செவ்வாய், 26 செப்டம்பர், 2023

நெடுங்கதை - ரயிலோடும் வீதி 4/5 - மூலத்திருநாள் பரசுராம்

 ரயிலோடும் வீதி-4

மூலத் திருநாள் பரசுராம்

முந்தைய பகுதிகள்  :     2  3னால் சந்திரன் வீடு திரும்பிய போது அவன் பேசும் எதையும் கேட்கும் நிலையில் கிருஷ்ணவேணி இல்லை.  அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

சைக்கிளில் இருந்து கழற்றிய டைனமோவை மேசைமீது வைத்தபடி, “குழந்தை தூங்கிவிட்டானா?” என்றான்.  அதற்கும் பதில் சொல்லாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

சந்திரனுக்கு இது புதிதில்லை. தான் அலுவலகம் சென்ற பிறகு தன் தாயோ தந்தையோ வந்து, ஏதோ பேசி இருக்க வேண்டும்; அதன் பின்விளைவு தான் இக் கோபம்.

மௌனமாகக் கை, கால் கழுவியவன், உறங்கிக் கொண்டிருந்த பாபுவின் பக்கத்தில் ஒரு நிமிடம் நின்று அவன் கன்னத்தைத் தடவிக்கொடுத்துவிட்டு, ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தான்.

“ராத்திரிக்கு பரோட்டா செஞ்சிருக்கு. வேணுங்கறவங்க சாப்பிடலாம்” என்று அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு வாசல்பக்கம் போனாள் கிருஷ்ணவேணி.

யமுனா வீட்டுக்குத் தான் போவாள். கணவனோடு பிணக்கு ஏற்படும் போதெல்லாம் அவன் முகத்தில் விழிக்காமல் யமுனாவிடம் போய்க் கொஞ்சநேரம் பேசிவிட்டு வருவது அவளுடைய பழக்கம்.

“ஓஹோ, யமுனா தான் இப்ப முக்கியம், இல்லையா?” என்று கோபமாகக் கத்தினான்.

“அதையும் தான் கெடுத்து விட்டீர்களே” என்று அவனுக்கு அருகில் வந்து கத்தினாள் கிருஷ்ணவேணி.

அவன் புரியாமல் திகைத்தான்.

“ஏன் திருட்டு முழி முழிக்கிறீங்க? யமுனாவுக்கு முரளி எழுதின லெட்டர் எங்கே? நீங்கதானே கொண்டுபோனீங்க?  அவ என்னை தொளைச்செடுக்கிறா! அத்தான் எழுதின லெட்டர்னு உயிரை விடுறா!”

சந்திரனுக்குத் திடுக்கென்றது. அவசரமாக பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப்பார்த்தான். அங்கு இல்லை!

ஒருகணம் யோசித்ததில் சாப்பாட்டு மேஜையில் சஞ்சீவியிடம் காட்டியது நினைவுக்கு வரவே, “அடடா, மன்னிச்சிக்கோ வேணி! அதை ஆபீசில என்னோட டிராயர்ல வச்சிட்டேன் போலிருக்கு! நாளைக்குக் கொண்டுவந்துதரேன்.  யமுனாகிட்ட சொல்லிடு” என்று எழுந்தான். “நானே போய் அவ கிட்ட சொல்லட்டுமா?”

கிருஷ்ணவேணியின் முகத்தில் அவ்வளவு கோபத்தை அவன் பார்த்ததேயில்லை. “ஏன், இதை சாக்கா வச்சிக்கிட்டு அவ கிட்ட அரைமணி நேரம் இளிக்கறதுக்கா?” என்றவள், “இப்பவே போய் ஆபீசிலிருந்து அதைக் கொண்டுவாங்க” என்றாள் கடுமையாக.

அவன் சைக்கிளில் ஏறினான். “வரும்போது பாபுவுக்கு சேட் கடையிலேருந்து பூந்தியோ ஓமப்பொடியோ மறக்காம 
வாங்கிட்டு வாங்க” என்று அவள் சொன்னது அவன் காதில் ஏறவில்லை. நல்ல இருட்டு. தெரு விளக்குகள் விட்டுவிட்டு எரிந்துகொண்டிருந்தன. சைக்கிளிலும் விளக்கு இல்லை.  டைனமோவை மறந்துவிட்டானே!  சஞ்சீவியின் வீட்டை நோக்கி விரைந்தான்.

“வாங்க தம்பி! டீ சாப்டறீங்களா? சஞ்சீவி இன்னும் வரல்ல.  வர்ற நேரம் தான்” என்றார் சஞ்சீவியின் தாயார்.

‘இன்னும் வரல்லியா?’ ஆச்சரியப்பட்டான் சந்திரன்.  தன்னுடன் தானே கிளம்பினான்? ஒருவேளை வழியில் சைக்கிள் மக்கர் செய்துவிட்டதா?

“சரிம்மா, அவன் வரட்டும். அதுக்குள்ளே நான் இன்னொரு நண்பனைப் பாத்துட்டு வந்துடறேன்” என்று சந்திரன்  கம்பெனியை நோக்கிப் புறப்பட்டான்.

சஞ்சீவி மிகவும் சிக்கனமானவன். சக தோழர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுப்பவன். அசலைக் கேட்கமாட்டான்.  வட்டி வரவில்லை என்றாலோ வறுத்தெடுத்துவிடுவான்.  காரணம், அந்த வட்டிப் பணத்தில்தான் பழைய வீட்டை இடித்துவிட்டு, ரெண்டு லட்ச ரூபாயில் மாடிவீடு கட்டபோவதாகச் சொல்லிக்கொண்டிருந்தான். அதனால் கம்பெனி விட்ட பிறகு அவன் வீட்டில் இல்லையென்றால், வட்டி வசூலுக்குத்தான் போயிருப்பான்.

ஜேம்ஸ்துரையின் அறையில் வெளிச்சம் தெரிந்தது. எட்டு மணிக்குள் அவர் வீட்டிற்குக் கிளம்பவில்லை என்றால் ஏதோ முக்கிய விஷயம் என்று அர்த்தம். இனி பத்துமணிவரை அவர் வேலைசெய்துகொண்டே இருப்பார். அவர் இருக்கும்வரை சஞ்சீவியும் இருப்பான், சுருட்டு மடித்துக்கொடுக்க. கமலா டேவிட்டும் இருப்பாள், துரை சொல்வதை நோட்ஸ் எடுக்க. 

இரவு ஷிஃப்டுக்காரர்களுக்கென்று தனியாக ஒரு கேண்டீன் இருந்தது. அங்கு சென்று அமர்ந்தான் சந்திரன். “ஒரு மசாலா டீ” என்றான். அங்கிருந்து பார்த்தால் ஜேம்ஸ் துரையின் சன்னல் தெரியும்.

தற்செயலாக சன்னல் வழியே வெளியில் பார்த்த சஞ்சீவியின் கண்களில் கேண்டீனில் டீ அருந்திக்கொண்டிருந்த சந்திரனின் முகம் தெரிந்தது. இந்த நேரத்தில் இவன் எதற்கு வந்தான்? அவசரமாக எழுந்தான் சஞ்சீவி.

“வா சஞ்சீவி! ஒனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்.  மசாலா டீ சொல்லட்டுமா?” என்றான் சந்திரன்.

“வேண்டாம், இப்பத்தான் கமலா மேடம் ஓவல்டின் ஆர்டர் பண்ணிக் கொடுத்தார். நீ எப்படி இங்கே?’

சந்திரன் பதில் சொல்வதற்குள் ஜேம்ஸ் துரை கேண்டீனுக்கே வந்துவிட்டார். “சஞ்சீவி, ஏன் சொல்லாம வந்தே?” என்று 
மிரட்டும் தொனியில் கேட்டார். சந்திரன் முந்திக்கொண்டு “குட் நைட் தொரை” என்றான்.

“ஓ, நீயும் இருக்கிறாயா? நல்லது, ரெண்டு பேரும் வாங்க”  என்று தன் அறைக்குத் திரும்பினார். இருவரும் பின்தொடர்ந்தார்கள்.

“கமிங் சண்டே நீங்க எல்லாரும் நான் சொன்ன சமூகசேவையில் இறங்கணும், அண்டர்ஸ்டேண்ட்? எல்லா விவரமும் கமலா டேவிட் சொல்லுவார். விஷயம் வெளியாருக்குத் தெரியக்கூடாது. பீ கேர்ஃபுல்!” என்ற துரை கமலாவை உற்றுநோக்கினார்.

“யெஸ் சார்! நான் எல்லா விஷயமும் அவங்களுக்கு சொல்லி ரெடி பண்றேன். நீங்க கெளம்பலாம் சார்!” என்றாள் கமலா.

அவர் வெளியேறியதும், ‘கமிங் சண்டே’ சமூகசேவை இன்னதென்று அவள் விளக்கினாள். இருவருக்கும் மலைப்பாக இருந்தது. “கட்டாயம் நூறு பேராவது இருக்கணும். முக்கியமா பேமிலி, சில்றன், ஓல்ட் பீப்பிள் எல்லாரும் கலந்துக்கணும்” என்றாள்.

“கொஞ்ச நேரம் சிட் டௌன். டிராயரை அரேஞ்ச் பண்ணிட்டு 
வர்றேன். ரூம லாக் பண்ணிட்டு எல்லாரும் போவலாம்”  என்று உள்ளே போனாள்.

அந்த இடைவெளியில், சந்திரன் மெதுவாகக் கேட்டான்,  “எங்கேடா அந்த லெட்டர்?”

அப்போதுதான் சஞ்சீவிக்கு உறைத்தது. ‘ஐ லவ் யூ’ எழுதியிருந்த லெட்டர். பரபரப்பாகத் தன் பேண்ட் பாக்கெட்டைத் துழாவினான். காணோம்! தரையில் இங்குமங்கும் தேடினான். காணோம்! எங்கே விழுந்திருக்கும்?

அவன் செய்கையைப் பார்த்து சந்திரனுக்குப் பகீரென்றது.  கடிதத்தைத் தொலைத்துவிட்டானா? யமுனாவுக்கு என்ன பதில் சொல்வது?

சஞ்சீவி குனிந்து தரையில் தேடுவதைப் பார்த்துக்கொண்டே வந்த கமலா டேவிட், “வாட்?” என்றாள்.

சந்திரன் அவசரமாக “ஒரு லெட்டர்” என்றான். அவளுடன் அவன் அதுவரை பேசியதில்லை. 

“ஓ” என்ற கமலா, சஞ்சீவியைத் தன் அறைக்குள் அழைத்தாள். சந்திரன் வெளியே நின்றுவிட்டான்.

தன் பர்சிலிருந்து கடிதத்தை எடுத்துக் காட்டிய கமலா, “இந்த லெட்டரையா தேடுகிறாய்?” என்றாள்.

“ஆமாம் மேடம்” என்றவன், கடிதத்தை அவளிடமிருந்து பிடுங்கினான். மடிந்திருந்த கடிதத்தின் வெளிப்புறம் பென்சிலில் “ஐ லவ் யூ” தெரிந்தது.

“அது என்ன, படி பார்க்கலாம்” என்றாள் கமலா கண்களில் சற்று விஷமத்துடன்.

சஞ்சீவி உணர்ச்சியில்லாமல் படித்தான்: “ஐ லவ் யூ.”  சந்திரனுக்குத் தெளிவாகக் கேட்டது.

“மிஸ்டர் சந்திரன், இந்த ஆள் சொன்னது கேட்டியா? எனக்கு மேரேஜ் ஆகல, இவனுக்கும் ஆகல. இவன் என்னப் பாத்து ஐ லவ் யூ சொல்றான். அதுக்கு என்ன அர்த்தம்?” என்று புன்னகைத்தாள்.

சந்திரன் திகைப்புடன் நின்றுவிட்டான். அதற்குள் சஞ்சீவி முந்திக்கொண்டு, “மேடம், இந்த லெட்டர் என்னோட லெட்டர் இல்லை, சந்திரனுடைய லெட்டர்” என்று துள்ளிக்குதித்தான்.

லெட்டரை அவளிடம் திருப்பிக் கொடுத்தான்.  “அப்படீன்னா, மிஸ்டர் சந்திரன் நீங்க தான் எனக்கு ஐ லவ் யூ சொல்றீங்களா?” என்றாள் மேலும் புன்னகையுடன். அவள் கை, தன் அறையைப் பூட்டியது. சந்திரனுக்கு வியர்த்தது.

“மேடம் இது எனக்கு வந்த லெட்டர் இல்லை மேடம்”  என்றான்.

மூவரும் வெளியே வந்தார்கள். செக்யூரிட்டி ஜன்னலில் கையொப்பம் இட்டுவிட்டு மெயின்கேட்டைத் தாண்டி வெளியில் வந்தார்கள்.

“லுக்! நான் இந்த வருஷம் மேரேஜ் பண்ணலாம்னு இருக்கேன். அதனால ரியல்லா என்னை லவ் பண்றவங்க யாராச்சும் இருந்தா கூட்டிட்டு வாங்க. இப்டி லெட்டர் எழுதற வேலையெல்லாம் வேண்டாம்” என்று தன் காரில் ஏறப்போனாள்.

“மேடம், மேடம், அந்த லெட்டரைக் கொடுத்துவிடுங்கள் மேடம்” என்று அவள் கார்க் கதவைப் பிடித்துக்கொண்டான் சந்திரன்.

“இது ஒங்களுக்கு வந்த லெட்டர் இல்லைன்னா, இது எப்படி ஒங்க கைக்கு வந்தது? வேற யாரோட லெட்டரயாவது நீங்க திருடிக்கிட்டு வந்தீங்களா ? அடிக்கடி இப்படி செய்றீங்களா?  நாளைக்கு ஜேம்ஸ் தொரைகிட்ட குடுக்கறேன், கேட்டு வாங்கிக்குங்க” என்று காரைக் கிளப்பினாள் அவள்.

செய்வதறியாமல் நின்ற சந்திரன், தன் ஆத்திரத்தையெல்லாம் ஒன்று திரட்டி சஞ்சீவியின் முகத்தில் ஓர் அறை விட்டான். தரையில் விழப்போனவனை செக்யுரிட்டி ஓடிவந்து பிடித்துக்கொண்டான்.

****

முனாவிடமிருந்து பதில் கடிதம் வருமென்று காத்திருந்து அலுத்துப் போனான் முரளி.

முழுக் கடிதமாக எழுதாமல், பென்சிலில் ‘ஐ லவ் யூ’ என்ற மூன்றே வார்த்தைகள் மட்டும் எழுதியதால் அவளுக்கு நிச்சயம் ஆத்திரம் வந்திருக்கும். அதனால்தான் பதில் எழுதவில்லை என்று கருதினான். எனவே தன் ஆசையையெல்லாம் தொகுத்து நான்குபக்கக் கடிதம் ஒன்றை எழுதினான்.

அப்போது அவனுடைய மேலதிகாரி அவனை அழைத்தார்.  

இராணிப்பேட்டையில் ரயில் நிலையம் அமைப்பதுபற்றி அரசாங்கம் முக்கிய முடிவு எடுக்கவேண்டியிருப்பதால், அவன் உடனே கள ஆய்வுக்குச் செல்லவேண்டும் என்று அறிவித்தார். வேலூருக்குச் செல்லும் இராணுவ விமானத்தில் அவன் போக அனுமதி அளித்தார்.

மேலும் அவனிடம் இரகசியமாக ஒரு தகவலையும் சொன்னார். அவன் அனுப்பப்போகும் கள ஆய்வு அறிக்கை, தான் சொன்னவிதத்தில் இருக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் அவனுடைய எதிர்காலமே பாதிக்கப்படும் என்றும் அவர் சொன்னபோது முரளி உண்மையிலேயே 
பயந்துபோனான். மௌனமாகத் தலையாட்டினான்.

யமுனாவுக்கு எழுதிய கடிதத்தை உறையில் வைத்து அதன் மேல் மெல்ல முத்தமிட்டான். நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். பிறகு பத்திரமாகப் பெட்டிக்குள் வைத்தான்.

(தொடரும்)

12 கருத்துகள்:

 1. வாசிக்க வைக்கும் சிறப்பான கதை சொல்லல்.
  சிறப்பான நகர்வு. எழுத நினைப்பவர்களுக்கு இந்த மாதிரி எழுத்தெல்லாம் பாடப்புத்தகங்கள். தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜெஸி ஸார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி சார் இந்தக்கதைக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. சனிக்கிழமை மாத்திரம் தான் நான் தேர்ந்தெடுத்த கதைகள் பதிவிடப்படுகின்றன.

   நீக்கு
  2. அப்போ இந்தக் கதையை இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்பவர்கள் யார்?
   எபிக்காரர்கள் இந்தப் பக்கமே வருவதில்லை. அதனால் நீங்களாவது தான் கேட்டுச் சொல்ல வேண்டும்.

   நீக்கு
 2. பார்க்கலாம் அடுத்த வாரம் தீர்வு கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 3. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  பார்க்க பார்க்க
  பாவம் பொடிபட..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன்..

  பிறகு வருகின்றேன்..

  பதிலளிநீக்கு
 5. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. நன்றாகச் செல்கிறது அடுத்து........ஆவலுடன் .....

  பதிலளிநீக்கு
 7. கதை நன்றாக விறு விறுப்பாக போகிறது.
  இப்பொழுது முரளி எழுதிய கடிதம் யமுனாவுக்கு போகுமா?
  பார்ப்போம் அடுத்த வாரம்.

  பதிலளிநீக்கு
 8. ஒரே விருந்தினர் மயம் வீட்டில். உட்கார நேரமில்லை. அதான் வரமுடியலை. :(

  பதிலளிநீக்கு
 9. கதை நல்லாப் போகுது. கடைசியில் என்ன ஆகும்? முரளீயே யமுனாவிடம் வந்து நேரில் தன் காதலைச் சொல்லப் போகிறானோ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!