செவ்வாய், 12 செப்டம்பர், 2023

நெடுங்கதை  :  ரயிலோடும் வீதி 2/5  -  மூலத்திருநாள் பரசுராம்.


ரயிலோடும் வீதி - 2

- மூலத்திருநாள் பரசுராம் -

(இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டு முன்பு நடந்த கதை இது என்பதை நினைவுபடுத்துகிறேன்.)

முன்கதை  : 1


கிருஷ்ணவேணியின் கணவன் சந்திரன் இராணிப்பேட்டை பாரி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான்.

அது ஆங்கிலேயருக்குச் சொந்தமான கம்பெனி. கந்தக அமிலம், சர்க்கரை, பீங்கான் ஜாடிகள் ஆகியவை அங்கு உற்பத்தி செய்யப்பட்டன. பீங்கான் ஜாடிகள் பிரிவில் சந்திரன் வேலை செய்து வந்தான்.

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் பாரி கம்பெனி கொடிகட்டி பறந்தது. ஆனால் போர் முடிந்த பிறகு உயர் பதவியில் இருந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு விரைவில் சுதந்திரம் கிடைத்துவிடும் என்பதால் தங்கள் நாட்டிற்குத் திரும்பிப்போகத் தொடங்கியிருந்தார்கள். இதன் காரணமாக அதிக லாபம் தரக்கூடிய பல தயாரிப்புகளை கம்பெனி நிறுத்த வேண்டியதாயிற்று. ஒரே ஆண்டில் மேனேஜிங் டைரக்டர் தவிர மற்ற பதவிகளில் இந்தியர்களே அதிகாரிகளாக அமர்ந்துவிட்டனர். எனவே இந்தியச் சந்தைக்கான பொருட்களை மட்டுமே தயாரிப்பதில் கம்பெனி கவனம் செலுத்தியது.

எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருந்தான் சந்திரன்.  ஆனால் கைகளும் கண்களும் எப்பொழுதும் துருதுருவென்று இருக்கும். நில புலன்கள் உள்ள வசதியான குடும்பத்தில் அவன் ஒரே பிள்ளை. அந்த நாளிலேயே, ஊரெல்லாம் அதிசயப்படுமாறு, நூறு ரூபாய் விலையுள்ள ஹெர்குலிஸ் சைக்கிளை வாங்கிக் கொடுத்தார் அவனது தந்தை.  லண்டனில் தயாரித்தது. அதில் கவரப்பட்டு தான் அவனை மணந்து கொண்டாள் கிருஷ்ணவேணி.  அவனுடைய தகுதிக்கு அதிகமாகவே சீர்வரிசைகளைத் தன் தந்தை செய்தார் என்று அவள் பெருமிதமாக பேசிக்கொள்வது வழக்கம்.

சந்திரனின் பெற்றோர்கள் தங்கள் வயல்வெளி இருந்த இடத்தில் வசதியான குடிசையில் வாழ்ந்து வந்தனர். ஆனால் கிருஷ்ணவேணியோ சந்திரனின் வேலைக்கு வசதியாக இராணிப்பேட்டை நகரத்தில் குடியிருக்க வேண்டும் என்று, கம்பெனியிலிருந்து அதிக தூரம் இல்லாத குடியிருப்புகள் நிறைந்த பிஞ்சி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.

பெரும்பாலும் பாரி கம்பெனி ஊழியர்கள் அதிகம் பேர் வசித்த இடம் அது. ஒரு வசதியான வீடு குறைந்த வாடகைக்கு அவளுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமே. 

அவளுக்கு நல்ல பேச்சுத்துணையாக அவள் வயதை ஒத்த யமுனாவும் கவிதாவும் அக்கம் பக்கத்திலேயே வாழ்ந்தது இன்னொரு அதிர்ஷ்டம்.

திருமணமான இரண்டாவது வருடமே அவளுக்கு பாபு பிறந்தான். அந்த வருடம் விளைச்சலும் அமோகம். அத்துடன் இந்தியாவுக்கு சுதந்திரமும் கிடைத்துவிட்டபடியால், கம்பெனியில் விசேஷமாக போனசும் கிடைத்தது.

சந்திரன் கிருஷ்ணவேணி இருவரும் சிக்கனமாக வாழ்க்கை நடத்தியபடியால், பாபுவின் பெயரில் அவள் ஆரம்பித்த வங்கிக்கணக்கில் கணிசமான தொகை சேர்ந்து 
கொண்டிருந்தது.

காலை நேரத்தில் கம்பெனியில் இருந்து மூன்று சங்குகள் ஒலிக்கும். காலை 5-50க்கு முதல் சங்கு. அதைக்கேட்டு தான் ஊரே கண்விழிக்கும். ஊழியர்களும் கூட. அடுத்த சங்கு 6.30க்கு. அப்போது ஊழியர்கள் வீட்டை விட்டுக் கிளம்பியாக வேண்டும். ஏழு மணிக்கு மூன்றாவது சங்கு ஒலிக்கும்போது கம்பெனியின் இயந்திரங்கள் இயங்கத் தொடங்கும்.

சந்திரன் தன் வேலையில் எப்பொழுதும் அக்கறையுடன் இருப்பான். கம்பெனிக்கு ஒரு நாள் கூட தாமதமாகச் சென்றதில்லை. அன்றும் அப்படித்தான். சைக்கிளை எடுத்து நன்கு துடைத்து, தன் பகல் உணவு டிபன் பாக்ஸை கேரியரில் வைத்துக்கொண்டு, அவன் கிளம்பியபோது, கொஞ்சம் இருங்கள் என்பதுபோல் வேகமாக உள்ளிருந்து வந்தாள் கிருஷ்ணவேணி, முரளியின் கடிதத்துடன்.

முதல் நாள் இரவு குழந்தை தூங்குவதற்கு வெகு நேரம் ஆகிவிட்டதால் தங்கள் ஊருக்கு ரயில் வரப் போகும் தகவலை கணவனிடம் தெரிவிக்க இயலாமல் போனது.  காலை நேரத்தில் சமையல் போன்ற வழக்கமான வேலைகளில் ஆழ்ந்துவிட்டாள். குழந்தை இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.

கடிதத்தைக் கையில் வாங்கி, சட்டைப் பையில் வைத்துக் கொண்ட சந்திரன், "இரண்டாவது சங்கு ஊதி விட்டது!  கம்பெனியில் போய்ப் படித்துக் கொள்கிறேன்" என்று கிளம்பினான்.

***

ங்கிலேயர்களின் இராணுவத்தில் இராணிப்பேட்டைக்குத் தனி மரியாதை இருந்தது. காரணம், எந்த வற்புறுத்தலும் இன்றியே, சிப்பாய்களாகச் சேருவதற்கு ஏராளமான வாலிபர்கள் தயாராக முன்வந்ததுதான். முரளியின் அப்பாவும் அப்படிச் சேர்ந்தவர்தான். ஹவில்தாராக இருந்தபோது பர்மா யுத்தத்தில் அவர் காயம்பட்டு இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டபோது, அவருடைய நன்னடத்தையைக் கணக்கில் கொண்டு அவரது மகன் முரளிக்கு டில்லியில் அரசாங்க உத்தியோகம் வழங்கப்பட்டது.  இராணுவ கேம்பஸில் பேச்சிலர் விடுதியில் தங்கவும் அனுமதி கிடைத்தது.

இராணுவ அலுவலகத்தில் இருந்த ஊழியர்களுக்கு மாதம் நான்கு கடித உறைகளும் மகாராணியின் தலைபொதிந்த தபால் ஸ்டாம்ப்களும் இலவசமாகக் கொடுப்பதுண்டு. அதில் இரண்டை மட்டும் பயன்படுத்துவான் முரளி. ஒரு கடிதம், தந்தைக்கு. இன்னொன்று யமுனாவுக்கு.

என்னதான் அத்தை மகள் என்றாலும், யமுனாவுக்கு வயதுவந்தபிறகு அவளுடன் சரளமாகப் பேச முரளிக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்துடன் பட்டப்படிப்புக்குச் சென்னை வந்துவிட்டதாலும், பிறகு வேலைகிடைத்து டில்லி வந்துவிட்டதாலும், யமுனாவின் முழு வடிவமே அவன் மனதில் பிடிபடாமல் இருந்தது.  எனவே இந்த ‘மாதமொரு கடிதம்’ தான் அவளுடன் பேசுவதற்கான ஒரே சாதனமாக அமைந்தது.

அன்று யமுனாவுக்குக் கடிதம் எழுத உட்கார்ந்தபோதுதான் அவனுடைய மேலதிகாரி அவனை வேலூர் டிவிஷனுக்கு மாற்றப்போவதைத் தெரிவித்தார். அவனுக்கு மனசெல்லாம் இனித்தது. அத்துடன் இராணிப்பேட்டையில் ரயில்விடும் திட்டத்தை அவனே மேற்பார்வையிடவேண்டும் என்றும் சொன்னபோது மகிழ்ச்சியால் திக்குமுக்காடிப்போய்விட்டான்.  பதவி உயர்வுக்கும் அது வழிவகுக்கலாம். கடிதத்தின் முதல்பக்கத்தில் இந்த விவரங்களை யமுனாவுக்கு எழுதிக்கொண்டே வருகையில் யமுனாவின் சுருள்கற்றைக் கூந்தலும் மைகசியும் விழிகளுமே அவன் மனக்கண்ணை ஆக்கிரமித்திருந்ததால், பக்கம் நிரம்பிவிட்டதையோ பேனாவில் மசி தீர்ந்துவிட்டதையோ, மற்றும் தபால் டெஸ்பேட்ச் செய்யும் பணியாளர் வீட்டுக்குக் கிளம்பும் நேரமாகிவிட்டதையோ அவன் கவனிக்காமல் போனான்.

எனவே அவசரத்துக்குப் பரவாயில்லை என்று அருகில் இருந்த பென்சிலால் ‘ஐ லவ் யூ’ என்று கடிதத்தின் பின்புறம் சிறிய எழுத்துக்களில் எழுதினான். கடிதத்தை டெஸ்பேட்ச்காரர் கொண்டுபோன பிறகுதான் அவனுக்கு சந்தேகம் எழுந்தது: ஒருவேளை யமுனா பின்பக்கம் திருப்பாமல், முன்பக்கத்தை மட்டும் படித்துவிட்டு, தனக்கென்று காதல் வார்த்தை எதுவும் எழுதாமல் போனதாகக் கோபிக்கக் கூடுமா என்று. எதற்கும் அவளிடமிருந்து பதில் வருவதைப் பொறுத்து விளக்கம் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டான்.

***

ரண்டு மணிக்குப் பகல் உணவுக்கான சங்கு ஒலித்தது.  சந்திரனும், பீங்கான் ஜாடிப் பிரிவில் இருந்த மற்றவர்களும் கேண்டீன் சென்று அமர்ந்தனர். அங்கு கம்பெனி வழங்கும் சலுகைக் கட்டணத்தில் அளவுச்சாப்பாடு காத்திருந்தது.  ஆனால் பெரும்பாலானவர்கள் தத்தம் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையே சாப்பிடுவர். சாம்பார், பொரியல், ஊறுகாய், மோர் போன்றவற்றை மட்டும் கேட்டுப் பெறுவர்.  அதெல்லாம் இலவசமே.

சந்திரன் சட்டைப் பையிலிருந்து கடிதத்தை எடுத்தான். கடிதம் மாதிரி இல்லாமல் வெறும் அறிக்கை மாதிரி இருந்தது. இராணிப்பேட்டைக்கு ரயில் விடும் திட்டம் கையில் எடுக்கப்பட உள்ளதாகவும் அதற்காக முரளி விரைவில் ஊருக்கு வரப்போவதாகவும் புரிந்துகொண்டான் 
சந்திரன். அதனால் தனக்கென்ன இலாபம் என்று தன்னையே கேட்டுக்கொண்டான்.

அவன் கடிதத்தின் முன்பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்தபோதே அதன் பின்பக்கத்தில் இருந்த பென்சில் வாசகம் எதிரில் இருந்த சஞ்சீவியைக் கவர்ந்தது.  கவனமாகப் படித்தான்: “ஐ லவ் யூ”. அவனுக்குச் சுருக்கென்றது. யார், யாருக்கு “ஐ லவ் யூ” சொல்கிறார்கள்?

சஞ்சீவிக்குப் புரியவில்லை. மௌனமாகச் சந்திரனின் செய்கையைப் பார்த்துக்கொண்டிருந்தான். கடிதத்தைப் படித்த சந்திரன், அதன் பின்பக்கம் பார்க்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாதவனாக, அதை மடித்து அருகில் வைத்தான். பிறகு பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, டிபன் பாக்சைத் திறந்து சாப்பிடத் தொடங்கினான்.

“என்ன தலைவா! முக்கியமான கடிதமோ?” என்று மெல்ல அருகில்வந்து தூண்டில் போட்டான் சஞ்சீவி. அவனுக்குக் காஞ்சீபுரம் சொந்த ஊர். சந்திரனைவிட இரண்டுவருடம் சீனியர்.

“அட போ தலைவா! நம்ம ஊருக்கு ரயில் விடப்போகிறார்களாம்! நம்ம ஊர்க்காரன் ஒருத்தன் போட்ட லெட்டர் இது” என்றான் சந்திரன், கைகழுவ எழுந்தவனாக.

“நீயே வேணுமானாலும் படியேன்!”

அதே சமயம் சஞ்சீவியை மேலதிகாரி அவசரமாக அழைக்கவே, அவன் கடிதத்தை பேண்ட் பாக்கெட்டில் வைத்தபடி விரைந்தான். முன்பக்கம் பேனாவிலும், பின்பக்கம் அந்த மூன்று வார்த்தைகள் மாத்திரம் பென்சிலிலும் எழுதப்பட்டு இருப்பதில் விசேஷமான அர்த்தம் இருப்பதாக அவனுக்குள் ஏதோ அரித்தது.


(தொடரும்)

13 கருத்துகள்:

 1. '50-களின் நடையாக இருந்தாலும்' என்று சென்ற பகுதி பின்னூட்டத்தில் ஒரு 'ஆலும்' போட்டு நீங்கள் சொன்னாலும் கதையை எழுத்தில் சல்லிச் செல்கிற விதம் பிரமாதம்.
  ஜெமோ போன்றவர்கள் கட்டுரைகளைக் கதைகளாக பாவிக்கும்
  இன்றைய நிலையில் இந்த மாதிரி கதை சொல்லல் பாலைவனச் சோலையாக வாசிப்பதற்கு மனத்திற்கு இதமாக இருக்கிறது.
  இந்த இரண்டு அத்தியாய முடிவுகளிலும் கையில் கிடைத்த கடிதம் 'அந்தந்த' நேரங்களில் வாசிக்கப் படாமலேயே தொடர்வது
  இன்னொரு சுவாரஸ்யம்.
  இந்த மாதிரி கதை எழுதும் திறமைகள் தமிழ் எழுத்துலகிற்கு மீள் வரவாக இருக்கப் பிரார்த்திப்போமாக.
  கதாசிரியர் மிகவும் பிடித்துப் போனார். நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த அவருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சல்லிச் செல்கிறவிதம் -- சொல்லிச் செல்கிற விதம்.
   (தட்டச்சுப் பிழை)
   திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

   நீக்கு
 2. கதையின் நடையில் சுவாரஸ்யம் கூடிய விட்டது.

  பதிலளிநீக்கு
 3. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  பார்க்க பார்க்க
  பாவம் பொடிபட..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு

 5. //கிருஷ்ணவேணியும் கிளம்பினாள், முரளி யமுனாவுக்கு எழுதிய கடிதத்தைக் கையில் பிடித்தபடியே.//

  போன பதிவில் யமுனாவுக்கு வந்த கடிதம், கிருஷ்ணவேணி கையில் இப்போது சந்திரன் கையில் .
  கடிதத்தின் பின்பக்கம் உள்ள செய்தியால் குழப்பம் வருமா?
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. அருமையாக சொல்லிச் செல்கிறார்.

  .....தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
 7. முதல் பகுதியிலேயே யூகித்ததுதான், இந்தக் கடிதம் தான் கதையை நகர்த்தப் போகிறது என்று தோன்றுகிறது. கடிதத்தினால் விளையப் போகும் கலகங்கள்! அப்ப கடிதம் நாரதர் கலகமா....நன்மையில் முடியும் என்பது போல எப்படியும் எழுத்தாளர் கண்டிப்பாகச் சுபம் போட்டுவிடுவார் முடிவில்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. கதைப்போக்குப் புதுமையாக உள்ளது. சஞ்சீவி மூலம் எதேனும் பிரச்னைவருமோ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!