சனி, 30 மார்ச், 2024

பாலாவின் கனவு + நான் படிச்ச கதை

 இவரது ஆசை அல்லது கனவு நிறைவேற வாழ்த்துவோம்.



===========================================================================================



சின்னத்திரையில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் பாலா. இவர் ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்டோருக்கான காப்பகங்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார். அவர் தன்னுடைய சொந்த செலவில்  மலை கிராம மக்களுக்கு 4 இலவச ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் பரிசளித்திருந்தார். இந்நிலையில், மின்சார ரெயிலில் சமோசா விற்கும் பெண் தொழிலாளிக்கு நடிகர் பாலா ஆட்டோ பரிசளித்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பகிர்ந்து தெரிவித்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில்,

அந்த அக்காவின் பெயர் முருகம்மாள். அவருக்கு திருமணமாகி சில வருடங்களிலேயே அவரது கணவர் உயிரிழந்துவிட்டார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் மின்சார ரெயிலில் சமோசா விற்று வருகிறார். இவரது ஆசை சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டவேண்டும் என்பதுதான். இவரது இந்த ஆசை என்னுடைய ரோல் மாடலான ராகவா லாரன் லாரன்ஸ் மாஸ்டர் உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

===================================================================================================

 JKC பக்கம்

நான் படிச்ச கதை

நிழலும் நிஜமும் - பாமா

பாமா (பிறப்பு 1958) பாமா ஃபௌஸ்டினா மேரி பாத்திமா ராணி சூசைராஜ் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பிறந்த ஊர் புதுப்பட்டி எனும் கிராமம். பாமாவின் தாத்தா இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். அவரது தந்தை, சூசைராஜ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார்.

பட்டப்படிப்பு முடிந்ததும், பெண்கள் பள்ளியில்  ஆசிரியரானார், அதைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக பணியாற்றினார். கன்னியாஸ்திரி மடத்தில் சேர்ந்த பிறகு, தலித் கத்தோலிக்கர்களுக்கென தனி பயிற்சி மையம் இருப்பதை பாமா அறிந்தார்.  தலித் கத்தோலிக்க பயிற்சி மையம் என்ற ஜாதி வேறுபாட்டை பொறுக்கமுடியாமல் மடத்தை விட்டு வெளியேறினார்.

தனது வாழ்க்கையையே ஒரு கருவாக கொண்டு கருக்கு என்ற தனது முதல் நாவலை எழுதினார். பெருமாள் முருகனுக்கு நேர்ந்தது போன்று எதிர்ப்புகள் பல உருவாக கிராம சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். பின்னர் உத்திரமேரூரில் தலித் சிறுவர் தொடக்கப் பள்ளியை தொடங்கினார்.

"இன்று இருக்கும் திருமணம் மற்றும் குடும்பத்தின் அமைப்பு மற்றும் சமூக அமைப்பு ஆகியவை பெண்ணுக்கு ஆதரவாக  இல்லை. " …… "நான் நானாக இருப்பதை விரும்பினேன்; யாருக்காகவும் என் சுயத்தை, என் இருப்பை, என் சுதந்திரம் மற்றும் அடையாளத்தை இழக்க நான் விரும்பவில்லை."  என்று திருமணம் செய்யாமல் வாழ்ந்தார்.

கருக்கு (1992) நாவல் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றதால்,  சங்கதி (1994), குசும்புக்காரன் (1996), வன்மம் (2002), ஒரு தட்டும் எருமையும் (2003), கொண்டாட்டம் (2009), ஆகிய நாவல்களை வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதினை இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும், முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமா அவர்களுக்கு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழக அரசு வழங்கியுள்ளது.

ஆயிஷா நடராஜன் என்பது போன்று இவரும்  கருக்கு பாமா என்றே இலக்கிய உலகில் அறியப்படுகிறார்.

கருக்கு நாவலின் முன்னுரையில் பாமா கூறுகிறார்:

வாழ்க்கையின் பல நிலைகளில் பனங்கருக்குப் போல என்னை அறுத்து ரணமாக்கிய நிகழ்வுகள், என்னை அறியாமையில் ஆழ்த்தி முடக்கிப் போட்டு மூச்சு திணற வைத்த அதீத சமுதாய அமைப்புகள், இவற்றை உடைத்தெறிந்து அறுத்தொழித்து விடுதலை பெறவேண்டும் என்று எனக்குள் எழுந்த சுதந்திரப் பிரளயங்கள். இவை சிதறடிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எனக்குள் கொப்பளித்துச் சிதறிய குருதி வெள்ளங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இப்புத்தகத்தின் கரு.

புரிந்து கொண்டால் சரி.

முன்னுரை.

கதை அல்லாத கதை வரிசையில் இக்கதையும் ஒன்று. “இருட்டு உலகம்” போன்று இந்தக் கதையும் ஒரு நாட்குறிப்பாக உள்ளது. வினோதம் என்னவென்றால் இந்தக் கதையின் களமும் “இருட்டு உலகம்” போன்று மதுரையாக அமைந்ததே. கதை ஈகையின் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

ஆபிராமிய மதங்களான கிருத்துவமும் இஸ்லாமும் பண்டிகைக் காலத்தில் வறியவருக்கு கொடை அளித்தலை வாழ்வின் கடமையாகக் கூறுபவை. கிருத்துவர்கள் இதனை டைத் எனவும் இஸ்லாமியர் ஜகாத் என்றும் கூறுவர். கதை ஆசிரியர் கிருத்துவர் என்பதால் ஈகைக் கடமையை எண்ணிப் பார்க்கிறார்/.

கதை,  ஆசிரியரின் நாட்குறிப்பாக உள்ளது. ஆசிரியர் தன்னிடம் பிச்சை எடுத்த சிறுவனுக்கு ஒரு ரூபாய் பிச்சை இட்டார். பின்னர் பேருந்துக்கு காத்திருக்கையில் கூட்டம் கூடியதை பார்த்து சென்று பார்த்தபோது ஒருவன் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது முன்பு இவர்களிடம் பிச்சை எடுத்த பையன் தாமதியாது தான் பிச்சை எடுத்த காசுகள் முழுவதையும் அவனுக்கு பிச்சை போட்டான். இது ஆசிரியரின் மனதை உறுத்துகிறது. வசதி இருந்தும் ஒரு ரூபாய் மாத்திரம் பிச்சை போட்டது நிழல் என்றும், வசதி இல்லாமல் பிச்சை எடுக்கும் பையன் தான் பிச்சை எடுத்த காசுகள் அனைத்தையும் “கர்ணன் தானமாக” மற்றவனுக்கு தந்ததை நிஜம் (அசல்) என்றும் கருதுகிறார். இதுவே “நிழலும் நிஜமும்” என்ற தலைப்பு.

தன்னைத்தானே சவுக்கால் அடித்து ரத்தக்களரி ஏற்படுத்திக்கொள்ளும் மனிதனில், முள்முடி தரித்து சிலுவையைச் சுமந்த யேசுவை ஆசிரியர் கண்டார் போலும்.

கதை அழியாசுடர்கள் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. சிறுகதைகள் தளத்திலும் இக்கதை உண்டு. கதை முழுதும் தரப்பட்டுள்ளது. படிக்க எளிமையாக போரடிக்காமல் படிக்க முடியும். சுட்டிகள் கடைசியில்.

நிழலும் நிஜமும் பாமா 

வருடத்திற்கு இரண்டு முறைதான் நாங்கள் புதிதாக துணி எடுத்துத் தைப்போம். ஒன்று கிறிஸ்து பிறப்புத் திருவிழாவுக்கு. இன்னொன்று எங்கள் ஊர் மாதா திருவிழாவுக்கு. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்கு மதுரைக்குச் சென்று துணிமணி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.  பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நானும், என் மனைவியும் பத்து மணிக்கு வரும் வாய்தா வண்டியில் மதுரைக்குப் புறப்பட்டோம். அந்தப் பேருந்தில்தான் மதுரைக் கோர்ட்டுக்கு வாய்தாவுக்குச் செல்பவர்கள் வழக்கமாகச் செல்வார்கள். அதனாலேயே அந்தப் பேருந்துக்;கு வாய்தா வணடி என்ற பெயர் வந்தது. அதை யாரும் இப்போது மதுரைப் பேருந்து என்று சொல்வதில்லை.

எங்கள் ஊர்ப்பேருந்து நிலையத்தில் அவ்வளவு கூட்டமில்லை. உட்கார்ந்து கொண்டு வசதியாய்ப் பயணித்தோம். பேருந்துகளில் இருக்கையைப் பிடித்து உட்கார்ந்து விட்டாலே பெரிய சாதானையாகத்தான் இருக்கிறது. பயணிக்கும்போதே யார்யாருக்கு எவ்வளவு விலைகளில், என்னென்ன வகையானத் துணிகள் எடுக்க வேண்டும் என்று பேசி முடிவெடுத்துக் கொண்டோம். கையில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தது. எவ்வளவுக் கெவ்வளவு சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டுமோ அவ்வளவுக் கவ்வளவுச் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்று மனதில் எண்ணிக் கண்டேன். கூடுமானவரையில் ஓர் ஐநூறு ரூவாயாவது இதில் மீதி கொண்டுவரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இப்படிப் பார்த்துப் பார்த்துத்தான் செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. எங்களது பொருளாதார நிலை அப்படி.

நான் ஒருவன் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை. மூன்று பிள்ளைகளும் முறையே, மூன்று, இரண்டு, ஒன்று வகுப்புகளில் வரிசையாகப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். நல்லவேளையாக மூன்று பேரும் பையன்களாகப் பிறந்தார்கள் என்று உள்ளூர மகிழ்ந்தாலும் மூன்றாவது பிறந்தவன் பெண்ணாகப் பிறந்திருக்கலாம்  என்ற ஆசை எனக்குள் இருக்கிறது. என் மனைவிக்குக்கூட அப்படி ஒரு ஆசை இருக்கிறது. பெண்பிள்ளை என்றால் டிசைன் டிசைனாக டிரெஸ் போட்டு அழகு பார்க்கலாம் விதவிதமா நகைநட்டுப் போட்டுப் பார்க்கலாம் என்று அடிக்கடி கூறுவாள். அதற்கெல்லாம் வருமானம் இல்லையென்றாலும் ஆசைக்கு மட்டும் குறைவில்லை. எனக்கு அந்தமாதிரியெல்லாம் எண்ணமில்லை. பெண்பிள்ளை என்றால் எனக்குப் பிடிக்கும். பிடிக்கிறதெல்லாம் வாழ்க்கையில் கிடைத்து விடுகிறதா என்ன?

ஆசிரியர் பயிற்சிபெற்று ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் வேலை கிடைக்கவில்லை. அட்டவணைச் சாதியில் பிறந்திருந்தாலும், கிறிஸ்தவன் என்ற காரணத்தால் நான் பிற்படுத்தப்பட்ட சாதிக்காரனாக்கப்பட்டுவிட்டதால் என்னோடு படித்த அட்டவணைச்  சாதியைச் சேர்ந்த  இந்துப் பையன்கள் வேலையில் சேர்ந்து கைநிறையச் சம்பாரிக்கும்போது நான் மட்டும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் எங்கள் ஊர்ப்பள்ளியில் நியமிக்கப்பட்டு மாதம் இரண்டாயிரம் சம்பளத்தி;ல் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஓய்வு நேரத்தில் என் மனைவி தீப்பெட்டி ஒட்டுவதால் கிடைக்கும் பணத்தையும் வைத்துக் கொண்டு எப்படியோ சமாளித்து வருகிறோம்.

வருடத்தில் ஒருமுறையாவது இந்தப் பிள்ளைகளுக்கு நல்ல துணிமணி எடுக்க வேண்டும் என்றுதான் இந்த மதுரைப் பயணம். மதுரை விளக்குத் தூண் பக்கம்  சென்று துணிமணிகளை வாங்கிக்கொண்டு திருப்தியாக வெளியே வந்தோம். நான் நினைத்தபடி ஐநூறு ரூபாயை மிச்சம் பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மூன்று பையன்களுக்கும் ரெடிமேட் துணி எடுத்தபிறகு, மனைவிக்கு ஒரு சேலை எடுத்தோம். எனக்கு எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை. கையில் பணமிருக்கவே சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று எண்ணினேன். மனைவியும் அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. எங்கள் ஊருக்கு நேராகச் செல்லும் பேருந்து இனி மூன்று மணிக்குத்தான்.

இப்பொழுது மணி ஒன்றுதான் ஆகியிருந்தது. பக்கத்தில் இருந்த உணவகத்தில் சென்று உணவருந்திவிட்டு வெளியே வரும்போது, “சார்...சார்... பசி எடுக்குது சார்...  ஒரு அம்பது பைசா குடுங்க சார்.. சார்..” என் மூத்த மகனைவிட கொஞ்சம் பெரியவனா இருப்பான். கிழிந்த சட்டை, கலைந்த முடி இப்படி வழக்கமாக பிச்சை எடுப்பவர்களின் கோலத்தில் இருந்த ஒரு பையன் எங்கள் பின்னே கெஞ்சியபடி வந்தான்.

‘பாவம் இந்த பையன். படிக்க வேண்டிய வயதில் இப்படி பிச்சை எடுத்துக்கொண்டு  அலைகிறானே.  இவனுடைய தாய் தகப்பனுக்கும் சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லையோ என்னவோ? ஒருவேளை தாய்தகப்பனே இல்லையோ என்னவோ? பசிக்குது என்கிறான். சரி ஒரு ரூபாய் கொடுத்தேன். அவனுடைய முகத்தில் ஒரு சந்தோசம்.

“இந்தமாதிரி பையனுகளுக்கெல்லாம் குடுக்கவே கூடாது தெரியுமா?  சின்னஞ்சிறுசுகள பிச்ச எடுக்க உட்டுட்டு தாயும் தகப்பனும் இவம் பிச்ச எடுத்துட்டு வாரத வாங்கிச் சாப்புட்டுக்கிட்டு ஒக்காந்து இருக்குதுங்க. இவனுக்கு பிச்ச போட்டா, இவனுக்கும் இதேத் தொழிலாப் போகும். இந்த வயசுல பிச்ச எடுக்கனும்னு இவந்தலைல எழுதி இருக்குது பாவம்” என் மனைவி கோபமாக ஆரம்பித்து பாவமாக முடித்தாள். “ஆமா இவந் தலைல எழுதி இருக்கு! யாரு எழுதுறது? எல்லாம்  நம்ம எழுதுறதுதான். ஏங்கூடப் படிச்சவனெல்லாம் இன்னைக்கு கைநெறய்யாச் சம்பளம் வாங்கிக்கிட்டு சொகுசா இருக்கைல நாமட்டும் நாயிபடாத பாடு பட்டுக்குட்டு இருக்கம்ல. அப்படித்தான். பாவம் இந்தப் பையன். நல்ல புத்திசாலியான பையனா இருப்பாம்னு நெனைக்கேன். அவங் கண்ணப்பாத்தாலே தெரியுது. நம்ம குடுக்குற இந்த ஒரு ரூவாய வச்சு என்னத்த வாங்க முடியும்? ஏதோ இப்பிடி ஒரு நாலு பேரு குடுத்தா எதுனாச்சும் வாங்கிச் சாப்புட்டுக்குவான்.”  மனiவியிடம் சொன்னேன்.

‘துணிக்கடைல அவ்வளவு ரூபா செலவழிச்சுத் துணிமணி எடுத்தமே... மீதி ரூபாகூட இருக்குதெ... கிறிஸ்துமஸ்கு நம்ம பிள்ளைகளுக்கு இவ்வளவு செலவு செய்யும்போது இந்தப் பையனுக்கு ஒரு டிரஸ் எடுத்துக் குடுக்கலாமே... அட ஒரு டிரஸ் எடுக்கவேண்டாம். நம்ம நல்லா வகுறு நெறய்யாச் சாப்புட்டுட்டு வரலை அந்தப் பையன் பாவம் பசிக்கிதுன்னு சொன்னப்ப ரெண்டு இட்லி எதுனாச்சும் வாங்கிக் குடுத்துருக்கலாமே... வெறும் ஒத்த ரூவாயக் குடுத்துட்டு வந்துட்டமே...’

‘ஆமா இதுவே பெருசு. செலபேரு இதுகூட குடுக்கமாட்டாங்க. கஞ்சப் பெயலுக. அவெ அம்பது பைசாத்தானக் கேட்டான். நானு ஒரு ரூவா குடுக்கவும் அவனுக்கு ரொம்பா சந்தோசமாத்தான இருந்துச்சு. நானும் பெரிய பணக்காரனா என்ன? ஏதோ ஏந்தகுதிக்கு இம்புட்டுத்தான் செய்ய முடியும்.’ ‘பள்ளிக்கூடத்துல பிள்ளைங்க கிட்டமட்டும் கிறிஸ்துமஸ்  சமயத்துல நம்ம மத்தவுங்களுக்கு உதவி செய்யனும்னு வாய் கிழிய சொல்லிட்டு இப்ப இங்க ஒரு நல்ல வாய்ப்பு கெடச்ச பெறகும் செய்யாமெ வாரமே... அந்தப் பையனுக்கு ஒரு கால்ச் சட்ட, ஒரு மேச்சட்ட எடுத்துக்குடுத்துட்டு, சாப்பாடும்; வாங்கிக் குடுத்துட்டு வந்துருக்கலாம். சரி அடுத்த கிறிஸ்துமஸ்கு கண்டிப்பா ஒரு கஸ்டப்படுற பையனுக்குச் செய்யனும்’.  பேருந்து நிலையம் சென்று சேரும் வரையில் எனக்குள் பலவிதமான யோசனைகள்.

பேருந்து நிலையத்தில் போடப்பட்டிருந்த சிமெண்டு பெஞ்சில் நானும் என் மனைவியும் அமர்ந்துகொண்டோம். எங்கள் ஊர்ப் பேருந்து வருவதற்கு இன்னும் அதிக நேரம் இருந்தது. அங்கே அமர்ந்தபடி சுற்றிலும் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

அப்போது சற்று தூரத்தில் மக்கள் கூட்டாக  நின்று எதையோ பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட நான் அது என்வென்று பார்;பதற்காக எழுந்தேன். உடனே என் மனைவி சொன்னாள்.
“எங்க கௌம்பிட்டீங்க? பஸ்சு இப்ப வந்துரும். இங்ன இருந்தாத்தான் ஒக்கார எடம் புடிக்க முடியும். போயிட்டு சீக்கிரமா வந்து சேருங்க. அப்பிடியே இந்தப் பெயல்களுக்குத் திங்கிறதுக்கு எதுனாச்சும் வாங்கிட்டு வாங்க. போன ஒடனே வந்து பையத்தான் பாப்பானுங்க.”

நேராகப் பழக்கடைக்குச் சென்ற நான் கொஞ்ம் பழம் வாங்கிக் கொண்டேன். சின்னவனுக்குப் பால்கோவா மிகவும் பிடிக்கும் என்பதால் கால்கிலோ பால்கோவா வாங்கிக் கொண்டேன். அப்படிய அருகிலிருந்த கடையில் பிஸ்கெட் பாக்கெட் இரண்டும், வெளியே இருந்த கடையில் அப்போதுதான் சூடாகப் போட்டுக்கொண்டிருந்த  பத்து வடைகளும் வாங்கிக்கொண்டு வந்தேன். நேராக வந்த மனைவியிடம் கொடுத்துவிட்டு வேறு எதுவும் வேண்டுமா என்று கேட்டபோது, கொஞ்சம் பூ வாங்கிட்டு வரக்கூடாதா என்றாள். அவள் கேட்காமலே வாங்கிக் கொடுத்திருக்கலாமே என்றெண்ணியபடி அருகிலிருந்த பூக்கடையில் பூவை வாங்கிக் கொடுத்துவிட்டு கூட்டத்தைப் பார்க்கக் கிளம்பினேன்.

“இனி எங்க போறீங்க? அதான் எல்லாம் வாங்கியாச்சே. பஸ்சு வந்துரப் போகுது. இங்ன ஒக்காருங்க. சொல்லச் சொல்லப் போறதப் பாரு,” என்று என் மனைவி சொல்லிக்கொண்டிருக்கும்போதே  கூட்டத்தை நோக்கிச் சென்றேன்.

பல ஊர்களிலிருந்தும் வந்த மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க நடுவில் ஒரு பெண் கழுத்தைச் சுற்றி ஒரு மேளத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு அதை அடித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு  அருகே  வாட்டசாட்டமான  ஒரு ஆண் அந்த மேளச் சத்தத்திற்கு ஏற்றபடி ஆடிக்கொண்டே கையில் ஒரு நீண்;ட சவுக்கை வைத்து தன் முதுகிலே ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டிருந்தார். முதுகில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஒரு காலில் பேண்டை முழங்கால்வரை தூக்கி விட்டிருந்த அவர், மேலெ சட்டை எதுவும் போடவில்லை. இப்படி பல இடங்களில் அடித்து அடித்தோ என்னவோ முதுகில் ஆங்காங்கே காய்ந்துப் போனதுபோல் தெரிந்தது. வியர்த்து ஒழுகியது. முதுகிலும் கைகளிலும் மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தார். கால்களில் கட்டியிருந்த சலங்கை, அவரது ஆட்டத்திற்கு ஏற்ப ‘சல்’ ‘சல்’ எனக் குலுங்கியது. அவருக்குப் பக்கத்திலேயெ மற்றொரு சிறுவன் அவரைப் போலவே பேண்ட் மட்டும் அணிந்துகொண்டு மேலே சட்டை எதுவும் போடாமல் சின்ன சவுக்கு ஒன்றை வைத்துக்கொண்டு பளார் பளார் என்று அவனது முதுகில் அடித்துக் கொண்டிருந்தான்.

அவனும் கால்களில் சலங்கை கட்டிக் கொண்டு மேளச் சத்தத்துக்கு ஏற்ப கால்களை மாற்றி  மாற்றிப் போட்டு ஆடிக்கொண்டிருந்தான். ஆடிக்கொண்டெ அடித்தான். அடித்துக்கொண்டெ ஆடினான்.அவன் கால்களிலும் கைகளிலும் இருந்த வேகத்தையும், அவனது அம்மா அடித்த மேளத்துக்கு ஏற்றடி அவன் ஆடிய ஆட்டத்தையும் அனைவரும் ரசித்தார்கள். என்னால்   அதை ரசிக்க முடியவில்லை. ‘இதென்ன  பொழப்புன்னு  இப்பிடிப் போட்டு ஒடம்ப ரணமாக்கிட்டு கெடக்காங்க! இந்த ஆளோட ஒடம்பு நல்லாத்தானே இருக்குது. எதுனாச்சும் வேல செஞ்சு பொழைக்கலாமே... இவரு சாட்டைய வச்சுக் கொடூரமா அடுச்சுக்குறது மட்டுமில்லாமெ இந்தச் சின்னப் பையனயும் இப்பிடி போட்டு உசுர எடுக்காங்களே.. சே... இந்த மத்தியான வெயிலுல இப்பிடி வேர்த்து ஒழுகைல இப்பிடித் தோலப் பிச்சுக்குற மாதிரி அடிச்சுக்கிட்டு... பாக்கவே ரொம்பாக் கண்றாவியா இருக்குது. இதவேற இம்புட்டுப் பேரு சுத்தி நின்னு வேடிக்கப் பார்த்துக்கிட்டு இருக்கோம்!

ஒரு மனுசன் அவனப் போட்டு அடுச்சுக் காயப்படுத்துறத இம்புட்டுக் குரூரமா பார்த்து ரசிககிறத நெனைக்கைல என்னமோ மாதிரி இருக்குது. அதுலயும் அந்தச்  சின்னப்  பையனப்  பாத்தா நெஞ்சே கனத்துப் போகுது.’

எனக்குள் மண்டிய பலவித சிந்தனைகளோடு கூட்டத்தில் இருந்தவர்களை ஒருமுறைச் சுற்றிப் பார்த்தேன்.  பலவிதமான முகங்கள். பலவிதுமான முகபாவனைகள். கூட்டத்தின் முனபகுதியில் நின்ற சிறுவனைப் பார்த்ததும் அவனை அடையாளம் கண்டு கொண்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் என்னிடம் பிச்சை கேட்ட சிறுவன்! இவன் இங்கே என்ன செய்கிறான் என்றெண்ணியபடி ஆட்டத்தை விட்டுவிட்டு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அடித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் முகம் சஞ்சலப்படுவதுபோல எனக்குத் தோன்றியது. அந்தச் சிறுவனுக்கும் இவனுக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான் இருக்கும். இடையிடையே சிலர் அந்தப் பெண் அருகே விரித்து வைக்கப்பட்டிருந்த துணியில் சில சில்லறைக் காசுகளைத் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார்கள். அவள் மேளத்தை அடித்துக்கொண்டே கூட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தாள். சிறிது நேரம் சென்றபின் அந்தச் சிறுவனும், அவனது அப்பாவும் சாட்டையால் அடிப்பதை நிறுத்திவிட்டு கூட்டத்தைச் சுற்றி வந்து கையேந்தி காசு கேட்டார்கள். சிலர் காசு கொடுத்தார்கள். வேறுசிலர் வெறுமனே கையை விரித்தார்கள்.

என்னிடம் பிச்சை எடுத்த சிறுவன் நேராக உள்ளே சென்றான். சாட்டையால் அடித்துக்கொண்டிருந்த அந்தச் சிறுவனிடம் சென்று அவன் கையைப் பிடித்தான். அன்று அவன் பிச்சையெடுத்து வைத்திருந்த அத்தனை காசையும் அவன் கையில் கொடுத்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாகப் போய்விட்டான். என்னை யாரோ சாட்டையால் அடிப்பதுபோல இருந்தது.

Dec 2006

படம் உதவி இணையம்.

கதைகளை இங்கு வாசிக்கலாம்

அழியாச்சுடர்களில் சுட்டி

சிறுகதைகள்.காமில் சுட்டி



23 கருத்துகள்:

  1. பாலாவைப் பற்றி பாசிடிவ் செய்திகள் நிறையவே வருது. நடிகர்கள் பலரும் பணம் கிடைத்தவுடன் குடிகார்ர்களாக ஆகும் உலகில் இவருக்கு நல்ல எண்ணங்கள் அமைந்திருப்பதே மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  2. எளிய மக்களிடம் உயிர்ப்புடன் இருக்கும் இரக்க குணத்தை கதை படம் பிடித்துக் காட்டியுள்ளது.

    நேற்று சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, எளிமையான (ஏழை போன்ற தோற்றம்) பெண், தரையில் உட்கார்ந்து யாசகம் கேட்டுக்கொண்டிருந்த வயதானவளுக்கு பத்து ரூபாய்க்குமேல் அளித்தது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. நடிகர் பாலா அவர்களின் உதவி செய்யும் மனப்பான்மை குறித்தறிந்து மிகவும் மகிழ்வாக உள்ளது. அவரின் இந்த இயற்கையான நல்ல குணத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. 'கதையில்லாத கதை வரிசையில்...'.

    இதை எப்படி தீர்மானிக்கிறீர்கள், ஜெஸி ஸார்.? இங்கு சொல்லப்பட்ட கதையை விட வேறென்ன வேண்டும் உங்களுக்கு?

    பதிலளிநீக்கு
  6. 'கதை முழுதும் தரப்பட்டுள்ளது. படிக்க எளிமையாக போரடிக்காமல் படிக்க முடியும்' --

    பாமா அவர்களின் எழுத்தில் ஒரிஜனல் கதையை வாசிக்கையில் உங்களுக்கு போரடித்ததா என்ன?..

    கொடுமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை என்பதின் இலக்கணங்கள் பற்றி முன்பே கண்டுள்ளோம். துவக்கம், நடுப்பகுதி, முடிவு என்று கதை ஒரு ஆற்றொழுக்கமாக அமையவேண்டும் என்பார் கா நா சு. கதைக்கு பஞ்சாங்கங்கள் தேவை என்பார் மாலன். சுஜாதாவோ கதைக்கு ஒரு கருப்பொருள் அவசியம். அதுபோலவே ஒரு முடிச்சு அல்லது திருப்பம் தேவை. உண்மை நிகழ்ச்சியை அப்படியே எழுதினால் அது ரிப்போர்ட். என்ன கதை இது என்று சொல்லும்போது கதை என்பதில் கற்பனையும் சேர்ந்துவிடுகிறது. இந்தக் கற்பனை கதை இல்லாதவற்றையே நான் கதை அல்லாத கதை என்று கூறுகிறேன்.

      இதுவரையிலும் பல விமரிசனங்களிலும் கதை சுருக்கம் (abridged ) என்ற முறையில் கதைகளைச் சேர்த்துள்ளேன். முழுக் கதையையும் அப்படியே வெளியிட்டது குறைவு.

      கருத்துரைக்கு நன்றி.
      Jayakumar

      நீக்கு
  7. நடிகர் பாலா, லாரன்ஸ் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

    ஆனால் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  8. எழுத்தாளரின் கதையை நடத்திச் செல்லும் லாவகத்திலும் உணர்வு பூர்வமான அவரது வார்த்தைகளின் ஆத்மார்த்த வெளிப்பாடுகளில் ஒன்றுவதிலும் தான் வாசகனின் வாசிப்பு ரசனையே பூர்ர்தியாகிறது. அதை உங்களுக்குப் புரிந்த விதத்தில் நீங்கள் விவரிப்பது அல்லது சுருக்கிக் கொடுப்பது
    மூலக்கதையின் புரிதலை வேறுபடுத்தலாம். அது எழுத்தாளரின் எழுத்துடனான நேரடி
    பரிசயத்த்தை ஒருவிதத்தில் தடுக்கவும் செய்கிறது.

    இந்தக் கதையையே எடுத்துக் கொள்ளுங்களேன்.
    இந்தக் கதையின் நிழலையும் நிஜத்தையும்
    நான் அர்த்தப்படுத்திக் கொண்டதே வேறு மாதிரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இதுவரையிலும் தந்த கதைச்சுருக்கங்கள் யாவும் கதாசிரியரின் வார்த்தைகளே அன்றி, நான் தனியாக என்னுடைய வார்த்தைகளால் கதையைத் தந்ததே இல்லை அதற்குத் தான் abridged என்ற ஆங்கில வார்த்தையையும் சொன்னேன். என்னுடைய விமரிசனத்தை கதையின் நடுவே ஒருபோதும் தந்ததில்லை.

      மீள்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
      Jayakumar

      நீக்கு
    2. நீங்கள் ஒரு கதையை எழுதிப் பார்த்தால் தான் எழுத்தாளனின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொள்ள முடியும்.

      அதற்காகவாவது
      ஒரு செவ்வாய்க்கு
      உங்கள் கதை ஒன்றை எபியில் உலாவ விடுங்களேன் ஜெஸி ஸார்.

      இதை என் அன்பு கோரிக்கையாகக் கொள்ள வேண்டுகிறேன்.

      நீக்கு
  9. ஒரு கதை எழுதிவிட்டால் க.நா.சு., சுஜாதா கருத்தையெல்லாம் கடன் வாங்கிச் சொல்ல அவசியமில்லாதே போகும். ஒரு வேடிக்கை என்னவென்றால் இவர்களே இவர்கள் சொல்வதையெல்லாம் கடைபிடித்ததில்லை

    அது மட்டும் இல்லை. ஒரு கதை எழுதிவிட்டால் உங்களுக்கே இவர்கள் சொல்வதெல்லாம் தேவையா, தேவையில்லையா என்பது தெரிந்து போகும்.

    என்ன இருந்தாலும் சொந்த அனுபவத்தின் உணரலே தனிதன்மை வாய்ந்தது அல்லவா?
    என்ன சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதைப் பகிர்வும் நன்றாக உள்ளது. ஆசிரியர் குறிப்பு, கதையின் சாராம்சம் போன்றவற்றை விவரித்தது சிறப்பு.

    கதை நன்றாக உள்ளது. தான் அளித்த காசு குறைவோ இன்னமும் கொஞ்சம் அதிகமாகவே தந்திருக்கலாம் என்ற நினைவுகளில், சிக்கித் தவிக்கும் கதையின் நாயகனுக்கு இறுதியில் அந்தக்காசை பெற்றுக் கொண்ட அந்த சிறுவனின் செயல் நிஜமாகவே ஒரு சாட்டையடிதான். சிறுகதையென்றாலும், தர்ம உணர்வுகளின் குவியல் கதை முழுவதும் பயணிக்கிறது.

    இந்தக்கதை ஏற்கனவே படித்த நினைவும் உள்ளது. அது எப்போது என்பது தெரியவில்லை. எத்தனையோ கதைகளை படிக்கிறோம். சட்டென சொல்ல நினைவு வரமாட்டேன் என்கிறது. ஆனால், இன்று படிக்கும் போது புதிதாக படிப்பது போலத்தான் உணர்ந்தேன்.

    நல்லதொரு கதாசிரியரையும், அருமையான கதையையும் தேடித் தந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. கற்பனை சம்பந்தப்பட்ட எதற்கும் இதை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற வரையறை ஏதுமில்லை.

    கற்பனையின் வெளிப்பாடு என்பது
    காட்டாற்று வெள்ளம் போல. பத்து நாள் தவமிருந்தாலும் கைக்கு சிக்காது. அதுவே உந்துதல் ஏற்பட்டு விட்டால் நேரம் காலம் பார்க்காது எழுதக் கையும் மனமும் துடிக்கும்.

    'எழுதிச் செல்லும் விதியின் கை' என்றார் பாரதியார். அது போலத் தான். கற்பனை ஊற்றெடுத்து வெள்ளமாய் மன அணையில் தளும்பி விட்டால் மனம் காட்டும் வழியில் கை எழுதிச் செல்லும்.

    எழுதுவன் தன் மன வழி செயல்படும் கலை வெளிப்பாடு இது. இதற்கு இலக்கணமாவது வெண்டைக்காயாவது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மை. அடுத்த பதிவுக்கு மூன்று நாட்களாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். சரியாகவில்லை.

      Jayakumar​

      நீக்கு
  12. ஜெஸி ஸார். எழுத்தாளன் ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்லும் மொழி நடையே அலாதி.
    ஏனென்றால் என் மனம் தான் எழுத்தாய் செயல்படுகிறது.
    மன உணர்வுகள் வார்த்தைகளாய் வெளிப்படாத எழுத்துக்களெல்லாம்
    வேறு மாதிரி தான் இருக்கும். அந்த வித்தியாசமே எழுத்தை ஆளும் எழுத்தாளனின் எழுத்துக்கும் மற்றவர்கள் எழுத்துக்கும் இருக்கும் வித்தியாசம்.

    பதிலளிநீக்கு
  13. பாலாவுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    பாலா வாழ்க வளமுடன். அவரின் எண்ணங்கள் அனைத்து நல்லபடியாக நடக்கும், இறைவன் அருள்வார்.

    பதிலளிநீக்கு
  14. கதை பகிர்வு அருமை.
    கொடுக்கும் மனம் சிறுவனிடம் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
    தான் யாசகமாக பெற்ற அனைத்தையும் கொடுத்து விட்டது அவனின் இரக்க உணர்வை சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  15. விடியற்காலை யில் பதிவு வெளியான போது பாலாவின் கனவு இல்லையே..

    பிற்சேர்க்கையா!..

    பதிலளிநீக்கு
  16. நல்ல மனம்..

    பாலாவுக்கு வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  17. பாலா அவர்கள் குறித்த செய்திகள் படிக்கும்போது மகிழ்ச்சி. நல்லது செய்யும் அவரது சிறப்பான குணம் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!