செவ்வாய், 5 செப்டம்பர், 2023

நெடுங்கதை : ரயிலோடும் வீதி 1/5 - மூலத்திருநாள் பரசுராம்

ரயிலோடும் வீதி -1

-மூலத்திருநாள் பரசுராம்-

அந்தச் செய்தியைப் படித்ததிலிருந்து யமுனாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உடனே பத்துப் பேரிடமாவது சொல்லித் தனது மகிழ்ச்சியைப் பங்கிட்டுக்கொள்ளவேண்டும் என்று பரபரத்தாள். ஆனால் அன்று பார்த்து அக்கம்பக்கத்திலிருந்த பெண்கள் எல்லாரும்-முக்கியமாக அவளுடைய அண்டைவீட்டுக்காரிகளான கவிதாவும் கிருஷ்ணவேணியும் - அதிகாலையிலேயே வேர்க்கடலை மூட்டைகளை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்றுவிட்டிருந்தார்கள்.

இராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமைதோறும் கூடும் சந்தை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. வேலூர் மாவட்டம் முழுவதும் பிரபலமானது. சிறப்பானஆடு, மாடுகள் வாங்கவும் விற்கவும் வெகுதூரத்திலிருந்தும் அங்கு வியாபாரிகளும் விவசாயிகளும் வருவார்கள். மற்றப்படி, அரிசிமுதல் எல்லா தானியங்களும், உப்பு-புளி-மிளகாய் மற்றும் காய்கறிகளும் பழங்களும் கரும்பு மஞ்சள் போன்றவையும் அங்கு சூடாக விற்பனையாகும்.  குழந்தைகளுக்கான வண்ண வண்ண பலூன்களும், குச்சி ஐசும், பொம்மைகளும் தவறாமல் கிடைக்கும். ஆயிரம் பேராவது கூடும் இடம்.  ஐந்தாயிரம் பேராவது வரவுசெலவு செய்யும் இடம்.

கிருஷ்ணவேணியும் கவிதாவும் யமுனாவின் நெருங்கிய தோழிகள்.  
சமவயதுக்காரிகள். நல்ல பேச்சாளிகள். கிடைத்த வியாபாரத்தை எப்படியும் பதியவைத்துக் காசாக்கி விடுவார்கள். அந்தந்தப் பருவங்களில் விளையும் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கி, சந்தைக்கு வரும் சாதாரண மக்களுக்குக் குறைந்த லாபத்தில், கனிந்த முகத்துடன் விற்பனை செய்வார்கள். அதனால் அவர்களுக்கென்றே வாடிக்கையாளர்கள் காத்திருப்பதுண்டு.

சந்தையிலிருந்து மாலையில் வரும்போது அவர்களின் சுருக்குப்பைகளில் 
நோட்டும் பணமும் கனமாக இருக்கும். யமுனாவுக்காக சேட் கடையிலிருந்து பொட்டலம் வாங்காமல் வரமாட்டாள் கிருஷ்ணவேணி. உலர்ந்த தாமரை இலையைக் கூம்பு போல மடித்து உள்ளே வெங்காயப் பக்கோடா, காராசேவை, ஓமப்பொடி போன்ற ஏதேனும் ஒன்றை வைத்து, சணலினால் சுற்றினால் அதுதான் ‘பொட்டலம்’. தன் பங்குக்குக் காலையில் கொண்டுபோன காலி ஹார்லிக்ஸ் பாட்டிலில் பாதாம்கீர் வாங்கிவருவாள் கவிதா. எனவே அவர்கள் எப்போது வருவார்கள் என்று வாசலிலேயே காத்திருப்பாள் யமுனா. வெறும்கையோடு அல்ல, பயத்தம்பருப்புப் பாயசம் அவர்களுக்காக ரெடியாக இருக்கும். யமுனாவின் பாயசம் அவர்கள் தெருவில் மிகவும் பிரசித்தம்.

இன்றோ பாயசம் வைக்கவே தோன்றவில்லை யமுனாவுக்கு. அதை விட 
இனிப்பான செய்தி அல்லவா அவளிடம் இருப்பது! அதைக் கேட்டால் 
அவர்கள் இருவரும் திக்குமுக்காடிவிட மாட்டார்களா?

வாசல் திண்ணையில் பிறையில் யமுனா அகல்விளக்கை ஏற்றிவைக்கவும் கவிதா வரவும் சரியாக இருந்தது.

தன் வீட்டிற்குள் நுழைந்து, சந்தையிலிருந்து தன்னோடு திரும்பிவந்த, காலி மூங்கில் கூடைகளையும் கோணிப்பைகளையும், சும்மாடுகளையும் தூசிதட்டி உரிய இடத்தில் வைத்துவிட்டு, “அம்மா, யமுனாவப் பாக்கப் போறேன்” என்று ஓங்கிக் குரல்கொடுத்துவிட்டு வெளியே வந்தாள் கவிதா. தான் சொன்னது அம்மாவுக்குக் கேட்டதா என்ற கவலை அவளுக்கு இல்லை.  ஏனென்றால் கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்று அம்மாவுக்குத் தெரியும்.  சந்தையிலிருந்து வந்ததும் வராததுமாய் அந்தத் தெருவில் கவிதா ஓடிப்போய்ப் பேசும் அளவுக்குத் தோழிகள் என்றால் யமுனாவும் 
கிருஷ்ணவேணியும் தானே இருக்கிறார்கள்!

“யமுனா, இந்தாடி” என்று பாதாம்கீர் பாட்டிலைக் கொடுத்தாள் கவிதா.  
வழக்கத்தைவிடவும் இன்று நல்ல வியாபாரம் ஆகியிருக்கவேண்டும்.  அந்த மகிழ்ச்சி முகத்திற்குக் களையூட்டியிருந்தது.

“இருடி,” என்று அவளைக் கூடத்து நாற்காலியில் உட்காரவைத்த யமுனா 
இரண்டு தம்ளர்களில் கவிதா வாங்கிவந்த பாதாம்கீரை ஊற்றினாள்.  
“ஒனக்கு வெசயம் தெரியுமா? ரொம்ப சந்தோசமான வெசயம். கேட்டதுல 
இருந்து எனக்கு பூமியிலேயே நிக்க முடியல” என்றாள்.

“அது சரி, கிருஷ்ணவேணி இன்னும் வரல்லியே, எங்கடி போனா? ரெண்டு 
பேரும் ஒண்ணாத்தானே வருவீங்க? ஒருவேள வேன்ல கும்பலோட கும்பலா வர்றாளா?” என்று நிறுத்தினாள்.

சந்தையில் வருடாந்திர டோக்கன் வாங்கியிருந்தாள் கவிதா. அதனால் 
அவளுக்குக் கடை அமைத்துக்கொள்ள நிரந்தரமான இடம் ஒதுக்கியிருந்தார்கள்.  இடம் என்றால் சிமெண்ட் தளம் அல்ல, சந்தையில் நிறையப் புங்க மரங்கள் உண்டு. புங்க நிழல் குளிர்ச்சியாக இருக்கும். அதில் ஒரு புங்க மரத்தடியில் நான்கு கோணிப்பைகளை விரித்தால் உண்டாகும் சதுரத்தின் அளவுதான் ஒரு கடை என்பது. கவிதாவின் அதிர்ஷ்டம் அவளுக்குப் பக்கத்திலேயே மாட்டுவண்டியில் வாழைத்தார்களை ஏலம் போடும் வாலாஜாப்பேட்டை நாயக்கரின் இடம் இருந்தது. அந்த வாடிக்கையாளர்கள் கவிதாவுக்கு போனஸ் மாதிரி ஆனது.

ஆனால் கிருஷ்ணவேணியோ காலாண்டு டோக்கன் தான் வாங்கினாள்.  
மழைக்காலத்தில் சந்தையில் வியாபாரம் இருக்காது என்பதால் 
தேவையில்லாமல் டோக்கன் வாங்கிப் பணத்தை வீணடிக்க அவள் 
விரும்பவில்லை. தன் மகனின் எதிர்காலக் கல்விக்குப் பணம் 
சேர்க்கவேண்டுமல்லவா? அதன் காரணமாகச் சில சமயம் அவளது கடை 
கவிதாவின் கடைக்கு அருகிலும், பல சமயம் வெகுதூரம் தள்ளியும் 
அமைந்துவிடுவதுண்டு. இன்றும் அப்படித் தான். ஆகவே கிருஷ்ணவேணி 
சந்தையிலிருந்து கிளம்பாதது கவிதாவுக்குத் தெரியாமல் போய்விட்டது.

ஆனால் யமுனாவுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், அவள் முகத்தில் 
தெரிந்த பூரிப்பைக் கண்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தியவளாக 
நோக்கினாள் கவிதா. பாதாம்கீரைக் குடித்தபடியே கேட்டாள்: “ஏண்டி 
யமுனா இப்படி மழைய பார்த்த தேரை மாதிரி குதிக்கிறே? என்னவோ 
இப்பவே ரயில்ல ஏறிக்கிட்டு மெட்ராஸ் போயி ஒங்க அத்தானைப் 
பாத்துடறாப்பல?”

தன் தம்ளரைக் கீழே வைத்துவிட்டு அவளைக் கட்டிக்கொண்டாள் யமுனா.  “இனிமே நாம்ப ரயில்ல போக வேண்டாண்டி. ரயிலே நம்ம வீட்டுக்கு வரும், தெரியுமா?” என்றாள் பிடியைவிடாமல். “அது மட்டுமில்ல, எங்க அத்தானே ரயில்ல ஏறி நம்ப வீட்டுக்கே நேரா வந்து ஏறங்கும் பாரேன்!”

கவிதாவுக்குப் புரியவில்லை. ரயில் எப்படி அவர்கள் வீட்டிற்கு வரும்?  
அதென்ன மாட்டுவண்டியா, குதிரைவண்டியா, காரா?  

“ஆமாண்டி, நான் சொல்றது நெசம்தான். ரயிலே நம்பளைத் தேடிக்கிட்டு 
வரப்போகுது. நம்ப தெருவுக்கே வரப்போகுது” என்ற யமுனா 
குதூகலத்துடன் உள்ளே ஓடிப்போனாள். தன்னுடைய டூப்ளிகேட் 
நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு சிறிய தகர டப்பாவைக் 
கொண்டுவந்தாள். ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள். முரளியின் கடிதம்!

முரளி யமுனாவுக்கு தூரத்துச் சொந்தம். அவளை விட இரண்டுவயதே 
பெரியவன். பி. எஸ்சி. படித்து டில்லியில் அரசாங்க உத்தியோகத்தில் 
இருந்தான்.

“அடுத்த மாதம் நான் இராணிப்பேட்டைக்கு வரப்போகிறேன். அங்கு 
விரைவில் ரயில் விடப்போகிறார்கள். அதற்காக நிலங்களைப் 
பெறவேண்டும். அந்த அதிகாரியாக என்னை நியமித்திருக்கிறார்கள்.  
அனேகமாக நீங்கள் குடியிருக்கும் பிஞ்சி கிராமத்தின் வழியாகத்தான் 
ரயில்பாதை அமையப் போகிறது...” என்றது கடிதம்.

“நெஜமாவா யமுனா? அப்படின்னா கொஞ்ச நாள்ல நாமெல்லாம் பஸ்ல 
போறதையே மறந்துடலாம்னு சொல்லு. நெனச்சப்ப ரயில்ல போகலாம்.  
முக்கியமா காட்பாடிக்கு இனிமே முண்டியடிச்சிக்கிட்டு பஸ்ல 
ஏறவேண்டாம். கால நீட்டிக்கிட்டு ரயில்ல போயிடலாம், இல்லையா?” 
என்று குதித்தாள் கவிதா. காட்பாடியில் அவளுடைய தாத்தா இருந்தார்.  
அவளுடைய முறை மாமனும் அங்குதான் இருப்பதை அவள் யமுனாவிடம் 
கூடச் சொன்னதில்லை.

இருவரும் உற்சாகமாக ரயிலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் 
கிருஷ்ணவேணி வந்துசேர்ந்தாள். “இன்னிக்கு ரொம்ப பேஜாராப் போச்சுடி, யமுனா. கடைசில மீந்து போன ஒரு பத்துப்படி கடலைக்காய் விக்கறதுக்கு ரெண்டுமணி நேரம் ஆயிடுச்சி. விக்காம வீட்டுக்குக் கொண்டுபோறதுக்கும் மனசு வரல. அதுக்குள்ள நீ கெளம்பி வந்துட்டா போல” என்றவள், சேட் கடை பொட்டலத்தை நீட்டினாள். “சீக்கிரமா பாயசம் குடுடி, தாகமா இருக்கு” என்றாள்.

யமுனா சிரித்தாள். “பாயசம் எதுக்குடி ? இந்தா பக்கோடா சாப்பிடு, 
பாதாம்கீர் சாப்பிடு. ஏன்னா கவிதா ஒன்கிட்ட ரொம்ப இனிப்பான வெசயம் சொல்லப்போறா..” என்றாள்.

முரளியின் கடிதத்தைக் காட்டினாள் கவிதா.

“அப்டியா? நெசமாவே நம்ப தெருவுக்கு ரயில் வரப் போகுதா?” என்று 
நம்பமுடியாமல் அதே சமயம் அடக்கமுடியாத ஆனந்தத்துடன் கேட்டாள் 
கிருஷ்ணவேணி.

அதற்குள் அவளுடைய மூன்று வயது மகன் பாபு ‘அம்மா’ என்று 
ஓடிவந்தான். அவனைத் தூக்கி முத்தமிட்டபடி, “பாபுக் கண்ணா! நாம்ப 
இனிமே ரயில்லதான் போகணும், தெரியுமா? நம்ப தெருவுலேயே ரயில் 
ஓடப்போகுது” என்றாள்.

“ரயில் எனக்குப் பிடிக்கும்” என்று அவளைக் கட்டிக்கொண்டான் குழந்தை.

“மீதியை ராத்திரி பேசலாம், வரட்டுமா?” என்று கிளம்பினாள் கவிதா.

கிருஷ்ணவேணியும் கிளம்பினாள், முரளி யமுனாவுக்கு எழுதிய கடிதத்தைக் கையில் பிடித்தபடியே.

(தொடரும்)

26 கருத்துகள்:

  1. மலையாளக் கதையா என்ன ஜெஸி ஸார்? கதாசிரியர் பெயர் பார்த்துக் கேட்கிறேன்.
    பிற மொழிக் கதை என்று தெரியாத அளவுக்கு மொழியாக்கம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மொத்தக் கதையையும் படித்து உள்வாங்கிக் கொண்டு உங்கள் மொழியில் எழுதியிருக்கிறீர்கள் என்பது என் அனுமானம்.
    Good. இன்னொரு மொழியில் சொல்லும் பொழுது அந்த மொழி வழக்குகளோடு இயைந்து போகிற மாதிரி இப்படி இருப்பது தான் பாந்தமாக இருக்கிறது.

    ஆரம்பமே அழகு. தொடர்ந்து வாசிக்க தொய்யாமல் இழுத்துக் கொண்டு போகிறது.

    பதிலளிநீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. கதாபாத்திரங்களின் பெயர்களை விட்டுத் தள்ளுங்கள். காட்பாடி, இராணிப்பேட்டை வெள்ளிக்கிழமை சந்தை, வாலாஜாபாத்... ஓ.. இது. வடாற்காடு மாவட்ட எழுத்தாளரின் கதையே தான்!

    இவரது எழுத்தை இத்தனை நாள் படித்ததில்லையே என்று யோசனை ஓடுகிறது.
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ரயில் விடுவதற்காக நிலங்களைப் பெற வேண்டும். அதற்கான அதிகாரியாக என்னை..'-- ஓ,.மொத்த கதையும் என்னவென்று புரிந்து போயிற்று..!!

      நீக்கு
  5. அட! பக்கத்து மாநிலத்து ராஜகுடும்பத்திலிருந்து/பெரிய குடும்பத்திலிருந்து எழுத்தாளர்!!! அவர்கள்தான் இப்படி மூலம் திருநாள், சித்திரைத் திருநாள் என்று நட்சத்திரம் பெயருக்கு முன்னில் வரும்...எழுத்தாளரின் நட்சத்திரம் மூலம் போலும்!!!!!

    இராணிப்பேட்டை, காட்பாடி பகுதி கதையில் வந்தாலே எனக்கு ஒருவர் டக்கென்று நினைவுக்கு வருவார்.

    மூலத்திருநாளின் கதை ஆரம்பம் அருமை! கதையில் வரும் பகுதிக்கு ரயில் வரும் முன் நடக்கும் கதை என்று ஆரம்பம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராணிப்பேட்டை, காட்பாடி பகுதி கதையில் வந்தாலே எனக்கு ஒருவர் டக்கென்று நினைவுக்கு வருவார். ஒருவர் அல்ல 4 பேர்...

      கீதா

      நீக்கு
    2. திரு.அன்பே சிவம்
      திரு.கோ
      திரு.பரதேசி

      நீக்கு
    3. தெரியும் பெயரை மறந்து விட்டேன் நெடுநேரம் யோசித்தும் ஞாபகம் வரவில்லை

      நீக்கு
    4. கதை இன்னும் படிக்கலை. காஃபிக்கடை முடிஞ்சு வரேன்.

      நீக்கு
    5. இன்னிக்கு இப்போத் தான் இந்தக் கதையைப் படிச்சேன். ம்ம்ம்ம்ம். எழுத்தாளர் தெரிந்த மாதிரி இருந்தாலும் தலைப்பின் பெயர் யோசிக்க வைக்குதே!

      நீக்கு
  6. ஆ! யமுனாவின் ஐத்தை மகன் முரளியின் கடிதம் கிருஷ்ணவேணியின் கையில். ஸோ கதையில் இது ஒரு பங்கு வகிக்கப் போகிறது அடுத்த பகுதியில் வரும் போல.

    யமுனா, முரளி நல்ல பெயர்ப்பொருத்தம்! யூகங்கள் வருகின்றன ஆனால் கதாசிரியர் மூலத்திருநாள் எப்படி எழுதப் போகிறார் என்று காத்திருக்க வேண்டும். அடுத்த செவ்வாய் வரை.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கதை எதை நோக்கி போகிறது என்று புரிகிறது....

    இதன் கஷ்ட நஷ்டங்கள் இழப்புகள் இனிமேல் அறிய வாய்ப்புண்டு.

    அதே நேரம் இந்த விசயத்தை தெரிந்து கொள்ள இவ்வளவு நீளமா ?
    ஒருவேளை ரயில் நீளம் என்பதாலா ?

    வர்ணனைகளை சற்று குறைத்து கதைக்காண விடயத்தை அதிகப்படுத்தி இருக்கலாம்

    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  8. புதிய பெயரா இருக்கிறதே என்று பெயரை நெட்டில் போட்டுப் பார்த்தால்...ஹூம் ஆராணுனு பிடி கிட்டியில்லா....

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஐயா

    இந்தக்கதைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. எழுதியவரை அறியேன்.

    கதையின் ஆரம்பம் சரியாக இருந்தாலும் நடை 50களின் நடையாகத் தோன்றுகிறது.

    மலையாளத்தில் மூலத்திருநாள் என்று சொல்லமாட்டார்கள். மூலம் திருநாள் என்றே சொல்வர். பரசுராம் என்று ராஜவம்சத்தில் பெயர் வைக்க மாட்டார்கள். ஆக எழுதியவர் ராஜ பரம்பரையில் வந்தவர் இல்லை.

    கதையில் ஓர் கடிதம் கிடைத்ததற்க்கே ஆர்ப்பாட்டம் என்றால் கதையின் முடிவை ஓரளவு ஊகிக்க முடிகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. கதை மிக மகிழ்ச்சியாக ஆரம்பித்து இருக்கிறது, ரயில் வருகை, மற்றும் யமுனா தன் அத்தானின் வருகையை நினைத்து மகிழ்கிறார்கள்.

    //பிஞ்சி கிராமத்தின் வழியாகத்தான்
    ரயில்பாதை அமையப் போகிறது...” என்றது கடிதம்.//

    கிராம மக்களுக்கு சாதகமா. பாதகமா என்று அடுத்தவாரம் தெரியும்.

    பதிலளிநீக்கு
  12. தொடக்கம் - நல்ல ரசனை..

    அடுத்த வாரங்களில் பார்க்கலாம்!..

    பதிலளிநீக்கு
  13. பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதல்லவா உலக வழக்கு! இந்தக் கதையை எழுதியதாகச் சந்தேகப்படும் பட்டியலில் என் பெயரும் வருகிறதே! அது சரியா, ஸ்ரீராம்? நான் இராணிப்பேட்டையில் பிறந்தது குற்றமா?

    மேலும், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்ததான ஒரு முடிவை இப்போதே சொல்லிவிடுகிறார்களே, உங்கள் கதாசிரியர் முடியைப் பிய்த்துக் கொள்ளாமல் இருந்தால் சரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்களின் கற்பனைதான் சுவாரஸ்யம் செல்லப்பா ஸார்...  நீங்கள் எபியின் சைலன்ட் வாசகர் என்று தெரியும்.  பாருங்கள்..   இன்றைய ஒரு பின்னூட்டம் உங்களையும் இங்கு பின்னூட்டமிட்ட வைத்து விட்டது!

      பழி, பாவம், சந்தேகம் என்கிற வார்த்தைகளை எல்லாம் பார்த்தால் கதை உங்களுக்கு அவ்வளவாக பிடித்தமில்லை போலிருக்கிறதே...

      நீக்கு
  14. எ.பி.க்கு புது வரவா? வெல்கம் வெல்கம் சார்/மேடம். அனுபவம் மிளிரும் எழுத்து.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!