சனி, 2 செப்டம்பர், 2023

தள்ளாத வயதிலும் தலைவி... மற்றும் நான் பிடிச்ச கதை

 ================================================================================================


==============================================================================================================================================================================================


=====================================================================================================

=====================================================================================================நான் பிடிச்ச கதை  (JKC)

 

முன்னுரை 


மூன்று வாரங்கள் தொடராக முதியோரில்லக் கதையாக அமைந்து விட்டது.

கீதா பென்னெட்டின் ‘வித்தியாசம்’ என்ற கதையில் அமெரிக்கர் ஏரனும், தமிழர் ஜனார்த்தனனும் எப்படி முதியோர் இல்லத்திற்கு செல்வதே கடைசி முடிவு என்ற நிலைக்குச் செலுத்தப்படுகிறார்கள் என்று கண்டோம்.

அடுத்த வாரம் ஸ்ரீதரன் எழுதிய ‘எனக்கு மட்டும்’ கதையில் சீதாராமன் முதியோர் இல்லத்திற்குச் செல்ல நிர்பந்திக்கப் பட்டாலும் அதைத் தவிரவும் வேறு மார்க்கங்கள் உண்டு என்று கடைசி காலத்தை ஒரு நற்பணியில் கழிக்கத் தீர்மானிப்பதைக் கண்டோம்.

இன்று இந்திரா சவுந்தரராஜனின் ‘பாகீரதி …பாகீரதி’ என்ற பின் வரும் கதையில் ஒரு முதியோர் இல்லத்தில் உள்ள மூன்று தம்பதிகளின் வாழ்க்கை பற்றி காண்போம்.

இந்திரா சௌந்தர்ராஜனைப் பற்றி உங்களுக்குக் கட்டாயம் தெரியும். பிரபல எழுத்தாளர். நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித்தொடர்கள், ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல துறைகள் மூலம் புகழ்பெற்றவர். தென்னிந்திய மரபுகள் மற்றும் புராணக்கதைகளின் அடிப்படையில் வரலாறு, சமூகம், ஆன்மிகம், மர்மங்கள், சித்தர்கள் பற்றிய நூல்களை எழுதிக்கொண்டிருப்பவர்.

இவருடைய மர்மதேசம், விடாது கருப்பு, கிருஷ்ண தாசி என்ற தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த அனுபவம் நினைவில் நிற்கிறது. என் பெயர் ரெங்கநாயகி என்ற பரிசு பெற்ற தொடர்கதையை மறக்க முடியுமா? இவரைப்பற்றிய மேலதிக விவரங்களை

இந்திரா_சௌந்தர்ராஜன் என்ற சுட்டியில் காணலாம். 


பாகீரதி… பாகீரதி…

கதையாசிரியர்: இந்திரா செளந்தர்ராஜன்

‘சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா.

‘அடுத்த இஷ்யூ… முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று ‘மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது.

சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட! இலவச சேவை, பணத்துக்கான சேவை என இரண்டுவிதமான சேவைகள் அங்கு வழங்கப்பட்டாலும், பெரிதாகக் குற்றம் காண இடம் இல்லாதபடி இருந்தது. மேனேஜர் ராகவன், வித்யாவை வரவேற்று உதவியாளர் சீனிவாசனிடம் அறிமுகப்படுத்தி, அங்கு வாழ்வின் எஞ்சிய பாகத்தைக் கழிக்க முடியாமல் கழித்தபடி இருக்கும் முதியோர்களிடம் அழைத்துச் செல்லும்படி கூறினார்.

வித்யாவும் ரெக்கார்டரைக் கையில் எடுத்துக்கொண்டாள். ஆரம்பமாயிற்று சந்திப்பு!


முதல் சந்திப்பு, பஞ்சாட்சரம்-பத்மாவதி தம்பதிகளிடம்…

”நமஸ்காரம்… என் பேர் வித்யா. முதியோர் சிறப்பிதழுக்காக உங்களைப் பேட்டி காண வந்திருக்கேன். உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா?”

”ஏன் இல்லாம… மூணு பசங்க.”

”மூணு பசங்க இருந்துமா நீங்க முதியோர் இல்லத்துல இருக்கீங்க?”

”அது, எங்க தலையெழுத்து. மத்தபடி எங்க பிள்ளைகள் மேல தப்பு ஒண்ணுமில்லை.”

”ஆச்சரியமான பதிலா இருக்கே!”

”ஆமாம்மா… வீடு வாசலை வித்து நல்லாத்தான் படிக்கவெச்சோம். பசங்களும் படிச்சாங்க. அமெரிக்கா, ஆஸ்திரேலியானு வேலை கிடைச்சது, அனுப்பிவெச்சோம். மாசம் அஞ்சாறு லட்சம் சம்பளம். ஆனா, எங்களால அங்க போய் அவங்களோட இருக்க முடியல.”

”எதனால?”

”எங்க வரைல இங்க ஊருக்குள்ள ஒரு பக்கமா ஜெயில் இருக்கு. அங்க ஊரே ஜெயிலாதாம்மா இருக்கு. காலாற நாலு தெருப்பக்கம் நடந்தோம்னு நடக்க முடியாது. காபி பொடி வாங்கக்கூட 30, 40 மைல் கார்ல போகணும். அக்கம்பக்கத்து வெள்ளக்காரர், ‘ஹவ் ஆர் யூ?’ம்பா… ‘ஹேவ் எ நைஸ் டே!’ம்பா அதுக்கு மேல அவா பேசறது எங்களுக்குப் புரியாது.

பசங்க வேலைக்குப் போய்ட்டா, வீட்டுல கிடக்குற ஃபர்னிச்சரோட ஃபர்னிச்சராத்தான் நாங்களும் உட்காந்திருக்கணும். ஒரு கொரியர் வந்தாகூட எழுந்துபோய் வாங்க, காலுக்குத் திராணி கிடையாது. மூட்டு வலி. மொத்தத்துல நாங்க, அவங்க வரையில பாசமான பாரம்தானே ஒழிய, துளி ஒத்தாசை கிடையாது. அதான் ‘சரணாகதி’க்கு வந்துட்டோம்” – பத்மாவதி பாட்டி, பத்திரிகையாளர் போல எடிட் செய்து பேசி முடித்தாள்.

”நல்லபடியா படிக்கவெச்சதுதான் நாங்க செய்த தப்போனு தோண்றது” என்றார் பஞ்சாட்சரம்.

நிஜமாகவே நெஞ்சில் கூர்மையான வேலால் குத்தியது போல்தான் இருந்தது வித்யாவுக்கு.

அடுத்த செட் அகல்யா – ராமநாதன் தம்பதி!

அழகாக உட்கார்ந்து செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர்.

”எங்களுக்குக் குழந்தைங்க இல்லை; காதல் திருமணம் வேற. அதனால உறவுகளோட பெரிய இணக்கமும் இல்லை. நல்லவேளை… எனக்கு அரசாங்க உத்தியோகம்; பென்ஷன் வருது. சொந்தமா வீடு இருந்தது. அதை வித்துட்டு பணத்தை பேங்க்ல போட்டுட்டு இங்க வந்துட்டோம். எங்களுக்கு எது நடந்தாலும் பயம் இல்லை. இங்கேயே எல்லா ஈமக்கிரியையும் செய்துடுவாங்க. நாங்க எங்க சாம்பலை காசியில கரைக்கணும்னு விரும்பினோம். அக்ரிமென்ட்லயே அதை எழுதி ஓ.கே-னுட்டாங்க” -ராமநாதன் செஸ் விளையாடியபடியே மிகச் சகஜமாகப் பேசினார்.

அவர் தோரணையே… ‘வாழ்க்கை என்ன பெரிய வாழ்க்கை. அது ஒரு விளையாட்டுதானே! பதிலுக்கு அதோடு நாமும் விளையாடினால் தீர்ந்தது’ என்பதுபோல் இருந்தது.

இந்த இரண்டு ஜோடிகளே, வித்யா மனதைக் கனப்படுத்திவிட்டார்கள். முதல் தடவையாக, ‘தனக்கு வயதானால்..?’ என்ற கேள்வி அவளுக்குள் எழும்பியது.

மூன்றாவது ஜோடியில் ஒருவர் படுத்தபடுக்கையாக. அதாவது, சுப்புலட்சுமி பாட்டி படுத்தபடுக்கையாக. கணவர் ராமபத்ரனுக்கு 96 வயது. டி.வி. ரிமோட்டைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு அழுத்தி அழுத்திப் பார்த்தபடி இருக்க, டி.வி. ஒளிரவே இல்லை.

படம் உதவி இணையம் https://mahavishnu-old-age-home.business.site/“அத இப்படித் தாங்க. ரிமோட்டை அழுத்தத் துப்பில்லை. இதுல சீரியல் பார்க்கலேனா தலை வெடிச்சிடும்” என்று சுப்புலட்சுமி பாட்டி அங்கலாய்க்க,

“இந்தாடி… நீதான் போடு பார்ப்போம். இந்த ரிமோட்டுக்கும் என்னை மாதிரியே எல்லாம் போச்சு போல” என்றார்.

பாட்டி, ரிமோட்டை நேராகப் பிடித்து நொடியில் டி.வி-யை ஒளிரவைத்தார்.

“சுப்பி… உனக்கு மந்திர விரல்டி!”

“மண்ணாங்கட்டி… ரிமோட்டை நேரா பிடிக்கத் தெரியலையே உங்களுக்கு. நான் போய்ட்டா அவ்ளோதான் உங்க கதி. கோமணத்தைக்கூட கோணலாக் கட்டிண்டு… கர்மம்… கர்மம்” – சுப்புலட்சுமி பாட்டி தலையில் அடித்துக்கொள்ள, கச்சிதமாக உள்ளே நுழைந்தாள் வித்யா.

ராமபத்ரன் அவளைப் பார்த்து, “அடடே… பாகீரதியா… வா… வா” என்றார்.

வித்யாவுக்கு ஆச்சரியம்.

“சார்… நான் பாகீரதி இல்லை, வித்யா.”

“வித்யாவா… நீ பாகீரதி இல்லே?”

“அதான் ‘வித்யா’ங்கிறாளே… அப்புறம் ‘பாகீரதி’னா. பார்க்கிறவால்லாம் உங்க பேத்தி ‘பாகீரதி’தானா?” – சுப்புலட்சுமியின் இடையீடு, வித்யாவுக்கு எல்லாவற்றையும் புரியவைத்தது.

“அதனாலென்ன… நீங்க என்னை ‘பாகீரதி’யாக்கூட நினைச்சுக்கலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை” என்றாள்.

“எதுக்கும்மா வந்துருக்கே..?” – படுத்த நிலையில் இருந்தே சுப்புவிடம் இருந்து கேள்வி.

அப்போது, சுப்புவிடம் இருந்த ரிமோட்டை வாங்கி, டி.வி-யில் தனக்குப் பிடித்த சீரியலை வைக்கத் தொடங்கினார் ராமபத்ரன்.

“நான் ஒரு ஜர்னலிஸ்ட். முதியோர் சிறப்பிதழுக்காக ஒரு கட்டுரை எழுதணும். அதான் உங்க எல்லோரையும் பார்க்க வந்தேன்.”

“எங்களுக்குனு சிறப்பிதழா… விளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சமா?” – பாட்டி படுத்துக்கொண்டே ஆகாசத்துக்கு நிமிர்ந்த மாதிரி கேட்டது, வித்யாவை ஓர் உலுக்கு உலுக்கியது.

“உங்களை நீங்க அப்படிச் சொல்லிக்கக் கூடாது. உங்க அனுபவங்கள் எல்லாம் லேசுப்பட்டதா என்ன?”

“உண்மைதான்… அது லேசுப்பட்டது இல்லை. அதே சமயம், ஆனந்தமாப் பகிர்ந்துக்கக்கூடியதும் இல்லை. பாரு… கால் போய் படுத்துண்டு கிடக்கேன். சாப்பிடவே பிடிக்கலைம்மா. நாக்கு ஒண்ணும் செத்துப்போயிடலை. இப்பவும் உப்பு, ஒரப்பு தேவைப்படறது. ஆனா, சாப்பிட்டா வெளியேத்தணுமே..? என் கழிவை இங்க ஒரு பொண்ணு வந்துதான் சுத்தம் பண்ணுவா. அவளைப் போல பாவி இருக்க முடியுமா..? சொல்லு பார்ப்போம்” என்றாள் சுப்புலட்சுமி பாட்டி.

இதென்ன… எல்லா வயதானவர்களுமே இப்படிக் கேட்கிறார்கள்? வித்யாவுக்கு விதிர்விதிர்ப்புத் தட்டியது. சுப்புலட்சுமி பாட்டியை மலங்க மலங்கப் பார்த்தாள். பாட்டியும் தொடர்ந்தாள்.

“எங்க கல்யாணத்துக்குச் சரியான கூட்டம். 2,000 பேர் வந்ததா சொன்னாங்க. எல்லாருமே எங்களை 100 வருஷம் உசுரோட இருக்கணும்னே வாழ்த்தினாங்க. அது இப்படியா பலிக்கணும்?

பாரு… இந்த டி.வி. ரிமோட்டைக்கூட இவருக்கு ஒழுங்காப் போடத் தெரியலை. இவரோட 75 வருஷம் வாழ்ந்துட்டேன். ஒரு பொண்ணு இருந்தா. ஆனா, அவ கொடுத்து வெச்சவ. அவளுக்கு 60 வயசு நடக்கிறப்பவே ஹார்ட் அட்டாக்ல போய்ச் சேர்ந்துட்டா. பேரன் – பேத்திகள் வெளிநாட்டுல இருக்காங்க. ‘கிராண்ட் ஃபாதர்ஸ் டே’க்கு போன் பண்ணி விஷ் பண்ணுவாங்க. மாசமானா எங்க செலவுக்கு அவங்கதான் பணம் கட்டுறாங்க. என்ன பண்ணி என்ன புண்ணியம்… எங்க உசுர் போவேனாங்குது” – சுப்புலட்சுமி பாட்டியின் அடுத்த கட்ட விளக்கத்தில், அவர்களின் நிலை வித்யாவுக்கு விளங்கிவிட்டது. பிள்ளைகள் இல்லாததால் முதுமை அல்லாடுகிறது; அப்படியே இருந்தாலும் வெளிநாட்டு மோகத்தால் அல்லாடுகிறது.

‘சரணாகதி’ மாதிரி அமைப்புகள் மட்டும் இல்லாவிட்டால், இவர்கள் நிலையைக் கற்பனை செய்வதுகூட சிரமம்தான்.

“இப்ப உங்களோட ஆசை..?” – வித்யா கேட்டாள்.

"ஒரே ஆசைதான். உயிர் போனா போதும்.”

"ஐயோ… அப்படில்லாம் சொல்லாதீங்கம்மா.”

"வேண்டாம் குழந்தை. எங்களுக்கான சாவை நீ துக்கமாவே நினைக்காதே. அதிகபட்சம் 70, 75 வயசுக்கு மேலே யாருமே வாழக் கூடாது. வாழ்ந்தா அது நரகம். நீ உன் காலை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ. அதுக்கு ஒரே வழி… பகவான் கால், பெரியவா கால்னு எல்லார் காலையும் பிடி. ஆரோக்கியமா இருக்க ஆசீர்வாதம் வாங்கிக்கோ. கண் இல்லாமக்கூட கௌரவமா வாழ்ந்துடலாம்; கால் போனா அவ்வளவுதான்.

நீ எழுதப்போற கட்டுரையில இதையும் எழுது.

கால்களால நடந்து கோயில், குளத்துக்குப் போங்கோ… பாதயாத்திரை பண்ணுங்கோ. அதைச் சொகுசா வெச்சுண்டு அடுத்த தெருவுக்குப் போகக்கூட ஆட்டோவைக் கூப்பிட்டா என் நிலைமைதான். நடக்கலாம்… அதனால ஒரு கௌரவக் குறைச்சலும் வந்துடாது. நாம வறட்டுக் கௌரவம் பார்க்கப் போய் ஆரோக்கியமும் போயிடறது; ஆட்டோக்காரனும் அதுக்குத் தண்டனையா 50, 100-னு புடுங்கிப்பிடுறான்” – சுப்புலட்சுமி பாட்டி எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து முடித்தாலும் அவ்வளவும் அசைக்க முடியாத கருத்துகள்.

வித்யாவுக்கு தான் ஒரு ஞான பூமிக்குள் பிரவேசித்துவிட்டது போலத்தான் தோன்றியது.

"கட்டாயம் எழுதறேம்மா… உங்களுக்கு எதாவது உதவி வேணுமா?” – வித்யா கேட்கவும், சுப்புலட்சுமி பாட்டி கப்பென்று பிடித்துக்கொண்டாள்.

"நீ கோயிலுக்குப் போவியா?”

"ஓ… போவேனே…”

"எனக்காக ஒரு பிரார்த்தனை பண்ணிப்பியா?”

"தாராளமா…”

"எந்தக் காரணத்தைக்கொண்டும் என் உயிர் முதல்ல போயிடக் கூடாது. இவரை அனுப்பிட்டுத்தான் நான் போகணும். ஒருவேளை நான் முந்திண்டா, இவர் அவ்வளவுதான். தவிச்சுப்போய்டுவார். இன்னைக்குக்கூட ஜட்டியைத் திருப்பித்தான் போட்டுண்டிருக்கார். நான் இருந்தாத்தான் எல்லாத்தையும் சொல்லி சரிசெய்ய முடியும்” என்றதும், வித்யாவுக்குக் கண்களில் இருந்து நீர் புற்றுப் பாம்பாக எட்டிப் பார்த்தது.

அதோடு சுப்புலட்சுமி பாட்டியின் கைகளைக் கண்களில் ஒற்றியபடி அவள் புறப்பட்டபோது ”நிஜமா சொல்லு… நீ பாகீரதி இல்லை?” என ராம்பத்ரன் கேட்டவிதம் அவளை வெடிக்க வைத்துவிட்டது.

வித்யாவின் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு.

தமிழக முதலமைச்சர்கூட படித்துவிட்டு தலைமைச் செயலர் மூலம் பாராட்டு வந்து சேர்ந்தது.

வித்யாவுக்கு அதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. சுப்புலட்சுமி பாட்டியைப் பார்த்து, கட்டுரையைப் படித்துக்காட்டி அவளின் முகப் பிரகாசத்தைப் பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது.

புறப்பட்டுவிட்டாள்.

‘சரணாகதி’க்குள் நுழைந்து மேனேஜர் ராகவன் முன் புன்னகையோடு நின்றாள்.

"சார்… கட்டுரை படிச்சீங்களா?”

"ம்… பிரமாதம்!”

"சி.எம்-கிட்ட இருந்துகூட பாராட்டு சார். அனேகமா உங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கலாம்.”

”சந்தோஷம்மா…”

"சுப்புலட்சுமி பாட்டியைப் பார்க்கணும். அவங்க ஒரு பிரார்த்தனை செய்ய சொல்லியிருந்தாங்க. பண்ணியிருக்கேன். குங்குமப் பிரசாதமும் கொடுக்கணும்.”

வித்யாவின் அந்த விருப்பத்தின் முன்னால் சற்று மௌனம் சாதித்தார் ராகவன்.

"சார்ர்ர்…”

”சாரிம்மா… அவங்க பிராப்தி அடைஞ்சுட்டாங்க. ரெண்டு நாளாச்சு?”

"மை காட்..! அவங்க கணவர்?”

"அவர் இருக்கார். அவருக்கு பாட்டியம்மா போனதே தெரியாது. இங்க இருக்கிறவங்க துக்கத்தோட சாகறதை நாங்க விரும்பறது இல்லை. அதனால பாட்டியை ஆஸ்பத்திரில வெச்சு வைத்தியம் பார்க்கறதா சொல்லியிருக்கோம்…”

"அப்ப காரியங்களை..?”

”அவர் கையால பில்லும் எள்ளும் வாங்கித்தான் செஞ்சோம்.”

"அப்ப அவருக்குத் தெரிஞ்சிருக்குமே..?”

"சாதுர்யமா செஞ்சோம்மா. எப்படியும் அவரும் இன்னும் சில மாசங்கள்ல பிராப்தி அடைஞ்சுடுவார். இதை நான் சொல்லலை. டாக்டர் சொன்னதைச் சொல்றேன். அதுவரை அவர் துக்கவயப்படாம, தான் ஓர் அநாதைனு ஃபீல் பண்ணாம சந்தோஷமா இருக்கட்டுமே…” – ராகவன் சொன்னதன் நியாயம் வித்யாவுக்கும் புரிந்தது.

வாழ்க்கையில்தான் இப்படி எத்தனை வண்ணங்கள்? – கனத்த மனத்தோடு புறப்பட்டாள்.

வாசல் தாண்டும்போது, "பாகீரதி… பாகீரதி…” என்று ஒரு குரல்.

திரும்பிப் பார்த்தாள்.

ராமபத்ரனேதான். தள்ளாடியபடி நெருங்கி வந்தார். ”என்னம்மா இவ்வளவு தூரம் வந்துட்டு தாத்தாவைப் பார்க்காமலே போறே..?” – கேட்டார்.

வித்யாவின் கண்களில் மீண்டும் நீர் முயல்களின் குதிப்பு. துடைத்துக் கொண்டாள். ”உங்களைத்தான் தாத்தா தேடிண்டிருக்கேன். வாங்க போகலாம்” என்றாள் அவர் அறை நோக்கி.

"அது சரி… நீ சுப்பியைப் பார்த்தியா? என்கிட்ட சொல்லாமக்கொள்ளாம அவ பாட்டுக்குப் போயிட்டா.”

அவர் தவறாகப் பேசுவது போல சரியாகப் பேசினார்.

”பார்த்தேன் தாத்தா. உங்களைப் ‘பத்திரமாப் பார்த்துக்க’னு என்கிட்ட சொன்னா. அதான் வந்தேன். இனி நான்தான் உங்களைப் பார்த்துக்கப் போறேன்” என்றாள்.

”எனக்குத் தெரியும். சுப்பி, அப்படியெல்லாம் என்னைத் தவிக்கவிட மாட்டானு…” – அதைக் கேட்ட வித்யா ஒதுங்கிச் சென்று ஓவென அழ ஆரம்பித்தாள்.

– மே 2014

பின்னுரை

கதையைப் படித்தவுடன் தோன்றிய முதல் வியப்பு இவருடைய சிலேடை அல்லது வார்த்தை விளையாட்டு. இரண்டாவது கதையின் நடை. சலிப்பு தட்டவில்லை.

மெச்சதக்க சில::

இல்லத்தின் பெயர் ‘சரணாகதி’, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட. முதுமையில் வாழ்வதற்கு சரண். ஆவிதான் போயினபின் பரமபதத்தை அடைய சரண்..

பத்திரிக்கையின் பெயர் மலர்கள் .. குமுதம்?? , ஆசிரியர் மலரவன் ..மாலன் ?

நாங்க, அவங்க (பிள்ளைகள்) வரையில பாசமான பாரம் தானே ஒழிய, துளி ஒத்தாசை கிடையாது

அவர் (முதியவர் ராமநாதன் ) தோரணையே… ‘வாழ்க்கை என்ன பெரிய வாழ்க்கை. அது ஒரு விளையாட்டுதானே! பதிலுக்கு அதோடு நாமும் விளையாடினால் தீர்ந்தது’ என்பதுபோல் இருந்தது.

”இந்தாடி… நீதான் போடு பார்ப்போம். இந்த ரிமோட்டுக்கும் என்னை மாதிரியே எல்லாம் போச்சு போல” என்றார்.

பிள்ளைகள் இல்லாததால் முதுமை அல்லாடுகிறது; அப்படியே இருந்தாலும் வெளிநாட்டு மோகத்தால் அல்லாடுகிறது

வித்யாவுக்குக் கண்களில் இருந்து நீர் புற்றுப் பாம்பாக எட்டிப் பார்த்தது.

”அது சரி… நீ சுப்பியைப் பார்த்தியா? என்கிட்ட சொல்லாமக்கொள்ளாம அவ பாட்டுக்குப் போயிட்டா.”

அவர் தவறாகப் பேசுவது போல சரியாகப் பேசினார்.

செல்லப்பா சார் 


-இராய செல்லப்பா

1 அநாதை இல்லம் வேறு முதியோர் இல்லம் வேறு என்று கூறுகிறார்.

நேரம் இருந்தால் வாசித்துப் பாருங்கள்.

31 கருத்துகள்:

 1. க்ளிஷே என்று சொல்வதைப்போலவே கதை அமைந்திருக்கிறது. காரணங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

  குறிப்பிட்ட வயதைத் தாண்டினால் நம் உலகை ஒரேயடியாகச் சுருக்குக்கொண்டு, பழைய விஷயங்களையே பலமுறை பேசிக்கொண்டு, நிகழ்காலத்துக்கும் வரமுடியாமல், ஆனால் பேச்சுத்துணை வேண்டுமென்று இருந்தால், உறவினர்களுடனும் காலம் தள்ளுவது கஷ்டம். எங்கு இருந்தால் என்ன? நம் குழந்தைகள் அருகில்தான் இருக்காங்க என்று நினைத்துக்கொண்டால் போதாதா?

  கதை என,னைக் கவரவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதையில் உண்மை உள்ளதே! இந்தக் காலத்தில் நடப்பது தான். ஆனால் பழைய விஷயங்கள் குழந்தைகளீடம் பகிர முடியாது. பெண்?பையராக இருந்தாலும். அவங்க ரசிப்பதில்லை.

   நீக்கு
 2. பையனைப் படிக்க வைத்ததுதான் தப்பு, வெளிநாட்டுக்குப் போறேன் என்பவனை அனுமதித்தது தவறு, பெரிய இடத்தில் பெண்ணைப் பார்த்துக் கட்டிவைத்தது தவறு என்று புலம்புவதைவிட, நாம் நம் மற்றும் துணையின் பெற்றோருக்கு என்ன செய்தோம் என்று நினைத்து, நாம் கூடவே வைத்துக்கொண்டிருந்தாலும், தன்னைக் கூடவே தன் பிள்ளைகள் வைத்துக்கொள்ளவில்லை என்றால் அது விதிவசப்பட்டது என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///”மூணு பசங்க இருந்துமா நீங்க முதியோர் இல்லத்துல இருக்கீங்க?”

   ”அது, எங்க தலையெழுத்து. மத்தபடி எங்க பிள்ளைகள் மேல தப்பு ஒண்ணுமில்லை.”​// என்று தான் பஞ்சாட்சரம் ஒத்துக் கொள்கிறார்.
   Jayakumar

   நீக்கு
 3. வீரம்மாள் என்னை மிகவும் கவர்ந்தார். வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடிக்கொள்கிறார்.

  பதிலளிநீக்கு
 4. வெங்கட் நாகராஜ்..... மற்றும் ஆதி வெங்கட்.... இவ்வளவு நாட்கள் இணையத்தில் பதிவு எழுதாமல் இருந்ததில்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிஸி என்று சென்ற வாரம் இருவருமே எனக்கு Facebook Messenger மூலமாக சொன்னார்கள்.

   நீக்கு
  2. நெல்லை, இருவருமே கொஞ்சம் பிசி. வெங்கட்ஜிக்கு அலுவலகப் பணிகள்..

   கீதா

   நீக்கு
 5. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  பார்க்க பார்க்க
  பாவம் பொடிபட..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 6. திருமதி. வீரம்மாள் வீரமான பெண்மணிதான்.

  பதிலளிநீக்கு
 7. செய்திகள் எல்லாம் அருமை.
  திறமையான குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
  ஊராட்சி தலைவி வீரம்மாள் அவர்களுக்கு வணக்கம், அவர்கள் ஆரோக்கியமாக இருந்து ஊர் மக்களுக்கு நல்லது செய்யட்டும்.

  பதிலளிநீக்கு
 8. கதை பகிர்வு நன்றாக இருக்கிறது. மூன்று கதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபம் சொல்கிறார்கள்.

  கடைசி கதையில் படுத்து கிடக்கும் அம்மா சொல்வது போல என் மாமியாரும் சொன்னார்கள், அவர்களை வழியனுப்பி விட்டு நான் போக வேண்டும் என்று. அது போலவே மாமாவுக்கு அப்புறம்தான் அத்தை போனார்கள்.அத்தை மாமாவுக்கு பணிவிடை செய்தார்கள்.

  இந்த கதையில் அவர்களே முடியாமல் படுத்து இருக்கிறார்கள், ஆனால் பேசி கொண்டு இருக்கிறார்கள். ரிமோட்டை இயக்கி கொடுக்கிறார்.

  //ரிமோட்டை நேரா பிடிக்கத் தெரியலையே உங்களுக்கு. நான் போய்ட்டா அவ்ளோதான் உங்க கதி.//

  ஆனால் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். பாகீரதியை நினைவு வைத்து பேசுகிறார்.

  //”எனக்குத் தெரியும். சுப்பி, அப்படியெல்லாம் என்னைத் தவிக்கவிட மாட்டானு…” –//

  தவிக்க விடவில்லை சுப்பி.


  நிறைய பெரியவர்கள் சொல்வார்கள், கை. கால், நன்றாக இருக்கும் போதே போய் விட வேண்டும் என்று படுக்கையில் படுத்தால் பாயுக்கும் நோவு என்று.

  100 வயது வரை ஆரோக்கியமாக இருந்தால் நன்றாக இருக்கும். படுத்தால் படுத்து இருப்பவருக்கும், பார்ப்பவர்களுக்கும் கஷ்டம் தான்.


  1 அநாதை இல்லம் வேறு முதியோர் இல்லம் வேறு என்று கூறுகிறார்.

  வேறு வேறுதான்.

  சீனியர் சிட்டிசன் ஹோம் , இது பணம் கொடுத்து விருப்பபட்டே தங்குகிறார்கள். தங்கள் வீட்டை பாதுகாக்க முடியவில்லை, பராமரிக்க முடியவில்லை, குழந்தைகள் வெளி நாடுகளில் நினைத்தால் உடனே வர முடியாது., போக முடியாது.
  நினைத்த போது மகன், மகள் இருக்கும் ஊருக்கு போய் விட்டு வந்து இங்கு வந்து விடுகிறார்கள்.

  தனிமை, மருத்துவரிடம் கூட்டி போக ஆள் இல்லை என்பதால் அங்கு தங்குகிறார்கள். தங்கள் வயது ஒத்தவர்களுடன் பேசிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
  விருந்தினர், குழந்தைகள் வந்தால் அங்கு தங்கி மகிழ்ச்சியாக பார்த்து போகிறார்கள். அவர்களுக்கும் தங்க வசதியாக விருந்தினர் அறைகள் இருக்கிறது.  ஏழை எளியவர்கள், ஆதரவற்றோர் தங்கும் முதியோர் இல்லமும் அவர்களுக்கு வரபிரசாதம் தான். அங்கு தங்கி இருப்பவர்களும் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறோம். சேவை மனமான்மையுடன் தொண்டு செய்யும் நல்ல மனிதர்கள் நன்கு கவனித்து கொள்கிறார்கள் என்று.
  அங்கு தங்கி இருப்பவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்கிறார்கள், ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாக உதவி கொள்கிறார்கள்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதிக்கா இந்த ஆதரவற்றோர் பற்றி கீழே சொல்ல நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க. இப்போது நிறைய வளர்ச்சிகள் வந்துவிட்டன.

   யாரையும் குற்றம் சொல்லாமல் வாழ்த்திக் கொண்டே இருப்போம் நல்லது நடக்கும்.

   கீதா

   நீக்கு
 9. குழந்தைகளுக்கு வாழ்த்துகள்.

  வீரம்மாள் பணி சிறக்கட்டும்.

  கதை பகிர்வு இக் காலத்து நிகழ்வை படம் பிடித்து காட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 10. வீரம்மாள் பாட்டி அசத்துகிறார். பாருங்க இந்த வயதிலும் ஊருக்கு நல்லது செய்ய திட்டங்கள் என்று ஊராட்சி ஒன்றிய தலைவராகச் சுறு சுறுப்புடன் பணியாற்றுவது சிறந்த உதாரணம். பாட்டிக்கு வணக்கங்கள்!

  இருகுழந்தைகளும் அசத்தல். குட்டிப் பெண்ணும் அவள் தம்பியும் செம நல்ல பெற்றோர். இப்படித்தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் திறன் கண்டு ஊக்குவித்துப் பயிற்சி கொடுத்தால் நல்ல சமுதாயம் உருவாகும்.

  ஏசி ஹெல்மெட் ஆஹா!

  எல்லாச் செய்திகளுமே அருமை

  கீதா

  பதிலளிநீக்கு
 11. முதியோர் தனியாக இருப்பது அதுவும் உடல் உபாதைகளுடன் இருப்பது கடினமான வாழ்க்கைதான்.....ஆனால் இப்போதைய வாழ்வியலில்?!!

  கதையின் முடிவில் சொல்லப்பட்ட வருடம் அதற்கு முன்பு அப்போதைய வருடங்களில் அதீதமாகப் பேசப்பட்ட விஷயங்கள். இப்போது இது சகஜமாகிவிட்டது. அதாவது பெற்றோரும் ஓரளவு தங்கள் குழந்தைகளைப் புரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளார்கள். அலல்து தங்களை நல்ல முதியோர் இல்லங்களில் சேர்த்துக் கொண்டு அதுவும் ஒரு வீடு போன்றுதானே இப்பொதெல்லாம் தனி தனியாக ஒரே வளாகத்தில் வீடு போன்று இருக்கின்றனவே அப்படி.

  அதற்கேற்ப அப்படியான இல்லங்களும் வரத் தொடங்கிவிட்டன. அதோடு அபார்ட்மென்ட்களிலேயே முதியோர் இருந்தால் அவர்களைப் பார்த்துக் கொள்ள என்று உள்ளேயே வசதிகளும் செய்து கொடுக்கின்றனர் சென்னையில், பங்களூரில் அப்படி இருக்கின்றன.

  நம் குழந்தைகளை நாமே ஏன் பழிக்க வேண்டும்? பெற்றோர் பாசிட்டிவாக நினைத்து வாழ்ந்தால் குழந்தைகளும் பாசிட்டிவாக அந்தக் குடும்பம் நன்றாக இருக்கும், இன்று கோமதி அக்காவின் பதிவில் கூட அந்தக் கருத்து சொல்லப்பட்டிருந்தது. ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டே இருத்தல் என்று. வாழ்க்கை மாறி வருவதால் யதார்த்தத்தை எதிர்க்கொள்ளத்தான் வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 12. கதை மனதை உலுக்கி விட்டது வித்யாவைப் போல நானும் என்னை நினைத்துக் கொண்டேன்.

  //நல்லபடியா படிக்க வெச்சதுதான் நாங்க செய்த தப்போனு தோண்றது//

  இந்த வசனம் சிந்திக்க வைத்தது

  பதிலளிநீக்கு
 13. இராயசெல்லாப்பா சார் எழுதியிருந்ததை வாசித்த நினைவு இருக்கிறது அதேதான் முதியோர் இல்லம் வேறு அனாதை இல்லம் வேறு.

  நேற்று கில்லர்ஜி எபி வாட்சப் குழுவில் போட்டிருந்த ஒரு வீடியோ போன்ற நிகழ்வுகள் அவலம். வயதான அம்மாவை மருமகள் வெளியில் எட்டி உதைப்பது போன்று. நம் வட்டத்தில் அப்படி எதுவும் இல்லை என்பது சமாதானம்.

  எட்டி உதைப்பது எல்லாம் கேவலமான செயல் என்றாலும் இதில் சில உள்நோக்க வேண்டும் இன்றைய பெரியவர்கள் அன்று குழந்தைகளை எப்படி நடத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். நம் மரியாதை நம் கையில். பெற்றோர் நன்றாக இருந்தால் குழந்தைகள் சினிமா கட் அவுட்டுகளுக்குப் பாலூற்ற மாட்டார்கள். வளர்ப்பு என்பதும் இதில் முக்கியம்.

  செல்லப்பா சாருக்கும் நான் கருத்து சொன்ன நினைவு குழந்தைகளோடு சேர்ந்த் வாழும் பேரு பெற்றால் நல்லதே. இக்கதையில் வருவது போல் பிள்ளைகளைக் குற்றம் சொல்ல இயலாது ஆனால் வாழ்க்கை முறை அப்படியாகிப் போனால். யதார்த்தத்தை எதிர்நோக்க வேண்டும்.

  இதில் ஒன்றே ஒன்று மட்டும் எனக்கு எப்பவும் தோன்றும். பணம் இருப்பவர்கள் தாங்களாகவே முதியோர் இல்லம் சென்று சேர்ந்துகொண்டுவிடலாம் அல்லது பிள்ளைகள் உதவுவார்கள். ஆனால் பணம் இல்லாதோர்?

  அடுத்து பிள்ளைகள் இல்லாதோர் அல்லது சிறு வ்யதிலேயே குழந்தைகள் மரணம் அடைந்தால் ஆனால் வறுமையில் இருப்போர் கதி?

  என் பாட்டிக்கு என் அப்பாவைத் தவிர மற்ற எல்லாக் குழந்தைகளும் போய்விட அப்பாவும் என் தம்பியும் நானும் பார்த்துக் கொண்டதால் நல்லதாயிற்று ஆனால் தனிமைப்படுபவர்களும் இருக்காங்களே.

  ஸ்ரீராமின் பாஸின் அம்மாவை பாஸும் ஸ்ரீராமும் பார்த்துக் கொள்வது போன்று முதியோருக்குக் கிடைத்தால் பாக்கியம்.

  வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. கூடியவரை நாம் நம்மை ஏதேனும் ஒன்றில் இந்த வீரம்மாள் பாட்டி போன்று என்கேஜ் செய்துகொண்டுவிட வேண்டும். சென்ற வாரக் கதையில் முடிவு போன்று.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பாஸின் அம்மாவை பாஸும் ஸ்ரீராமும் பார்த்துக் கொள்வது// - இதைத்தான் பசங்க கவனிப்பாங்க. அப்போ தானாகவே அந்த எண்ணம் அவங்க மனசுல போயிடும். பிற்காலத்தில் வெளி இடங்களில் வேலைக்குப் போனாலும், இது மனதை உறுத்தி பசங்களை ஆட்டமேட்டிக்காகவே உதவ வைக்கும்.

   நீக்கு
  2. கண்டிப்பாக நெல்லை. ஸ்ரீராமின் பசங்க நல்ல பசங்க. பெற்றோரைப் பார்த்து வளரும் குழந்தைகள்.

   எங்கள் வீட்டிலும் உதாரணங்கள் இருப்பதால் அடுத்த தலைமுறை அதாவது இப்போதைய தலைமுறை பெற்றோரை நன்றாகவே கவனிச்சுக்கறாங்க. அந்த எண்ணங்களும் அவர்களுக்கு இருக்கிறது. என் மாமியாரும் அப்படித்தான் இருந்தாங்க. அவங்க பேரன் பேத்திகள் எல்லாருமே அப்படியே. என் பிறந்த வீட்டிலும் அப்படியே என் பாட்டியும் என் கூட இருந்தாங்க நானும் மகனும் அவங்களைக் குளிப்பாட்டி தூக்கி பாத்ரூம் கொண்டு சென்று என்று செய்திருக்கிறோம். என் தங்கை மகள், மகன் எல்லாரும் தாத்தா பாட்டி என்று வளர்ந்தவங்க. கவனித்துக் கொண்டவங்க. இது வரை எந்தப் பெற்றோரும் குறை சொல்லவில்லை எனக்குத் தெரிந்து.

   கீதா

   நீக்கு
 14. வீரம்மாள் பாட்டி எனக்கு வெட்கம் வரை வைச்சுட்டார். என் மாமியாரும் 93 வயது வரை கீழே உட்கார்ந்து சாப்பிட்டார். வாசல் தெளீச்சுக் கோலம் போட்டார். கொழுக்கட்டைச் சொப்பு செய்தார். கடைசி ஒரு மாசம் தான்!

  பதிலளிநீக்கு
 15. சமத்துக் குட்டிகள். தாய், தந்தையருக்கும் ஆசிகள். ஏசி -ஹெல்மெட் அவசியம் தேவை.

  பதிலளிநீக்கு
 16. மூவரும் மூவித அனுபவங்கள். இந்திரா சௌந்திரராஜன் கதை என்பதன் அடையாளமே தெரியலை. எழுத்து நடை

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. குழந்தைகள் அதி திறமையானவர்களாக இருந்தால், அந்த பெற்றோருக்கு எவ்வளவு பெருமை. குழந்தைகளை வாழ்த்துவோம்.

  வயதான பின்னும் தன் கடமையை செய்யும் வீரம்மாள் பாட்டி வணக்கத்துக்குரியவர்.

  ஏ. சி ஹெல்மெட் கண்டு பிடித்து கொண்டு வந்ததும் பாராட்டுக்குரியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் சகோதரரே

  இன்றைய கதை பகிர்வும் நன்றாக உள்ளது. புகழ் பெற்ற இந்த கதாசிரியரின் கதைகளை நான் ஒரு சில ஆர்வத்துடன் படித்துள்ளேன். நல்ல அற்புதமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். இன்றைய கதைகளையும் விடாமல் படிக்க வைத்தது. வயதான பிறகு வரும் இந்த சோதனைகளை இறைவன் ஏன்தான் இப்படி பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் தருகிறானோ என எண்ண வைத்தது. . ஆனாலும் ஒருவரின் கர்மாவின் வினைகளை எந்த வயதிலும் அவரவர்கள் சந்தித்துதானே ஆக வேண்டும். கடைசி கதை வாழ்வின் இறுதியை நினைவூட்டி மனதை கலங்க வைத்தது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 19. வெங்கட் ஜி பற்றிய எனது கருத்து காலையில் இருந்ததே எங்கே போயிற்று ?

  பதிலளிநீக்கு
 20. வந்தவர்களுக்கும் கருத்து கூரியவர்களுக்கும் நன்றி. வணக்கம். முதியோர் தொல்லை (கதைகள்) முடிவுற்றன. வாழ்வு இறைவனால் வரையறுக்கப் பட்டதே.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 21. இன்றைய தலைப்பில் உள்ள சிறு மாற்றத்தை யாராவது கவனிப்பார்கள், சொல்வார்கள் என்று பார்த்தேன்......

  பதிலளிநீக்கு
 22. "நான் பிடிச்ச கதை" தலைப்பை இப்போதுதான் பார்த்தேன்
  அதுதானே?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!