செவ்வாய், 5 மார்ச், 2024

சிறுகதை : கணக்கு - துரை செல்வராஜூ

 கணக்கு

துரை செல்வராஜூ 

*** *** ***

" வலம்புரிப் பிள்ளையார்க்கு வேட்டி துண்டு.. "

" உள்ளது.. "

" ஓடும் பிள்ளைக்கு வேட்டி துண்டு.. "

" உள்ளது.. " 

" சாமியாடித் தம்பிரானுக்கு வேட்டி துண்டு.. "

" உள்ளது.. " 

இப்படியாக விசாரணை நடந்து முடிந்ததும் மூலஸ்தானத்தில் ஏற்றப்பட்ட கற்பூரம் காமாட்சியம்மாளிடம் கொடுக்கப்பட்டது.. அதை அவர் மெதுவாக எடுத்துச் சென்று கோயிலுக்கு எதிரில் கூட்டப்பட்டிருந்த அடுப்புக்குள் இட்டார்..  மண்ணின் வழக்கப்படி குடும்பத்தின் பெண்கள் குலவையிட்டனர்.. 

அடுப்புக்குள் இருந்த பனஞ்சருகுகள் பற்றி கொண்டதும் புதுத் துணியால் 
பெண்கள் வாயைக் கட்டிக் கொண்டனர்.. ஊரில் இருந்து  கொண்டு வந்திருந்த வெண்கலப் பானையில் நீர் நிறைத்து அடுப்பில் ஏற்றி வைத்து விட்டு ஆளுக்கு ஒரு வேலையாகத் தொடங்கினர்..

" ஒன்றரை மணி நேரத்தில பொங்கலும் கூட்டும்  இறக்கி வைக்க வேணும்.. மளமள.. ன்னு வேலை ஆகட்டும்.. "

" இதோ ஆச்சு.. " - என்றபடி சேலையை இடுப்பில் செருகிக் கொண்டார் காமாட்சியம்மாள்..

" பத்மா.. தீர்த்தக் கிணத்துல  ரெண்டு குடம் தண்ணி இழுத்துக்கிட்டு வந்து  வைம்மா.. "- 

" சரிங்க அத்தே.. "

காடு காத்த ஐயனார் .. 

ரொம்பவும் சட்ட திட்ட்ம்.. கோபக்காரப் பிள்ளை... ஆனாலும் கனியாய்க் கனிந்த மனசு..

பத்து மைல் சுற்றளவுக்கு வீடு வாசல் ஏதும் இல்லாத வனாந்தரத்தில் கோயில்.. 

சாயங்காலம் ஆறு மணிக்கு அப்புறம் கோயில் வட்டாரத்தில ஒரு குஞ்சு குளுவான் கூட இருக்கக் கூடாது.. எல்லாரும் எல்லை கடந்து போயிடணும்.. 

இப்படி வகுத்து வைத்து எத்தனையோ நூறு வருசங்கள் ஆகி விட்டன..  மீறுவதற்கு யாரும் துணிவதில்லை..

அதனால் தான் இன்றைக்கும் அந்தக் குறு வனமும் பெரிய வேம்பு பெரிய  அரசு என்று மரங்களும் திருக்குளமும் தீர்த்தக் கிணறும் பத்திரமாக இருக்கின்றன..

சுதை வடிவில் - நெற்றிப் பட்டத்துடன் யானை ஒன்றும் அணிமணிகளுடன் வெள்ளைக் குதிரை ஒன்றும் ஐயனாருக்காக துடியாய் நின்று கொண்டிருக்க சுற்றிலும் பூதகண உருவாரங்கள்.. 

பழைமையான அவற்றின் மீது ஏதேதோ காட்டுக் கொடிகள் படர்ந்திருக்க குருவி இனங்களும் தத்தித் தாவி சுற்றி பறந்து கொண்டிருந்தன.. 

யானை குதிரைகளுக்கு மட்டும் சில வருடங்களுக்கு முன் திருப்பணி.. இடையில் ஏதோ பெரும் பிணி வந்து குறுக்கிட்டு விட்டதால்  ஐந்து வருசத்துக்குப் பின் இந்த வருடம் தான் திருவிழாவுக்கு திட்டமிடப்பட்டு இருக்கின்றது..

இதற்கு இடையில் பெரியவர் சுந்தரேசன் - தை பொறந்ததும் முதல் வாரத்தில் அவசரப் பயணமாக தஞ்சாவூரில் இருந்து எல்லாருடனும் வந்து விட்டார்..

வெகு காலத்துக்கு முன்பு இங்கிருந்து புறப்பட்டு அங்கே குடியேறியவர்களது வம்சாவளி.. குலதெய்வத்தின் பெயரிலேயே பெரியதாக மளிகை வியாபாரம்.. அவ்வப்போது திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் பிடித்து கோயிலுக்கு வந்து சென்றாலும் இப்போது யோசிக்க முடியாத  அளவுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்னைகள்..

சர்க்கரை குறைய வேண்டும் என்று மருந்து எடுத்துக் கொண்டதில் வேறு வேறு கோளாறுகள்.. இதற்கு அது ஒத்துக் கொள்ளாமல் அதற்கு இது ஒத்துக் கொள்ளாமல் எல்லாம் குழப்பமாகி விட்டன..
ஒன்றும் புரியவில்லை மருத்துவருக்கு..

சின்னத்தம்பியின் மகன் ஒற்றைக் காலில் நின்று காதல் கலியாணம்.. கலியாணத்திற்கு முன்னும் பின்னும் ஏகப்பட்ட சண்டை..  சச்சரவு.. எப்படியோ ஒருவருக்கு ஒருவர் ராசியாகி மூனு வருசத்துக்கு அப்புறமும் குடும்பம் விருத்தியாகவில்லை.. பெண்ணைப் பெற்ற குடும்பத்தில் செலவு மிச்சம் என்று மகிழ்ச்சியில் இருக்க இங்கே தான் மூனு நாலு மாசங்களுக்கு ஒரு தரம் வேதனையிலும் வேதனை.. 

இதுக்கெல்லாம் என்ன விடிவு என்று யோசித்து எல்லாருமாகப் புறப்பட்டு வந்து விட்டார்கள்..

கோயில் பூசாரிகள்  ரெண்டு பேர்.. வாத்தியக்காரர்கள் பணியாளர்கள் என்று நாலு பேர்.. ஆதரவற்றோர் என மத்தியான அன்னத்திற்காக பத்து பேர் என்று அங்கே இருக்க -

கோயில் மண்டபத்தில் பணியாளர்கள் பூமாலை கட்டிக் கொண்டிருந்தனர்..

வேம்பரசு மரங்களின் கீழாக சுந்தரேசன் விரிப்பில் அமர்ந்திருக்க அந்தப் பக்கமாக அவரது உடன் பிறப்புகள் அவரவர் வழித் தோன்றல்களுடன்...

" கோயில் ல  போட்டோ எடுக்கக் கூடாது.. வேணும்னா காட்டுக்குள்ள  போய் எடுங்க..  " 

பெரியவரின் அறிவுரைப்படி -  சின்னஞ்சிறுசுகள்  பனங்காட்டுக்குள ஓடித் திரிந்து செல்ப்பி எடுத்துக் கொண்டிருந்தன..

" எல்லாம் கணக்கா இருக்குல்லே.. " யாரோ பேசிக் கொண்டு இருக்க - பெரியவர் சுந்தரேசன் யோசித்தார்..

" எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்கு ..ஆனா எது தான் கணக்கா இருக்கு?.. மனுச சென்மத்துக்கு ஒன்னும் புரியறது இல்லை.."

இந்த காடு காத்த ஐயனாருக்கு கூட எல்லாம் கனக்குப்படி தான்..

பொங்கல் வைக்கிற அரிசியில இருந்து இலையில வைக்கிற தாம்பூலம்
 வரைக்கும் கணக்கு தான்..

ஒரு தலைக்கட்டு - அதாவது ஒரு குடும்பத்துப் பிள்ளைகள் இங்கே வந்து பொங்கல் வைக்கிறதுன்னா ஒருதலைப் பாரமான பன்னண்டு படி பச்சரிசியில மூனு ல ஒரு பங்கு பிள்ளையாருக்கு.. மீதி நாலு ல ஒரு பங்கு மூலஸ்தானத்துக்கு.. மீதி உள்ளதுல பாதி பரிவார மெய்க்காவல் பள்ளயத்துக்கு.. மீதில ஒவ்வொரு பங்கு பசு பட்சி மச்ச ஜாதிக்கு..

அதாவது பிள்ளையாருக்கு நாலு படி, மூலஸ்தானத்திற்கு இரண்டு படி. மெய்க்காவல் பரிவாரங்களுக்கு மூனு படி, பசுவுக்கும் பறவைக்கும்  மீன்களுக்கும் ஒவ்வொரு படி..

குடும்பம் என்றால் ஆறு ஏழு பிள்ளைகள் என்று இருந்த வரைக்கும் கணக்கு எல்லாம் சரிதான்.. இன்றைக்கு ஒத்தை பிறப்பு தான் குடும்பம்
என்று ஆனதுக்கு அப்புறம் இந்தக் கணக்கு சரி வருமா?..

அதற்கும் ஐயனாரிடம் கணக்கு  இருக்கின்றது!.. நமக்குத் தான் புரிவதில்லை..

குலவைச் சத்தம் கேட்டு பரபரப்பானது அந்த வட்டாரம்..

மூலஸ்தானத்தில் அபிஷேகத்திற்குத் தயாரானார்கள்..

" தூபக்கால் ல  தணல் எடுத்துக் கொடுங்கம்மா.. " 

" பஞ்சமுக விளக்குல புதுத் திரி போட்டு நெய் விளக்கு ஏத்தி வைங்க.. "

அடுத்த அரை மணி நேரத்தில் திரை விலகி மகா தீபஆராதனை நிகழ்ந்தது.. 

" டமடம..  டமடம.. டமடம.. டங்..
டமடம..  டமடம.. டமடம.. டங்.. டமடம..  டமடம.. டமடம.. டங்.. "

மூலஸ்தானத்தின் உள்ளிருந்து பூசாரியார் கையைக் காட்டியதும் மேள தாளங்கள் நின்றன.. 

சுந்தரேசனைக் கை நீட்டி அழைத்தார் பூசாரியார்..

" மதிப்பு மரியாதை வெச்சி வந்திருக்கே.. நானும் ஒன்னைய அப்படித்தான் வெச்சிருக்கேன்.. காத்துல பறந்து வர்ற தூசிக்கெல்லாம் கவலப்படாதே.. ஒன்னய நான் கண்ணுக்குள்ள வெச்சிருக்கேன்.. நோய் நொடி ஒன்னும் பண்ணாது.. காப்பாத்துவேன்..  தீர்க்காயுசு ஒனக்கு!.. " - என்றபடி விபூதியைப் பூசிவிட்டு மாலை ஒன்றைப் போட்ட சாமி காமாட்சியம்மாளை அழைத்தது.. 

சுந்தரேசனின் கையில் வேறொரு மாலையைக் கொடுத்து காமாட்சியம்மாளுக்கு சூட்டும்படி சைகை காட்டியது.. கையில் கிடைத்த மாதுளம் பழத்தை எடுத்துக் கொடுத்தது..

முந்தானை ஏந்தி அதைப் பெற்றுக் கொண்டார்கள்..

 " மனசு போல பொங்கல் பொங்கி இருக்கு.. நோய் நொடி உபத்திரவம் இல்லாம இருக்கும்.. வேறென்ன வேணும்?...  "

" வயசான காலத்துல எனக்கு வேறென்ன  வேணும்?...  அவங்க நல்லா இருக்கணும்.. அவ்வளவு தான்.. "  காமாட்சியம்மாளின் குரல் தழுதழுத்தது..

" இருப்பான்.. இருப்பான்!.. "

எல்லோருக்கும் வாக்கு கொடுத்த சாமி - குழந்தை வரம் கேட்டு வந்திருந்தவர்களை அருகில் அழைத்தது..

" காதல் கத்தரிக்காய் ன்னு போய் யாரக் கேட்டு உம் மகனுக்கு ஜாதகம் பார்த்தே?.. " 

எவர் முகத்திலும் ஈயாட வில்லை..

" கோயில் குளம் இதுகளுக்கு எதிரா  பேசிக்கிட்டு திரியற கும்பல் அது.. இங்கே அந்த ஊட்டுப் பொண்ணு எங்கிட்ட மடியேந்தி நிக்கிது.. அதான்  விதி.. "

" அவன் முடியாது ன்னு சொன்னதுக்கு அப்புறமும் அங்கே போய் ஏன்டா  நின்னீங்க?.. என் வாசலுக்கு வரலையே.. வந்திருந்தா நான் வழி காட்டி இருக்க  மாட்டேனா?..  ஒரு கணக்கும் இல்லாம ஒரு பொருத்தமும் இல்லாம நடந்த கலியாணம்.. "

" ஆணுன்னும் பொண்ணுன்னும் பொறந்துட்டா கலியாணம் கட்டிக்கிறதா?.. அர்த்தம் பொருத்தம் இல்லாம கலியாணம் கட்டி வச்சிடறதா?.. 

" இப்போ குத்துது குடையுது.. இங்கே வந்து நிக்கிறீங்க.. ஆனாலும், எனக்குக் கோவம் இல்லே.. கை விட மாட்டேன்.. அடுத்த வருசப் பொங்கலுக்கு இந்த வாசல்ல புள்ள விளையாடும் டா.. வேம்பரசு நிழல் ல தொட்டி கட்டிட்டு புறப்படு!.. "

" உத்தரவு.. "

பெரிய சத்தத்துடன் சாமி மலையேறியது.. எல்லாருக்கும் தீர்த்தமும் திருநீறும் வழங்கப்பட்டன..

கோயில் பணியாளர் சிறு பிரார்த்தனை தொட்டிலை எடுத்து வந்தார்.. 

வேம்பரசு மரத்தில் தொட்டில் கட்டி விட்டு விழுந்து வணங்கிய இளந்தம்பதியினர் நெஞ்சில் இப்படியான எண்ணம் ஓடிக் கொண்டு இருந்தது..

" நல்லவேளை.. இதாண்டா கணக்கு ன்னு நடந்தது எல்லாத்தையும் போட்டு ஒடச்சி செவிட்டுல ரெண்டு கொடுத்து காதக் கிழிக்காம விட்டாரே ஐயனார்!.. "

மூலஸ்தானத்தில் -  ஐயனார் புன்னகைத்தார்..

" உன் நெஞ்சே உன்னைச் சுடும்!.. "

 தேவியர் இருவரும் சேர்ந்து கொண்டனர்..

ஃஃஃ

46 கருத்துகள்:

  1. கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் படங்களுடன் ஸ்ரீ ஐயனார் தரிசனம் தந்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  5. அருகில் சிறை காத்த ஐயனார் (ஒன்றரை கிமீ)..

    ஆறு கிமீயில் நாகத்தி ஸ்ரீ வேம்புடைய ஐயனார்..

    தஞ்சை மாநகருக்கு நான்கு திசைகளிலும் ஐயனார் கோயில்கள் உள்ளன..

    கும்பகோணம் நகருக்குள்
    ஸ்ரீ யானையடி ஐயனார்..

    அடேங்கப்பா...

    பதிலளிநீக்கு
  6. கதை வாசித்தேன். கிராமத்து சூழலில்
    நடை பயின்ற கதை,
    வாசிப்புக்கு இயல்பாகவும்
    நல்ல முடிவும் கொண்டு இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இயல்பாகவும்
      நல்ல முடிவும் கொண்டு இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது.///

      மகிழ்ச்சி..
      நன்றி அண்ணா..

      நீக்கு
  7. KGG-- இங்கு கொண்டு வந்திருக்கும் சித்திரத்தை பெரிது பண்ணிப் பார்க்கக்
    கேட்டுக் கொள்கிறேன்.

    ரம்யமான சூழல். வெளிர் நீல வானம். கொப்பும் கிளையுமாய் நிழல் பரப்பும் மரம். சற்றுத் தொலைவில் அட்டகாசமாய் தென்னை.
    பரியேறி பவனி கோலத்தில் காடு காத்த ஐயனார். சுற்றிலும் பரிவாரங்கள்.

    கையெடுத்துக் கும்பிட விழையும் நம் மனம்.

    இப்படியான ஒரு தெய்வீக சூழல் ஒரு சித்திரத்தில் படிய முடியுமா? முடியும் என்றே நிரூபித்த சித்திர அழகு.

    KGG ஸார்.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்திரச் செல்வர் என்று படம் வழங்கப்பட்டதே இதற்குத் தான்..

      பொருத்தமான படங்களை வழங்குவதில் சமர்த்தர்..

      மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..

      நீக்கு
  8. கிராமத்துச் சூழல்... குலதெய்வக் கோயிலில் பொங்கல், இயல்பான நடை என கதை ரசிக்கும்படி இருந்தது.

    சுப முடிவும், போகிற போக்கில் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும் கதைக்கு வலு சேர்க்கின்றன.

    நல்ல படத்தைப் போட்டிருக்கிறார் கௌதமன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கிராமத்துச் சூழல்... குலதெய்வக் கோயிலில் பொங்கல், இயல்பான நடை என கதை ரசிக்கும்படி இருந்தது.///

      நெல்லை அவர்களது வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  9. காடுகாத்த ஐயனாரை விட்டு தஞ்சைக்கு இடம் பெயர்ந்துவிட்டார்கள்.

    இந்தக் காலத்திலோ குலதெய்வக் கோயிலை விட்டு வேறு மாநிலம், வேறு நாடு என்று நகர்ந்து வந்துவிட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // காடுகாத்த ஐயனாரை விட்டு தஞ்சைக்கு இடம் பெயர்ந்துவிட்டார்கள்.///

      மத்திய மற்றும் வடக்குத் தமிழகத்தில் குடியேறிய மக்களுக்கு நெல்லைச் சீமையில் தான் குலதெய்வ வழிபாடு..

      நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருக.. வருக..

      தங்கள் பிரார்த்தனை க்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அருமையான கதை.
    குலதெய்வ வழிபாடு செய்யும் விவரங்களை பெரியவர்கள் தான் சிறியவர்களுக்கு சொல்லி வழி நடத்துவார்கள்.
    எங்கள் சின்ன மாமனார் தான் குலதெய்வ வழிபாட்டுக்கு என்ன என்ன வாங்க வேண்டும் எப்படி பொங்கல் வைக்க வேண்டும், வஸ்திரங்கள் எத்தனை , மாலைகள் எத்தனை என்பதை எல்லாம் லிஸ்ட் அனுப்புவார்கள். அதை இப்படித்தான் படித்து சரி பார்த்து எடுத்து போவோம்.
    கண் முன்னே பார்ப்பது போன்ற எழுத்து.

    சுந்தரேசன் குடும்பத்திற்கு எல்லாம் நல்லதாக நடக்கும் என்று அருள்வாக்கு சொல்லி விட்டார் ஐயனார்.
    கெளதமன் சார் காவல் தெய்வத்தின் படத்தை பொருத்தமாக போட்டு விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// சுந்தரேசன் குடும்பத்திற்கு எல்லாம் நல்லதாக நடக்கும் என்று அருள்வாக்கு சொல்லி விட்டார் ஐயனார்... ///

      சுந்தரேசன் குடும்பத்திற்கு மட்டுமல்ல..

      நமக்கும் சேர்த்து உடல் நலத்துக்கு ஐயனார் அருள்வாக்கு சொல்லி இருக்கின்றார்...

      நீக்கு
    2. அப்படியா மகிழ்ச்சி. எல்லோருக்கும் எல்லாம் நல்லதாக நடக்கட்டும்.

      இன்று மருத்துவரிடம் போகும் நாள். மருத்துவர் நல்ல வார்த்தை சொல்வார் என்று நம்பிக்கை பிறந்து விட்டது.

      நீக்கு
    3. கீதா சாம்பசிவம் அவர்களின் கணவர் சாம்பசிவம் சார் விரைவில் நலம் பெற வேண்டும்.

      நீக்கு
    4. ஆமாம் கோமதிக்கா பிரார்த்திப்போம்.

      உங்களுக்கும் நல்லதே சொல்வார் மருத்துவர்....

      கீதா

      நீக்கு
    5. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்..

      மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

      நீக்கு
    6. ஆம்.. எல்லோருக்கும் நல்லதையே தம் அருள்வாக்காக தந்திருக்கும் ஐய்யனார் அனைவருக்கும் நல்லதை மட்டுமே மனங்குளிர தந்திட நானும் பணிந்து வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
    7. /// ஐயனார் அனைவருக்கும் நல்லதை மட்டுமே மனங்குளிர தந்திட நானும் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.. ///

      தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. கதை மிக நன்று துரை அண்ணா.

    கிராமத்துச் சூழல், குல தெய்வ வழிபாடு என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி.. நன்றி..

      நீக்கு
    2. கீதா அக்கா அவர்களது கணவர் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்வோம்...

      நீக்கு
    3. @ கோமதி அரசு

      /// எல்லோருக்கும் எல்லாம் நல்லதாக நடக்கட்டும்.///

      எல்லோருக்கும் எல்லாம் நல்லதாக நடக்கும்...

      நடக்க வேண்டும்..

      நீக்கு
  14. கிராமத்துப் பாணி கதை - துரை ஐயாவின் Favourite!

    “உன் நெஞ்சே உன்னைச்சுடும்” - சரியான வார்த்தைப் பிரயோகம்.

    கதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்..

      நீக்கு
  15. கிராமத்து கோயில் விழாவில் கலந்து வந்த உணர்வு.

    கதை சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  16. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    கதை கிராமிய சூழலில் அருமையாக உள்ளது. கதை ஆரம்பத்திலிருந்து வரிகள் ஒவ்வொன்றையும், முடிவு வரை நல்லதை ஒன்றையே நினைவுபடுத்தியபடி அமைத்திருப்பது தங்களின் சிறப்பான மனப்பக்குவத்தை காண்பிக்கிறது.

    பல்வேறு மருந்துகளில் குழம்பி போன உடல் நலத்தையும்,, மக்கட்செல்வத்திற்காக தம்மை அண்டி வந்திருக்கும் மணமக்களையும், ஐய்யனார் தம் அருட்பார்வை பார்த்து தம் வாக்கினால் சுபமான அருள் வார்த்தை கூறியிருப்பது நம் ஒவ்வொருவரின் குடும்பத்திறகாகவும் என எண்ணும் போது சுந்தரேசன் குடும்பத்தோடு சேர்ந்து நம் மன மகிழ்ச்சியும் இரட்டிப்பாகிறது. அருமையான பக்திப் பூர்வமானதொரு கதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரரே. .

    கண் முன் நிகழ்வுகளை கொண்டுவரும்படி நல்ல படங்களை தொகுத்து தந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// பல்வேறு மருந்துகளில் குழம்பி போன உடல் நலத்தையும், மக்கட் செல்வத்திற்காக தம்மை அண்டி வந்திருக்கும் மணமக்களையும், ஐயனார் தம் அருட்பார்வை பார்த்து தம் வாக்கினால் சுபமான அருள் வார்த்தை கூறியிருப்பது.. ///

      சிறிய சம்பவம் ஒன்றை வைத்துக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கினேன்..

      நிறைவுப் பகுதி தாமாக உருவாகியது..

      தங்கள் கருத்து கண்டு நெகிழ்ச்சியடைந்தேன்..

      தங்கள் வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. இந்தக் கதை திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஸ்ரீ கற்குவேல் ஐயனார் கோயிலை மனதில் வைத்து எழுதப்பட்டது..

    கருத்துரைத்த அனைவருக்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி..

    ஐயன் அருள் உண்டு
    என்றும் பயமில்லை..

    பதிலளிநீக்கு
  19. கடவுளை நம்பினோர் கைவிடப்படார். அதிசயங்கள் நிகழலாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயன் அருள் உண்டு
      என்றும் பயமில்லை..

      மகிழ்ச்சி..
      நன்றி துளசிதரன்..

      நீக்கு
  20. கிராமத்து மணம் வீசும் கதை எம்மையும் அக் கிராமத்துக்கு இட்டுச் சென்றது . பொங்கல் இடுவதும் நல்லதே நடக்கும் என வாக்குக் கூறியதும் ,

    ஐயனார் படங்களும் சிறப்பு.

    நல்லதோர் சம்பவத்தை அழகாக கதையாகதந்துள்ளார்.

    அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!