தஞ்சை பெருவுடையார் கோயில்.
இராஜராஜன் காலத்தில் சேரநாட்டை அரசாண்டவன் பாஸ்கர ரவிவர்மன் என்னும் அரசன் (கிபி 978-1036) எதனால் தன் மூன்றாம் ஆண்டில் சேரமன்னன் மீது படையெடுத்தான் என்று கலிங்கத்துப்பரணி, இராஜராஜ சோழன் உலா, விக்கிரம சோழன் உலா போன்றவற்றைவைத்தும் ஒரு சில கல்வெட்டுகள் கொண்டும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அரசன் ராஜராஜன் அனுப்பிய தூதுவனை சேர அரசன் சிறையெடுத்து கன்யாகுமரி/நாகர்கோயில் பக்கம் கல்குளம் தாலுக்காவில் இருந்த உதகையில் அடைத்துவிடுகிறான் (இது ஒரு நகரம். அது மதில்கள் சூழ்ந்ததாகவும், தன்னுள்ளே மாட மாளிகைகள் கொண்டதான செழிப்பான நகரம், சேரர் ஆளுகையில் இருந்த பகுதி). தூதுவனைச் சிறையடைத்தது பெரும் குற்றம், தனக்கு விடப்பட்ட சவால் என்பதால் படையைத் திரட்டிக்கொண்டு சேர அரசு நோக்கிச் செல்கிறான்.
அப்போது பாண்டிய நாட்டை அரசாண்டுகொண்டிருந்த அமரபுயங்கன், சேர அரசனின் நெருக்கமான நண்பன். அதனால் இடைமறித்து சோழர் படையைத் தாக்குகிறான். அவனைப் புறமுதுகிட்டு ஓடவிட்டு, பிறகு கேரளா சென்று சேர அரசனை காந்தளூர்ச் சாலையில் தோற்கடிக்கிறான். பிறகு உதகை சென்று தூதுவனை சிறைவிடுக்கிறான். (அங்கும் போர் நடக்கிறது). பிறகு தென் கடற்கரையில் இருந்த விழிஞம் என்ற இடத்தில் நடந்த போரிலும் வெற்றிபெற்றுத் திரும்புகிறான். (இதற்கு இன்னும் நாவலாசிரியர்கள் தகுந்த நாவல் எழுதியிருக்கிறார்களா? அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலையில் சேரர்கள் பங்கு ஏதேனும் உண்டா என்று விசாரிக்க-கண்டுபிடித்த நால்வரில் இருவர் சேரர் பின்புலம் கொண்டவர்கள், தூதுவனை சேரனுக்கு அனுப்ப, அவன், என்னிடமே விசாரணையா என்று கோபம் கொண்டு தூதுவனைச் சிறையெடுத்திருப்பான், காந்தளூர்ச்சாலையில்தான் போர்ப்பயிற்சிகள் நடந்துவந்தன, போர்வீர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டதால், அதில் பயிற்சிபெற்றவன் ரவிதாசனாக இருந்திருப்பான், அதனால் தூதுவனைச் சிறையெடுத்த காரணத்தால் போர் நடத்தி வெற்றிபெற்றிருப்பான் ராஜராஜன் என்ற புனைவு சரியாக வருமா?)
ராஜராஜ சோழனின் குறிப்பிடத்தக்க செயல்கள் என்று பார்த்தால், சைவத் திருமுறைகளை ஒழுங்குபடுத்தியது. சிதம்பரத்தில் அழியக்கூடிய நிலையில் கிடந்த திருமுறைகளை, நம்பியாண்டார் நம்பி என்பவரைக் கொண்டு, முழுவதும் பாதுகாத்தான். திருமுறைகளை ஏடுபடுத்தினான். கோயில்களில் ஓதுவாரை அமர்த்தும் முறையை ஆரம்பித்தான்.. அதனால் திருமுறை கண்ட சோழன் என்ற பெயர் பெற்றான்.
நாட்டில் விளைநிலங்கள் எல்லாவற்றையும் முறையாக அளந்தான். அதற்கேற்ப வரிவசூல் செய்தால். நிவந்தங்களாகக் கொடுக்கப்பட்ட நிலத்தின் வரி, எதற்கு நிவந்தக்களாகக் கொடுக்கப்பட்டதோ அதற்குச் சென்றது. இறையிலி நிலம் என்பது வரி வழங்கத் தேவையில்லாத நிலமாகக் கொள்ளப்பட்டது.
தஞ்சை பெரியகோயிலைப் பற்றிப் பேசும்போதும் படிக்கும்போதும், கருவூர்த்தேவர் பற்றி பிரஸ்தாபம் எழும். பலர், கருவூர்தேவர் இராஜராஜ சோழனின் குரு என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். வரலாறு என்ன சொல்கிறது?
திருவிசைப்பா என்பது ஒன்பதாவது திருமுறை. இதில் ஒன்பது அடியார்கள் பதிகங்கள் பாடியுள்ளனர். அவர்களுள் கருவூர்த்தேவரும் ஒருவர். இவர் 10-11ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கவேண்டும். இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழனின் சமகாலத்தவர். சிவபெருமான் பக்தர். சிவயோகத்தான் அற்புத சக்திகள் அடைந்தவர். பித்தர் போல நாடெங்கும் திரிந்து, தென்பாண்டி நாட்டை அடைந்து, அம்பாசமுத்திரத்தின் அருகில் உள்ள திருப்புடைமருதூர் என்ற தலத்தை அடைந்தார். கோயிலை அடையமுடியாமல் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. மறுகரையில் இருந்த கருவூர்த்தேவர் ‘நாறும்பூ நாத’னை மனதால் நினைக்கவும் வெள்ளம் வடிந்த தாம். தஞ்சை பெரியகோயிலைக் கட்டிக்கொண்டிருந்தபோது சிவலிங்கத்தை நிலைநிறுத்த அஷ்டபந்தன மருந்து சரியாக வேலை செய்யவில்லை. அவருடைய ஆசான் போகர் சித்தரின் அழைப்பின்பேரில் தஞ்சை வந்து அஷ்டபந்தன மருந்துப் பொருளைக் கடினப்படுத்தி சிவலிங்கத் திருமேனியின் பிரதிஷ்டை செய்தாராம். திருவிசைப்பாவைப் பாடிய ஒன்பதில் இவர்தான் மிக அதிகமான (103 என்று நினைவு) பாசுரங்கள் பாடியவர். தில்லை, தஞ்சை இராஜராஜேச்சரம், திருவிடை மருதூர், கங்கைகொண்ட சோழேச்வரம் போன்ற பத்து தலங்களுக்கு திருவிசைப்பா பாடியுள்ளார்.
அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னை ஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்றும் நான் மறக்கேன்
முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோள்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
முன்பு பிரமனும் திருமாலும் பறந்து தேடியும் அவர்கள் உன்னை அறியமுடியவில்லை. அவ்வளவு பெரியவனான நீ, இந்தச் சிறியேனை விரும்பி என் மனத்தில் புகுந்துகொண்ட எளிமையை நான் எப்போதும் மறக்கமாட்டேன். மூன்று கண்கள், நான்கு பெரிய தடந்தோளினை உடைய கரும்பே, தேனே, அமுதமே, கங்கைகொண்ட சோழீச்வரத்தில் உள்ளவனே என்று உருகிப் பாடுகிறார்.
உலகெலாம் தொழவந்து எழுகதிர்ப் பருதி
ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ !
அங்ஙனே அழகிதோ, அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத்து இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத்(து) இவர்க்கே.
இதில் மதிள் சூழ்ந்த தஞ்சையில் இருக்கும் இராஜராஜேச்வரத்து சிவபெருமானைப் பற்றிப் பாடுகிறார். (இது போலப் பத்துப் பாசுரங்கள்). ஞாங்கர்வெண் திங்கள் (பெரிய மலையிடத்து சந்திரன் தவழ்வதுபோல), கோடி சூரியர்கள் பொதிந்ததுபோன்ற திருவுடம்பு உன்னுடையது.
எத்ற்காக நான் இந்த இரண்டு திருவிசைப்பாக்களை எடுத்துக்கொண்டு, அதில் ஒவ்வொரு பாசுரங்களைக் கொடுத்துள்ளேன்? நமக்கு பொதுவாகத் தெரிவது, கருவூர்த்தேவர் இராஜராஜனின் குரு, அவர் தஞ்சைப் பெரிய கோயிலில் சிவலிங்கம் வைக்க உதவினார் என்பது மாத்திரம்தான். கங்கைகொண்ட சோழீச்வரம் கட்டி முடிக்கும்போது இராஜராஜ சோழன் உயிருடன் இல்லை. அந்தக் கோயிலே 1035ல்தான் (சுமாரா) கட்டிமுடிக்கப்பட்டது. இராஜேந்திர சோழனே 1044 வரைதான் ஆட்சி புரிந்திருக்கிறான். கங்கை வரை அவனது படைத்தளபதியை அனுப்பி, வெற்றிபெற்று, பிறகு கங்கை நீரை வைத்து அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி, காடுகளை வெட்டி, நகரமாக்கி, நகரின் நடுவே கங்கைகொண்ட சோழீச்வரத்தைக் கட்டி, அங்கு ஒரு குளம்/கிணறு வெட்டி, அதில் மிகுதி இருந்த கங்கைநீரை நிரப்பி….. பிறகு ஒரு சமயம் கருவூரார் வந்து பார்த்துவிட்டு, அதற்கும் பாசுரங்கள் இயற்றியிருக்கவேண்டும். பலவற்றையும் படிக்கும்போது நாம் ஒரு சில கட்டங்களை மாத்திரம் தெரிந்துகொண்டு வரலாற்றைச் சமைக்கிறோமோ என்று தோன்றுகிறது.
நான் ஒரு பகுதியில் வால்மீகியார் பற்றியும், அவர் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றையும் எழுதியிருக்கிறார் என எழுதியிருந்தேன். நம் ஜீவி சார் அதற்கு, அந்தச் செய்யுள் புறநானூற்றின் 358வது பாடல் எனவும், அது துறவறத்தின் மகிமையைச் சொல்கிறது எனவும், தேடலில் ஆர்வம் உடையவர்கள் பார்க்கவும் என்று எழுதியிருந்தார். (இது ஒரு அருமையான உத்தி. ஆசை உடையவர்களுக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் அவரவர் தேடலே அவர்கள் விரும்பிய திசை நோக்கிச் செல்லவைக்கும்). நான், ஒரு பதிவில் இதைப்பற்றி எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதனை கருவூர்த்தேவர் பற்றி எழுதும் பதிவில் எழுதுவது பொருத்தம் என்று நினைக்கிறேன். இந்தப் பாடலை வான்மீகியார், துறவறம் என்ற துறையில் எழுதியிருக்கிறார்.
பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,
கைவிட் டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடாஅள், திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.
இதன் சுருக்கமான பொருள்.. தவத்தையும் உலகத்தை ஆளுவதையும் ஒப்பிட்டால், தவத்தின் கடுகளவுக்குக்கூட `உலகம்` ஒப்புமையாகாது. இந்த உலகமானது, ஒரு பகலில் ஏழு அரசர்கள் என்று வேகமாக நிலைமை மாறக்கூடியது. அதனால் நாம் புரிந்துகொள்ளவேண்டியது, உலகத்தின் மீது ஆசை வைப்போரை திருமகள் கைவிட்டுவிடுவாள். ஆனால் தவத்தின்பால் (அதாவது உலகத்தில் பற்றற்று இருப்பவரை) ஆசை உள்ளோரை திருமகள் எப்போதும் கைவிடாள்.
இதனைப் படித்தபோது எனக்கு குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில் (திவ்யப்பிரபந்தம் முதலாயிரம்) எழுதியிருக்கும் ஒரு பாசுரம் நினைவுக்கு வந்தது.
நின்னையே தான்வேண்டி* நீள்செல்வம் வேண்டாதான்*
தன்னையே தான்வேண்டும்* செல்வம்போல் மாயத்தால்*
மின்னையே சேர் திகிரி* வித்துவக்கோட்டு அம்மா!*
நின்னையே தான்வேண்டி* நிற்பன் அடியேனே
ஐச்வர்யத்தில் ஆசைப்பட்டு அதனை அடைய, விடாது முயற்சிப்பவனிடம் அந்த ஐச்வர்யம் சேர்வதில்லை, தன் மீது ஆசைப்படாதவனிடம் சேர்கிறது. அதுபோல, உன் மீது நான் அதீதமான ஆசை வைத்திருக்கிறேன், ஆனால் நீ என்னைப் புறக்கணித்தாலும், அதனைக் கவனியாது உன்மீதே ஆசை வைப்பேன் என்பது கருத்து.
இதை எழுதும்போது, ஒரு யோகி தன் அனுபவங்களைப் பற்றி எழுதியதைப் படித்தது நினைவுக்கு வருகிறது. சுவாமி இராமா என்று நினைவு. அவரது குரு ஒரு நாள் அவருக்கு (இமயமலை) கண்ணை மூடிக்கொள்ளச் சொல்லி, பிறகு திறந்துபார்க்கச் சொல்கிறார். அவர் எதிரே வைர வைடூரியங்கள், தங்க நகைகள் என்று பெரிய குவியலே இருக்கிறது. உனக்கு பணம் வேண்டும் என்றால் இதனை எடுத்துக்கொள். பணத்தின் மீது ஆசையில்லை, யோகத்தின், தியானத்தின் மீதுதான் ஆசை என்றால் என்னைப் பின் தொடர். இவை ஏதோ மாயம் என்று நினைக்காதே. அத்தனையும் உண்மையான செல்வம். தொட்டுப் பார்த்துக்கொள் என்றாராம். இவர், தனக்கு செல்வம் தேவையில்லை, குருவின் பாதையிலேயே நடக்கத்தான் ஆசை என்று உறுதியாகச் சொல்லவும் தன்னுடன் அவரைச் சேர்த்துக்கொண்டார் என்று எழுதியிருந்தார். செல்வம் என்பதற்கு அர்த்தம், எப்போதுவேண்டுமானாலும் செல்வோம் என்பதுதானே
அறுமுகன் கோயிலுக்குச் செல்லும் வழியில், பிரகதீச்வரர் விமானத்தின் பின்புறம் கருவூர் சித்தருக்கு சிறிய கோயில் அமைத்திருக்கின்றனர். இவை மிகவும் பிற்காலச் சேர்க்கை என்று சொல்லவேண்டியதில்லை.
மராத்தா வாயிலுக்குப் பின்புறம் ஒரு கோபுரம் தெரிகிறது அல்லவா? அதுதான் கேரளாந்தகன் வாயில்
கேரளாந்தகன் வாயில். இங்கு துவாரபாலகர்கள் இல்லை என்பதைப் பாருங்கள்.
கேரளாந்தகன் வாயில். அதனை அடுத்து இராஜராஜன் நுழைவாயில்கற்களை ஒன்றின்மேல் ஒன்றை அடுக்கியிருக்கிறார்கள். நாம் பொதுவாகச் செய்வது போன்று செவ்வகமாக இல்லாமல், ஒரு கல் அதன் கீழுள்ள கல்லுடன் பொருந்தும்படி வெட்டியிருக்கிறார்கள். இதற்கு இடையில் சுண்ணாம்பு மற்றும் சாந்துகள் பூசவில்லை என்பதையும் பாருங்கள். கற்களில் சிறிது மேலெழும்பி இருக்கும்படியான குமிழ்களையும் பாருங்கள். கற்களைத் தூக்குவதற்காக அவை அமைக்கப்பட்டிருக்குமோ?
இராஜராஜன் நுழைவாயிலின் பக்கச் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் அழகிய சிற்பங்கள். ஒவ்வொன்றும் ஒரு வரலாறை நமக்குத் தெரிவிப்பவை.
இந்தச் சிற்பங்களையெல்லாம் கூர்ந்து கவனித்து பொருத்தமான புராணச் செய்திகளைச் சொல்லும் திறமை கீதா சாம்பசிவம் மேடம், கோமதி அரசு மேடம் போன்றவர்களுக்கு உண்டு.
நுழைவாயிலின் பகுதியைத் தாண்டியுள்ள மதிள் சுவரில் கல்வெட்டுகள் இருக்கின்றன. இங்கு சிற்பங்கள் இல்லை (காரணம் அது கோயிலுக்கான பாதுகாப்புச் சுவர் என்பதால்)
நுழைவாயிலில் சிற்பங்கள். அதன் பின்பகுதி மதிளில் கல்வெட்டுகள் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரியும்.
நுழைவாயிலின் பக்கவாட்டு நெடுஞ்சுவற்றிலும் மற்றுமுள்ள சுவர்களிலும் கல்வெட்டுகள்தாம்.
கல்வெட்டின் முதல் வார்த்தை 'வாழைப்பழம்' என்று கண்டுபிடித்து-விட்டீர்களானால் கௌதமன் சாருக்கு எழுதி உங்களுக்குரிய பரிசை வாங்கிக்கொள்ளுங்கள்.
(வெளியிடும் முன்பு, நானே வாழைப்பழத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அதனால் இந்தக் கல்வெட்டில் உள்ள முழுச் செய்தியையும் சரியாக எழுதுவோருக்கு நெல்லைத்தமிழன் பரிசு அளிப்பார்!)😀
இன்றைய பகுதி ரொம்பவே நீளமாகிவிட்டதோ.. அடுத்த வாரம் சந்திப்போம்.
சேர மன்னனுக்கு தூது, தூதன் சிறை எடுப்பு, ரவிதாசன், ஆதித்த கரிகாலன் கொலை என்று உங்களுக்கு ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்தி நன்றாக கற்பனை ஓடுகிறது. நீங்கள் சொன்னது போல் இதுவரை யாரும் இது பற்றி எழுதியதாக தெரியவில்லை. நீங்களே ஏன் ஒன்றும் முயற்சிக்கக் கூடாது?
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். நான் இந்தப் பகுதிகளை பல மாதங்களுக்கு முன்பே எழுதிவிட்டதால் அன்றைய ஞாயிறு பகுதியை முதலில் படித்துவிடுவேன். அப்படி ஆரம்பிக்கும்போது கருத்து ஒன்று என்பதையும் ஓரக் கண்ணால் பார்த்திருந்து யாராயிருக்கும் என்ற எண்ணமும் மனதில் ஓடியது.
நீக்குஎனக்கு, முன்பு, ஏன் குந்தவை புத்த மத்த்தைத் தழுவினாள் (அனேகமாக), ஏன் அதிக அளவு நிவந்தங்களை அந்தச் சமயத்துக்குக் கொடுத்தாள் என்பது பற்றி எழுத ஆரம்பித்துவிட்டு, பிறகு கதை வரலாற்றுத் தவறுகளுடன் அபத்தமாகிவிடக் கூடாது எனத் தோன்றியது. அருமையாக நாவல் எழுதும் (எழுதிய) காலச்சக்கரம் நரசிம்மா, பொன்னியின் செல்வன், குந்தவையின் மகன் என எழுதியதைக் கொஞ்சம்கூட நம்மால் சீரணிக்க முடியவில்லை அல்லவா?
முருகா சரணம்
பதிலளிநீக்குபதிகங்களும் பாசுரங்களும் வரலாற்றுச் செய்திகளுமாக பதிவு..
பதிலளிநீக்குசிறப்பு.. மகிழ்ச்சி..
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குராஜராஜன் திருவாயில் சிற்பத் தொகுப்புகளில் கண்ணப்பர் வரலாறும் ஒன்று.. கையில் உடும்புடன் திண்ணப்பர் நிற்கின்ற படிமமும் அங்குள்ளது..
பதிலளிநீக்குநாளாறில் கண்ணை இடந்து அப்பியதாக பட்டினத்தடிகள் பாடுவார்..
திண்ணப்பர் எந்த நாளில் ஈசனுக்கு உடும்புக் கறி சமர்ப்பித்தாரோ!..
பாசுபதத்தைக் கொடுப்பதற்கு முன்பாக பார்த்தனுடன் ரகளை.. கைகலப்பு.. அடிதடி..
பதிலளிநீக்குஇந்தக் கூத்தைக் காண்பதற்கு பார்வதி இடுப்பில் குழந்தையுடன் வந்து விட்டாள்...
அந்தப் பக்கமாக பெண்ணொருத்தியின் முன்பாக யானை பெருஞ்சத்தமிடுகின்றது..
வள்ளிக்கான நாடகம்...
வரலாற்று செய்திகளும், படங்களும் அருமை.
பதிலளிநீக்குராஜராஜ சோழனின் குறிப்பிடத்தக்க செயல்கள் என்று பார்த்தால், சைவத் திருமுறைகளை ஒழுங்குபடுத்தியது. என்று வரிசைப்படுத்தி எழுதியது
சோழர் காலம் பற்றி பள்ளி பாடத்தில் படித்தது போல இருக்கிறது, நன்றாக இருக்கிறது.
திருப்புடைமருதூர் இறைவனின் பெயர் நாறும்பூ நாதன் என் மாமியாரின் அப்பாவுக்கு அவர் பெயர் தான். எங்கள் குடும்பத்தில் தாத்தாவின் பேர் என் கணவரின் அண்ணனுக்கு வைத்து இருக்கிறார்கள்.
இந்த கோயில் தலவரலாற்றில் கருவூர் சித்தர் தான் இந்த பேரை சொல்லி வணங்கி பாடியதாக சொல்கிறது.
//மன்னர் ஒருவருக்கு சிவன் மான் வடிவில் தோன்றி அருள்புரிந்தார். அப்போது ஏற்பட்ட காயத்தின் தடம் இன்றும் சிவனது திருமேனியில் உள்ளது.
சந்தனாதி தைலம்: இறைவனின் திருமேனியில் உள்ள காயத்தை ஆற்றுவதற்காக சந்தனாதி தைலம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இறைவனின் காயங்களை ஆற்றியதால் கருவூர் சித்தர் அவரை "நாறும் பூவின் நடுவில் நிற்பவனே" என்று பாடியதாகக் கூறப்படுகிறது.//
வான்மீகியார் துறவற பாடலும் , விளக்க்மும் அருமை.
பதிலளிநீக்குபாசுரம் பகிர்வும் அதன் விளக்கமும் அருமை.
கருவூரார் பற்றி நிறைய பகிர்ந்து இருக்கிறீர்கள் . அவரைப்பற்றிய கதைகள் நிறைய இருக்கிறது.
//இராஜராஜன் நுழைவாயிலின் பக்கச் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் அழகிய சிற்பங்கள். ஒவ்வொன்றும் ஒரு வரலாறை நமக்குத் தெரிவிப்பவை.//
ஒவ்வொன்றையும் நின்று நிதனாமாக பார்த்தால் கதைகள் பல தெரியும். படங்களை அருமையாக எடுத்து இருக்கிறீர்கள்.
சகோ துரைசெல்வராஜூ அவர்கள் கதைகள் சொல்லி விட்டார்கள் .
வாழைப்பழம் படிக்கமுடிகிறது.
இன்றைய பதிவு அருமை.
ராஜராஜன் திருவாயில் சிற்பத் தொகுப்புகளை நெருங்கி நின்று பார்க்க இயலாதபடி அங்கு சில பிரச்னைகள்..
பதிலளிநீக்குவசதி செய்து கொடுத்தால் தேர்வு எண்களுடன் பற்பல விஷயங்களைத் தந்து பாழ்படுத்திவிடுவார்கள் கிறுக்கர்கள்..
தொல்லியல் துறையினர்க்கு நன்றி..
பதிலளிநீக்குகோயிலின் நிருதி மூலையில் கூடாரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த கோரதங்கள் என்னவாயின என்று தெரியவில்லை
பதிலளிநீக்குமரியாதைக்குரிய கோமதி அரசு அவர்கள் தமது கருத்துரையில் என்னையும் குறித்ததற்கு நன்றி..
பதிலளிநீக்குவாழைப்பழம் -நெஞ்சம் நெகிழ்கின்றது..
பதிலளிநீக்குதமிழ் எழுத்துரு வடிவங்கள் யாரோ ஒரு வெள்ளை மிசுநரியால் செய்யப்பட்டதென்று இங்கே புரளி
பதிலளிநீக்கு..