சனி, 30 செப்டம்பர், 2023

கூகுளில் தற்கொலைக்கு வழி தேடிய நபர் மற்றும் 'நான் படிச்ச கதை'

 


================================================================================================

பகிரமறந்த பழைய பாசிட்டிவ்!


==================================================================================================



==============================================================================================


===================================================================================================================================================================================

 JKC பக்கம்

 

முன்னுரை

இன்றைய பதிவின் மூலம் தெரிய வைப்பது  மூன்று.

சனிக்கிழமை எப்போதும் பாசிட்டிவ் செய்திகளின் தொகுப்பு நாள். பின்வரும்  கதைகளின் ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பும் ஒரு பாசிடிவ் செய்தி தான்.

எளிய கதைக் கருக்கள், எளிய நடை, எளிய ஆசிரியர்

Blogspot, wordpress, reddit, tumblr தளங்களின் ரிசையில் ஒரு வாசகர் பங்கேற்பு தளம் https://www.weebly.com/in பற்றி நான் அறிய வந்தது .

நான் படிச்ச இன்றைய கதைகள்::  கட்டில், அம்மாவும் புளியம் பழமும்

கட்டில் என்ற கதை sirukathaigal.com/குடும்பம்/கட்டில் என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இரண்டாவது கதையின் சுட்டி இதோ ====>அம்மாவும் புளியம்பழமும்  <==== 

Website: mangudibalaa.weebly.com என்ற தளத்தில் இருந்தும் எடுக்கப்பட்டது

ஆசிரியர் பற்றிய குறிப்பு

ஆசிரியர் : கே. பாலசுந்தரி 


வயது 62  புதுவை யூனியன்  பிரதேசத்தை சேர்ந்த திருமலைராயன் பட்டினம் பிறந்த ஊர். பள்ளியில் முதல் மாணவியாகத் திகழ்ந்த போதிலும் எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு தடா. உடன் திருமண பொடா

பதினாறு வயதில் தாரமாகிப். பதினேழு வயதில் தாயாகி, முப்பத்து ஆறு வயதில் பாட்டியான பின்னும் அடிவயிற்றில் அக்னியாக உயர்  கல்விக் கனவு. கனவு வசப்பட்டது ஐம்பது வயதில். தொலைதூரக் கல்வி வாயிலாக வரலாற்றில் முதுகலைப் பட்டம். அறுபது வயதில் ‘அஞ்சல் மூலம் அறிவோம் காந்திஜியை' என்ற பட்டய படிப்பில் தேர்வு.

ஐம்பது ஒன்பதாவது வயதில் எழுத்துலகப் பிரவேசம் வாரமலர், பெண்கள்மலர், அமுதசுரபி, திருக்கோவில், ஞானதேடல், கனிமொழி இதழ்களில் படைப்புகள். பெண்கள்  மலரில் இரு முறைகள் சிறந்த வாசகியாக கவிதைகள் தேர்வு.

பல்வேறு முன்னணி இதழ்களில் படைப்புகள் பரிசுகள். (அமுத சுரபி. பெண்கள் மலர், வார மலர், திருக்கோயில், குடும்ப மலர்).

ஞானத்தேடல், கனிமொழி, வானம்பாடி சிறு இதழ்களில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சமையற் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வானொலி நேர்காணல்கள்.

ஞானத்தேடலில் வெளியான கட்டுரைகள் ‘தஞ்சைத் தரணியிலே’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. விரைவில் இரண்டாவது நூலும் வெளிவர இருக்கிறது.

தற்போதைய  வாசம் மாங்குடி திருவாரூர்


நான் படிச்ச கதை -1 

கட்டில் 

பல் துலக்கி முகம் கழுவி கண்ணாடியில் முகம் பார்த்து குங்குமம் வைத்த கமலம் அதிர்ந்தாள். ஒரு காதில் கம்மலைக் காணோம். அரைப்பவுனில் புஷ்பராக கம்மல். ராசியான கம்மல் ஒற்றைக் கம்மலின் விலையே பத்தாயிரம் இருக்கும். இரவு படுக்கும் போது கூட நன்கு திருகிவிட்டுத்தான் படுத்தாள். பாத்ரூம் கூட போகவில்லை. ஹாலில் சோபாவில்தான் படுத்து இருந்தாள். அப்படியானால் ஹாலில்தான் விழுந்து இருக்க வேண்டும். ஹாலுக்கு விரைந்தாள். அதற்குள் வேலைக்கார பெண் ராதா ஹாலைப் பெருக்கித் துடைத்துக் கொல்லைப்புறத்தில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

சோபாவில் கம்மல் இல்லை. மகனையும், மருமகளையும் கேட்டாள். நன்றாக தேடிப்பாருங்கள் என்று அவர்களும் பதட்டத்துடன் வீட்டில் ஒரு இடம் கூட விடாமல் அங்குலம், அங்குலமாக தேடிவிட்டனர். எங்கும் கம்மல் இல்லை. ‘இந்த வேலைக்கார குட்டிதான் எடுத்து இருக்கணும். நேற்று அவ அம்மாவுக்கு உடம்புக்கு முடியல.ஏதோ ஆபரேஷன் பண்ணனும்னு அழுதுகிட்டு இருந்தா’ என்றவளை இடைமறித்தான் கமலத்தின் மகன்.

‘அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதம்மா. இங்கதான் விழுந்திருக்கும். நல்லா தேடிப் பாருங்க’ என்றான்.

‘உங்க ஆபிஸ் ஸ்வீப்பரோட பொண்ணு. நல்லா படிப்பா. இப்ப லீவுல இருக்கிறா. நம்மோட சம்பளம் அவ படிப்பு செலவுக்கு ஆகும்னு நீதான் வேலைல சேர்த்த. அவ, அவ வேலையை காட்டிட்டா. இப்ப நான் என் வேலையை காட்டறேன், என்று ஆவேசத்துடன் விளக்கு மாற்றை எடுத்துக் கொண்டு கொல்லைப்புறம் போனாள் கமலம்.

 


மகனும், மருமகளும் தடுக்க தடுக்க ஆவேசத்துடன் கொல்லைப்புறம் சென்றவள் அங்கு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை ஓங்கி உதைத்தாள்.

‘எங்கடி கம்மல்?’

‘எந்தக் கம்மல்மா?’

‘நீ இப்படியெல்லாம் கேட்டா சரிபட மாட்டா. இதோ இப்பவே போலீசுக்கு போன் பண்றேன்’ என்றபடி முந்தானையை உதறி திரும்ப ‘சிலீங்’ என்ற சப்தத்துடன் கம்மல் முந்தானை மடிப்பிலிருந்து கீழே விழுந்தது.

கூனிக் குறுகினாள் கமலம்.

அதுவரை அழுதுகொண்டிருந்த அந்த சிறுமி, நிமிர்ந்து எழுந்தாள்.

‘இனிமே வேலைக்கு வரமாட்டேம்மா’ என்று நிமிர்வுடன் சொல்லிவிட்டு யாருடைய அழைப்பையும் பொருட்படுத்தாமல் வெளியேறினாள்.


நான் படிச்ச கதை -2

அம்மாவும் புளியம்பழமும்

கதையின் சுட்டி 1

தளத்தின் சுட்டி

புளியங்குடி.... கண்டக்டர் குரலுக்கும் விசிலுக்கும் கட்டுப்பட்டு சடன் பிரேக்கிட்டது பேருந்து. இறங்கியது நான் மட்டுமே.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்னே பார்த்த நிலையிலேயே ஊர். ஒற்றை டீக் கடை. அதே காலுடைந்த பெஞ்ச். செங்கல் முட்டுக்கட்டை. கூடுதலாக ஒரு டெலிபோன் பூத்துடன் கூடிய ஜெராக்ஸ்கடை. 

கூப்பிடு தொலைவில் நான் பிறந்த வளர்ந்த கீழவீதி. நாலே வீதிகள். ஊருக்கு வெளியே ஆறு. ஆற்றங்கரை படித்துறை அருகே அரசும் வேம்பும் அதன் அடியில் பிள்ளையார் சின்னஞ்சிறு சிவன் கோவில் எதிரே நடுநிலைப்பள்ளி, காளியம்மன் கோவில், என சினிமாவில் வரும் கிராமமாக என் ஊர். வழி எங்கும் புளியமரங்கள் வயது ஏறிய மரங்கள். இருமருங்கு மரங்களும் பின்னிப் பிணைந்து எது எந்த மரத்தின் கிளைகள் என்று அனுமானிக்க இயலாது குடை பிடிக்கும் மரங்கள். முதியவரின் துருத்திய எலும்புகள் என புடைத்து நிற்கும் முண்டு முடிச்சுகள். முதியவரின் சுருங்கிய தோல் போன்று செதில் செதிலாக உதிரத் துடிக்கும் பட்டைகள். எதிரே பாதை நீள என் நினைவுகளும் பின் நோக்கி நீண்டது. 

அப்பா சிறு விவசாயி. கூலி வேலைக்கும் போவார். அம்மா ஆடுமாடு தோட்டம் என உழைக்கும் கடும் உழைப்பாளி. இருவரும் ஆதர்ச தம்பதிகள். ஒரே மகன் நான் சரளமாக ஓடிய வாழ்வில் ஏற்பட்ட சறுக்கல்! 

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்த சமயம் ஹார்ட் அட்டாக்கில் அப்பா நிம்மதியாய்ப் போய்ச் சேர நிலைகுலைந்தது குடும்பம். சட்டென சுதாரித்தவள் அம்மா தான். மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற, எனது அனைத்துப் படிப்பு செலவையும் ஒரு தொண்டு நிறுவனம் ஏற்க, கல்லூரியில் கோல்டு மெடல். கேம்பஸ் இண்டர்வியூவில் சென்னையில் ஐந்து இலக்கத்தில் வேலை. அம்மா வழக்கம் போல் ஆடு மாடு விவசாயம் என்று பிஸி. கிராமத்தை விட்டு வர மறுத்து விட்டாள். 

நான் தங்கி இருந்த இடத்தருகில் ஒரு தங்கத்தேர். பெயர் மீராதேவி. மணந்தால் மீராதேவி இல்லையேல் மரணதேவி என்று ஆனேன். பெண்வீட்டில் பூரண சம்மதம். பிக்கல் பிடுங்கல் இல்லாத அரசு ஊழிய மாப்பிள்ளை கசக்கவா செய்யும். அம்மாவிடம் ஜாதகத்தையும் போட்டோவையும் தந்தேன். நல்ல பொருத்தம்னு பெண்வீட்ல சொன்னாங்க நான் முன் மொழிய, வழி மொழிந்தாள் அம்மா. மறுக்கவோ தடுக்கவோ முடியாதவைகளை வழிமொழிவதே வாழ்வியல் நெறி என்று உணர்ந்தவள் அம்மா. என் விருப்பத்தை என் முகத்திலும் குரலிலும் உடல் மொழியிலும் உணர்ந்த கிரேட் அம்மா! 

அப்புறம் என்ன, ஜாம் ஜாம் என்று கல்யாணம்! தனிக்  குடித்தனம். இருந்த சொற்ப நிலத்தையும் விற்று மருமகளுக்கு நகையும் பட்டுமாக இழைத்த அம்மா, மீண்டும் கிராத்திற்கே சென்ற அம்மா. மருமகள் உண்டானதும் காப்பு பட்டுப்புடவை என்று கிராண்டாக சீர் செய்த அம்மா பேறுகாலத்திற்கு மீரா பிறந்தகம் செல்ல இலவச இணைப்பாக நானும் கூடவே சென்றேன். மெல்ல மெல்ல அவர்களின் ஆடம்பரமும், படோடாபமும் என்னையும் தொற்றிக் கொள்ள மெல்ல மெல்ல எனக்குள் மாற்றம் மூன்றாம் மாதம் வீட்டுக்கு அழைத்து வந்த அம்மா பேரனுக்கு தங்க அரைஞானும் காப்பும்போட்டு அழகு பார்த்த அம்மா, மருமகளை ஒரு வேலை கூட செய்ய விடாது பொத்திப் பாதுகாத்த அம்மா. தனது கணவனே பேரனாகப் பிறந்து இருப்பதாக நம்பிய அம்மா, அப்புறம் அடிக்கடி வர ஆரம்பித்தாள். 

மீரா மெல்ல மெல்ல சுயருபம் காட்ட ஆரம்பித்தாள். மகன் கோகுலுக்கு மூன்றாவது பிறந்த நாள். அம்மாவும் வந்து இருந்தாள். மாமனார் வீட்டிலிருந்து அனைவரும் ஆஜர். அம்மா எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து உபசரித்தாள். ஒரு துரும்பை கூட எடுத்துப்போடாது உட்கார்ந்து சாப்பிட்டனர் அனைவரும். தவறுதலாகக் குழந்தை கீழே போட்டிருந்த பொம்மையில் கால் இடறி அம்மா சரிய நிச்சலனமாக டிவி பார்த்தபடி அமர்ந்து இருந்த மீரா. "பொம்மை உடைஞ்சுட்டு" என்று மாமியார் கூற, ‘பார்த்து வரக் கூடாதா இப்ப என்ன கொள்ளை போவுதுன்னு ஓடிவர்ற, பிறந்தநாளுக்கு வாங்கிய 300 ரூபா பொம்மை போயிட்டுது’ என்று குமுற... 

"நான் வேணும்னா உடைச்சேன் வரவர எனக்குக் கண்ணு சரியாத்தெரியல ஆபரேஷன் பண்ணனும் பொறந்த நாள் முடிஞ்சதும் பண்ணலாம்னு நீதானே சொன்னே மறந்துட்டியா" என்றாள் அம்மா, மழையில் நனைந்து நடுங்கும் கோழிக் குஞ்சாக, ஒடுங்கிய குரலில். 

பிலுபிலுன்னு பிடித்துக் கொண்டாள் மீரா. "இதோ பாருங்க உங்ககிட்டக் காசு கொட்டிக் கிடந்தால் ஆப்ரேஷன் பண்ணுங்க ஆனா உங்கம்மாவை இரண்டு மாசம் வச்சு பார்க்க என்னால் முடியாது நான் இப்பவே எங்க அம்மாவீட்டுக்குக் கிளம்பிடுவேன்னு" உறும, "இப்ப ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டு என்ன கலெக்டருக்குப் படிக்கப் போறியா? வயசானா அறிவு கிடையாது. கிராமத்துல விழுந்து கிடக்காம இங்க வந்து என் மானத்தை வாங்குற" நான் வார்த்தையால் வறுக்க, மெளனமாக அம்மா வெளியேறி இரண்டு வருஷம் ஆச்சு. நானும் போய்ப் பார்க்கல. 

அம்மாவின் முகம் அடிமனதில் அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும் அதை அழித்து எழுதும் இளம் மனைவியின் அருகாமையும் மகனின் மழலையும், சென்றவாரம் பாத்ரூமில் வழுக்கி விழுந்த மீராவுக்கு எலும்புமுறிவு. இரண்டு மாதம் பெட்ரெஸ்ட் இருக்க வேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார். ஒரு வாரம் மருத்துவமனை வாசம் நேற்று தான் டிஸ்சார்ச் மாமியாரும் மைத்துனன் மனைவியும் "அம்மாவை அழைச்சுகிட்டு வந்து பார்த்துக்குங்க" என்று ஒதுங்க அம்மாவை அழைக்க வெட்கமில்லாமல் செல்லும் நான். இதோ வீடுவந்து விட்டது. 

தூக்கு வாளியுடன் வருவோரும் போவோரும். என்ன நடக்குது/? விரைகிறேன். வாசல் திண்ணையில் சத்தமாக எரியும் பம்ப்ஸ்டவ் பக்கத்தில் எவர்சில்வர் அடுக்கில் மாவு, வாளியில் சட்னி, மூலையில் அம்பாரமாகக் குவிந்த புளியம்பழம் "வாங்கதம்பி" இட்லியை ஹாட்பேக்கில் அடுக்கியபடியே அழைப்பது சரவணன்.. அம்மா அல்ல... 

"உட்காருங்க தம்பி அம்மா வெளியில் போயிருக்காங்க. சாப்பிடுங்க தம்பி" கைகழுவி அமர்கிறேன்.. மல்லிகைப்பூவாய் இட்டிலி, மணக்க மணக்க சட்டினி, கூடவே பொடி, கெட்டித்தயிர், வாஞ்சையுடன் பரிமாறுகிறார் இடையே வியாபாரத்தையும் கவனித்தபடி கூறுகிறார். "மருமகளுக்கு என்னைப் புடிக்கல அதனால தோட்டத்து வீட்டுல இட்லிக்கடை போட்டுகிட்டு இருந்தேன். 

அதுவும் மருமகளுக்குப் பொறுக்கல. அந்த இடத்தையும் விற்று விட்டாள். வாங்கியவர் காலி பண்ணச் சொல்லும் போதுதான் நம்ம அம்மாவைக் கண்சிகிச்சை முகாம்ல சந்திச்சேன். அம்மாவுக்கு உடனே ஆபரேஷன் செய்யனும்னு சொல்லிட்டாங்க. எனக்கு ஆறுமாசம் பொறுத்து செய்யலாம்னு சொன்னாங்க. அம்மாவுக்கு உதவியா நான், அப்புறம் எனக்கு உதவியா அம்மா. 

அப்புறம் எங்களைப் போல வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டவர் எல்லாரையும் அம்மாதான் ஒண்ணு சேர்த்தாங்க. பஞ்சாயத்து போர்டை சேர்ந்த புளியமரம் தென்னைமரம் குத்தகை. புளி, தேங்காய் எண்ணெய், கீற்று வியாபாரம் அப்புறம் அவுங்க அவுங்களுக்கு முடிஞ்ச வரைக்கும் முடிஞ்சபோது செய்யலாம். ஓ.ஏ.பி பணம் வருது. நூறு நாள் வேலைக்கும் போறோம். எல்லாப் பணத்தையும் சேர்த்து கறவை மாடு, ஆடு வாங்கி இருக்கோம். தங்கறதுக்கு பஞ்சாயத்து இடத்தில் கட்டடம் கட்டி இருக்கோம். காலையில் இட்டலி டீ, மதியம் ஒரு குழம்பு கூட்டு. இரவு மதிய சாதமே. சந்தோசமா கூட்டுக் குடும்பமா இருக்கோம். வீட்ல யாரும் பேசக் கூட ஆளில்லாம தவிச்சவங்களுக்கு இப்ப பேச்சு துணைக்கு ஆள், வேளா வேளைக்கு சாப்பாடு. கதியத்த எங்களுக்கு நல்ல கதி ஏற்படுத்தியது அம்மாதான். 

கலக்டருகூட இதபாத்து ஆச்சரியப்பட்டாங்க. தன்னால இயன்ற உதவி எல்லாம் செய்யுறேன்னு சொல்லி இருக்காங்க. அக்கம் பக்கம் இருந்து வந்து பாத்துட்டுப் போறாங்க அவுங்க ஊர்லேயும் இதைப்போல முதியோர் சங்கம் ஆரம்பிக்க அம்மாகிட்ட யோசனை கேட்க வர்றாங்க" மூச்சு விடாமல் சொல்லி முடித்தார். திகைப்புடன் சாப்பிட்டு முடித்தேன். 

இதோ கேட்டில் நுழைவது அம்ம்ம்மா... 

சிவப்புப் புடவை, வெள்ளை ரவிக்கை காதில் சிவப்புக்கல் தோடு கழுத்தில் எளிய பவழமாலை "வாப்பா"... சூரியனின் கதிர்கள் மூக்குக்கண்ணாடியில் பட்டுத் தெறிக்க ஒளிப்பிழம்பாய் ஜொலிக்கும் அம்மாவின் முகம். அந்த முகத்தில் தெரிவது வைராக்கியமா? வானப் பிரஸ்தமா? தடுமாறுகிறேன். திகைத்த என் அருகே அமர்கிறாள். கண்ணாடியைக் கழற்றி முகத்தை ஒற்றிய படியே "மீரா பேரப்புள்ள எல்லாரும் சௌக்கியமா? 

அம்மாவின் குரலில் பழைய உயிர்ப்பு இல்லையோ? அல்லது எனக்குதான் நினைப்பு பிழைப்பை கெடுக்கிறதோ? "என்னப்பா என்னவோ வாட்டமா இருக்கியே என்ன விஷயம்" 

"ஒண்ணுமில்ல பஸ்சுலவந்த அசதி". 

"அப்போ சித்த நாழி படுத்துத் தூங்கு" கால்கள் பின்னக் கயிற்றுக்கட்டிலில் சரிகிறேன். 

கயிறு உறுத்தாது இருக்க நான்காக மடித்த விரித்தப் பழைய நூல் புடவை அம்மாவின் வாசத்தைப் பறை சாற்றியபடியே, அம்மாவைப் போல தளர்ந்து துவண்ட தலையணை, கண்கள் கசிய அப்படியே உறங்கிப் போனேன். கம்மென்ற மொச்சைக் கொட்டைக் குழம்பின் மணம் நாசியைத் துளைக்கத் திடுக்கிட்டுக் கண் விழித்தேன் மணி ஒன்று "குளிக்கிறியாப்பா..." 

"இல்ல காலையில் குளிச்சுட்டுதான் புறப்பட்டேன்". 

"அப்போ சாப்பிடு. உனக்குப் பிடித்த முருங்கைக் கீரை பொரியலும், மொச்சைக் கொட்டை காரக் குழம்பும் கூடவே சுட்ட அப்பளமும்". 

ரேஷன் அரிசி சாதத்துக்கும் இத்தனை சுவையா? மணமா? வருடக் கணக்கில் செத்துப் போன நாக்கு வெட்கமில்லாமல் சப்பு கொட்டி சுவைக்க புரை ஏறுகிறது. மெல்லத்தலையில் தட்டிய அம்மா "மீரா நினைக்கறாப் போல இருக்கு" நிராயசையுடன் சிரிக்கிறாள். குழம்பை மீண்டும் ஊற்றி இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை மேலே ஊற்றுகிறாள். காணாததைக் கண்டதை போல் நான் அள்ளி விழுங்குவதை கண்கள் பனிக்கப்பார்க்கிறாள். அம்மாவின் கைமணம் யாருக்கும் வராது. சுவைத்து சாப்பிடுகிறேன். கை கழுவுகிறேன்.. 

"அம்மா நான் போயிட்டுவர்றேன் அடுத்தவாரம் பேரனை அழைச்சுகிட்டு வர்றேன்" கேட்டவளின் கண்களில் மின்னலாய் ஒரு ஒளி. மௌனிக்கிறாள். 

அம்மாவின் நியாயமான ஆசைகளைப் பயப்படாமல் நிறைவேற்றனும். பொறுப்பைத்தட்டிக் கழிக்காமல் மீராவை நான் கவனிச்சுப்பேன். அம்மாவுக்குப் பிறகும் இந்த தொண்டை நானே தொடர்வேன். அதுதான் நானே அம்மாவுக்குச் செய்யும் பிராயச்சித்தம். எல்லா அம்மாக்களும் வழியனுப்ப புறப்படுகிறேன். அம்மாவின் நினைவாக ஒரு புளியம்பழத்தைக் கைப்பையில் சுமந்தபடி.  

பின்னுரை 

உண்மையில் தலைப்புகளால் கவரப்பட்டுத்தான் இக்கதைகளைப் படிக்க உள் நுழைந்தேன் நான். ஆனால் கதைகளின்  தலைப்புகளுக்கும் கதைக்கருவிற்கும்  ஒரு பொருத்தமும்  இல்லை என்று புரிந்தது.  

முதல் கதையின்  கரு: அவசரப்பட்டு   முடிவெடுப்பதில் உள்ள பிழை. அது சுபாவிகம். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.  ஆகவே வேலைக்காரச் சிறுமி முன் குற்றத்தில் குழையும் எஜமானி  அம்மா ஒரு நொடியில் சிறுமைப்படுகிறார். 

கட்டில் கதையில் கட்டில் எங்கும் வரவில்லை. கட்டில் என்பதை மாற்றி  கம்மல் என்றாவது தலைப்பை வைத்திருக்கலாம்.

இரண்டாவது கதையின் கரு: அம்மாக்களுக்கு மக்கட்ப்பாசம் நிரந்தரம் என்பதே.  மகன் என்ன  செய்தாலும் மகன் மேல் உள்ள அன்பு, பாசம்  மாறுவதில்லை.  கதையின் முடிவு எதிர் பாராதது. ஆனால் அம்மாவும் புளியம்பழமும் என்று சம்பந்தம் இல்லாமல் தலைப்பு வைத்து தமிழ் சினிமாவில் வருவது போல் ஒரு காட்சியில் புளியம்பழத்தைக் காட்டிவிட்டார் ஆசிரியர். 

பின் எதனால்  இக்கதைகள் இங்கு இடம் பெற்றன என்று வியக்கிறீர்களா? கதைகள்  தெரிந்ததுதான். ஆனால் கதையை கோர்வையாக மற்றவர்களுக்குப் புரியும்படி எழுதுவது மிகவும் கடினம். இந்த முயற்சியில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.   முக்கியமாக பெண்களுக்கு இக்கதைகள்  பிடிக்கும். 

மொத்தத்தில் சிறப்பு என்று சோல்ல முடியாவிட்டாலும் வாசிக்கலாம் என்று சொல்லலாம்.  

20 கருத்துகள்:

  1. முதல் கதை என் வீட்டில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  2. பழைய பாசிடிவ் செய்தியில் செவிலியர்கள் தடுமாறினார்களோ இல்லையோ, தமிழ் தடுமாறுது

    பதிலளிநீக்கு
  3. புளியம்பழம்.... சிறு காயிலிருந்து பழமாவது வரை புளியைப் பாதுகாக்கிறது ஓடு. பழமானதும் புளியம்பழம் சுருங்கிக்கொண்டு ஓட்டைவிட்டு ஒடுங்கிவிடுகிறது. கதைத் தலைப்பு சரியானதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல மட்டுமல்ல, பொருத்தமான விளக்கம்.

      நீக்கு
    2. நெல்லை, சூப்பர். இதேதான் என் உறவினர் தனியாக இருப்பவரோடு பேசினப்ப புளின்னு குறிப்பிட்டு பேசலைனாலும், பொதுவாகப் பழங்கள் முத்தும் போதுன்னு ஒப்பிட்டுக் கொஞ்சம் தத்துவார்த்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

      அதுவும் அவங்க உளவியல் படிச்சவங்க.

      கீதா

      நீக்கு
    3. நெல்லை அவர்களின் புளியம்பழ விளக்கம் நன்று. நன்றி. ஊர் புளியன்குடி. சாலை ஒர புளியமரங்கள். புளியம்பழ மொத்த காண்ட்ராக்ட் என்று ஆசிரியர் குறிப்பால் உணர்த்தினாலும் புளியம்பழத்தை அம்மாவின் உருவகமாக நினைக்கவில்லை. விளக்கங்களுக்கு
      நன்றி
      Jayakumar

      நீக்கு
  4. Good morning -- மட்டும் ஏன் ஆங்கிலத்தில், நெல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐபேடிலிருந்து சில நாட்களாக கருத,துகள் போவதில்லை. வெளியிடும்போது பிழை என வந்தது. ஒருவேளை தமிழ் எழுத்துருவினால் இருக்கலாமோ என ஆங்கிலத்தில் தட்டச்சினேன். கருத்து போனது. தமிழிலும் முயற்சித்தேன். அதுவும் போனது. அதனால் காலையில் கருத்திட முடிந்தது ஜீவி சார்.

      நீக்கு
  5. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாக்கச் சென்ற செவிலியர்களுக்குப் பாராட்டுகள்.

    நல்லாசிரியர் விருது பெரும் முஜிபூர் ரஹ்மான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மிகவும் நல்ல விஷயம்.

    ஹெல்மெட் செய்தி நல்லாருக்கு.

    இப்படியான ஹெல்மெட் எல்லாருக்கும் கிடைக்குமா!!!?

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கதைகள் இரண்டுமே, ஜெ கே அண்ணா சொல்லியிருப்பது போல் எளிமையான சிம்பிள் கரு கொண்ட கதைகள். வழக்கமாக வீட்டில் நடக்கும் விஷயம் முதல் கதை. இரு கதைகளின் கதை அம்சத்தை விட ...இரண்டாவது கதையின் முடிவு சூப்பர்.

    இரண்டாவதும் உலகில் நடக்கும் ஒன்றுதான். ஆனால் முடிவு எனக்கு மிகவும் பிடித்தது. இப்படியான ஒரு தீர்வை சமீபத்தில், குடும்ப உறவினர்களில் ஒருவரான, தனியாக வாழும் முதிய பெண்மணிக்கு நான் சொன்ன ஒரு ஐடியா. ஆனால் அவருக்குக் கதையில் வருவது போன்ற வருத்தமான நிகழ்வுகள் இல்லை. அவரது குழந்தைகள் தூரத்தில் இருக்காங்க.....

    முதல் கதையின் தலைப்பு பொருந்தவில்லை. ஆனால் இரண்டாவது கதையின் தலைப்பு ஓரளவு பொருந்தியதுதான். கதையில் புளியமரங்கள் என்றெல்லாம் வருவதோடு....அதில் வாழ்வியல் தத்துவம் இருக்கிறதைக் குறிப்பிட்டிருப்பாரோ என்று தோன்றியது. ஓரளவு ஒரு சில காய், பழங்கள் முதிர்ந்ததும், ஓடுகள்/தோல்கள் எளிதாகப் பிரிந்துவந்துவிடும். அதாவது உள்ளிருக்கும் பழச் சதை அல்லது கொட்டையைத் தள்ளிவிட்டு...என் வேலை முடிந்தது இனி பிழைத்துக்கொள் வளர்ந்து மரமாகி என்று. இது கூட அந்த உறவினரிடம் பேசிக் கொண்டிருந்த போது இருவருமே இதைப் பற்றி பேசினோம். அவர் உளவியல் கற்றவர். ஆசிரியராக இருந்தவர். ஆனால் இதில் மருமகள் பிரச்சனையால் அவர் இந்த முடிவை எடுக்கிறார். முடிவு பாசிட்டிவ்தான்.

    பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் புரிதல் இருந்து நலல்விதமான வாழ்க்கை என்றால் பிரச்சனை இல்லை ஆனால் இப்படிப் பிரச்சனைகள் உள்ள பெரியவர்கள் பலரும் யோசிக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அம்மா நான் போயிட்டுவர்றேன் அடுத்தவாரம் பேரனை அழைச்சுகிட்டு வர்றேன்" கேட்டவளின் கண்களில் மின்னலாய் ஒரு ஒளி. மௌனிக்கிறாள். //

      இது கொஞ்சம் எதிர்பார்த்த முடிவுதான். கொஞ்சம் வழக்கமான முடிவுதான். எனக்குப் பிடித்திருந்தது என்று சொன்ன பகுதி முதியவர்கள் சேர்ந்து வாழ்வது தங்கள் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் உதவி வாழ்வது.

      கீதா

      நீக்கு
  8. பாசிடிவ் செய்திகள் தினசரிகளீல் படிச்சேன். முஜீப் ரஹ்மானின் உழைப்புப் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  9. கம்மல் கதை போல் எனக்கு அடிக்கடி நடக்கும். ஆகவே சாதாரணத் தோட்டைப் போட்டுக் கொண்டு தோடு, மாட்டல் ஆகியவற்றக் கழட்டிட்டேன். எங்கே போனாலும் இதான்.

    பதிலளிநீக்கு
  10. கதை நல்ல நடையில் சிறப்பாக எழுதி இருக்காங்க. முதல் கதை அநேகமாக நடைபெறூவது தான். இரண்டாம் கதையும் யதார்த்தம். சரியான முடிவு. மகனைச் சாராமல் இருப்பதே நல்லதும் கூட.

    பதிலளிநீக்கு
  11. பாஸிடிவ் செய்திகள் அருமை. செவிலியர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள், வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  12. கதைகள் இரண்டும் நன்றாக இருக்கிறது.
    இரண்டாம் கதையில் அம்மாவுக்கு மீரா கீழே விழுந்து விட்டது தெரிந்தால் கிளம்பி விடுவார்கள் கவனித்து கொள்ள, மகன் அதுதான் மீராவை பற்றி சொல்லவில்லை.

    பதிலளிநீக்கு
  13. செவிலியர்களின் கடமை உணர்வு போற்றத்தக்கது.
    காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் குளிவிக்கும் தொப்பி பற்றிய செய்தியை நியூஸ் ரூமில் சேர்க்க நினைத்தேன்.
    கதைகள் இரண்டும் சிறப்பு. எளிய, சரளமான நடை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!