செவ்வாய், 4 ஏப்ரல், 2023

குறுந்தொடர் : இறைவன் இருக்கின்றான் 5/7 ஜீவி

 

        இறைவன் இருக்கின்றான் 

                           5
முந்தைய பகுதிகள் :  2  3  4


சுகுமாரன் தன்  தம்பி மனைவி தனலஷ்மிக்கு வந்திருக்கும் நோயைப் பற்றி, அந்த நோய் வந்ததிலிருந்து படும் அவஸ்தையைப் பற்றி, இப்பொழுது சிதம்பரம் ஆஸ்பத்திரி ஒன்றில் அவரை 'அட்மிட்' செய்திருப்பதைப் பற்றி என்று எல்லா விவரங்களையும் சொல்ல கவனமாகக் கேட்டுக் கொண்டார் டாக்டர் சதாசிவம். சுகுமாரன் கையோடு கொண்டு வந்திருந்த மருத்துவ பரிசோதனைக் குறிப்புகளை தீர்க்கமாகப் படித்துப் பார்த்தார்.

"ஒண்ணும் கவலைப்படாதீர்கள். எல்லாம் குணமாக்கிவிடலாம்" என்று அவர் சொன்ன போது எனக்கும் நிம்மதியாக இருந்தது. சரியான இடத்திற்கு வழிகாட்டிய தெய்வத்தை மனதில் நினைத்து நன்றி சொன்னேன்.

"இதில் ஒரு அதிசயம் பார்த்தீர்களா?" என்ற டாக்டர் தொடர்ந்தார்."முந்தாநாள் திடீரென்று நினைத்துக் கொண்டு செய்த ஏற்பாடு. நடராஜர் தரிசனத்திற்காக இன்று மதியம் கிளம்பி சிதம்பரம் வருவதாக எண்ணி இருக்கிறேன். அந்த 'கோ-இன்ஸிடென்ஸை' நினைத்தால் தான் ஆச்சரியமா இருக்கு. ஒண்ணு செய்யுங்கள். என்னோடையே நீங்களும் வந்து விடுங்கள். இன்னிக்கு மூணு மணிக்கு என் கார்லேயே சேர்ந்து போகலாம்" என்றார்.

டாக்டர் அவ்வாறு சொன்னதும் சுகுமாரன் முகம் பிரகாசித்ததைப் பார்க்க வேண்டுமே?.. என் பக்கம் திரும்பி என்னைப் பார்த்தவர், எதுவும் பேசமுடியாமல் என் கைகள் இரண்டையும் அழுந்தப் பற்றிக் கொண்டார். அவரது புருவங்கள் துடித்தனவே தவிர குரல் வெளிவரவே இல்லை.

நான் தான் அவரை ஆதுரத்துடன் அணைத்துத் தேற்றி டாக்டருக்கு நன்றி சொன்னேன். "காலையிலிருந்து வரிசையாக நடப்பதைப் பார்த்தால், எனக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை,டாக்டர். இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பது தெய்வத்தின் கட்டளை போல இருக்கு.. இதுக்கு அடுத்தது இதுதான் என்கிற மாதிரி ஒவ்வொன்றா நடந்து அதுபாட்டுக்க நம்மை கைபிடித்துக் கூட்டிச் செல்கிறது. மனுஷர்களான நமக்கு புரியறதுக்கு தான் என்ன இருக்கு.. வழியும் காட்டி துணைக்கும் அவனும் வரும் பொழுது நமக்கென்ன கவலை?.. அப்படியே ஆகட்டும், டாக்டர்" என்றேன். இது கூட நானாக அவரிடம் சொன்னதாகத் தெரியவில்லை. சீராக லயம் மாறாம நான் பேசினதிலிருந்து வழக்கமா நான் பேசறது மாதிரி இல்லாம, மனசிலே நினைப்பதெல்லாம் எந்த தடுமாற்றமும் இல்லாம யாரோ உந்தித் தள்ளி வெளியே ஓடி வருவது போலிருந்தது.

"அப்போ ஒண்ணு செய்யலாம். நீங்கள் எந்த ஏரியாவில் இருக்கிறீர்கள்?"

"வடபழனி, டாக்டர்."

"முருகா!" என்று குரல் தழுதழுக்க நிமிர்ந்தார் டாக்டர். "உங்கள் விலாசத்தைக் கொடுங்கள். நான் சரியாக மூன்று மணி வாக்கில் உங்களிடத்தில் வந்து அழைத்துச் செல்கிறேன். நேரே சிதம்பரம் போய்விடலாம். சரியா?" என்றார்.

அந்தப் பெரியவர் ரூபத்தில், வழிகாட்டலில் இந்த டாக்டரிடம் வந்தோம். இப்பொழுது இந்த டாக்டரின் ரூபத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது சொல்லப் படுகிறது. 'இது தான் வழி; போ" என்று காட்டப் படுகிறது. இப்படி ஏதேதோ நினைவு கொண்ட நிழல் மாதிரி புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. ஆனால் எல்லாம் முன்னாலேயே தீர்மானித்த மாதிரி, நல்லத்துக்காக வழி காட்டப்படுவதாக ஆரம்பத்திலேயே தெளிவாக புரிந்து விட்டதுதான் ஆச்சரியம். 


அப்படிப் புரிந்த புரிதல்தான், நடப்பவற்றில் தகறாறு பண்ணாமல் நம்பிக்கையோடு அனிச்சையாகப் பங்கு கொள்ள வைத்தது என்று நிச்சயமாய் நினைக்கிறேன். இப்படிப்பட்ட பிராப்தம் கிடைப்பதற்குக் கூட எந்த ஜென்மத்தில் பண்ணிய புண்ணியமோ தெரியவில்லை.

நான் என் வீட்டிற்கான 'லேண்ட் மார்க்'கெல்லாம் விவரமாக டாக்டரிடம் சொன்னேன். "தம்பி, நான் இவர்கள் வீட்டில் இருக்கிறேன். வந்திடுப்பா.." என்று தழுதழுத்த குரலில் சுகுமாரன் சொல்ல,"ஷூர்..வந்திடறேன்.." என்றபடியே டாக்டர் அவர் கைபிடித்து அழைத்துக் கொண்டு வாசல் வரை கொண்டு வந்து வழியனுப்பி வைத்தார்.

நடப்பதெல்லாம் நினைத்து எனக்கு பிரமிப்பாக இருந்தது.


(இன்னும் வரும்)

19 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...... தொடர் சிறப்பாக இருக்கிறது. நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. தொடர் நன்றாகச் செல்கிறது. இறை சக்தி உந்தித் தள்ளுகிறது.

    படமும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  3. செவ்வேள் முருகன்
    சீருடன் காக்க...

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. "ஒண்ணும் கவலைப்படாதீர்கள். எல்லாம் குணமாக்கிவிடலாம்" என்று அவர் சொன்ன போது எனக்கும் நிம்மதியாக இருந்தது.//

    இந்த மாதிரி நம்பிக்கை தரும் வார்த்தைகளே பாதி நோயை குணபடுத்தி விடும். மீதியை மருத்து , மாத்திரை சரி செய்து விடும்.
    கதை நன்றாக போகிறது.

    பதிலளிநீக்கு
  6. கதையை வாசித்து வருபவர்களுக்கு நன்றி. இந்த மாதிரியான இறைவனின் வழிகாட்டுதல்கள் உங்கள் வாழ்க்கையிலும்
    நடந்திருந்தால் அதை வாசிக்கும் பொழுதே நினைவு கொண்டு பாருங்கள். வெளியே சொல்ல வேண்டும் என்றில்லை. நடந்த நன்மைகளை மறந்து விடாமல் அப்படி நினைவு கொள்ளுவதே பக்தியின் வெளிப்பாடான இறைவனுக்கான நம் நன்றி. கை குவித்து நெகிழ்ந்து போதல்.
    சொல்லப் போனால் அந்தமாதிரியான தனி நபர்களின் அனுபவ மீட்டெடுத்தலுக்கே இந்தக் கதைக்கதை வாசிப்பு. நன்றி, நண்பர்களே!

    பதிலளிநீக்கு
  7. அர்த்தபூர்வமான படம் ஒன்றைக் காட்சிப்படுத்தி கதைப்போக்கை ஓவியத்தில்
    கொண்டு வந்த நண்பர் கேஜிஜிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நம்பிக்கைதான் ....என்பதும் சொல்லப்படுகிறது கதையினூடே என்பதும்....தெரிகிறது. தொடர் நேர்மறையாகச் செல்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. படம் நல்லாருக்கு கௌ அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கரையான் புற்று மேனியெங்கும் படர முற்காலத்து முனிவர்கள் தவமிருந்து இறைவன் தரிசனம் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. ஓ! இறை தரிசனம் என்றால் தான் என்ன? சங்கு சக்கரதாரியாக இறைவன் நம்முன் காட்சியளிப்பான் என்பதா?
    கண்டவர் விண்டதில்லை: விண்டவர் கண்டதில்லை என்பார்கள். இது திரேதாயுகமும் இல்லை. கலிகாலம் தான். இறை உணர்வைப் புரிந்து கொள்ள முடியாமல் ஆயிரம் மயக்கங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கிற காலம். யோசியுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஆசிவக கோட்பாடுகள் இவ்வாறே சொல்லும்... ஆனால் உண்மை வேறு...

    பதிலளிநீக்கு
  12. நம்பிக்"கை"

    தெரிந்து செயல்வ"கை"

    வலி-காலம்-இடம் "அறிதல்"

    தெரிந்து "தெளிதல்"

    பதிலளிநீக்கு
  13. இறைவன் வழிகாட்ட நன்மனம் உள்ள டாக்டரின் உதவி சுமுகமாக தொடர்கிறது கதை.

    படமும் நன்று

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!