16.9.25

ஒரே ஒரு ஊரிலே - தொடர் கதை - ஸ்கை :: பகுதி 09: ' கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? '

 

முன்னறிவிப்பு : 

அப்பப்போ படிச்சுடுங்க. முடிந்தபிறகு மொத்தமாகப் படிச்சுக்கலாம் என்று நினைத்தால் ரொம்பக் கஷ்டப்படுவீங்க. 

முடிவு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளவர்களுக்கு கதையின் கடைசி வரி : " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்" 

= = = = = = = = =

முந்தைய பகுதி சுட்டி <<<<<<<<<<

========================================================================

செல்வ மீனா டெக்ஸ்டைல்ஸ் வார விடுமுறை நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமைகளில் பெரும்பாலும் மக்கள் நகை வாங்குவது, புதுத் துணி வாங்குவது இதை எல்லாம் தவிர்ப்பார்கள். அதனால் செவ்வாய் விடுமுறை நாளாக அறிவித்திருந்தார்கள். மேலும்  செவ்வாய்க்கிழமைதான் முருகனுக்கு உகந்த நாள் என்பதால் ஒவ்வொரு வாரமும், அந்தக் கிழமையில், முதலாளி வீட்டில் முருகனுக்கு பூஜை மிகவும் விமரிசையாக நடக்கும். கடை ஊழியர்கள் எல்லோரும் தவறாமல் வந்து, பூஜை முடிவில் பிரசாதம் சாப்பிட்டுச் செல்வார்கள்.

ஒரு செவ்வாய்க்கிழமை பூஜை முடிந்து, வந்தவர்கள் பிரசாதம் சாப்பிட்டுப் புறப்பட்டபின்  ராஜாவின் அம்மா கல்யாணப் பேச்சை ஆரம்பித்தாள்.

“ ராஜா இந்த வருஷம், உன் கல்யாணத்தை நடத்திடலாம்னு நானும் உன் அப்பாவும் முடிவு செஞ்சிருக்கோம். இன்னிக்கு அதிகாலை என்னுடைய கனவுல முருகன் வந்தான். என்னிடம், ‘ராணி வரட்டும், எல்லாம் நல்லா நடக்கும்’னு சொல்லி நம்ம கடை ஜவுளி மஞ்சப்பையை கொடுத்தான். அதை நான் வாங்கி, கண்களில் ஒத்திக்கும்போது முழிச்சுக்கிட்டேன்.”

“ யாரும்மா ராணி?”

“ நீ யாருடா? “

“ நான் ராஜா - உங்க பையன். “

“ அப்போ ராணி - உன் பொண்டாட்டி, என்னுடைய மருமக “

“ ஓஹோ. அப்போ சரி! நல்லநாள் பார்த்து அழகர் வீட்டுக்கு நீங்க ரெண்டு பேரும் முறைப்படி போய் பொண்ணு கேளுங்க.”

“ நல்லநாள் பார்க்க நம்ம ஜோஸ்யர வரச் சொல்லியிருக்கேன் “ என்றார் செல்வம்.

ஜோஸ்யர் உள்ளே நுழைந்தார். 

“ வாங்க ஜோஸ்யரே  உங்களுக்கு நூறு  ஆயுசு. இப்போதான் ஒங்கள பத்தி சொல்லிக்கிட்டு இருக்கேன்”

“ வந்துட்டேன், வந்துட்டேன், எங்கே உங்க வீட்டு நெய்வேத்திய ஸ்பெஷல் பாயசம்?”

“ இதோ கொண்டு வர்றேன் “ என்று சொல்லி உள்ளே போனாள் ராஜாவின் அம்மா.

பாயாசத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு தனக்கு வந்த கனவை ஜோஸ்யரிடம் சொன்னாள் அம்மா.

“ முறைப்படி பொண்ணு பாக்கறதுக்கு அழகர் வீட்டுக்கு போக ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுங்க. “

ஜோஸ்யர் பஞ்சாங்கத்தை எடுத்து, ராஜாவின் நட்சத்திரம், அம்மாவின் நட்சத்திரம் எல்லாம் கேட்டு, பிறகு, “அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை, முகூர்த்தநாள். அன்னிக்கி சாயந்திரம் போய் பொண்ணு பாருங்க. மறக்காம பொண்ணோட ஜாதகம் கேட்டு வாங்கிகிட்டு வந்து என்னிடம் கொடுத்துடுங்க” என்றார்.

= = = = = = = = =

ராஜா சாந்திக்கு ஃபோன் செய்தான்.

“ ஏய் - அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ரெடியா இரு. என்னோட அம்மா அப்பா ரெண்டு பேரும் ஒன்ன பொண்ணு பாக்க வராங்க. அவங்களுக்கு ஒன்ன புடிச்சிருந்தாதான் கல்யாணம். “

“ நீ வரமாட்டியா? “

“ நாந்தான் ஏற்கெனவே நெறய தடவ பொண்ணைப் பாத்து புடிச்சுருக்குன்னு சொல்லிட்டேனே!”

“ அப்போ அவங்க எதுக்கு வரணும்? “

“ என்னதான் நம்ம பாத்து, பேசி, பழகியிருந்தாலும் அததக்குன்னு  ஒரு மொற இருக்குல்ல. அதான்”

“ ஒங்க அம்மா அப்பாவுக்கு என்ன எல்லாம் பிடிக்கும்? அது எல்லாத்தையும் சொல்லிடு. எல்லாத்தையும் செஞ்சி வெச்சுடறேன்.”

ராஜா எல்லா விவரங்களும் சொன்னான். “ ஏய் அப்பிடியே உன்னுடைய ஜாதகம் ஒரு காப்பி எடுத்து வெச்சிரு. அவங்ககிட்ட கொடுக்கணும். 

***  ***  ***

பெண் பார்ப்பதற்காக, அழகர் வீட்டிற்கு பழம், பாக்கு வெற்றிலை சகிதம் வந்து, காரிலிருந்து இறங்கினார்கள், செல்வமும், மீனாவும்.

அழகரும், அவர் மனைவி தெய்வானையும் வீட்டு வாசலுக்கு வந்து, அவர்களை அன்போடு வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றனர்.

“ சம்பந்தி - மாப்பிள்ளை எங்கே? உங்களோடு அழைத்து வரவில்லையா! “

“ பெண் பார்க்க, நம்ம வழக்கப்படி முதலில் பையனின் அம்மா அப்பா வருவதுதானே சம்பிரதாயம்! “

“ அதுவும் சரிதான். ஆனால் அந்த சம்பிரதாயம் எல்லாம் மாப்பிள்ளையும் பொண்ணும் ஒருவருக்கொருவர் முன்னே பின்னே தெரியாதவங்களா இருந்தாதானே!” என்று சொல்லி அழகர் சிரித்தார்.

“ நீங்க சொல்றது சரிதான் சம்பந்தி. இது சிறியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, பெரியோர்களால் நடத்தி வைக்கப்படும் கல்யாணம். இதுல நம்ம ரெண்டு பேரும் செய்யவேண்டியது, எங்கேயும் முட்டுக்கட்டை போடாம, நம்ம குழந்தைகளின் சந்தோஷத்தை மனசுல நிறுத்தி கல்யாணத்தை நடத்தி வைப்பதுதான். அப்படியே செய்வோம். சரி முறைப்படி நாங்க சாந்தியை பொண்ணு பார்க்கணும். சாந்தியை வரச் சொல்லுங்க.“

தெய்வானை உள்ளே சென்று, சாந்தியை அழைத்து வந்தார்.

சாந்தி, மஞ்சள் நிற பட்டுப் புடவை கட்டி, அதன் பச்சை நிற ஜரிகை பார்டருக்கு ஏற்றாற்போல் பச்சை நிற ரவிக்கை அணிந்து, சிறிய அளவிலான குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு, தலை நிறைய மல்லிகைப்பூவுடனும் முகம் நிறைந்த புன்னகையுடனும் வந்தாள். (மஞ்சள் நிறம் அவனுடைய அம்மாவுக்குப் பிடித்த நிறம் என்பதை ஏற்கெனவே ராஜா போனில் சொல்லியிருந்தான்)

ராஜாவின் அம்மா மீனாவுக்கு மஞ்சள் புடவையில் சாந்தியைப் பார்த்ததும், ஒரே சந்தோஷமாகிவிட்டது!

போன வாரம் என் கனவுல முருகன் வந்து, ‘ராணி வரட்டும், எல்லாம் நல்லா நடக்கும்’னு சொல்லி ஒரு மஞ்சள் பையை என்னிடம் கொடுத்தான். இங்கே வந்து பார்க்கும்போது மஞ்சள் புடவை கட்டிக்கிட்டு மகாலக்ஷ்மியாட்டம் உங்க பொண்ணு! ஆச்சரியமா இருக்கு!” என்று சொன்னார்.

“ என்ன கனவு? விவரமா சொல்லுங்க சம்பந்தி “ என்றார் அழகர்.

மீனா தனக்கு வந்த கனவை விளக்கமாக சொன்னார்.

அதைக் கேட்ட அழகர் மிகவும் ஆச்சரியப்பட்டார். “ என்னுடைய பொண்ணு பொறந்த போது, என்னுடைய அப்பா சொன்னது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. -என்னுடைய பேத்திக்கு அஷ்டமி சந்திரன் போல அழகான நெற்றி. இந்தப் பொண்ணு எதிர்காலத்துல ராணியாட்டம் வாழ்வா. இவளுக்கு ஒரு குறையும் வராது. இவ தொட்டது எல்லாம் துலங்கும் - அப்படின்னு சொன்னாரு. அதனால இவளுக்கு சாந்திராணி என்று பெயர் வைத்தோம். சின்ன வயசுல கொஞ்சம் அடம் பிடிப்பா - அப்போ நாங்க இவளை சண்டிராணின்னு கேலி பண்ணுவோம்” என்று சொல்லிச் சிரித்தார் அழகர்.

“ அப்போ இவ கனவுல வந்து முருகன் சொன்ன ராணி நம்ம சாந்திதான்! சிறியவர்களால் நிச்சயிக்கப்பட்டு, தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு பெரியவர்களால் நடத்தி வைக்கப்படும் கல்யாணம், ஜாம் ஜாம் என்று நடத்திடுவோம்! சாந்தி இப்போ பெரிய வயசுல எதுவும் பிடிவாதம் பிடிக்கறது இல்லைதானே? “ என்று சிரித்துக்கொண்டே கேட்டார் செல்வம்.

“ இப்போ ஒரே ஒரு விஷயத்துலதான் பிடிவாதம் பண்ணுறா “ என்றார் தெய்வானை.

“ என்ன விஷயத்துல ?” என்று கேட்டார் மீனா.

“ ராஜாவைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறா “

இதைக் கேட்டு சாந்தி உட்பட எல்லோருமே மனம் விட்டுச் சிரித்தனர்.

“ வாங்க எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து டிஃபன் சாப்பிடலாம். எல்லாமே எங்க சாந்தி செய்தவைகள்தான்” என்றார் தெய்வானை.

“ அட! எல்லாமே எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த டிஃபனாக இருக்கு! சூப்பர் டேஸ்ட். இதெல்லாம் எங்களுக்குப் பிடிக்கும்னு உனக்கு எப்படிம்மா தெரியும்?” என்று கேட்டார் செல்வம்.

“ ராஜா சொல்லித்தான் தெரியும்” என்றாள் சாந்தி. அப்படி சொல்லிய பிறகு, ராஜா பெயரை சொல்லியதற்காக சற்றே வெட்கம் வந்து, நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

“ ஓஹோ - அப்படிப் போகுதா கதை? “ என்று சிரித்தபடி சொன்னார் மீனா. 

“ அப்புறம் என்ன? பாக்கு வெத்தலை மாத்திக்குவோம். இந்த அஷ்டமி சந்திரனின் ஜாதகம் ஒன்று எங்களுக்குக் கொடுங்க. எங்கள் ஜோஸ்யர் சாந்தி ஜாதகத்தைப் பார்த்து தோஷம் எதுவும் இல்லை என்று உறுதி செய்யட்டும். இதோ இது ராஜாவின் ஜாதகம் - உங்க ஜோஸ்யர்கிட்டக் கொடுத்து உங்க பக்கம் பொருத்தம் பாக்கச் சொல்லுங்க. அப்புறம் கல்யாணத்திற்கு நாள் பார்க்கச் சொல்லிடலாம்” என்றார் செல்வம்.

“ இந்தாங்க சாந்தியின் ஜாதகம். சாந்தியின் ஜாதகத்தை எங்க குடும்ப ஜோஸ்யர் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பார்த்து பலன் சொல்லியிருக்காரு. அவ ஜாதகத்துல தோஷம் எதுவும் கிடையாது. ஜோஸ்யர் ராஜாவின் ஜாதகத்தை இனிமேலதான் பார்க்கணும். பொருத்தம் பார்த்து என்ன சொல்றார்னு பார்ப்போம்.” என்று சொன்னார் அழகர்.

“ அப்போ நாங்க கிளம்பறோம். கூடிய சீக்கிரம் முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று சொன்ன மீனா, செல்வம் தம்பதியினர், அழகர் வீட்டிலிருந்து புறப்பட்டனர்.

“ சாந்தி, நாங்க போயிட்டு வருகிறோம் அம்மா. உன்னை எங்க ரெண்டு பேருக்கும் ரொம்பப் புடிச்சுருக்கு” என்று சொன்னார் மீனா.

= = = = = = = 

வீட்டுக்கு திரும்பி வந்த அம்மா, அப்பா இருவரிடமும் ராஜா, “ பொண்ணு பாத்துட்டீங்களா? அவங்க என்ன சொன்னாங்க? நீங்க என்ன சொன்னீங்க? “ என்று கேட்டான்.

“ அதை ஏன் கேக்குறே? சாந்தி எனக்குப் பிடிக்காத கலர் புடவை கட்டிகிட்டு வந்தா, அது போதாதுன்னு எனக்குப் பிடிக்காத டிஃபன் வேற பண்ணி எனக்கு கொடுத்தா. “ என்றார் மீனா.

“ என்னம்மா இது? இப்புடி பொய் சொல்றே! - போன வாரம் என் கனவுல முருகன் வந்து, ‘ராணி வரட்டும், எல்லாம் நல்லா நடக்கும்’னு சொல்லி ஒரு மஞ்சள் பையை என்னிடம் கொடுத்தான். இங்கே வந்து பார்க்கும்போது மஞ்சள் புடவை கட்டிக்கிட்டு மகாலக்ஷ்மியாட்டம் உங்க பொண்ணு! ஆச்சரியமா இருக்கு – அப்படீன்னு சொன்னதை நானே என் காதால் கேட்டேனே” என்றான் ராஜா.

“ அடேய் – அதை எப்படிடா நீ கேட்டே? “

“ அம்மா – சாந்தி கிட்டே நீ பேசினது, அவ பேசினது எல்லாத்தையும் அவ மொபைல் ஃபோன்ல ரெகார்ட் பண்ணி உடனுக்குடனே எனக்கு அனுப்பிட்டா. அதை அப்போவே நான் கேட்டுட்டேன்”

“ அட திருட்டுக் கழுதைங்களா! அப்புறம் எதுக்கு எங்க கிட்ட என்ன பேசினீங்கன்னு கேக்கறே? “

“ சும்மாதான் – நீ வரப்போற மருமகளைப் பற்றி புகழ்வதை ரெகார்ட் பண்ணி சாந்திக்கு அனுப்பலாம் என்று ஆசை. “

“ இப்போ நாம பேசறது எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணிக்கிட்டு இருக்கியா? “

“ ஆமாம் அம்மா !”

“ அடக் கடவுளே! இவங்க ரெண்டு பேரிடமும் மாட்டிக்கிட்டு எதிர்காலத்துல நான் எவ்வளவு கஷ்டப்படப் போறேனோ தெரியலையே. என்னங்க – ஜோஸ்யர வரச் சொல்லுங்க”

“ ஏன் – நீ எவ்வளவு கஷ்டப்படப்போறேன்னு அவர் பார்த்துச் சொல்லணுமா” என்று கேட்டார் செல்வம்.

“ அட என்னங்க நீங்களும் இவங்க கூட சேந்துகிட்டு என்கிட்ட வம்பு செய்யறீங்க? அவரு சாந்தி ஜாதகத்தப் பாத்து தோஷம் இருக்கா, பொருத்தம் எல்லாம் நல்லா அமைஞ்சி இருக்கான்னு சொல்லணும் – அதுக்குத்தான் சொன்னேன். “

“ ஜோஸ்யர் நாளைக்குக் காலையில வந்துடுவார்” என்றார் செல்வம்.

= = = = = = = =

மறுநாள் காலையில் ஆறு மணிக்கே வந்துவிட்டார் ஜோஸ்யர்.

“ என்ன ஜோஸ்யரே இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க? “ என்று கேட்டார் செல்வம்.

“ சனிக்கிழமை ஆச்சே. காலை 9 மணிக்கு ராகுகாலம். அதுக்கு முன்பே வந்து ஜாதகத்த பாத்துடலாம்னுதான் வந்தேன். அதோடு சனிக்கிழமை உங்க வீட்டுல ஆஞ்சநேயர் பூஜை, சுப்பாராவ் ஸ்பெஷல் வெண் பொங்கல், மிளகு வடை எல்லாத்தையும் விடமுடியுமா! அதான் நேரத்தோட வந்துட்டேன். “

“ எங்க ஜாதகங்கள் மட்டும் இல்லாம எங்க வீட்டு பூஜை, நைவேத்யம் எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கீங்க” என்றார் செல்வம்.

“ சும்மாவா உங்க அப்பா காலத்துலேருந்து குடும்ப ஜோஸ்யர் நாந்தானே! சரி பொண்ணு ஜாதகத்தைக் கொடுங்க. ராணி ஜாதகம் எப்படி இருக்குன்னு பாத்துடறேன்.”

* * *  


ராஜாவின் அப்பா செல்வம் ஒரு ரசிகசிகாமணி. உழைப்பாளி நேர்மையாளர் என்பது போக நல்ல ரசிகர். துணி வியாபாரி என்பதால் நன்றாக உடுத்துவது இயல்பாக வந்த விஷயம். பாரம்பரியமாக முருக பக்தர்கள் குடும்பத்தில் பிறந்ததால் அவருக்கும் இறை பக்தி மிகுதியாகவே இருந்தது.

அந்த ரசனையின் மற்றும் ஒரு பிரதான அம்சம் அவர் ஒரு போஜன ப்ரியர். நல்ல உணவு வகைகளை ரசித்து சாப்பிடுபவர். போஜன ப்ரியர் என்றால் ஏதோ பெருந்தீனி பகாசுரன் என்று நினைக்க வேண்டாம். எதானாலும் ரசித்து ஆனால் அளவாக உண்பவர். சாப்பிடும் பண்டம் சுவையாக, தரமாக இருக்க வேண்டும் . தரமாக என்றால் சாதாரண தரம் இல்லை. மிக உயர்தரம்.

வீட்டில் இருக்கும் வேலைக்காரப் பட்டாளம் செய்யும் வேலைகளில் பிரதானமான ஒன்று மளிகைக் கடையிலிருந்து வாங்கி வந்த பொருள்களை பிரித்து, ஆராய்ந்து, சுத்தம் செய்து டப்பாக்களில் போட்டு வைக்க வேண்டும் . இது ஏதோ சொல்லும் போது ரொம்ப சாதாரணமான வேலை போலத் தோன்றலாம் . அவர்கள் செய்யும்போது பார்த்தால் தான் தெரியும் அது எவ்வளவு சிரத்தையுடன் செய்யப்பட வேண்டிய வேலை என்று.

பாதாம் அல்வா முந்திரி பக்கோடா போன்றவற்றுக்கு சுத்தமான நெய் வேண்டும் என்பதற்காகவே இரண்டு நாட்டு எருமைகள் வீட்டின் பின்புறம் மாட்டு கொட்டகையில் நிற்கும். சற்றுத் தள்ளி காமதேனு போல லட்சணமாக இரண்டு பசுக்கள். அபிஷேகத்திற்கும், அவ்வப்போது டிகிரி காபி தயாரிப்பதற்கும் வேண்டிய பால், தயிர் தயாரிக்க என்று எல்லாத் தேவைகளையும் இந்த நான்கு மாடுகள் பூர்த்தி செய்யும்.

வீட்டுப் பணியாளர்களில் செல்வாக்கு மிக்க நபர் சமையல்கார சுப்பா ராவ். கலியுக நள மகாராஜன் என்கிற பட்டத்திற்குப் பொருத்தமான சமையல் கலை நிபுணர். வியாபார விஷயமாக வெளியூர் போயிருந்த போது இந்த சுப்பாராவின் அறிமுகம் செல்வத்திற்கு கிடைத்தது. அவரது சமையல் திறமையில் மயங்கிப் போன செல்வம், தீர விசாரித்த பின், அவர் கேட்ட சம்பளத்திற்கு மேலேயே ஐம்பது ரூபாய் போட்டுக் கொடுத்து அவரை ஊருக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.

எஜமானருக்கு எந்த மாதிரி காப்பி பிடிக்கும் அதை எந்த டம்ளரில் சாப்பிட அவருக்கு இஷ்டம் என்பதெல்லாம் சுப்பாராவுக்கு அத்துபடி. கூட வேலை செய்யும் பணியாளர் யாராவது எஜமானிடம் அட்வான்ஸ் வாங்க வேண்டும் என்பது மாதிரியான எந்த உதவி வேண்டுமானாலும் சுப்பாராவிடம் சொன்னால் போதும். சரியாக மாலை நாலு மணிக்கு, வெள்ளித் தம்ளரில் சரியான சூட்டோடு ஆவி பறக்கும் காப்பியை செல்வம் ரசித்து சாப்பிடும் போது இதமாகச் சொல்லி அனுமதி வாங்கிக் கொடுப்பார் நள மகாராஜர்.

= = = = = = = =

இதோ இன்றைக்கு நெய்வேத்தியத்திற்கு நெய் வழியும் வெண் பொங்கல், மிளகு வடை எல்லாம் தயார் செய்து வைத்து விட்டார்.

வீட்டில் ஆஞ்சநேயர் பூஜை செய்து வைப்பவர் சரியாக ஏழு மணிக்கு வந்து, எட்டு மணிக்குள் பூஜை செய்து முடித்துவிட்டு, பிரசாதம், சம்பாவணை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

“ ஜோஸ்யரே – ஜாதகம் பார்த்து, பொருத்தம் எல்லாம் பாத்துட்டீங்களா? தோஷம் எதுவும் இல்லைதானே? “

“ நல்லா பாத்துட்டேன். பொண்ணு ஜாதகத்துல ஒரே ஒரு தோஷம்தான் இருக்கு. அதைத் தவிர வேறு எந்த தோஷமும் இல்லை”

“ என்ன தோஷம் – சாந்தி ஜாதகத்துல? “ என்று பரபரப்பாகக் கேட்டான் ராஜா.

“ சந்தோஷம் மட்டும்தான் இருக்கு! அவிட்ட நட்சத்திரத்துப் பொண்ணு. அது இருக்கற எடத்துல எப்பவுமே தங்க மழை பொழியும் ராஜா! “

“ அப்புறம் என்ன – கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடுங்க ஜோஸ்யரே!” என்றார் செல்வம்.

எல்லோரும், சுப்பாராவ் பரிமாறிய வெண்பொங்கல், வடை சாப்பிட்டு, டிகிரி காபி குடித்து முடித்தனர்.

ஜோஸ்யர் கிளம்பிச் சென்றபின், ராஜா சாந்திக்கு ஒரு செய்தியும் கூடவே ஒரு பாட்டையும் அனுப்பினான்.

“ கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா – நாம் கையோடு கை சேர்த்துக்கொள்ளலாமா !”

= = = = = = = =      

(தொடரும்) 

23 கருத்துகள்:

  1. இருவருக்கும் மனப் பொருத்தம் அமைந்தபின் ஜோஸ்யம் பார்க்கவேண்டிய தேவை என்ன?

    புதிய ட்விஸ்டா என நினைத்தேன். சந்தோஷம் என ஜோசியர் சொன்னதில், தொடர் முடிவை நோக்கிச் செல்கிறது எனப் புரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை,
         
      காதல் திருமணமாயிருந்தால் கூட நிறைய இடங்களில் ஒரு முறை ஜாதகம் பார்க்கிறார்கள்.  எங்களுக்கும் பார்க்கப்பட்டது.  ஆனால் முடிவு எதுவும் எங்களிடம் சொல்லப்படவில்லை.  நான் எது வந்தாலும் எதிர்ப்பதற்குத் தயாராக இருந்தேன்.  அதற்கு வேலை இல்லாமல் போனது!

      நீக்கு
    2. காதல் திருமணமாக இருந்தால் ஜாதகம் பார்ப்பது போன்ற ..... செயல் எதுவும் இல்லை. பொருத்தமில்லை என்று சொன்னால், பிறகு மனதில் அதுதான் தங்கியிருக்கும். உண்மையில் இந்த ஜாதகப் பொருத்தம் ஒரு பிஸினெஸ்தான். நூறு வருடங்களுக்கு முன்பு இது இல்லை. அதுவும் தவிர, பெண் கேட்டு வந்தால், கொடுப்பதுதான் வழக்கமாக இருந்தது

      நீக்கு
    3. அதிகம் பொருந்தவில்லை என்று சொன்னால் ஒருவேளை காதலை விட்டு நாம் சொல்பனவர்களை மானம் செய்வார்களோ என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம்.  அல்லது, அவர்களுக்குள் ஒத்து வருமா, சண்டை இல்லாமல் இருப்பார்களா என்கிற அப்பா அம்மாவின் உண்மையான கவலை இருக்கலாம்.  அரேஞ்சுட் மேரேஜ்களிலேயே ஜாதகம் பார்ப்பது வீண்தான் என்பது என் அபிப்ராயம்.  ஆனால் எனக்கு எதிராக வரப்போகும் சம்பந்திகளுக்கும் அதே அபிப்ராயம் இருக்க வேண்டும் அல்லவா...

      நீக்கு
  2. ராஜாவின் அப்பா செல்வத்தைப் பற்றிய பகுதி எதற்காக? இனி வரும் பகுதிகளுக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாணப்பையனோட அப்பா..   

      மேலும் ராஜாதான் கதாநாயகன் போல தெரிகிறது.   அவன் அப்பா பற்றி சொல்வதில் தவறில்லையே..     

      பின்னால் அவருக்கு ஏதும் மனவருத்தம் உண்டாகுமோ என்னவோ...  ஸ்கை மனதில் என்ன இருக்கோ...

      நீக்கு
  3. மனப்பொருத்தம் இருக்கு, காதலிக்கறாங்க இருவீடுகளுக்கும் தெரியும். அதன் பின் ஜாதகம் பார்த்து? ஒரு வேளை ஏதேனும் நெகட்டிவாகச் சொல்லி....சொல்லி....ஹையோ இருங்க....இதுக்கு மேல நான் எதுவும் சொல்லமாட்டேனே!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   

      இதென்ன வம்பாப்போச்சு...   எனக்கு வித்தியாசமா தெரியலையே...    ராஜாவும் சாந்தியுமே அப்ஜெக்ட் செய்யலை..  நமக்கென்ன...   விட்டுப்பிடிப்போம்.

      நீக்கு
  4. போன முறை சாந்தியின் பின்னணி ....இப்ப ராஜாவின் பின்னணி.

    ஆனாலும் ராஜாவின் அம்மா கொஞ்சம் அப்பாவியோ? அட நம்ம கனவுல வந்த மஞ்சள் னு நினைக்கறாங்க!! அது ராஜா சாந்திக்குச் சொன்னதுன்னு யூகிக்காம ஹிஹிஹி அதுவும் சாப்பாடெல்லாம் ராஜா சொல்லித்தான் செஞ்சேன்னு சாந்தி சொல்றப்ப!!!!

    ஒரே ஒரு தோஷம்- சந்தோஷம் - வார்த்தை விளையாட்டு நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜாவின் அம்மா நல்ல டைப்பா தெரியுது...    அதுத்த அவங்க பின்னணிதான் வரும் போல...

      நீக்கு
  5. ஜாதகத்தில் ஒரு தோஷம்இருக்கு என்ற சஸ்பென்ஸ்
    பின்னால் சந்தோஷம் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்.
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் உங்களுடன் சேர்ந்து மணமக்களை வாழ்த்துகிறேன் சக்ரபாணி ஸார்...   அடுத்த வாரம் கல்யாணமா?

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பகுதி கதை நன்றாக உள்ளது. ராஜாவின் வீட்டு பெரியவர்களின் பழக்க வழக்கங்கள், அதை இன்றளவும் தொடர்வது என சுபத்தை நோக்கி கதை நகர்வது அருமை. ஜாதகத்தில் தோஷம் தோஷமென்று கூறி ஏதாவது தடங்கல்கள் வந்து விடுமோவென படித்துக் கொண்டே வருகையில், சிறிது மனது படபடக்கும் போது, இந்த வாரத்திலேயே அது "சந்தோஷம்" என முடித்ததற்கு பாராட்டுக்கள்.

    "அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையெல்லாம் பொன்" என்றொரு சொல் வழக்கு உண்டே..! அதன்படி செல்வமீனா கடைவியாபாரம் இன்னமும் பலமடங்கு பெருகி வளமாக இருக்கட்டும். சீக்கிரம் திருமணத்திற்கும் நாள் குறித்து விடுவார்கள் என "ஸ்கை" சொல்லியிருப்பது மகிழ்ச்சிதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    எனக்குத் தோன்றியதைதான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். 

      அவிட்ட நட்சத்திரம் பற்றி அப்படி வார்த்தை படித்ததும் எனக்கும் ரொம்ப சந்தோஷமா போச்சு.

      நீக்கு
    2. //"அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையெல்லாம் பொன்" // இதுக்கெல்லாம் உண்மையான அர்த்தம் வேறாக இருக்கும்னு நினைக்கிறேன். இல்லை இதுதான் உண்மை என்று ஒரு ஜோசியர் சொன்னார்னு சொன்னீங்கன்னா, அவர் அட்ரஸ் கொடுங்க, ஒரு ஆட்டோ அனுப்பணும்.

      நீக்கு
    3. இது ஜோசியர் எவரும் சொன்ன கருத்தல்ல.  வழிவழியாக வரும் மொழி போல தெரிகிறது.

      நீக்கு
    4. /எனக்குத் தோன்றியதைதான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். /

      ஹா ஹா. ஹா. உண்மைதானே..! கதை எழுதிய உங்களுக்கு தோன்றிய மாதிரியே எனக்கும் தோன்றியதை குறித்து நான் ஆச்சரியபடுகிறேன். நீங்கள்தானே "வானமாகிய" அந்த கதாசிரியர்.?

      வாரங்கள் செல்லச் செல்ல கதையின் ஆசிரியர் யார் என தெரிந்து கொள்வதில் யாருக்குமே ஆர்வம் இல்லாது போய் விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது ஆனால், செவ்வாய் "சிறு கதை" மட்டும் ஒரு "குறு நாவலாக்கி" சுவாரஸ்யம் காட்டுகிறது. நடுவில் அந்த அமைச்சரின் கதை வேறு வந்து "நாவலாகி" விடும். பார்க்கலாம்..! விரைவில் இந்த நாவலாசிரியர் யாரென்று.?

      நீக்கு
    5. /அவிட்ட நட்சத்திரம் பற்றி அப்படி வார்த்தை படித்ததும் எனக்கும் ரொம்ப சந்தோஷமா போச்சு./

      நீங்கள் அவிட்டமா ? என் பெரிய மகனும் அவிட்டந்தான்..! என் கணவரின் சின்ன அக்கா (எங்கள் இளைய நாத்தனார்) அவிட்டந்தான். ஆனால் அவர்கள் பொருளாதாரத்தில் சிரமபட்டார்கள். "ஆமாம்.. பழமொழிக்கென்ன..!! சொல்பவர்கள் சொல்லி விட்டார்கள்.பானைக்குள் தவிடு வாங்கவே இங்கு முடியவில்லை." என அடிக்கடி அலுத்துக் கொள்வார்கள்.

      ஆக, வசதி வாய்ப்பு, கல்வி, யோகம் என எல்லாமே அமைவது முன் ஜென்ம பயன்கள்தாம் என நினைக்கத் தோன்றுகிறது. இந்த சொல் வழக்கு சிலருக்கு ஒத்துப் போகலாம்.

      நீக்கு
    6. பல ஜன்ம நட்சத்திரங்கள் குறித்து நல்லனவாகவும் சில பற்றி குறைவாகவும் பல "சொலவடைகள் "உண்டு. இவற்றில் உண்மை கிடையாதெனினும் நல்லதை மகிழ்ச்சி/நிம்மதி உண்டாக்க சொல்லப்படுவதும், பிறவற்றை கழிவிரக்க நிலையில் நாமே சொல்லிக் கொள்வதும் பழக்கமாக இருக்கிறது. இப்போது இது குறைந்து வருவதாகக் தோன்றுகிறது.‌

      நீக்கு
  7. "கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா..."... இனிதாக போகிறது சுபமாக முடியட்டும்.

    பதிலளிநீக்கு
  8. //ராஜாவின் அம்மா மீனாவுக்கு மஞ்சள் புடவையில் சாந்தியைப் பார்த்ததும், ஒரே சந்தோஷமாகிவிட்டது!//

    படம் அருமை.

    மனம் பொருந்திய பின் ஜாதக பொருத்தம் என்ன பார்க்கிறது?
    நல்ல வேளை ஒரு தோஷமும் இல்லை சந்தோஷம் என்று சொல்லி விட்டார் ஜோதிடர்.

    பதிலளிநீக்கு

  9. கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா என்ற பாடல் வருகிறதே அன்று வந்தவர் நாள் பார்த்து சொல்லவில்லையா? நல்ல படியாக திருமணத்தை முடித்து சுபம் போடுங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!