தஞ்சை பெருவுடையார் கோயில்
போசளர்கள் ஆட்சிக்குப் பிறகு (இது மாலிக் காஃபூர் படையெடுப்புக்குப் பிறகு), தமிழகமும் குறிப்பாக சோழப்பேரரசு (மண்டலம்) இருந்த இடமும் விஜயநகர மன்னர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. இதன் பிறகு சங்கம, சாளுவ துளுவகுல மன்னர்களால் (விஜயநகரப் பேரர சர்கள்) சோழமண்டலம் ஆளப்பட்ட து (நம் ஆர்வம் இப்போ சோழமண்டலம், தஞ்சை போன்றவைதானே)
1310 மாலிக் காஃபூர் படையெடுப்புக்குப் பிறகு தமிழக கோயில்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது. கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டால் என்ன ஆகும்? அதுவும் உற்சவ மூர்த்திகள் எல்லாம் (அதில் தங்கம் இருக்கும் என்பதால் உருக்கிவிடலாம் என எடுத்துச் சென்றனர்). உங்களுக்குத் தெரியுமா? பல முக்கியக் கோயில்களில் உற்சவ விக்கிரகங்களை பூமியில் புதைத்து பத்திரப்படுத்தினர். இந்த வரலாறுகளைப் பற்றி எழுதினால் ரொம்பவே எழுதவேண்டியிருக்கும். தமிழக கோயில் பலவற்றுள் உற்சவ மூர்த்தங்களை பத்திரப்படுத்தினர். இதில் ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் (மலையில் பிளவில் இருந்த கிணறு போன்ற பகுதியில் விடப்பட்டது), காஞ்சி பேரருளாளன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போன்ற பல உற்சவர்கள் பூமியில் இருத்தப்பட்டனர் (இதனை அந்த அந்த கோயிலைச் சார்ந்தவர்கள் ஒத்துக்கொள்வதில்லை, சமத்காரமான காரணம் சொல்வர். உதாரணம், பார்த்த சாரதி தேரோட்டியதால் போரில் பல அம்புகள் முகத்தில் வாங்கிக்கொண்டான், அதனால் உற்சவர் முகம் அப்படி இருக்கிறது என்பார்கள்). திருவரங்கம் உற்சவர் நம்பெருமாள் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா (திருப்பதி) சுற்றிவந்தது உங்களுக்குத் தெரியும் (கீதா சாம்பசிவம் மேடம் பெரிய தொடராகவே இதனை எழுதினார்..ஆனால் முடிப்பதற்கான நேரம் வரவில்லை). நகைகளுடன் ஜ்வலித்த நம்பெருமாளை, ஆபரணங்களோடு பல்லக்கில் மதுரை நோக்கிக் கொண்டுபோகும்போது கள்வர்களால் ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன (தமிழர்கள்தாம்). பிறகு அலைச்சலில் நம்பெருமாள் முகமண்டலம் மாறிவிட்டது. நான் எழுதுவது என்ன என்று புரியவேண்டும் என்பதற்காக காஞ்சி பேரருளாளன், திருவரங்கம் நம்பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருமுகமண்டலங்களைக் கொடுத்துள்ளேன். நீங்கள், இந்த விக்கிரகங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளானதால் இப்படி இருக்கிறது என்று நினைக்காதீர்கள். குருபரம்பரை மற்றும் பல நூல்களைப் படித்தால் ஒரு சில விவரங்கள் தெரியவரும். உதாரணமாக வானமாமலை தாயார் உற்சவ விக்கிரகம் திருப்பதி மலையில் (பூமிக்கடியில்) பத்திரப்படுத்தப்பட்டது. இன்னும் பல செய்திகளை இங்கு எழுதவில்லை, நீளத்திற்கு அஞ்சி.
சோமநாதபுரம் படையெடுப்பின்போது அளவிடற்கரிய செல்வங்கள் கோயிலிலிருந்து கொண்டுபோகப்பட்டன. கோயிலைக் காத்து நின்ற ஆயிரக்கணக்கான அன்பர்கள் உயிரைத் தாண்டித்தான் இது நடந்தது. இது ஏதோ அந்தக் காலத்தில் நடந்தது. தற்போதுள்ளவர்கள் எல்லாமே முன்பு இந்துக்களாக இருந்தவர்கள்தானே என்று நினைத்துவிடாதீர்கள். அந்நிய மதம், பாரத கலாச்சாரத்திற்குச் சம்பந்தமில்லாதது. நேற்றைக்கும் (Yester years) இன்றைக்கும் அதே பிரச்சனைகளை கோயில்கள் சந்திக்கிறது என்பது நம்மால் உணர முடியும் உண்மை. இந்த வரலாற்றை இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.
இதை எழுதும்போது, கோயில்களின் மூலவர், உற்சவர் விக்கிரகங்களை வெறும் சிற்பம், உலோகச் சிற்பம் என்று பார்ப்பது மிக மிகத் தவறானது என்று சமய சம்பந்தப்பட்ட பல நூல்கள் அறுதியிட்டுச் சொல்கின்றன. விக்கிரகம் பேசும், அது இறைவனே என்பதற்கு பல நட ந்த சம்பவங்கள் உள்ளன. இதனை விரிவாக எழுதுவதற்கு அஞ்சி இரண்டு சம்பவங்களை மாத்திரம் சொல்கிறேன். ஒன்று காஞ்சி வரதராஜருக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த பெரியநம்பி (வைசியர்) இறைவனுடன் அடிக்கடி பேசுவதும் அதற்கு வரதராஜர் பதிலளிப்பதும் நடந்திருக்கிறது (இது ஒரு சுவாரசியமான வரலாறு. துரதிருஷ்டவசமாக இதனை எழுதும் பகுதி இதுவல்ல.). கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றம் செய்தபோது (திருவரங்கம் தாயார் சன்னிதி முன் உள்ள மண்டபத்தில்), சில பாடல்களைப் பாடியபோது, அதன் அருகில் இருக்கும் மேட்டழகியசிங்கர் சன்னிதியிலிருந்து இறை விக்ரஹம், ஆஹாகாரம் செய்து அங்கீகரித்தது என்பது வரலாறு.
சரி நம் வரலாற்றைத் தொடர்வோம். 1440களில் (நாம் 1380 வரை சுமார் 70-75 ஆண்டுகள் மாலிக்காபூரின் படையெடுப்புகளின் தாக்கம் இருந்தது என்று கொள்ளலாம். 1370களில்தான் நம்பெருமாள் திரும்பவும் திருவரங்கம் வருகிறார் (1310ல் திருவரங்கத்தைவிட்டு நீங்கி) விஜயநகரப் பேர ரசின் தளபதி தஞ்சை பெரியகோயிலுக்கு ஆபரணங்கள் அளித்திருந்த செய்தி கல்வெட்டுகளில் உள்ளது. விஜயநகரப் பேரரசு, தமிழகத்தின் பல கோயில்களின் புனருத்தாரணத்திற்குக் காரணமாக இருந்தது.
திருவரங்கம் தாயார் சன்னிதி முன்புள்ள மேட்டழகியசிங்கர் சன்னிதி(ஆலயம்), அதன் எதிரில் கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய மண்டபம் உள்ளது.
சங்கம குலம் மறைந்து சாளுவ குல மன்னர்கள் விஜயநகர ஆட்சியைக் கைப்பற்றவே, மகாமண்டலேசுவரனாகத் திகழ்ந்த கோனேரிராயன் என்பான், திருச்சியைத் தலைநகரமாகக் கொண்டு தஞ்சையையும் சேர்த்து சுதந்திரமாக ஆட்சிபுரியத் தொடங்கினான். அவனுக்கும் திருவரங்கத்தைச் சேர்ந்த கந்தாடை இராமானுஜதாசர் என்பவருக்கும் மோதல் தொடங்கவே (1495), விஜயநகரப் பேரரசின் தளபதியான நரசநாயக்கர், கோனேரிராயனுடன் போரிட்டு வென்று, சோழமண்டலத்தைத் தன் கீழ் கொண்டுவந்தார். இந்த நரசநாயக்கரின் வெற்றியை, அவருக்குப் பின் வந்த மன்னர்களான கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர், சதாசிவராயர் போன்றவர்கள் தங்கள் குலப்பெருமையாக கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் குறிப்பிட்டிருக்கிறார்கள். (நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர், அவருடைய இரு மனைவியருடன் நின்றுகொண்டிருக்கும் பெரிய உலோகச் சிற்பத்தை திருப்பதி கோயிலில் கண்டிருக்கிறீர்களா? இது தற்போது துலாபாரம் கொடுக்கும் இடத்தின் அருகில் உள்ளது. மூலவர் சன்னிதிக்குச் செல்லும் வெள்ளி நுழைவாயிலுக்கு முன்பு த்வஜஸ்தம்பம் உள்ளது. நாம் மூலவர் சன்னிதியைப் பார்த்து த்வஜஸ்தம்பம் அருகில் இருந்தால் நம் இடது பக்கம் இருக்கும். இதுவரை பார்க்கவில்லை என்றால் அடுத்த முறை பாருங்கள். திருவரங்கம் நம்பெருமாள் இந்தக் கோயிலில் சுமார் 40 வருடங்கள் இருந்திருக்கிறார், முஸ்லீம் படையெடுப்பினால் ஏற்பட்ட யாத்திரையின்போது. அவர் எழுந்தருளியிருந்த மண்டபம் இப்போதும் ஸ்ரீரங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. திருமலை மகாதுவாரத்தில்-ராஜகோபுரத்தில் நுழைந்தவுடன் நம் இடது புறம் இருக்கும் மண்டபம்தான் அது)
1567ல் எழுதப்பட்ட சதாசிவராயரின் கிருஷ்ணாபுரம் செப்பேடு (நினைவிருக்கிறதா திருநெல்வேலியின் கிருஷ்ணாபுரம்), நரசநாயக்கரின் வெற்றியை தஞ்சை ராஜ்ஜியத்தின் வெற்றி (அதனை ராஜ்ஜியம் என்று சொல்லியிருந்தாலும் தஞ்சை அப்போது நகரம்தான்) என்று குறிப்பிடுகிறது. இப்போதும் தஞ்சையில் வயலூர் கிராமம் நரசநாயக்கபுரம் என்றே அரசுப் பதிவேட்டில் உள்ளது. 1534-35ல்தான் தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்ட தஞ்சை நாயக்கர்களின் ஆட்சி மலர்ந்தது.
அச்சுத தேவராயர், 1535ல், தன் மனைவியின் தங்கை (மனைவி-திருமலாம்பா, தங்கை-மூர்த்திமாம்பா) கணவரான செல்வப்ப நாயக்கரை சோழநாட்டின் ஆட்சியாளராக நியமித்தார்.
1535லிருந்து 1564வரை, செல்வப்ப நாயக்கர் தனியாகவும், அதற்குப் பிறகு அவருடைய மகன் அச்சுதப்ப நாயக்கருடன் இணைந்து 1590 வரையும் ஆட்சி புரிந்தார். பிறகு பத்து வருடங்கள் அச்சுதப்ப நாயக்கர் தனியாக ஆட்சி செய்தார். 1600ல் அவருடைய மகன் இரகுநாத நாயக்கரும், 1632ல் அவருடைய மறைவுக்குப் பிறகு விஜயராகவ நாயக்கரும் தஞ்சை மன்னரானார்கள்.
1675ல், விஜயராகவ நாயக்கருக்கும் மதுரை சொக்கநாத நாயக்கருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின்போது, விஜயராகவ நாயக்கருக்கு உதவ, பீஜப்பூர் சுல்தான் உதவியை நாடுகிறார். சுல்தானின் நம்பிக்கைக்குரிய, சத்ரபதி சிவாஜின் தம்பி முறையான பெங்களூர் ஜாகிர்தார் ஏகோஜி (இவருடைய பெயர் வெங்கோஜி ராவ் போன்ஸ்லே), பீஜப்பூர் சுல்தான் படைத் தளபதிகளான காதர்யெக்கலசு, அப்துல்ஹலீம் ஆகிய மூவரும் அவருக்கு உதவ வந்து போரில் வெற்றிபெறச் செய்கிறார்கள். (சில வரலாற்று ஆசிரியர்கள், அந்தப் போருக்கான செலவை விஜயராகவ நாயக்கரிடம் கேட்டு அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜயராகவ நாயக்கர் கொல்லப்பட்ட தாகச் சொல்கின்றனர். ஆனால் வெற்றிபெற்ற சமயத்தில் தஞ்சை நிசும்பசூதனி இருக்கும் ஆலய நுழைவாயிலில் ஏகோஜிசெய்த சதியால், (ஏகோஜியின் தூண்டுதல் பேரில்) விஜயராக நாயக்கர் கொல்லப்பட்டார் (இது பற்றிப் பிறகு பார்க்கலாம்). கிபி 1675ல் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து மராத்திய ஆட்சி தஞ்சையில் தொடங்கிற்று. நாயக்கர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது மராட்டிய இரத்தம் என்பது வருத்தத்துக்கு உரியது தான். வரலாறு திரும்பத் திரும்பச் சொல்வது இதுதான். சொந்த இரத்தத்துக்குள்ளேயே பகை மூண்டிடில், வெளியொருவனை உதவிக்குக் கூப்பிட்டால், குரங்கிடம் அப்பத்தைப் பகிரச் சொன்ன கதையாகிவிடும் என்பதைத்தான்.
இந்த ஏகோஜி, சிவாஜிக்கான சொத்துக்களைச் சரியாகக் கொடுக்காததும், அதனால் செஞ்சி வரை படையெடுத்து வந்த சிவாஜி, ஏகோஜியை தஞ்சையை மக்களுக்கு விட்டுவிட்டு வரும்படிச் சொன்னதும், தன்னுடன் சமாதானமாகப் போகும்படிச் சொன்னதும் அதனைக் கேட்காத ஏகோஜிமேல் வெறுப்புற்று, மராட்டியப் படையை தஞ்சையைத் தாக்க அனுப்பி, ஏகோஜியைப் போரில் தோற்கடித்ததும், ஏகோஜி சமாதானத்திற்கு உடன்பட்டு, தஞ்சையைத் தானே ஆள்வதாகவும் அதற்காக சிவாஜிக்கு 3 லட்சம் பிர்தோக்கள் கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டான். இதன் value, இந்த கரன்சியை யார் உபயோகித்தார்கள் என்பது தெரியவில்லை, காரணம், மராட்டியர்கள் உபயோகப்படுத்திய கரன்சி வேறு,
சிவாஜி கால நாணயங்களைப் பற்றிய படங்களைப் பார்த்தபோது, லண்டனில் அந்தக் காலத்தில் நாணயங்கள் செய்தவிதம், எப்படி ஒவ்வொரு நாணயத்தையும் எடை நிறுத்துச் செய்தார்கள் என்பதையெல்லாம் பார்த்த படித்த நினைவு வந்த து. அதற்கான படங்களுடன் எழுத ஆரம்பித்தால் பதிவு எங்கோ இழுத்துக்கோண்டு போய்விடும். பிறகு ஒரு சமயம் எழுதுகிறேன். இந்த வாரத்தில் இவ்வளவு வரலாறு போதும். இனி படங்களைப் பார்க்கலாம்.
மேலுள்ள படத்தில் நீங்கள் காணவேண்டியது சிங்கங்களை எப்படி வரிசையாக alignedஆக, அதாவது நடுவில் ஒரு சிங்கம், மற்ற இரண்டு புறமும் இரு சிங்கங்கள் சிறிது கோணத்துடன் நடு சிங்கத்தைப் பார்க்கும்படியாக அமைந்திருக்கிறார்கள் என்று. சிங்கங்களின் இரு பக்கமும் இரு அழகிய சிற்பங்கள்.
வாயிலின் இரு புறமும் எவ்வளவு கம்பீரமாக இரு வாயிற்காவலர்கள். இந்த இடங்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு பெருமிதம் தோன்றும்.
பெருவுடையார் கோயிலின் வலது புறத்தில் ராஜராஜ சோழன் கோயிலுக்குள் நுழையும் வழி என்று நம்பப்படும் வாயிலுக்கு எதிரேதான் சண்டிகேசுவரர் கோயில் இருக்கிறது. அதன் பின்புறம் ஆறுமுகனுக்கான கோயில் தெரியும் (இது பிற்காலத்தையது)
சண்டிகேசுவர ர் கோயிலிலிருந்து பெரிய கோயிலின் வெளிச்சுவர்.
முதல் படத்தில் துவாரபாலகரின் கால் அளவு, அருகிலுள்ள சிற்பத்தின் அளவு ஒப்பு நோக்கத் தக்கது.
கல்வெட்டுகள் கீழ்ப்பகுதி வரை செதுக்கப்பட்டுள்ளன. (இதனைப் படிக்கும் முறை உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இடது பக்கத்திலிருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக ஒரு வரி பல்வேறு கற்களின் ஊடே பயணிக்கும். பிறகு அடுத்த வரி தொடங்கும், முதல் கல்லில்) இது எவ்வளவு கஷ்டமான வேலை, எப்படி இதனைச் சரிபார்த்திருப்பார்கள், எழுத்துப் பிழை வந்திருக்க எவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது, ஒரு சிறிய பிழைக்காக இன்னொரு கல்லா தேடமுடியும்? என்றெல்லாம் யோசியுங்கள்.
நிறைய வரலாற்றுத் தகவல்களை எழுத ஆசைதான். ஆனால் பல, போர் சம்பந்தப்பட்டவை. எல்லோருக்கும் விருப்பமிருக்குமா என்பது தெரியாது. இனி அடுத்த வாரம் தொடர்வோம்.
(தொடரும்)
மாலிக்காஃபூர் படையெடுப்பு பற்றியும் வாசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு//1310 மாலிக் காஃபூர் படையெடுப்புக்குப் பிறகு தமிழக கோயில்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது. கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டால் என்ன ஆகும்? //
என்ன நெல்லை, இது வரலாறு!!!!!!!! தொடரும் வரலாறு!!!!! இப்ப மட்டும் என்னவாம்...
கீதா
வாங்க கீதா ரங்கன். சிவன் சொத்து குல நாசம் என்பது மக்கள் மனதில் பதியவில்லை.
நீக்குபார்த்தசாரதி பெருமாள் விஷயம் ப்ராக்கெட் ஆமாம் அப்படித்தான் சொல்வதுண்டு ஆனால் நீங்கள் சொல்லியிருப்பதுதான் அவங்க ஒத்துக் கொள்வதில்லை.
பதிலளிநீக்குமுதல் முறை பார்த்தசாரதி கோவிலுக்குப் போனப்ப, திருமணம் முடிந்து நம்ம வீட்டார் எல்லாரும் பெரிய குழுவே....அப்ப கோவில் கோவிலா கூட்டிப் போனாங்க. எனக்கு அயற்சியாக இருந்தது. என்ன இது கோவில் கோவிலா போறாங்கன்னு. வீட்டில் உள்ளவங்க நான் புதுசு எனக்கு எதுவும் தெரியாதுன்னு அர்ச்சகர்கிட்ட சொல்லச் சொன்னாங்க. அப்ப அர்ச்சகர் தீபம் காட்டிக் கொண்டே சொன்னார். நான் அது அப்படியா அப்படி இல்லையே என்று சொல்லி முடிக்கும் முன் நம்ம வீட்டவர்கள், என்ன இது என்னவோ உனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி கேட்கற? இப்படி எல்லாம் பேசக் கூடாது நல்லகாலம் அர்ச்சகர் காதில் விழலை என்று ......ஹாஹாஹாஹா...
திருவரங்கம் நம் பெருமாள் பற்றியும் வாசித்திருக்கிறேன். அந்தக் கலவாரத்தில் கோவிலில் இருந்தவங்க எப்படிப் பதறி, காப்பாற்றுவதற்கு அவங்க செய்தது எல்லாம் வாசிக்கும் போது காட்சிகளாகக் கண்ணில் விரியும்.
கீதா
பல கோயில்களில் சுவாரசியத்துக்காகவோ இல்லை வரலாற்றை மக்களிடம் கூறவேண்டாம் என நினைப்பதாலோ இப்படிச் சொல்கின்றனர்.
நீக்குபெரிய நம்பி, வரதராஜப் பெருமாள் பேசிக் கொள்வதும் வாசித்ததுண்டு. அது போல சோமநாதபுரம் படையெடுப்பும்....
பதிலளிநீக்குகீதா
இரண்டு இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். சோமநாதபுரம் கோவில் கடற்கரையில் அமைந்துள்ளது. அங்கிருந்து பாகிஸ்தான் தெரியும்.
நீக்குபடங்கள் சூப்பர். ஆமாம் சிங்கங்கள் எல்லாம் அழகா வரிசையாக வடிவமைச்சிருக்காங்க...நல்ல கலைத்திறன்.
பதிலளிநீக்குதுவாரபாலகர்கள் படத்தைப் பார்த்ததும், வாயில் காப்போனே மணிக்கதவம் தாள் திறவாய்ன்னு மனதிற்குள் வந்தது.
கீதா
காலையில் திருவருட்செல்வரை நினைக்க வைத்துவிட்டீர்களே.
நீக்குதிருப்பதி பயணத்திற்குப் பிறகு உடம்பு சரியில்லை. மூன்றாவது நாளான இன்றும் முன்னேற்றம் இல்லாத்தால் (இந்த லட்சணத்தில் தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடை) இன்று ஆஸ்பத்திரி செல்லலாம் என நினைத்திருக்கிறேன்.
முதல் படத்தில் துவாரபாலகரின் கால் அளவு, அருகிலுள்ள சிற்பத்தின் அளவு ஒப்பு நோக்கத் தக்கது.//
பதிலளிநீக்குஆமாம் கவனித்தேன். கால் ரொம்ப ஒல்லியா இருக்கு. இடப்புறம் உடைந்து சீரமைப்பு செஞ்சிருப்பாங்களோ?
அது போல அதற்கும் மேலே உள்ள இரு துவாரபாலகர்கள் (தனித்தனியாக) அதிலும் வலப்பக்கம் உள்ளவருக்குக் கொஞ்சம் சிதைவுகள் இருக்கோ என்று தோன்றியது.
கீதா
பெரியகோயிலில் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கும்.
நீக்குகடைசிப்படத்தில் கல்வெட்டுகள் இடப்புறம்இத்துனூண்டு இடைவெளியில் இடப்பக்கம் கீழ சிற்பங்கள் குட்டி குட்டியா செமையா இருக்கு
பதிலளிநீக்குஎல்லாமும் ரசித்தேன். ஹப்பா பதிவு பார்த்து போட்டாச்சு. இனி அடுத்து வேலைகள்
கீதா
ரசித்ததற்கு நன்றி. ஞாயிறும் பிசியா?
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா
நீக்குநாளை தீபாவளி
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். எனக்கு அது மற்றொரு நாளே
நீக்கு/// 1310 மாலிக்காஃபூர் படையெடுப்புக்குப் பிறகு தமிழக கோயில்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது. கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டால் என்ன ஆகும்?... ///
பதிலளிநீக்குஇன்று வரை நியாயம் கிடைக்கவில்லை..
ஏனைய வரலாற்று செய்திகளும் படங்களும் அருமை.. சிறப்பு
நீக்குவாங்க துரை செல்வராஜு சார். வரலாற்றில் மற்றும் ஜனநாயகத்தில் நியாயம் என்றுமே கிடைக்காது.
நீக்குவரலாற்றுச் செய்திகள் உங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி
நீக்கு/// சொந்த இரத்தத்துக்குள்ளேயே பகை மூண்டிடில்,
பதிலளிநீக்குவெளியொருவனை உதவிக்குக் கூப்பிட்டால்,
குரங்கிடம் அப்பத்தைப் பகிரச் சொன்ன கதையாகி விடும்///
உண்மை... உண்மை
மாஃபியாக்கள் ரத்த சம்பந்தம் உள்ளவர்களை மிகவும் ஆதரித்துப்்போற்றுவார்கள். தவறை, அது துரோகமாக இல்லாதவரை, சரிசெய்துகொள்வார்கள்.
நீக்குதஞ்சையில் இருந்தபோது பெருமை அறியாது கோவில் சுற்றி இருக்கிறேன். விவரம் தெரிந்தபோதோ வெளியூரில் - மதுரையில். கடைசியாக 2014 ல் கேஜியுடன் கல்யாணமாகாதேவி போகும் வழியில் ஒரு அவசர விசிட். அதுவும் மாலை மயங்கும் வேளையில். உங்கள் படங்களை பார்க்கும்போது சீக்கிரம் பெரிய கோவில் ஒரு விசிட் அடிக்க வேண்டும் என்று ஆர்வம் வருகிறது.
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். கும்பகோணத்திற்கு ஏராளமான முறைகள் சென்றிருந்தாலும், சில கோயில்களைத் தரிசிக்கும்போது அருகில் இருக்கும் வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களைக் கண்டதில்லை. நமக்கு எப்போது வாய்க்கும் என்றும் தெரியவில்லை.
நீக்கு