செவ்வாய், 18 ஏப்ரல், 2023

குறுந்தொடர் : இறைவன் இருக்கின்றான் 7/7 - ஜீவி

 

               இறைவன் இருக்கின்றான்       
 ஜீவி 
7
முந்தைய பகுதிகள் :  2  3  4  5  6
"எஸ்.அது  தான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு" என்று ராதிகாவுக்கு சொன்னேனே தவிர, முழுப்பழியையும் சந்திரமோகன் மேல் போட மனம் இடம் கொடுக்கவில்லை. நாங்கள் டாக்டர் சதாசிவத்தைத் தான் பார்க்க வேண்டியிருக்க, ஒருகால் சந்திரமோகன் அவன் டாக்டர் தம்பியிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அவருடனான சந்திப்பு நிச்சயமாக நிகழ்ந்திருக்காது என்று நம்பினேன். அதை ஒட்டி எழுந்த யோசனையில் ராதிகாவுக்குச் சொன்னேன்: "மனிதர்களாப் பொறந்த நாம தினம் தினம் செயல்படற ஒவ்வொண்ணிலேயும் ஒரு காரண காரியம் இருக்கறதா எனக்குப்படறது. ஆரம்பத்திலே புரியாவிட்டாலும், போகப்போக சிலது புரியற மாதிரி இருக்கு. சிலது ஏன்னு தெரியாமலேயே போய்டறது. சொல்லப்போனா, ஒன்றுக்கு ஒன்று, ஒரு தொடர்புடனேயே ஒவ்வொரு காரியமும் நடக்கறதாத் தோண்றது. அந்தத் தொடர்பு இல்லேனா, நாம என்ன முயற்சி செய்தாலும், அது நடக்காமப் போயிடறது.. அதான், எதுக்காக எதுன்னு தெரியாத போது, எதுக்காக வேணாலும் இருக்கட்டும்னு நம்ம மூலமா ஒருத்தருக்கு ஒரு நல்லது நடந்ததுனா, அதுக்கு இதுவானும் இன்னொருத்தருக்கு செய்ய முடிஞ்சதேன்னு மனத்திருப்திபட்டுக்க வேண்டியது தான்."

"வெறும் திருப்தி மட்டுமே. இல்லையா?" என்றாள் ராதிகா.

"திருப்தி அடையறதுங்கறது பெரிய விஷயம் இல்லையா?.. வேறே என்ன வேணும் சொல்லு.. அதான் நமக்குத் தெரிஞ்சது. இதன் அடிப்படைலே நமக்குத் தெரியாதது என்னலாம் இருக்கோ.. ஒண்ணு நினைவுக்கு வர்றது.. நான் படிச்ச கல்லூரிலே சர்வேசன்னு ஒரு தத்துவ பேராசிரியர் இருந்தார். அவர் அடிக்கடி ஒரு பாட்டைப் பாடுவார். "இதுவே வாழ்க்கை.. இதுதான் வாய்ப்பு.." என்று அந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.  "இதுவே இறைவன் காட்டும் வழி... வாழ்ந்து பார்,  வசந்தம்  தன்னாலே தொடரும்.."  என்று அந்தப் பாட்டு  முடியும்.


"இந்த பாட்டை ராகத்தோடு அனுபவிச்சுப் பாடுவார். சில சமயங்கள்லே, 'ஹம்மிங்' மாதிரி இந்தப் பாட்டை முணுமுணுத்திண்டு இருப்பார். அவர் பாடிக் கேட்டதுக்கு முன்னாடி, வேறு யார் பாடியும் இப்படி ஒரு பாட்டை நான் கேட்டதில்லை. அநேகமா அவர் இயற்றின பாட்டாத்தான் அது இருக்கும். ஒருத்தருக்கொருத்தர் தாங்கலா இருந்து செஞ்சிக்கற உதவிலேதான் உலக வாழ்க்கையே நடக்கறதுன்னு சொல்வார். 'இன்னொருத்தருக்கு செய்யற ஒவ்வொரு உதவியும் நமக்குக் கிடைச்ச வாய்ப்பு; அதான் வாழ்க்கையின் தாத்பரியமே' என்று அந்தப் பாட்டு சொல்லும். தேவையானவங்களுக்கு தேவையான நேரத்திலே செய்யற உதவி ரொம்ப விசேஷமாம்.. எல்லா காரியத்துக்கும் ஒரு விளைவு உண்டுங்கறது சயின்ஸ் இல்லையா?.. நல்லதுக்கு நல்லது தானே விளைவா இருக்க முடியும்?.. அவரை விதை போட்டா, துவரையா முளைக்கும்? சொல்லு."

"நான் எது சொன்னாலும் இப்படி ஏதாவது சொல்லி என்னை அடக்கிடுவீங்க.."

"பார்த்தையா?.. 'ஏதாவது'ன்னு பட்டும் படாம சொல்றையே?.. நான் சொல்றது நியாயமா படலையா, உனக்கு?"

"படறது.. இருந்தாலும்.." என்று ராதிகா இழுத்தாள்.

"இருந்தாலும்?.. நீ நினைக்கிறது எனக்குப் புரியறது. சந்திரமோகனுக்காக ஏன் இப்படி அலட்டிக்கணும்னு நினைக்கிறே. இல்லையா?.. . அப்படிப்பட்டவன் செய்யற ஒரு காரியத்தைக் கேள்விப்பட்டா நீ ஆச்சரியப் படுவே. அவனோட சின்ன வயசிலேயே அவன் அப்பா தவறிப் போனதைப் பத்தி உனக்கு சொல்லியிருக்கேன், இல்லையா?.. உனக்கு நான் சொல்லாததும் ஒண்ணு இருக்கு" என்கிற பீடிகையோடு ஆரம்பித்தேன்.

"ஏற்கனவே அவன் தாயை இழந்தவன். தந்தையும் போய்ச்சேர, பரிதவித்த அந்த சின்னப்பையனை அனாதைச் சிறுவர்களைப் போஷித்து ஆளாக்கற ஒரு சமூக சேவை இல்லத்தில் நான் தான் சேர்த்தேன். அந்த காப்பகத்தின் உதவியில் சாப்பிட்டு படிச்சது அவன் மனசிலே ஆழமான வடுவா பதிஞ்சிடுத்து.. அந்த நன்றியறிதலை இன்னும் அவன் மறக்கலே. மாசாமாசம் தன்னுடைய உழைப்பில் வர்ற வருமானத்தில் கால்பங்கை அந்த அனாதை இல்லத்திற்கு இன்னைக்கும் கொடுத்திண்டு வர்றான். ஒண்ணாந்தேதி வர்ற வரைக்கும் கூட காத்திருக்க மாட்டான். அதற்கு முதல் நாள் ராத்திரியே 'செக்' போட்டு வைச்சிடுவான். எதை மறந்தாலும் இதை மறக்க மாட்டான். ஒவ்வொரு மாசக் கடைசி நாள் அன்னிக்கும் அந்த மாசத்தோட வருமானம் என்னன்னு தெரிஞ்சிக்க பரபரப்பா காத்திருக்கிற மாதிரி அவனோட அப்பொழுதிய நடவடிக்கைகளைப் பார்த்தாத் தோன்றும். அடுத்த நாள் பொழுது விடிஞ்சதும் அந்த காப்பகத்திற்கு 'செக்'கை அனுப்பிச்சிட்டுத் தான் மறுவேலை. மாசம் பூரா அவன் வேலை செய்யற வேகத்தைப் பார்த்தா, அந்த காப்பகத்திற்கு இன்னும் இன்னும் அதிகத் தொகையை சேர்த்துக் கொடுப்பதற்குத் தான் வேலை செய்யறாப்பலத் தோன்றும். 

ஒருகாலத்தில், அனாதையா பட்ட அவஸ்தை இப்போ அந்த காப்பகத்திலே அநாதைகளா அடைக்கலம் புகுந்த சிறுவர்களின் மேல் அன்பா மாறியிருக்கு. தன்னை வளர்த்து ஆளாக்கிய காப்பகத்தின் மேல் அசைக்க முடியாத பற்று, எதிலெல்லாமோ பார்த்துப் பார்த்துச் சேர்த்து கொடுக்கச் சொல்கிறது. இறைவனின் கருணை, அவன் மூலமா எதிலெல்லாம் பரவிப் படர்கிறது, பார்... பேராசிரியர் சர்வேசன் பாட்டு மாதிரி, இது வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்பு இல்லையா, அவனுக்கு?.. "

ராதிகாவின் முகத்தில் தென்பட்ட ஆத்திரம் போய் இப்பொழுது ஒரு மலர்ச்சி தெரிந்தது. "ஓ. அப்படியா? ஆச்சரியமாத் தான் இருக்கு. ஒவ்வொருத்தரும் தங்களுக்கு பிடிச்ச வழிலே ஏதோ செஞ்சிகிட்டு தான் இருக்காங்க போலிருக்கு" என்று அவள் சொன்ன போது நிறைய மகிழ்ச்சி தெரிந்தது. "ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு. இதுலே மனுஷதிருப்தி தான் முக்கியமாத் தெரியறது. இதைச் செய்யணும்னு அவங்க மனசுக்கு திருப்தியா தோணனும். அவ்வளவுதான். நமக்கு மேலோட்டமா பாக்கறச்சே, பலது தெரியறது இல்லே. சந்திரமோகனுக்கு ஒரு தம்பி இருந்ததா சொன்னீங்களே?.. அந்தப் பையன் டாக்டருக்குப் படிச்சு எப்படி முன்னுக்கு வந்தான்னு தெரியுமா?."

"விலாவாரியாத் தெரியாது. அதுபத்தி நான் கேள்விப்பட்டது தான். அதுபத்தி சந்திரமோகன் கிட்டே கேக்கவும் எனக்கு விருப்பமில்லை. வாழ்க்கைலே சிலர் பட்ட கஷ்டத்தைத் துருவித் துருவிக் கேட்கப்படாது. அது அவங்களுக்கு பழசை ஞாபகப்படுத்தி மேலும் வருத்தததைக் கொடுக்கும். 'பழசெல்லாம் சம்பந்தப்பட்ட அவங்களுக்கு ஞாபகம் இருந்தாலே போதும்'ன்னு யாராவது அதைப் பத்திச் சொன்னாலும் மேம்போக்காத்தான் கேட்டுப்பேன். குழந்தைச் செல்வம் கொடுப்பினை இல்லாத ஒரு பெரிய செல்வந்தர், ரெண்டு வயசு குழந்தையா இருக்கும் பொழுதே அந்தப் பையனை தத்து எடுத்துகிட்டு வளர்த்து ஆளாக்கினதா கேள்விப் பட்டேன். அந்தக் குழந்தை அங்கே வளர்ந்து டாக்டராகணும்னு அதுக்கு இருந்திருக்கு. மொத்தத்திலே, பார்த்தா எல்லாமே பரமபத விளையாட்டு மாதிரி தான் இருக்கு. எந்த ஏணிலே எப்போ ஏறுவோம், எந்த பாம்பைப் பிடிச்சிண்டு எப்போ இறங்குவோம்னு ஒண்ணும் தெரிலே. ஆட்டத்தை விளையாடறது மட்டும் தான் நம்ம வேலை போலிருக்கு. நடுநடுவே ஒரு ஆசை. ஏதாவது புண்ணியம் செஞ்சு, ஏணி ஏணியா புடிச்சு ஏறி, தாயம் தாயமா போட்டு அந்த பரமனின் காலடிகளைப் பற்றி விடமாட்டோமான்னுதான். அப்படி தாயம் போடறதும் நம்ம கையிலே இல்லே தானே?.. ஏதாவது புண்ணியம் செய்யறத்துக்கும் அவன் தயவோ, கருணையோ வேணும்னு தெரியறச்சே தான், வாழ்க்கையில் கடைத்தேற அப்படி ஒரு புண்ணியம் செய்ய சான்ஸ் கிடைக்கிறச்சே அதை இழக்க மனசு வருமா, நீயே சொல்லு."

"நீங்க சொல்றது சரிதான். எல்லாரும் இப்படி நினைச்சா எப்படி இருக்கும்?" என்று முகமலர்ச்சியுடன் சொன்னாள் ராதிகா.

"இவ்வளவு சொல்லிட்டேன். நம்ம முரளி விஷயத்தையும் சொல்லிடறேன். இவன் என்ன செய்யறான் தெரியுமா?.. ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்திலே இவன் மாட்டிண்டு ஆஸ்பத்திரிலே கிடந்தப்போ, நாலைந்து கிராமத்து இளைஞர்கள் செஞ்ச இரத்த தானத்திலே தான் இவனுக்கு நினைவே திரும்பியது. அவனுக்கு நினைவு திரும்பிய பிறகு தான் இன்னார் பையன் என்று தெரிந்து விவரம் கேட்டுப் பதறி. பெரியப்பா அந்த ஆஸ்பத்திரிக்குப் போய் இவனைப் பார்த்தார். 

அப்போ அந்த கிராமத்து இளைஞர்கள் தனக்கு இரத்த தானம் செய்யலைனா, தான் இப்போ இல்லைங்கறது முரளி மனசிலே ஆழப் பதிஞ்சு போயிடுத்து.. அப்படி பதிஞ்சது, இப்போ விஸ்வரூபம் எடுத்து நிக்கறது. தன் பத்திரிகை செல்வாக்கு மூலமா வாசகர்கள், ஊழியர்கள்னு வலுவா ஆயிரம் பேரை ஒண்ணு சேர்த்து வைச்சிருக்கான். இந்த ஆயிரம் பேர் எந்த நேரத்திலேயும் யாருக்கு வேணாலும் இரத்ததானம் கொடுக்கத் தயார்! இவன் பத்திரிகை காரியாலயத்திலேயே, பத்திரிகையோடு இணைந்த தனிப் பகுதியா இந்த இரத்ததான சேவை காரியத்துக்காக தனி இலாகாவே செயல்பட்டிண்டு இருக்கு. இதற்காகற மொத்த செலவும் முரளிதுதான். எல்லா ஆஸ்பத்திரி, முக்கிய இடங்கள்னு தேவைப் படறவங்க இந்த இலாகோவோடு தொடர்பு கொள்றாங்க. அவன் பத்திரிகைலே வேலை செய்யற ஆட்களை விட இங்கே வேலை செய்யறவங்க அதிகம்னா, பார்த்துக்கோயேன்!.. இதெல்லாம் நினைச்சுப் பார்க்கறச்சே தான், நாம செய்யறது எவ்வளவு தம்மாத்துண்டுன்னு வெட்கம் வர்றது."

"ஏங்க இதெல்லாம் நீங்க எனக்கு இதுக்கு முன்னாடியே சொல்லலே?.. பலது தெரியாமலே இருந்திட்டேன்." என்று ஏதோ ராதிகா சொல்ல முனையும் பொழுது, ரீங்கரித்து அலைபேசி அழைத்தது.

"என்னன்னு பாரு.." என்று நான் சொல்லும் பொழுதே, வேகமாகச் சென்று அலைபேசியை எடுத்த ராதிகா, அழைத்தவர் பெயரைப் பார்த்து, "இந்தாங்க.. இப்போ பேசுங்க. சந்திரமோகன் தான்--" என்று மகிழ்ச்சியுடன் என்னிடம் கொடுத்தாள்.

"சொல்லு, சந்திரன்.."

"நீங்க ரொம்ப சந்தோஷப்படற ஒரு இடம். உங்களுக்கும் எனக்கும் பிடிச்ச இடம். போகலாமா, சார்?"

"நீ கூப்பிட்டு நா வராமலயா? தாராளமாப் போகலாம். சொல்லு."

"முப்பது வருஷத்துக்கு முன்னாடி நீங்க என்னைக் கூட்டிப்போய் பாதுகாப்பாய் விட்ட இடம். நான் அங்கே இருக்கறச்சே ஏழே பேர். இன்னிக்கு எழுநூறு பேருக்கும் மேலே அந்த அன்னை இல்லத்தில் இருக்காங்களாம். இல்லத்தின் ஐம்பதாவது வருஷ ஜீவிதத்தை விழாவாக் கொண்டாடுகிறார்களாம். நாளைக்கு மாலை நான்கு மணிக்கு மேலே. நான் அங்கே வர்றேன். அம்மாகிட்டேயும் சொல்லிடுங்க.. சேர்ந்து போகலாம், சார்" என்றான்.


"சரி, சந்திரன்.. வந்திடு" என்று சந்தோஷத்துடன் சொன்னேன்.


(நிறைவுற்றது)

32 கருத்துகள்:

  1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற. 

    வாழ்க குறள்..

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. //ஒன்றுக்கு ஒன்று, ஒரு தொடர்புடனேயே ஒவ்வொரு காரியமும் நடக்கறது அந்தத் தொடர்பு இல்லேனா, நாம என்ன முயற்சி செய்தாலும், அது நடக்காமப் போயிடறது.//

    இதுதான் நிதர்சனமான உண்மை.
    சிறப்பான கதைக்கு வாழ்த்துகள் ஜீவி ஸார்

    பதிலளிநீக்கு
  4. தினமும் செயல்படுவது ஒவ்வொன்றிலும் ஒரு காரணம் இருப்பதாகப் படுகிறது.
    வாழ்ந்து பார். வசந்தம் தன்னாலே வரும்.
    நல்லதுக்கு நல்லதுதானே விளைவாக இருக்கமுடியும்?
    இறைவனின் கருணை அவன் மூலமா பரவிப் படர்கிறது
    பழசெல்லாம் சம்பந்தப்பட்ட அவங்களுக்கு ஞாபகம் இருந்தாலே போதும்.
    தாயம் போடுவதும் நம்ம கையில் இல்லை..... (ஒருவேளை இந்த நினைவு நமக்கு எழ வேண்டும் என்பதற்காகவே வைகுண்ட ஏகாதசியின் போது பரம்பத விளையாட்டு விளையாடும் வழக்கம் வந்ததோ?)
    நிறைய த்த்துவ விசாரணைகளோடு கடந்த இரு பகுதியும் இருந்தது.

    மிகச் சிறப்பான எழுத்து. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்க்கை வாழ்ந்துபார் என்பார்கள். நம் செயல்களினால்தான் வாழ்க்கைக்கு அர்த்தம் விளைவிக்கமுடியும்.

    பதிலளிநீக்கு
  6. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்...

    பதிலளிநீக்கு
  7. பல வாரங்களாக ஆவலுடன் படிக்க காத்திருந்த கதை. படிக்க சலிப்புறாமல் கதையை நகர்த்தி சென்ற திரு. ஜீவி அவர்களுக்கு பாராட்டுகள்

    நல்ல கதையை தந்த எ.பிளாக்கிற்கு நன்றி

    கதைக்கு ஏற்ற படங்களை வரைந்து தரும் திரு.கெளதமன்அவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. தொடர்ந்து கதையை வாசித்து இந்த நிறைவுப் பகுதியில் தங்கள் வாசிப்பு அனுபவத்தை சந்தோஷத்தோடு பகிர்ந்து கொண்ட
    நண்பர்கள்
    தேவகோட்டையார்,
    நெல்லைத் தமிழன்
    திண்டுக்கல் தனபாலன்
    மாதேவி
    ஆகியோருக்கு
    என் மனமார்ந்த நன்றி.
    ஏழு வாரங்களும் கூட
    வந்து தொடர்ந்து வாசித்து கருத்துக்களை மனதில் பட்டதை எடுத்துரைத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. தொடர்ந்து கதையை வாசித்து இந்த நிறைவுப் பகுதியில் தங்கள் வாசிப்பு அனுபவத்தை சந்தோஷத்தோடு பகிர்ந்து கொண்ட
    நண்பர்கள்
    தேவகோட்டையார்,
    நெல்லைத் தமிழன்
    திண்டுக்கல் தனபாலன்
    மாதேவி
    ஆகியோருக்கு
    என் மனமார்ந்த நன்றி.
    ஏழு வாரங்களும் கூட
    வந்து தொடர்ந்து வாசித்து கருத்துக்களை மனதில் பட்டதை எடுத்துரைத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. கதை அற்புதமாக இருந்தது.
    //ஏதாவது புண்ணியம் செய்யறத்துக்கும் அவன் தயவோ, கருணையோ வேணும்னு தெரியறச்சே தான், வாழ்க்கையில் கடைத்தேற அப்படி ஒரு புண்ணியம் செய்ய சான்ஸ் கிடைக்கிறச்சே அதை இழக்க மனசு வருமா, நீயே சொல்லு."//

    மனைவி ராதிகாவிடம் உரையாடி நிறைய நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரண காரியம் இருக்கிறது.

    அன்னை இல்லத்திற்கு உதவும் கரங்கள் அதிகமாகி இருக்கிறது.அன்னை இல்லத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளும் சந்திரன் போல அனைவருக்கும் உதவி செய்து வாழட்டும்.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  11. கோமதி அரசு அவர்களுக்கு நன்றி. கதையை வாசித்ததின் அடிப்படையிலான மேலதிக யோசிப்புகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. இந்தக் குறைந்தொடரை தொடர்ந்து வாசித்து அந்தந்த பகுதிகளில் பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. உரையாடல் மூலமாக சென்ற பதிவும் இப்பதிவு இரு பகுதிகளின் வழியாக நிறைய தத்துவங்கள் வாழ்க்கைப் பாடங்கள்! மனைவி ராதிகாவுக்குச் சொல்வதன் மூலம்...

    கரு லைட் தான் ஆனால் தத்துவார்த்தமான உரையாடல்கள் கதையை கனமாக்கிவிட்டது.

    ஒவ்வொரு மனிதனின் உளமும் ஒவ்வொரு மாதிரி. யாரையும் நாம் Judgement செய்து இவர் இப்படித்தான் என்று சொல்ல முடியாது சொல்லவும் கூடாதுதான். ஒவ்வொரு சூழலுக்கேற்ப அவர்களின் செய்கைகள் இருக்கலாம். சந்திரமோகன் பின்னில் இருக்கும் நல்ல விஷயம், முரளியின் பின்னில் இருக்கும் நல்ல விஷயம் ...

    ஒரு சிலர் வெளியில் தெரியாமலேயே பல நன்மைகள் செய்துவருவார்கள். இதற்குக் காஞ்சிப் பெரியவரின் வாக்கு - வலது கை கொடுப்பது இடதுகைக்குக் கூடத் தெரியக் கூடாது என்பது.
    நாம் செய்யும் நல்ல விஷயங்களைக் கூட வெளியில் சொல்லக் கூடாது! இதுவும் மறைமுகமாக சந்திரமோகன், முரளி கதாபாத்திரங்களின் வழி சொல்லப்பட்டதாக நான் புரிந்து கொள்கிறேன். (ராதிகாவின் புரிதலுக்கும் அதற்கு அவள் கணவன் சொல்லும் விஷயங்கள் மூலமும்)

    நேர்மறையான கதை. வாழ்த்துகள்! ஜீவி அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. முதல் பகுதிகளில் வாசித்த போது, சந்திரமோகன் கதாபத்திரத்தைப் பற்றிய ஓர் எண்ணம், நானும் சொல்லியிருந்தேன்....ராதிகாவுக்குத் தோன்றியது போல...ஆனால் அப்படி டக்கென்று எடை போடக் கூடாது என்பது இப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கரு லைட் தான்.//

      நானென்லாம் கரு என்ற ஒன்றை மனத்தில் வைத்துக் கொண்டு கதையெல்லாம் எழுதுவதில்லை.
      அது என்ன சகோ7
      எனக்கே தெரியாத லைட்டான கதைக் கரு?
      சொல்லக்கூடாதா?

      ஜெஸி ஸார் கூட இது தெரியாததாலே இன்னும் வராம இருக்கார்?

      நீக்கு
    2. கரு - Plot என்று சொல்லலாமா?
      கதையின் முக்கிய அம்சம்? கரு என்று நான் சொல்ல வந்தது நமக்கு ஒரு கதைக்கான உருவம் ஆரம்பம் கிடைக்கும்...அப்புறம் அது ஒரு ஃப்ளோ கிடைத்துவிட்டால் தானாகவே மனதில் வந்துவிடும்.

      அண்ணா அதை எதிர்மறையான கண்ணோட்டத்தில் சொல்லவில்லை. அதாவது கதையின் அம்சம், இறைவன் ஏதேனும் ஒரு ரூபத்தில் உதவுகிறான் காரியங்கள் தானாகவே எதிர்பாராமல், ஒவ்வொன்றின் பின்னிலும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் என்ற ரீதியில் சங்கிலித் தொடர் போன்று நடக்கின்றன. உதவிகள் கிடைக்கின்றன. இதைச் சொல்லும் விதம் என்று ஒன்று இருக்கு இல்லையா? அதை அப்படியே சொல்லிச் சொல்லலாம்...ஆனால் நீங்கள் அதை ராதிகாவும் அவள் கணவனும் பேசுவதில் உரையாடல்களில் வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்லிச் செல்லும் போது சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் போது அது கனமான கதை என்று நாம் சொல்வோம் இல்லையா அப்படி...

      பார்க்கப் போனால் எனக்கு இதில் ஒரு கேள்வி தோன்றியது. இப்படி நடக்கும் போது இறைவன் இருக்கின்றான் என்று சொல்கிறோம். சொல்கிறோம் என்று சொல்வதை விட எனக்குத் தோன்றியது என்றே வைத்துக் கொள்ளலாம். ஒரு வேளை இதே சம்பவங்கள் வேறு விதத்திலும் நடக்கலாம் இல்லையா? அப்போது நம் மனதில் என்ன தோன்றும்? என்று என்னை யோசிக்க வைத்தது.

      ஒரு வேளை என் புரிதல் வேறாக இருக்கலாம் அல்லது எனக்குக் கதை பற்றிப் பேசத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். ..

      கீதா

      நீக்கு
    3. தொப்பிக்கேற்ற தலையா, இல்லை தலைக்கேற்ற தொப்பியா என்ற கேள்வி எழுகிறது.
      இந்தக் கதை நிகழ்வுகளை வைத்து கொண்டு நீங்களாகவே கதைக் கரு என்று இல்லாத ஒன்றை உருவாக்கிக் கொள்கிறீர்களோ என்று தோன்றுகிறது.
      இதை என் அனுபவத்தில் புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால் இப்படித்தான் கதையின் முதல் பகுதி, நடுப்பகுதி, கடைசிப்பகுதி இதெல்லாம் இருக்க வேண்டுமென்று முன் கூட்டியே தீர்மானித்துக் கொண்டு எழுத ஆரம்பிப்பதில்லை. ஏதோ ஒரு புள்ளியில் கதை ஆரம்பம் கொள்கிறது. போகப் போக முன் எழுதத் தொடங்கியதின் தொடர்ச்சியாக எழுதுபவனின் கற்பனையைக் கிளறி அது தன்னைத் தானே எழுதிக்கொள்கிறது.
      அவ்வளவு தான். எழுதுபவனின் கதை எழுதும் எழுதாற்றலில் தான் கதை பொலிவு கொள்கிறதே தவிர வேறு எந்த அம்சம் குறித்தும் அல்ல.

      நீக்கு
    4. சுகுமாரன், அவர் தம்பி மனைவி நோயுற்றிருக்கும் தனலெஷ்மி, அவருக்கு சிகிச்சை அளிக்க உதவியாக சிதம்பரம் செல்லும்
      டாக்டர் சதாசிவம் -- இந்தக் கதைப் போக்கின் தொடர்ச்சி என்னவாயிற்று என்று யாருமே கேட்கவில்லையே ஏன்?

      நீக்கு
    5. அதைத் தொடர்ந்திருந்தால் அது தான் வழக்கமான கதைப் போக்கு. டாக்டர் சதாசிவத்தின் மருத்துவ ஆலோசனையில் ஒரு மிர்ரக்கிள் போல தனலெஷ்மி நோய் உபாதைகளிலிருந்து விடுபடுவார். இவ்வளவையும் நடத்திக் காட்டி ஆஹா, இறைவன் இருக்கிறார், பார் என்று கதைத் தலைப்பு நியாயப்படுத்தப் போவதாக, வழக்கமான கதைப் பாணி தானே இது?
      என்று ஜெஸி ஸார் கூட நினைத்தார். இதைத் தான் கதையின் மெயின் பகுதியாக அவர் நினைத்தார். அதனால் தான் சந்திரமோகன் பற்றி, முரளி பற்றியெல்லாம் எழுதி 7 அத்தியாயத்திற்கு நீட்டுகிறீர்களே, நறுக்கென்று மூன்றே பகுதியில் முடிக்க வேண்டாமா என்று ஆதங்கப்பட்டார்.
      அவரே எதிர்பாராதவாறு, சைடு சமாச்சாரங்கள் எல்லாம் மெயின் கதையின் உருவாக்கத்திற்கு துணை ஆயிற்று.
      இது தான் இந்தத் தொடரில் நிகழ்ந்த யாருமே எதிர்பார்த்திராத மாற்றம்.

      நீக்கு
    6. மிக்க நன்றி ஜீவி அண்ணா.

      கதைக்கரு/அம்சம் அதைப் பற்றி நான் சொல்ல நினைப்பதை எனக்குத் தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. Predetermined plot என்று சொல்லவில்லை. ஒரு சில கதைகள் அப்படியும் அமைவதுண்டு என்றாலும் முன்னரே மனதில் இருந்தாலும் எழுதும் போது மாறுவதும் உண்டு கதை தன்னைத்தானே நகர்த்தும் போது முழுவதுமே மாறுவதுண்டு....இது என் அனுபவம். கதை தொடங்கிவிடுவேன்...அதில் ஆழ்ந்து பல மணி நேரங்கள் அல்லது அதே சிந்தனையுடன் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு தட்டச்சு செய்ய முடியாமல் வேலைகள் சூழல் என்பதால்தான் பல கதைகள் முடிவு பெறாமல் உள்ளன. இப்படியான சூழலில் நூல் அறுந்து போகும் போது மீண்டும் அதைச் சரிக்கட்ட எண்ணும் போது கதைப் போக்கே மாறிவிடுவதும் உண்டு. என் போன்ற பெண்களுக்கு ஆழ்ந்து ஒன்றி கதை எழுத அமர்வது என்பது சிரமம். அதுவும் சமீபகாலங்களில் முடிவதில்லை.

      மற்றொன்று இறை நம்பிக்கை உள்ளவர்கள் காரண காரியம், எது நடந்தாலும் இப்படித்தான் நடக்க வேண்டும் எல்லாமே கணக்குதான் என்று இறைவன் சித்தம் என்று சொல்லலாம் இறை நம்பிக்கை, சித்தாந்தங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் இதை எப்படிப் பார்ப்பார்கள்? என்பதுதான் அது,

      //சுகுமாரன், அவர் தம்பி மனைவி நோயுற்றிருக்கும் தனலெஷ்மி, அவருக்கு சிகிச்சை அளிக்க உதவியாக சிதம்பரம் செல்லும்
      டாக்டர் சதாசிவம் -- இந்தக் கதைப் போக்கின் தொடர்ச்சி என்னவாயிற்று என்று யாருமே கேட்கவில்லையே ஏன்?//

      நேற்று இரவு இதை கேட்டு அடுத்த பாகம் வருமோ என்று கேட்டு எழுத நினைத்து, விட்டுப் போய்விட்டது. என் யதார்த்த சூழல் அப்படி உள்ளது.

      மிக்க நன்றி ஜீவி அண்ணா விளக்கமான பதிலுக்கு

      கீதா

      நீக்கு
  15. வணக்கம் ஜீவி சகோதரரே

    கதை அருமையாக உள்ளது. முடிவும் சிறப்பாக உள்ளது.

    /மனிதர்களாப் பொறந்த நாம தினம் தினம் செயல்படற ஒவ்வொண்ணிலேயும் ஒரு காரண காரியம் இருக்கறதா எனக்குப்படறது. ஆரம்பத்திலே புரியாவிட்டாலும், போகப்போக சிலது புரியற மாதிரி இருக்கு. சிலது ஏன்னு தெரியாமலேயே போய்டறது/

    நல்ல தத்துவார்த்தமான விளக்கம்.படித்து ரசித்தேன்.

    /ஒன்றுக்கு ஒன்று, ஒரு தொடர்புடனேயே ஒவ்வொரு காரியமும் நடக்கறதாத் தோண்றது. அந்தத் தொடர்பு இல்லேனா, நாம என்ன முயற்சி செய்தாலும், அது நடக்காமப் போயிடறது.. அதான், எதுக்காக எதுன்னு தெரியாத போது, எதுக்காக வேணாலும் இருக்கட்டும்னு நம்ம மூலமா ஒருத்தருக்கு ஒரு நல்லது நடந்ததுனா, அதுக்கு இதுவானும் இன்னொருத்தருக்கு செய்ய முடிஞ்சதேன்னு மனத்திருப்திபட்டுக்க வேண்டியது தான்."/

    சந்திரமோகனின் மறுமுகம் திருப்தியளிக்கும் விதமாக உள்ளது. பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், நல்லவைகளும், கொஞ்சம் அல்லாதவைகளும் இருப்பது இயல்புதானே..!. அப்படிபட்ட நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அவருடன் இயல்பாக பழகினால் எந்த ஒரு மனிதனும், மனந்திருந்தி முழுமையாகவே நல்லவனாக விடுவான். அந்த ரீதியில் முடிவை அமைத்த தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நல்லதோர் கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நான் மூன்று நாட்களுக்கு மேலாக வெளியூர் சென்று விட்டதால் எ. பிக்கும் ஒருவர் பதிவுகளுக்கும் வர இயலவில்லை. மன்னிக்கவும். இன்றுதான் வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை சகோதரி. தாங்கள் முடிந்த பொழுது வந்து கருத்தைச் சொல்லலாம். எப்படியும் வந்து விடுவீர்கள் என்றே நினைத்திருந்தேன்.
      நன்றி.

      நீக்கு
  16. ஜெஸி ஸார் வாருங்கள். கதை தான் நிறைவுற்று விட்டதே! காத்திருப்பானேன்?

    பதிலளிநீக்கு
  17. சகோ தி.கீதா

    //ஒரு வேளை இதே சம்பவங்கள் வேறு விதத்திலும் நடக்கலாமில்லையா?//

    பார்த்தனுக்கு கண்ணன் தேரோட்டும் சாரதியாக அமைந்ததால் தான் அவனால் வெற்றிகளைக் குவிக்க முடிந்தது. இல்லையென்றால் என்று யோசிப்பதை விடுத்து தானே பார்த்தனுக்கு சாரதியாக அமைய அந்தக் கண்ணனே எப்படியெல்லாம் நிகழ்வுகளைக் கூடி வரச்செய்தான் என்று யோசித்தால் தர்மத்தின் பால் தன் அருள் கடாட்ஷத்தைக் குவித்த இறைச்சக்தியின் மேன்மையை உள்ளதை உள்ளபடியே உணரலாம்.

    நம் உணர்வில் பதிந்து நம்மை ஆட்கொள்பவனே இறைவன்.

    பதிலளிநீக்கு
  18. @ தி. கீதா

    //இறை நம்பிக்கை சித்தாந்தங்களில்
    நம்பிக்கை இல்லாதவர்கள் இந்தக் கதையை எப்படிப் பார்ப்பார்கள்? //

    என் அனுபவத்தில் வெளிப்பட நமக்குத் தெரிந்த எபி வாசகர்களில் பலர் இறை நம்பிக்கை கொண்டவர்களாகவே தெரிகிறது. இருப்பினும் வாசித்ததோடு மட்டுமில்லாமல் பின்னூட்டமிட்டு தன் கருத்தைச் சொன்ன பெருமைமிகு நண்பர்கள் ஏழே ஏழு பேர்கள் தாம். அதில் நீங்களும் ஒருவர்.

    இறைவன் இருக்கின்றான் என்று இந்தக் கதைக்குத் தலைப்பிட்டிருந்தாலும் தலைப்பிற்கும் என்னதான் இந்தக் கதை சொல்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்திற்கும் சம்பந்தமில்லை என்று தெரிகிறது.

    எனக்குத் தெரிந்த நாத்திகர்களில் பலர் விவரமானவர்கள். எதையும் வாசித்து சித்தாந்த ரீதியாக அவற்றை அணுகும் ஆற்றல் கொண்டவர்கள். தன்னை ஆட்கொள்ளும் எந்தக் கருத்தையும மனம் ஒப்பி ஏற்றுக் கொள்ளும் மனவிசாலம் கொண்டவர்கள். அப்படிப் பட்டவர்கள் கதையின் தலைப்பைப் பார்த்தவுடனேயே ஒதுங்கியிருக்க மாட்டார்கள். உங்களை மாதிரி
    கதைகள் எழுதும் ஆர்வம் கொண்டவர்களாயின் மனதில் தோன்றும் கதைகளை எப்படி எழுத்தில் கொண்டு வருவது என்பது பற்றி ஏதாவது தெரிந்து கொண்டிருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  19. எபியில் சிறுகதை எழுதியவர்களில் எந்தக் காலத்திலோ
    எழுதிய இராமமூர்த்தி
    (பெயர் சரியாகத்தான் இருக்கும். ஸ்ரீராம் தான் நிச்சயப்படுத்த வேண்டும்)
    என்பவர் இப்பொழுதும் அடிக்கடி என் நினைவுக்கு வருவார். காரணம் அவரின் வித்தியாசமான எழுத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியைச் சொல்கிறீர்களோ...  

      நீக்கு
  20. இல்லை ஸ்ரீராம். புதுக்கோட்டையா? ஒரு ஊர் பெயருடன் அவர் பெயர் வரும். நானும் எபியில் தேடினேன்
    கிடைக்கவில்லை. இன்னும் நன்றாகத் தேடிப்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. கண்டுபிடித்து விட்டேன். புதுக்கோட்டை வைத்தியநாதன் அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பேஸ்புக்கில் எழுதி இருந்ததைப் படித்து விட்டு அவர் அனுமதி பெற்று எபியில் வெளியிட்டேன். இப்போதும் முகநூலில் ஆக்டிவாகத்தான் இருக்கிறார். கிரிக்கெட் பற்றி நிறைய எழுதுகிறார்.

      நீக்கு
  22. அவரது கத்திரிக்காயும் கச்சேரியும் கதை அந்த நாளைய எபிக்கு வித்தியாசமானது. தேடி படித்துப் பாருங்கள், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!