ரூம் செய்திகள் நல்லாருக்கு..

    சீக்கிரம் குளிச்சுட்டு வாங்கன்னு சொன்னது ஒரு வேளை நீங்க வந்த பிறகுதான் நீங்கதானே சமைக்கணும்னு சொல்வாளோஒ மனைவின்னு நினைச்சா...!!!!!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2014 ல் தஞ்சை சென்றபோது எடுத்த படத்தை கூகுள் நேரம்பார்த்து காட்டியது.  லபக்கென்று பிடித்து விட்டேன்!

      சமையல்..   சரியாய் புடிச்சீங்க...   அதேதான்!

      நீக்கு
  41. டயர் ஓட்டிய போது ஆமா முதல்ல நானும் ஏமாந்திருக்கேன் அப்புறம் நாங்களும் தடம் மாற்றும் தக்கினிக்க பிடிச்சுட்டோம்ல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​டயரும் ஒட்டிக்கொண்டு ஓடி இருக்கிறீர்களா? அடக்கடவுளே...

      நீக்கு
  42. நகைச்சுவைத் துணுக்குகள் எல்லாம் ரசித்து சிரித்தேன்...

    மாருதி ஓவியங்களா இவை?!!!! எனக்கு அப்ப பின்னாடி வரைந்தவைதான் தெரியும் போல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்கள்...  மாருதியின் ஓவியங்களில் அந்தக் கண்கள் காட்டிக்கொடுத்து விடும்.

      நீக்கு
  43. பதிவு இளமைகாலங்களை கண் முன் கொண்டு வந்து விட்டது.
    என் வீட்டில் ஆண்ணா, தம்பி விளையாடி இருக்கலாம்.நான் பார்த்தது இல்லை.
    வீட்டில் நிறைய கோலி குண்டுகள் இருந்தன. சிகரெட் அட்டை சேகரிப்பு உண்டு பள்ளியில்.
    //இப்போது பலிங்கி வைத்து விளையாடும் விளையாட்டு..//
    அதுவும் பழசுதான், என் பிள்ளைகள் விளையாடியது, இப்போது கொலுவில் இடம்பெறுகிறது, எங்கள் வீட்டுக்கு சின்ன பிள்ளைகள் வந்தால் விளையாடுகிறார்கள்.

    கு.பா.ரா ரசிகர் கேட்டது சிரிப்பு. உங்கள் கதையை நிறைய படித்து இருக்கிறேன் என்று ஆசிரியரிடம் சொன்னால் எந்த கதை அதிலிருந்து இரண்டு வரி சொல்லுங்கள் என்றால் விழிப்பார்கள் சில ரசிகர்கள்.

    உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது.

    பொக்கிஷ பகிர்வில் ஒரு படம் எனக்கு வரவில்லை , (முதல் படம்)
    மற்ற அனைத்து பகிர்வுகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. பொக்கிஷம் பகிர்வில் முதல் படம் ராமுவின் சித்திரம் ஒன்று.

      நீக்கு
  44. காலயந்திரம் வேண்டுமா எதற்கு பழைய நினைவுகளை மீட்டு கொண்டு வரவா? அல்லது பழைய காலத்துக்கு போய் அந்த வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசையா? காலயந்திரத்தில் எந்த பகுதி வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் அந்த வாழ்க்கையை வாழ ஆசையில்லை.  கடந்து போனதே போதும்.  விதி பற்றி அறிய காலயந்திரம் கேட்டேன்.  மறுபடி சென்று பழைய வாழ்க்கையை வாழவோ, அதை மாற்றியமைக்கும் முயற்சியோ எனக்கு விருப்பமில்லை.  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  45. கோவில் குண்டும், கிட்டிப்புல்லும் சிறிய வயது கனாக்காலத்திற்கு இட்டுச் சென்றது.

    பாடசாலை விடுமுறையில் சிறுவர்கள் நாம் ஆடிப் பாடி குதூகலித்து விளையாடிய விளையாட்டுகள் மறப்பதற்கு இல்லை.

    பதிலளிநீக்கு
  46. நாங்கள் கோலிக்கா என்போம். ஹாக்கி, கிரிக்கெட், கிட்டிப்புள், பம்பரம் என அண்ணன்மார்களுக்கு ஈடாக நானும் தங்கையும் எல்லா விளையாட்டும் விளையாடுவோம் கோலிக்கா தவிர்த்து :)! அது மட்டும் எங்களுக்கு சரியாக விளையாட வருவதில்லை.

    பகிர்ந்த கவிதைகள், தகவல்கள், ஓவியங்கள் யாவும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!