ஸ்கூல் லீவு, பூஜை விடுமுறைகள், சுண்டல் நாட்கள், அரசியல் நிகழ்வுகள் என்று பல காரணங்களால், நம் வாசகப் பெருமக்களுக்கு கேள்விகள் ஒன்றும் கேட்கக் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.
ஆனாலும் என்ன?
நாங்களே ஒரு கேள்வி கேட்டோம். பல பிரபலங்கள் அந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்லியிருப்பார்கள் என்று கற்பனை செய்தோம்.
எங்கள் கேள்வி :
உலக நாடுகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று போர் முகம் காட்டி வரும் இந்தக் காலத்தில், சமாதானத்துக்கான நோபல் பரிசு என்பது முக்கியமா?
பதில்கள் :
1) அதிராவின் பாஸ் - ட்ரம்ப் அங்கிள் :
ஏய் ! யாரங்கே? இந்த மாதிரி வம்பு கேள்வியைக் கேட்ட எங்கள் Blog வலைப்பதிவை அமெரிக்காவில் படிப்பவர்கள் எல்லோரும் 100% வரி கட்டவேண்டும் என்று இப்போதே உத்தரவு இடுகிறேன்.
எலான் மஸ்க் : சார் - ஆனால் வலைப் பதிவுகளைப் படிக்க நம்ம நாட்டுல வரி எதுவும் கிடையாதே !
டிரம்ப் : ஏன்யா - லூஸா நீயி? நான் சொல்லிட்டேன் இல்ல - இன்று முதல் ஒருவரை அப்பாய்ண்ட் பண்ணி, எங்கள் Blog பதிவுகளில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வரிகள் உள்ளன என்று எண்ணி என்னுடைய பார்வைக்கு அனுப்பச் சொல்லு. ஒவ்வொரு வரிக்கும் ஒரு டாலர் வரி.
எலான் மஸ்க் : சார் அந்த வரி எண்ணுகிற போஸ்டுக்கு ஆளுங்க யாரும் வரத் தயாராக இல்லை.
டிரம்ப் : ஏன்?
எலான் மஸ்க் : ஏற்கெனவே செனட் அப்ரூவல் கிடைக்காததால் அரசாங்க அதிகாரிகள் சம்பளம் கிடைக்காம வயித்துல ஈரத் துணியைப் போட்டுக்கொண்டு பட்டினி கிடக்கறாங்க. இங்கே வந்து அவர்கள் எங்கள் Blog பதிவைப் படித்து, எவ்வளவு வரிகள் என்று சொன்னால், நீங்க அவருக்கே 27 டாலர் வரி (ஆமாம் இது 27 ஆவது வரி) போட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம்.
டிரம்ப் : வயித்துல ஈரத் துண்டா - அது எங்கே உற்பத்தி செய்யப்பட்ட துண்டு ?
எலான் மஸ்க் : அது வந்து திருப்பூர் என்ற ஊரில் தயாரிக்கப்பட்ட துண்டு.
டிரம்ப் : திருப்பூர் எங்கே இருக்கு?
எலான் மஸ்க் : இந்தியாவுல
டிரம்ப் : இனிமே திருப்பூர் துண்டுகளுக்கு 100% வரி.
எ ம - துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறார்.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த டிரம்ப் உதவியாளர், " சார் நீங்க நோபல் பரிசு குறித்த கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே? "
டிரம்ப் : "எந்தக் கேள்வி ?"
உதவியாளர் : " எங்கள் Blog கேள்வி "
டிரம்ப் : " நீ அதைப் படிச்சியா "
உதவியாளர் : " ஆ ஐயோ ஆமாம் .. இல்லை எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. என்னிடம் திருப்பூர் துண்டு இல்லே .." (ஓடுகிறார்)
= = = = = = = = = =
ரஷ்ய அதிபர் புடின் :
ஏற்கெனவே 420(!) க்கு மேற்பட்ட நோபல் பரிசாளர்களைக் கொண்ட அமெரிக்காவுக்கு நோபல் பரிசு கொடுக்கக் கூடாது. பாகிஸ்தான் ராணுவம் சண்டையை நிறுத்தச் சொன்னதும் நிறுத்திய இந்திய ராணுவ அமைச்சருக்குத்தான் சமா நோபல் பரிசு வழங்கவேண்டும்.
அல்லது எங்கள் ரஷ்யத் தலைவர் பெயர் கொண்ட தலைவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்.
நிருபர் : அவர் சமாதானத்துக்கான முயற்சி என்ன செய்தார்?
புடின் : கே டி சகோதரர்கள் இருவருக்குள் சமாதானம் பேசி சமூக 'நிதி'யை நிலை நாட்டினார் என்று கேள்விப் பட்டேன். நீங்க அவரிடம் சென்று விசாரிக்கலாம்.
- - - - - - - - - - - -
நிருபர் : புடின் சொன்ன 'அவர்' நீங்கதானா?
அவர் : ஆமாம்.
நிருபர் : உங்கள் சமாதான முயற்சி உண்மைதானா?
அவர் : ஆம்.
நிருபர்: நான் நோபல் கமிட்டியினரிடம் தொடர்பு கொண்டு, பேசினேன். அவர்கள் ஒரு துண்டு சீட்டு என்னிடம் கொடுத்து இதில் இருப்பதை நீங்க பார்த்துப் படித்துவிட்டால் உங்களுக்கே சமாதான நோபல் பரிசு என்று சொல்லியிருக்கிறார்கள்.
அவர் : எங்கே கொடுங்க ?
பார்த்துவிட்டு அவர் கூறியது : " எனக்கு இந்த பல் உடைக்கின்ற நோ-பல் பரிசு எல்லாம் வேண்டாம். இதை விட உயரிய விருதாகிய 'யுனெஸ்கோ சமாதான சமூக "நிதி" பரிசு போதும். "
- - - - - - - - - - -
நிருபர் : சார் உங்க பெயர் என்ன?
" Fidel Edwards "
நிருபர் : " உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டும் என்று ஏன் சொன்னீங்க ?"
எட்வர்ட்ஸ் : " நான் சொன்னதை நீங்க சரியா கேட்கவில்லை "
நிருபர் : " என்ன சொன்னீங்க?"
எட்வர்ட்ஸ் : " நான் சொன்னது - நோ பால் (No Ball_ - பரிசு கொடுப்பதாக இருந்தால் அது எனக்குத்தான் கொடுக்கவேண்டும் - என்று"
நிருபர் : " அப்படியா! நோ பால் பரிசு பெற நீங்கள் செய்த சாதனை என்ன?"
எட்வர்ட்ஸ் : " என் கிரிக்கட் வாழ்க்கையில் டெஸ்ட் தொடர்களில் இதுவரை நான் 325 நோ பால் போட்டுள்ளேன். "
= = = = = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
பஹ்ரைனில் மால்களில் தியேட்டர் காம்ப்ளெக்ஸ் நிறைய உண்டு. அது தவிர தனிப்பட்ட திரையரங்கமும் உண்டு. அல் ஹம்ரா எனப்படும் இந்தத் திரையரங்கம் என் வீட்டருகே அமைந்திருந்தது. ஒவ்வொரு முறையும் திரைப்படம் பார்க்கப்போகும்போது என்ன படம் என்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வேன் (பெரும்பாலும்). நம்ம ஊர் மாதிரி கச்சா முச்சான்னு தியேட்டர்கள் இருக்காது (ஆனால் இப்போ நம்ம ஊர் தியேட்டர் காம்ப்ளெக்ஸிலும் நல்ல தியேட்டர்கள் பல இருக்கின்றன)
Balcony Ticketதான். கூட்டம்லாம் பெரும்பாலும் இருக்காது. இது நான் ஐ படம் பார்த்தபோது!
('ஐ' யஹோ ! தனியாக உட்கார்ந்து பார்க்க பயமா இல்லையா? )
- - - - - - - - - - -
தாய்லாந்து சென்றிருந்தபோது, நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் ஒரு தாமரைக்குளம் (அப்படீல்லாம் இல்லை. நீர்நிலைல தாமரையை வளர்த்திருந்தாங்க) பார்த்தேன். பொதுவா தாமரையை தற்காலங்களில் பார்ப்பது அரிது. அல்லிக்குளம் நிறையவே நான் பார்க்கிறேன். அதிலும் இந்தத் தாமரை ஆயிரம் இதழ்கள் என்று சொல்லும்படியாக ரொம்பப் பெரியதாக இருந்தது. இந்தப் படத்தை எங்கள் பிளாக் தளத்தில் பதிவிடணும் என்று தேடிக்கொண்டிருந்தேன்.
இந்தப் படத்தைப் பார்த்ததும் ஸ்ரீராம் மனதில் எந்தப் பாடல் ஒலிக்கும்? அமேசான் காடுகள் பற்றிய டாக்குமெண்டரிகளில் நான் தாமரை இலைகளைப் பார்த்திருக்கிறேன். எம்மாம் பெரிசு இருக்கும் தெரியுமா? அதில் அனகோண்டா பாம்பின் குட்டி படுத்திருக்கும் என்றால் எவ்வளவு பெரிய ஸ்டிராங்கான இலையாக அது இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆமாம், தாமரைக் கண்ணன் என்று சொல்கிறார்களே, ஆணின் கண்ணின் நிறம் அப்படி இருந்தால் அழகாக இருக்குமா?
= = = = = = = = = =
KGG பக்கம்:
நான் படிக்கின்ற நல்ல மருத்துவ குறிப்புகளை, அவ்வப்போது 'ClevNote' செயலி மூலம், என் போனில் சேர்த்து வைப்பது என் வழக்கம்.
அதிலிருந்து, இன்று கடுக்காய் பற்றிய தகவல்கள் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
நீங்கள் அனைவரும் கடுக்காயைப் பார்த்திருப்பீர்கள். எனினும் பார்த்திராத அல்லது அறிந்திராத தலைமுறைக்கு, இதோ கடுக்காய்:
கடுக்காய், ஆங்கிலத்தில் Haritaki, Harad, Inknut என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இன்றைய விலையில் 100 கிராம் கடுக்காய் சுமார் 45 ரூபாய்க்கு கிடைக்கிறது (Amazon price) நாட்டு மருந்துக் கடைகளில் இன்னும் மலிவாகக் கிடைக்கலாம்.
= = = = = = = = =
கடுக்காயைப் பற்றிப் படித்ததும் என் தாளவாடி நாட்கள் (ஏழாம் வகுப்பு) நினைவுக்கு வருகின்றன. அங்கு மலைப் பகுதியில் விளையும் கடுக்காயை மைதானங்களில் காய வைத்திருப்பார்கள். அதன் உள் உள்ள கொட்டையை நீக்கிப் பயன்படுத்தணும் என்று இப்கோதுதான் அறிகிறேன்.
பதிலளிநீக்குஆம். உள்ளே இருக்கும் கொட்டையை அகற்ற வேண்டும். கருத்துரைக்கு நன்றி.
நீக்குநாபல் சபாதானப் பரிசு என்பது தகுதியில்லாதவர்களுக்கும், அவர்களுக்கு சோப் போட அளிக்கப்படுவது, தகுதி உள்ளவர்களுக்கு அரசியல் மதக் காரணங்களுக்காக அளிக்கப்படுவதில்லை என்பது என் அனுமானம். அவங்களுக்குத் தேவையானவர்களுக்கு அவர்கள் இந்தப் பரிசை வழங்குகிறார்கள், நம் திமுகவின் அண்ணா பெரியார் விருதுகளைப் போல.
பதிலளிநீக்குஅபூர்வமாக, இந்தப் பரிசை இவருக்குக் கொடுத்துத் தொலைத்தால், உலகில் சமாதானம் ஏற்பட்டுவிடும் எனத் தோன்றும் காலம் வந்துள்ளது.
சரியான கருத்து! :)))
நீக்கு