17.10.25

ஒரு பொருள் மறை பொருள் இவருக்கு இலக்கியமே

 

பள்ளிக்காலங்களில் ஒருநாள் மேரிஸ் கார்னரில் இருக்கும் பேனர் / போஸ்ட்ரைப் பார்த்தபோது 'நாளை முதல்' என்றுபோட்டு "என் மகன்" என்று ஒரு சிவாஜி படம் வெளியாகப் போவதாக தெரிந்தது.  சாதாரணமாக நான் படிக்கும் வாராந்தரிகள், பேசும் படம் ஆகியவற்றில் ஏதாவது சிவாஜி படம் தயாராகிக் கொண்டிருந்தால் தெரிந்து விடும்.  இது அப்படி தெரியாததாக இருந்தது.

 Be-Imaan....  அந்த ஹிந்திப் படத்தின் தழுவல் சுஜாதா கிரியேஷன்ஸ் பாலாஜி தயாரிப்பு என்பது தெரிந்தது.  படம் பார்த்தபோது அப்படி ஒன்றும் கவரவில்லை.

சி வி ராஜேந்திரன் இயக்கத்தில், கண்ணதாசன் பாடல்களுக்கு இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.

ஆனால் அந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் மனதில் தங்கின.

சிவாஜி மஞ்சுளா காம்பினேஷனில் முதல் பாடல் ஒரு டூயட்.  டி எம் சௌந்தரராஜன் - பி சுசீலா பாடிய பாடல். 

TMS : பொண்ணுக்கென்ன அழகு
P. சுசீலா : ஹா ஹா ம்ம்
TMS   : பூவுக்கென்ன பெருமை
P. சுசீலா   : ஹா ஹா ம்ம்

TMS : பொண்ணுக்கென்ன அழகு
P. சுசீலா   : ஹா ஹா……
TMS   : பூவுக்கென்ன பெருமை
P. சுசீலா   : ஹா ஹா…….

TMS : உன் கண் எழுதும் தமிழ்க் கோலங்கள்
போதாவோ வண்ணக் கிளியே

TMS : பொண்ணுக்கென்ன அழகு
பூவுக்கென்ன பெருமை

. P. சுசீலா : ஒரு பொருள் மறை பொருள்
இவருக்கு இலக்கியமே
உடன்பட்டு துணை நின்று
சுகம் தரும் இலக்கணமே

TMS : ஒரு பொருள் மறை பொருள்
இவருக்கு இலக்கியமே
உடன்பட்டு துணை நின்று
சுகம் தரும் இலக்கணமே
TMS   : எதுகையில் உன் முகம்
P. சுசீலா   : மோனையில் உன் முகம்

P. சுசீலா : பொண்ணுக்கென்ன அழகு
TMS   : ஹா ஹா……
P. சுசீலா   : பூவுக்கென்ன பெருமை
TMS   : ஹா ஹா…….
உன் கண் எழுதும் தமிழ்க் கோலங்கள்
போதாவோ வண்ணக் கிளியே

P. சுசீலா : பொண்ணுக்கென்ன அழகு
பூவுக்கென்ன பெருமை


TMS : கம்ப ரசக் கிண்ணம் அதிலே
கட்டி வெல்லக் கன்னம்
காம தேவன் வாகனங்கள்
காற்றிலே ஆடுதே…….…..

P. சுசீலா : சேரன் மகள் வஞ்சி எதிரே
சேனைக் கண்டு அஞ்சி
காதல் தேவன் மார்பின் மீது
காவலைத் தேடுதே…….…..

TMS : மின்னும் நீலமணி போல்
இன்று என் மேல் ஆடு கண்ணே

P. சுசீலா   : இன்னும் என்ன ஏக்கம்
இன்ப வண்ணம் பாடு கண்ணா

TMS : பொண்ணுக்கென்ன அழகு
P. சுசீலா   : ஹா ஹா……
TMS   : பூவுக்கென்ன பெருமை
P. சுசீலா   : ஹா ஹா…….

P. சுசீலா : ஆசையுள்ள பந்து இசைக்கும்
ஓசையுள்ள சிந்து
அந்தி வெயில் மஞ்சள் மேனி
என்னவோ தேடுதே

TMS : நாலு பக்கம் கூட்டி இடையில்
நாணக் கலை காட்டி
கன்னி மாடம் தந்த வேகம்
எங்கெங்கோ போகுதே

P. சுசீலா : ஒன்றே காண வேண்டும்
அதை நன்றே காண வேண்டும்
TMS   : நன்றே காண வேண்டும்
அதை இன்றே காண வேண்டும்

TMS : பொண்ணுக்கென்ன அழகு
P. சுசீலா   : ஹா ஹா……
TMS   : பூவுக்கென்ன பெருமை
P. சுசீலா   : ஹா ஹா…….

TMS : உன் கண் எழுதும் தமிழ்க் கோலங்கள்
போதாவோ வண்ணக் கிளியே

இருவர் : பொண்ணுக்கென்ன அழகு
பூவுக்கென்ன பெருமை

=========================================================================================

கர்ணன், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களை இயக்கிய ஏ பி நாகராஜன் மகள் திருமதி விஜயலக்ஷ்மி அவள் விகடனுக்கு கொடுத்த பேட்டியிலிருந்து...



பயம், கருணை, அற்புதம், வீரம், கோபம், சாந்தம், சிருங்காரம்,  என்று நவரசங்கள்.  இந்த ஒன்பது நவரசங்களையும் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்காம்.  அந்த நவரசங்களை எப்படி காட்டுவது?  அதனால  ஒன்பது வேடங்களை சிவாஜிக்குக் கொடுத்து..  அதே மாதிரி அந்த அம்மாவும், சாவித்ரி அம்மாவும் பிச்சு உதறி இருப்பாங்க... காமெடிலதான் மனோரமா  வருவாங்க..  கொஞ்சம் மனநிலை பாதிக்க மாதிரி.  அதுலதான் சிவாஜி கருணையா வருவார்.  அந்த நடிப்புக்கே க்ளாப்ஸ் விழும் பாருங்க தியேட்டர்ல..  அஞ்சு நிமிஷம் கை தட்டிகிட்டே இருப்பாங்க.  

அந்த டாக்டர் மாதிரி வந்து டாக்டர் மாதிரி நடந்து போவார்.  இதெல்லாம் ஒரு கற்பனைதாங்க...   கற்பனை வளம் அதிகமா இருந்ததனால்தான் நவராத்திரிங்கற படம் வெளில வந்திருக்கணும். அதில் பயம் இருப்பாரு..  கோவம் இறந்துடுவாரு..  அதுதான் நான் அப்பாவைக் கேட்டேன், அதுல அந்த ஒருத்தர் இறந்துடறாரேன்னு.  கோவத்துல ரொம்ப இருக்கற குணம் சமயத்துல நம்மையே பாதிச்சுடும்.  அதுக்காகத்தான் அந்த "ரத்தத்துக்கு ரத்தம்...   சுட்டேன்..  ஆசை தீர சுட்டேன்.." வசனம்.  அப்படியே ரிப்பீட் பண்ணுவாங்க தியேட்டர்ல..  டயலாக் அப்பல்லாம்.  சுட்டேன்..  ஆசை தீர சுட்டேன் அபப்டிம்பார்.  அவருக்கேத்த அந்தக் குரல் அவருக்கேத்த வசனம், அந்த தீம் இருந்தது.  நமக்கு பார்க்கக் கொடுப்பினை இருந்தது.  

அதே போல நவராத்திரி படத்துல சம்பவம் ஒண்ணு நடக்கும்.  லாஸ்ட்டா வீரத்தோட கேரக்டருக்காக ஒரு வேட்டைக்காரனா வருவாரு.  அந்த கிராமத்துல புலி வந்துடும்.  அந்த புலியைப் பிடிக்கறதுக்குதான் அவர் வந்திருப்பார்.  புலி ஸீன் என்னன்னா டெய்லி செட்ல புலியைக் கொஞ்சம் அவுத்து விடுவாங்க..  அது நடந்து வரும்.  காட்சியில் ஒரு லேடி தலைல புல்லு வச்சுக்கிட்டு கைல குழந்தையோட நடந்து வரும்.  அந்த அம்மாவ புலி அப்படியே இழுத்துடும்.  அதுதான் புலியோட ஃபர்ஸ்ட் ஸீனா காமிப்பா... 

அதுக்கப்புறம் அது ஊருக்குள்ள புகுந்து அட்டகாசம் பண்ணும்போது தாவும். பாயும்.  பாயற  ஸீன்ல என்ன நடந்ததுன்னா கதவுக்கு பின்னாடி அப்பாவும், கேமிராமேனும் இன்னும் ஒன்றிரண்டு பேரும்தான் இருந்தாங்க.  ரொம்பக் கம்மியான ஆட்கள்தான் இருந்திருக்காங்க அந்த ஷாட்டை எடுக்க.  புலியும் தாவிடுச்சு.  என்ன பண்ணனும்னா புலி தாவும்போது அந்தக் கதவை மூடணும்.   புலி அங்கேயே விழுந்துடும்.  இதுதான் சொல்லிக் கொடுத்தது.  

அந்தப் புலி தாவும்போது இவங்க மிரண்டுட்டாங்க..  கதவை மூட வேண்டிய ஆட்கள் மிரண்டுட்டாங்க...  கதவை மூடலை.  திறந்தே இருந்தது.  அப்போ அந்தப் புலி என்ன பண்ணுச்சுன்னா ஜம்ப் பண்ணி அப்பாவோட - அப்பா ஆறடி உயரம் - தோள்ல ஒரு காலையும், கேமிராமேன் தலைல ஒரு காலையும் வச்சு தாவி அந்தப்பக்கம் ஜம்ப் பண்ணி விட்டது.  அந்தத் தோள்ல இருக்கற சதையே வந்துடுச்சு அப்பாவுக்கு.  கேமிரா மேனுக்கு தலைவலி.  அல்மோஸ்ட் ஒன் வீக் ஹெட் பெயின் அவருக்கு.  நல்ல வெயிட் இலையா புலி..  அது அழுத்தி ஜம்ப் பண்ணினதுல அந்த வலி.  அப்படி ஒரு ரிஸ்க்கான வேலை பண்ணி இருக்காங்க அப்போ.    இதெல்லாம் ஒரு துணிச்சல்...   'எடுத்துடலாம் வாங்க, பார்த்துடலாம் வாங்க'ன்னு ஒரு துணிச்சல், தன்னம்பிக்கை.  திருப்பியும் சொல்றேனே, தெய்வத்தோட அருள்.  அது இல்லன்னா எதுவுமே கிடையாது. என்னோட கருத்து அதுதான்.

-  இரண்டு வீடுகளும் எதிர்த்த நிலையில் எம் எஸ் விஸ்வநாதனின் இரண்டாவது மகன் முரளியை காதலித்து மணந்திருக்கிறார் விஜயலக்ஷ்மி.  தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்று அவரைத்தான் சொல்வேன் என்கிறார்.

-  மனோரமாவை ஒரு சகோதரியாகவே பாவித்து அன்புடன் பழகி வந்திருக்கிறார் ஏ பி என்.  நவராத்திரியில் அவர் நடந்து வரும் நடையைக் கூட எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதில் ரொம்ப கவனமாக இருந்தாராம்.  கடைசி காட்சியில் பல் எல்லாம் கொட்டி அவர் தங்கப்பல் கட்டிக்க கொண்டிருப்பதற்கான மேக்கப் ஏ பி என் வீட்டில்தான் நடந்ததாம்.  

-  பத்மினி ஏ பி நாகராஜன் படங்களில் ஆஸ்தான நடிகை.  சம்பூர்ண ராமாயணம் படத்தில் அவர் சீதையாக நடித்தபோதிலிருந்தே அப்பாவுக்கு அவரைப் பிடிக்கும்.  அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார்.  சொல்லப்போனால் என்னை ரோசரி பள்ளியில் சேர்த்த்து விட்டதே அவர்தான்.  

-  சினிமா என்றால் சீரியஸாக நினைக்கிறோம்.  அங்கும் குறும்புகள், விளையாட்டுகள் உண்டு.  பத்மினி ஒருமுறை அப்படி ஒரு குறும்பு செய்தார்.

N T ராமராவுக்கு ஒரு பழக்கம் என்னவென்றால், தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதி வைத்துக்கொண்டுதான் படிப்பார்.  மனனம் செய்வார்.  அவருக்கு குரல் கொடுக்க நடராஜன் என்றொருவர் இருந்தார் என்றாலும் இவரும் உதட்டசைவுக்கு பேசவேண்டும் அல்லவா?

ஒருமுறை படப்பிடிப்பில் வெயில் இல்லை.  எனவே படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  ராமாராவ் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பேச வேண்டிய வசனங்களை ஒரு பாறையில் எழுதி வைத்துக் கொண்டிருந்தார்.  அது கேமிரா கண்ணில் படாது.  பத்மினி அவர் தூங்கும் நேரம் அப்பாவின் அனுமதியுடன் பாறையில் எழுதி வைத்திருந்ததை ஒரு துணி கொண்டு அழித்து விட்டார்.  

வெய்யில் வந்தததும், அனைவரும் பரபரப்பாக ஷாட்டுக்கு ரெடியானார்கள்.  

தூக்கத்திலிருந்து விழித்த ராமாராவும் தான் பேச வேண்டிய முதல் வசனம் நினைவிருந்தால் பேசி விட்டார்.  அப்புறம் பார்த்தால் பாறையில் வசனங்களைக் காணோம்.  பதறிப்போய்,  'எங்கே...  எங்கே வசனங்கள் காணோமே...   கட்கட்கட்'  என்றாராம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அதே படத்திலிருந்து இன்னொரு பாடல்.  TMS மட்டும் பாடும் பாடல். அந்தக் காலத்தில் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்ட பாடல்.  கண்ணதாசன் இரண்டு பக்கமும் பாடல் எழுதுவார் என்றாலும், இந்தப் பாடல் யாரைச் சுட்டுகிறது என்று தெரியவில்லை.  1974 ல் வந்த படம் என்பதால் அப்போது தி மு க ஆட்சி இருந்தது.  எம் ஜி ஆர் அதாவது அதிமுக உதயமாகிக் கொண்டிருந்தது.

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே…

உள்ளவரெல்லாம் நல்லவராவார்
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே
பின்னே நன்மை தீமை என்பது என்ன
பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே…

அழகாகத் தோன்றும்
ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும்
மரியாதை கண்டேன்

சதிகாரக் கூட்டம் ஒன்று
சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும்
பரிதாபம் கண்டேன்

கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே 
வாழ்கின்றான்
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன்போலே 
காண்கின்றான்

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள்……..

சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்

நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம்
இவரை விடாது சொல்கின்றேன்
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன்
தலைமுறை வரையில் 
பார்க்கின்றேன்

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள்…….

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள்…….


6 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. பகிர்ந்த இரண்டு பாடல்களும் முன்பு இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
    ஏபி நாகராஜன் பேட்டி முன்பே பார்த்து இருக்கிறேன், இங்கும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை கேட்டதற்கு பதிலாக முதல் ஆளாக வந்து கமெண்ட் செய்து விட்டீர்கள்! நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கமும் இணைந்த பிரார்த்தனையும்,

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!