காலமெல்லாம் காதல் வாழ்க
பானுமதி வெங்கடேஸ்வரன்
சித்ரா தன் மகன் வருணிடம் கெஞ்சி கொண்டிருந்தாள், "டேய் வருண், இந்த ஃபோட்டோவ கொஞ்சம் பாருடா"
வருண் "முடியவே முடியாது." என்று முகத்தை திருப்பிக் கொண்டான்.
பிறகு கோபமாக தாயிடம், "டி.வி. டாக் ஷோவிற்க்கு போறாம்னா, அங்கு போயி ஏதாவது கருத்து சொல்லிட்டு, அல்லது பேசாம உட்கார்ந்துட்டு வரணும், நீ பாட்டுக்கு ஏதாவது வாக்கு குடுத்துட்டு வருவ, அதை நான் நிறைவேத்தனுமா? சான்ஸே கிடையாது" என்று முறுக்கிக் கொண்டான்.
"இப்போ என்னடா தப்பாயிடுச்சு? அப்பா இல்லாத பொண்ணு, அம்மா தனியா வளர்த்து ஆளாக்கியிருக்காங்க, வரதட்சணை கொடுக்க முடியாதுங்கறதுனால கல்யாணம் ஆக மாட்டேங்குது. இந்த பெண்ணை வரதட்சணை வாங்காமல் தன் மகனுக்கு திருமணம் செஞ்சுக்க யார் ரெடி?"னு அந்த ஆங்கர் கேட்டார்...
"நீ உடனே நான் ரெடினு கை தூக்கிட்ட.. என்னோட விருப்பம் என்னன்னு கேட்கணும்னு உனக்குத் தோணல.. உன்ன மாதிரி ஆட்கள ப்ரவோக் பண்ண அவங்க கேட்பாங்க"
"நான் சொன்னா நீ கேட்பனு ஒரு நம்பிக்கைதான்".
"மண்ணாங்கட்டி! உன்னை அந்த டாக் ஷாவுக்கு போக விட்டதே தப்பு" என்று வெடித்தான்.
"மண்ணாங்கட்டியும் இல்ல, தெருப்புழுதியும் இல்ல, என்னை மாதிரி ஒரு சிங்கிள் உமன் வளர்த்த பொண்ணுடா.. பாவம், கஷ்டமா இருந்துச்சு"
செண்டிமெண்ட் பேசியதும் வருண் மெளனமானான்.
அதுதான் சாக்கு என்று, " அந்த பொண்ணு மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் எம்.எஸ்ஸி. படித்து விட்டு எம்.என்.ஸி. ஒன்றில் வேலை பார்க்கிறாள். பேசிக்கொண்டே ஃபோனை அவன் முன் நீட்டினாள் சித்ரா.
வேண்டா வெறுப்பாக ஃபோன் வாங்கியவன், "என்னம்மா? டார்க் காம்ப்ளெக்ஸா இருக்காளே..?" என்றான்.
"நிறம் மட்டுதான், ஆனால் பார்க்க லட்சணமா இருக்காளே"
"நீதான் பொண்ணு ஃபேரா இருக்கணும்னு சொன்ன,"
"அது அப்போ, மத்த விஷயங்கள் பிடிச்சுதுன்னா, நிறம் ஒரு விஷயம் கிடையாது"
"மத்த எல்லா விஷயங்களும் ஓகேவா? ஜாதகம்..?"
"எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை"
அவனிடமிருந்து பதில் இல்லாததால், "என்ன..? அவளோட பேசறயா?"
"பேசாட்டி விட்டு விடற மாதிரிதான். .."அலுத்துக் கொண்டாலும் அம்மாவிடமிருந்து நம்பர் வாங்கிக் கொண்டான்.
விஷயம் இதுதான். சமீபத்தில் ஒரு தொலைகாட்சியின் டாக் ஷோவில் கலந்து கொண்டாள் சித்ரா. அது வரதட்சணை கொடுமை பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சி. அதில் ஒரு இளம்பெண், தன்னுடைய தாய் சிங்கிள் மதராக இருப்பதால் தங்களால் வரதட்சணை கொடுக்க முடியாது என்பதாலேயே தன்னுடைய திருமணம் தடை படுகிறது என்று கூற, அந்த நிகழ்ச்சியை நடத்திச் சென்ற நெறியாளர்,"எதிரே அமர்ந்திருப்பவர்களில் இந்தப் பெண்ணை வரதட்சணை வாங்காமல் உங்கள் மகனுக்கு திருமணம் செய்து கொள்ள யார் தயாராக இருக்கிறீர்கள்?" என்று கேட்டதும், சட்டென்று நாலைந்து பெண்கள் கை தூக்கினார்கள். அவர்களுள் சித்ராவும் ஒருத்தி.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும், அந்தப் பெண்ணின் தாயாரிடம் செல்ஃபோன் நம்பர் வாங்கி கொண்டாள்.
பல விஷயங்கள் அவள் விரும்பியபடி இருந்ததால் பெண் நிறம் குறைவு என்பதை அவள் பொருட்படுத்தவில்லை. அதற்கான பஞ்சாயத்துதான் மகனோடு ஓடிக் கொண்டிருந்தது.
"டாக் ஷோக்களில் சுவாரஸ்யம் கூட்டுவதற்காக கலந்து கொள்பவர்களை தூண்டி விடுவார்கள். நீ அதற்கு பலி ஆனதோடு இல்லாமல் என்னையும் எப்படி இழுத்து விடலாம்?" என்பது மகனின் வாதம்.
சித்ரா எப்படியோ மகனை தன் வழிக்கு இழுத்து விட்டாள். வருண் அம்மா சொன்ன பெண்ணோடு முதலில் தொலைபேசியில் பேசினான். பிறகு நேரில் சந்தித்தார்கள், இருவருக்குமே திருப்தியாக இருந்ததால், அடுத்தடுத்து விஷயங்கள் வேகமாக நடந்து திருமணத்தில் முடிந்தது.
கதை இங்கே முடிந்து விடவில்லை. இதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது.
உண்மையில் வருணும் கவிதாவும் காதலர்கள். இருவருடைய அலுவலகங்களும் ஒரே கட்டிடத்தில் இருந்ததால் லிஃப்டில் பார்த்திருக்கிறார்கள். இருவருக்கும் பொதுவான ஒரு நண்பனின் பிறந்த நாள் பார்ட்டியில் சந்தித்தார்கள். அங்கு அவர்கள் இரண்டு பேரும் தான் நான்கமிட்டட் மற்ற எல்லோரும் ஜோடியாக தான் இருந்தார்கள் எனவே இவர்கள் இரண்டு பேரும் தனித்துவிடப்பட்டார்கள் அப்பொழுது கொஞ்சம் பேசிக் கொண்டார்கள் அடுத்த நாள் ஃபுட் கோர்ட்டில் பார்த்தார்கள் அதற்குப் பிறகு ஃபுட் கோர்ட்டில் பார்க்க வேண்டும் என்ற முடிவு செய்தார்கள். அடிக்கடி பார்த்து பேசி பழகி நட்பு காதலாக பரிணமித்தது.
அம்மாவிடம் தங்கள் காதலை தெரிவிக்க நினைத்த வருனுக்கு ஒரு சின்ன சங்கடம் என்னவென்றால் அவனுடைய அம்மா சித்ராவுக்கு தன் மகன் காதல் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்று தீவிரமான நம்பிக்கை. தான் பார்க்கும் பெண்ணைத்தான் மணந்து கொள்வான் என்று நினைத்தாள், நம்பினாள்.
அவளுடைய நம்பிக்கையை மாற்றுவது கடினம் ஆனால் அவளுக்கு தன்முனைப்பு கொஞ்சம் அதிகம். தான் ஒரு விஷயத்தை நினைத்து அதை முடிக்கிறோம் என்றால் அதிக பெருமிதம் கொள்வாள். அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்த வருண் தன் அம்மா கலந்து கொண்ட அந்த டாக் ஷோவில் வேண்டும் என்றே கவிதாவையும் கலந்து கொள்ள சொன்னான். அவள் கலந்து கொண்டு அவன் சொல்லிக் கொடுத்தது போல பேசி அம்மாவின் ஈகோவை தூண்டிவிட்டு அவள்தான் அந்த திருமணத்தை முடித்தாள் என்பது போல உணர வைத்து தன் காரியத்தை சாதித்துக் கொண்டான். அது பாவம் சித்ராவிற்கு தெரியாது. எப்படியோ காலமெல்லாம் காதல் வாழ்க!
பாதிக் கதை வரை மிக வித்தியாசமான கதைக்கரு. ரொம்ப நல்லா இருந்தது. ஃப்ளாஷ் பேக்தான் இது கொஞ்சம் சாதாரணக் கதையோ எனத் தோன்ற வைத்தது.
பதிலளிநீக்குடாக் ஷோவே ஸ்க்ரிப்டட் எனும்போது, இப்படியும் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றனவே. கதை நல்லா இருந்தது
இதற்கொரு படம் போடாமல், கேஜிஜி சார் இல்லைனா கீதா ரங்கன் ஏஐ படம் கொடுத்திருப்பார்களே, இப்படி ஶ்ரீராம் ஏமாற்றிவிட்டாரே
பதிலளிநீக்குஇந்தக் கதைக்கான மேம்போக்கு அல்லாத ஆழ்ந்த வாசிப்புத் திறன் கொண்டவர்களின் பின்னூட்டங்களைப் படிக்கக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு