சனி, 16 மார்ச், 2024

புற்றுநோயை குணப்படுத்த ரூ.100க்கு மாத்திரை மற்றும் நான் படிச்ச கதை

 


கைவிடப்பட்ட விலங்குகள் காப்பகம் நடத்தும் 23 வயது இளைஞர் சாய் விக்னேஷ்

=============================================================================================

புற்றுநோயை குணப்படுத்த ரூ.100க்கு மாத்திரை: டாடா இன்ஸ்டிடியூட் சாதனை...



==========================================================================================

எல் கே ஜி மாணவி உலக சாதனை 


========================================================================================

கோபி மாணவன் உருவாக்கிய செயற்கைக்கோள் சாதனை 


================================================================================================= 

JKC பக்கம்


நான் படிச்ச கதை

புத்துயிர்

(1949ல் வெளியான சிறுகதை)

 கதையாசிரியர்: அநுத்தமா

இயற்பெயர்: ராஜேஸ்வரி. பிறப்பு 1922 நெல்லூர். பள்ளியில் தெலுங்கு வழிப்படிப்பு. தமிழ் வழி மெட்ரிகுலேஷன் தேர்வில் மெட்ராஸ் மாகாணத்தில் முதலிடம். கணவர் பத்மநாபன் மின்துறை ஊழியர். பிள்ளைகள் இல்லை. 2010இல் (88 வயது) சென்னையில் மறைந்தார். 

300 சிறுகதைகள் 22 நாவல்கள், வானொலி நாடகங்கள், குழந்தை இலக்கியங்கள் என்று படைப்புகள் நிறைய. கேட்டவரம்  என்ற நாவல் கா நா சு வால் பரிந்துரைக்கப்பட்ட ஒள்று.

“தமிழ் இலக்கிய உலகில் கலைமகள் பெண் எழுத்தாளர்களின் ஒரு வரிசை உண்டு. சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், எம்.ஆர்.ராஜம்மா போன்றவர்களின் வரிசையில் வரக்கூடியவர். அதிகமும் பிராமணப் பெண்களின் சமையற்கட்டு மூலை சார்ந்த கதைகள். உறவுச் சிக்கல்களை அலசுபவை. எளிய அன்பையும், தியாகத்தையும் தீர்வாக முன்வைப்பவை.”  ஜெயமோகன்.

இரண்டு புகைப்படங்கள் இங்கு போட்டதற்குக் காரணம்,  முகம்(வதனம்?)  மூப்படைவதை எப்படி துல்லியமாகக் காண முடிகிறது என்பதை அறியவே.  ஆனால் அந்தக் கண்கள் மாத்திரம் மாறவில்லை.. தீர்க்கமான பார்வை. இருட்டில் ஜொலிக்கும் வைரம் போல் பிரகாசம் உள்ள கண்கள்.  அதே கண்கள். 

மேலதிக விவரங்களுக்கு

இங்கே செல்லவும் 


என்னுரை 

புழங்காமல்

பொலிவிழந்து

பொடிப் பொடியாய்

காரை உதிரும்

கோட்டை வீடு …..

ஆண்டுவிழா என்று

ஆட்கள் நிறைந்து 

புது  மலர்ச்சியுடன்

புத்துயிர் பெற்றது. 

ஜீவாயி என்ற கிழவியின் உழைப்பினால் ஜீவனைப் பிடித்து வைத்திருந்த கோட்டை வீட்டுக்கு ஒரு பிராணவாயு என்ற ஆண்டுவிழா புத்துயிர் தந்தது. ஆசிரியர் அமைத்த பெயர்ப் பொருத்தங்கள் என்னே!!!

கதையல்லாத கதை வரிசையில் இந்தக்கதையும் ஒன்று. கதை மேற்கூறிய  புதுக்கவிதை?

ஒரு சிறு விளக்கம் .

தமிழ் இலக்கிய வரலாற்றில் உரைநடை என்பது ஒரு இலக்கிய அந்தஸ்தை பெற்றது ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னர்தான் என்று கூறுவர்.

சங்க காலம், பக்தி இலக்கிய காலம், என்று  17ஆம் நூற்றாண்டு வரை கவிதைகள் ஆக எழுதப்பட்டவையே இலக்கியம் என்று ஏடுகளில் சேமிக்கப்பட்டு இருந்தன. உரைநடையில் நிவந்தங்கள், கட்டளைகள், முக்கிய வரலாறு போன்றவற்றை சாஸ்வதமாக  கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டன. அதாவது படித்து இன்புற ஏட்டுக் கவிதைகள். படித்து பின்பற்ற கல்வெட்டுகள். 

ஆங்கிலேயர் வந்தபின் தான் உரைநடை இலக்கியங்களாக நாவல், சிறுகதை, போன்றவைகள் அங்கீகரிக்கப்பட்டு பல எழுத்தாளர்கள் கதைகள் படைத்தனர்.  அச்சுத்  தொழிலும் அதற்கு உதவியது. 

அவ்வாறு முதலில் உரைநடை இலக்கியமாகத் தோன்றியது நாவல் தான்.

நிறுத்து நிறுத்து. என்னவோ கதையைப் பற்றி சொல்கிறேன் என்று இலக்கிய வரலாற்று பாடம் எடுக்கிறாய்? வந்தோமா, கதையைப் பற்றி நாலு வரி சொன்னோமா, போனோமோ என்றில்லாமல்……..

மன்னிக்கவும்.

சொல்ல வந்தது இதுதான்.

நாவல் முதலில் தோன்றியதால் பின் வந்த சிறுகதைகளும் அதே பாணியில் எழுதப்பட்டன. நாவல் எப்படி சங்க இலக்கியங்களின் மிகைப்பட்ட வருணனைகளை, உவமைகளை, சூடிக்கொண்டதோ, அதே போன்று  சிறுகதைகளும் புழங்கும் தமிழில் எழுதப்பட்டாலும், வர்ணனைகளைத் தவிர்க்கவில்லை.

இந்தக் கதையும் அப்படிப்பட்ட  வகையைச் சார்ந்ததே.

இந்தக் கதை ஒரு சிறுகதை என்றில்லாமல்  ஒரு நாவலின் ஒரு அத்தியாயம் (chapter) என்ற வகையில் உள்ளது.. கதைக்கு முன்னரும்., பின்னரும் தொடராக இக்கதையை நீட்டலாம். அவ்வாறு  அமைந்துள்ளது.

கதைச்சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

பொறுமை உள்ளவர்களும், உறக்கம் வர கஷ்டப்படுபவர்களும், வேலை வெட்டி இல்லாதவர்களும், இலக்கிய ஈடுபாடு உள்ளவர்களும், முழுக்கதையையும் கீழே உள்ள சுட்டியில் சென்று வாசிக்கலாம். 

கதையின் சுட்டி 

**********************************

புத்துயிர்

கதைச்சுருக்கம்

 

ஜீவாயி அந்த வீடு கட்டும்போது வந்து வேலைக்கு அமர்ந்தவள். அப்பொழுது வீட்டு எஜமானர் இருபத்தைந்து வயது வாலிபர். அவர் மனைவி பதினாறு வயது பாலிகை. ஜீவாயியும் யௌவனத்தின் வஸந்தத்தில் புரண்ட காலம் அது. முக்கியஸ்தர் இளம் வயதினராயினும், பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தாத்தாவும், பாட்டியும் அண்ணனும், தம்பியும் அத்தையும், சித்தப்பாவும் நிரம்பிய குடும்பம். இந்த அறுபது வருஷங்களாக அந்த வீடு அடைந்த பெருமைக்கு இப்பொழுது அது சீர் குலைந்து கிடக்கும் பாழ்தான் ஈடு.

காலச் சக்கரத்தின் கொடூர ஆதிக்கத்தில் அகப்பட்டு, அந்த எஜமானனும், எஜமானியும் விபத்தில் உயிர் விட, உற்றார் உறவினர் எல்லோரும் மெல்ல நழுவிப் போய் விட்டனர். அந்தக் குடும்பத்தின் தொடர்பினால் ஏற்பட்ட பலனோவென அவளும் தன் வாழ்வில் சகல சௌகரியங்களையும் சகித்து, கடைசியில் தனிமையில் விடப்பட்டாள். இப்பரந்த உலகில் அவளுக்கு உற்றார் உறவினர் யாருமில்லை. நாதியற்றுக் கிடந்த அந்த வீடும் அவளும் தான் ஓர் இனம்.

கல்லும் சுண்ணாம்பும் கொண்ட அக்கட்டிடம் தன் சதையில் சதை, ரத்தத்தில் ரத்தம் எனும் மகவின் ஆசை மணத்துடன் கமழ்ந்தது அவளுக்கு; பாசத்தினால் அவளைக் கட்டிப் பிணைத்தது. அந்தக் கிழவி அந்த வீட்டிலேயே தனிமையாக, பாழடைந்த வீட்டைக் காக்கும் பரதேசிப் பிசாசாக விளங்கினாள்.

நாளைக்கு!

நாளைக்கு அந்த வீடு மீண்டும் புத்துயிர் பெறப் போகிறது. குழந்தைகள் கள்ளங்கபடமற்று அந்தக் கூடத்தில் தவழப் போகின்றன. இளம் தம்பதிகள் காதல் பாஷையில் பேசுவதை அச்சுவர்கள் செவி சாய்த்துக் கேட்கப் போகின்றன. வாழை மரம் சேர்ந்த அந்த வாசற்படி, புதிய நகைகளணிந்த இள நங்கை போல் ஒய்யாரப் பார்வை பார்க்கப் போகிறது. வாசலில் மங்களகரமான மேளச் சப்தம்; அகத்தில் சந்தோஷமான மனிதர்களின் சலசலப்பு; பின்னால் எண்ணெய்ப் புகை. 

ஜீவாயி அவ்விடத்தைப் பெருக்கப் பெருக்க, தரையில் படிந்துகிடக்கும் அழுக்கும், தூசும் படை படையாகப் பெயர்ந்து அப்புறப்பட்டன. சுருங்கி, சித்திரப்பூ நூல் வேலை செய்யப்பட்டது போன்ற அவள் சருமமும், கால தேவனால் முத்திரையிடப்பட்ட அவளது தேகமும், வியர்வைத் துளிகளுடன் கலந்து பிரகாசித்தன. எலும்புக் கூட்டுக்குப் போர்வையென இருந்த அவளது தோலுக்கும் இன்று எழில் வாய்ந்திருப்பது, ஜன்னல் வழியே தூசி மண்டலத்தைப் பிளந்து கொண்டு வரும் கதிரவனின் தீட்சண்ய பார்வையின் பலனோ? இல்லை, அம்முதிய மாதின் முகத்தில் ஜ்வலிக்கும் ஒளியின் முன் கேவலம் சூரியனின் வெளிச்சம் எம்மாத்திரம்? சந்திரிகையின் தண்மையுடன், வெய்யிலின் ஜகஜ் ஜோதியைப் பொருத்திக் கொண்ட அவளது வதனத்தின் பொலிவுதான் என்ன?


நாளைக்கு யாரோ அந்த வீட்டில் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் போகிறார்களாம். அந்தக் கலியாண வீட்டாரின் வேலையாட்கள் வந்து விடுவார்கள், அவ் வீட்டைச் சுத்தம் செய்ய. இத்தனை நாட்கள் கேட்பாரற்றுக் கிடந்த அந்த வீடு இன்று அந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் ஓவர்ஸியர் வீட்டினரின் கண்களில் பட்டது. அந்த ஊரிலேயே இவ்வளவு பெரிய-விசாலமான கூடம் உள்ள வீடு இல்லையென்று இந்த வீட்டைப் பொறுக்கினார்கள் அவர்கள். நாளைக்கு மீண்டும் அந்தக் கூடம் மனிதர்களின் நடமாட்டத்தை அறியப் போகிறது.

விருந்தினர் எல்லோரும் கண்ணைப் பறித்துக் கொண்டு போகும் படி விதவிதமாக அலங்கரித்துக் கொண்டு வந்தனர். பல வர்ணப் பட்சிகள் ‘வர்ண ஜாலம் புரிவது போல் இருந்த அந்தக் காட்சிக்கு, ஆண்டு நிறைவுக் குழந்தை அரசனைப் போல் அக்கிராசனம் வகித்தது.

மெய் மறந்து அந்தக் கூடத்துக்கு அன்று கிடைத்திருக்கும் பாக்கியத்தை அமிர்தம் போல் அள்ளிப் பருகியவாறு அங்கு நின்றாள் ஜீவாயி.

கடிந்து பேசவில்லை. பட்டினிக்கு அஞ்சவில்லை. தான் இருந்த பெருமையை நினைத்து ஏங்க வில்லை. யார் என்ன கூறினால் என்ன?. மனிதர்கள் எப்படிப் பட்டவராக இருப்பின் என்ன? ‘இந்த இடம் என் இடம்; இன்று பவித்திரமாகி விட்டது!’ என்று அவள் அகம் மகிழ்ந்தாள்.

உடம்பில் சற்றுத் தெம்பு தட்டியதும் கிழவி எழுந்து விட்டாள். கூடத்தில் என்ன நடக்கிறது என்று எட்டி நோக்கினாள். மற்றப் பேர்களெல்லாம் பின் கட்டில் சாப்பிடப் போய் விட்டிருந்தனர். நடுக் கூடத்தில் ஒரு நாற்காலியில் ஓவர்ஸியர் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் அவரது இளம்மனைவி குழந்தையுடன் நின்றாள். மகனை  உறங்கச் செய்ய அவள் இப்படியும் அப்படியும் அசைந்து, குலுங்கிக் கொண்டிருந்தாள்.

அவளையே நோக்கின கணவர், இன்றைக்கு வைபவம் நன்றாக நடந்து விட்டதல்லவா?” என்றார்.

“குழந்தையைப் பற்றிப் புகழாதவர் கிடையாது. திருஷ்டி கழிக்க வேண்டும்.”...............

***************************************************************************************

ஜீவாயி மீண்டும் தனிமையில் விடப்பட்டாள். ஒரு நாள் கூத்துக்காகத் தட்டி எழுப்பப்பட்ட அந்த வீட்டு அறைகள் வெறித்து நோக்கி நின்றன.

ஜீவாயி தரையில் உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றிக் குப்பையும் கூளமும் நிறைந்து கிடந்தன. வாடிய புஷ்பமும், வெற்றிலைக் காம்புகளும் இறைந்து கிடக்க, எறும்புகள் சாரி சாரியாக ஊர்ந்து சென்றன. பழுத்து முதிர்ந்து விட்ட அவள் கை இயந்திரம் போல் உடலைப் பிடித்து விட்டுக் கொண்டது. அவளை ஈக்கள் மொய்த்தன. அவள் தலைப்பால் விசிறிக் கொண்டாள். அவள் கண்கள் எங்கோ நோக்கின.

அவள் முகத்தில் ஒரு பளபளப்பு. அவள் கண்களில் ஜீவன் ததும்பிற்று. உதடுகள் பெருமிதம் தளும்பத் துடித்துக் கொண்டிருந்தன. அவள் கைகள் கீழேயிருக்கும் குப்பையைத் தடவித் தடவித் தள்ளிச் சேர்த்தன. அந்த ஸ்பரிசத்தில் என்ன நளினம், கனிவு, ஆதரவு! அதற்கு எதை இணை கூற முடியும்? சைத்திரிகன் தன் இருதயத்தில் வெடித்து வரும் ஓவியம் பெற்றுக் காணும் போது அடையும் மகிழ்ச்சி, அவள் உள்ளத்தில் அரவம் செய்தது. துள்ளி விளையாடி, களைத்து, இறைக்க இறைக்க அருகே நிற்கும் கன்றை நக்கிக் கொடுக்கும் தாய்ப் பசுவின் ஆதரவு, எஜமானனைக் கண்ட நாயின் நன்றி, மிகுந்த உற்சாகம்…

அங்கேயே அயர்ந்து படுத்துக் கொண்டாள் ஜீவாயி. எறும்புகள் கடித்தன; கொசுக்கள் ‘நொய்’ என்று கீதம் பாடின; ஈக்கள் மொய்த்தன. அந்தக் கிழவியைச் சுற்றி இருள் சூழ்ந்துகொண்டது.

எங்கோ தூரத்தில் இருந்த அந்தப் பங்களா மீண்டும் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டது. சிறுசிறு குடிசைகள் விளக்குகளுடன் மினுக்க, அந்த வீடு சீர்குலைந்த ராணி போல், அதற்கே தனியான கம்பீரத்துடன் தனித்து நின்றது.

ஜீவாயி ஜீவன் தந்த அவ்வீட்டுக்குப் புத்துயிர் கொடுத்த ஓவர்ஸியர் வீட்டினர் எங்குச் சென்றனரோ? அவர்கள் ஓர் ஆத்மாவுக்கு அளித்த ஆனந்தத்தை அறியாது அவர்கள் அகத்தில் இருந்தனர்.

– அமுதசுரபி-1949, பிரமாதமான கதைகள்

(1949 நான் பிறந்த வருடம் ஹி ஹி)

48 கருத்துகள்:

  1. அனாதை விலங்குகளைப் பராமரிக்கணும் எனச் சிறு வயதிலேயே ஒருவருக்குத் தோன்றுமா? எவ்வளவு கேலி கிண்டலுக்கு அவர் ஆளாகி இருக்கவேண்டும்? குடும்பத்தாரின் ஆதரவைப் பெற்றது அதிசயம். ஈரமுள்ள மனிதர்கள் நிறையவே இருக்கிறார்கள். சாய்கணேஷ் நெஞ்சில் நிறைந்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனாதை விலங்குகளைப் பராமரிக்கணும் எனச் சிறு வயதிலேயே ஒருவருக்குத் தோன்றுமா? எவ்வளவு கேலி கிண்டலுக்கு அவர் ஆளாகி இருக்கவேண்டும்?//

      தோன்றும், நெல்லை. என் மகனுக்கு 2 ஆம் வகுப்பிலிருந்தே. ஒரு வேளை அது என்னிடமிருந்தும் வந்திருக்கலாம். எங்க ஊருக்கு அப்ப அடிக்கடி கூட்டிக் கொண்டு போய் இயற்கை நம்மைச் சுற்றி இருக்கும் உயிர்கள்னு அவனோடு தான் என் நேரமே.....ஆனால் எங்கள் குடும்பத்தில் பலரும் அவனை மூளைச் சலவை செய்தார்கள். இது நல்ல profession இல்லை நம் சமூகத்தில் இதெல்லாம் கூடாது அது இதுன்னு...நான் அப்படியானவர்களிடம் இருந்து விலகி இருப்பதையே விரும்புவேன், நெல்லை

      கீதா

      நீக்கு
    2. சாய்கணேஷ் நெஞ்சில் நிறைந்துவிட்டார்.//

      ஆமா நெல்லை

      கீதா

      நீக்கு
    3. ஈரமுள்ள மனிதர்கள் நிறையவே இருக்கிறார்கள்.//

      ஆமாம் நெல்லை....எல்லாருக்கும் இயலாத காரியம்.

      கீதா

      நீக்கு
    4. இது போலவே நிராதரவான வயதானவர்களை, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் நப்ரகளையும் நாம் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். பெரிய சேவை அதெல்லாம்

      கீதா

      நீக்கு
    5. கீதா ரங்கன்... எல்லாப் பயஙுவளும் நீட் இல்லைனா உடனே டாக்டராயிடுவோம் என்று சொல்லிட்டுத் திரியறானுங்க. அது எப்படிப்பட்ட வேலை, எவ்வளவு பொறுமை, அறிவுத்திறன், சகிப்புத் தன்மை, பிறர் காயங்கள், ரத்தம் சீழ் போன்றவற்றை ஹேண்டில் செய்யும் பொறுப்பு..... போன்றவை தேவைன்றதை மறந்துடறாங்க.

      சொந்த பேரன்ட்ஸ், ஏன் சின்னப் பையனோட மலஜலத்தை ஹேண்டில் பண்ணவே பெரும்பான்மையரால் முடியாதுன்னு நினைக்கறேன்.

      சமூக சேவகர்களையும் மலுத்துவர்களையும் (பார்மஸிஸ்ட்களை அல்ல ஹா ஹா ஹா) எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

      நீக்கு
    6. ஆமாம் டிட்டோ....நெல்லை

      இப்ப உள்ள மருத்துவர்களில் மனித நேயத்தோடு பார்க்கறவங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பக் கம்மி நெல்லை.

      ஃபார்மஸிஸ்டுகளுக்கும் பொறுப்பு ரொம்ப உண்டு, நெல்லை. டென்ஷனும் உண்டு. அவங்களும் பொறுப்பானவங்க இருக்காங்க. ஆனா ஃபார்மஸி துறைல பிஸினஸ் பண்ணறவங்க நடக்கற தில்லுமுல்லுகள் நிறைய. அது நம்ம ஃபார்மஸிஸ்ட்!!!!கிட்ட நிறைய கதைகள் உண்டு!!!! ஆனா வெளிய சொல்ல முடியாதே!! என் தம்பி அந்தத் துறைல தான் இருக்கான். எனக்கும் நிறைய தெரியும் ஆனா சொல்ல முடியாது வெளியில்.

      கீதா

      நீக்கு
  2. இன்றைய கதை சுமாராகத்தான் தோன்றுகிறது. மனிதர்களைப் போல வீடுகளுக்கும் ஆயுட்காலம் உண்டு. கிராமங்களில் இப்படியாப்பட்ட வீடுகளைக் கண்டு படமெடுத்திருக்கிறேன். ஓஹோவென ஒரு காலத்திலும், தற்போது குட்டிச் சுவராகவும் இருப்பவை அவை.

    அரச மாளிகைகளும், கோட்டைகளும் அப்படித்தான். ஞாயிறு பகுதியில் அவற்றைக் காண்பீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை கண்டிப்பா வீட்டிற்கும் ஆயுட்காலம் உண்டு

      ஆனா கதை அதைப் பற்றியது இல்லை. ஜீவாயியின் உணர்வுகளை அந்த வீட்டோடு அந்த வீட்டின் மனிதர்களோடான உணர்வுகள்...

      நான் என் கருத்தை இன்னும் கொடுக்கலை...வீட்டில் பணிகள் சுத்தம் செய்யணும் தூசி தட்டின்னு

      கீதா

      நீக்கு
    2. வணக்கம் நெல்லை சார். கதை எழுதப்பட்ட காலத்தையும் பாருங்கள். அக்காலத்தில் வருணனைகளுக்கே முக்கியத்துவம். (சாண்டில்யன் போல) கதை ஒரு வரி மாத்திரம்.
      Jayakumar

      நீக்கு
    3. கதை, அந்த வீட்டை மனதில் பாவிக்கும் மனிதரைப் பற்றியது என்பது தெரிகிறது. ஆனால் ஓஹோ என்று மனதில் தங்கிவிட்ட இடத்திற்கும் ஆயுள் உண்டு.

      வருணனை.. சாண்டில்யன்... நான் சாண்டில்யன் நாவல்கள் அனேகமா எல்லாம் படித்திருக்கிறேன், அறுபது சத்த்தைத் தாண்டித் தாண்டிப் படிப்பேன். அவர் நாவல் முதல் வரி ஒரு பாராவிலிருந்து இரண்டு பக்கம் இருக்கும். காதலன் காதலி சந்தித்தால் கேரண்டியாக நான்கு பக்கங்களை ஸ்கிப் பண்ணிடலாம்.

      நீக்கு
    4. நெல்லை உங்களுக்கும் தெரிந்திருக்கும், பல முதியவர்கள் தாங்கள் வாழ்ந்த வீட்டை விட்டு மகனுடனோ மகளுடனோ சென்று இருக்கக் கூட மாட்டாங்க. அந்த அளவிற்கு அவரகளின் உணர்வுகள் காலம் காலமாக வாழ்ந்த வீட்டோடு பின்னிப் பிணைந்திருக்கும். வீட்டில் எவ்வளவோ நல்ல காரியங்கள் நடந்திருக்கும். அப்படித்தான் இக்கதையில் அந்த வீட்டோடு பிணைந்த அந்த வீட்டைப் பராமரித்து வரும் ஒரு ஜீவனின் உணர்வுகள்.

      எனக்கு அப்படியான உணர்வுகள் எதுவும் இல்லை ஏன்னா ஜிப்ஸிஸ்..வீடு வீடா......ஆனா அப்படியானவங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

      கீதா

      நீக்கு
    5. ஆனா கீதா ரங்கன்... நீங்க திருப்பதிசாரம் பத்தி எழுத ஆரம்பிச்சான்னா.... எழுதிக்கிட்டே இருக்கீங்களே.. தெரு, கண்மாய்..... னு

      நீக்கு
  3. சாய் கணேஷுக்கு Hats Off! மனதில் நிறைந்துவிட்டார்!

    வருகிறேன் மீண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. டாட்டா நிறுவனத்தின் கான்சருக்கான மாத்திரை நல்ல விஷயந்தான்...

    இதையும் டாட்டா செய்தால் நல்லது. அதாவது ஒருவருக்கு சில வியாதிகள் வரும் என்பதற்கானவை ஜீனில் இருக்குமாமே அல்லது வேறு ஒன்று இப்ப டக்குனு நினைவுக்கு வரலை. அதை அறிந்தால் வரும் முன்னே அதைத் தடுக்கலாமாம்....ஆனால் அதெல்லாம் சாதாரண மனிதர்களுக்கு எட்டாத உயரம். அதை எல்லாருக்கும் எளிதாக சாதாரண கட்டணத்தில் கிடைக்கும் விதமாகச் செய்யலாம் என்று எனக்குத் தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. செயற்கைக் கோல் உருவாக்கிய மாணவருக்கு வாழ்த்துகள். மேன்மேலும் வளர வாழ்த்துகள். இனி காலத்தில் இப்படிச் செயற்கைக் கோள்கள் நிறைய வரும் போல!!

    உலக சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துகளோடு அக்குழந்தை நல்ல பாதையில் பயணிக்க வழி நடத்தப்பட வேண்டும். புகழ் வெளிச்சம் தடையாக இல்லாமல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோல் - கோள் - ஆ பொருளே மாறிவிடுகிறதே!!!

      கீதா

      நீக்கு
    2. கீழே உள்ள கருத்திற்கு முன்னான கருத்து கிட்டத்தட்ட இதுதான்....ஆனால் அதில் சொன்னதோடு ஓரிரு வரிகள் கூடியிருக்கலாம்....

      எனக்கு அந்த மூதாட்டியை அவர் வர்ணித்திருக்கும் விதம் பிடித்தது. அப்படியே மனதில் காட்சியாக விரிகிறது. ஒருகலைப்படம் பார்த்தது போன்று.

      நானும் அனுத்தமாவின் இக்கதையை பார்த்ததும் சென்னையில் ஒரு வீட்டைப் பற்றி அதில் வாழ்ந்த மனிதர்கள், அந்த வீட்டின் தற்போதைய நிலை என்று எழுதியிருந்தேன் எங்கள் தளத்தில். அப்போது எபிக்கு அனுப்பத் தொடங்காத காலம்.. அந்தப் பதிவைத் தேடினேன்...என்ன தலைப்பு கொடுத்தேன் என்று நினைவில்லை. ஆனால் இந்த எழுத்து நடை இல்லை. என் நடை வேறு. அது எழுதிய பின்னர்தான் இக்கதையை வாசிக்க நேர்ந்தது.

      இந்தக் கதையை வாசித்த முன்னரே வாசித்த போது அப்ப அறிமுகம் ஆகியிருந்திராத கமலாக்கா, இப்ப நான் இந்தக் கதையை இங்கு கருத்திற்காக வாசித்த போது டக்கென்று நம் கமலாக்கா நினைவுக்கு வந்தார். கமலாக்காவும் கதைகளில் கட்டுரைகளில் கூட வர்ணனைகளோடுதான் எழுதுவார். உணர்வுகளையும் வர்ணனைகளோடு எழுதுவார்.

      அந்தக் காலத்தில் இவை சற்றுக் கூடுதலாக இருந்திருந்தாலும் கூட சில சமயம் அந்த வர்ணனைகள் தேவைதான் என்று தோன்றும்.

      ஆனால் இப்போது வாசிப்பவர்களுக்கு அது அலுப்பைத்தரும் ஏனென்றால் எல்லாமே இப்போது ராக்கெட் வேகத்தில் இருப்பதால்.

      கீதா

      நீக்கு
  6. அனுத்தமா பொதுவாகவே, அண்ணா சொல்லியிருப்பது போல், பெண்கள் சார்ந்த கதைகளாக உணர்வுபூர்வமாக இருக்கும்.

    இதிலும் அப்படித்தான் ஜீவாயி எனும் ஒரு மூதாட்டியின் அவர் முன்பு வேலை செய்த ஒரு பெரிய பங்களா கூட்டுக் குடும்பத்தோடான அந்த உணர்வுகளை அந்தக் கால எழுத்து நடையில் வருணனைகளோடு எழுதியிருக்கிறார்.

    உணர்வு பூர்வமான கதை என்பதால் ஒன்றி வாசித்தேன்.

    மூதாட்டியை அவர் வர்ணித்திருக்கும் விதம் பிடித்தது. அப்படியே மனதில் காட்சியாக விரிகிறது. ஒருகலைப்படம் பார்த்தது போன்று.

    நானும் அனுத்தமாவின் இக்கதையை பார்த்ததும் சென்னையில் ஒரு வீட்டைப் பற்றி அதில் வாழ்ந்த மனிதர்கள், அந்த வீட்டின் தற்போதைய நிலை என்று எழுதியிருந்தேன் எங்கள் தளத்தில். அப்போது எபிக்கு அனுப்பத் தொடங்காத காலம்.. அந்தப் பதிவைத் தேடினேன்...என்ன தலைப்பு கொடுத்தேன் என்று நினைவில்லை. ஆனால் இந்த எழுத்து நடை இல்லை. என் நடை வேறு. அது எழுதிய பின்னர்தான் இக்கதையை வாசிக்க நேர்ந்தது.

    அப்போது வாசித்த போது அறிமுகம் ஆகியிருந்திருக்காத கமலாக்கா, இப்போது இக்கதையை இங்கு கருத்து சொல்வதற்காக வாசித்த போது நினைவுக்கு வந்தார். கமலாக்காவும் இப்படி வருணைனைகள் கலந்து எழுதுபவர்.

    உணர்வுகளைச் சொல்ல இந்த வருணனைகள் அவசியமாகிய காலம். சில சமயம் அவசியமாகவும் இருக்கிறதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அந்தக் கதாபாத்திரத்தை அப்படிச் சொன்னதால்தான், நிகழ்வுகளை அப்படிச் சொன்னதால்தான் அந்த ஜீவாயிக்கும் அந்த வீட்டிற்குமான பிணைப்பு நல்லவண்ணம் தெரியும். சும்மா சில வார்த்தைகளில் சொன்னால் அது எவ்வளவு தூரம் வாசகர்களைச் சென்றடையும். அதுவும் 1949 ல் வாசகர்கள். அவர்களும் இப்படியான வாசகர்கள்தானே.

    . அந்த உணர்வு, அந்த மூதாட்டி அந்த வீட்டோடு எவ்வளவு உறவாடியிருக்கிறாள், அப்போதைய காலகட்டத்தில் பெரிய பெரிய வீடுகளில்/பங்களாக்களில் பல வருடங்களாக வேலை செய்தவரும் அந்த வீட்டின் குடும்பத்தில் உறுப்பினராகவே இருப்பதாகத்தான் அவர்கள் இருப்பார்கள். அந்த அளவு வீட்டோடும் வீட்டு உறுப்பினர்களோடும் மனதோடு ஒன்றி தன் வீட்டில் உள்ளவர்களை விட , தான் வேலை செய்யும் வீட்டினர் அன்புடன் இருந்தால் அந்த அன்பிற்கு அடிமையாகி, இந்த ஜீவாயி போலதான் உருகிப் போவார்கள்.

    அப்படியானவர்களைப் பொருத்தவரை இந்த ஜீவாயியைப் பொருத்தவரை இந்த வீடு வீடல்ல. அவளது உயிர். அவள் கண்ட அந்த மனிதர்களின் சுவாசம் நிறைந்த இடம்....அதைத்தான் அனுத்தமா அவர்கள் ஒவ்வொரு வரியிலும் கொண்டு வருகிறார்.

    இப்போதைய 80, 80 ஐ கடந்தவர்கள் 90 களில் இருப்பவர்களைக் கேட்டுப் பார்த்தால் அவர்கள் பெரிய குடும்பத்திலும் வீட்டிலும் வாழ்ந்தவர்களாக இருந்தால், அவர்களும் ஜீவாயி போன்ற ஒரு நபரைச் சொல்வார்கள் என்பது சர்வ நிச்சயம்.

    அப்படியான ஜீவாயி ஒருவர் இப்போது இருந்தால் கண்டிப்பாக இந்தக் கதை ஜீவாயி போன்றுதான் இருப்பார். தன் குழந்தைகள் இறந்தால் கூட அழ மாட்டார்கள் ஆனால் தான் வேலைசெய்யும் குடும்பத்தின் வீட்டினரின் துக்கத்தில் மாய்ந்து போவார்கள். இப்படியானவர்களிடம் பேசிப் பாருங்கள் கதை கதையாகச் சொல்வார்கள் அதுவும் சும்மா இல்லை, உணர்வு பூர்வமாக.....துக்கத்தைச் சொல்லும் போது அழுவார்கள். நல்ல தருணங்களைச் சொல்லும் போது கண்ணில் ஈரத்துடன் பேசுவார்கள், கலகலப்பைச் சொல்லும் போது சிரித்துக்கொண்டே சொல்வார்கள்..."அந்தப் பிள்ளை இருக்கே அப்படி சேட்டை செய்யும்....இப்ப எங்கன எப்படி இருக்காகளோ"

    அந்த மனிதர்கள் இல்லை என்றாலும் வீட்டிற்கும் உயிர் உண்டு அதில் அவர்களின் உணர்வுகள் கலந்திருக்கும் என்று ஜீவாயி அந்த உணர்வுகளிலேயே வாழ்வதால்தான் அந்த வீடு இத்தனை நாள் வெறிச்சோடி டல்லாக இருந்த வீடு மீண்டும் மனிதர்களின் வரவால் நல்ல நிகழ்வால் புத்துயிர் பெறும் போது அந்த ஜீவாயி எனும் ஜீவன் குதூகலிக்கிறது.

    ஆசிரியர் அனுத்தமா அந்தக் கதாபாத்திரத்தையும் வீட்டையும் செதுக்கியிருக்கிறார்.

    //அவள் முகத்தில் ஒரு பளபளப்பு. அவள் கண்களில் ஜீவன் ததும்பிற்று. உதடுகள் பெருமிதம் தளும்பத் துடித்துக் கொண்டிருந்தன. அவள் கைகள் கீழேயிருக்கும் குப்பையைத் தடவித் தடவித் தள்ளிச் சேர்த்தன. அந்த ஸ்பரிசத்தில் என்ன நளினம், கனிவு, ஆதரவு! அதற்கு எதை இணை கூற முடியும்? //
    இதற்கு அடுத்து வரும் வரி

    //சைத்திரிகன் தன் இருதயத்தில் வெடித்து வரும் ஓவியம் பெற்றுக் காணும் போது அடையும் மகிழ்ச்சி, அவள் உள்ளத்தில் அரவம் செய்தது. //

    கதையை ஆசிரியர் மிகவும் அனுபவித்து மனதில் காட்சிகளாய் விவரித்து அதனோடு பின்னிப் பிணைந்து எழுதியிருக்கிறார்!

    இப்படி சில இடங்கள் வர்ணனைகள் கூடுதலோ என்று தோன்றலாம். ஆனால் இது அக்காலத்து நடை. எப்படி ஒரு மேடை நாடகத்தில் நடிப்பவர்கள் உணர்ச்சிகளைக் கொஞ்சம் மிகையாகக் காட்டி வசனங்களைக் கொட்டி நடித்தால்தான் பார்வையாளர்களை ரீச் ஆகுமோ அப்படித்தான் இதுவும்.

    //இலக்கிய ஈடுபாடு உள்ளவர்களும், //

    யெஸ்....இதை மிக நல்ல இலக்கியம் தரமான கதை என்றே சொல்வேன்.

    //அவர்கள் ஓர் ஆத்மாவுக்கு அளித்த ஆனந்தத்தை அறியாது அவர்கள் அகத்தில் இருந்தனர். //

    நச்சென்று கண்களில் ஈரம் துளிர்க்க வைக்கும் வரி....இதற்கு மேலே வரும் வரிகளில் ஜீவாயியின் முடிவைக்கூட நேரடியாகச் சொல்லாமல் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

    அருமையான வரியில் !. முடிவு. உணர்வுக் கலவை நிறைந்த வரி! நிஜமாகவே ஒரு நல்ல கலைப்படம் பார்த்த உணர்வு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான ஒன்றிய உணர்வோடு எத்தனை பேர்கள் கதைகளை வாசித்துக் கருத்திடுவார்கள் என்று தெரியவில்லை. மனம் நெகிழ்ந்து சொல்கிறேன், சகோதரி. உங்கள் வாசிப்பு நேர்த்தி பிரமாதம்.

      அனுத்தமா அவர்கள் இன்று இல்லாது இருக்கலாம். இருந்தாலும் என்ன?
      என்னைப் போன்றோர் அவரைப் போன்ற எழுத்து முன்னோடிக்களை வாசித்துத் தானே வளர்ந்திருக்கிறோம்?
      திடீரென்று வானத்திலிருந்து குதித்து விடவில்லையே! அந்த நன்றியில் சொல்கிறேன். அனுத்தமா அவர்கள்
      இன்றிருந்து தாங்கள் சொல்லியிருப்பதை எல்லாம் வாசித்தால் மிகவும் மகிழ்ந்து போயிருப்பார்கள்.
      மிக்க நன்றி, தி.கீதா.

      நீக்கு
    2. மிக்க நன்றி ஜீ வி அண்ணா.

      ஆனால் எனக்குச் சில சமயங்கள் இப்படி முடிகின்றது. என் கதைகள் பல பாதியில் நிற்கின்றன ஒன்றிப் போய் எழுத முடியாததால்!!!!!!

      கீதா

      நீக்கு
    3. அதற்குக் காரணம்
      நம் படைப்பு காமா சோமான்னு இருந்து விடக் கூடாது என்ற அக்கறையினால் தான். நுணுக்க வேலைப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை.
      இரண்டு செவ்வாய்களுக்கு எழுதினீர்களென்றால் கைவந்த விஷயமாகி விடும்.

      நீங்களும் பானுமதி மேடமும் சேர்ந்து எழுதிய கதையை நான் இன்னும் மறக்கவில்லை.

      ஆக ஒரு செவ்வாய்க்கு எழுத ஆரம்பித்து விடுங்கள். சரியா?

      நீக்கு
    4. அதற்குக் காரணம்
      நம் படைப்பு காமா சோமான்னு இருந்து விடக் கூடாது என்ற அக்கறையினால் தான். நுணுக்க வேலைப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில்//

      ஆமாம் அதேதான் ஜீவி அண்ணா. டக்கென்று என்னால் எழுதிவிட முடிவதில்லை. அதனுள் அப்படியே நுழைந்தால்தான் எழுத வருகிறது. அதுவே இழுத்துச் செல்லும். அப்படியான நிலை தற்போது இல்லாததால்.

      கீதா

      நீக்கு
    5. ஆக ஒரு செவ்வாய்க்கு எழுத ஆரம்பித்து விடுங்கள். சரியா?//

      மிக்க நன்றி ஜீவி அண்ணா. முயற்சிக்கிறேன். இதுதான் என்னால் இப்போது சொல்ல முடிந்த ஒன்று. இதோ அனுப்புகிறேன் என்று உறுதியளிக்க முடிவதில்லை.

      ஸ்ரீராமும் என்னிடம் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார். என்னை மிகவும் ஊக்குவிப்பவர்களில் அவரும் ஒருவர். அதுவும் நான் இங்கு அனுப்பத் தொடங்கிய ஆரம்பக்காலத்திலிருந்தே, என் உணர்வுபூர்வமான, சில வித்தியாசமான கதைகளை வாசித்து மெச்சி ஊக்கம் கொடுத்தவர். இப்பவும் கேட்டுக் கொண்டே இருக்கிறார். நான் தான் அனுப்பாமல் இதோ இதோ அதோ என்று டபாய்த்துக் கொண்டே இருக்கிறேன். இதோ அனுப்புகிறேன் என்று சொன்ன என்னால் முடியவில்லை. இன்று பணி நாளையும் பணி....அடுத்து பயணம், அடுத்த வியாழன் வெள்ளி வரை பணி...

      கீதா

      நீக்கு
    6. ஸ்ரீராமை, அவரும் ஒருவர் என்பதையும் தாண்டி என்னை ஊக்குவிப்பதில் மிக மிக முக்கியமானவர் என்பேன்.

      கீதா

      நீக்கு
    7. @கீதா
      இன்று தண்ணீர் வந்ததா? ஒரு பதிவுக்குரிய கருத்துக்களை மடமடவென்று குழாய் நீர் போல் கொட்டித் தீர்த்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

      நீக்கு
    8. சில வாரங்களாக சனிக்கிழமைகளில் ஜீவி சார் ஒதுங்கியே இருந்தார். இந்த வாரம் அவரை கீதா பின்னூட்டம் இட வைத்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
    9. ஜீவாயி என்பதால் ஜீவி எட்டிப்பார்த்தாரோ?

      நீக்கு
    10. ஹாஹாஹாஹா ஜெ கே அண்ணா இங்கு தண்ணீர் பிரச்சனைன்னு இல்லை எங்க பகுதில. எங்க தெருல. ஆனா நாங்க சிக்கனமாதான் இருக்கோம்!!!.

      எழுதி வைத்திருந்தேன். இன்னிக்குப் பணிகள்...இடையிடையே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறப்ப வந்து போட்டுட்டு, என்னைக் குறிப்பிட்ட கருத்துகளுக்கும் பதில் கொடுத்துட்டு ஓடினேன்...அடுத்த வாரம் இறுதி வரை பணிகள். இடையில் ஓரிரு நாட்கள் பயணங்கள்.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா.

      கீதா

      நீக்கு
  8. எனது முந்தைய கருத்தைக் காணவில்லை....ஸ்பாமில் இருக்கான்னு பாருங்க ப்ளீஸ்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பானுக்கா இப்பவும் சொல்வார் நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதலாமா என்று கேட்கிறார். எனக்குதான் முடியவில்லை. அவரும் முக்கியமானவர் என்னை ஊக்குவிப்பதில்

      கீதா

      நீக்கு
  9. 1949 ல் இப்படியொரு கதை வாவ் என்று சொல்ல வைக்கிறது. அதாவது ஒரு வீடு சும்மா இருக்கு அதில் ஒரு சுப நிகழ்வைக் கொண்டாடலாம் என்று ஒரு குடும்பம் வருவது அவர்களுக்கு அந்த வீடு கொடுக்கப்படுவது...என்ற சிந்தனை....

    1949 ல் இப்படிச் சிந்தித்திருக்கிறார்! இப்போதும் அப்படித்தானே பல பெரிய வீடுகள் நிகழ்வுக் கூடங்களாக மாற்றப்படுகின்றன அல்லது resort ஆக மாறுகின்றன.

    தஞ்சாவூர் அருகில் அக்ரஹாரம் போன்று அங்கிருந்த பழைய வீடுகளை இப்பொது தங்கும் இடங்களாக மாற்றி சுற்றிலும் நிலத்தை வாங்கி ஒரு கிராமம் போலவே பல வசதிகளுடன், விளையாட்டுகள், கிராமத்து சமையல் உணவு, அங்கேயே சில விழாக்ளை நடத்துதல், குழந்தைகள் விளையாட என்று பெரிய வளாகத்தில் தெருவில் இருக்கும் வீடுகளை பழமையுடன் அப்படியே வைத்து மாற்றியிருக்கிறார்கள்.

    சமீபத்தில் பெங்களூரில் ஒரு கல்யாணம் சென்று வந்தேன். அந்த இடம் கூட இப்படியான பழைய வீடு, குளத்தோடு - இப்ப அங்கு சின்ன நீரோடை அருவி இருக்கறா மாதிரி சுற்றிலும் மரங்களடர்ந்த காடு போல இருக்கு ஜெபி நகரில்.... பெரிய நிலப்பரப்பு என்றுதான் தோன்றியது. அதைக் கொஞ்சம் மேம்படுத்தி உள்ளே பல வசதிகள் செய்து....பழைய கலை வண்ணத்துடனான மண்டபங்கள் கோயில் போன்ற சிற்பங்கள் என்று ஒரு சுற்றுலா தலம் போல இருக்கும் ஒன்று. பழைய வீடுகளில் உள்ளது போன்ற நிலைப்படி, கழிவறைகள் கூட அந்தச் செங்கற்களின் மீது வெள்ளையடித்து ஆனால் தற்போதைய வசதிகள் செய்து பராமரிக்கும் இடம். கல்யாணங்கள், விழாக்கள், கம்பெனிகளுக்கான மீட்டிங்குகள் என்று விடுகிறார்கள் போலும்.

    https://www.thetamarindtree.in/ இந்தச் சுட்டிக்குப் போய் பார்த்தால் தெரியும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஜீவாயி போன்றவர்களை, வீட்டில் இருப்பவர்கள் வேறு ஊருக்குப் போக வேண்டி வந்தால் அங்கும் தங்களோடவே கூட்டிச் செல்வார்கள், அவுட் ஹவுஸ் கொடுப்பார்கள்....இப்படியானவர்களுக்கு நிறைய நினைவுகள் இருக்கும் அசை போட...இப்ப கூட சென்னையிலிருந்து தங்கள் அபார்ட்மென்டில் காலம் காலமாக வேலை செய்து வந்தவரை தன் மகளுககக இங்கு வந்து அபார்ட்மென்டில் தங்கச் செய்துள்ளார் என் தோழி. அந்த அளவு விசுவாசத்துடன் இருப்பாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஜெ கெ அண்ணா உங்களுக்கு நன்றிகள் பல. நீங்க தேடித் தேடி வித்தியாசமான கதைகளை, புதிய புதிய எழுத்தாளர்களை, வித்தியாசமான எழுத்தாளர்களை இங்கு தருகிறீர்கள். எனக்கு அது ரொம்பவே நன்றாக இருக்கு.

    அதுவும் அறிந்திராத எழுத்தாளர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் வயதின், உடல் நலத்தின் சிரமம் பாராமல் பகிர்வதற்கு....Hats off to you Anna.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    கைவிடப்பட்ட விலங்குகளை தன் சொந்த செலவில் காப்பகம் வைத்து காப்பாற்றி வரும் இளைஞர் சாய் விக்னேஷ் அவர்களை பாராட்டுவோம். எத்தனைப் பேருக்கு இந்த மாதிரியான நல்ல மனது அமையும்..? அந்த விலங்குகளுக்கு அவர்தான் கடவுளாக இருந்து வாழ்ந்து வருகிறார்.வாழ்த்துகள்.

    சிறு வயதிலேயே தன் திறமைகளை வெளிப்படுத்தும் குட்டிப் பெண்ணின் சாதனையும் பாராட்டப்பட வேண்டியது. தொடர்ந்து அவரின் நினைவாற்றல்கள் பிரகாசிக்க வாழ்த்துவோம்.

    செயற்கை கோள் தயாரிப்புகளில் சாதனை புரிந்திருக்கும் மாணவரையும் பாராட்டுவோம். சிறிய வயதிலேயே நல்ல சிந்திக்கும் ஆற்றல் பெற்ற இவர்களுடைய சாதனைகள் பயனுள்ளதாக அமைந்திருப்பதால், இவர்கள் வாழ்க்கை முழுவதும் சிறப்பாகவே இருக்க ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.நல்ல செய்திகளுடனான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே .

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. @ கமலா ஹரிஹரன்
      கீதாவின் பின்னூட்டத்தைப் பார்த்தீர்களா?
      //இங்கு கருத்திற்காக வாசித்த போது டக்கென்று நம் கமலாக்கா நினைவுக்கு வந்தார். கமலாக்காவும் கதைகளில் கட்டுரைகளில் கூட வர்ணனைகளோடுதான் எழுதுவார். உணர்வுகளையும் வர்ணனைகளோடு எழுதுவார்.// நல்ல பாராட்டு.

      நன்றி மேடம்

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      சகோதரி கீதாரெங்கன் அவர்களின் சில பின்னூட்டங்கள் ஸ்பாமில் உள்ளதாக காலையில் நான் இங்கு வந்த போது அவரே குறிப்பிட்டிருந்தார். அதனால் அதில் சிலதை நான் படிக்க இயலவில்லை. பொதுவாக ஒரு பதிவுக்கு வரும் கருத்துக்களையும் நான் எப்போதும் தவறாது படிப்பதுண்டு. .

      இப்போது நீங்கள் சொன்னவுடன் படிக்க முடியாதவற்றை (இப்போது வெளிவந்தவற்றை) படித்தேன். சகோதரி தந்த பாராட்டுக்களுக்கு நான் தகுதியுள்ளவளா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அவரின் ஊக்கம் நிறைந்த பின்னூட்டங்கள் என்னை இதுவரை நிறைய எழுத வைத்துள்ளது. அதற்கு நான் எப்போதும் அவருக்கு நன்றியுடையவளாக இருப்பேன்.

      மேலும் எந்த ஒரு பதிவுக்கும் அவர் நிறைய நமக்கு தெரியாத விஷயங்களை அலசி ஆராய்ந்து நன்றாகவும், விளக்கமாகவும் பின்னூட்டங்களை தருவார். அவரின் அந்த திறமைகளை நாம் அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும். இந்தக்கதைக்கும் அவர் அலசி தந்த கருத்துரைகளை படித்து மகிழ்ந்தேன். அவரின் கற்பனைகளே அலாதியானது. நல்லதொரு பின்னூட்டங்களுக்கு நன்றி சகோதரி.

      அவரின் பின்னூட்டத்தை குறிப்பிட்டு சொன்ன தங்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  13. ஜெ கே அண்ணா உங்க 'என்னுரை' ரொம்ப நல்லாருக்கு. கவிதையும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஜெய்குமார் சந்திரசேகர் சகோதரரே

    இன்றைய கதைப்பகிர்வும் அருமை. முதலில் தங்களது என்னுரை என்ற முன்னுரையும், கதை குறித்த கவிதையும் நன்றாக உள்ளது.

    கதாசிரியரை ப்பற்றிய சுட்டியில் சென்று படித்து வந்தேன். அநுத்தமா அவர்கள் எத்தனை திறமையானவர்.. நீங்கள் சொன்னபடி காலத்தின் மாறுதல்கள் அவர் முகத்தில் தன் அடையாளத்தை காட்டினாலும், அவர் கண்களில்தான் அறிவின் சுடராக எத்தனை பிரகாசம்..! இவர் கதைகளை முன்பு நூலகத்திலிருந்து புத்தகங்கள் வாங்கி படிக்கும் போது படித்துள்ளேன். இந்தக்கதை படித்ததில்லை.

    கதையில் அந்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை விவரிக்கும் இடங்களும், அது சம்பந்தப்பட்ட வர்ணனைகளும் படிக்க நன்றாக உள்ளது.

    /கல்லும் சுண்ணாம்பும் கொண்ட அக்கட்டிடம் தன் சதையில் சதை, ரத்தத்தில் ரத்தம் எனும் மகவின் ஆசை மணத்துடன் கமழ்ந்தது அவளுக்கு; பாசத்தினால் அவளைக் கட்டிப் பிணைத்தது. அந்தக் கிழவி அந்த வீட்டிலேயே தனிமையாக, பாழடைந்த வீட்டைக் காக்கும் பரதேசிப் பிசாசாக விளங்கினாள்./

    கதையில் வீடும், அதன் பிணைப்பாக ஜீவாயியும் மட்டுமே சுற்றி வந்தாலும் அவர்களது மனநிலைகள் கதை படிக்கும் போது நம் மனத்தோடும் பிணைந்து கொள்கிறது. அந்த அளவிற்கு தெளிவான மிக கனமான வார்த்தைகளை கொண்ட கதை. ரசித்துப்படித்தேன்.

    இதன் சுட்டிக்கு என் கைப்பேசியில் இன்று ஏனோ உள்ளே செல்ல முடியவில்லை. பிறகு செல்ல முடியும் போது கண்டிப்பாக மற்றொரு தடவை படிப்பேன். இப்படிப்பட்ட நல்ல எழுத்துக்களை பார்வையாக்கித்தரும் தங்களது திறமைகளுக்கும், பங்களிப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. பாஸிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை. முக்கியமாக சாய் விக்னேஷ் பிரமிக்க வைக்கிறார். இப்படியான சேவைகளைச் செய்ய பெரிய மனது வேண்டும்.

    அவருக்கு நம் வாழ்த்துகள், பாராட்டுகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. ஜெயகுமார் சந்திரசேகரன் சாரின் இன்றைய கதைப் பகிர்வு மிக அருமையான கதை.

    அனுத்தமா எனும் அன்றைய எழுத்தாளரைப் பற்றி அறிகிறேன். ஓ! 1949 ல் எழுதப்பட்ட கதை. அது தெரிகிறது. சாண்டில்யன் கதைகளிலும் கூட இப்படியான வர்ணனைகள் இருக்கும். அவர் கதைகள் நான் வாசித்திருக்கிறேன்.

    பெரிய குடும்பத்து வீட்டில் பணி புரிந்த பெண்மணி அதன் பின் அந்த வீட்டை, வயதான பிறகும் கூட வருடங்களாய்ப் பராமரித்து வரும் பாதுகாத்து வரும் ஜீவாயி எனும் முதிய பெண்மணியின் அந்த வீட்டோடும், அதில் அன்றுவாழ்ந்த மனிதர்களுடனான பெந்தத்தை உணர்ச்சிக் குவியல்களாகத் தெளித்திருக்கிறார் கதாசிரியர். நகமும் சதையுமாக என்று சொல்வது போல் வீட்டின் ஒவ்வொரு கல்லிலும் ஜீவாயி ஒட்டி உறவாடி பராமரிக்கிறார். அதனால் பேய் வீடு போன்று இருந்த அந்த வீடு அன்று மங்கல நிகழ்வினால் புத்துயிர் பெறுவதை மிக அழகான வார்த்தைக்கோர்வைகளால் ஜீவாயி மூலம் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.

    பண்ணை வீடுகளில் வேலை செய்யும் பலர் இப்படித்தான் தங்கள் எஜமானரோடு இருப்பதை ஆசிரியர் எழுதியிருக்கும் காலத்தில் பார்க்கலாம்

    இப்போது அப்படியான மனிதர்களைப் பார்க்க முடியுமா என்றால் மிகப் பெரிய கேள்வி குறி.

    உங்கள் கவிதையிலேயே கதையை அடக்கிவிட்டீர்கள்!. கதையின் படமும் அருமை.
    //கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டன. அதாவது படித்து இன்புற ஏட்டுக் கவிதைகள். படித்து பின்பற்ற கல்வெட்டுகள். //

    என்னுரையில் இந்த வரி மிக அருமை.

    மிக்க நன்றி சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @துளசி சார்
      துளசி சாரும் எழுதிய விதத்தைப் பாராட்டியிருக்கிறார். நன்றி சார்.

      நீக்கு
  17. சாய் விக்னேஷ் வாழ்க வளத்துடன்...

    பதிலளிநீக்கு
  18. கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்கும் சாய் விக்னேஷ் சேவை பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும். சிறு வயதில் சினிமா, நண்பர்கள் என்று காலத்தை போக்காமல் விலங்குகளுக்கு சேவை செய்வது பெரிய விஷயம். வாழ்த்துக்கள் சாய் விக்னேஷ்.

    புற்றுநோயை குணப்படுத்த ரூ.100க்கு மாத்திரை: டாடா இன்ஸ்டிடியூட் சாதனைக்கு பாராட்டுக்கள்.
    முதல் முறை வந்தவர்களுக்கு மறுமுறை வராமல் இருக்க என்பது அறிந்து மகிழ்ச்சி.

    எல் கே ஜி மாணவி ரியாஸ்ரீக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    பெற்றோர், ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.

    செயற்கைக்கோள் தயாரித்த மாணவன் ரித்திஷ்க்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  19. அநுத்தம்மா அவர்கள் கதை பகிர்வு அருமை.

    ஜீவாயி அவர்களுக்கு அந்த வீட்டின் மேல் உள்ள பந்தம் , பாசம் சொல்லபடுகிறது அழகாய்.

    //அந்த வீட்டிலேயே தனிமையாக, பாழடைந்த வீட்டைக் காக்கும் பரதேசிப் பிசாசாக விளங்கினாள்.//

    இதை படிக்கும் போது அந்தக் காலத்தில் அடுத்தவர் சொத்துக்கு ஆசைபடாத மக்கள் இருந்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
    வீட்டின் உறவினர்கள் யாரும் சொந்தம் கொண்டாடி அந்த வீட்டை அபகரிக்கவில்லை . அப்படி அபகரித்து இருந்தால் ஜீவாயி அவர்களின் நிலை என்னாவாகி இருக்கும்!


    //அம்முதிய மாதின் முகத்தில் ஜ்வலிக்கும் ஒளியின் முன் கேவலம் சூரியனின் வெளிச்சம் எம்மாத்திரம்? சந்திரிகையின் தண்மையுடன், வெய்யிலின் ஜகஜ் ஜோதியைப் பொருத்திக் கொண்ட அவளது வதனத்தின் பொலிவுதான் என்ன?//


    ஜீவாயி அவர்களின் படம் கதையில் அவர் வர்ணித்தது போலவே ஜகஜ் ஜோதியாக ஜொலிப்பது உண்மை.
    வதனத்தின் பொலிவு , கண்களில் ஒளி, உதட்டில் சிறு புன்னகை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவாயி படம் இணையத்தில் இருந்து எடுத்தது. பின்னோட்டத்திற்கு நன்றி.

      நீக்கு
  20. இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்திகள் நன்று. முதல் செய்தி நானும் படித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!