நேற்று காலை காஃபி போட ஃபிரிஜ்ஜிலிருந்து பால் எடுக்கும்போது கீழே ஒரு கவர் இருப்பது தெரிந்தது. இடுக்கு வழியாக விழுந்திருக்கிறது. எடுத்தால் கொஞ்சம் பழைய பால். தேதி நான்கு நாட்களுக்கு முந்தைய தேதி.
அது எங்கே பிழைக்கப் போகிறது என்று எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தேன். இப்போது சாப்பிட தனியாக வழக்கமாக வைப்பது போல இரண்டு கவர் தண்ணீர் ஊற்றாமல் தனியாக பால் குக்கரில் வைத்துக் காய்ச்சினேன்..பால் பொங்கும் முன் எண்ணங்கள் பொங்கின.
நான் மூன்றாவது அல்லது நான்காவது படிக்கும்போது முதல் ஆறேழு வகுப்பு வரை யாரோ பால் கொண்டு வந்து ஊற்றிவிட்டுச் செல்வார்கள். அகலம் குறைவான, நீளம் அல்லது ஆழம் அதிகமான பாத்திரத்தில் சேர் கணக்கிலோ, லிட்டர் கணக்கிலோ அளந்து ஊற்றி விட்டுச் செல்வார்கள்.
அம்மா பால்காரரிடம் அடிக்கடி அலுப்புடன் சொல்லும் ஒரு வசனம் மட்டும் நினைவில் இருக்கிறது. "நீயே எனக்கும் சேர்த்து தண்ணீர் ஊற்றி விட்டால் நான் எப்படி ஊற்றி பெருக்குவது?"
ஆனாலும் குறைந்த அளவே பால் வாங்குவோம். அதில் 'வேண்டிய அளவு' தண்ணீர் ஊற்றி காய்ச்சுவோம். அதில்தான் அத்தனை டிக்கெட்டுக்கு காஃபி, மோர் எல்லாமே! இதில் எதிர்பாரா விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கும் காஃபி! இப்படியே பழகியதாலோ, அல்லது நிஜமாகவே அதுதான் சரியோ தண்ணீர் ஊற்றிய பாலில் காஃபி கலந்து குடிப்பதுதான் சுவை! அப்புறம் வரும் காலங்களில் திக் பாலில் கலந்து குடித்த காஃபி அவ்வளவு சுவை தந்ததில்லை!
நெடுநாட்கள் வரை கரி அடுப்பில்தான் பால் காய்ச்சுவது. அம்மா எப்போதுமே எல்லோருக்குமே தனித்'தனியாகத்தான் காஃபி கலப்பார். ஐந்து பேர் இருக்கிறோம் என்றால் ஐந்து டபரா டம்ளர் எடுத்து செட் செட்டாக வைத்து ஆளுக்குத் தகுந்த மாதிரி சர்க்கரை போட்டு கலந்து கொடுத்து விடுவார். நாங்கள் ஆற்றிக் குடிக்க வேண்டும். அவரவர்களுக்கு என்று தனித்தனி டபரா டம்ளர் செட் உண்டு.
அப்பாவின் குறைந்த சம்பளத்துக்குள் குடும்பம் நடத்தத் தெரிந்த, பழகி விட்ட அம்மா! இதைத் தவிர சிறிய சேமிப்பும் செய்து மாதக்கடைசியில் அப்பாவுக்கு கடன் கொடுப்பார்! ஆம், அப்பா கடனாக வாங்கிக்கொண்டு சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுப்பார். வினோதம்! வரவு செலவுக்கணக்கில் க தி த ஹேமா என்று எழுதி கணக்கு எழுதுவார்.
நாங்கள் ஹவுசிங் யூனிட்டுக்கு வந்ததும் எங்களுக்கு சொஸைட்டி பால் அறிமுகமானது. சைக்கிளில் பின்னால் கீழே குழாய் இணைக்கப்பட்ட பெரிய பித்தளை கேனை பலமான கயிற்றால் கட்டி, ஹேண்டில் பாரில் கோவில் மணியை விட சற்றே சிறிய மணி ஒன்றை ஒலிக்கவிட்டபடி தங்கவேலு பால் கொண்டுவருவார். அந்த சத்தம் கேட்டதுமே மக்கள் அவரவர் வாங்கும் பால் சொம்பு, பாத்திரங்களோடு குடியிருப்பின் நடுப்பகுதிக்கு வந்து குழுமுவார்கள். அங்கு மேடை போன்ற அரங்கம் இருக்கும். அதற்குமுன் தங்கவேலு சைக்கிளை சாய்த்து நின்று கொள்வார்.
பால் வாங்குவோர் வரிசையில் நிற்பார்கள். ஆண்கள் தனி, பெண்கள் தனிவரிசை. எவ்வளவு பால் என்று நாம் கொண்டுபோகும் சிறு நோட்டில் குறித்துக் கொடுத்து
சைக்கிளைச் சாய்த்து அளவுக் குடுவையில் பாலை குழாய் மூலம் சேகரம் செய்து
பால் ஊற்றுவார். 'ஜில்'லென்று இருக்கும்.
என் அம்மாவுக்கு காது கேட்காத பிரச்னை உண்டு. காது மெஷினை சரி செய்துகொண்டு வரிசையில் கஷ்டப்படும் அம்மாவைப் பார்க்கும் தங்கவேலு ஒரு ஆஃபர் கொடுத்தார். ஹவுசிங் யூனிட்டுக்குள் நுழைவதற்கு முன்பே ஜட்ஜ் வீட்டைத் தாண்டி வரும்போதே மணியடித்து அவர் வருகையைச் சொல்வார். எங்கள் வீட்டிலிருந்து குறுக்கே செல்லும் வழியில் மேட்டின் மீதேறி நாங்கள் மட்டும் பால் இங்கேயே வாங்கி விடுவோம்.
அப்புறம் குடியிருப்பின் உள்ளே, வழியிலேயே ஒரு பூத் உருவாகி அதில் கேனை வைத்துக்கொண்டு பால் கொடுத்தார்கள். அது கொஞ்ச நாள்.
அப்புறம் அரை லிட்டர் பாட்டில்களில் பால் வரத்தொடங்கியது. முதல் நாள் காலி பால் பாட்டிலை மறுநாள் கொடுத்து விடவேண்டும். காலை ஆறு மணி சுமாருக்கு, மதியங்களில் இரண்டரை மணி சுமாருக்கு பால் விநியோகம். அப்போதும் எங்கள் வீட்டில் காலை அரை லிட்டர், மாலை அரை லிட்டர்தான்! சமாளிப்போம்! காலைக்கொரு நிறத்தில் கார்ட், மாலைக்கொரு நிறத்தில் கார்ட் இருக்கும். பால் வாங்கப் போகும்போது அதைக் கொண்டுசெல்ல வேண்டும். அதில் அன்றைய தேதியில் பன்ச் செய்து கொடுப்பார் 'பூத்'தர்!
அப்புறம் பட்டன் பால் வந்தது! அரை லிட்டர் என்றால் அதற்குரிய டோக்கன் நாணயம் போல குட்டியாய் கொடுப்பார்கள். மெஷினில் பால் விழுமிடத்தில் பாத்திரத்தை வைத்து விட்டு டோக்கனை உள்ளே போட்டால் பாத்திரத்தில் அரை லிட்டர் அளந்து விழும். இந்த நேரத்தில்தான் சொசைட்டி பால் ஆவின் என்று பெயர் மாற்றம் பெற்றது என்று நினைவு.
இதற்கு அப்புறம்தான் கவர் பால் வரத்தொடங்கியது. ஆவின் தவிர மற்ற கம்பெனிகளும் கவர் பால் விநியோகம் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் நாங்கள் எல்லாம் நம்பகமாக ஆவினிலேயே தங்கி விட்டோம்.
இந்த நேரத்தில் காலை மாலை இருவேளை விநியோகம் என்பது மாறி காலையே போட்டுவிடும் வழக்கம் வந்ததது. அப்புறம் 24 மணிநேரம் திறந்திருக்கும் ஆவின் பூத்கள் வந்தன. பால்களில் டோன்ட், பாஸ்டுரைஸ்ட் என்றெல்லாம் வகைகள் வந்தன.
இப்போதெல்லாம் வீட்டில் எப்போதும் பால் புழக்கம் இருக்கிறது. முன்னர் போல அரை லிட்டர் வாங்கி குடும்பம் முழுவதும் உபயோகிக்கும் நிலை ஆண்டவன் புண்ணியத்தில் இல்லை!
அப்புறம் நாங்கள் சென்று பால் வாங்காமல் சென்னை வந்ததும் வீட்டிற்கே வந்து காலை மாலை இரு நேரமும் கவர் பால் போடத்தொடங்கினார்கள். மாதா மாதம் கார்ட் வாங்கி அவர்களிடம் கொடுத்து விடவேண்டும். அப்புறம் காசு மட்டும் கொடுத்தால் போதும். கார்ட் அவரே வாங்கி கொள்வார்! நான் முதலில் ஒரு வயதானவரிடம் வாங்கினேன். பின்னர் குமார் அறிமுகமானார். 26 வருடங்கள் எங்களுக்கு பால் விநியோகம் செய்தார்! சில வருடங்களில் இருவேளைக்கும் சேர்த்து காலையிலேயே போட்டு விடத்தொடங்கினார்!
சொசைட்டி பால் வந்தபோது பால் ரொம்பவே நன்றாக இருந்தது, சுத்தமாக இருந்தது. பாட்டில் பால் வந்தபோது கொஞ்சம் பரவாயில்லை. அதன் மூடியைத் திறந்தால் மேலாக வெண்ணெய் போல சேர்ந்து நிற்கும். நான் அதை வழித்து சுவைத்து விடுவது உண்டு. அம்மா திட்டுவார். அது இருந்தால்தான் இன்னும் இரண்டு டம்ளர் தண்ணீர் தாங்கும் என்பார்.
எங்கள் பாட்டி வீட்டில் மாடு வைத்திருந்தார். அவரே பால் கறந்து விடுவார். வீட்டில் காபிக்கொட்டை மெஷினும் இருந்தது.
நாங்கள் ஆரம்ப காலத்துக்குப் பிறகு கறந்த பால் வாங்கும் பழக்கம் இல்லாமல் போனது. எப்போதாவது சொல்லி வைத்து கறந்த பால் வாங்கி காஃபி போட்டு சுவைப்பது உண்டு. கீதா அக்கா எல்லாம் இப்போதும் கறந்த பால்தான் இல்லையா? சமயங்களில் எருமைப்பால் வாங்கி காய்ச்சி உறைகுத்தி தயிராக்கி சுவைத்திருக்கிறோம்.
அடுப்பில் வைத்த பால் ஆடைகட்டி காய்ந்த உடனேயே சிறிது நேரத்தில் காஃபி போட்ட காலம் போய் (அப்படிதான் காஃபி போடவேண்டுமாம்) இப்போதெல்லாம் பாலை பொங்க வைத்து பொங்க வைத்து காஃபி கலக்கிறோம்! கரி அடுப்பில் பால் வைத்த காலம் போய் கேஸ் ஸ்டவ்வில்தான் இப்போதெல்லாம் பால் காய்ச்சுகிறோம்.
பழைய பால் பிழைத்துக் கொண்டு பொங்கியது. அடுப்பை அணைத்தேன். விசில் வந்ததும் மில்க் குக்கரை நிறுத்தி சாமிக்கு பால் வைத்துவிட்டு காஃபி கலந்து கொண்டு வந்து டைப் அடிக்கத் தொடங்கினேன்..
============================================================================================================
படித்ததிலிருந்து...
தனக்கு ஒரு நாடகம் எழுதித் தரும்படி ஆரூர்தாஸைக் கேட்டுக் கொண்டே இருப்பாராம் மனோகர். ஆனால், அந்நாளில் ஆரூர்தாஸ் இருந்த மும்முரத்தில், மனோகரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போனதாம். இம்மாதிரி நிலையில் ஆரூர்தாஸ் ஒரு புத்தகம் எழுதினார். (ஏழு வருடம் கழித்து எழுதுவதால், அந்தப் புத்தகத்தின் பெயர் மறந்துவிட்டது.) அதற்கு இயல், இசை, நாடகம் என மூவரிடம் அணிந்துரை கேட்க விரும்பிய ஆரூர்தாஸ் (இசைக்கு இளையராஜாவிடம் அணிந்துரை கேட்டார் என்று ஞாபகம். இயலுக்கு யார் என்று மறந்துவிட்டது.) நாடகத்
துறைக்கு ஆர்.எஸ்.மனோகரிடம் அணிந்துரை கேட்டிருக்கிறார்.
அவரும் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட தேதியில் எழுதித் தருவதாகச் சொன்னாராம். ஆனால், அன்றைய தினம் தரவில்லை. ஆரூர்தாஸ் போன் செய்து கேட்க, இரண்டு நாளில் தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், இரண்டு நாள் கழித்தும் மனோகர் அணிந்துரை தரவில்லை. அவர் நாடகம் கேட்டுத் தான் எழுதித் தராமல் சாக்குப்போக்கு சொல்லித் தட்டிக் கழித்ததால், தம்மைப் பழிக்குப் பழி வாங்குகிறார்போலும் என்கிற எண்ணம் ஆரூர்தாஸுக்கு. எனவே, கொஞ்சம் கோபமாகவே ‘அணிந்துரை தரமுடியுமா, முடியாதா?’ என்பது போல் கேட்டிருக்கிறார்; ‘முடியாதென்றால் வேறு யாரிடமாவது வாங்கிக் கொள்கிறேன்’ என்கிற தொனியில். “காலையில் அணிந்துரை உங்கள் வீட்டில் இருக்கும்” என்றாராம் மனோகர்.
அதன்படியே, மறுநாள் காலையில், “அணிந்துரை ரெடி! வந்து வாங்கிப் போகலாம்” என்று மனோகரிடமிருந்து போன்கால். ஆரூர்தாஸே நேரடியாகப் போயிருக்கிறார், அணிந்துரையை வாங்கி வர. ஆனால், மனோகரின் வீடே ஒரு இறுக்கத்தில் இருந்ததைப் பார்த்திருக்கிறார். மனோகர் அணிந்துரையைக் கொடுத்து, அங்கேயே படித்துப் பார்த்து அபிப்ராயம் சொல்லும்படி ஆரூர்தாஸைக் கேட்டிருக்கிறார். அதைப் படிக்கப் படிக்க, ஆரூர்தாஸின் புத்தகத்தில் உள்ள அருமையான இடங்கள் அனைத்தையும் மறக்காமல் குறிப்பிட்டுச் சிலாகித்து எழுதி, மிக அற்புதமான ஒரு அணிந்துரையை எழுதியிருக்கிறார் மனோகர் என்பது புரிந்ததாம். ஆரூர்தாஸ் நெகிழ்ச்சியோடு மனோகரின் கையைப் பற்றி நன்றி சொல்ல, “ஆரூரா! உனக்கு என் மேல கோபம் இருக்கலாம், நான் லேட் பண்ணிட்டேன்னு. எனக்கு நாடகம் எழுதித் தராத கோபத்தை இதுல காண்பிச்சுட்டேன்னுகூட நீ நினைச்சிருக்கலாம். ஆனா, சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சுப்பா!” என்று கரகரத்த குரலில் சொல்லத் தொடங்கியிருக்கிறார் மனோகர்.
“சில நாட்களுக்கு முன்னே என் அன்புக்குரிய அக்கா இறந்துட்டாங்க. என்னைத் தாய் போல வளர்த்தவங்க அவங்க. அக்கா மறைவினால நான் மனசொடிஞ்சு கிடந்தேன். எதுலேயுமே எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லே. நீ போன் பண்ணிக் கேட்டபிறகுதான் ஞாபகம் வந்துது. அதான், இனிமேலும் தாமதிக்கக் கூடாதுன்னு நேத்து ராத்திரி உட்கார்ந்து மொத்த புஸ்தகத்தையும் படிச்சு முடிச்சுட்டு, கையோட அணிந்துரை எழுதி வெச்சுட்டேன்! லேட்டா கொடுத்ததுக்கு ரொம்ப ஸாரிப்பா!” என்றாராம் மனோகர்.
“அதை ஏன் கேக்கறீங்க ரவி, அவர் இப்படிச் சொன்னதும் நான் அப்படியே ஆடிப் போயிட்டேன். இந்த நல்ல மனுஷனையா கோவிச்சுக்கிட்டேன்னு என்னை நானே சபிச்சுக்கிட்டேன். மனோகர் மாதிரியான ஒரு மனிதாபிமான மனிதரைப் பார்க்கவே முடியாது!” என்று நெகிழ்ந்து சொன்னார் ஆரூர்தாஸ்.
அதற்குப் பிறகு, மனோகருக்காக ஆரூர்தாஸ் ஒரு நாடகம் எழுதித் தந்து, அதை மனோகர் குழுவினர் ரிகர்சல் எல்லாம் பார்த்து, கடைசியில் அதை மேடை ஏற்றுவதற்குள்ளாக மனோகர் மறைந்துவிட்டது ஒரு பெரிய சோகம்!
ரவிபிரகாஷ்
நன்றி: நாகராஜன். காம் நன்றி கந்தசாமி சார்
====================================================================================
எத்தனை குண்டுகள், யாருக்கு?
==================================================================================================
இணையத்தில் ரசித்தது...
===============================================================================================
நியூஸ் ரூம் : பானுமதி வெங்கடேஸ்வரன்
👮 பூரி ஜகன்நாதர் கோவிலில் எலித்தொல்லை அதிகமாக இருக்கிறதாம். கோவில் என்பதால் மருந்து வைத்து எலிகளை கொல்ல அனுமதி இல்லை., ஒலியெழுப்பும் மின்சார உபகரணங்கள் மூலம் எலிகளை விரட்ட முயற்சிக்கிறார்களாம். அந்தக் கோவிலின் மூலவர்கள் சிலைகள் மரத்தால் ஆனவை என்பதால் அவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற கவலைப்படுகிறதாம் கோவில் நிர்வாகம்.
👀 மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு வந்து விட்டோம். ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள் என்று என் மகனிடமும்,மருமகளிடமும் கூற நினைத்தேன். இந்த செய்தியை படித்த பிறகு மௌனமாகிவிட்டேன்.
😏 டப்பிங் பேசும் சங்கீதா என்னும் பெண்ணை தரக்குறைவாக பேசி அடித்ததாக நடிகர் ராதா ரவி மீது வழக்குப் பதிவு - நிஜ வாழ்க்கையிலும் வில்லன்?
👊 காய்ச்சல், ரத்தக்கொதிப்பு போன்றவைகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் 48% தரமற்றவையாம் - நெஞ்சு பொறுக்குதில்லையே!
🙉 அட்சய திருதியை ஒரு நாளில் மட்டும் இருபதாயிரம் கிலோ தங்கம் தமிழகத்தில் விற்பனை ஆகியுள்ளது.
===============================================================================
பொக்கிஷம் ;
பேச்சில் வல்லவர்
இப்படி ஒன்று நான் கேள்விப்பட்டதில்லையாக்கும்!
மொழிவாரியாக இனாம்!
சைக்கலாஜிக்கல் அனலைசர்
விவரமான பாசம்!
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா ..
நீக்குவாங்க.
பால் காய்ச்சும் போது மலரும் நினைவுகள் வந்தது , அதுவும் அம்மாவைபற்றிய நினைவுகள் வந்தது அருமை.
பதிலளிநீக்கு//அப்பாவின் குறைந்த சம்பளத்துக்குள் குடும்பம் நடத்தத் தெரிந்த, பழகி விட்ட அம்மா! இதைத் தவிர சிறிய சேமிப்பும் செய்து மாதக்கடைசியில் அப்பாவுக்கு கடன் கொடுப்பார்! ஆம், அப்பா கடனாக வாங்கிக்கொண்டு சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுப்பார். வினோதம்! வரவு செலவுக்கணக்கில் க தி த ஹேமா என்று எழுதி கணக்கு எழுதுவார்.//
வரவுக்குள் குடும்பம் நடத்தி அதில் மீதியை சேர்த்து வைத்து அப்பாவிற்கு கொடுத்து உதவுவதும் , அப்பா சம்பளம் வந்தது திருப்பி கொடுப்பதும் அருமை.
நிறைய குடும்பங்களில் இது நடப்பது தான்! இல்லையா கோமதி அக்கா?
நீக்கு//க தி த ஹேமா என்று எழுதி கணக்கு எழுதுவார்.//
பதிலளிநீக்குகடன் திருப்பி தரவேண்டும் என்று எழுதி வைத்து இருப்பது நல்ல விஷயம்.
முதல் பாரா மீண்டும் கடைசியில் வந்து இருக்கிறது ஸ்ரீராம்.
மாலை வந்துதான் திருத்த வேண்டும்!
நீக்குகாலையில் படித்தபோது - ஸ்ரீராம் காரணமில்லாமல் முதல் பாராவை திருப்பி சொல்லியிருக்கமாட்டார் என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டேன். இப்போ அதை அகற்றிவிட்டேன்.
நீக்குநன்றி கேஜிஜி..
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குமுதல் பாரா திரும்பவும் வருகிற மாதிரி எழுதியதை காலையில் படிக்கும் போதே ரசித்தேன். முன்பு சிறு கதைகளில் எல்லாம் எழுத்தாளர்கள் இந்த பாணியைத்தான் பின்பற்றுவார்கள். நான் கூட ஒரு கதையில் அதைப் பின்பற்றியுள்ளேன்.
பால் அடுப்பில் வைத்ததை குறிப்பிட்டு எழுத ஆரம்பித்ததை மீண்டும் பால் பொங்கித் தணிந்ததும், ஆரம்பத்தை கூறி நிறைவு செய்ததை ஒரு ரசனையாக நினைத்தேன். படிக்கும் போது நன்றாகத்தான் இருந்தது. இல்லையா?
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதை முன்னரே எழுதி ஷெட்யூல் செய்து விட்ட காரணத்தால் இதற்குப் பின் என்ன இருந்தது என்று நினைவில்லை. என்னிடம் காபியுமில்லை! (அந்த காபி அல்ல... பிரதி! எனவே தெரியாமல் வந்ததா, வேண்டுமென்றே எழுதி இருந்தேனா என்று நினைவில்லை!
நீக்குபாலின் பரிணாம வளர்ச்சி நல்லா எழுதியிருக்கீங்க.
பதிலளிநீக்குதிருநெவேலியில் குதிரை வண்டியில் பால் பாட்டில்கள் விநியோகம் செய்வது நினைவில் பதிந்திருக்கிறது.
பாலின் வளர்ச்சி என்றுதான் முதலில் தலைப்பிட்டு இருந்தேன்!
நீக்குமனோகர் சொன்னது நெகிழ்வு. பானுமதி வெங்கடேஸ்வரன் நியூஸ் , மற்றும் பொக்கிஷபகிர்வுகள் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஇங்கு ஒரு பால் ஷீட்டுக்கு 50ரூ அதிகம் கொடுத்து, கதவில் மாட்டியிருக்கும் பையில் உள்ள கூப்பனுக்கு ஏற்ப, வித வித பால், தயிர் பாக்கெட் போட்டுட்டுப் போயிடுவாங்க.
பதிலளிநீக்குசின்ன வயதில் கிராமத்தில் தயிர்க்காரிகள், பால் வந்தது நினைவுக்கு வருது
அதே.. அதே..
நீக்குநாடக்க்காவலர் பகுதி இதுவரை படித்ததில்லை.
பதிலளிநீக்குஇந்தப் புலிப் படத்தை முன்னமே பார்த்திருக்கிறேன்.
அப்படியா? இங்கேயேவா?
நீக்குசாதாரணமாக பிளாக்கில் வெளியிட்டு விட்டால் என் சேமிப்பிலிருந்து அதை நீக்கி விடுவேன். சமயங்களில் நேரமில்லாமல் அப்படி செய்யா விடில் இப்படி ஆகிவிடுகிறது.
நீக்குரத்தக்கொதிப்பு மருந்துகள்.... எனக்கும் இதில் சந்தேகம் உண்டு. இதை நினைத்தால் ர.கொ அதிகமாயிடுமேன்னு யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா....
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா.. வாங்க..
நீக்குவணக்கம் கமலா அக்கா.. வாங்க..
நீக்குவரவேற்பு பலமாக இருக்கே. நான் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பியிருந்தபடி, அவர் ஆப்பிள்லாம் கொண்டுவந்திருக்கிறாரா, நாங்கள்லாம் வெறும் வாழைப்பழம், எலுமிச்சம்பழம் மாத்திரம் கொண்டுவந்திருக்கோமா? (ஹா ஹா ஹா)
நீக்கு/வரவேற்பு பலமாக இருக்கே. நான் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பியிருந்தபடி, அவர் ஆப்பிள்லாம் கொண்டுவந்திருக்கிறாரா,/
நீக்குஹா ஹா ஹா.. இன்று எல்லாமே இரண்டு தடவைதான்.. முதல் பகுதியில் முதலில் ஆரம்பித்ததையே. .. இரண்டாவது தங்களுக்கு பொ. மை ஏற்படுத்தும் வண்ணம் வரவேற்பு. மூன்றாவது தீபாவளி இனாம் ஜோக்.
ஸ்ரீராம் சகோதரருக்கு அலுவலகம் செல்லும் அவசரம். அதிலும் கொஞ்ச நாள் விடுமுறை எடுத்து விட்டு அதிக வேலைகளைப் பார்க்கப் போகும் அவசரம். இல்லையா ஸ்ரீ ராம் சகோதரரே. :))
மொபைலில் ஒரு முறை 'வெளியீடு' என்பதை அழுத்தியும் அது கம்மென்றிருக்க, இன்னொரு முறையும் அழுத்தினேன் (தொட்டேன்). பார்த்தால் அது இரண்டு முறை பிரசுரமாகி விட்டது. தீபாவளி இனாம் ஜோக் ஏற்கெனவே வந்திருக்கிறதா? அட சட்!
நீக்குகாலை எழுந்தவுடன் காஃபி!
பதிலளிநீக்குஸ்ரீராம் காஃபி தண்ணீர் கலவை - டிட்டோ!!! ஊரில் டிக்கெட்டுகள் கூடுதல். எனவே நீங்கள் சொல்லியது அப்படியே. இப்பவும் நான் இதே கணக்குதான். தண்ணீர் ஊற்றித்தான். அது நல்லதுன்னும் சொல்லப்படுகிறதே! எங்க வீட்டு காஃபி கள்ளிச்சொட்டா எல்லாம் இருக்காது! ஆனால் சுவை உண்டு.
ஆனா வீட்டுக்கு யாராச்சும் வராங்கனா கண்டிப்பா தண்ணி கலக்காத பாலில் காஃபி! இப்ப..
ஊரில் இருந்த வரை எல்லாருக்கும் ஒரே போலத்தான். கட்டுப்பிடிஆகண்டாமா?!
கீதா
அதைச் சொல்லுங்க.. (ஒரு மாறுதலுக்கு) இந்தக் காலம் போல அந்தக் காலம் இல்லை!
நீக்குநீங்க போட்ட காஃபிய குடிச்சுட்டுருக்கேன்.....வரேன் முடிச்சுட்டு!!!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
ஓகே.. ஓகே..
நீக்குஒரு ஜோக் இரு தடவை?
பதிலளிநீக்குவர வர வியாழன் பதிவுகளில் அக்கறை குறைகிறது. தரம் மேம்படுத்தப்பட வேண்டும்.
Jayakumar
ஓ மை காட்.. பார்க்கிறேன். அதுதான் போன வாரம் உங்களைக் காணோமா?!
நீக்குஎந்த ஜோக் 2 தடவை? எனக்குப் புரியவில்லை.
நீக்குமுதல் ஜோக்.... தீபாவளிக்கு 2 ரூபாய் இனாம்
நீக்குஇனி நிகழா வண்ணம் பார்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!
நீக்குசில நேரங்களில் இப்படீல்லாம் செய்யணும். இல்லைனா எல்லாம் படிச்சாங்களா என்று தெரிந்துகொள்வது கடினம். அதனால் ரொம்ப கஷ்டப்படாதீங்க, இந்த மாதிரி வெகு அபூர்வமா நடப்பதைத் தவிர்க்க
நீக்குGood Idea!
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவனை
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க துரை செல்வராஜ் அண்ணா வணக்கம் பிரார்த்திப்போம்
நீக்குஇன்றைய பதிவு - அன்றைய வாழ்வின் நிதர்சனங்களைப் - பகிர்ந்து கொளவதாகவே தோன்றுகின்றது..
பதிலளிநீக்குசிறப்பு..
வாழ்க நலம்..
கிட்டத்தட்ட அப்படித்தான் . கொஞ்சம் பொற்காலமும் கூட!
நீக்குபுதன் கேள்வி : நாம் அவுத்துவிட்ட கழுதைகளா பொறுப்பில்லாமல் இருந்தோம், இப்போ பொறுப்பும் கவலைகளும் அழுத்துகின்றன என்பதைத் தவிர, அந்தக்காலம் பொற்காலம், இப்போ அப்படி இல்லை என்று சொல்வதற்கு ஏதேனும் முகாந்திரங்கள் உண்டா?
நீக்குஇந்த அளவு ஊழல் இல்லை. இந்த அளவு கவனக்கலைப்பு இல்லை. இந்த அளவு ஏமாற்று இல்லை. இந்த அளவு பணவீக்கம் இல்லை. இன்னும் சொல்லலாமே...
நீக்குசாதாரண நகைச்சுவையில் கூட ஐந்து டிக்கிட்டுகள்!..
பதிலளிநீக்குதரை டிககிட்டுக்கு பால் போக மற்ற அரை/ முழு டிக்கிட்டுகளுக்கு
ஒரு வாய்க்காவது
நல்ல காப்பி தண்ணி கொடுக்கணுமே..
பாவம் .. என்ன செய்வாங்க அந்த விட்டு அம்மா?..
இன்னிக்கி சீரான சிறு குடும்பத்துல கூட நல்ல காஃபி கிடைப்பதில்லை..
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
நீக்குநல்ல பால் தான் ஒழிஞ்சு போச்சே!..
நீக்குஇன்னிக்கு கிடைக்கிற பால் பாக்கெட்டு நல்லதுன்னு உங்களால சொல்ல முடியுமா?...
ஏதோ பால் மாதிரியான திரவம்!...
ஆயுர்வேத மருத்துவர் சொல்றார் - பாக்கெட்டு பாலு குடிக்காதீங்கன்னு!..
கிடைக்கிறது தானே குடிக்க முடியும்?!
நீக்குஎங்க ஊர்ல மாடுகள் (சீமைப் பசுக்கள். மடியைப் பார்த்தாலே தெரியுது), ரோடில் மேய்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தால், நேரடியாக்க் கறந்த பாலுமே தரமாயிருக்காது, அதுக்கு பாக்கெட் பால் எவ்வளவோ தேவலாம். பலர் சென்னையில் ஊசி போட்டுக் கறக்கறாங்க. அந்தப் பாவமும் நம்மைத்தானே சேரும்?
நீக்குகூடிய விரைவில் காபி மாடு, டீ மாடு என்று வரப்போகிறது. நேரடியாக மாட்டிடமிருந்து காபியாகவோ, டீயாகவோ கறந்து விடலாம்!
நீக்குபில்டர் காஃபி கிடையாதா...?
பதிலளிநீக்குஉண்டே.. கட்டாயம் உண்டு..
நீக்குசேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு - உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
பதிலளிநீக்குஅவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
ஹா... ஹா... ஹா... கரெக்டா எடுத்து வுட்டீங்க..
நீக்குகரி அடுப்பு - ஆமாம் அப்புறம் விறகடுப்பு, மண்ணென்னை ஸ்டவ். கிருஷ்ணாயில் சென்னை மொழியில்! இதைப் பத்தி அடுத்த சில்லுல வைச்சிருக்கேன். ஸோ அங்கே...
பதிலளிநீக்குபாட்டி கரி அடுப்புல மெதுவா காஞ்சு ஆடை கட்டியதும் காஃபி கலப்பாங்க. எனக்கோ நெருப்பு கோழி மாதிரி சூடா வேண்டும். கேக்கவா முடியும்...
ஆமாம் என் பாட்டியும் ரொம்பச் சிக்கனம். அத்தனை பேரையும் கட்டிக் கொண்டு போகணுமே.....எனக்கும் அந்தப் பழக்கங்கள் வீட்டளவில் வந்திருக்கு. யோசித்துப் பொருள் வாங்குவது. தேவையா இல்லையான்னு பல முறை யோசித்து இவ்வளவு இல்லாமல் எப்படிச் சமாளித்தோம்? அப்ப இப்ப சமாளிக்க முடியாதான்னு யோசித்து...இப்படி.
திருமணம் ஆன பிறகும், பல கஷ்டங்கள். நம் வீட்டில் செலவு டப்பா பொதுவாகத்தான் இருக்கும். என் கையில் என்று தரும் பழக்கம் இல்லை. நிதியமைச்சகம் என் கையில் இல்லை. அதனால நான் சில ரூபாய்களை எடுத்து ஏதேனும் ஒரு பர்ஸில் வைத்துவிடுவேன். அதன் பின் வெளியில் ஏதாச்சும் சாப்பிடத் தோன்றினால் அந்தக்காசையும் பதுக்கிவிடுவேன்! மாதக் கடைசியில், அலல்து வேறு ஏதேனும் ஒரு தருணத்தில் உதவும். இப்பவும் கேட்பார் எங்காச்சும் பதுக்கி வைச்சிருக்கியான்னு!!!
ரூபா நோட்டு மாறினப்ப, வீட்டுல இருந்த இண்டு இடுக்கு எல்லாம் தேடினோம்னா பாத்துக்கங்க...!! நான் எங்காச்சும் பதுக்கி வைச்சிருப்பேன்னு...!!!
கீதா
ஆடை கட்டினாலும் பால் சூடாகவே இருக்கும் கீதா.. நானும் ஆடையை ஓரமாக ஒதுக்கி பாலெடுத்து டம்ளரிலிட்டு காபி கலந்திருக்கிறேன்.
நீக்கு"வேண்டிய அளவு" தண்ணீர் ஊற்றுவது பற்றி சொல்லி இருக்கிறேன். அது நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு! ஒருகட்டத்தில் நீரில் பால் கலந்தாற்போல... நிறம் மட்டும் வெள்ளை!
பாஸ் அப்படி பதுக்கி வைத்ததில்லை. இருவருமே பேப்பரில் ரப்பர்பேண்ட் போட்டு கட்டி வைத்து சிக்கனமாக கணக்கு பார்த்து செலவு செய்வோம். மளிகைக்கு முன்னூறு ரூபாய் (மாதம்) என்று கட்டி வைத்திருந்தால் அதில் எவ்வளவு மீதமாக்க முடிகிறது என்று பார்ப்போம்!
கடைசில இருந்த பாரா.....காணலையே....நான் நினைச்சேன் முந்தையநாள் கதை மீண்டும் தொடர்கிறதோன்னு...அதாவது பால் பாக்கெட் கீழ விழுந்திந்திச்சோ என்று..
பதிலளிநீக்குகீதா
மேலே அந்தக் குழப்பத்தைப் பற்றி நானும் குழம்(ப்)பி இருக்கிறேன்!
நீக்குமனோகர் சம்பவம் -நெகிழ்ச்சி....தாமதிக்கும் போதே யூகிக்க முடிந்தது கண்டிப்பா ஆரூர்தாஸ் நினைத்த காரணம் இருக்காதுன்னு.
பதிலளிநீக்குஎவ்வளவு நல்ல மனிதர்! மனோஹர்!
கீதா
நீக்குஎல்லோரும் நல்லவரே.... படைத்தானே பிரம்மதேவன்...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியாக தங்கள் எண்ணங்கள் நல்ல சுவாரஸ்யமாக இருந்தது. எங்கள் பழைய காலத்தை அப்படியே கொண்டு வந்து தந்தது .அம்மா வீட்டில் இருக்கும் வரை இந்த பால் வாங்கும் முறைகள் இப்படியேதான். திருமணத்திற்குப் பின் எங்கள் மாமியார்தான் இந்த விஷயங்களை நிர்வகித்து வந்தார். கூட்டாக இருந்த நாங்கள் வேலைகளின் நிர்பந்தத்தால், ஒவ்வொருவரும் ஒரு திக்கில் சென்ற பின் காஃபி, பால் வாங்குவது எங்கள் நிர்வாகத்திற்கு வந்தது. எத்தனையோ திருப்பங்கள். இன்று இங்குள்ள நந்தினியில் வாழ்க்கை ஓடுகிறது.
தங்கள் அம்மாவின் திறன் போற்றத்தக்கது. சேமிப்பு அப்போது பல அம்மாவின் கைகளில் அப்படித்தான் இருந்தது. நல்ல விபரமான அலசல்கள்.
இன்னமும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சமீபத்தில் நிர்மலா சீதாராமன் கூட நந்தினி இல்லாமல் முடியாது என்று ஏதோ சொல்லி இருந்த நினைவு!
நீக்குமுதல் பகுதிக்கான கருத்து கடைசில போட்டு போகாம...
பதிலளிநீக்குபால் பொங்கும் பருவம் அதில் பல நினைவுகளின் உதயம்
கீதா
பால் நினைவுகள்!
நீக்குகுண்டு சுடும் தகவல் எத்தனை தடவை என்பது பற்றி, யாருக்குனு உள்ளது வாசித்திருக்கிறேன்....ஆனால் அதன் வரலாறு இப்பதான் தெரிந்து கொள்கிறேன்
பதிலளிநீக்குகீதா
தினசரியில் வந்ததுதான்...
நீக்குபுலியின் படத்தை ரசித்தேன். ஆனா முதல்ல பார்த்ததும் ஹையோ என்னாச்சு இந்தச் செல்லத்துக்குன்னு தோன்றி அப்புறம் தலைப்பு ரசித்தபடம்..ஹப்பா அப்ப மேட்டர் வேறன்னு பார்த்தேன்.
பதிலளிநீக்குவெயில் தாங்காது பாவம். புலிகளும் இப்படி சகதில புரளும்.. புரண்டு அடையாளமே தெரியாமக் கூட இருக்கும்.
கீதா
ஜாக்கிரதையா இருக்கோணும்... ஏதோ நாய் சேற்றில் புரண்டு வருகிறது என்று நாம் அசால்ட்டாக பக்கத்தில் போய்விடாமல் ஜாக்கிரதையாய் இருக்கோணும்!
நீக்குகாய்ச்சல், ரத்தக்கொதிப்பு மாத்திரைகள் பல தரமற்றவை எனப்தை எபி வாட்சப்பில் ரஹ்மான் ஜி அனுப்பியிருந்தார். மத்திய அரசு தள சுட்டியும். நான் அதில் போய் இன்னும் முழுவதும் பார்க்க வில்லை.
பதிலளிநீக்குஅது சரி இப்படித் தரமற்ற மருந்துகள் வரும் வரை இவ்வளவு நாள் மருத்துவத்துறை மேலதிகார்கள் என்ன செஞ்சுட்டுருந்தாங்க?
ஒரு படம் வந்ததே. ஃபார்மா மாஃபியா பத்தி...
மனோ அக்கா பகிந்திருந்த நான் படிச்ச கதை நான்சியும் நினைவுக்கு வந்தாள்,
கீதா
//மாத்திரைகள் பல தரமற்றவை// - இதை எப்படிக் கண்டுபிடிப்பது? நான் Netmeds etc உபயோகித்து 20 சதம் டிஸ்கவுண்டில் மாத்திரைகள் ஆன்லைனில் வாங்கறேன்.
நீக்குஇன்றைய நிலையில் இதைத் தவிர்க்க முடியாது. ஒவ்வொரு மருந்து தயாரிப்பாளரும் அரசாங்கத்தின் பல்வேறு பல் சக்கரங்களுக்கு போடும் தீனியில் அவர்களால் எப்படி நல்ல முறையில் தயாரிக்க முடியும்? நம் நோய் உட்பட எல்லாமே வியாபாரம்!
நீக்குவிலைவாசி ஏற்றம் அப்பலருந்து இப்ப வரை பேசப்படும் ஒன்று. கீதாக்கா கூட பதிவு போட்டிருந்தாங்க.
பதிலளிநீக்குநேத்து கடைக்குப் போனப்ப சேனைக்கிழங்கு கூடைல தொங்கிய விலை 65 ரூபான்னு போட்டிருந்தது. அட! விலை குறைஞ்சிருக்கே என்று வாங்கலாம்னு போனா அது வேற காயோட விலை கூடை மாறிடுச்சு....சேனை கால் கிலோ 40 ரூபாயாம். யம்மாடியோவ்! நாம எந்த நாட்டுல இருக்கோம்?!! அமெரிக்காவா?!
கீதா
நீங்க எந்த நாட்டுல இருக்கீங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகணும். நான் சேனை, கிலோ 40 ரூ இருந்தாலே, ரொம்பவே யோசிச்சுத்தான் வாங்குவேன். பையன் ரொம்ப விரும்பினால், வாங்கிவிடுவேன். 50 ரூ எப்பவாச்சும் போகும் (கிலோ). அந்தப் பக்கமே போகமாட்டேன். ஆனால் அக்கா சொல்றாங்க, விலை 160 ரூபாயாம். வாய்ப்பில்லை ராணி (ராஜாக்குப் பதிலா ஹாஹா)
நீக்குஎன் மாமனார் ச்ராத்தத்தன்னைக்கு வேற வழியில்லாமல் கிலோ 100 ரூபாய்க்கு சேப்பங்கிழங்கு வாங்கினேன். அதற்கும் என்னப் பொறுத்தவரை அதிகபட்ச விலை 50 ரூ கிலோ.
சேனை கிலோ நூறு ரூபாய்னு நான் வாங்கினதை எங்கோ சொல்லி இருந்த நினைவு. பீன்ஸ் கால் கிலோ 40 ரூபாய்.
நீக்குபட்டாசு - ஹாஹா அப்பாவை நல்லா படிச்சு வைச்சிருக்குங்க!! நாம இப்படி எல்லாம் படிச்சு வைச்சிருந்தோமானு யோசிச்சேன். ம்ஹூம்...
பதிலளிநீக்குகீதா
அப்பல்லாம் இருந்த பட்டாசுப் பைத்தியம் இப்போது இல்லை - இந்தத் தலைமுறைக்கும்...
நீக்குஅம்பிப் பாப்பா சக்கில் கூட ஒரு பங்கு கேட்கும் சாமர்த்தியம்!!!!
பதிலளிநீக்குகோபுலு - செம!! ரெண்டுமே
கீதா
Yesssu...
நீக்குபால் காய்ச்சும் சமயம் வந்த நினைவுகள் நன்று. நெய்வேலியில் இருந்த வரை நாங்களும் இப்படி பால் சொசைட்டி சென்று வாங்கி வந்திருக்கிறோம். பிறகு வீட்டுக்கு வந்தது. எத்தனை மாற்றங்கள்.
பதிலளிநீக்குமற்ற பகுதிகளும் நன்று. அனைத்தையும் ரசித்தேன்.
ஆம். எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதானே அப்போது சொசைட்டி, அப்புறம் ஆவின் எல்லாம் இருந்திருக்கும்.. நன்றி வெங்கட்.
நீக்குபால் பருவத்துக் கதைகள் அருமை. நான் ஏற்கெனவே துரைத்தம்பியின் பதிவுகளில் எழுதி இருக்கேன். ஆனால் மதுரையில் இருந்தவரை அப்பா வாங்கும் பால் தான். காஃபி போடும் துறையே அவரைச் சேர்ந்தது தான். ஃபில்டர் காஃபியெல்லாம் போட்டால் கட்டுப்படி ஆகாதுனு காஃபி டிகாக்ஷன் வடிகட்டவென ரெட்டுத் துணி இரண்டு வாங்கி வைத்துக் கொண்டு மாற்றி மாற்றிப் பயன்படுத்துவாங்க. காஃபிக்கு வெந்நீர் வைக்கவென இருக்கும் பாத்திரத்தில் தேவையான நீரை அளந்து ஊற்றி இரண்டே ஸ்பூன் காஃபிப் பொடியைச் சேர்ப்பார் அப்பா. அது நன்கு கொதித்ததும் மூடி வைச்சுட்டுச் சிறிது நேரம் கழித்து வடிகட்டுவார். அதுக்குள்ளே குமுட்டியில் பால் காயும். பால் அரை லிட்டர் தான். அப்போல்லாம் லிட்டர் கணக்கு அவ்வளவா வரலை. கால்படி பால்னு நினைக்கிறேன். எத்தனை பேர் வந்தாலும் அந்தப் பால் தான். கூடவே தண்ணீர் பாலிலும் கொதிக்கும் டிகாக்ஷனிலும் ஊற்றப்படும்.
பதிலளிநீக்கு// பால் பருவத்துக் கதைகள் அருமை //
நீக்குgrrrrrrr... அது கதை அல்ல! நிஜம்!!
இந்த முறையில் டிகாக்ஷன் போடும் சிலரை நானும் பார்த்திருக்கிறேன்.
//எத்தனை பேர் வந்தாலும் அந்தப் பால் தான். கூடவே தண்ணீர் பாலிலும் கொதிக்கும் டிகாக்ஷனிலும் ஊற்றப்படும்.//
ஹையா... ஜாலி.. ஜாலி... உங்கள் வீட்டிலும் அப்படித்தானா?!
என்ன காரணம்னு தெரியாது. என் அப்பாவுக்கு ரேஷன் கார்டில் காஃபிக்கொட்டை தரமானது பீப்ரி கிடைக்கும். அதைத் தான் வாங்கி வந்து அம்மா வீட்டிலேயே வறுத்துக் கொண்டு தானப்பமுதலி அக்ரஹாரத்தில் இருக்கும் நரசூஸ் காஃபிக் கடையில் கொடுத்து அரைத்து வாங்கி வருவார். சிகரி சேர்க்க மாட்டாங்க. ஆகவே எனக்கும் இப்போதும் சிகரி காஃபி என்றால் பிடிக்காது. ப்யூர் காஃபிதான்.
பதிலளிநீக்குGeetha Sambasivam "பால் பொங்கும் பருவம் ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:
நீக்குஎன் மாமனார் வீட்டில் நேர்மாறாகக் காஃபிக்கடை! என் அப்பா முதல் முதல் அவங்களைப் பார்க்கக் கருவிலி சென்றபோது முதலில் காஃபி கொடுத்தாங்களாம். அதைக் குடித்த அப்பாவுக்கு அந்தக் காஃபியின் சுவையில் பசியே தெரியலை என்றார். அதோடு அப்போத் தான் தென்னந்தோப்புக்களில் இருந்து தேங்காய்கள் இறக்கப்பட்டு இளநீரும் , தேங்காயுமாக மொட்டை வண்டிகளில் வந்திருக்கு. அப்பாவோட கிராமத்தில் தென்னை மரங்கள்/தோப்புகள்னு இருந்தாலும் சொந்தமாய்க் கிடையாது. ஆகவே இங்கே வருவதைப் பார்த்துட்டு அவருக்குப் பிரமிப்பாக இருந்திருக்கு. திரும்பி மதுரை வந்ததும் சொன்னார். கீதா சொல்லிண்டே இருக்காப்போல் அங்கே காஃபியே ஒரு ஆகாரமாக இருக்கு. அதை விடவும் தேங்காய்கள்! ஒரு நாளைக்கு எட்டு, பத்துத் தேங்காய்கள் கூட உடைக்கலாம் உன் இஷ்டம் போல என்றார் என்னிடம். எங்களுக்குத் தேங்காய்களோ, எண்ணெயோ வந்தது இல்லை என்பது தனிக் கதை.
Geetha Sambasivam "பால் பொங்கும் பருவம் ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:
நீக்குஎருமைப்பாலிலும் காஃபி, தேநீர், தயிர், மோர், வெண்ணை எடுத்துப்பாங்க என்பதும் கல்யாணம் ஆகி வந்து தான் தெரியும். ஆனாலும் என் மாமியார் பெரும்பாலும் பசும்பாலிலேயே காஃபி கலப்பார்.. வீட்டில் குழந்தைகள் இருந்தால் அப்போ எருமைப்பால் காஃபி. எங்க பையர் பிறந்தப்போக் கொட்டிலில் பசுமாடு காளைக்கன்னு போடாமல் பெண்/கிடாரிக்கன்று போட்டது. அந்தப் பசுமாட்டின் பாலை நாங்க எப்போ ஊருக்கு வந்தாலும் எங்க பையருக்குனு தனியாக் கறந்து வைச்சுடுவார் மாமனார் கல்யாணம் ஆகி வந்ததில் இருந்து அவ்வப்போது ஒரு சில சமயங்களைத் தவிர்த்து நாங்க வாங்குவது எப்போதும் கறந்த பசும்பால் தான். அதில் தான் தயிர், மோர், வெண்ணெய் எல்லாமும். கிருஷ்ண ஜயந்திக்குத் திரட்டுப் பாலும் அதில் தான். எப்போவானும் வெளி ஊரிலிருந்து வரும்போது ஆவின் பால் பாக்கெட் கையில் இருக்கட்டும்னு வாங்கி வருவோம். இப்போ வருவது நாட்டுப் பசுக்கள்+கலப்பினப் பசுக்கள் இரண்டுமாக இருக்கும் பால் பண்ணையிலிருந்து வரும் பால். இதைத் தவிர்த்தும் இங்கே தெற்குச் சித்திரை வீதியில் கோசாலை இருக்கு. அங்கேயும் புதிதாகக் கறந்த பால் காலை/மாலை இருவேளையும் லிட்டர் 50 ரூ என்று தருகின்றனர். வெண்ணை, நெய்யும் கிடைக்கிறது. நெய் மட்டும் வருஷப்பிறப்புக்கு வாங்கி வந்தோம்.
ரேஷனில் காபிக்கொட்டையா? நான் கேள்விப்படாதது! சிக்கரி இல்லாமல் காபி? எனக்கு வேண்டாம்!
நீக்குபதில் பெரிசா இருக்குமே? பரவாயில்லையா? காபிக்கொட்டைகள் அப்போதெல்லாம் இந்தியா காஃபி ஹவுஸ் மூலம் பொதுமக்களுக்கும் விநியோகம் ஆகும். ஆனால் ரேஷன் கார்ட் வேண்டும். கார்டின் வாங்கும் பொருட்களின் அளவை வைத்துக் காஃபிக்கொட்டை கொடுப்பார்கள். அப்பாவுக்கு இரண்டு கிலோ வரை கிடைக்கும். அங்கே கொட்டை செலவு கம்மி என்பதால் ஒரு கிலோவை வைத்துக்கொண்டு இன்னொரு கிலோவை யாருக்கானும் கொடுப்பது வழக்கம். இந்தியா காஃபி ஹவுஸிலேயே போய் வாங்கிக்கணும். நாங்க முதல் முறை ராஜஸ்தான்/நசிராபாத் சென்றபோது அங்கே காஃபிப் பவுடன்/கொட்டை கிடைக்காது என்பதால் அப்பா வேறே யாருக்கும் கொடுக்காமல் 3,4 கிலோ வரை சேகரித்து வைத்து நாங்க கிளம்பும்போது கொடுத்தார். என்னிடம் காஃபிக்கொட்டை மிஷின் (சீரில் வந்தது) இருந்ததால் ஒரு வாரத்துக்கு ஒரு தரம் வறுத்துக் கொண்டு அன்றாடம் காலைக் காஃபிக்குக் காலம்பரயும், மாலைக் காஃபிக்கு மாலையும் கொட்டையை அரைத்துப் பொடியாக எடுத்துப் பேன். இது கிட்டத்தட்ட நாங்க தொண்ணூறுகளில் ஜாம்நகரை விட்டு வரும் வரை சுமார் 20 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்தது. 95 ஆம் வருஷம் எனக்குக் க்ரோனிக் ஆஸ்த்மா உறுதியானதும் மருத்துவரின் எச்சரிக்கையின் பேரில் கொட்டையைக் கடையில் கொடுத்து வறுத்து அரைத்து வர ஆரம்பித்தோம். அதிலும் சில/பல தடங்கல்கள். நாம் கொடுக்கும் கொட்டையை வைத்துக் கொண்டு அவங்களிடம் இருக்கும் வறுத்த அல்லது வறுக்காத கொட்டையில் வறுத்து அரைத்துக் கொடுப்பாங்க. ஆகவே கொட்டை வாங்கி அரைப்பதையே விட்டுட்டோம். அதன் பின்னர் பொடிதான். அம்பத்தூர் கிருஷ்ணா காஃபி பவுடன் அரைகிலோவுக்கு கால் கிலோ லியோ காபி பவுடர் சேர்த்து வைத்துக் கொண்டு போடுவேன். பின்னர் டாடா கூர்க் காஃபி கிடைக்கவே அதற்கு மாறிவிட்டோம். அவரே எங்களோட ட்ராவல் மானாகெராகவும் மாறினார் என்பது தனிக்கதை.
நீக்குமானேஜர்
நீக்குநான் குறைவில்லாமல் காபி சாப்பிட்டிருக்கிறேன். காபிக்கொட்டை வாங்குவதுதான் சிரமம் என்று நினைக்கிறேன். காபிப்பொடி சுலபமாகி கிடைத்தது என்று நினைக்கிறேன். இந்த மாதிரி சிரமம் எல்லாம் பட்டதில்லை. என் அப்பம்மா வீட்டில் காபிக்கொட்டை மெஷின் இருந்தது என்று தெரியும். அவர் அவ்வப்போது கோட்டை வாங்கி வறுத்து டிகாக்ஷன் போடுவார் என்றும் தெரியும். பாட்டி இரண்டு மூன்று மாடுகளும் வைத்திருந்தார்.
நீக்குஎன் மாமனார் வீட்டில் நேர்மாறாகக் காஃபிக்கடை! என் அப்பா முதல் முதல் அவங்களைப் பார்க்கக் கருவிலி சென்றபோது முதலில் காஃபி கொடுத்தாங்களாம். அதைக் குடித்த அப்பாவுக்கு அந்தக் காஃபியின் சுவையில் பசியே தெரியலை என்றார். அதோடு அப்போத் தான் தென்னந்தோப்புக்களில் இருந்து தேங்காய்கள் இறக்கப்பட்டு இளநீரும் , தேங்காயுமாக மொட்டை வண்டிகளில் வந்திருக்கு. அப்பாவோட கிராமத்தில் தென்னை மரங்கள்/தோப்புகள்னு இருந்தாலும் சொந்தமாய்க் கிடையாது. ஆகவே இங்கே வருவதைப் பார்த்துட்டு அவருக்குப் பிரமிப்பாக இருந்திருக்கு. திரும்பி மதுரை வந்ததும் சொன்னார். கீதா சொல்லிண்டே இருக்காப்போல் அங்கே காஃபியே ஒரு ஆகாரமாக இருக்கு. அதை விடவும் தேங்காய்கள்! ஒரு நாளைக்கு எட்டு, பத்துத் தேங்காய்கள் கூட உடைக்கலாம் உன் இஷ்டம் போல என்றார் என்னிடம். எங்களுக்குத் தேங்காய்களோ, எண்ணெயோ வந்தது இல்லை என்பது தனிக் கதை.
பதிலளிநீக்குபழைய கால கிராமத்துக் காட்சி. இப்போது அப்படி எல்லாம் பார்க்கக் கூட முடியாது.
நீக்குஎருமைப்பாலிலும் காஃபி, தேநீர், தயிர், மோர், வெண்ணை எடுத்துப்பாங்க என்பதும் கல்யாணம் ஆகி வந்து தான் தெரியும். ஆனாலும் என் மாமியார் பெரும்பாலும் பசும்பாலிலேயே காஃபி கலப்பார்.. வீட்டில் குழந்தைகள் இருந்தால் அப்போ எருமைப்பால் காஃபி. எங்க பையர் பிறந்தப்போக் கொட்டிலில் பசுமாடு காளைக்கன்னு போடாமல் பெண்/கிடாரிக்கன்று போட்டது. அந்தப் பசுமாட்டின் பாலை நாங்க எப்போ ஊருக்கு வந்தாலும் எங்க பையருக்குனு தனியாக் கறந்து வைச்சுடுவார் மாமனார் கல்யாணம் ஆகி வந்ததில் இருந்து அவ்வப்போது ஒரு சில சமயங்களைத் தவிர்த்து நாங்க வாங்குவது எப்போதும் கறந்த பசும்பால் தான். அதில் தான் தயிர், மோர், வெண்ணெய் எல்லாமும். கிருஷ்ண ஜயந்திக்குத் திரட்டுப் பாலும் அதில் தான். எப்போவானும் வெளி ஊரிலிருந்து வரும்போது ஆவின் பால் பாக்கெட் கையில் இருக்கட்டும்னு வாங்கி வருவோம். இப்போ வருவது நாட்டுப் பசுக்கள்+கலப்பினப் பசுக்கள் இரண்டுமாக இருக்கும் பால் பண்ணையிலிருந்து வரும் பால். இதைத் தவிர்த்தும் இங்கே தெற்குச் சித்திரை வீதியில் கோசாலை இருக்கு. அங்கேயும் புதிதாகக் கறந்த பால் காலை/மாலை இருவேளையும் லிட்டர் 50 ரூ என்று தருகின்றனர். வெண்ணை, நெய்யும் கிடைக்கிறது. நெய் மட்டும் வருஷப்பிறப்புக்கு வாங்கி வந்தோம்.
பதிலளிநீக்குசிலபேர் எருமைப்பாலில் காபி வெண்ணெய் எல்லாம் பிடிக்காது என்று சொல்வார்கள். சில பேர் அதில் கொழுப்பு அதிகம் என்று சொல்வார்கள். ஒரு மாட்டுப்பாலில் பால், தயிர் உபயோகிப்பபது சிலபேருக்குதான் வாய்க்கிறது.
நீக்குஇந்தக் காஃபிக்கொட்டையை அங்கே மதுரையில் நிறையச் சேர்ந்துட்டால் அப்பா எங்களுக்குப் போஸ்டல் மூலம் பார்சலில் அனுப்பிடுவார். அதோடு சில/பல சமயம் பக்ஷணங்களும் வரும். அங்கெல்லாம் சாம்பார்ப்பொடி அரைக்கும் வசதி இல்லாமையால் சாம்பார்ப்பொடி/ரசப்பொடி/தோசை மிளகாய்ப்பொடி முதலியவையும் வரும்.
நீக்குபுதிய செய்திகள்!
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கருத்துரைகளை மீண்டும் மீண்டும் எடுத்துப் போட்டாலும் காணாமல் போகின்றனவே!
பதிலளிநீக்குஎல்லாவற்றையும் திரும்பிக் கொண்டு வந்து விட்டேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅதென்னவோ.. உங்கள் முதல் பகுதிக்கும் எங்கள் வீட்டில் நடைபெறும் சம்பவத்திற்கும் எப்படியோ ஒரு பொருத்தம் வந்து விடுகிறது. இப்போது எங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் இரண்டு பால் பாக்கெட்டுகள் டோரில் பழைய தேதியுடன் அமர்ந்திருக்கின்றன. அங்கு நாலைந்து நாட்கள் ஆகியும் அந்தப்பால் பிழைத்து எழுந்தது ஆச்சரியந்தான்.அதற்கு வாழ்த்துகள்.
இங்கு அன்றே, சமயத்தில் மறுநாளே பால் அடுப்பில் வைத்ததும் அது சொல்லாமல் கொள்ளாமல் பரதம் கற்கத் தொடங்கி விடும். அப்படி எத்தனை பால் கோவாக்கள் கிளறியுள்ளேன். இல்லை என்றால் அதை உறை குத்தி எத்தனை எரிவுள்ளி சாம்பார் செய்துள்ளேன் என்பது கணக்கே கிடையாது. அதற்கும் சோம்பலென்றால், எண்ணெய் குளியல் மாதிரி தலைக்கு தேய்த்து குளித்து விடுவோம். (ஷாம்புவுக்கு பதிலாக)
சென்ற வாரம் வெளியூர் சென்று வந்த போது பால் விற்பவர் தவறுதலாக வழக்கப்படி காலையிலேயே வந்து போட்டு விட்ட நாலு பாக்கெட்டுகள் (நாங்கள் அன்று மாலையில்தான் வீட்டுக்கே வந்ததாம்) இதற்காகவெல்லாம் காத்து, காத்து அமர்ந்திருக்கின்றன. நான் உடல் அலுப்பினால் முன்னது இரண்டையும் செய்ய தவறி விட்டேன். .பின்னதை செய்யவும் சோம்பலாக உள்ளது. பார்க்கலாம். அது எத்தனை நாட்கள் காத்திருக்குமென ... நன்றி சகோதரரே.
நீங்கள் பதிவை ரசித்து எழுதியுள்ளீர்கள். நானும் மீண்டும் படித்து ரசித்தேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எங்கள் வீட்டிலும் அப்போ அப்போ இப்படி ஆகிவிடும். எனக்குன்னா, ஐயோ ரூபாய் வீணாச்சே என்று தோன்றும். அதனால் என் கையில் கிச்சன் வரும்போது, அன்று வரும் பாலை உடனே காய்ச்சி உறைகுத்திவிடுவேன். அன்றைக்கு பாலை உபயோகப்படுத்தப்போகிறோம் என்றால்தான் (அவல்ல போட்டுச் சாப்பிட, இல்லைனா ஃப்ளேவர் மில்க். மற்றபடி நாங்க பால் குடிப்பதில்லை. காபி/டீ கிடையவே கிடையாது) ஃப்ரிட்ஜில் வைப்பேன். நிச்சயம் மறுநாள் காலையில் காய்ச்சிவிடுவேன்.
நீக்குஅது சரி...திரிந்துபோகும் பாலை இப்போ நான், வடிகட்டி பனீர் போன்று உடனே சாப்பிட்டுவிடுவேன். நீங்க என்ன என்ன எப்படிச் செய்கிறீர்கள் என்று ஒரு பதிவு போடுங்களேன். (குறைந்தபட்சம் ஐயோ திரிந்துவிட்டதே என்று பணம் போன சோகம் எனக்கு வராமலிருக்கும்)
அடடே... கமலா அக்கா... என்ன பொருத்தம்.. நிஜமாகவே ஆச்சர்யமாக இருக்கிறது. பால் உடைந்தால் நாங்கள் அதை அபப்டியே கொட்டி விடுகிறோம். வேறு எதுவும் செய்யும் பொறுமையும், பழக்கமும் இல்லை!
நீக்குசமயங்களில் லேட்டாக உறைகுத்தினால் தயிர் / மோர் ஒரு மாதிரி இருக்கும் தெரியுமா? அதைப் போட்டுக்கொள்ளவே தோன்றாது.
நீக்குவணக்கம் ஸ்ரீராம் சகோதரரே
நீக்குஆமாம். இந்த பொருத்தந்தான் எனக்கும் வியப்பளிக்கிறது. நிறைய வியாழன்கள் இப்படிப்பட்ட சம்பவங்கள் பொருத்தமாக நடந்துள்ளது.
இங்கு வந்த புதிதில் நீங்கள் கூறியபடிதான் செய்தும். பிறகு பாலின் நிலை பொறுத்து சிலசமயம் ஏதாவது அதை வைத்து செய்யலாம் என்று தோன்றும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரரே
நீக்குநீங்களும் இதே பால்தான் வாங்குகிறீர்களா ? ஒவ்வொரு சமயமும் பால் இந்த மாதிரி தொடர்ந்து அடிக்கடி ஆகும் போது நிறைய வீணாகப் போகிறதே என்றுதான் எனக்கும் தோன்றும். பிறகு, உறவுகள், தெரிந்தவர்கள் கூறித்தான் இந்த முயற்சிகளில் ஈடுபட்டேன்.
சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல் கொஞ்சம் பால் உறை குத்த தாமதமானாலும், தயிரின் சுவை மாறுபட்டு விடும். அதையும் அப்போது மோர்குழம்பு செய்தால் காலியாகி விடும். அப்படித்தான் பணம் வீணாக வேண்டாமே என இந்த திப்பிசங்கள் செய்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பால் திரிந்து விட்டால் கொட்ட வேண்டாம். கொஞ்சம் சமையல் சோடா சேர்த்துக் கொண்டு வெல்லமோ/சர்க்கரையோ சேர்த்துத் திரட்டுப் பால் இல்லைனா பாசுந்தி மாதிரிப் பண்ணலாம். திரிந்த பால் கெட்டியாக இருந்தால் வெள்ளைத்துணியில் வடிகட்டிக் கொண்டு நல்ல ஷேப்பில் கொண்டு வந்து பனீராகப் பயன்படுத்திக்கலாம். உடனே செலவு செய்து விடுதல் நலம்.
நீக்குஆரம்ப காலங்களில் பொறுமை இருந்தது. இப்போல்லாம் எடுத்து சொர்ர்ர்.....!
நீக்குஆர்.எஸ்.மனோஹரின் அந்த அக்கா ஹோசூரில் தான் இருந்திருக்கணும். அவங்க கணவர் ஸ்டேட் வங்கி (மைசூரில்) State Bank of Mysore மானேஜர். அண்ணாவுக்கு முதல் போஸ்டிங் ஹோசூர் தான். ஆகவே நாங்க அடிக்கடி அங்கே போய்த் தங்குவோம். அப்போ இருந்த ஹோசூரே வேறே!. மனோஹரின் அக்கா பார்க்கவும் நன்றாக இருப்பாங்க. குழந்தைகள் இல்லைனு நினைவு. ஆனால் அடிக்கடி தம்பியைப் பத்திச் சொல்லுவாங்க.
பதிலளிநீக்குபால் போல் பொங்கிய நினைவுகள் சுவாரஸ்யம். நான் கல்லூரி முடிக்கும் காலம் வரையில் வீட்டில் பசு மாடுகள் இருந்தன.
பதிலளிநீக்குதொகுப்பு நன்று. நகைச்சுவைத் துணுக்குகளுக்கு நீங்கள் தந்திருக்கும் தலைப்புகள் சிறப்பு.
ஜோக்ஸ் ரசனை. காப்பி கலக்கும் புராணம் நன்று.
பதிலளிநீக்கு