இந்தச் சிற்பக் கூடத்தை (அதாவது சிற்பங்களை வைத்திருக்கும் வளாகத்தை) சுற்றிப் பார்க்கும்போது எனக்கு நாம் இழந்த செல்வங்கள் நினைவுக்கு வரும். இந்தச் சிற்பங்கள், தூண்களின் பகுதிகளாக இருந்திருக்கும். இறை உருவங்களாக இருந்திருக்கும். அந்த அளவு கோயில்களை, கோயில் வளாகங்களை நாம் இழந்திருக்கிறோம் (அல்லது இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டவர்கள் சிலைகளை மாத்திரம் கழற்றிவிட்டிருப்பார்கள்) என்னதான் நாம் கோயில்கள், சிற்பங்கள் போன்றவற்றை மிகவும் மதித்து பெருமையாகக் கருதினாலும், அத்தகைய சிற்பம் ஒன்று நம் வீட்டின் ஒரு புறத்தில் தோண்டும்போது கண்டுவிட்டால் உடனே பதட்டமடைவோம், எங்கே அரசாங்கம் நம் இடத்தை எடுத்துக்கொண்டுவிடுமோ என்று. இப்போதும் காஞ்சீபுரம் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் பல வீடு, கிணறு பகுதியில் சிற்பங்கள் சிலைகள் இருக்கும் வாய்ப்பு அதிகம்.
தஞ்சை மராத்திய மன்னர்களைப் பற்றி நாம் பேசும்போது சரபோஜி மன்னர் பெயர் மாத்திரமே முன்னிற்கும். இதன் காரணம், அவர்தான் கிட்ட த்தட்ட கடைசி மன்னர். பிரதாபசிங் மறைந்தபோது அவருடைய மூத்த மகன் துல்லாஜி என்பவர் 1763ல் ஆட்சிக்கு வந்தார். அந்தச் சமயத்தில் ஆர்க்காடு நவாப் முகம்மது அலிகான் என்பவன், தஞ்சை மீது படையெடுத்து வென்று, துல்லாஜியைச் சிறையெடுத்தான். அதற்கு முன்பே ஆங்கிலேய கிழக்கிந்தியப் படைகள் ஒவ்வொரு நகரமாக தங்கள் கீழ் கொண்டுவந்துகொண்டிருந்தனர். தஞ்சை அரசின் கீழ் இருந்த பல பகுதிகள் அவர்கள் வசம் வந்தன. இந்த மாதிரி நேரத்தில் தங்களுக்கு ஒத்திசைவாக இருந்த தஞ்சை மராத்திய அரசின் மீது ஆர்காடு நவாப் படையெடுத்தது, கிழக்கிந்தியக் கம்பெனி இயக்குநர்களுக்கு கோபத்தை வரவழைத்தது. துல்லாஜி, கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் சிறையில் இருந்தார். கிழக்கிந்தியக் கம்பெனி முன்னெடுத்து அவரை விடுதலை செய்யவைத்து, தஞ்சைக்கு மீண்டும் அவரை அரசராக்கினர். அதுமட்டுமன்றி, தஞ்சைக்கு என்று தனிப் படை தேவையில்லை என்று சொல்லி, கிழக்கிந்தியப் படைகளையே பாதுகாப்புக்காக நிறுத்தினர். துல்லாஜியும் நாகூர் மற்றும் பல பகுதிகளை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கொடையாக வழங்கினார்.
துல்லாஜி 1787ல் மறைவதற்கு முன்பு, தனக்கு வாரிசு இல்லாததால், சரபோஜி என்பவரை தத்து எடுத்துக்கொண்டார். சரபோஜிக்கு மிகச் சிறிய வயது என்பதால், துல்லாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர் அமர்சிங் என்பவர் தஞ்சைப் பகுதியின் அரசரானார். (காப்பாளர்) அமர்சிங் சுதந்திர தன்னாட்சி வேட்கை கொண்டவர். அதனால் ஆங்கிலேயர்களுக்கு பொம்மையாக அரசாள்வதை விரும்பவில்லை. இந்தச் சமயத்தில், சரபோஜியை ஸ்வார்ட்ஸ் பாதிரியார் வளர்த்தார், அதாவது கல்வியறிவு புகட்டினார். சரபோஜியும் ஆங்கிலத்தை நன்றாக அறிந்துகொண்டதுடன், பிரெஞ்சு, ஜெர்மன், உருது, லத்தீன், சமஸ்கிருதம் போன்ற பல்வேறு மொழிகளையும் பயின்றார்.
அமர்சிங்கின் ஆங்கிலேயர் மீதிருந்த வெறுப்பு காரணமாக ஆங்கிலேயர்கள் தொடர்ந்து அவருக்குத் தொல்லை கொடுத்தனர். இந்தச் சமயத்தில் சரபோஜியும் வளர்ந்துவிட்டதால், நேரடியாக அமர்சிங்கை பதவிநீக்கம் செய்துவிட்டு சரபோஜியை, இரண்டாம் சரபோஜி என்ற பெயரில்1798ல் அரசனாக்கிவிட்டார்கள். அவரும் ஆங்கிலேயர்களுடன் (வெஸ்லி பிரபு) ஒப்பந்தம் செய்துகொண்டு, தஞ்சை மற்றும் அதைச் சுற்றியிருந்த சில பகுதிகளைத் தவிர, மற்ற தஞ்சை மராட்டிய அரசுப் பகுதிகள் அனைத்தையும் ஆங்கிலேயர்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டார்.
சரபோஜி, கலைகளிலும் நூலகம் அமைத்து பல புத்தகங்களை பாதுகாப்பதிலும் ஈடுபட்டார். இரண்டாம் சரபோஜியும் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் பல்வேறு நூல்களை (ஓலைச்சுவடிகளை) இங்கு இடம்பெறச் செய்தனர். வடமொழி, தெலுங்கு, தமிழ் போன்றவற்றைச் சார்ந்த மருத்துவ இலக்கிய மற்றும் பல்வேறு ஓலைச்சுவடிகள் மற்றும் புத்தகங்களைச் சேகரித்துப் பாதுகாத்தனர். இதற்கிடையில், சரபோஜி அவர்கள், தலைசிறந்த சிற்பி ஃப்ளாக்ஸ்மன் என்பவரைக்கொண்டு தன்னுடைய உருவத்தையும், ஸ்வார்ட்ஸ் பாதிரியார் உருவத்தையும் வெண் பளிங்கில் சிற்பமாக வடிவமைக்கச் செய்தார். அந்தச் சிற்பத்தை இங்கு கண்டிருக்கிறோம் / காண்போம். 1832ல் சரபோஜி மறைந்ததும், அவருடைய மகன் சிவாஜி என்பவர் பட்ட த்திற்கு வந்தார். அவருக்கு வாரிசு இல்லை என்பதால் 1855ல் அவர் மறைந்தபோது ஆங்கிலேயர்கள் வாரிசு இழப்புச் சட்டப்படி, தஞ்சை மராட்டிய அரசை தங்களிடமே எடுத்துக்கொண்டனர். இவ்வாறு 180 ஆண்டுகள் தஞ்சையில் கோலோச்சிய மராட்டிய அரசு முடிவுக்கு வந்தது.
ஒரு அரசரின் செய்கையை அந்தக் காலத்து நிகழ்வுகளை வைத்துத்தான் நாம் எடைபோட வேண்டும். ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர வரலாற்றில் பல தலைவர்கள் /அரசர்கள் செய்தவை, அவர்களின் சொந்த நலனை அல்லது நாட்டு நலனை முன்னிறுத்தியே முடிவெடுத்திருப்பார்கள். நடந்த வரலாற்றை மாற்ற முடியாது. ஆனால் அவற்றைப் படித்தால், தற்போது நாட்டில் நடப்பவைகளைப் புரிந்துகொள்ளவும் எச்சரிக்கையாக இருக்கவும் முடியும். முடியாட்சியில் அத்தகைய உரிமை மக்களுக்கு இல்லை. மக்களாட்சியில் மக்களுக்கு அத்தகைய உரிமை இருக்கிறது. திடுமென ஏன் பங்களாதேஷில் புரட்சி ஏற்பட்டு, ஒரு பொம்மையை (அதாவது நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவரை) தலைவராக்கியிருக்கிறார்கள். பாகிஸ்தானில் நடப்பது என்ன? இலங்கையில் நடந்தது என்ன? கடந்த பத்து ஆண்டுகளாக நம் நாட்டில் என்ன என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன என்பதையெல்லாம் நாம் அறிய முயற்சிக்க வேண்டும்.
சரி… நாம் வரலாற்றைக் கொஞ்சம்
ஒதுக்கிவைத்துவிட்டு,
அரண்மனையில்
நான் கண்ட காட்சிகளைப் பார்க்கலாம்.
18ம் நூற்றாண்டு பீரங்கிக் குண்டு, தஞ்சாவூர்
அரண்மனை. முதலில் பார்த்தபோது தன் உடற்தகுதியை நிரூபிக்க இளைஞர்கள்
உபயோகித்த இளந்தாரிக் கல் என்று நினைத்தேன் (முதல்
மரியாதை சிவாஜி நினைவுக்கு வருகிறாரா?). அதைத்
தூக்க முடிந்தால்தான் பெண் தருவார்கள். ஆமாம்
கல்லைத் தூக்குவதற்கும் பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை
அப்போதெல்லாம் பெண்கள் ரொம்ப எடை அதிகமாக இருந்தார்களோ? சிற்பங்களில் கொடியிடைப் பெண்களைத்தானே செதுக்கியிருக்கிறார்கள்?
வெயிலில் வாடும் சிலை… என்னையும்
கலைக்கூடத்தில் வைத்தால் என்ன என்று கேட்கிறதோ?
இவையெல்லாமே நம் பயன்பாட்டில் இருந்தன. பிறகு
இவற்றை விட்டுவிட்டு, மிக்சி, கிரைண்டர் என்று மாறிவிட்டு, பிறகு சமீப
காலங்களில், கல்சட்டி, பானை, பாரம்பர்யம் என்று பலர் ஜல்லியடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
உரைகல், திருகைகள். உங்களுக்குத்
தெரியுமா? இறைவனுக்கு சந்தனம் அரைக்க, பெரிய வட்டவடிவமான
கற்கள் உண்டு. இரண்டு மூன்று பேர் சேர்ந்து சந்தனம் அரைக்கும் விதமாக அது
இருக்கும். இதனை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருப்பதியில்
யோக நரசிம்மர் சன்னிதியின் அருகில் பார்த்திருக்கிறேன். சிலர்
இதனைத் தவறாகப் புரிந்துகொண்டு அந்த சந்தனக் கல்லின்மீதே தங்கள் அபிலாஷையை விரலால்
எழுதுவார்கள். (ஏம்பா… எவனேனும் நான் அளித்திருப்பதற்காக நன்றி பாராட்டியிருக்கீங்களா? இன்னும்
இது வேணும் அது வேணும் என்று வேண்டுகோள்கள் வைப்பதிலேயே குறியாக இருக்கீங்களே
என்று இறைவன் நினைப்பாரோ?)
திருகை… நிச்சயம் இதன் உபயோகத்தை நான் எங்கள் வீட்டில் பார்த்திருக்கிறேன்.
இதெல்லாம் அரண்மனையில் உபயோகப்பட்ட பொருட்கள். தற்போதைய
நாரீமணிகளுக்கு (எதற்கு அவங்களை மாத்திரம் சொல்வது? இருவரும்தான்
தற்காலத்தில் சமைக்கிறார்கள், வேலையைப்
பகிர்ந்துகொள்கிறார்கள்) மிக்சி கிரைண்டரை விட்டால் வேறு எதுவும் தெரியாது.
இந்தப் பெண்ணின் சிலை யாரென்று குறித்துக்கொள்ள மறந்துவிட்டது. உங்களுக்குத்
தெரியுமா?
பல்லவ காலத்திலிருந்து இருக்கும் சிங்கத் தூண்கள். அவற்றில்
சிங்கம் மாத்திரம் இடம் பெயர்ந்து இங்கு வைத்திருக்கிறார்கள்.
ரிஷி பத்னிகள், 12ம் நூற்றாண்டு, தாராசுரம், பிக்ஷாடனர், 12ம்
நூற்றாண்டு, தாராசுரம், சிவ
கணங்கள், 12ம் நூற்றாண்டு, தாராசுரம்
சிவ கணங்கள்
12ம்
நூற்றாண்டு பிக்ஷாடனர் சிலை
சப்த கன்னியர் அல்லது சப்த ரிஷிபத்னியர்.
இந்தச் சிலைகள் என்னைக் கவர்ந்தன. ஒன்றுக்கு மேற்பட்டு இந்த மாதிரி பெண் சிலைகள் செய்யும்போது முகம் மற்றும் அவயவங்கள் ஒரே மாதிரி அமைந்துவிடக் கூடாது. நன்றாக கவனித்துச் செய்துள்ளனர்.
மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மி, சூரியன், 17ம் நூற்றாண்டு, விஜயநகரம்.
9ம் நூற்றாண்டு மஹாவிஷ்ணு, துகிலி, புத்தர், 11ம் நூற்றாண்டு, மதகரம்.
முதல் சிலை வராஹப்பெருமான் என்று தோன்றியது. இரண்டாவது
தக்ஷிணாமூர்த்தி. 15ம் நூற்றாண்டு. உமையாள்வதி என்ற
இடத்தில் கிடைத்து.
ஒவ்வொரு சிலையையும் ரசித்துப்
பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கற்சிலைகளைக் கண்டுகளித்துவிட்டு
செப்புத் திருமேனிகளைக் காணாமல் போகலாமா? அடுத்த வாரம் அவைதான்.
(தொடரும்)
காலை வணக்கம், ஐயன்மீர்/அம்மையீர்!
பதிலளிநீக்குமாலை வணக்கம்...உங்களுக்கு...
நீக்குபாருங்க இதைப் பார்க்காம கீழ நீங்க இழுத்திருக்கும் வம்புக்குப் போய்ட்டேன்!!!
கீதா
வாங்க நாச்சியாரே!
நீக்குவாங்க திருவாழ்மார்பன். காலை வணக்கம்.
நீக்கு//ஆமாம் கல்லைத் தூக்குவதற்கும் பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் என்ன சம்பந்தம்?// எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும். காதலியை/மனைவியை சில முறையேனும் இரு கரங்களில் ஏந்தாத/தூக்கி கொஞ்ச தூரமாவது நடக்காத ஆண்களும் உண்மையிலேயே இருக்கிறார்களா? புள்ளி விவரம் கிடைக்க வாய்ப்புண்டா? :-) :-)
பதிலளிநீக்குஹாஹாஹா....என்ன திவாமா சினிமால நடக்கறதை எல்லாம் இங்கிட்டு சொல்லிட்டு புள்ளிவிவரம் வேற கேக்கறீங்களே!!!!
நீக்குமேபி உருவகப்படுத்தி அதாவது கையால தூக்கித் தாங்கி தட்டாமாலை சுற்றிவிட்டு கீழ போட்டுவிடாமல் கடைசி வரை அன்போடும் உறுதியான ஆதரவோடும் இருக்கும் மாமாக்களைப் பற்றி அக்காக்கள் சொல்லக் கூடும்...
மாமாக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்!!!!!
கீதா
ஒரு ஏள்விக்கு இன்னொரு கேள்வி எப்படி விடையாக இருக்கும்?
நீக்குஒன்று மட்டும் தெரியும். திருமணம் பூநூல் போன்ற விசேஷங்களில் பெண், மாப்பிள்ளை, பையனைத் தூக்க இப்போது உள்ளவர்கள் ரொம்பவே கஷ்டப்படறாங்க. அந்தக் காலத்தில் சிறுவர் சிறுமியரைத் தூக்கியிருப்பாங்க. இப்போ, நன்கு வளர்ந்தவர்களைத் தூக்க முடியுமா?
//ஒரு ஏள்விக்கு இன்னொரு கேள்வி எப்படி விடையாக இருக்கும்?// Why not? LOL
நீக்கு///ஆமாம் கல்லைத் தூக்குவதற்கும் பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் என்ன சம்பந்தம்?// நீங்கள் கேட்பதில் ந்யாயம் இருக்கிறது, நெல்லைஜி. பொதுவாக பெண்கள்தானே கணவனை 'தூக்கி எறிந்து' பேசுகிறார்கள்? ;-)
பதிலளிநீக்குபொதுவாக பெண்கள்தானே கணவனை 'தூக்கி எறிந்து' பேசுகிறார்கள்? ;-)//
நீக்குகடுமையாக ஆட்சேபிக்கிறேன்!!!! ஹாஹாஹா...வாங்க அக்காக்களே பஞ்சாயத்துக்கு....இங்கு இதற்கு நியாயம் கேளுங்க என் கூடச் சேர்ந்து!!!
கீதா
திருவாழ்மார்பன்..... நான், ஆண்கள் பெண்களை (மனைவியை) மதிக்காமல் அவமதிப்பவர்களைத்தான் கண்டிருக்கிறேன்.
நீக்குஒண்ணுத்துக்கும் லாயக்கில்லைனாக்கூட, மூட்டை தூக்கிப் பிழைத்து பொஞ்சாதியைக் காப்பாற்றிக்கொள்வான் என்ற நம்பிக்கை ஏற்பட அப்படிச் செய்திருப்பார்களோ?
அன்பான வேண்டுகோள்: எய்தவர் இருக்க, அம்பை நோகாதீர்கள்! ஆரம்பித்து வைத்தது நெல்லைஜிதான் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன் :-)
பதிலளிநீக்குகிரிக்கெட் மேட்சுகளில் பெரும்பாலும் ஆரம்ப பேட்ஸ்மென் களத்தை அவதானிக்க மெதுவாக ஆடுவதும் பிறகு கடைசி பல ஓவர்களில் ரொம்பவே அடித்தாடுவது போல, திருமணமான ஆரம்ப வருடங்களில் தலைநிமிராமல் பிறகு தூக்கி எறிகிறார்கள் எனச் சொல்ல வருகிறீர்களா? ஹா ஹா ஹா
நீக்குஅதை எப்படி... என் வாயால... :-)
நீக்குஎங்க வீட்டுல கூட அதாவது பாட்டி வீட்டுக் கொல்லைப்புறத்தில் அப்படி ஒரு நாகர் சிலை ஒன்றரை அடி / இரண்டு அடி உயரத்தில் கிடைத்ததுன்னு சொல்லி மற்றொன்று கிருஷ்ணர் நடுவில் என்று...வைத்து கும்பிட்டதுண்டு...அப்புறம் ஏதோ தோஷம் அது இதுன்னுட்டு என்னென்னமோ செஞ்சாங்க......
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன். நீங்க சொல்றதைப் பார்த்தால் அந்தத் தோட்டம் கோவிலின் ஒரு பகுதியா? ஹா ஹா ஹா... காஞ்சீபுரத்தில் உள்ள பல வீடுகளின் கிணறு, மற்றும் வீட்டின் கீழே சிலைகள் இருக்கும் சாத்தியம் அதிகம் என்பார்கள். நகரேஷு காஞ்சி எனப் பழங்காலத்தில் பெரும் புகழ் பெற்றது இல்லையா?
நீக்கு//மிக்சி கிரைண்டரை விட்டால் வேறு எதுவும் தெரியாது.// ஏன் தெரியாது? zomato, swiggy, big basket, rapido சப் குச் மாலூம் ஹை சாப்
பதிலளிநீக்குஆஹா... நவீன கால நண்பர்களைத் தெரியாமல் இருக்க முடியுமா? இவற்றின் உபயோகம் அளப்பரிது என நான் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன்.
நீக்குஇந்தப் பாதிரியாரை மன்னர் சந்திக்கும் சிற்பம்னு போன பதிவில் பகிர்ந்திருந்தீங்களோ நெல்லை அப்படி ஒரு நினைவு...
பதிலளிநீக்குகீதா
ஆமாம். கீதா ரங்கன், நான் பகிர்ந்திருந்த நினைவு.
நீக்குபங்களதேஷ் எல்லாம் ஒரு நாடாக என்னால் கருத முடியவில்லை, நெல்லை. அங்கிருக்கும் அப்பாவி மக்கள் பாவம்.
பதிலளிநீக்குகீதா
அப்படிச் சொல்லக் கூடாது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அல்லவா? ஆனால் மதம் என்னவெல்லாம் பண்ணுது பாருங்க.
நீக்குஆமாம் கல்லைத் தூக்குவதற்கும் பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் என்ன சம்பந்தம்?//
பதிலளிநீக்குகல்லைத் தூக்குவது போன்று, பெண்ணைக் கடைசிவரை பாதுகாப்போடு தாங்கி நடத்துபவன் வீரன் என்று!!!!
அப்படிப் பார்த்தா ஒரு காலத்துல, பெண் பார்க்கும் படலத்தின் போது பெண்ணை நடந்து வரச் சொல்லி, குடம் தூக்கச் சொல்லி, பாட்டு பாடச் சொல்லி எல்லாம் பார்த்தாங்களே!
கீதா
எதையும் எதையும் முடிச்சுப் போடறீங்க கீதா ரங்கன்? கல்லைத் தூக்கி வலிமை காட்டிவிட்டால் பெண்ணைக் கொடுத்துவிடுவார்களா?
நீக்குபெண்ணுக்கு ஏதேனும் குறை இருக்கா எனச் சோதிப்பதற்காக இருக்கலாம். உங்களுக்குத் தெரியுமா? நெல்லையில் பெண்ணிடம் தீப்பெட்டி கொடுத்து விளக்கேற்றச் சொல்லுவார்கள், சிக்கனமா இருக்காளா என சோதிக்க.
வெயிலில் வாடும் சிலை போஸ் அழகான நாட்டிய போஸ்! சிவனா? பெண்ணா? சரியா தெரியலை நெல்லை
பதிலளிநீக்குகீதா
தாண்டவ மூர்த்தி சிவனில்லையோ?
நீக்குதுவாரபாலகர் சிலை போல இருக்கிறது.
நீக்குதுவாரபாலகர்களில் ஒன்று மாத்திரம்தான் கிடைத்ததோ? அதனால் தனியாக இருக்கிறதோ என்று தெரியவில்லை.
நீக்குபிறகு சமீப காலங்களில், கல்சட்டி, பானை, பாரம்பர்யம் என்று பலர் ஜல்லியடிக்க ஆரம்பித்துவிட்டனர்.//
பதிலளிநீக்குஹலோ எங்க வீட்டுல இதெல்லாம் வருஷம் வருஷமா இருக்கு கேட்டேளா....இப்ப கூட சின்ன உரல் இருக்கு. வீடு மாறிக் கொண்டே இருப்பதால், முன்ன யூஸ் பண்ணின உரல் அம்மி கொண்டு வர முடியாம போச்சு.
ஆனா யாருக்கு இதைத் தூக்கி கழுவி என்று பலம் இருக்கு முதல்ல? ஆண்களுக்கே இல்லை!!!...
பாரம்பரியம் பாரம்பரியம்னு சும்மானாலும் பழக்கவழக்கங்கள் பற்றி இங்கயும் தானே நாம பேசறோம். காலம் மாறும் அதுக்கு எற்ப மாறிக் கொண்டே நாம் evolve ஆகிக் கொண்டே போக வேண்டும். அம்புட்டுத்தான்.
கீதா
//ஆனா யாருக்கு இதைத் தூக்கி கழுவி என்று பலம் இருக்கு முதல்ல? ஆண்களுக்கே இல்லை!!!...// exactly இதுக்குதான் மாப்பிள்ளை தேர்வில் இளவட்டக்கல்லை தூக்க சொல்வது !! :-)
நீக்குஹாஹாஹா அதுக்கா!!!!? ஆனா அந்தக் காலத்துல ஆண்கள் அடுக்களைக்குள் வருவாங்களா என்ன? ம்ஹூம்....அப்புறமே கூட காலம் மாறிய போது கூட ஆண்களுக்குச் சுடு தண்ணீர் கூட வைக்கத் தெரியாம மனைவியைச் சார்ந்து அதட்டி உருட்டிக் கொண்டுதானே இருந்தாங்க...ஒரு சிலரைத் தவிர்த்து. இல்லைனா நம்ம அண்ணாக்களையும், நெல்லை ஸ்ரீராமையும் இதுல சேர்த்துட்டா போல ஆகிடும்.......அதுக்குப் பிறகு சில வருடங்களாகத்தானே மாற்றங்கள்.
நீக்குகீதா
//பாரம்பரியம் பாரம்பரியம்னு சும்மானாலும் பழக்கவழக்கங்கள் பற்றி இங்கயும் தானே நாம பேசறோம்.// பாரம்பரியம் (tradition) என்பது எப்பொழுதோ இறந்துபோன மூதாதையர் இன்னமும் நம் செவிகளில் ஓயாமல் ஓதிக்கொண்டே இருப்பது. நீங்கள் சொன்னபடி, நம் இன்றைய/சொந்த values and metrics (விழுமியங்கள் அவற்றின் அளவைகள்) இவற்றோடு ஒப்பிட்டு ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம்.
நீக்குகண்டிப்பாக ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். தலைமுறைகளின் எண்ணங்கள் செயல்பாடுகள் மாறும் போது, family conflicts வராமல் இருக்க கொஞ்சம் adjustments மற்றும் ஒரு சில விஷயங்களில் authentic ஆக இருந்து அதைச் சொல்கிற விதத்தில் சொல்லவும் வேண்டும் இல்லையா
நீக்குகீதா
கீதா ரங்கன்... எனக்குத் தெரிந்து ஆட்டுக்கல், அம்மி , திருகை போன்றவற்றை ஆண்கள் சுத்தம் செய்து பார்த்ததே இல்லை. உரலை அப்படியே அலம்பிவிடுவார்கள். யாரும் முழுவதும் தூக்கி எதனையும் குளிப்பாட்டுவது இல்லை.
நீக்குதிருவாழ்மார்பன்.... நீங்கள் சொல்லியிருப்பது சரி... பாரம்பர்யம் என்று ஒன்று இருக்கிறதா என யோசிக்கிறேன். காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் பாரம்பர்யத்தை அர்த்தமில்லாததாகச் செய்துவிடும்.
நீக்குபாரம்பர்யப் பழக்கங்களை காலத்துக்கு ஏற்றபடி சிறிது மாற்றி ஒழுகி வருவதில் அர்த்தம் இருக்கும். கொஞ்சத்துக்குக் கொஞ்சம் நம் பழக்கவழக்கங்கள் அடுத்த தலைமுறைக்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது
//ஒரு சில விஷயங்களில் authentic ஆக இருந்து அதைச் சொல்கிற விதத்தில் சொல்லவும் வேண்டும் இல்லையா// நாம் ஃபாலோ பண்ணும் விஷயங்களையே ஐம்பது சதம்தான் அடுத்த தலைமுறை ஃபாலோ பண்ணும். நாம் பண்ணாமல், பாரம்பர்யம் என்று வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தால், வேலைக்காகாது.
நீக்குஎங்கள் வீட்டில் சந்தனம் அரைக்கும் கல் இருந்தது. இப்ப என்னாச்சுன்னு தெரியலை. திருகையும்...
பதிலளிநீக்குபழைய பொருட்களைப் பார்க்கும் போது நினைவுகளும் வருகின்றன.
கீதா
//எங்கள் வீட்டில் சந்தனம் அரைக்கும் கல் இருந்தது. இப்ப என்னாச்சுன்னு தெரியலை.// கல் கிடைத்தாலும் சந்தனக்கட்டைக்கு எங்கே போவீர்கள்? வீரப்பன் தூரத்து உறவோ? :-)
நீக்குஎன்னிடம் சந்தனம் அரைக்கும் கல் புதிதாக வாங்கியது இருக்கிறது. கேரள அரசுக் கடைகளில் (கர்நாடகாவிலும்) கிராம் 25 ரூபாய் என்ற விலையில் சந்தனக் கட்டை (மூணு விரற்கடை சைஸ்) கிடைக்கிறது.
நீக்கு//12ம் நூற்றாண்டு பிக்ஷாடனர் சிலை// பிக்ஷாடனர்தானா இது? பிச்சைக்கு முக்கியமான கபால பாத்ரம் (இடக்கரத்தில் இருக்க வேண்டியது) இல்லை; அதைவிட முக்யமானது, ரிஷி பத்னிகள் மயங்கும்படியான அவரது பிறந்த மேனிக்கோலம். அதையும் காணோம். கையில் இருப்பது புல்லுக்கட்டுதானா? அப்படியே இருந்தாலும் அது வலக்கையில் இருக்க வேண்டியது. நாலாவது கரத்தில் சூலத்தையும் காணோம்... I really doubt this.
பதிலளிநீக்குyessu. I was about to ask.
நீக்குநல்ல கேள்வி திருவாழ்மார்பன்... எனக்கு இதில் தெளிவு இல்லை. அங்கு இந்தச் சிற்பத்தின் கீழே பிக்ஷாடனர் என்று எழுதியிருந்தார்கள்.
நீக்குஇதெல்லாம் அரண்மனையில் உபயோகப்பட்ட பொருட்கள். தற்போதைய நாரீமணிகளுக்கு (எதற்கு அவங்களை மாத்திரம் சொல்வது? இருவரும்தான் தற்காலத்தில் சமைக்கிறார்கள், வேலையைப் பகிர்ந்துகொள்கிறார்கள்) மிக்சி கிரைண்டரை விட்டால் வேறு எதுவும் தெரியாது.//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......முதல்ல கிண்டலடிச்சு சொல்றவங்க வீட்டுல கரி அடுப்பு, உரல், அம்மி, திருகை வாங்கிப் போடுங்கப்பா....இப்பவும் கிடைக்கின்றன!!!!!!!
கீதா
//வீட்டுல கரி அடுப்பு// வீட்டில் நான் ஊதுபத்தி ஏற்றுவதற்கே என் பையன், கேன்சர் வரும், புகை ஆபத்து என்று அலார்ம் அடிக்கிறான்.
நீக்குஉரல், அம்மி, திருகை... இதையெல்லாம் வாங்கிவிடலாம். அது சரி, இவற்றை வைப்பதற்கு இடத்திற்கு எங்கே போவது?
அருமையான படங்களுடன் தெளிவான நடையில் விளக்கங்கள். நன்றி நெல்லை.
பதிலளிநீக்கு/இவையெல்லாமே நம் பயன்பாட்டில் இருந்தன. பிறகு இவற்றை விட்டுவிட்டு, மிக்சி, கிரைண்டர் என்று மாறிவிட்டு, பிறகு சமீப காலங்களில், கல்சட்டி, பானை, பாரம்பர்யம் என்று பலர் ஜல்லியடிக்க ஆரம்பித்துவிட்டனர்./
இந்தப் படத்தில் உரலுக்கு இடப்புறத்தில் இருப்பது ஆட்டுக்கல்தானே! மிகுந்த உயரமாக இருக்கின்றதே. மாவாட்டுபவர் ஸ்டூல் போட்டுத்தான் உட்கார வேண்டுமோ?
/9ம் நூற்றாண்டு மஹாவிஷ்ணு, துகிலி, புத்தர், 11ம் நூற்றாண்டு, மதகரம்/ இங்கே "மதகரம்" என்பது இந்தச் சிலைகள் கிடைத்த ஊர்ப்பெயரோ?
மதுரையில் அம்மா வீட்டில் உயரமான வெள்ளைக்கல் ஆட்டுக்கல் தான். நன்கு குழிவாக இருக்கும். ஒரு சமயத்தில் அரைப்படி அரிசியையும் அரைக்கால்படி உளுந்தையும் போட்டு அரைக்கலாம். மாவு கொள்ளும். உட்கார ஸ்டூல் போட்டுத் தான் உட்காரணும். சென்னை வந்தும் வெகு காலம் இருந்தது. 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அதை யாருக்கோ கொடுத்திருக்காங்க.
நீக்குஎன்னிடம் இரண்டு ஆட்டுக்கல், இரண்டு அம்மி. குடித்தனக்காரங்களுக்கும் சேர்த்து வாங்கி இருந்தேன். ஒன்றை அம்பத்தூரில் அண்ணா வீட்டிலேயே போட்டு விட்டு இன்னொன்று ஸ்ரீரங்கம் வந்தது. இப்போத் தான் போன வருஷம் 25 ஆம் வருஷம் சித்திரை மாசம் போல அதை வீட்டு வேலை செய்யும் பெண்ணை எடுத்துட்டுப் போகச் சொன்னோம். சேவை நாழி, அப்பக்காரைனு எல்லாத்தையும் அவளுக்கே கொடுத்தாச்சு.
நீக்குவாங்க சூர்யா... மதகரம் ஊராட்சி, திருவாரூர் வலங்கைமான் வட்டாரத்தில் உள்ளது.
நீக்குஆட்டுக்கல்தான்.
வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... ஒரு காலத்துல வீட்டுல இன்றியமையாததாகவும், ஒரு சிலர் வீட்டில் மாத்திரம் இருந்த பொருட்கள், இப்போ தேவையில்லாததாகிவிட்டது இல்லையா? காலம்தான் ஒரு நூற்றாண்டுக்குள் (அறுபது வருடங்களுக்குள்) எவ்வளவு மாறிவிட்டது.
நீக்குஇந்தப் பெண்ணின் சிலை யாரென்று//
பதிலளிநீக்குநானும் கூகுளில் போட்டுப் பார்த்தேன் அது ஆண், வடக்கு என்று ஏதேதோ சொல்கிறது.
துரை அண்ணா சொல்லக் கூடும்.
சிவகணங்கள், சிங்கம் சிற்பப் படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு.
சப்த ரிஷிபத்னியர் சிற்பங்கள் ரொம்ப நல்லா வடிவமைச்சிருக்காங்க நீங்க சொல்லியிருபப்து போல் வித்தியாசப்படுத்தி....அவங்களைப் பத்தி குறிப்புகள் இருந்திருக்குமோ ஓலைச் சுவடிகளில் அதை வைத்து வடிவமைச்சிருப்பாங்களோ?
கீதா
சத்ரபதி சிவாஜியின் அம்மா படம் முன்பு பாட புத்தகத்தில் இப்படி இருக்கும்.
நீக்குசப்த கன்னியர் சிலை ரொம்பவே அழகாக இருந்தது கீதா ரங்கன்.
நீக்குகோமதி அரசு மேடம்... சிவாஜியின் தாயார் சிலை போலத் தெரியவில்லையே. ஒருவேளை அப்படி இருக்குமோ?
கற்சிலைகள் எல்லாமே அற்புதம். வடிவமைப்பும். இப்ப அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்திருப்பதுமே நேர்த்தியாகச் செஞ்சுருக்காங்க.
பதிலளிநீக்குஎல்லாமே நல்லாருக்கு நெல்லை. நீங்க எடுத்த விதமும்
கீதா
மிக்க நன்றி கீதா ரங்கன்.
நீக்கு//இங்கே "மதகரம்" என்பது இந்தச் சிலைகள் கிடைத்த ஊர்ப்பெயரோ?// மதகரம் திருவாரூர் ஏரியா(?); எந்த காலத்திலோ ஒரு முறை போயிருக்கிறேன். ரொம்ப Non descript area. ஏன் நினைவில் இருக்கிறது என்று கூட சொல்லத்தெரியவில்லை.
பதிலளிநீக்குஆ! திவாமா உங்க ஆழ் மனதில் ஏதேனும் அதைக் குறித்த ஒன்று இருக்கக் கூடும். மதகரம் என்பது திருவாரூரில் இருக்கும் ஊராட்சி.
நீக்குஇதெல்லாம் நேக்கு எப்படித் தெரியும்னு கேட்டீங்கன்னா, இரு வருடங்கள் முன்பு நம்ம மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டம், அதில் இருக்கும் கிராமங்கள் ஊராட்சிகள், வட்டம் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்தவை ஆங்கிலத்தில் இருந்தவற்றை, ஹிந்தியில் இருந்தவற்றை தமிழிலும் கொண்டுவரச் செய்தப்ப, இதன் ஒரு பகுதி தமிழ்ப்பகுதி எனக்கு வந்தது. அப்ப செய்த போது அறிந்து கொண்டது.
கீதா
//அப்ப செய்த போது அறிந்து கொண்டது.// Brilliant!
நீக்குகமலாலயம் தான் திருவாரூர்க் குளம்/ஏரி. துகிலியில் தாயாதிகள் நிறைய இருக்காங்க. இப்போவும் மத்யமர் குழுமத்தில் ஒருத்தர் துகிலிக்காரர். இன்னமும் அங்கேயே வசிக்கிறார்.
நீக்குஇங்கே நிறைய திருவாரூர்க்காரர்கள் இருப்பது போலத் தெரிகிறது.
நீக்குஒரு காலத்தில் மதகரம் மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்புடைய இடமாக இருந்திருக்கவேண்டும்.
/திடுமென ஏன் பங்களாதேஷில் புரட்சி ஏற்பட்டு, ஒரு பொம்மையை (அதாவது நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவரை) தலைவராக்கியிருக்கிறார்கள். பாகிஸ்தானில் நடப்பது என்ன? இலங்கையில் நடந்தது என்ன?/
பதிலளிநீக்குகடந்த 300 ஆண்டுகளாக உலகில் நடந்த எல்லாக் கொடுமைகளுக்கும் பின்னால் ஏதோ ஒரு வல்லரசும் அந்த வல்லரசை வழி நடத்துபவர்களுமே காரணமாக இருந்திருக்கின்றார்கள். குறுகிய கால லாபத்தையேக் கருதி அரசரோ/ஜனாதிபதியோ/அதிகாரிகளோ இத்தகைய ஈனச் செயல்களைச் செய்தார்கள். வெகு சீக்கிரமே அவர்கள் செயல்கள் அவர்களுக்கே சொல்ல முடியாத தீமைகளையும் பொருளாதார நஷ்டத்தையும் தந்தும் கூட அவர்கள் பாடம் கற்ற பாடில்லை. எப்போதுதான் நமக்கு விடிவு வருமோ? உதாரணம்: பராசக்தி படத்தில் தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பல கருத்துகள் சொல்லப்படுகின்றனவாம்...2026 தேர்தலில் திமுக ஆதாயம் காண்பதற்காக 😢
பிறகுதான் நான் தளத்திற்கு வரணும். காலை வேலைகள் (இன்று யோகா இல்லை, ஜிம், நீச்சல் பயிற்சி மாத்திரமே) வரிசை கட்டி அழைக்கின்றன. கடைசிக் கருத்து கண்ணில் பட்டதால் பதில்.
நீக்குவாங்க சூர்யா. 300 ஆண்டுகள் நம் கண்ணுக்குத் தெரிவதால் இப்படி எண்ணம் வருகிறது.எப்போதுமே வல்லான் வகுத்ததே வாய்க்கால். அரசர்கள் மாத்திரம் சமாதானத்துக்காகப் போரிட்டனர் எனச் சொல்ல இயலாது.
எப்போதும் நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்பவர்கள் ஆட்டு மந்தைகள் போல சுய அறிவு இல்லாமல் அன்றைக்கு வரும் இலவசக் காசு, பொருட்களுக்காக மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்கிறோம் எனத் தெரியாது வாக்களிக்கும் 5-8 சதம் வாக்காளர்கள்தாம்.
வாழும் தேசத்துக்கு எதிராக இருப்பவர்களுக்கு மகசேசே நோபல் சமாதானப் பரிசு கொடுத்துவிடுவார்களே. நம் நல்ல நேரம் பராசக்தி படத்தைப் பார்த்தவர்கள் கழுவி ஊற்றுகிறார்கள். தேச விரோத்த,தையே கொள்கையாக்க் கொண்டவர்களுக்கு வேறு எப்படி படமெடுக்கத் தெரியும்? இதுக்காகவாவது இந்திராவின் குணத்தை (அந்த பழி வாங்கும் குணத்தை, எதிரியை அவன் ஆட்சியை நசுக்கும் குணத்தை) தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பெற்றிருக்க மாட்டார்களா என எண்ணத் தோன்றுகிறது.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குகற்சிலைகள் பிரமிக்க வைக்கின்றன. எத்தனை இழந்துவிட்டோம் என்பதும் தோன்றுகிறது.
எங்கள் வீட்டிலும் ஆட்டுக்கல், அம்மிக்கள் என அனைத்தும் இருந்தது. சிறு வயதில் நானும் இவையனைத்தும் பயன்படுத்தி இருக்கிறேன். அம்மிக்கள் வடக்கில் சிறியதாக சிவப்புக் கல்லில் silbatta என்கிற பெயரில் கிடைக்கும். அதுவும் பயன்படுத்தி இருக்கிறேன்.
முருகா சரணம்
பதிலளிநீக்குதிருகை எங்கள் வீட்டிலும் இருந்தது என்பதை பணிவுடன்...
பதிலளிநீக்குயாரென்று தெரியாத அந்தப் பெண்ணின் சிற்பம் எனக்கும் பார்த்த ஞாபகம் இருக்கிறது. விளக்கேந்தி நிற்கிறாரோ... பாவை விளக்கு என்று சரபோஜி கல்லூரியில் பார்த்த ஞாபகம்.
பதிலளிநீக்குஆமாம், அந்தப் பெண்களின் சிற்ப முகங்களில் வித்யாசம் இருக்கிறது என்று அறுதியிட்டு சொல்கிறீர்களா? கோணம்தான் மாறி மாறி செதுக்கி இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குவழக்கம் போல நிறைந்த தகவல்களுடன்
பதிலளிநீக்குஅழகிய படங்கள்....
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகுவார்ட்ஸ் பாதிரியார்
பதிலளிநீக்குமன்னருக்காக ஓலைச்
சுவடிகள் சேர்த்தாரா?...
சிவகங்கைப் பூங்காவில்
அவருடைய பெயரில் வழிபாட்டு இடம் கட்டப்பட்டுள்ளது..
தஞ்சை மராத்திய மன்னர்களைப்பற்றிய வரலாறு நல்லவிரிவாக சொன்னது அருமை.
பதிலளிநீக்குஅரண்மனை காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பீரங்கி குண்டை இளவட்ட கல்லாக மாற்றி விட்டீர்களா?
வெயிலில் வாடும் சிலை//
துவாரபாலர் சிலை அவர் பணி வாசலில் இருப்பது என்று வாசலில் வைத்து விட்டார்கள் போலும்
கடைசியில் இருக்கும் பெரிய உரலுக்கு மர உலக்கை போட்டு வைச்சிருக்காங்க. பக்கத்திலே இருக்கும் சின்ன உரலில் ஆட்டுக்கல் குழவி. வெயிலில் வாடும் சிலையைப் பார்த்தால் கோமதி அரசு சொல்றாப்போல் துவார பாலகர் போலத் தான் தெரியுது.
நீக்குசிவாலய தீர்த்த வாரியின் போது பிரச்னைகள்...
பதிலளிநீக்குநேரில் கண்டிருக்கின்றேன்...
ஆமாம், ஆனால் நாம் கையாலாகாத மக்கள். எல்லாவற்றிலும் மெத்தனம்.
நீக்குஉரல் படத்தில் ஆட்டுக்கலின் குழவியை வைத்து விட்டார்கள் என நினைக்கிறேன். உரல் , மர உலக்கை இரும்பு பூண் போட்டு இருக்கும் அந்தக்காலத்தில் இருக்கும்.
பதிலளிநீக்குஎங்கள் இருப்பக்க வீட்டிலும் உரல், ஆட்டுக்கல், திருவை எல்லாம் இருந்தது மிக்ஸி ,கிரைண்டர் எல்லாம் திருமணம் ஆகி இரண்டு மூன்று வருடங்களில் வந்து விட்டது உபயோகத்திற்கு.
அம்மா ,வீட்டிலும், மாமனார் வீட்டிலும் சந்தனக்கல் இருந்தன அத்தை வீட்டு சந்தனக்கல் பெரியவர் வீட்டிலும் அம்மா வீட்டுக்கல் தம்பி வீட்டிலும் இருக்கிறது.
நீங்கள் படம் போட்டு இருக்கும் வரிசையில் மூன்றாவது சந்தனகல் அள்வு இரண்டு வீட்டிலும் இருந்தது, மாமனார் தினம் சிவ பூஜைக்கு சந்தனம் உரைத்துதான் வைப்பார்கள்.
எங்கள் எல்லோருக்கும் அம்மா உரைகல் சின்னதாக குழந்தைகளுக்கு மருந்து தினம் உரைத்து கொடுக்க வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.
சப்த ரிஷிபத்னியர் சிலைகள்தான் அவர்களுக்கு கதை இருக்கே! தாருகாவனம் கதை. கடைசி படம் மிக நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉரைகல் என்னிடமும் இருந்தது. முதல் குழந்தை பிறந்து புக்ககம் வரச்சே கொடுக்கும் சீரோடு வந்தது. சந்தனக்கல் கருவிலியில் மாமனாரிடமும் மதுரையில் என் பெரியப்பா மற்றும் தாத்தா வீடுகளில் இருந்தன. சந்தனக்கட்டையில் சந்தனம் அரைக்கப் போட்டி போடுவோம். கடைசியில் அந்தச் சந்தனக்கட்டை தேய்ந்து போய் ஒரு குச்சி மாதிரியாக இருந்தவரை அரைச்சிருக்கோம்.
பதிலளிநீக்குசிலைகளின் அழகு அருமை. பெண்கள் சிற்பங்களில் எனக்கு அப்படி ஒண்ணும் வித்தியாசம் தெரியலை. நேரில் கிட்டே இருந்து பார்த்தால் தெரியுமோ என்னமோ? தனியாக நிற்கும் சிலை பெண்ணா? ஆணா?
பதிலளிநீக்குகல் இயந்திரம் அம்மாவிடம் இருந்தது. மத்தியானங்களில் சமையலுக்குத் தேவையான அரிசி மாவு, அரிசி உப்புமா ரவை மற்றும் கொத்துமல்லிப் பொடி போன்றவற்றை அதில் போட்டு அம்மா அரைப்பார். பின்னர் அது ம்துரையிலேயே கொடுத்துட்டாங்கனு நினைக்கிறேன். கை ராட்டை கூட அம்மா நூல் நூற்றுக் கொண்டிருந்ததால் இருந்தது. காங்கிரஸ் பிளவு வந்தப்போ அப்பா அதைத் தூக்கிக் கொடுத்துட்டார். அம்மா ஒரே அழுகை. இது பற்றி முன்னரும் சொல்லி இருக்கேன்.
பதிலளிநீக்குரிஷி பத்தினியர் சிலைகள்
பதிலளிநீக்குவித்தியாசமானவை தான்...
அருகில் சென்று கவனிக்காமலேயே
புலப்படும்...
அந்தப் பெண் சிலை வடிவமைப்பு வித்தியாசமாக இருப்பதை கவனியுங்கள்...
பதிலளிநீக்குஇது பழங்கால சிலை அல்ல என்றே
தோன்றுகின்றது
கலைச் சிற்பங்களுடன் வரலாறும் கூறியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குஆகா! ஆட்டுக்கல்லு, அம்மி, திருக்கை ,உரல் நாம் இதில்தான் அரைத்தோமா இவ்வளவு கனத்தையும் ஆட்டினோமே என இப்போது நினைக்கத் தோன்றுகிறது.
எங்கள் கிராமத்துவீட்டின் வாயிலில் அழகுக்காக வைத்துள்ளோம். கை லாம்பும் இரண்டு கூரையில் மாட்டியுள்ளோம்.