நெல்லைத் தமிழன்
முன்னுரை – பகுதி 1
பிரபந்தப் பாசுரங்களின் பொருளை எழுத எத்தனையோ அறிஞர்கள் கற்றுத் தேர்ந்தவர்கள் உண்டு. இருந்தாலும் தமிழின் மீது கொண்ட விருப்பத்தாலும், ஆழ்வார்கள் பாசுரங்களின் மீதான விருப்பத்தாலும் எழுதத் துணிகிறேன். எழுத்தில் தவறுகள் இருக்கலாம். எழுதுவதிலும் சந்தேகம் எழலாம். இதைப் பற்றி கருத்தில் எழுதினால் திருத்திக்கொள்ளவும், விளக்கவும் ஏதுவாக இருக்கும்.
எடுத்த உடனே, பின்னணி எதுவும் தெரியாமல் பாசுரங்களின் பொருளை எழுதுவது சரியான முறை அல்ல என்பதால் ஆழ்வார்கள், பிரபந்தங்கள், ஆச்சார்யர்களைப் பற்றி மிகச் சுருக்கமாக எழுதுகிறேன். இது பலருக்கும் கொஞ்சம் புரிதலை உண்டாக்க வேண்டும் என்பதால் நெடிதாக எழுத வேண்டிய இடங்களிலும் சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.
ஆழ்வார்கள் பதின்மர். பொதுவாக ஆழ்வார்கள் பன்னிருவர் என்றாலும், ஆண்டாளையும் மதுரகவியாழ்வாரையும் ஆழ்வார்கள் பதின்மர் என்று சொல்லும்போது சேர்ப்பதில்லை. ஆழ்வார்கள், ஸ்ரீமந் நாராயணனே முழுமுதற் கடவுள் என்ற வைணவ சித்தாந்தத்தின்படி, அவனைப் பற்றி பாசுரங்கள் செய்து பக்தியை மக்களிடையே விதைத்தனர். இறைவனை உள்ளபடி அறிந்துகொண்டு அவனின் குணங்கள், தன்மை, உடைமைகள் முதலியவற்றை ஆழ்ந்து அனுபவித்தவர்கள் என்பதால் ஆழ்வார்கள் எனப் பெயர் பெற்றனர். அவர்களுடய அந்த அனுபவமானது அழகிய தமிழ்ப் பாசுரங்களாக வெளிப்பட்டன. வேதாந்தக் கருத்துக்களைக் கொண்ட அந்தப் பாசுரங்களே “திவ்யப் பிரபந்தம்”, “அருளிச் செயல்”, “திராவிட வேதம்” என்று வழங்கப் படுகிறது.
ஒருவனது குலத்தை மனதில் வைத்து வித்தியாசம் பாராட்டுவது வைணவ சம்பிரதாயத்திற்கு விரோதம். ஆனால் சனாதன தர்மத்தில் நான்கு வர்ணங்கள் உண்டு, அதாவது செய்யும் தொழிலுக்கேற்ற நான்கு பிரிவுகள். இது தவிர ஐந்தாவதாக பஞ்சம வர்ணம் உண்டு. ஆனால் இந்தப் பிரிவுகளிடையே பேதம் இருக்கக் கூடாது என்பதைத்தான் வைணவ சித்தாந்தம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே என்று நினைத்தால், அது மனிதர்களின் குணக் குறைவு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறப்பால் ஏற்படும் குலம் நம் முந்தைய பிறவிகளின் கர்மங்களினால் ஏற்படுகிறது. பிறவியிலேயே பணக்காரர்களாகப் பிறக்கின்றனர், ஏழை வீட்டில் உழல்கின்றனர், பலவித குலங்களில் பிறக்கின்றனர். அதனால் ஒருவனுக்கு இயல்பான பெருமை கிடைக்கலாம், ஆனால் அவன் ஏன் அப்படிப் பிறப்பெடுத்தான் என்பது படைத்த இறைவனுக்குத் தெரியுமல்லவா? கிடைத்த சந்தர்ப்பத்தை எவ்வாறு உபயோகிக்கிறான், என்பதையும் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?
நமக்கு அறுவகைச் சமயங்கள் என்பது மாத்திரம்தான் தெரியும். ஆனால் அதற்கு மேலும் பலவித சமயங்கள் இருந்தன. இந்தச் சமயங்கள் எல்லாம் ஒரு புள்ளியை நோக்கி நம் கவனத்தைத் திருப்பவும், அந்தப் புள்ளியை நோக்கி நம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளவும்தான். ஆனால் பொதுவாக நாம் என்ன செய்கிறோம் என்றால், என்னுடைய சமயம்தான் மிக உயர்ந்தது, பிறருடைய சமயங்கள் தாழ்ந்தவை என்று எண்ணுவது மட்டுமல்லாமல், அவற்றைப் பற்றி குறைகளைப் பட்டியலிடுகிறோம். அதுபோல பிறரைப் பற்றிக் குற்றம் குறைகளையும் சுலபமாகப் பட்டியலிட்டு விடுகிறோம்.
ஆழ்வார்களின் பாசுரங்கள், நாராயணனே முழுமுதற்கடவுள் என்ற வைணவ சமயச் சித்தாந்தத்தை முன்வைக்கிறது. அதனால் பல பாசுரங்களிலும் இந்த அர்த்தம் தொனிக்கும். குல பேதம் கூடாது என்பதை வைணவ சித்தாந்தம் அழுத்தமாகச் சொல்கிறது. ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் என்ன குலத்தில் பிறந்தவர்கள் என்று யோசிப்பதும் தவறு என்றாலும், ‘குல பேதம்’ கிடையாது என்பதற்காகத்தான் ஒரு சிலவற்றை எழுதுகிறேன்.
“குல பேதம்” கூடாது, கிடையாது என்று எழுதியிருக்கிறீர்களே.. அப்படித்தான் எல்லோரும் இருந்தார்களா என்ற கேள்வி எழும். குலபேதம் கொண்டவர்கள், குலப் பெருமிதத்தினால் மற்றவர் மீது பொறாமை கொண்டவர்கள் போன்றவர்களைப் பற்றி ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் வரலாறு ஒளிவு மறைவில்லாமல் சொல்கிறது. இதனைப் பற்றியும் எழுத இருக்கிறேன். இந்த மாதிரி வரலாறுகள்தாம், எப்படி நம் ஆச்சார்யர்கள் ஒழுகினர், அவர்களைப் பின்பற்றுகிற்றோம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதை நமக்குப் பொட்டில் அடித்தாற்போலச் சொல்லும்.
பன்னிரு ஆழ்வார்களில் தலையானவர் நம்மாழ்வார் என்று அழைக்கப்படும் சடகோபர். ஆனால் காலத்தைக் கருத்தில் கொண்டால், முதலாழ்வார்கள் என்று அழைக்கப்படும் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவர். இவர்கள் மூவரும் தானாகத் தோன்றியவர்கள், அதுபோல ஆண்டாள், கோயில் நந்த வனத்தில் துளசிச் செடியின் கீழ் தோன்றியவர் என்பதால், இந்த நால்வருக்கும் பிறப்பால் ஏற்படும் குலம் இல்லை. திருப்பாணாழ்வார் பஞ்சமர் குலத்திலும், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார் வெள்ளாளர் குலத்திலும், குலசேகர ஆழ்வார் சேர அரசர் குலத்திலும், திருமங்கை ஆழ்வார் கள்ளர் குலத்திலும், மதுரகவி ஆழ்வார், பெரியாழ்வார் மற்றும் தொண்டரடிப் பொடி ஆழ்வார் ஆகியோர் முன்குடுமிச் சோழியர் குலத்திலும் பிறந்தவர்கள்.
வரலாற்றுப்படி, கடைசியாக அவதரித்த ஆழ்வார் திருமங்கை ஆழ்வார். 8-9ம் நூற்றாண்டு. ஆழ்வார்கள் திருமாலைப் பற்றி இயற்றிய பாசுரங்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
பொய்கையார் பூதத்தார் பேயார் ** புகழ்மழிசை
ஐயன்* அருள் மாறன் சேரலர்கோன் * துய்யபட்ட
நாதன் அன்பர்தாள் தூளி * நற்பாணன் நற்கலியன் *
ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு.
ஆழ்வார்களின் வரிசையை உபதேச ரத்தின மாலை மேற்கூறியவாறு சொல்கிறது. (புகழ்மழிசை ஐயன் - திருமழிசையாழ்வார், அருள் மாறன் – நம்மாழ்வார், சேரலர்கோன் – குலசேகர ஆழ்வார், பட்ட நாதன் – பெரியாழ்வார், அன்பர்தாள் தூளி – தொண்டரடிப்பொடி ஆழ்வார், பாணன் – திருப்பாணாழ்வார், கலியன் – திருமங்கையாழ்வார்)
தொடர்வோம்...
===========================================================================
நான் படிச்ச கதை
மோகன் வாத்தியார்…
கதையாசிரியர்: சோலச்சி
அகரப்பட்டியைச் சேர்ந்த ''சோலச்சி'' என்னும் நான் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். என் இயற்பெயர் தீ. திருப்பதி. நான் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது எனக்கு அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள்.
என் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில் வாடி வதங்கிய காலம் அது. அப்போதுதான் என் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களிடம் தஞ்சம் அடைந்தேன். மறுக்காமல் எங்கள் வறுமை நிலையை போக்கியதோடு மாலை நேரம் அவர் வீட்டில் வந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்கள்……….
மேலும் விவரங்களுக்கு
கதை sirukathaigal.com தளத்தில் இருந்து பெறப்பட்டது.
கதையின் சுட்டி
மோகன் வாத்தியார்…
மோகன் வாத்தியார்…
“நாம அப்புடி பேசிருக்ககூடாதோ… போயும் போயும் கல்யாணம் நடக்குற எடத்துல அப்புடி நா பேசினது சரியில்ல…. இல்ல பேசுனது சரிதான் .. அப்புடி பேசுனாத்தான் மத்தவனுகளும் திருந்துவானுக நாட்ட ஆளுறதுல இருந்து நாசமா போக வைக்கிற வரைக்கும் ஏதோ ஒரு வாத்தியாருகிட்ட படிச்சவனுகதானே வெறும் பாடத்த மட்டும் சொல்லிக் கொடுக்குறதுக்கா இந்த வாத்தியாரு பொழப்பு…..”
“கொட்ட வேண்டிய எடத்துல கொட்டியும் தட்டிக்கொடுக்க வேண்டிய எடத்துல தட்டியும் கொடுத்தாதான் நல்ல வழிக்கு வருவானுக.. ரிட்டேரு ஆனாலும் நா வாத்தியாருதானே… வாத்தியாரு கேள்வி கேப்பாருங்குற பயம் சாகுற வரைக்கும் இருக்கனும்… படியாத மாடு ஒழவுக்கு ஒத்து வருமா…. ” என்ற சிந்தனையோடு வீட்டுத் திண்ணையில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த மோகன் ஆசிரியர் பழைய நினைவுகளில் மூழ்கினார் ……
முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றும் ஆனந்தகுமார் தன் மனைவி சங்கீதாவுடன் காரில் வந்து தனது மகளின் திருமணவிழா அழைப்பிதழை கொடுத்துச் சென்றதிலிருந்து உற்சாகமாக காணப்பட்டார் எழுபத்தெட்டு வயது மோகன் ஆசிரியர்.
“அய்யா, எங்க கல்யாணத்த நடத்தி வச்ச மாதிரி எம் மக கல்யாணத்தயும் நீங்கதான் முன்னாடி நின்னு நடத்தி வைக்கனும்…” ஆனந்தகுமார் சொன்னது அவரது நினைவில் வந்து சென்றது.
அவ்வப்போது கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்ட ஆனந்த குமாரிடம்…
"என்னப்பா வேர்க்குதா… எனக்கு பழகிருச்சு… அம்மாடி நீ வேணா அப்புடி படில ஒக்கந்துக்கவே….”
"இல்லங்கய்யா இப்புடி திண்ணையிலயே ஒக்காந்துக்குறேன்….”
"நாங்க ரெண்டு பேருமே கிராமத்துல பொறந்து வளந்தவங்கதானே… இப்ப இந்த வாழ்க்க நீங்க கொடுத்ததுங்கய்யா…”
"நீ நல்லா படிச்ச.. ஒன்னோட தெறமைக்கு கெடச்ச வேலைய்யா…. இதுல நா எங்க….”
“எனக்கான ஆணிவேரு நீங்கதானய்யா… ” என்று சொன்னபோது மோகன் ஆசிரியர் கண்களில் குபீரென்று நீர் எட்டிப்பார்த்ததை நாற்காலியில் கிடந்த துண்டால் துடைத்துக் கொண்டார்.
"நீங்கெல்லாம் வந்துருக்கீக தண்ணி மோந்து கொடுக்கக்கூட இங்க ஆளு இல்ல… ஊருக்குள்ள இருக்கே வேலு கலப்புக்கட அங்கருந்துதான் மூனு நேரமும் சாப்பாடு வரும். சாப்புட்டுக்கிறது… எங்க அண்ணன் மருமகபுள்ள தட்டுகிட்ட கழுவி வச்சிட்டு தண்ணி மோந்து வச்சிட்டு போகும்..”
“அய்யா ஒங்க பையன் ஒருத்தரு இருந்தாரே….சொற்களை கோர்த்தாலும் ஒலியளவை குறைத்தான்.
“கெவுர்மெண்ட் வேல பாக்குறான்ல அதுனால கெவுர்மெண்ட் வேல பாக்குற பொண்ணதான் கட்டிக்குவேனு சொல்லி கட்டிக்கிட்டு இப்ப குடும்பத்தோட திருவண்ணாமலை ஆரணில இருக்கான். ஏங்கூடவே வந்துருனு எவ்ளோ சொன்னான்… எனக்குத்தான் இந்த ஓட்டு வீட்டயும் இந்த ஊரயும் விட்டுட்டுப் போக மனசில்லாம தங்கிட்டேன். ஆனா குடும்பத்தோட மாசத்துக்கு ரெண்டுதடவயாச்சும் வந்துட்டு போயிருவான். … ” சொல்லிக்கொண்டே பெருமூச்சுடன் நிமிர்ந்து உட்கார்ந்து சங்கீதாவை பார்த்தார் ..
“நா வேலக்கி போகலங்கய்யா.. பசங்கள பாத்துக்கிட்டு வீட்லதாங்கய்யா இருந்தேன்.. பசங்க பெரியாள வரவும் வீட்ல சும்மாதானே இருக்கோம்னு பார்வையற்றோர் பள்ளிக்கூடத்து புள்ளைங்களுக்கு சம்பளமில்லா டீச்சரா போய்க்கிட்டு இருக்கேன்…” மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள்.
தலையை மேலும் கீழும் அசைத்தவர் "ம்…." என்று கண்களை மூடி திறந்தார்.
“பக்கத்து ஊரு ஈப்பி ஆபிசுலதாயா ஒங்க ஊரு மலையரசன் வேல பாக்குறான். அவன் ஓங்கூடவா படிச்சான்….”
“அவன் எனக்கு பின்னாடி செட்டுங்கய்யா. அன்னைக்கு ஒருநா அவனப்பாத்தேன். அவன் சொல்லிதாங்கய்யா நா இங்க வந்தேன்….”
“ம்…. அவன்தான் இந்தப்பக்கமா வந்தா பாத்துட்டுப் போவான். யாருக்கிட்டயும் எதும் பேசுறது இல்ல நா… வெளில என்ன நடக்குதுனே தெரியாம போச்சு… மனசு ஒருமாறியா இருக்கவும் போன தடவ ஓட்டுப்போடக்கூட போகலப்பா… ஒத்தக்கையா இப்புடி ஒக்கார வச்சுட்டுப் போயிட்டாளே…. அது போகட்டும் போறப்ப அவனுக்கும் ஒன்னு வச்சுட்டு சொல்லிட்டுப் போ… அவன்கூடவே வந்தர்றேன்…..”
“இடமாற்றிக் கழித்தல்னு வாத்தியாரு சொல்லிட்டாலே ஒன்னுக்குப் போயிருவான் இந்த மலையரசன். இப்ப வாத்தியாருக்கு புடுச்ச புள்ளய மாறிட்டானே… “தனக்குள் நினைத்துக்கொண்டான்.
பேசிக்கொண்டு இருக்கும்போதே, மோகன் ஆசிரியர் காலைத்தொட்டு இருவரும் வணங்க முயன்றபோது “காலுல எதுக்குயா விழுந்துகிட்டு ..என்னோட அன்பு எப்பவும் என் புள்ளைங்களுக்கு உண்டு ” என்று கூறி வழி அனுப்பி வைத்தார்.
“ஒன்னாவது ரெண்டாவது வாத்தியாருனா கேவலமா… குடியரசு தலைவரா இருந்தா கூட அவருக்கு எழுதப் படிக்க சொல்லிக் கொடுத்ததே இந்த சின்னக்கிளாசு வாத்தியாருகதான்… சின்னக்கிளாசு வாத்தியாருகனா அரசாங்கமே எளக்காரமா பாக்குது.. வெத போட்டு மொளக்க விடுறதே நாங்கதானே.. எங்களுக்கு ஏதாச்சும் நல்லது பண்ணணும்னா அரசாங்கத்துக்கு கையே வர மாட்டேங்கிது…. சின்னக்கிளாசு வாத்தியார எல்லாரும் அவ்ளோ வெரசா மறந்துர முடியுமா… இந்த நாட்டோட ஆணிவேர நாங்கதேனே…” தன்னுள் பெருமை பேசிக்கொண்டே மேலச் சுவரில் தொங்கிய தன் மனைவி பேச்சியம்மாளின் புகைப்படத்தைப் பார்த்து மெல்லியதாய் சிரித்துக் கொண்டார்…..
மோகன் ஆசிரியர் முப்பத்தொன்பது வருடம் தொடக்கப்பள்ளியிலேயே ஆசிரியர் பணியாற்றினார். அதில் கடைசி பதினொன்று ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணி. முழு அதிகாரமும் தன் கைக்குள் வந்துவிட்டால் மாணவர்களுக்கு தேவையானதை செய்தும் சொல்லியும் கொடுக்கலாம் என்று சக ஆசிரியர்களிடம் சொல்லிக் கொள்வார். தலைமை ஆசிரியராக பணியேற்றபோது இந்த உலகமே தன் கைகளுக்குள் வந்ததாகவும் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பேச்சியம்மாளிடம் சொல்லி மகிழ்ந்தார்.
எத்தனையோ தலைமை ஆசிரியர்களிடம் ஈராசிரியர் பள்ளியில் பணிபுரிந்து இருந்தாலும் அவர் ஈசுவரி டீச்சரை மட்டுமே எல்லோரிடமும் பெருமையாக பேசுவார்.
”டீச்சர் வியாழக்கிழமை மத்தியானம் முழுசும் பசங்களுக்கு வாரவாரம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள மட்டும் வச்சு அவங்களுக்கு சிந்திக்கிறதுக்கான வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுத்தா பசங்க படிக்கிறதோட மத்த விசயத்துலயும் ஆர்வம் காட்டுவானுகதானே….”
“ஏங்க சார்.. பாடம் சொல்லித்தரலயானு அதிகாரிக கேட்டா என்ன சொல்றதாம்…”
“புத்தகத்த தாண்டியும் சொல்லிக் கொடுப்போம் டீச்சர். அன்னகாச்சும் பாட புத்தகத்த மூட்டகட்டி வைக்கட்டுமே…எப்பப்பாத்தாலும் படிபடினு சொன்னா அவனுகளுக்கு வெறுப்பு வராதா… புள்ளைகள பிரியா விட்டு படிக்கிறதே தெரியாம படிக்க வைக்கனும் டீச்சர்…”
“நல்லாதான் சார் இருக்கு….ஆனா…” அவர் பேச்சை இழுப்பதற்குள் “விடுங்க டீச்சர் பாத்துக்கலாம்..” என்று சொன்னபோது மோகன் ஆசிரியர் முகத்தில் புன்னகை அழகாய் அமர்ந்து கொண்டது…
அதேபோல்தான் வெள்ளிக்கிழமை மதியம் முழுவதும் மாணவர்களுக்கு விளையாட்டு என்று சொன்னபோதும் ஈசுவரி டீச்சர் மறுக்கவில்லை. இப்படி பல புதுமைகளை புகுத்திய போதெல்லாம் மறுக்காமல் ஒத்துக் கொண்டதால்தான் தலைமை ஆசிரியர் ஈசுவரியை எப்போதும் பெருமையாகவே பேசுவார். நாம் தலைமை ஆசிரியராக இருந்தால் இன்னும் நிறைய புதுமைகளை புகுத்தலாமே என்று எண்ணியதால்தான் அதிகாரம் தன் கைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
மாணவர்களிடமும், “இந்த அதிகாரத்தை பெற கடுமையாக உழைக்க வேண்டும். அதிகாரம் தங்கள் கைகளுக்கு கிடைத்துவிட்டால் இந்த மக்களுக்கு எவ்ளோ நல்ல காரியங்கள் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்யிங்கய்யா…”என்று அடிக்கடி சொல்லி வந்தார்…
ஆசிரியர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்தபோது தன் மகளையும் மகனையும் தாய்மொழிக்கல்வி உள்ள அரசுப்பள்ளியில் சேர்த்து பெருமைபட்டுக்கொண்டார்.
புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களை சந்தித்துவிட்டால் போதும் தனது முதல் பள்ளி அனுபவத்தை மறக்காமல் சொல்லி சிலாகித்துக்கொள்வார்.
அவரது ஊரான காண்டாம்பட்டியிலிருந்து எருக்கலாங்காடு பள்ளிக்கூடத்துக்கு முப்பத்தேழு கிலோமீட்டர் எட்டு ஆண்டுகள் சைக்கிளில்தான் சென்றார். பிறகுதான் அவருக்கு இருபது கிலோமீட்டர் அருகில் மாறுதல் கிடைத்தது.
அன்று பணியில் சேர்ந்த முதல்நாள். மாணவர்களோடு பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் பேசும் சொற்கள் பலவற்றுக்கு பொருள் புரியவில்லை. யாவும் புதிதாக இருந்ததால் ஆச்சரியமாகவே இருந்தது அவருக்கு. அன்று இரவு முழுவதும் மறுநாள் வகுப்பறை பற்றிய சிந்தனைதான். இளம் வயதிலேயே ஆசிரியர் ஆகிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் மீசையை அடிக்கடி தடவிக் கொள்வார். அவை அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைவிட்டுக்கொண்டு இருக்கும். புதிய ஆசிரியரைப் பார்த்ததில் குழந்தைகள் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.
முதல்வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தை இவ்வாறு ஆரம்பித்தார்.
“நம்ம வீட்ல வந்து உட்காரும். கருப்பா இருக்கும் .. கா… கா…னு கத்தும் அது என்ன…?
காக்காய்…. ஒருமித்த குரலில் ….
காகம் னு சொல்லுங்க…
காகவம்… என்று சொல்ல மீண்டும் மீண்டும் சொல்லச் சொன்னார். அவர்கள் சொன்னதில் திருப்தி அடையாமல் தனித்தனியே சொல்லச் சொன்னார். மாணவர்கள் பலரும் “காவம் ”என்று சற்றே திகைத்துப் போனார். ஒரு மாணவன் இடது ஆள்காட்டி விரலால் கண்களை குத்தி குத்தி அழ ஆரம்பித்து விட்டான். செய்வதறியாது திகைத்துப் போனவர் ஒருவழியாக அழுகையை நிறுத்தினார்.
அவனை அருகே அழைத்து “காகம் ” சொல்லு என்றார். எவ்வளவு சொல்லியும் அவன் “காவம்…. காவம்….”என்றே திரும்ப திரும்ப சொன்னான்.
அய்யா… இவ்வென் சின்ன ஆயம்மா மயன் .. மாணவன் ஒருவன் சொல்லி முடிப்பதற்குள் தங்கமணி ஆயா வகுப்புக்குள் வந்து சேர்ந்தாள்..
பெரிய ஆயம்மாவை சமைக்கச் சொல்லிவிட்டு தங்கமணி ஆயாவை அவனுக்கு காகம் என்ற வார்த்தையை மரத்தடி ஒன்றில் உட்கார்ந்து சொல்லித்தரும்படி சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியிலிருந்து அழுகைச் சத்தம் கேட்கவும் அமைதியானது வகுப்பறை.
“சொல்லுடா காவம்… காவம்….”என்று அதட்டிக்கொண்டு இருந்தாள். தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டார் மோகன் ஆசிரியர். அவன் எதுவும் சொல்லாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தான். எலுமிச்சம் பழத்தை எம்பிளிச்சம் பலம் என்றும் திங்கிற பூந்தியை பூவந்தி என்றும் அவ்வூர் மக்கள் சொன்னதையும் தாம் அதை மாற்றி அமைத்ததாகவும் பலரிடமும் சொல்லி பெருமைபட்டுக் கொள்வார். எப்போது காகத்தை பார்த்தாலும் தனக்குள் காவம் என்று சொல்லி ஆனந்தப்படுவார்.
தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காகவே பல அரிய நூல்களை வாங்கிவந்து வகுப்பறையில் மாணவர்களை வாசிக்கச் சொல்லுவார்.
அன்றொருநாள், “இந்தப் புத்தகத்தப்பத்தி இவனுகளுக்கு என்ன சார் தெரியும். வந்தமா ஏதோ சொல்லிக் கொடுத்தமானு போறத விட்டுட்டு ஒலகத்தையே மாத்தப்போறதா நெனச்சு ரொம்ப பண்ணாதீக சார்…”என்று தலைமை ஆசிரியர் ஞானசெல்வம் சொன்னதுதான் தாமதம் ….
“அவனுக்கு புரியாட்டியும் பரவாயில்ல சார்.. வாசிக்கிற பழக்கத்தயாச்சும் கொண்டு வருவோம்…..” என்றதும் அவர் முகம் சுருங்கி போயிருந்தது.
ஒவ்வொரு நாளும் நாட்காட்டியை புரட்டிப்புரட்டி பார்த்துக் கொண்டார். மலையரசனோட சீக்கிரமா மண்டபத்துக்கு போயிரனும். வெளியில போயி எவ்ளோ காலமாச்சு. வெளியுலகமே தெரியாம முடங்கிப் போயிட்டேனே.. மத்தவங்கள எனக்கு நெனவு இல்லாட்டியும் இந்த மோகன் வாத்தியார ஒரு பயலும் மறந்துருக் மாட்டானுக…எவ்ளோ வெசயம் சொல்லிக் கொடுத்துருப்பேன். ஏங்கிட்ட அடி வாங்காம ஒரு பயலும் தப்பிச்சுருக்க மாட்டானுக… கம்ப எடுத்தாதானே பல நேரம் சொல்லுப்பேச்சு கேட்குறானுக.. கொஞ்சிக்கிட்டே இருந்தா நம்ம தலயில அரப்பு தேச்சுருவானுக… தனக்குள் பேசிக் கொண்டார்.
ஒருநாள் முட்டைக்கடை கோவிந்தன், “சார் ஒங்களத்தான் பாக்க வந்தேன். நல்லா சொல்லித்தர்றதா எம்மக வேணி சொன்னா… படிக்கலனா கண்ணு காதுல பட்ராம நாலுசாத்து சாத்திருங்க சார்…. ”
”மக நல்லாதான் படிக்கிது.. ஒம்மயன்தான் நீ விக்கிறத வாங்கிக்கிட்டு இருக்கான். ” என்று சொல்லி சிரித்துக்கொண்டார்.
“அவனுக்கு நாலெழுத்து படிக்கத் தெரிஞ்சா போதும் சார்… அவனுக்கென்ன ஆம்பளப் புள்ளைக்கு கடகண்ணில வேலக்கி சேந்தாவது பொழச்சுக்குவான்….”
“அப்புடிச் சொல்லாதீக அவனோட பேச்சு நடையப்பாத்தா பின்னாடி அரசியல்வாதியா வந்தாலும் வந்துருவான்க” அவர் சொன்னபோது கண்கலங்கி போனார் கோவிந்தன். கோவிந்தனோடு பேசியது ஏதோ நேற்று பேசியது போல் இருந்தது.
திருமண அழைப்பிதழை பார்த்ததிலிருந்து அவருக்குள் பழைய நினைவுகள் யாவும் நிழலாடிக்கொண்டிருந்தது.
திருமண அழைப்பிதழை புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தார். சிறப்பு விருந்தினர் இடத்தில் மாண்புமிகு திரு. கோ.சரவணன் அவர்கள் போக்குவரத்து துறை அமைச்சர் என்றிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அதற்கு மேல் வேறு எந்தப் பெயரையும் பார்க்கவில்லை. அவர் மனைவி இறந்து பதினைந்து வருடங்களாக வெளி உலகத்தை பார்க்க விரும்பாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தவருக்கு அரசியல் மாற்றங்கள் புதிதாய் இருந்தது.
“இவன் கோயிந்தன் மயனா இருக்குமோ… “ஒருமுறை பிரபல கட்சி ஒன்றில் கவுன்சிலர் பதவிக்கு சீட்டு வாங்கி தோற்றுப் போனதாக சொல்லி அவர் முன்னால் வந்து தலையை சொறிந்தது அவரது நினைவுக்கு வந்தது.
அவ கூட வாழ்ந்த வாழ்க்கை சும்மாவா.. எம்மனசு கோணாம நடந்துகிட்டவள அவ்ளோ சீக்கிரம் ஒதிக்கி வச்சுற முடியுமா.. போகும் போதே என்னயவும் இழுத்துக்கிட்டு போயிருந்தா நிம்மதியா நானும் போயி சேந்துருப்பேன். வழிந்த கண்ணீரை வலது கையால் துடைத்து தன்னையே சமாதானம் செய்து கொண்டார்.
நான்கு மணி நேர பயணத்திற்குப் பிறகு மலையரசனோடு திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். மண்டப வாசலில் மோகன் ஆசிரியரை வரவேற்று ஒரே ஒரு பதாகையை தவிர வேறு எந்தப் பதாகையும் வைக்கப்படவில்லை. பதாகையை பார்த்ததும் கண்கலங்கிய அவரது கைகளை இறுக பற்றிக் கொண்டார் மலையரசன்.
மோகன் ஆசிரியரின் பணிநிறை விழாவுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் வாழ்த்துப் பதாகை வைக்க முயற்சித்தபோது, பதாகை வைக்கிற காசுக்கு பிள்ளைகளுக்கு பேனா பென்சில் வாங்கிக் கொடுத்தாகூட உதவியா இருக்குமுனு தான் சொன்னதும் அவர்கள் வாங்கிக் கொடுத்ததோடு புதிய கணினி ஒன்றையும் வாங்கிக் கொடுத்தது அவரது நினைவில் வந்து சென்றது..
மோகன் ஆசிரியர் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டியதும் ஆசி பெற கீழே குனிந்தவர்களை அப்பா அம்மா கால்ல தவிர வேறு யாரு கால்லயும் விழக் கூடாதுயா.. என்னோட ஆசி எப்போதும் உண்டு என அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே ஆனந்தகுமாரும் அவரது மனைவி மனைவியும் அவரது காலை தொட்டு வணங்கி “எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த நீங்க எங்க அப்பா அம்மாவுக்கு சமம்தானங்கய்யா ” என்றபோது அனைவரையும் தனது கைகளால் அரவணைத்து கண்களை மெதுவாக மூடி திறந்தபோது மகிழ்ச்சியில் அவரது முகம் சிவந்திருந்தது….
விழா அரங்கில் முதன்மை நாற்காலியில் மோகன் ஆசிரியர் அமர அருகிலேயே மணமக்களும் அமர்ந்தனர். அப்போது பத்து பதினைந்து பேர் கட்சி கறை கட்டிய வேட்டி அணிந்தபடி மண்டபத்துக்குள் வர கீழே உட்கார்ந்தவர்கள் எழுந்து திரும்பி பார்த்தனர். கையில் சிறிய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு பேண்ட் சட்டை அணிந்த ஒருவர் வியர்வை துளிகளை முத்தமிட்டபடி ஓடி வந்து கொண்டு இருந்ததையும் மேடையில் இருந்தபடி கண்ணுற்றார்.
“உனக்கு பேச்சு தெறம இருக்குடா வக்கீலுக்கு படி இல்லனா அரசியலுக்கு வந்து நல்லது பண்ணுடானு எங்க சாருதான் சொன்னாரு. எங்க சாரு ஆசிர்வாதத்துல இன்னைக்கி நல்லா இருக்கேன். மணமக்களும் நல்லா இருப்பீங்க ” என்று அமைச்சர் சரவணன் பேசியபோது கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது.
மாவட்ட ஆட்சித்தலைவர் இப்போது வாழ்த்திப் பேசுவார்கள் என்று தொகுப்பளர் சொன்னபோது மோகன் ஆசிரியர் அரங்கத்தை சுற்றும்முற்றும் பார்த்தார். வேர்க்க கைப்பையோடு ஓடிவந்தவர் பேச ஆரம்பித்தார்.
“மணமக்களின் திருமணம் எங்கள் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில் நடந்திருப்பது மணமக்கள் பெற்ற புண்ணியம். ஆசிரியர் அவர்கள் லெக்கணாப்பட்டியில் பணியாற்றிய போது நான் அவரிடம் முதல்வகுப்பும் மூன்றாம் வகுப்பும் படித்தேன். அவரிடம் பரிசு வாங்கிய மாணவர்களில் நான்தான் அதிகம் வாங்கினேன். கொஞ்சமா அடி வாங்குனதும் நான்தான். மிகவும் கண்டிப்பு மிக்கவர் என்றாலும் அதிகமாக இரக்க குணம் உடையவர். மாணவர்களிலய யாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் தனது தனது டிவியஸ் பிப்டியில் உட்கார வச்சு அருகில் இருக்கும் கடம்பூர் ஆசுபத்திரியில் சேர்த்து சிகிச்சை செய்து அழைத்து வருவார். எங்க சாரு மேல டாக்டர் நர்ஸ் எல்லாம் அவ்ளோ மரியாதையா இருப்பாங்க. என் வலது கால் கட்டைவிரல்ல புண்ணு வந்து சீள் புடுச்ச போது சுத்தம் பண்ணி மருந்து போட்டத என்னால மறக்க முடியாது “என்று கண் கலங்கினார் மாவட்ட ஆட்சித்தலைவர் சுதாகர்.
நிறைவாக மோகன் ஆசிரியர் இப்படி பேசத் தொடங்கினார்…
“என் பேரப்புள்ளைங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் புருஞ்சுக்கிட்டு வாழுங்க. விட்டுக் கொடுத்து வாழுங்க. ஒருத்தரே விட்டுக் கொடுத்தா நல்லா இருக்காது. ரொம்ப காலமா வெளி ஒலகத்த பாக்காம வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடந்தேனா.. இப்ப கொஞ்சநாளா ஒலகத்த பாக்க ஆரம்பிச்சுருக்கேன். எல்லாமே புதுசா தெரியுது. நா என்ன ஆசப்பட்டனோ : எத வெதச்சேனோ அதுல நெறய மொளக்கலயேனு வருத்தமா இருக்கு… ஆனந்தகுமாரு மலயரசன மாதிரி புள்ளைகள பாக்கும்போது மனசுக்கு ஓரளவு ஆறுதலா இருக்கு. வல்லங்காடு கிராமத்துல வேல பாத்தப்ப கதிரேசன் படிச்சானாம். உள்ள வந்ததும் என்னப் பாத்துட்டு கட்டிப்புடுச்சு அழுகுறான். வெவசாயம் பாக்குறதா பெருமையா சொல்றான். கடல தொவர வெளஞ்ச மண்ணு இப்ப பிளாட்டா மாறிப்போச்சு. என் பேரப்புள்ளைங்க நீங்களாம் எப்புடி பொழக்கப் போறீகளோ….”
“நம்ம நாடு என்னமோ டிஜிட்டல் ஆயிருச்சாம்ல. ஆனா சோத்துக்கு மண்ண நோண்டிதானே ஆகனும். இன்னொரு வருத்தமான சேதி. நா எதயும் அப்பலருந்து ஒளிச்சு மறச்சு பேச மாட்டேனு என் புள்ளைங்களுக்கு தெரியும். எம்புள்ளைங்க ஒழுக்கமானவங்களாவும் நேர்மையானவங்களாவும் இருக்கனும்."
அப்போது அனைவரும் வாயை குறுங்கோணத்தில் திறந்தபடி மேடையைப் பார்த்தனர்.
“போக்குவரத்து துறை இன்னக்கி வரைக்கும் நட்டத்துல ஓடுது. ஓட்டுப்போட்ட மக்களோட வாழ்க்க இன்னமும் நடுத்தெருவுலதான் நிக்கிது. ஆனா ஒன்னோட வாழ்க்க இந்த அளவுக்கு வசதியா ஒசந்துருக்கே எப்புடி. அன்னைக்கி வேட்டி ஒன்னு எடுக்குறதுக்கு டவுனுக்கு வந்துட்டு டவுனு பஸ்ல போகும் போது சோ….னு மழ கொட்டுது. ஒரு ஆளு பஸ்சுக்குள்ளயே கொட புடிக்கிறானா பாரு…”
நீங்களாம் நொழயும் போது ஒரு கைப்பைய கொண்டுக்கிட்டு ஓடிவரும்போது நீ அமைச்சருக்கு பிஏ னுதான் நா நெனச்சேன். ஆனா நீ கலைக்டர் வேலய பாக்காம பிஏ வேலயத்தான் பாக்குறாபோல. ஒன்ன பாத்ததுமே எல்லாரும் நக்கலா சிரிக்கிறத நானே பாத்தேனே. நீ அரசு அதிகாரி எதுக்கு கூழக்கும்புடு போடுற. ஒனக்கு பிஏவா இருக்குறவரு கம்பீரமா வர்றாறே….”
“நா இதயா ஒங்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். என்னைக்கி தப்பு செஞ்சாலும் வாத்தியாரு கேள்வி கேட்பாருங்குற பயம் எல்லாருக்கிட்டயும் இருக்கனும். நா எங்க குழந்தைவேலு வாத்தியார நெனச்சாலே பயப்படுறேனே. எந்த வாத்தியாரு எதுத்து கேட்கலனாலும் இந்த மோகன் வாத்தியாரு கேள்வி கேட்பான்…. கொஞ்ச நேரம் மவுனமாயிருந்தார். சரவணன் முகத்திலும் சுதாகர் முகத்திலும் எண்ணெய் வழிந்து கொண்டு இருந்தது. கைக்குட்டையால் எவ்வளவு துடைத்தும் மாறவில்லை. மண்டபத்தில் சலசலப்பும் ஆனந்தகுமார் முகத்தில் ஒருவித படபடப்பும் குடி கொண்டிருந்தது.
“எம்புள்ளைங்க தப்ப திருத்திக்கிட்டு மாத்திக் காட்டுவீங்கனு நம்புறய்யா.” கனத்த குரலோடு இருக்கையில் அமரச் சென்றதுவரை நினைத்துப் பார்த்தபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு அந்த மாலை வேளையில் வீதியைப் பார்த்தார்.
குழந்தைகள் சிலர் ஏழெட்டு புத்தகப் பைகளை ஒரு குச்சியில் தொட்டில் போல் தொங்க விட்டபடி ஆளுக்கொரு முனையை இருவர் பிடித்துக்கொள்ள ஆட்டிக்கொண்டே வீடுகளுக்கு சென்றுகொண்டு இருந்தனர்.
பின்னுரை.
அய்க்கண் எழுதிய ‘மாண்புமிகு மாணவன்’ என்ற கதை இப்பகுதியில் முன்பே வெளிவந்துள்ளது. சுட்டி
https://engalblog.blogspot.com/2023/12/blog-post_09.html
தற்போது வாசித்த இந்தக்கதையும் சுட்டியில் உள்ள கதையின் கருத்தில் அமைந்த ஒன்று. அதில் மாணிக்கம் என்ற ஒய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் கதை. இதில் மோகன் என்ற துவக்கப்பள்ளி ஆசிரியர் கதை.
இருவரும் ஒரே போல திருமணத்திற்கு தலைமை தாங்கி தாலி எடுத்துக்கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றினர்.
இப்படி ஒரே கருத்தில் இவருடைய சிறுகதையும் அமைந்தது தற்செயலா என்று தெரியவில்லை.
இருவருடைய கதை சொல்லும் வகையில் சொல்லும் முறை வித்தியாசம், உரைநடை வித்தியாசம், பேச்சு வழக்கு வித்தியாசம் என்று பல வித்தியாசங்கள் உள்ளன. மாணிக்கம் சார் நேர்முகமாக கதையை சொல்கிறார். மோகன் வாத்தியாரின் கதையை மூன்றாம் மனிதர் பார்வையில் ஆசிரியர் அமைக்கிறார்.
ஆனால் இரண்டு வாத்தியார்களும் ஒரு குணத்தில் ஒன்றாக உள்ளனர். அது நினைத்ததை பட்டென்று சொல்லி விடுவது, , மாணவர்களை திருத்த தண்டிப்பது. மற்றும் சுய மரியாதை. இக்குணம் எனக்கும் உண்டு. நானும் 3 மாதம் பள்ளியில் வாத்தியாராக இருந்தவன் தான்.
ஆனால் இரண்டு கதைகளும் இக்கால கட்டத்திற்கு பொருந்தாது என்பது எனது கருத்து. தற்போது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பணிய வேண்டிய நிலை. ஆசிரியரை மதிக்கும் மாணவர்கள் மிக மிகக் குறைவு.
இன்று திருவாதிரைத் திரு நாள்.
பதிலளிநீக்குசிவபெருமானின் அன்பும் அருளும் அனைவருக்கும் வாய்த்திட அவன் பாதக் கமலங்களில் அடி பணிந்து வேண்டுகிறேன்.
வாங்க ஜீவி சார்... காலை வணக்கம். திருவாதிரை தின வாழ்த்துகள்.
நீக்குவாங்க ஜீவி சார். நான் இன்றும் நாளை காலை வரையிலும் திருமலையில் இருந்திருக்கணும். மூன்று முறை சுவர்கவாசல் தரிசனம் போதும் என நினைத்து வந்துவிட்டேன்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்கு__/\__
நீக்குநாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரத் தொடர் பதிவுகளை அழகாகப் பதிவிடத் தொடங்கியிருக்கும் நெல்லைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவரவேற்போம்.
நீக்குமிக்க நன்றி ஜீவி சார். நல்லா எழுதணுமே என்ற பயத்துடன் தொடங்கியிருக்கிறேன்.
நீக்குஓம் நமோ நாராயணாய!
பதிலளிநீக்குஅருமையான துவக்கம், நெல்லைஜி!
//நாராயணனே முழுமுதற்கடவுள்// மனிதர்களாய்ப்பிறந்த அனைவருக்குமே, எந்த மதம், மொழி இனத்தவராயினும், நாராயணனே முழு முதற்கடவுள் என்பது, பெயரிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது (By definition). 'நர' என்றால் மனிதன்; 'அயன' என்றால் பாதை, இலக்கு (இரண்டுமே). அதாவது, சம்ஸ்க்ருத மொழியில் சொல்லும்போது அது 'நாராயண' என்று ஒலிக்கின்றது.
"நாராயணா என்னும் பாராயணம்... அருள் யாவும் தருகின்ற தேவாம்ருதம்...."
நீக்குவாங்க TVM...
வாங்க திருவாழிமார்பன். நல்ல விளக்கம். மனிதன் மேற்கொள்ள வேண்டிய பாதை, இலக்கைப் பற்றிச் சொல்லியது நன்று.
நீக்குஆழ்வார்களுக்கான முன்னுரை தெளிவாக இருக்கிறது. பிரபந்தம் குறித்து நெல்லைவரும் வாரங்களில் நன்றாகச் சொல்வார், விளக்குவார், வாசிக்கலாம் என வாசகர்களுக்கு உற்சாகம் தருகிறது
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் சார். எளிமையா சுருக்கமா எழுதணும் என எண்ணுகிறேன். எப்படி வரும் எனத் தெரியவில்லை. வாழ்த்துக்கு நன்றி.
நீக்கு//எளிமையா சுருக்கமா எழுதணும் என எண்ணுகிறேன். // சரியான அணுகுமுறை.
நீக்குநேற்று இரவு திருப்பதியிலிருந்து வந்து சேர்ந்தேன். ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காத்தாலும், நிறைய நடக்கவேண்டியிருந்ததாலும், அது தவிர என்னுடைய தினக் கடமையான 10,000 அடிகள் நடக்க வேண்டியிருந்ததாலும் (மொபைல் இல்லாமல் நடந்த மைல்கள் கணக்கில் சேராது) ரொம்ப அசதி. வேறு வழியில்லாமல் இப்போது 6 1/2 க்கு எழுந்தேன்.
பதிலளிநீக்குகதையைப் படிக்கவில்லை. ஆனால் திருப்பதி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய அறிவியல் ஆசிரியர் சோலச்சி பற்றிய பகுதியைப் படித்தேன். எப்படிப்பட்ட ஆசிரியர் ! இதைவிட நல்ல செயல் செய்துவிட முடியுமா என்ற ஆச்சர்யம் வருகிறது. சொலச்சி ஆசிரியர் என் மனதில் இடம் பெற்றுவிட்டார்.
வாங்க நெல்லை.. வணக்கம்.
நீக்குசோலச்சிக்கு அதிக வயது இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
சொல்ல வந்ததை ஆணித்தரமாக அடித்து சொல்வதில் நெல்லைக்கு ஈடு இணை இல்லை. சனி ஒரு நிரந்தர ஆன்மிக பதிவைக் கொண்டு வருவது அறிந்து மகிழ்ச்சி. ஆனாலும் அப்பாதுரை சார் பதிவுகள் போன்று ஒரு நகைச்சுவை, மொழி, இடை இடையே சிறு துணுக்குகள் என்பவை இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆசிரியர் குழுவின் பெயர்கள் லிஸ்டில் அவருடைய பெயரையும் சேர்த்து அவருக்கும் முழு ஆசிரியர் பொறுப்பு தருமாறு ஒரு வேண்டுகோள் வெடி வைக்கிறேன்.
பதிலளிநீக்குவேளுக்குடி, நகை முகுந்தன் வரிசையில் மற்றுமோர் தாசன். வாழ்க.
Jayakumar
வேளுக்குடி, நாகை முகுந்தனா? என்ன சார் இது? நியாயமா?
நீக்குநெல்லை, முன்னுரை நல்லாருக்கு.
பதிலளிநீக்குகீதா
சோலச்சியை புதுக்கோட்டையில் சந்தித்த நினைவு வருது.
பதிலளிநீக்குஅவருடைய வாழ்க்கைக்கு ஒளி ஏற்றிய அந்த ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் வார்த்தைகள் இல்லை.
நம்ம கில்லர்ஜி, பரிவை சே குமார் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அந்த வட்டார வழக்கும், 'மயன்' மகனைச் சொல்வது...அந்த வழக்கில் எழுதியிருக்கிறார்.
கீதா
சோலச்சியின் கதை நல்லாருக்கு. ஜெ கே அண்ணா சொல்லியிருப்பது போல் அய்க்கண் அவர்களின் மாண்புமிகு மாணவன் கதையும் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குகீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குபுதிய ஆன்மீகத் தொடர்..... பாராட்டுகளும் வாழ்த்துகளும் நெல்லைத் தமிழன்.
நண்பர் சோலச்சி அவர்களின் சிறுகதை இங்கே பார்த்து மகிழ்ச்சி..
நாலாயிர திவ்ய பிரபந்தம்.. த்வக்கமே சிறப்பாக இருக்கிறது. ஆசிரியர் எப்போதும் ஆசிரியர்தான் என்று கூறிய கதை. எளிய,வட்டார வழக்கில் சொல்லப்பட்டிருப்பது ரசிக்கும்படி உள்ளது.
பதிலளிநீக்குத்வக்கமே - துவக்கமே
பதிலளிநீக்கு