23.9.25

ஒரே ஒரு ஊரிலே - தொடர் கதை - ஸ்கை :: பகுதி 10: நிச்சயதார்த்தம்

 

முன்னறிவிப்பு : 

அப்பப்போ படிச்சுடுங்க. முடிந்தபிறகு மொத்தமாகப் படிச்சுக்கலாம் என்று நினைத்தால் ரொம்பக் கஷ்டப்படுவீங்க. 

முடிவு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளவர்களுக்கு கதையின் கடைசி வரி : " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்" 

= = = = = = = = =

முந்தைய பகுதி சுட்டி <<<<<<<<<<

ஒருநாள் அழகரிடமிருந்து செல்வத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

" நான்தான் அழகர் பேசுகிறேன் சாந்தியின் அப்பா. சாந்திக்கும் உங்கள் பிள்ளைக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது.  ஒருவரை ஒருவர் நன்றாகத்  தெரிந்துவைத்திருக்கிறார்கள். இனிமேலும் தாமதம் செய்யாமல் கல்யாணத்தை நிச்சயம் செய்து நடத்தி விட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.  என் வீட்டில் கூட எல்லோரும் அப்படியேதான் நினைக்கிறார்கள். உங்கள் பக்கத்திலும் இதே எண்ணம் தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தத்தை வைத்துக்கொண்டு முகூர்த்த தேதியை முடிவு செய்து விடலாமா ? என்ன சொல்லுகிறீர்கள் ? "

" நானும் உங்களை கூப்பிட்டு இதை சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் அது உங்களிடமிருந்து ஆரம்பமாவதுதான் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியதால் உங்கள் அழைப்பை  எதிர்பார்த்து இருந்தேன். தாராளமாக கூடிய விரைவில் நிச்சயம் செய்து கொண்டு கல்யாணத்தை நடத்தி முடித்து விடலாம். உங்களுக்கு சௌகரியமான நாள் பார்த்து சொல்லுங்கள் அன்றைக்கு நாங்கள் வந்து சம்பிரதாயபடி பெண் பார்த்து நிச்சயம் செய்துவிடுவோம்."

ஒரு நல்ல நாளில் அழகரின் வீட்டிற்கு ராஜா, அவனுடைய அம்மா, அப்பா, ராஜாவின் தாய் மாமா - திருவேங்கடம் (வீட்டுப் பெரியவர்) வந்து சேர்ந்தார்கள்.

அழகரின் வீட்டில் அவர்களோடு சாந்தியின் தாய் மாமா ( தெய்வானையின் ஒன்று விட்ட அண்ணன்) மணவாளன் வீட்டுப் பெரியவர் ஸ்தானத்தில் வந்திருந்தார்.  குடும்ப ஜோஸ்யர் சுருக்கமான பூஜைக்கான ஏற்பாடுகளை கூடத்தில் அமர்ந்து செய்து கொண்டிருந்தார்.  அக்கம் பக்கத்து நண்பர்கள் சுமார் பத்து பதினைந்து நபர்கள் வந்திருந்தனர்.  பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர ஓசை மெல்லியதாக வீட்டை நிரப்பி இருந்தது. பூஜை மலர்களும் ஊதுவத்தியுமாக மனம் பரப்பிக் கொண்டிருந்தன.

செல்வமீனா குடும்பம் வந்ததும் அவர்களை அழகர், தெய்வானை மணவாளன்  எல்லோரும் வாசலுக்கு வந்து வரவேற்றனர்.

தெய்வானையும் பக்கத்து வீட்டில் உள்ள சாந்தியின் தோழியும் சேர்ந்து ராஜாவுக்கு ஆரத்தி எடுத்தனர்.

மீனா வெற்றிலைபாக்கு, பழத்துடன்  இவற்றோடு நூறு ரூபாய் நோட்டு ஒன்றையும் சேர்த்து ராஜாவிடம் கொடுத்து ஆரத்தித் தட்டில் போடச் சொன்னார்.

தெய்வானை ஆரத்தித் தட்டிலிருந்து குங்குமம் எடுத்து, ராஜாவின் நெற்றியில் திலகமிட்டார்.

ஆரத்தி எடுத்த பக்கத்து வீட்டுப் பெண், சந்தோஷமாக வெற்றிலை பாக்கு பழம் இவற்றோடு நூறு ரூபாய் நோட்டையும் கையில் எடுத்துக் கொண்டு ஆரத்தியை வாசலில் போடப்பட்டிருந்த கோலத்தின் நடுவில் ஊற்றினார்.

எல்லோரும் வீட்டிற்குள் சென்றனர்.

பரஸ்பர அறிமுகங்கள் முடிந்தன. சுருக்கமாக ஒரு பூஜை செய்து கற்பூரம் எல்லோருக்கும் காட்டி முடித்தார் ஜோசியர்.

அடுத்து வருகின்ற முகூர்த்த நாட்களில், பொருத்தமான சில நாட்களைப் பட்டியலிட்டார்.

ராஜா, சாந்தியின் மொபைல் ஃபோனுக்கு, 'பட்டியலில் இருக்கும் முதலாவது முகூர்த்த நாளை தேர்வு செய்து சீக்கிரமே கல்யாணம்  செய்து கொள்வோம்' என்று செய்தி அனுப்பினான்.

 தெய்வானை, மீனாசாந்தி தங்களுக்குள் ஆலோசனை செய்து யை தனியாக அழைத்துச் சென்று, முகூர்த்த தேதியை உறுதி செய்தனர்.

ஜோஸ்யர் குறிப்பிட்ட நான்கு நாட்களில் இரண்டாவது முகூர்த்த நாளில் கல்யாணத்தை நடத்துவது என்று தீர்மானித்தார்கள்.

ராஜாவின் பெற்றோரும், சாந்தியின் பெற்றோரும் இரு குடும்பத்துப் பெரியவர்களும் சேர்ந்து  ஆலோசித்து லக்னப் பத்திரிகை எழுதினார்கள்.

இரண்டு தாள்களில் அதை அழகாக எழுதிக் கொடுத்தாள் ஆரத்தி எடுத்த பெண்.

இரண்டு தாள்களுக்கும் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவப்பட்டது.

இதெல்லாம் இங்கே நடந்து கொண்டிருந்தபோது, ராஜா சந்தடியின்றி நழுவி சாந்தி இருந்த அறைக்குள் சென்றான்.

" ஏய் நீ ஏன் ஜோஸ்யர் முதலில் சொன்ன தேதியை விட்டு இரண்டு வாரம் கழித்து வரும் தேதியை தேர்ந்தெடுத்தாய்?"

அதற்கு பதில் சொல்வதற்கு முன், ராஜாவின் பின்னாடியே வந்த தெய்வானையைப் பார்த்துவிட்டாள் சாந்தி.

" என்ன அம்மா? " என்று கேட்டாள், தன்னுடைய அம்மாவைப் பார்த்து!

ராஜா திடுக்கிட்டு திரும்பிப் பார்த்து, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான்.

" என்ன சாந்தி மாப்பிள்ளை என்ன கேட்கிறார்?"

" வேறு ஒன்றும் இல்லை அம்மா . நம்ம வைஃபை பாஸ்வேர்ட் என்ன என்று கேட்கிறார்"

"வைஃப், மோடம், பாஸ்போர்ட் எல்லாம் நம்ம வீட்ல உனக்கும் உங்க அப்பாவுக்கும்தான் தெரியும். ஒரு பேப்பர்ல எழுதி மாப்பிள்ளை கிட்ட கொடு"

சாந்தி ஒரு பேப்பரில் அவர்கள் வீட்டு நெட்வொர்க் பாஸ்வேர்ட் எழுதி அதன் கீழே, 'மெசஞ்சர் செய்தி பார்க்கவும்' என்று எழுதிக் கொடுத்தாள்.

அதை வாங்கிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்த ராஜா தன்னுடைய ஃபோனில் சாந்தி அனுப்பிய செய்தியைப் பார்த்தான். ' அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்'

* *

அதே நேரத்தில் திருவேங்கடம் உரத்த குரலில், "எல்லோரும் இங்கே வந்து உட்காருங்க. லக்னப் பத்திரிக்கை படிக்கும்போது நன்றாக கேட்டுக்கொண்டு யாருக்காவது ஏதாவது ஆட்சேபனையோ சந்தேகமோ இருந்தால் சொல்லணும்" என்றார்.

எழுதப்பட்ட லக்னப் பத்திரிக்கையை நிறுத்தி நிதானமாக, சத்தமாகப் படித்தார் அவர்.

எல்லோரும் அமைதியாக அதை கேட்டுக் கொண்டிருந்தனர்.

"பிள்ளை வீட்டுக்காரங்க, பொண்ணு வீட்டுக்காரங்க எல்லோருக்கும் சம்மதம்தானே?" என்று கேட்டார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

எல்லோரும் 'ஆம்' என்று  தலையாட்டினர் .

" அப்புறம் என்ன! கல்யாணம்தான்! கெட்டிமேளம் கொட்டி ஜமாய்ச்சிடலாம். " என்றார் ஒருவர்.

அவரே அப்புறம் "ரெண்டு பக்கத்து ஆளுங்களும் லௌகீகம் ஏதாவது பேசணும்னா பேசி முடிச்சுக்குங்க" என்றார்.

அழகர் உடனே " லௌ, லவ்வு எல்லாம் அவங்களே பேசி முடிச்சுட்டாங்க. நாங்க கீயை அவங்க கைல கொடுத்துட்டு கம்முனு இருக்க வேண்டியதுதான் பாக்கி " என்றார் சிரித்தபடி.

பிறகு அவர் மீனாவிடம், " எங்களுக்கு சாந்தி ஒரே பொண்ணு.  அதுக்கு மேல சொல்றதுக்கும்  பேசிக்கிறதுக்கும் எதுவுமில்லை " என்றார்.

மீனாவும் செல்வமும், " இதெல்லாம் நாங்க கேட்கவும் இல்லை, நீங்க சொல்லவேண்டியதும் இல்லை" என்றார்கள்.

" நிச்சயதார்த்தம் அன்னிக்கே லௌகீகம் பேசி முடிச்சுடணும்னு ஒரு ஐதிகம்.. அதான் ..  ..  .. "  என்று இழுத்தார் முதலில் பேசியவர்.

அழகர், "அடுத்த ஐதீகம் எல்லோரும் சந்தோஷமாக சாப்பிடுவதுதான். வாங்க, வாங்க! எல்லோரும் சாப்பிடப் போகலாம்" என்றார்.

எல்லோரும் அழகர் வீட்டு மேல் மாடியில் அமைக்கப்பட்டிருந்த ஷாமியானா பந்தல் பகுதியில் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

ராஜா, சாந்தி இருவருமே தங்கள் பெற்றோர்களோடு அருகருகே உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.

அவர்கள் இருவரையும், ஒருவருக்கொருவர் ஸ்வீட் கொடுக்கும்படி வற்புறுத்தினார் ராஜாவின் மாமா திருவேங்கடம்.

" சம்பந்தி ! கல்யாணத்தை எங்கே வெச்சுக்கலாம்" என்று அழகரிடம் கேட்டார் செல்வம்.

அழகர், " எங்க குலதெய்வம் திருத்தணி முருகன். திருத்தணி கோயிலில் கல்யாணம் செஞ்சுடலாம் " என்றார் அழகர்.

" எங்கள் குலதெய்வமும் முருகன். ஆனால் வைத்தீஸ்வரன் கோயில் செல்வ முத்துக்குமாரஸ்வாமி. எந்த ஊரானாலும் முருகன் முருகன் தானே !  திருத்தணியில் கல்யாணத்தை நடத்திடலாம். கல்யாணம் முடிந்த கையோடு  எல்லோரும் வைத்தீஸ்வரன் கோயில் போய்  அபிஷேகம் அர்ச்சனை எல்லாம் செய்துடலாம்" என்றார் செல்வம்.

ராஜா, அம்மாவிடம் காதோடு ஏதோ சொன்னான்.

அழகர், " மாப்பிள்ளை என்ன சொல்றார்?" என்று கேட்டார்.

மீனா , ராஜாவிடம் " நீயே சொல்லு ராஜா" என்றார்.

ராஜா, " மாமா .. கல்யாணத்திற்கு மந்திரி ராமசாமியை அழைக்கவேண்டும். அவர் ஆசிர்வாதம் பண்ணினப்புறம் தாலி கட்டணும் என்று நானும் சாந்தியும் நினைக்கிறோம்" என்றான்.

அழகர் கொஞ்சம் தயங்கினார். " மாப்பிள்ளை - எனக்கு அரசியல்வாதிகள் என்றால் கொஞ்சம் அலர்ஜி. அவங்க சௌகரியம் பார்த்துதான் நாம முகூர்த்த தேதியே வைக்கணும். அவங்க 50 பேர் பரிவாரங்களோட கல்யாணத்துக்கு வருவாங்க. பொன்னாடை போர்த்தி வரவேற்கணும் . அவங்கள கவனிக்கறதிலேயே நம்ம நேரம் சரியா போயிடும். அவர்கள் இழுக்கிற இழுப்பிற்கெல்லாம் நம்மால் ஆடமுடியாது " என்று சொல்லியபடி சாந்தியைப் பார்த்தார்.

சாந்தி, " பரவாயில்லை அப்பா. ராமசாமி சார் அப்படி எல்லாம் பந்தா செய்பவர் இல்லை. அவர் ராஜாவுக்கு ரொம்ப வேண்டியவர்.  நானும் அவரை அடிக்கடி பார்த்து பேசியிருக்கிறேன் " என்றாள்.

" சரிம்மா. நீங்க ரெண்டு பேரும் பிரியப்பட்டா அப்படியே செய்துடலாம் " என்றார்.

 (தொடரும்) 

20 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய தொடர்கதைப பகுதியும் நன்றாகப் போகிறது. கண்ணெதிரே ஒரு திருமண நிகழ்வை, சாஸ்திர சம்பிரதாயங்களை, காண்பது போன்ற உணர்வை கொண்டு வரும்படியான பக்குவமுடைய எழுத்து. "ஸ்கையை" மனதாற பாராட்டுகிறேன்.

    ஆகா.. நான் நினைத்த மாதிரி ராஜாவும் தன் திருமணத்திற்கு "அரசியல் வரவுக்கு" கட்டியம் கூறி விட்டார். கூடவே சாந்தியும் ஆமோதிக்க , அவள் அப்பாவும், வேறு எந்த காரணங்களையும் சொல்லி ஆட்சேப்பிக்காமல் ஒத்துக் கொண்டு விட்டார். இனி என்ன இடைஞ்சல்கள் வரப் போகிறதோ? ஆனாலும் கதையின் இறுதியில், வரும் முடிவான வார்த்தைகள் தரும் நம்பிக்கை ஆறுதலாக உள்ளது.

    ராஜாவின் நண்பன் சேகர் தந்த தொந்தரவுகள் நீங்கிய நிலையில், ராஜா, சாந்தியின் திருமண நிகழ்வுகள் அரங்கேறும் கதையின் தீடிர் திருப்பம் சுவாரஸ்யமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறது, ஆனாலும் கதை இன்னமும் அரசியல் பிரவேசத்தால், வளரும் எனவும் எதிர்பார்க்கிறேன். இன்றைய கதைப்பகுதியின் ஒவ்வொரு எழுத்தையும் மீண்டும் ஒருமுறை படித்து ரசித்தேன். அடுத்தப்பகுதிக்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. "லௌகீகம்" என்ற வார்த்தையை பொருளுடன் பிரித்துத் தந்த "ஸ்கை"க்கு பாராட்டுக்கள். அதைக் குறிப்பிட மறந்து விட்டேன். இரு மனங்களும் முன்பே யாருடைய உதவியுமின்றி, கட்டுப்பாடுகளுமின்றி, சேர்ந்து விட்டதால், இனி "மனம் போல மாங்கல்யந்தானே..!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி முடிந்தால் நல்லது வானம் என்ன நினைக்கிறாரோ!

      நீக்கு
  4. நிச்சயதார்த்தம்

    நடக்கட்டும்.. நடக்கட்டும்

    பதிலளிநீக்கு
  5. செல்வமீனா குடும்பம் வந்ததும் அவர்களை அழகர், தெய்வானை திருவேங்கடம் எல்லோரும் வாசலுக்கு வந்து வரவேற்றனர்.//

    திருவேங்கடம் ராஜாவின் தாய் மாமன் இல்லையோ? அவர் ஏன் வரவேற்க வரணும் ராஜா குடும்பத்தினரை?

    //அழகரின் வீட்டிற்கு ராஜா, அவனுடைய அம்மா, அப்பா, ராஜாவின் தாய் மாமா - திருவேங்கடம் (வீட்டுப் பெரியவர்) வந்து சேர்ந்தார்கள்.//

    ஸ்கைகிட்ட சொல்லுங்க கௌ அண்ணா. அவருக்கே கேரக்டர் குழப்பம் வந்திருச்சு போல!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தைப் படித்ததும், ஸ்கை எனக்கு ஃபோன் செய்து, திருவேங்கடத்தை மணவாளன் ஆக்கச் சொன்னார். உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார். அவர் சார்பில் நன்றி.

      நீக்கு
  6. கௌ அண்ணா, ஸ்கை கிட்ட இன்னொன்றும் சொல்லுங்க. இன்றைய விஷயங்கள் கொஞ்சம் சீரியல் போல இருக்கிறது என்று.

    கதைக்கு இவை தேவையா என்று தோன்றியது. குறிப்பாக இந்த ஆரத்தி, பைசா வைத்துக் கொண்டுத்தது போன்ற விஷயங்கள். ஒரு வேளை அவை ஏதாவது பிரச்சனையை இணைத்து என்றால் ...ஓகே. ஆனாலும் கதையின் கரு வேறு போன்று தோன்றுகிறது அதற்கு இவை தேவையா என்றும் தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம சொன்னா அவரு எங்கே கேட்கப் போகிறார்! அவர் பாட்டுக்க அவர் இஷ்டத்துக்கு எழுதிக்கிட்டு போறார் !

      நீக்கு
  7. அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் //

    ஹாஹாஹாஹா....கதைக்குத் தேவையில்லாத விஷயம். இல்லை இந்த இடைவெளி கல்யாணத்தில் ஏதேனும் தடங்கல் கொடுக்கும் விஷயம் அதாவது நடக்கப் போகிறது என்றால் பொருந்திப் போகும் இல்லைனா தேவையில்லை என்றே தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வானத்தில் சில சொல்லாடல்கள் ரசனை!

    லௌ......கீ.....போன்றவை. இதெல்லாம் ஒருவரை நினைவூட்டுகிறது வானத்திற்குள் ஒளிந்து கொண்டு.....ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மற்றொன்றும் தோன்றியது, போன வாரத்துப் பதிவு தானே? பெண் பார்த்துவிட்டுப் போனாங்க? மீண்டும் ஏன் அழகர் பெண் பார்க்கும் படலம் என்று தொடங்குகிறார் என்று தோன்றியது.

    கதைக்கரு அரசியல் விஷயங்கள்தான் மெயின் என்று தோன்றுவதால், இவற்றை ஜஸ்ட் கடந்து சென்றிருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சம்பிரதாய சம்பவங்கள். முதல் முறை மாப்பிள்ளை வரமாட்டார். ஜாதகம் கேட்டு வாங்கி, பார்த்து, ஜோஸ்யர் அபிப்பிராயம் கேட்டு, all clear certificate கிடைத்ததும்தான் மற்ற proceedings என்று அந்தக் குடும்பங்களின் வழக்கம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!