ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 


அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை– பகுதி 9

திவ்யதேச சந்நிதியாகக் கொள்ளப்படும் அஹோபில நரசிம்மரைச் சேவித்த பிறகு அங்கிருந்து வெளியே வந்து, மூங்கில் கழி ஒன்று வாங்கிக்கொண்டு மற்ற சந்நிதிகளை/கோவில்களை தரிசிப்பதற்காக காட்டை நோக்கி நடையெடுத்து வைக்கிறோம்.

காட்டுப் பாதையில் சிறிது நடந்தால் ஒரு மண்டபம் வரும். அதையும் தாண்டி, மலைப்பாதையில் படிகளில் ஏறவேண்டும். குறுகலான படிகள், இரு பக்கமும் சரிவாக இருக்கிறது. மலையின் கற்களின் மீது வெட்டப்பட்ட படிகள். சுமார் ½ கிமீ தூரம், மலைப்பகுதில் ஏறினால் மாலோல நரசிம்மர் ஆலயம் வருகிறது. இந்த சந்நிதியும் குகைப்பகுதியில்தான் அமைந்துள்ளது. பிற்காலத்தில் வெளிப்புறப்பகுதியில் மண்டபம் கட்டியிருக்கின்றனர்.

தொடர்ந்து நடந்து மலைப்பாதையில் ஏறும்போது கொஞ்சம் கடினமாகத்தான் தோன்றுகிறது. இதற்கே கஷ்டப்பட்டால் எப்படி? இன்று இன்னும் இரண்டு கோவில்களுக்கு மலைப்பாதைதா. அதிலும் ஜ்வாலா நரசிம்மர் ஆலயத்துக்கு நெடிய, கஷ்டமான மலைப்பாதை. இருந்தாலும், ஆரம்பத்தில் ஏற ஆரம்பிப்பதால், கொஞ்சம் கஷ்டமாகத் தோன்றியது.

யாத்திரைக்கு அழைத்துக்கொண்டு செல்பவர், எங்களிடம், பெண்கள் எல்லோரையும் முன்னே செல்லவிட்டு, பிறகு நீங்கள் பின் தொடர்ந்து செல்லுங்கள். அப்போதுதான் யாரும் விலகிச்செல்லாமல் இருப்பார்கள். ஒரு குழுவாக திரும்பிவந்துவிடலாம் என்றார். மலைப்பாதையில் மிக மெதுவாக நடப்பது ரொம்பவே கடினம். அதனால் நான் பொதுவாக விறு விறு என்று ஏறிவிடுவேன். எப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்வேன். பேசிக்கொண்டே நடந்தாலும் ஆபத்து. பேச்சு கவனத்தில் படிகளில் சரியாக அடியெடுத்து வைக்கவில்லையென்றால் அவ்ளோதான்.





இந்தக் கோவிலின் பக்கவாட்டுப் பகுதியில் ஒரு கிமீ தூரம் மலையில் நடந்தால் பிரகலாதன் வாழ்ந்த, படித்த குருகுலம் இருந்த இடம் வருகிறதாம். நாங்கள் அங்கெல்லாம் செல்லவில்லை. (யாத்திரையை நட த்துபவர், பிரகலாதன் மெட்டு என்று சொல்லப்படும் இடம், உக்ரஸ்தம்பம் போன்றவற்றிர்க்குச் செல்ல அனுமதிப்பதில்லை. காரணம், பல வயதானவர்களும் யாத்திரையில் கலந்துகொள்வார்கள். அவர்களால் இந்த இடத்துக்கெல்லாம் செல்ல முடியாது. சிலர் சென்று வந்தால், அவர்களுக்கும் செல்லும் ஆர்வம் வரும், ஆபத்துகளுக்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் இதற்கெல்லாம் தடா) இந்த மாலோல நரசிம்மருடைய உற்சவ மூர்த்தியைத்தான் அஹோபில மடம் ஜீயர் தான் செல்லும் இடத்துக்கெல்லாம் கொண்டு சென்று ஆராதனம் செய்கிறார். அஹோபில மடத்து ஜீயர் எப்போது அஹோபிலத்துக்கு வருகிறாரோ அப்போதுதான் மூலவருடன் நாம் உற்சவரை தரிசனம் செய்ய இயலும். தரிசனத்துக்குப் பிறகு வந்த வழியே கீழிறங்கி, பாதி வழியில் இட து பக்கம் திரும்பி, வராக (க்ரோட) நரசிம்மர் கோவிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம். கீழிறங்குவது சிறிது சுலபமாக இருந்தாலும் கவனமாக இறங்கவேண்டியிருந்தது.


வராஹ நரசிம்ஹர் கோவிலை அடைவதற்கு முன்பு, அருகிலேயே ஒரு குகைக் கோவிலைப் பார்த்தோம். முன்பு சென்றிருந்தபோது, அதன் முக்கியத்துவம் தெரியாததால், திரும்பவும் படி ஏறச் சோம்பல்பட்டுக்கொண்டு, ஓரிரு படிகள் மாத்திரம் ஏறி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இந்தத் தடவை, அங்கிருந்த ஒருவர் இந்த குகையின் முக்கியத்துவத்தைச் சொன்னதால், நான் படிகளில் ஏறி குகையினுள் இருந்த இராமானுஜர் சிலையை வணங்கினேன். சிலர் இந்தச் சிறிய குகையில் அமர்ந்து தியானம் செய்வார்களாம். இராமானுஜர் அஹோபிலத்துக்கு வந்திருந்தபோது இந்த இடத்தில் தியானம் செய்தாராம். (அல்லது தங்கியிருந்திருப்பார்)


வெளியில் பார்ப்பதற்கு மண்டபத்துடன் கூடிய கோயிலாகத் தெரிந்தாலும், நவ நரசிம்மர் சன்னிதிகளும் குகை மற்றும் மலைப்பகுதியில் அமைந்தவை என்பதை நினைவில் கொள்ளணும். க்ரோட நரசிம்மர் என்றும் இவரை அழைக்கின்றனர். வராஹ ரூபத்தில் இருக்கும் நரசிம்மர் கோலம். இந்தக் கோவிலின் எதிரிலேயே பாவநாசினி ஆறு (மலையிலிருந்து வரும் காட்டாறு) ஓடுகிறது. நாங்கள் சென்றிருந்த நேரத்தில் தண்ணீர் வரத்து அதிகம் இல்லை. மழைக்காலங்களில் படிகள் வரை தண்ணீர்ப் பெருக்கு இருக்குமாம்.


வராக நரசிம்மரை தரிசனம் செய்யும்போதே மணி 11 ஆகிவிட்டது. இனி அடுத்துச் செல்லவேண்டியது மலை உச்சியில் இருக்கும் ஜ்வாலா நரசிம்மர் கோவிலுக்கு. அது நெடிய பயணம். ஓடைகள், கற்களுடன் கூடிய பாதைகள், மலைச் சரிவு, படிகள் அமைக்கப்பட்ட பகுதி என்று நிறைய நடக்கவேண்டும். பெண்களை முன்னாலும், ஆண்கள் அனைவரும் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் மெதுவாக நடந்து தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் என்று யாத்திரை நடத்துபவர் கூறினார். துணையாக வழிகாட்டி ஒருவரையும் அனுப்பினார்.  குறிப்பாக என்னிடம், வேகமாக நடந்துசென்றுவிட வேண்டாம், மற்றவர்களுக்குத் தொடர்ந்து வர கஷ்டமாக இருக்கும் என்றார்.  மலைப்பாதையில் ஏறுவதே கடினம். இதில் மெதுவாகவேறு நடக்க ஆரம்பித்தால் ரொம்பவே கடினமானதாக ஆகிவிடும். அதனால் அவர் பார்வையில் இருக்கும் வரை மெதுவாக நடப்பதாக பாவனை செய்துவிட்டு, பிறகு தொடர்ந்து நடக்கலானேன். ஜனவரி மாதம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லை. கையில் தண்ணீர் பாட்டில் ஒன்று கொண்டு சென்றிருந்தேன். இன்னொரு கையில் மூங்கில் கழி. இடையிடையே புகைப்படங்கள் வேறு எடுக்கவேண்டும்.

பாவநாசினி ஆற்றைக் கடந்து செல்வதுபோலத் தோன்றினாலும், அதனைப் பல இடங்களில் கடக்கணும் (ஆறு என்றதும் தாமிரவருணி போன்று நினைத்துவிடவேண்டாம். 50 அடி குறுக்களவு இருக்கும், ஆனால் காட்டாறு. அதாவது மழைக்காலத்தில் மலையிலிருந்து பெருகும் நீர், வெள்ளம் போன்று வரும். அப்போது கோவில்களுக்குச் செல்வது சாத்தியமல்ல.




அரைமணி நேரம் மலைப்பாதையில் கற்களில் வழுக்கிவிழாமல் ஜாக்கிரதையாக நடந்தபிறகு, ஓரிடத்தில் இருந்து பார்த்தால், மேலே உச்சியில் உக்ரஸ்தம்பம் தெரியும். ஆனால் அதுவோ இன்னும் 2-3 கிமீ தூரத்தில் உள்ளது.

ரொம்ப நடந்துவிட்டோம் போலிருக்கிறது. மூச்சு இரைக்கிறது. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்த வாரம் தொடரலாமா?


52 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. அஹோபில நரசிம்மர் தரிசனம் மிக அருமையாக இருக்கிறது.
    நேரில் தரிசனம் செய்த உணர்வு கிடைக்கிறது. படங்கள் எல்லாம் மிக அருமை.
    மாலோல நரசிம்மர் குகை கோயிலின் முன் மண்டபம், போகும் பாதை.மற்றும் இராமானுஜர் இருக்கும் குகை எல்லாம் மிக அருமை.
    இராமானுஜர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இறை தரிசனப் அவன் கருணையால் வாய்க்கிறது. நேற்று இரவு ஆயிரக்கணக்கான அடர்ந்த ஜனத்திரளில் வைரமுடியுடன் ஊர்வம் வந்த செல்வப்பிள்ளையின் தரிசனம் இரண்டடி தூரத்தில் பிரத்யேகமாமக் கிடைத்தது.

      நீக்கு
    2. இன்று என் தோழியின் மூலம் மேலக்கோட்டை செல்வப்பிள்ளையின் வைரமுடியுடன் ஊர்வல தரிசனம் கிடைத்தது.

      நீக்கு
    3. எனக்கு வீடியோ வந்தது, எ.பி.குழுமத்திலும் எங்கள் குடும்பக் குழுமத்திலும் பகிர்ந்தேன்.

      நீக்கு
    4. மிக்க சந்தோஷம். திருநாராயணபுரம் என்ற மேல்எஓட்டை, சிறு கிராம்ம். வைரமுடி அன்று மாத்திரம் எல்லா இடவ்களிலிருந்தும் பத்து லட்சம் மக்களுக்கு மேல் வருவர் (இந்தமுறை குறைவு)

      நீக்கு
  3. பாவநாசினி ஆறு ,மலை பாதை, இயற்கை காட்சிகள் என்று போகும் பாதை எல்லாம் அழகு . படிகளில் கவனமாக ஏறி தரிசனம் செய்து விட்டேன்.

    மேலே உச்சியில் உக்ரஸ்தம்பம் தரிசனம் செய்து கொண்டேன்
    நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம். நரசிம்மர் தரிசனங்கள் தொடரும்

      நீக்கு
  4. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம். மேல்கோட்டை வைரமுடி சேவைக்குப் பிறகு பெங்களூர் நோக்கிச் செல்கிறேன். மறக்கமுடியாத யாத்திரை

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீ நரசிம்மா
    ஜெய நரசிம்மா
    ஜெய ஜெய நரசிம்மா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று Maddur மத்தூர் என்ற இடத்தில், உக்ரநரசிம்மரைச் சேவித்தேன். அந்தக் கோவில் ஐயாயிரம் வருடப் பழமையானது (மூலவர்). மேல்கோட்டையில் யோகநரசிம்மர். இன்னொரு இடத்தில் (மிதிலா சாளக்ராமம் என்ற இடம்), 4000 வருடப் பழமையான யோக நரசிம்மரைச் சேவித்தேன். இது பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.

      நீக்கு
  7. மலைப்பாதை யில் பயணம் திகிலூட்டுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். ஆனால் தரிசனம் செய்யவேண்டும் என்ற ஆர்வம், அந்தப் பிரச்சனைகளை மறைத்துவிடும், நேற்று வைரமுடி சேவையின்போது நடந்ததைப்போல

      நீக்கு
  8. நமக்கெல்லாம் இப்படியான தரிசனம் எக்காலத்திலோ!..

    ஹே நரசிம்மா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்..இப்போ உங்களுக்கு சிறிய இடைவெளி விட்டிருக்கிறார். உடல்நிலை சரியாகிடும், கிரகங்கள் மாறும்போது. பிறகு நிச்சயம் தரிசனம் கிடைக்கும். உங்களுடன் சேர்ந்து நாச்சியார் கோவில் கல்கருடன் உற்சவத்தைச் சேவிக்கும் காலம் வரும்.

      நீக்கு
    2. மிகவும் ஆறுதலான கருத்துரை..

      மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது..

      இந்தக் கருத்தின் மூலமாக எதுவோ எனக்கு உணர்த்தப் பட்டிருக்கின்றது..

      ஓம். ஹரி ஓம்..

      நீக்கு
  9. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    நல்ல ஆன்மிகமான பயணங்கள். பலவித கோவில்களில் இறை தரிசனங்கள் தங்களுக்கு கிடைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். தங்களுக்கு கிடைக்கும் இறை தரிசனங்களை எங்களுக்கும் பகிர்ந்து கொள்வதில், தங்களுக்கு புண்ணியங்கள் பன்மடங்காகப் வந்து சேரும்.

    இப்போது சென்ற பயணமும் நல்லபடியாக சென்று, இறைவனை தரிசித்து வந்த மைக்கு இறைவனுக்கு பல கோடி நன்றிகள். 🙏. பதிவை படித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று வைரமுடியுடன் செல்லப்பிள்ளையை (உற்சவர் பெயர்) தரிசனம் செய்தது மறக்கமுடியாது (500 பேர் அடர்த்தியா உற்சவரைச் சுற்றி இருப்பார்கள், கிட்டத்தட்ட நெருக்கடி. பொதுவா, ஒரு இடத்தில் 3 நிமிடங்கள் வீதம் மூன்று திசைகளில் உற்சவரைக் காண்பிப்பார்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு. பிறகு இன்னொரு பத்து அடி சென்று இதே போல அடுத்த வீட்டிற்கு முன்பு உற்சவரை மக்கள் தரிசனத்திற்கு ஏதுவாகக் காண்பிப்பார்கள். எனக்கு அந்தத் தரிசனத்தில் திருப்தி இல்லை. காரணம், நான் நின்றுகொண்டிருந்த இடத்தில் 1 நிமிடம்கூட நிறுத்தவில்லை. பிறகு அந்தக் கோவிலின் அர்ச்சகர், அந்தக் கூட்டத்தில் என்னை இழுத்துக்கொண்டுபோய், உற்சவர் முன்பாகவே நிறுத்தி ஒரு நிமிடம் தரிசனம் செய்யும்படிச் செய்தார். (கூட்டம்னா கொஞ்ச நஞ்சக் கூட்டம் இல்லை. இந்தத் தடவை குறைவு. - எக்ஸாம் நேரம். இல்லைனா, குறைந்தது பத்து லட்சம் மக்கள். அவங்க பக்தி பக்கத்துலயே நான் நெருங்கமுடியாது). எனக்கு மிகுந்த திருப்தி

      நீக்கு
  10. விளக்கத்தோடு கூடிய படங்கள் சிறப்பாக இருந்தது தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. நெல்லை, படங்கள் எல்லாம் செம...அதுவும் இப்பகுதி பத்தி சொல்லணுமா...அதாவது இப்படி ஏறின பகுதி....நாங்க போனப்ப இந்தச் சொட்டு தண்ணி கூட இல்லை சும்மா பாறைகள் இடுக்குல நானும் சின்ன ஒடைதான்ற ரேஞ்சுல ஈரம் இருந்துச்சு. நாங்க (சின்னப்பசங்க!!!) பாறைல தாவி தாவி அதுவழியா நடந்து போனோம் கொஞ்ச தூரம். மீண்டும் பழைய நினைவுகள் வந்துச்சு உங்க படங்கள்.

    நாங்க போன இந்தப் பயணத்துல நான் ரொம்ப ரசித்தது கோயில் சிற்பங்கள், இது ப்ளஸ் உக்ர ஸ்தம்பம் மலை ஏற்றம். ஆமா இந்த வழில ஒரு பகுதில இந்த க்ளிஃப் தெரியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் உங்கள் நினைவலைகளைக் கிளறியதில் எனக்கும் மகிழ்ச்சி. நீங்கதான் உக்ரஸ்தம்பம் கண்டிப்பா பார்க்கவேண்டிய இடம்னு சொல்லியிருக்கீங்க.

      நீக்கு
  12. ரொம்ப நடந்துவிட்டோம் போலிருக்கிறது. மூச்சு இரைக்கிறது.//

    வயசாச்சுன்னு இப்படிப் பப்ளிக்கா சொல்லலாமா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த 'நடந்துட்டோம்' ல, உங்களையும் சேர்த்துத்தான் சொன்னேன். உங்களைத் தனியா விடக்கூடாதுன்னு, நான் சின்னவனாக இருந்தாலும் என்னையும் சேர்த்துக்கிட்டேன்.

      நீக்கு
  13. நெல்லை கேட்க நினைத்தேன் நீங்களே படமும் போட்டு சொல்லிட்டீங்க அதான் ராமானுஜர் இருக்கும் குகை கோயில்.

    நீங்க தனியா போகணும் நெல்லை அப்பதான் உக்ர ஸ்தம்பம், பிரகலாதன் படி எல்லாம் பார்க்க முடியும். அதை மிஸ் பண்ணாதீங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேல்கோட்டையிலிருந்து யாத்திரை நடத்துபவரின் உறவினரின் நண்பர்கள் ஒரு குழுவாக வந்தபோது, உக்ரஸ்தம்பத்திற்கு நடந்து சென்றனர். அப்போ எனக்கு அவங்களோட போகலாமே என்று தோன்றவில்லை. அந்த மாதிரி இன்னொரு தடவை நடந்தால், நான் செல்வேன்.

      நீக்கு
    2. உக்ரஸ்தம்பத்துக்குத் தனியே போக அனுமதியே கொடுக்க மாட்டாங்க தி/கீதா!

      நீக்கு
    3. இப்போ போகலாம் என்றே நினைக்கிறேன். இருந்தாலும், அந்தப் பாதையின் ஆரம்பத்தைப் பார்த்தாலே மனது களைத்துவிடும். பிடிமானம் இல்லாமல் அது உயரே செல்லும்.

      நீக்கு
  14. உங்கள பயணத்தில் நாமும் சிரமமான பாதையில் சென்று தரிசித்துக் கொணடோம்.

    படங்கள் நன்று .

    பதிலளிநீக்கு
  15. இங்கெல்லாம் நாங்கள் சென்றதின் நினைவுகள் வருகின்றன. ஒரு காலத்தில் இப்படி மலை எல்லாம் ஏறிப் போய்ப் பார்த்துட்டு இப்போச் சும்மா உட்கார்ந்திருக்கேனே, பொழுதே தண்டமாய்ப் போகிறதே என்னும் நினைப்பும் வருது. என்ன செய்ய! ஆர்வமும், சுறுசுறுப்பும் ரொம்பவே குறைந்து விட்டது. அவ்வப்போது ஆர்வத்தை வரவழைத்துக் கொண்டாலும் உடல் ஓய்வையே நாடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படி மலை எல்லாம் ஏறிப் போய்ப் பார்த்துட்டு இப்போச் சும்மா உட்கார்ந்திருக்கேனே, பொழுதே தண்டமாய்ப் போகிறதே என்னும் நினைப்பும் வருது.// - சட் என என் மனதில் வருத்தத்தையும் சோகத்தையும் ஏற்படுத்திவிட்டீர்கள். என் அப்பா, அவரின் 70ம் வயதில் சொன்னார், நான் நடக்காத தூரம் இல்லை, கடைகளில் சாமான்கள் வாங்கிக்கொண்டு, அவற்றைக் கையில் சுமந்துகொண்டு வருவேன், ஆனால் இப்போ கை விழுந்துவிட்டதுபோல வலிமை குன்றியிருக்கு என்றார். என்னுடைய ரோடில் என்ன இருக்கப்போகிறது என்று தெரியவில்லை.

      ஆனால் நான் பொதுவாக சுறுசுறுப்பானவன், கஷ்டத்தைப் பார்க்காமல் குளிர் நீரில் குளிப்பது, 1 1/2 மணி நேரத்துக்குமேல் நடப்பது என்று இருப்பேன். எதிர்காலத்தில்?

      நீக்கு
    2. இப்போவும் வேலைனு இறங்கிட்டா குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே முடிச்சுடறேன். அதிலே ஒண்ணும் பிரச்னை இல்லை. ஆனால் செய்த பின்னர் அலுப்பும், களைப்புமாக வந்துடும்.

      நீக்கு
    3. 'சலிப்பும்' வந்துவிடுகிறது என்றே நினைக்கிறேன். இந்த இணையத்தால் என்ன பிரச்சனை என்றால், அது பலவித உறவினர்களை நமக்குக் கொண்டுவந்துவிடுகிறது, அவர்களுடைய கஷ்டம் நம்முடைய கஷ்டம்போல் தோன்றுகிறது. விரைவில் அனைத்தும் சரியாகப் ப்ரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  16. 13 வருஷங்களுக்கு முன்னாடி நாங்க போனப்போ ஸ்ரீ ராமானுஜர் மண்டபம் பார்த்த மாதிரி நினைவு இல்லை. ஆனால் பிரஹலாதன் மெட்டு போன நினைவு இருக்கு. உக்ர ஸ்தம்பம் இன்னும் கொஞ்சம் மேலே ஏறிப் பார்த்தோம். ஆனாலும் உச்சிக்குப் போக அனுமதிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமானுஜர் குகை அப்போ, டைல்ஸ் போட்டு வைச்சிருந்துருக்க மாட்டாங்க. இப்போ குகை மாதிரி இருக்கு, ஆனால் கொஞ்சம் அழகா இருக்கு.

      இன்னும் ஒரு தடவை அஹோபிலம் போக எண்ணம், ஆனால் அப்போது உக்ரஸ்தம்பம் பிரகலாதன் மெட்டு போகணும் என்று நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
  17. வாசித்தேன். ஆறு, மலை, மலையிலிருந்து வரும் காட்டாறு, குகை, வழிப்பாதையின் ஏற்ற இறக்கப் படிகள் இதையெல்லாம் படிக்கும் பொழுது எனக்கு சிலப்பதிகாரம் நினைவுக்கு வந்தது.
    கோவலன், கண்ணகியை காவிரி பூம்பட்டினத்திலிருந்து மதுரைக்கு கவுந்தி அடிகள் கூட்டிக் கொண்டு வரும் பொழுது வழிப்பாதை
    வர்ணனைகள் பூராவும் இப்படிதான் இருக்கும். இதில் சுனைகளும் சேர்ந்து கொள்ளும். கடைசியில் அழகர்மலையில் வந்து முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையேனும் எழுதி மனதை இலக்கியத்தை நோக்கித் திருப்பும் வல்லமை ஜீவி சாருக்கு உண்டு. அழகர் மலை என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை மலையில்தான் சிலம்பாறு இருக்கிறது. திருமாலிருஞ்சோலைமலையில்தான் அழகர் கொலுவீற்றிருக்கிறார். அந்தக் கோவிலின் காவல் தெய்வம் 18ம் படிக் கருப்பன். இந்தக் கோவில் உற்சவர், அபரஞ்சி என்று சொல்லப்படும் தேவலோகத்தில் கிடைக்கும் தங்கத்தால் ஆனவர். இங்குதான் முஸ்லீம் படையெடுப்பின்போது உற்சவ மூர்த்திகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன, திருமாலிருஞ்சோலைமலை, வைணவர்களுக்கு நான்காவது முக்கியமான கோவில் என்று பலவும் நினைவுக்கு வருகிறது... நீங்கள் எழுதினதைப் படிக்கும்போது சிலம்பாறு என ஏன் அழைக்கப்படுகிறது என்றெல்லாம் மனது நினைத்துப்போகிறது

      நீக்கு
  18. நாங்கள் 'அங்கெல்லாம்' செல்லவில்லை, தடா, சோம்பல் பட்டுக்கொண்டு, அல்லது தங்கியிருந்திருப்பார்,
    போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம்.
    இராமானுஜர் சிலையை என்றில்லாமல் இராமானுஜர் திருஉருவை வணங்கினேன் என்று எழுதலாம்.
    ஏன் இந்த அக்கறைகள் என்றால் ஏதோ சுற்றுலா பயண விவரிப்புகள் போல இல்லாமல் புனிதத் தல யாத்திரை மேற்கொண்ட வடிவமைப்பு எழுத்தில் படிய வேண்டும் என்பதற்காகத் தான்.
    இனி வரும் பகுதிகளில் இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜீவி சார்...சிலசமயம் கலோக்கியல் வார்த்தைகளைக் கொண்டுவரும்போது அந்த வார்த்தைகள் பல்லிளித்துவிடுகின்றன. நன்றி..இதனை மனதில்கொள்கிறேன்.

      நீக்கு
    2. இந்த தொடர் பதிவுக்கு மட்டும் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கும் போதும் அந்த மாதிரி வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம்.
      இது என் ஆலோசனை மட்டுமே. இறைவன் என்று வந்து விட்டாலே தன்னாலே அலாதியான பக்தி உணர்வில் நம் உள்ளம் கலக்க வேண்டும். மனமே கரங்களாய் கைகுவிக்க வேண்டும். இந்த பகுதிக்கு நானிடும் பின்னூட்டங்களை கவனித்திருப்பீர்கள். இந்தப் பகுதி வித்தியாசமாக அமைய வேண்டும் என்றொரு ஆசை.
      அவ்வளவு தான்.
      நன்றி நெல்லை.

      நீக்கு
    3. உங்கள் கருத்தைப் படித்து மனதிலிறுத்திவிட்டேன் ஜீவி சார்

      நீக்கு
  19. மலையேற்றம் மிகவும் சிறப்பு. நரசிம்மர் கோவில்களுக்கு குறிப்பாக அஹோபிலம் செல்லும் ஆவல் உண்டு. அவன் அழைக்க வேண்டும்....... சிறப்பாக இருக்கிறது உங்கள் கட்டுரைகளும் படங்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். நீங்க திருப்பதி மலையில் நடந்து சென்றிருக்கிறீர்களா? அஹோபிலப்பயணம் மற்றும் திருமலை நடையேற்றம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!