புதன், 20 செப்டம்பர், 2023

பரிசு பெற்ற நாட்கள்

 

சென்ற வாரமும் எங்களை யாரும் கேள்வி கேட்கவில்லை. 

சென்ற வார எங்கள் கேள்விகள் & அவைகளுக்கு முதல் சரியான விடை  அளித்தவர் பெயர்: 

1) பாக்கு மெல்லுவது போர் : கேள்வி கேட்டவர் நினைத்த படம்: பாதை தெரியுது பார். ஆனால் பார் மகளே பார் என்ற விடையும்  சரியே. பார் மகளே பார் என்ற விடையை நெல்லைத்தமிழனும் அப்பாதுரையும் ஒரே நேரத்தில் முதலில் சொல்லியிருந்தனர். 

2) திங்காதே - திருடாதே ( நெல்லைத்தமிழன் & அப்பாதுரை முதல் விடை) 

3) கால் வலித்தால் கட்டு - காதல் படுத்தும் பாடு ( கில்லர்ஜி முதல் விடை )

4) இதுக்குத்தான் ரோஸ் - இதுதாண்டா போலீஸ் (நெல்லைத்தமிழன் முதல் விடை) 

5) வானிலை அடங்கு - வாழ்க்கை படகு ( கில்லர்ஜி முதல் விடை )

எங்கள் கேள்விகள். 

மேலும் சென்ற இரு வாரங்களைப் போல சில சினிமா பெயர்கள். கண்டுபிடிங்க. 

1) அம்பயர் வில்சன் 

2) பந்து வீசலாமா 

3) ஸ்டம்பை உடைச்சுட்டார் 

4) பெனால்டி இல்லையா 

5) ஆம் ஆயிரம் பொன் 

கேள்விகள் எழுதி அனுப்பிய வாசகருக்கு நன்றி. சரியான பதில்கள் என்ன என்று எனக்கு அனுப்பவும். 

= = = = = = = = 

KGG பக்கம் : 

"முதல் பரிசு" 

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த பள்ளிகளில், ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கேற்கும் மாணவன் / வி  அநேகமாக அந்தந்த பகுதிகளில் வாழும் பணக்காரர்களின் குழந்தைகளாக இருப்பார்கள். அதற்குக் காரணம், அந்தப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டங்களில் அளிக்கப்படும் பரிசுகள் அந்தப் பணக்காரர்கள் ஸ்பான்சர் செய்த பணத்தில் வாங்கப்பட்டதாக இருக்கும். பரிசுகள் அந்தப் பணக்காரர் குழந்தைகளுக்கு நிச்சயம் கிடைக்கும். 

ஹை ஸ்கூல் வந்ததும் கொஞ்சம் வித்தியாசம். அளிக்கப்படும் பரிசுகள் எல்லாம் புத்தகங்கள். அந்தப் புத்தகங்கள் யாவும் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் துணைப்பாடமாக வைத்துக்கொள்ள பரிசீலனை செய்யக்கோரி  புத்தகப் பதிப்பாளர்கள் அனுப்பி வைக்கும் இலவச பிரதிகள்! 

ஆறாம் வகுப்பு படித்தபோது ஆண்டு விழாவுக்கு ஒரு மாதம் முன்பு ஆண்டுவிழா கலை  நிகழ்ச்சிகள் மாணவர் தேர்வுக்குழு ( ஹி ஹி - சும்மா பெருசா சொன்னேன் - இரண்டு ஆசிரியர்கள் ) ஒவ்வொரு வகுப்பாக வந்து ஆள் பிடித்தார்கள். அது அப்போது எனக்குத் தெரியாது. வந்தவர்களும் தாங்கள் எதற்கு வந்தோம் என்பதை முதலில் சொல்லவில்லை. 

இந்த வகுப்பில் ரைம்ஸ் சொல்லத் தெரிந்தவர்கள் யாராவது உண்டா என்று கேட்டார்கள். நான்கைந்து பேர்கள் + நானும் எழுந்து நின்றோம். 

ஒவ்வொருவராக ஒவ்வொரு ரைம்ஸ் சொல்லவேண்டும் என்றார்கள். 

நான் வீர தீரமாக அவர்கள் முன் சென்று, 

"Work while you work,

Play while you play, 

That is the way 

To be happy and gay"  என்று சொன்னேன். 

கேட்ட தேர்வுக் குழுவினரில் 50% - அப்படியே அசந்துபோய் நின்றனர். ( ஹி ஹி ஒருவர்தான்) "ஆஹா - சில்வர் டங் ஸ்ரீநிவாச சாஸ்த்ரி போல இவன் கோல்டன் டங் கௌதமன்" என்று பாராட்டினார். ( இதெல்லாம் ரொம்ப ஓவர் !! உண்மையில் அவர் சொன்னது:  " இந்தப் பையனை போட்டுக்குவோம் சுமாரா சொல்றான் ") 

அந்தக் காலத்தில் ஏழைக் குடும்பங்களில், என்னைப் போன்று பல அண்ணன்களோடு பிறந்தவர்களுக்கு ஒரு பெரிய உரிமைப் போராட்டம் இருந்து வந்தது. சொந்தமாக டிராயர் சட்டை கிடையாது. அண்ணன்கள் போட்டு அவர்களுக்கு சிறியதாகிப் போன டிராயர் சட்டைகள் தம்பிகளை வந்து தஞ்சம் அடையும். 

என்னுடைய சிறிய அண்ணன் சிறிய வயதிலிருந்தே கொஞ்சம் முரடு. அவருடைய டிராயர்களில் மற்றும் சட்டைகளில், பொத்தான்கள் முதல் விஷயமாக பலி ஆகி பறந்திருக்கும். சட்டை பொத்தான்களை அக்கா மீண்டும் வைத்துத் தைத்துவிடுவார். ஆனால் டிராயர்கள் முரட்டுத் துணிகளில் தைக்கப்படுவதாலோ என்னவோ பொத்தான்கள் மீண்டும் தைக்கப்பட்டிருக்காது ! ஆனாலும் அந்த டிராயர்களை அணியும் அண்ணன் டிராயரின் 'உத்தர'பிரதேசத்தில் உள்ள வாரை (அடிக்கடி) இழுத்துச் சொருகிக்கொண்டு வாழ்ந்து வந்தார். 

அவருடைய டிராயர்கள் என்னை வந்து அடைந்ததும், அந்த இழுத்துச் சொருகிக்கொள்ளும் யுக்தியை எனக்குக் கற்றுக்கொடுத்தார். 

நானும், ' அண்ணன் காட்டிய வழி அம்மா ! இது பொத்தானால் விளைந்த பழி அம்மா !' என்று பாடியபடி அந்த 'இ சொ' கலையைக் கற்று அவ்வாறு செய்து வந்தேன். ஆனாலும் என்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொள்ள இடது கை டிராயரின் சொருகிக்கொள்ளும் பிராந்தியத்தில் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கும். டிராயரின் சொருகப்பட்டுள்ள பகுதி கொஞ்சம் தளர்ந்தால் கூட, ' உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைய' இடது கை விரைந்து செயல்படும். 

ஆண்டு விழா ரைம்ஸ் நிகழ்ச்சிக்கு பயிற்சி + ஒத்திகை நேரங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பையன்கள் ஒவ்வொரு நாளும் விளையாட்டு பீரியட் வரும்போது செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். 

அங்கேதான் வந்தது என்னுடைய அரை டிராயர் அட்ஜஸ்ட்மெண்ட் பழக்கத்திற்கு சோதனை! 

அது என்ன? 

அடுத்த வாரம் பார்ப்போம். 

(தொடரும்) 

= = = = = =

அப்பாதுரை பக்கம் : 

அம்மா

(A.I. Artificial Intelligence, a film by Steven Spielberg. சென்ற வெள்ளிக்கிழமை ப்ரைமில் பார்த்த படம்).

வெப்பமயம் தொட்டு உயர்ந்த கடல் பரப்புக் காரணமாக உலகக் கடலோர நகரங்கள் அத்தனையும் மூழ்கி உள்நிலப்பரப்பில் மனிதர்கள் வாழ வேண்டிய எதிர்காலத்தில் நடக்கிறது கதை.  விஞ்ஞான வளர்ச்சிக்கு குறைவில்லாமல் எங்கே பார்த்தாலும் மருத்துவ முன்னேற்றம், மனித உரு ரோபோக்கள் (ஆனால் வெப்பமய விளைவை மட்டும் தடுக்க முடியாத விஞ்ஞான வளர்ச்சியாம்.. இன்னாங்டா டேய்). 

ஹென்றி-மானிகா இருவரின் செல்லப்பிள்ளை மார்டின் கோமாவில் சிக்கி, பேசி முடித்த வார்த்தை போல் கிடக்கிறான். மகனின் நிலை கண்டு மானிகா துடித்துப் போய் வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட நிலையில் தினம் உடலால் அழுது உணர்வால் அழுகிக் கொண்டிருக்கிறாள். 

ஹென்றி வேலை பார்க்கும் ரோபோ கம்பெனி மனித உணர்வுமிக்க ரோபோ ஒன்றைத் தயாரிக்கிறது. அபரிமிதமான அன்பு உணர்வு கொண்ட மனித உரு ரோபோவின் பெயர் டேவிட். (மனிதம் என்பதன் அடையாளம் அபரிமிதமான அன்பு என்ற சித்தாந்தம் சிறப்பு என்றாலும் வலிக்கிறது. போன வாரம்  டிராபிக்கில் நின்ற என் கார் கதவைத் தட்டிப் பிச்சை கேட்ட கிழவிக்கு ஒரு டாலர் கூட தராமல் அவசரமாக பச்சை விளக்கு விழ வேண்டினேனே?). 

ஹென்றி-மானிகா நிலை காரணமாக அவர்களுக்கு டேவிடை வழங்குகிறது கம்பெனி.  இது பெற்றோர்-பிள்ளை உணர்வுகளை, உறவினை ஒட்டிய ரோபோ என்பதால் டேவிடை ஏதாவது காரணத்தால் பிடிக்காமல் போனால் டேவிடை அழிப்பதற்காக கம்பெனிக்கு திருப்பி அனுப்பிட வேண்டும் என்ற நிபந்தனையுடன். 

மார்டின் போலவே உயரம், பருமன், நிறம், சிகை, நகை என்று கொள்ளை அழகு கொண்ட அசல் சிறு பிள்ளை போல் தோற்றமளிக்கும் டேவிடுடன் வீட்டுக்கு வருகிறார்கள் ஹென்றி-மானிகா. டேவிட் ஒரு ரோபோ என்பதாலும், தன் குஞ்சு சித்தாந்தத்தில் ஊறிய தாயானதாலும், இன்னும் உயிரோடு இருக்கும் பொன் குஞ்சின் நினைவு வலியாலும் மானிகா டேவிடை உடனடியாக ஏற்கவில்லை. அன்பு ஒன்றையே வெளிப்படுத்தத் தெரிந்த ரோபோ என்பதால் குழந்தை போல் நடந்து, நாட்பட மானிகாவின் மனதை ஆக்கிரமிக்கிறான் டேவிட். திடீரென ஒரு நாள் மானிகா தன்னை ஏற்றுக் கொண்ட நிறைவிலும் உற்சாகத்திலும் அம்மா என்று கூவுகிறான். டேவிட் ஒரு ரோபோ என்பதை மறந்து இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேன் என்று கண்ணீர் மல்கிக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து உள்ளம் குளிர்கிறாள் மானிகா.  (தாய்-சேய் விளையாட்டு மற்றும் உறவு வளர்ப்பு காட்சிகள் அபாரம்).

இந்த இடத்தில், சிரிப்புத் திருடன் சிங்காரவேலு ஜோக் படித்தாற்போல் சிரிக்கிறது விதி.

ஹென்றி-மானிகாவின் அசல் பிள்ளை மார்டின் கோமாவிலிருது பிழைத்து வீடு திரும்புகிறான். முதலில் பொம்மை என்று நினைத்து டேவிடை ஏற்றாலும் தனக்குப் போட்டியாய் வந்தவன் என்ற பொறாமையில் டேவிடை வெறுக்கிறான் மார்டின். நிறைய தில்லுமுல்லு பொய் ஐந்தாம்படை வஞ்சகங்கள் படிப்படியாகச் செய்து டேவிட் தன் குடும்பத்தைக் கொல்ல முயற்சி செய்வது போல சித்தரித்துவிடுகிறான் மார்டின்.  டேவிடைத் திருப்பிவிடத்  தீர்மானிக்கிறார்கள் ஹென்றி-மானிகா.

டேவிடை அழைத்துக் கொண்டு ரோபோ கம்பெனிக்குச் செல்கிறாள் மானிகா. டேவிடை அழித்துவிடுவார்கள் என்பது சட்டென நினைவுக்கு வர (அசல் தாய் அல்லவா), கம்பெனிக்குத் திருப்பாமல் வீட்டுக்கும் திருப்ப முடியாமல் மனம் நொந்த மானிகா டேவிடை ஊருக்கு வெளியே காட்டிற்கு பிக்னிக் போவதாகச் சாக்கு சொல்லி அழைத்துச் சென்று அங்கேயே விட்டு வந்து விடுகிறாள் (இவள் ஒரு தாயா?).

ரோபோ என்றாலும் டேவிட் பத்து வயது சிறுவனின் பிம்பம் தானே?  கலங்குகிறான். பயப்படுகிறான். மெள்ள அம்மா தன்னை வெறுக்கிறாள் என்பது புரிகிறது. ஏன் வெறுக்கிறாள் என்பது புரியாமல் வீட்டுக்குப் போக மனமில்லாமல் காட்டில் அலைகிறான்.  சட்டையில் ஏதோ ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அது மானிகாவின் முடிச்சுருள் என்பதறிந்து பத்திரப்படுத்திக் கொள்கிறான். அவ்வப்போது அதைத் தொட்டு முத்தம் கொடுத்து அம்மா அம்மா என்று வேதனையுடன் அலைகிறான். 

நீருக்குள் மூழ்கிய ந்யூயார்க் நகரச் சிதிலங்களில் வாழும் ஒரு நீலத்தேவதை ரோபோக்களை அசல் மனிதராக்குவதாகக் கேள்விப்பட்டு அங்கே செல்கிறான்.  திடீரென வந்த பனி வெள்ளத்தில் உறைந்து போகிறான்.  (ஸ்டீல்பர்கு.. இதெல்லாம் ஒரு விஞ்ஞானக் கதையா? இன்னாபா இது?)

மேலும் இரண்டாயிரம் வருடங்கள் கழிகின்றன. அப்போதைய உலகில் மனிதர்கள் இல்லை. மனித உணர்வு ரோபோக்களே வாழ்கின்றன.  ஆனால் அவற்றிடம் ஒரு அமோக வித்தை இருக்கிறது. அதை அடுத்த பாராவில் சொல்கிறேன். ஏதோ ஆய்வுக்காக வந்த ரோபோக்கள் டேவிடைக் கண்டுபிடிக்கின்றன. டேவிட் தங்களின் மூதாதை ரோபோ என்று தெரிந்து சரியான பராமரிப்புக்குக் கொண்டு வந்து பூர்வீகம் கேட்கின்றன. டேவிடும் அசல் மனிதர்களுடன் வாழ்ந்த தன் கதையைச் சொல்லி மானிகா மேல் இருக்கும் அன்பு குறையாமல் அழுகிறான். 

டேவிடை சமாதானம் செய்த ஒரு ரோபோ "எங்கள் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. எங்களால் மனிதர்களை உருவாக்க முடியும். உன்னிடம் மானிகாவின் டிஎன்ஏ ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்கிறது. (அச்சக்கு பச்சக்கு)

தான் பத்திரப்படுத்திய மானிகாவின் முடியைக் கொடுக்கிறான் டேவிட். உடனே நகாசு வேலை செய்த மனித ரோபோக்கள் மானிகாவை உயிரோடு எழுப்புகின்றன.  ஒரே ஒரு நாள் மட்டுமே வாழ முடியும் என்ற எச்சரிக்கையுடன் டேவிடை மானிகாவிடம் விட்டுப் போகின்றன. (டேய்.. விஞ்ஞானத்துக்கும் விட்டலாச்சார்யாவுக்கும் வித்தியாசம் உண்டுரா)

நாள் முழுதும் மானிகாவுடன் கழிக்கிறான் டேவிட். நாள் முடிவில் "மகனே.. மகனே" என்று கர்ணணை மோந்த குந்தி போல அரற்றிக் கரைகிறாள் மானிகா. நிறைவுடன் "உறங்க"ப் போகிறான் டேவிட். சுபம்.

வால்:

குப்ரிக்குடன் இணைந்து தயாரித்தாலும் மருந்துக்குக் கூட விஞ்ஞான அறிவோ தொலைநோக்கோ வெளிப்படுத்தாத திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள். விஞ்ஞானப் படமென்று மனித-ரோபோ வாழ்வியல் சிக்கல் ஒன்றை (தாய்ப்பாசம்) அழகாகச் சொன்னாரா என்றால்  இல்லை. விட்டலாசாரியா படமென்றால் ஜெயமாலினி ஆட்டமாவது இருக்கும். ஹ்ம்.

= = = = = = =

64 கருத்துகள்:

  1. பிரைமில் ஒரு சிரமம்.  படத்தின் தரம், அதைவிட ஒலியின் தரம் மிக மோசமாக இருக்கும்.  அது சரி, அமெரிக்காவிலும் சிக்னலில் பிச்சை எடுக்கிறார்களோ என்ன?  பிச்சை எடுத்த பாட்டி கவுன்  மற்றும் கண்ணாடி அணிந்திருப்பாரா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீன்ஸ் டி சட்டை போட்டிருப்பார். ஒரு கையில் கஞ்சா சிகரெட் வைத்திருப்பார். இன்னொரு கையில் பத்து டாலர் பிச்சை போடு குடும்பம் நடுத்தெருவில் என்று எழுதிய அட்டை வைத்திருப்பார். கண்ணாடி உண்டா இல்லையா என்று அடுத்த முறை கவனிக்கணும்.

      நீக்கு
  2. நாடா மாட்டிய டிராயர்களை நானும் அணிந்திருக்கிறேன்.  அவ்வகை நாடாக்கள் இருவகைப்படும்.  ஒன்று வலப்புறமும், இடப்புறமும் நேராய் இடுப்பு டிராயருக்கு இறங்கும் வகை.  இன்னொன்று வலது இடதையும் இடது வலதையும் இணைக்கும் வகை.  இரண்டாவது வகையில் முதுகில் ஒரு எக்ஸ் இருக்கும்!

    பதிலளிநீக்கு
  3. அதே பிரைமில் நேற்று மெமரிஸ் என்று ஒரு படம் பார்த்து கிறுகிறுத்து போனேன்.

    பதிலளிநீக்கு
  4. இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு என்று நினைக்கிறேன். ஏதோ பள்ளி விழாவுக்கு என் அப்பாவின் சட்டையை ஒரு தடவை அணிந்து கொண்டு போனேன். அப்பா வேடம். முதல் வகுப்பு முடிந்ததும் நேரே ஒத்திகை, மதியம் விழா என்பதால் வேறே சட்டை போடாமல் அனுப்பிவிட்டார் அம்மா. வகுப்புக்கு வந்த ரோஸ் மேடம் நேரே என்னிடம் வந்து சட்டையை மட்டும் லேசாக உயர்த்தி "ம்ம்ம் டிராயர் போட்டிருக்கே இல்லே?" என்றார்.

    பதிலளிநீக்கு
  5. திரைப்படப் புதிர் மிக சிரமமாக இருக்கிறதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயிட் பண்ணுங்க. கில்லர்ஜி & நெல்லைத்தமிழன் வரட்டும்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. கில்லர்ஜி! இந்த திறமை உங்க கிட்டே ஒளிஞ்சிருக்குறது தெரியாம போச்சே! பட்டு பட்டுனு படப்பெயரை புட்டு புட்டு வைக்கிறிங்களே! சபாஷ்!

      நீக்கு
    2. ஆம்! அதே ! கில்லர் அடிக்கிறார் சிக்ஸர்!

      நீக்கு
  7. புதன் கிழமை புதிர் தினமாகி விட்டது. கேள்விக்ள் கேட்பார் இல்லை. சினிமா புதிர் தான். kgg மற்றும் அப்பாதுரை டைரி குறிப்புகள் கொஞ்சம் வெயிட்டு மற்றும் மணம் சேர்க்கின்றன..

    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப பிசி. மதியத்துக்கு மேல்தான் வருவேன்.

    கில்லர்ஜி கேள்வியும் நானே பதிலும் நீனே என்பதுபோல் பட் பட் என்று பதில் சொல்றார். அவருக்கு நிறைய அப்சர்விங் திறமை உண்டு (அதனால்தான் ஶ்ரீராமை ஐம்பது கடைகளுக்காவது ஓனராக நினைத்து மூன்று பதிவுகள் போட்டுவிட்டார் ஹா ஹா)

    பதிலளிநீக்கு

  10. பகிர்வு ரசனை.

    சினிமாக் கேள்விகள் நமக்கு பதில் தெரியாது. கிலர்ஜி பதில் கூறிவிட்டார்.

    பதிலளிநீக்கு
  11. //பேசி முடித்த வார்த்தை போல் // - நல்ல பிரயோகம்.
    //கதவைத் தட்டிப் பிச்சை கேட்ட கிழவிக்கு ஒரு டாலர் கூட தராமல் அவசரமாக பச்சை விளக்கு விழ// - இங்கேயும் மூன்றாம் பாலினத்தவர் இப்படிக் கேட்கும்போது தவிர்ப்பது (எல்லாம் சோம்பல், 10 ரூபாய் நோட்டை எடுக்க) வழக்கமாகிவிட்டது, ஆனால் எடுத்த பிறகு ஆள் எங்கே என்று திரும்பிப்பார்த்தால் காணாமல் போயிருப்பார்கள்.However, குழந்தை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு பைசா கூட ஈய மனம் வராது.

    //அன்பு ஒன்றையே வெளிப்படுத்தத் தெரிந்த ரோபோ// - இதனால்தான் எல்லோரும் நாயை வளர்க்கிறார்களோ?

    இப்போ அந்தப் படத்தைப் பார்க்கச் சொல்கிறாரா இல்லை நேரத்தை வீணாக்காதீர்கள் என்று சொல்கிறாரா?

    பதிலளிநீக்கு
  12. அப்பாதுரை அவர்களது கதையினைப் படித்த பிறகு தான் இப்படியான விஷயங்களும் தெரிய வருகின்றன..

    பதிலளிநீக்கு
  13. // விஞ்ஞானப் படமென்று மனித - ரோபோ வாழ்வியல் சிக்கல் ஒன்றை (தாய்ப்பாசம்) அழகாகச் சொன்னாரா என்றால்  இல்லை.. விட்டலாசாரியா படமென்றால் ஜெயமாலினி ஆட்டமாவது இருக்கும்.. //

    ஹூம்..

    நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்!...

    பதிலளிநீக்கு
  14. திரைப் புதிர்களும் இ சொ - சம்பவங்களும் ரசனை..

    பதிலளிநீக்கு
  15. பதில்கள்
    1. அவன் அமரன் இதுவரை கேள்விப்பட்டதில்லை. தேடிப் பார்க்கிறேன்! மற்றது சரி.

      நீக்கு
    2. அவன் இவன் என்று சினிமா இருக்கிறது அமரன் என்றும் சினிமா இருக்கிறது.

      நீக்கு
    3. அவன் அமரன் 1958, எஸ். பாலசந்தர் இயக்கிய திரைப்படம்

      நீக்கு
  16. Steven Spielberg ! இவரியக்கிய Close Encounters of the Third Kind ஐ 80-களில் பார்த்து ஆச்சரியப்பட்டேன். UFO-க்களில் நான் மிகவும் ஆர்வம் காட்டிய சமயமது.

    ஆளுக்கு வயசாகியிருக்கும். ஆட்டத்தை நிறுத்தி எங்காவது சாய்ந்து கிடப்பார் என நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  17. கேஜிஜியின் பள்ளி நினைவுகள் அருமை. ஆறாம் வகுப்பில் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் என்னைத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். மலேரியா ஒழிப்பு வாரத்தில் கொசு ராஜாவாகவும் நடிச்சேன். வீட்டில் அப்பாதான் நாடகத்தில் நடிச்சுக் கெட்டுப் போறானு திட்டிட்டு இருப்பார். நான் வழக்கம்போல் இ.கா.வா.அ.கா.வி.

    பதிலளிநீக்கு
  18. நிறையப் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசெல்லாம் கிடைச்சிருக்கு. ஆனால் அக்கம்பக்கம் வீடுகளில் வாயாடி என்னும் பெயரும் கூடவே கிடைச்சது தான் நான் மிக வருந்திய ஒரு விஷயம். பள்ளியில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டால் வாயாடினு அர்த்தமானு கேட்டுட்டு இன்னும் வாங்கிக் கட்டிப்பேன். :))))

    பதிலளிநீக்கு
  19. அப்பாதுரையின் பட விமரிசனம் அருமை. என்றாலும் முடிவு சொதப்பலோ? ஒரு நாள் வாழ்ந்ததில் என்ன கிடைக்கும்? நிஜ மனிதராக இருந்தாலும் சரி. திரைப்படப் புதிர்களுக்கும் எனக்கும் வெகு தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉரம்.

    பதிலளிநீக்கு
  20. 1. ம்ம்ம்ம் என்ன பதில் சொல்லப் போறீங்கனு தெரியலை, இந்தப் பஞ்சாங்கங்கள் வாக்யம்/திருக்கணிதம் என இருவகைகளில் இருப்பது ஏன்?

    2. எதை நாம் மூலப் பஞ்சாங்கமாக வைச்சுக்கணும்? ஏனெனில் இந்த வருஷம் இரண்டு சாமவேத ஆவணி அவிட்டம், இரண்டு பிள்ளையார் சதுர்த்தி! நாங்க வாக்யப் பஞ்சாங்கம் என்பதால் அதைப் பின்பற்றினோம். ஆனால் திருக்கணிதம் தான் சரி என்கிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

    3. கிரகங்கள் மாறுவது கூட இரண்டிலும் வேறுபடுவது ஏன்? எது சரியாந்து?

    பதிலளிநீக்கு
  21. எங்க பேத்தி அப்புவுக்கு வாக்யப் பஞ்சாங்கப்படி சுவாதி நக்ஷத்திரம்/துலா ராசி. திருக்கணிதப்படி எங்க பெண் ஆன்லைனில் பார்த்தப்போ விசாக நக்ஷத்திரம் துலா ராசி என வந்திருக்கு. இதனால் ஜாதக பலன்களில்/குண நலன்களில் மாற்றம் ஏற்படுமா?

    பதிலளிநீக்கு
  22. கேள்விகளும், பதில்களும் அருமை.

    KGG சார் பள்ளி அனுபவங்கள் நன்றாக இருக்கிறது.
    அப்பாதுரை சார் பகிர்ந்த அம்மா கதை மனசை தொட்டது.

    //ஒரு நாள் மானிகா தன்னை ஏற்றுக் கொண்ட நிறைவிலும் உற்சாகத்திலும் அம்மா என்று கூவுகிறான். டேவிட் ஒரு ரோபோ என்பதை மறந்து இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேன் என்று கண்ணீர் மல்கிக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து உள்ளம் குளிர்கிறாள் மானிகா. (தாய்-சேய் விளையாட்டு மற்றும் உறவு வளர்ப்பு காட்சிகள் அபாரம்).//

    அருமையான காட்சி.

    பதிலளிநீக்கு
  23. புதிர்கள் எப்படிக் கண்டுபிடிக்கிறாங்கன்னு யோசிக்கிறேன். கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளின் பொருளை வைத்தா அல்லது அதில் உள்ள எழுத்துகளை வைத்தா?

    கௌ அண்ணாவின் பள்ளி அனுபவங்கள் சூப்பர். அதிலும் இந்த வார் டிராயர் பையன்களை - அதான் அப்பப்ப அதை சரி செய்து கொண்டு - நிறைய பார்த்ததுண்டு நம்ம வீட்டிலும் தான். அது அப்ப ரொம்ப பிராபல்யம். பெரியவர்கள் கூட அப்படி வார் போட்ட கால்சராய் அணிந்து பார்த்ததுண்டு.

    இப்ப அப்படியானவை முதியவர்களுக்கும் அல்ஜிமரால் பாதிக்கப்பட்டவங்களுக்கும் அணிவித்து விடுவதைப் பார்க்கிறேன்.

    அப்பாதுரை ஜி - பட விமர்சனம் நல்லாருக்கு. அன்பொழுகும் ரோபோக்களே தேவலாமோ!!! ஹிஹிஹிஹி மனுஷன் எப்படி இருந்தா உலகம் நல்லாருக்கும்னு ஒரு கற்பனையில் இப்படிப் படைச்சிருக்காங்கன்னும் தோன்றியது.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரைப்பட பெயர் புதிர்:
      கொடுக்கப்பட்டுள்ள க்ளூவில் உள்ள முதல் எழுத்து படத்தின் பெயர் முதல் எழுத்து ; க்ளுவின் கடைசி எழுத்து படத்தின் பெயர் கடைசி எழுத்து.
      க்ளுவின் மொத்த வார்த்தைகள், படத்தின் பெயரில் உள்ள வார்த்தைகள். இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த முதல் பகுதியில் இதை சொல்லியுள்ளோம்.

      நீக்கு
    2. எழுத்துகள் கணக்கில் கிடையாது.

      நீக்கு
  24. 5) ஆத்தா நான் பாசாயிட்டேன் (1990) (Arjun)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!