2.10.25

நாளை ஆடி அமாவாசை...

 
வீட்டில் நான் மட்டும்தான் இருந்தேன்.

பாஸும் மாமியாரும் பாஸின் சித்தி வீட்டுக்குப் போயிருந்தனர்.  மகன்களும், மருமகளும் ஆபீஸ் போயிருந்தனர்.  

போனில் எஸ் வி சேகரும் மோகனும் கூத்தடிக்கும் நகைச்சுவைக் காட்சி ஓடி கொண்டிருந்தது.  

பட்டணத்தில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இருவருக்கும் வாய்க்கிறது ஒரு வேலை.   "வத்திப்பெட்டி இருக்கான்னு கேட்கணும்.  அவன் இருக்குன்னு சொல்லி தீப்பெட்டி கைல கொடுப்பான்.  உடனே நீ குதிரைக்கு எத்தனை கால்னு கேட்கணும்.  அவன் அஞ்சு கால் என்பான்.  இப்போ நீ இந்த இரண்டு பொம்மை இருக்கற பையை அவன்கிட்ட கொடுத்தா அவன் ஒரு பை கொடுப்பான்.  அதை வாங்கிகிட்டு வரணும்"

இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு இருவரும் அடிக்கும் லூட்டியை ரசித்துக் கொண்டிருந்தேன்.  எஸ் வி சேகர் கையில் வத்திப்பெட்டியாய் சேர்ந்து விடும்!

தமிழ்ப் படத்தில் எத்தனை படங்களில் கோட்வர்ட்ஸ் உபயோகிப்பது போல வருகிறது என்று நினைத்துப் பார்த்தேன்.  இதற்கெல்லாம் மூல காரணம் பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்கள்தான். . 


அப்போது காலிங் பெல் அடித்தது.  எழுந்து வாசலுக்கு சென்றேன். 

கதவைத்திருந்தால், வாசலில் 'அவர்' நின்றிருந்தார்.  ஒருநொடி யாரென குழம்பினாலும், சட்டென நினைவுக்கு வந்ததது.  அவரை  ஏற்கனவே பார்த்து இருக்கிறேன். ஒருமுறை கரண்ட் கட்டாகி மி வா காரர்களுக்கு போன் செய்து அவர்கள் வந்து வேலை செய்து கொண்டிருக்கையில் இவர் என்னைக் கடந்து சென்றது நினைவுக்கு வந்ததது.  கையில் சுருட்டி வைத்திருந்த மகா நீளமான கம்பிச்சுருள். 
 
நான் பார்ப்பதைப் பார்த்து அருகில் வந்து "என்ன" என்றார்.

என்னைவிட சற்று குள்ளமான உருவம்.  குறைந்த முடி, வாராத தலை, ஒழுங்கற்ற பற்கள்.  கைலியை தூக்கியும் காட்டாமல், அவிழ்த்தும் விடாமல் ஒரு மாதிரி குண்ட்ஸாய் கட்டி இருந்தார்.

"என்ன?" என்றேன் நானும்.

"ஏதாவது உதவி தேவையா?"

"வேண்டாம்"  

"ஏதாவதுன்னா கூப்பிடு" என்றபடி வலித்துக் கொண்டிருந்த பீடியை நடுவிரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவே வைத்து சுண்டி எறிந்து விட்டு நடந்தவர் இவர்தான்.  சற்று தூரம் சென்று ஒருமுறை திரும்பிப் பார்த்து விட்டு சென்றார் அப்போது.

இப்போது எதற்கு வந்திருக்கிறார் என்று தெரியாமல் ,

"என்ன வேணும்?" என்று கேட்டேன். 

"நாளைக்கு அமாவாசை" என்றார். 

"என்னது?"

"நாளைக்கு அமாவாசை"

'என்னடா இது!  ஏதோ ஜேம்ஸ்பாண்ட் படத்துல வரும் கோட்வேர்ட் மாதிரி ஏதோ சொல்கிறார்' என்று யோசித்தபடி,  

"ஆமாம்..  அதுதான் தெரியுமே.... இதைச் சொல்லவா இவ்வளவு தூரம் வந்தீங்க?" என்றேன். 

அவர் மறுபடியும் "நாளை ஆடி அமாவாசை" என்றார். 

சிக்கனமாகதான் பேசினார்.

"அதுக்கு....?"

" அம்மா தான் கன்ஃபார்ம் பண்ண சொன்னாங்க"

"எங்களுக்குத் தான் தெரியுமே....  இதுல நீங்க கன்ஃபார்ம் பண்ணுவதற்கு என்ன இருக்கு? நாளைக்கு ஆடி அமாவாசை தான். இதைச் சொல்லவா  இவ்வளவு தூரம் வந்தீர்கள்?"  என்று மறுபடி கேட்டேன்.  

என்னடா ஸ்ரீராமுக்கு வந்த சோதனை....   நான் வேறு ஏதோ பதில் சொல்லி இருக்க வேண்டுமோ.

 'ஒருவேளை அமாவாசைக்கு என்று சொல்லி ஏதாவது காசு கேட்கப் போகிறாரோ?' - மனதுக்குள் எண்ணம் ஓடியது.   அதுவும் ஆடி அமாவாசை வேற...   காசு நிறையவே கொடுக்க வேண்டி வரலாம்.  சென்டிமெண்ட்லயே அடிப்பார்கள்!  மறுப்பதற்கான காரணங்களை மனதுக்குள் அமைத்துக் கொண்டேன்.

"அம்மா தான் ஞாபகப்படுத்த சொன்னாங்க" என்றார். 

இப்போது இன்னமும் குழப்பமானது. 

'வீட்டம்மாவுக்கு அமாவாசை எல்லாம் மறக்காதே....  எங்கே நான் மறந்து விடுவேனோ என்று எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னாலிருந்தே ஞாபகப்படுத்துவார்?  நேற்று கூட மடி காய போட்டிருந்தார்...   இவரிடம்போய் இதை எதற்கு ஞாபகப்படுத்த சொன்னார்?' என்று மேலும்  குழம்பினேன்.  

"இதை எதற்கு ஞாபகப்படுத்த வேண்டும்?  எங்களுக்கு என்ன, ஊருக்கே தெரியுமே, நாளை அமாவாசைன்னு...  அதுவும் ஆடி அமாவாசைன்னு..." 

அவர் அதை கவனிக்காமல் "பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம் பழம் நீங்க வாங்கி வச்சு விடறீங்களா? நான் வாங்கிட்டு வரட்டுமான்னு அம்மா கிட்ட கேட்டு சொல்லுங்க. நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு ரெடியா இருக்க சொல்லுங்க...  வர்றேன் " என்று சொல்லிவிட்டு மெதுவாக நடந்து போய்விட்டார். 

பிறகு தான் புரிந்தது பாஸ் அவரை ஏன்  முதல் நாளே வந்து கன்ஃபார்ம் பண்ண சொல்லி இருக்கிறார் என்று.

கொஞ்ச நாட்களாகவே தட்டிப்போய்க் கொண்டிருந்த விஷயம்..   இந்த முறை யாராவது வெளியாளை விட்டு 'சுற்றிப்போட'ச் சொல்லலாம்' (எப்போதும் மாமியார் சுற்றி போடுவார்) என்று சொல்லிக் கொண்டிருந்தார் பாஸ்.  

என்னிடம் முன்னாலேயே சொல்லி இருக்கக் கூடாதோ....

=====================================================================================================

1981 மணியன் மாத இதழில் பதிப்பரசர் திரு வானதி திருநாவுக்கரசு பற்றி திரு மணியன் எழுதி இருப்பது.

ஆமாம், அது எப்படி,ஏன் என்னிடம் இருக்கிறது?  அந்த இதழில்தான் சுஜாஸ்தாவின் "சிவந்த கைகள்' வெளியானது.  அதையும் அப்பறம் அக்டோபரில் வெளியாத அதன் தொடர்ச்சி "ல;ஐந்து பொய்கள்" அதையும் வாங்கினேன்.  இந்த மாத இதழ்களில் வந்த சுஜாதா கதைகளை எல்லாம் அப்படியே ஒரு பைண்டிங்காக மாற்றி இருக்கிறேன்! 

சாதனை

ம்பனும், பாரதியும், திருவள்ளுவரும் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.  ஆசாரிய சுவாமிகளும், விநாயகப் பெருமானும்  எதிரே நின்று ஆசி கூறிக் கொண்டிருப்பார்கள்.   கல்கி' போன்ற எழுத்தாளர்கள் பக்கத்திலிருந்து     வாழ்த்திக் கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் புத்தகக் குவியலுக்கு நடுவில் அமர்ந்து தேனீச் சுறுசுறுப்புடன் பணியாற்றிக் கொண்டிருப்பார் ஓர் எழுத்தாளர் - எழுத்தாளர் நண்பர் - பதிப்பாளர்!

அவர்தான் வானதி திருநாவுக் கரசு.

இலக்கியக் கூட்டங்கள் எங்கே நடந்தாலும் அங்கே திருநாவுக்கரசு இருப்பார். நல்ல விஷயங்களைப் பேசும் சொற்பொழிவுகள் எதிலும் முதல் வரிசையில் இருப்பார். புத்தக வெளியீடு, புத்தகக் கண்காட்சி என்றால் கேட்கவே வேண்டியதில்லை.  அவருக்கு அப்படி ஒரு அடங்காத இலக்கியப் பசி!  

பத்து ஆண்டுகளுக்கு முன் என்னுடைய எழுத்துக்களை வெளியிட வேண்டும் என்று கேட்டு வந்தார் அவர். அப்போது, என்னால் வெளி முயற்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத சூழ்நிலை. "இவர் நன்றாக  எழுதுகிறார். இவருடைய நாவல்களைப் போட்டுப் பாருங்கள்" என்று திருமதி சிவசங்கரியின் புத்தகங்களை வெளியிடச் சொன்னேன். "இவர் கருத்தாழத்துடன் எழுதுகிறார். இவருடைய நூல்கள் தமிழுக்குப் புதிசு!'' என்று கூறி டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் நூல்களை வெளியிடச் சொன் னேன். இந்த யோசனைகளை உடனே ஏற்றுக் கொண்டார் அவர்.

இப்போது அவருடைய வெளியீடுகளில் மிக உன்னதமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் நூல்களில் சில உதயமூர்த்தியுடையவை!

ப்பான்காரன் குண்டு வீசியதில் பர்மாவில் வாழ்ந்த தமிழர்கள் பலருக்குப் பெருநஷ்டம். ஆனால், அது தமிழுக்கு லாபம்! அப்போது கால்நடையாகவே தாய் நாட்டுக்குத் திரும்பிய பதின்மூன்று வயதுச் சிறுவர் திருநாவுக்கரசு. மறுபடியும் யுத்தம் முடிந்ததும் தந்தை அவரைப் பர்மாவுக்குத் திரும்பிப் போகச் சொன்னார். ஆனால், அவர் போகவில்லை. பாஸ்போர்ட்டைக் கூடக் கிழித்துப் போட்டு விட்டார்! காரணம் - அவருடைய மனத்தில் ஒரு பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்ததுதான்!

'சம்பாதிக்க வெளிநாட்டுக்குப் போவதா?  மனத் திருப்திக்குப் புத்தகப் பணியில் ஈடுபடுவதா?'  இப்படி ஒரு போராட்டம். கடைசியில் பணம்  ஜெயிக்கவில்லை; புத்தகம்தான் ஜெயித்தது!  ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பைத் துறந்து விட்டு, அறுபது ரூபாய் சம்பளத்தில் இன்பம் காண, 'இன்ப நிலையம்' புத்தக வெளியீட்டாளர்களிடம் வேலைக்குப் போனார் திருநாவுக்கரசு.

இராம. சடகோபன், வை. கோவிந்தன் போன்ற பெரியோர்களின் தொடர்பு, தமிழ்வாணன் போன்ற நண்பர்களின் உறவு, 'குமுதம்' பார்த்தசாரதி போன்ற அநுபவசாலிகளின் யோசனை, இப்படி யெல்லாம் இருந்தும் அவரால் பிரமாதமாகச் செல்வம் குவிக்க முடியவில்லை. அவருக்குக் கிடைத்த வருமானம் சாப்பாட்டிற்குக் கூடப் போதவில்லை. புத்தகக் கட்டுகள் அறையில் நிரம்பின! மனைவியின் நகைகள் அடமானக் கடைக்குப் போய்விட்டன!

கூடவே இருந்த தமிழ்வாணன் 'கல்கண்டு' பத்திரிகையின் ஆசிரியராகப் போய்விட்டார். மாதம் 125 ரூபாய் சம்பளம். வாழ்க்கையில் வசதியையும் சேர்த்துக் கொண்டு விட்டார். திருநாவுக்கரசு தனிமரமானார். இருந்தாலும் விடாமுயற்சியைக் கைவிடவில்லை. 'கோமாளி' என்று ஒரு வாரப் பத்திரிகை -ஜில்ஜில் என்று மாதப் பத்திரிகை - வெண்ணிலா என்று ஒரு இலக்கிய மாத இதழ் - இப்படி சேர்ந்தாற்போல ஆரம்பித்துவிட்டார். எடுத்த எடுப்பிலேயே நாலாயிரம் பிரதிகள் விற்கவும் முடிந்தது. அநுபவம் இனிப்பாக இருந்தது. கேட்பானேன்? "மிட்டாய்" என்ற ஒரு வாரப்பத்திரிகையையும் குழந்தைகளுக்காக ஆரம்பித்தார்!

ஆனால், வியாபார ரீதியாக வெற்றி அடைய முடியவில்லை.  தனது வெளியீடுகளை எடுத்துக் கொண்டு. 'கல்கி'யிடம் போனார். அவரிடம் ஒரு பதிப்புரை வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 'கல்கி' அவரை ரொம்பப் பாராட்டி, தனது வார இதழிலேயே அமர்க்கள்மாக ஒரு பதிப்புரையும் வெளியிட்டார். அவ்வளவுதான்! மணியார்டர்களாக வந்து குவிந்தன. திருநாவுக்கரசுக்குக் கையெழுத்துப் போட்டு மாளவில்லை!

"சொந்தப் பிரஸ் வைத்துக் கொண்டால்தான் வெற்றிகரமாகப் பிரசுரங்களைக் கொண்டுவரமுடியும். பத்திரிகைகளை வெளியிட முடியும்!" என்று அவருக்கு அறிவுரை சொன் னார் 'கல்கி'. கையில் கொஞ்சம் பணம் வந்த தெம்புடன் திருநாவுக்கரசு. அச்சகம் ஒன்றை ஆரம்பித்தார். அதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.  அதை இழுத்துமூடிவிட்டு, 'செட்டிநாடு ஹோட்டல்* நடத்த வேண்டியதாயிற்று!

ஆனால், அவருடைய ஆர்வம் வயிற்றுப்பசியைத் தீர்ப்பதில் இல்லை. இலக்கியப் பசியை ஆற்றுவதில்தான் இருந்தது. நண்பர் தமிழ் வாணனின் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்ற புத்தகம் நன்றாக விற்கும் என்று கருதி. அவரிடம் பிரசுரத்துக்காகக் கேட்டார்."உனக்கு அதிர்ஷ்டம் இல்லை உன்னிடம் கொடுக்க மாட்டேன்!'' என்றார் தமிழ் வாணன். அதுவே அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது!

மனம் குமுறிக்கொண்டு "எப்படியும் வெற்றி அடைவேன். எனக்கும் அதிர்ஷ்டம் இருப்பதைக் காட்டுவேன்" என்று விடாப்பிடியாகத் தியாகராநகரில் ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார் திருநாவுக்கரசு. வானதி  என்பது 'கல்கி' எழுதிய பொன்னி  யின் செல்வன்' நாவலில் ஒரு முக்கிய பாத்திரம்,    அதையே தனது பிரசுராலயத்தின் பெயராக வைத்துக் கொண்டார்.
 

இதுதான் வானதி பிறந்த கதை. வியார்வையை  ஊற்றி அவர் வளர்த்த மரம் இந்த ஆண்டு அது வெள்ளி விழா கொண்டாடப் போகிறது.

ரம்பநாளில் தான் ஓர் எழுத்தாளராக இருந்ததனாலோ என்னவோ, அவருக்கு எழுத்தாளர்களிடம் ஓர் அலாதியான மதிப்பு. நல்ல எழுத்தாளர்களிடம் அளவு கடந்த விசுவாசம். 

"திருநாவுக்கரசு தரும் 'ராயல்டி' எனக்கு எப்போது கிடைக்கும்? எப்போதெல்லாம் என் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுகின்றனவோ அப்போதெல்லாம் அவர் தரும் பணம் என் கைக்கு கிடைக்கும்!" என்று சொல்லுவார் கண்ணதாசன். ஆரம்ப நாளிலிருந்து ஜெகசிற்பியனுக்கு ஆதரவாக இருந்து, அவருக்கு உதவிசெய்து, இன்றும் அவர் குடும்பத்துக்குத் துணையாக இருந்து வருகிறார் அவர். பதிப்பாளர்களிடம் காகிதம் தருபவர்களும் அச்சிட்டுக் கொடுப்பவர்களும் ஏமாறமாட்டார்கள்:  எழுத்தாளர்கள் தாம் ஏமாந்து போவார் கள்!  திருநாவுக்கரசுக்கு ஏமாற்றத் தெரியாது. ஆயிரக்கணக்கில் அலுக்காமல் எழுத்தாளர்களுக்குச் 'செக்' போட்டு அனுப்பத்தான் தெரியும்!

"புத்தகம் போடுவது இருக்கட்டும். இந்த அனுபவத்தில் நீங்கள் மறக்க முடியாத இரண்டு சந்திப்புகளைச் சொல்லுங்கள்!" என்று ஒருமுறை நான் அவரிடம் கேட்டேன். அவருக்குக் கண்ணில் நீர் ததும்பிவிட்டது.

முதலாவது காஞ்சிப்பெரியவர்களைச் சந்தித்தது.

'கண்ணன்' ஆசிரியராக இருந்த "ஆர்வி' யின் உதவியுடன் ஆசாரிய சுவாமிகளைச் சந்திக்க முடிந்தது. "கல்கி'யில் அவர்கள் எழுதிவந்த அருளுரையை ரா. கணபதியின்  உதவியுடன் தொகுக்க முடிந்தது "நான் சொல்லுவதை அப்படியே எளிமையான நடையில் போட வேண்டும். அப்போதுதான் அந்தப் புத்தகத்தில் நான் இருக்கமுடியும்". என்ற ஒரு நிபந்தனையைத்தான் போட்டார் ஆசாரிய சுவாமிகள்.  அந்த ஆசையை அப்படியே நிறைவேற்றி வைத்தார் திருநாவுக்கரசு.  அந்த முயற்சியின் அபார வெற்றிகுச் சான்று, இன்று 'தெய்வத்தில் குரல் இரண்டு பாகங்களாக வெளிவந்து அமோக விற்பனை ஆகிக் கொண்டிருப்பதுதான்! 

அவரால் மறக்கமுடியாத இன்னொரு சந்திப்பு ராஜாஜியைப் பார்த்ததுதான்.

வேறொரு பிரசுராலயத்தில் வெளி வந்து கொண்டிருந்த அவருடைய நூல்களை, வானதியில் வெளியிட விரும்பி, சோமுவை அனுப்பி வைத்தார் ராஜாஜி. 'அவ்வளவு பெரிய மனிதரிடம் போய் ஈடு கொடுக்க முடியுமா?' என்று அவருக்குக் கொஞ்சம் யோசனைதான்.  ராஜாஜியின் இராமாயணம் (ஆங்கிலத்தில் பவன் பிரசுராலயம் வெளியிட்ட ஒரு ரூபாய் புத்தகம்) ஒரே நாளில் இருபதாயிரம் பிரதிகள் விற்றது அவருக்குத் தெரியும். தன்னை எப்போதும் எளியவனாகவே கருதிக் கொண்ட திருநாவுக்கரசுக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது.

ஆனால், ராஜாஜி விடவில்லை. அவரை அழைத்துப் புத்தக உரிமைகளைக் கொடுத்து, அதைப்பற்றிக் 'கல்கி' யிலும் உடனே கையெழுத்திட்ட அறிவிப்பையும் வெளியிட்டார். வானதியின் வியாசர் விருந்து'. 'மகாபாரதம்' என்ற தலைப்பில் வெளிவந்தது. அதைப் பாராட்டி கைகொடுத்தார் ராஜாஜி. கையில் திருநாவுக்கரசு கொண்டு போன பழத்தை "நீயே கனி. உன்  உள்ளமும் கனி!" என்று சொல்வி விட்டார். ஆசி கூறித் திருப்பிக் கொடுத்து விட்டார்.

ராஜாஜியின் 'சக்கரவர்த்தித் திருமகனை' இராமாயணமாக வெளியிட்டார் அவர்.
 
என்னுடைய நூல்களை மக்களுக்குக் கிடைக்கக்கூடிய மலிவான நிலையில் வெளியிடவேண்டும்' என்று ராஜாஜி அவரிடம் சொல்வதுண்டு. அதனால் இன்றும் அவருடைய நூல்களை வெளியிடும் உரிமை'வானதி' இடமே இருந்து வருகிறது.   நிறையப் பணம் கொடுக் சுக்கூடிய நிறுவனங்கள் வந்து கேட்ட போதுகூட ராஜாஜியின் மகன் அந்த உரிமையை மாற்ற விரும்பவில்லை!

ன்னைப்போல ஆசாரிய சுவாமி பக்தி என்னைப்போல மதுரை சோமுவின் இசையில் ஒரு பற்று - இவற்றைத் தவிர, இன்னொரு ஒற்றுமையும் உண்டு அவருக்கும் எனக்கும். எப்போதும் பளிச்சென்று வெண்ணிறக் கதராடைதான் அணிவார்!

திருநாவுக்கரசு ஆயிரக்கணக்கானத் தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். அரசியல் ஈடுபாடு இல்லாதவரானாலும் 52 தலைவர்களின் சரிதங்களைப் பதிப்பித்திருக்கிறார்.

"எழுத்தில் எனக்கு இப்படி ஒரு மோகம் ஏற்படுவதற்குக் காரணம் என்னுடைய மாமன் காசிச்செட்டியார்தான். அவர் ஒரு புத்தகப் பிரியர். கலை உணர்வு மிகுந்தவர். தந்தை வாய்மையையும், தாய் கருணையையும் என்னிடம் ஊறச் செய்தவர்கள். ஆனால், இந்த ஆசையைப் பிறக்கச் செய்தவர் மாமாதான்!" என்று சொல்லுவார் திருநாவுக்கரசு.

"இந்தத் தொழில் புனிதமானது. சிறந்த சிந்தனையாளர்களிடம், பெரியவர்களிடம், ஞானிகளிடம் இதன் என்பார் அவர். மூலம் எனக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இது நான் செய்த புண்ணியம்!" என்பார் அவர்.

ஆறு குழந்தைகளும், அருமையான மனைவியுமாக அமைதியான குடும்பவாழ்க்கையில் கலந்து நிற்கிறார் திருநாவுக்கரசு. ஆண்டவன் அவருக்குக் குறைவுகள் வைக்கவில்லை. அவருடைய ஒரே பற்றாக்குறை நேரந்தான்! சென்னையில் தீவுத்திடலில் நாலணா புத்தகங்களைக் கூவி விற்றவர் இன்று லட்சக்கணக் கான புத்தகங்களை விற்கும் 'வானதி' என்ற ஆலமரத்தை வளர்த்திருக்கிறார். "இதை ஒரு இன்ஸ்டிட்யூஷனாக ஆக்கிவிடவேண்டும் என்பதுதான் என் ஆசை!" என்று சொல்லிக் கொள்கிறார் அவர்.

வியக்கத்தகுந்த ஒரு சாதனைதான். 

ஆனால். என்னை மனம் நெகிழ வைக்கும் அவருடைய சாதனை. "தெய்வத்தின் குரல்" என்ற அருட் பிரசாதத்தை அவர் தமிழ் மக்களுக்குக் கொடுத்திருப்பதுதான். தினந்தோறும் அந்தப் புத்தகங்களில் ஒரு சிறு பகுதியையாவது படித்து விடுவேன். காஞ்சிப் பெரியவர்களின் அருள்வாக்கு, அமுதக்குரலாக அப்போது என் செவியில் ஒலிக்கும். நெஞ்சில் அபூர்வமான அமைதி பிறக்கும்.

லட்சக்கணக்கான தமிழ்மக்களுக்கு இதுபோன்ற அரிய அனுபவம் ஒவ்வொரு  நாளும் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த வாய்ப்பைக் கொடுத்த அரிய பெருமை, இந்த நூலுக்கரசருக்கு உண்டு..

- மணியன் -

===========================================================================================

என் அப்பா தன்னுடைய 23 வது வயதில் செய்த முயற்சிகள்...




====================================================================================================

ந. பிச்சமூர்த்தி கவிதைகள்.

வெள்ளி விழா

சுதந்திர தின வெள்ளி விழாவுக்கு
மெரினாவில்
காந்தி சிலைமுதல்na_pitchamurthy
விவேகானந்தர் சிலைவரை
சவுக்கு முளை அடித்து
குறுக்குக் கழிகட்டி
வேடிக்கை பார்க்கவரும் வெள்ளம்
அணிவகுப்பை அழிக்காமல் 
வெற்றிக்கு வித்திட்ட கண்டிராக்டர்
மறுநாள் கணக்குப் பார்த்தார்
நல்ல ஆதாயம்.
மக்கள் கணக்குப் பார்த்தார்.
விழாதான் ஆதாயம்
காலைக் கருக்கிருட்டில்
சுள்ளி பொருக்க வந்த கிழவிக்கு
சவுக்கைப் பட்டைகளை
உரித்தெடுத்துக் கொண்டபோது
ஆளரவம் கேட்டதனால்
ஆதாயம் குறைப் பிரசவம்

கொக்கு

படிகக் குளத்தோரம்
கொக்கு.
செங்கால் நெடுக்கு.
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
முடியில் நீரை நோக்கும்
மஞ்சள் கட்டாரி மூக்கு.

உண்டுண்டு
அழகுக் கண்காட்சிக்
கட்டாயக் கட்டணம்
சிலவேளை மீனும்
பலவேளை நிழலும்...

வாழ்வும் குளம்
செயலும் கலை
நாமும் கொக்கு.
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலகா?
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு _
தெரிவதே போதாதா?

லீலை

மண்ணில் பிறந்தால்
வானேற ஆசை,
காலோடிருந்தால்
பறப்பதற்காசை,
வானாயிருந்தால்,
பூமிக்கு வேட்கை,
கொண்டலாயிருந்தால்
மழையாகும் ஆசை.
மின்னாயிருந்தால்
எருக்குழிக்காசை.
எருக்குழியானால்
மலராகும் பித்து
இரும்பாயிருந்தால்
காந்தத்திற்காசை
துரும்பாயிருந்தால்
நெருப்புக்காசை
தனியாயிருந்தால்
வீட்டுக்கு ஆசை.
வீட்டோடிருந்தால்
கைவல்யத்திற்காசை
நானாயிருந்தால் நீயாகும் ஆசை.
உனக்கோ?
உலகாகும் ஆசை.

===============================================================================================

ஜோக்ஸ் 1977






====================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!