31.1.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் - முன்னுரை - நான் படிச்ச கதை - JKC

 

                             நாலாயிர திவ்யப் பிரபந்தம் வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

முன்னுரை பகுதி 5

குரு பரம்பரையில் பலருக்கு சிறப்புப் பட்டப் பெயர்களே உள்ளன. அவர்களது உண்மையான (பிறந்தபோது வைத்த) பெயர் தெரிவதில்லை. உதாரணமாக வடக்குத் திருவீதிப்பிள்ளை, நடுவில் திருவீதிப் பிள்ளை, நாலூர்ப்பிள்ளை என்றெல்லாம் சீடர்கள் பெயர்கள் வரும். திருவரங்கத்தின் வடக்குத் திருவீதியில் இருந்தவர் வடக்குத் திருவீதிப்பிள்ளைஎனவும், நடுப்பகுதியில் இருந்த திருவீதியில் இருந்தவர் நடுவில் திருவீதிப் பிள்ளை’, நாலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் நாலூர்ப்பிள்ளை என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இவர்கள் வரலாறு மிகவும் சுவையானது. ஒரு நாள் பிராப்தம் இருந்தால் இங்கு குரு பரம்பரை வரலாற்றை எழுதுகிறேன். 

நம்பிள்ளையின் அணுக்கச் சீடர்களில் வடக்குத் திருவீதிப்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, ஈயுண்ணி மாதவர் (சிறியாழ்வான் அப்பிள்ளை என்ற பெயரும் உண்டு. ஈயுண்ணி என்பது அவர் பிறந்த ஊர். அனேகமாக மலையாள நாடாக இருக்கும்) மற்றும் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் (இவர் கூரத்தாழ்வானின் இரண்டாவது புத்திரரான ஸ்ரீராமப்பிள்ளை என்ற வேதவியாச பட்டரின் திருக்குமாரர். கூரத்தாழ்வானின் முதல் புத்திரர் பராசர பட்டர்)  ஆகியோர் முக்கியமானவர்கள். 

தன்னுடைய அறிவு, தெளிவு, மற்றும் மேதமையால், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளையின் அன்புக்குப் பாத்திரமானர்.  அதனால் பெரியவாச்சான் பிள்ளையைக் கொண்டு, ஒன்பதினாயிரத்தை சில அரும்பொருள்கள் சேர்த்து உபதேசித்து, திருவாய்மொழிக்கு இன்னும் பெரிய விளக்க உரை செய்யப்பண்ணினார்.  பெரியவாச்சான் பிள்ளை திருவாய்மொழிக்கு விளக்க உரையாக  எழுதியது இருபத்திநாலாயிரப்படி வியாக்கியானம். 

இதற்கு நடுவில், ‘நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்’, நம்பிள்ளை காலக்ஷேபம் கேட்டு, அன்றன்றைக்கு இரவே நம்பிள்ளை சொன்னதை அப்படியே ஏடுபடுத்தினார். இப்படி நம்பிள்ளை காலக்ஷேபம் முழுமையாக அவர் ஏடுபடுத்தியது ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் படி அளவு விஸ்தாரமாக இருந்தது.  இது, ஒருவர் பேசியதை அப்படியே ஏடுபடுத்துவது போன்றது. இதனை எடுத்துக்கொண்டு போய், நம்பிள்ளையிடம் அவர் காட்டினார். நம்பிள்ளை இசைவு பெறாமல் எழுதப்பட்டதாலும், அவ்வாறு ரொம்ப விஸ்தாரமாக எழுதியது சரியில்லை என்று அவர் எண்ணியதாலும், நம்பிள்ளை அந்த ஒரு லட்சம் ஓலைச்சுவடிகள் இருந்த கட்டை நீர் சொரிந்து கரையானுக்கு இரையாக்கிவிட்டார். (படிக்கவே நமக்கு திக்குனு இருக்கும். ஆசார்ய, சீட பக்தி அந்தக் காலத்தில் இந்த அளவு இருந்தது.) 

பிறிதொரு சமயத்தில், வடக்குத் திருவீதிப்பிள்ளை, நம்பிள்ளை வழங்கிய விரிவான வியாக்கியானம் காற்றில் கரைந்து போய்விடக் கூடாது என்று நினைத்து, தன் இயற்கையான நினைவாற்றலால் இரவு விழித்திருந்து பட்டோலைப்படுத்தினார். இது முப்பத்தியாறாயிரம் படிகள் அளவுடையது. இதனை நம்பிள்ளை காணும் சமயமும் வாய்த்தது.  நம்பிள்ளை வாசித்தபோது மிக அலங்காரமாக, பொருட்சுவை குறையாமல் அதே சமயம் அர்த்தம் மிகாமலும் இருந்ததைக் கண்டார்.  நம்பெருமாள் (திருவரங்க உற்சவர் திருநாமம் இது. இந்தப் பெயர் வந்ததும் ஒரு சுவையான கதை) திருவருளால், நம்பிள்ளையின் சீடர் ஈயுண்ணி மாதவருக்குச் சென்று, பிறகு அவர் மகன் பத்மநாபருக்குச் சென்று அவருடைய சீடர் நாலூர்ப்பிள்ளை என்ற கோலவராஹ நாயனாருக்குச் சென்று, பிறகு அவரது குமாரர் நாலூராச்சான் பிள்ளை என்ற தேவப்பெருமாளுக்குச் சென்றது. 

முப்பத்தியாறாயிரம் படிகள் உடைய ஓலைச்சுவடிக் கட்டு சென்றது என்பதற்கு அர்த்தம், ஓராண் வழியாக ஒருவர், அவரது சீடருக்கு விரிவாகப் பொருள் உரைத்து பிறகு அவருடைய ஒரே சீடருக்குத்தான் பொருள் விளக்கி ஓலைச்சுவடியைக் கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் பயணித்தது. காஞ்சி தேவப்பெருமாள் அருளால்,  நாலூராச்சான் பிள்ளையிடமிருந்து திருமலையாழ்வார் என்ற பெயருடைய திருவாய்மொழிப்பிள்ளைக்கு இந்த ஓலைச்சுவடிக் கட்டு வந்து சேர்ந்தது.  (இது புத்தகப் பயணம் அல்ல. காஞ்சீபுரத்திலிருந்து மேல்கோட்டை சென்று நாலூராச்சான் பிள்ளையிடம் பல மாதங்கள் காலக்ஷேபம் கேட்டு, முடிவில் ஸ்ரீகோசத்தை-புத்தகம் என்று சொல்வதில்லை, திருமலையாழ்வாருக்குக் கொடுத்தார்.  இது பிறகு திருவாய்மொழிப்பிள்ளையின் சீடரான ஸ்வாமி மணவாள மாமுனிக்கு வந்து சேர்ந்தது.  இந்த முப்பத்தியாறாயிரப் படியையே ஈடு என்று சொல்கின்றனர். )

ஆழ்வார் திருநகரியில் உள்ள திருவாய்மொழிப்பிள்ளையின் திருமாளிகை. இவர்தான் ஸ்வாமி மணவாள மாமுனியின் குரு.

இதற்கிடையில், அதாவது பெரியவாச்சான் பிள்ளை காலத்தில், அவருக்கு அணுக்கத் தொண்டராக இருந்தவர் அழகிய மணவாளர் என்ற பெயருடையவர். இவருக்கு கல்வி அறிவு கிடையாது. ஒரு நாள் பெரியவாச்சான் பிள்ளையின் சீடர்கள், இவரை கேலி பேசவும், அவர்கள் தன்னைக் கிண்டல் செய்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் இருந்தார் இந்த அழகிய மணவாளர். இதை அறிந்து, பெரியவாச்சான் பிள்ளை, இவருக்கு சகல சாஸ்திரங்களையும் கற்றுக்கொடுத்தார். அதனால் பெற்ற  புலமையினால் அழகிய மணவாளர், வாதிகேஸரி அழகிய மணவாளச் சீயர் என்ற பெயர் பெற்றார். பெரியவாச்சான் பிள்ளையின் காலத்திற்குப் பிறகு, அவரது குமாரரான நாயனாராச்சான் பிள்ளையிடம் திருவாய்மொழி வியாக்கியானங்களை வாதிகேசரி மணவாளச் சீயர் கற்றார்.  பிறகு, திருவாய்மொழிக்கு பதவுரையாக அழகிய மணவாளர் இயற்றியது பன்னீராயிரப்படி என்று அழைக்கப்படுகிறது 

திருவாய்மொழிக்கு விளக்க உரையாக அமைந்தவை, 

ஆறாயிரப்படி திருக்குருகைப் பிரான் பிள்ளான் இராமானுசர் காலம்

ஒன்பதினாயிரப்படி நஞ்சீயர் பராசர பட்டரின் சீடர்

இருபத்தினாலாயிரப்படி பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளையின் சீடர்

முப்பத்தியாறாயிரப்படி வடக்குத் திருவீதிப்பிள்ளை (1167-1264) - நம்பிள்ளையின் சீடர்

பன்னீராயிறப்படி அழகிய மணவாள சீயர் பெரியவாச்சான் பிள்ளையின் சீடர்

பெரியவாச்சான் பிள்ளையினால், மற்ற திவ்யப்பிரபந்தங்களுக்கும் வியாக்யானங்கள் எழுதப்பட்டன. அதில் பெரியாழ்வார் திருமொழியின் சில பகுதிகள் அழிந்துபட்டன என்றும், அவற்றிர்க்கு ஸ்வாமி மணவாள மாமுனிகள் வியாக்யானம் எழுதினார் என்றும் சொல்வர். 

இதில் முப்பத்தியாறாயிரப்படி, ஈடு என்ற பெயர் பெற்றது எனப் பார்த்தோம். இதனை பிரச்சாரப்படுத்தியவர் ஸ்வாமி மணவாளமாமுனிகள். கிபி 1432ல் இருந்து ஈடு பிரச்சாரத்தில் இருந்து வருகிறது. (அதுவரை ஓராண்வழியாகவே மற்றவர்கள் பார்வைக்குக் கிடைக்காமல் இருந்தது)

ஆழ்வார் திருநகரியில், ஆதிநாதர் கோயிலில், நம்மாழ்வார் அமர்ந்திருந்த திருப்புளி மரம் இருக்கும் இடத்திற்குப் பின்னால் உள்ள மண்டபத்தில்தான் ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஈடு காலக்ஷேபம் செய்தார் (அதாவது திருவாய்மொழி பேருரை, பல மாதங்களுக்கு முப்பத்தியாறாயிரப்படியை வைத்துக்கொண்டு நிகழ்த்தினார்) 

தொடர்வோம்...

----------------------------------------------------------------------------------------------------------------------------

நான் படிச்ச கதை - JKC

அரசன் ஆசார்யன் ஆன கதை

6.2 விநோத ரச மஞ்சரி

ஸ்ரீ ஆளவந்தார் பிதுரார்ஜித சொத்தை கைப்பற்றுவது 2/2

அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள் இயற்றிய விநோதரச மஞ்சரியில் இருந்து ஒரு கதை.

நன்றி tamil digital library.  
முதற்பகுதி சுருக்கம்.  

ஈஸ்வரமுனியின் மகனும், நாதமுனியின் பெயரனும் ஆன யமுனாசிரியன், பாஷியார் என்ற குருவிடம் பாடம் படித்து  வந்தார். அந்த ராஜ்ஜியத்தின் அரசனின் அவையில் வித்துவஜன கோலாகலன் என்றும் “ஆகி ஆள்வான்” என்றும் அறியப்பட்ட ஒரு மஹா பண்டிதன் இருந்தார். அவர் மற்ற பண்டிதர்களை எல்லாம் வாதில் வென்று தோற்றவர்கள்  அவருக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று விதித்திருந்தார். சிறு பையனான யமுனாரியார் தனது ஆசிரியரை கப்பம் கட்ட வேண்டாம் என்று சொல்லி, வித்துவ ஜன கோலாகலனை மூன்று கேள்விகளால் பதில் கூற முடியாமல் செய்து, வாதில் வென்று,  அரசனுடைய பாதி ராஜ்யத்தையும் பெற்று ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெயருடன் ஆட்சி செய்து வந்தார்.

இவர் தாம் ஸ்ரீ ராமானுஜரை வைணவத்துறை தலைவராக்கியவர்.  

ஸ்ரீ ஆளவந்தார் பிதுரார்ஜித சொத்தைக் கைப்பற்றுவது 2/2

ஸ்ரீ ஆளவந்தார் அந்த இராச்சியத்தை வகித்து நெடுநாள் அரசாண்டு வருகையில், இவருக்கு முன்னடியார் பின்னடியார் யாவருக்கும் பரமாசாரியாகிய ஸ்ரீமந்நாத முனிகள் நியமனப்படி, ஸ்ரீராமமிசிரர் என்னும் மணக்கால்நம்பி வந்து, ஆளவந்தாருக்கு மிக விருப்பமாயும் ஞானசாதனமாயும் இருக்கிற தூதுளங்கீரை எவ்விடத்தில் இருந்தாலும் தேடிக் கொய்து கொடுத்துக்கொண்டிருந்தார். அதை மடைப்பள்ளியில் தளிகை செய்பவர்கள் வாங்கித் துவையலரைத்துப் பரிமாற, ஆளவந்தார் இஷ்டமாய்ப் புசித்து வந்தார். இப்படி ஐந்தாறு மாதம் நடந்தும், அவர் ஏதென்று கேளாமையால், பிறகு ஒரு நாள் அந்த மணக்கால் நம்பி அதைக்கொண்டு வந்து கொடாதிருந்தார். அன்று ஆளவந்தார், 'தூதுளங்கீரைத் துவையல் ஏன் பரிமாறவில்லை?' என்றார். 'இன்றைக்கு அந்த வைஷ்ணவர் கொண்டு வந்து கொடுக்கவில்லை,' என்று பாகஞ்செய்வோர் சொல்ல, 'ஓ!ஓ! இவர் ஆரோ? ஏது நிமித்தமோ! தெரியவில்லை. அபசாரம் வந்ததே!' என்று அநுதாபப்பட்டு, 'நாளைக்கு வந்தால் நம்மைக்கண்டு பேசிப்போகச் சொல்லுங்கள்,' என்று நியமித்தார்.

மற்றைநாள், அவர், 'நாம் நேற்றுக் கொண்டுபோய்க் கொடாது நிறுத்தினதனால் யாமுனாரியருக்குக் கேள்வியாயிருக்கலாம். இன்றைக்கு நம்மனோரதம் முடியும்,' என்று வழக்கப்படி தூதுளங்கீரை கொண்டு வந்த பொழுது ஆளவந்தார் அவரைக் கண்டு, 'எங்கிருந்து வந்தீர்? உமது திருநாமம் யாது? என்ன காரியார்த்தமாய் இங்ஙனம் நடத்தி வருகிறீர்?' என்ன, அவர், 'யாம் மணக்கால் என்னும் ஊரில் வசிக்கும் காரணத்தால் எனக்கு மணக்கால் நம்பி என்பது பெயர். நம் பிதாமகனாராகிய ஸ்ரீமந்நாத முனிகள் தேகவியோகமாகும் காலத்தில், அவரது ஆர்ச்சிதமாகிய திரவிய நிக்ஷேபத்தை எமது அடைக்கலத்தில் வைத்து, 'இதை நம்முடைய பெயரனாரிடத்தில் நீர் ஒப்புவிக்க வேண்டும்,' என்று நியமித்துப் போனார். அதை உம்மிடத்தில் சேர்ப்பிக்கும் பொருட்டு நம்பெருமாள் கோயிலிலிருந்து வந்தோம்,' என்றார்.

ஸ்ரீஆளவந்தார், அந்த நிக்ஷேப தனம் எப்படிப்பட்டது? எவ்வகையாற் காண்பது? என்ன உபாயத்தாற் கைவசமாம்? எவ்விடத்திலுள்ளது? வெளியிட வேண்டும்’ என, மணக்கால் நம்பி அவரை நோக்கி, அரசன் முதலானவர்களிடத்திலுள்ள நிதி போல 'வெள்ளம் முதலானவைகளால் அதற்கு அபாய மில்லாமையால், அது அழியா நிதி; நிரஞ்சன திருஷ்டியாலன்றி, அஞ்சன திருஷ்டியாற் காணப்படாதது; மிருகபலி நரகபலி இட வேண்டுவதில்லை; வெறும் பச்சிலையைக் கிள்ளியிட்டு எளிதில் கைப்பற்றிக் கொள்ளப்படும். இரண்டாற்றுக்கு நடுவே, ஏழு சுற்றுக் கோட்டைக்குள் பிரணவ பீஜ யந்திரத்திலிருக்கிறது. அதை ஒரு பாம்பு சுற்றிக் கொண்டு நிற்கிறது. பன்னிரண்டு வருஷத்திற்கு ஒருமுறை அவ்விடத்திற்குத் தென்சமுத்திர மத்தியிலிருந்து ஓர் இராட்சசன் வந்து, அதைப் பார்வையிட்டுப் போவதுண்டு. இத்தன்மையாய் இருக்கின்ற நுமது பிதுரார்ச்சிதமாகிய க்ஷேம திரவியத்தை யாம் எத்தனைக் காலமாய்ப் பாதுகாத்து வருவோம்? இனி, நீர் கிருபை செய்து வந்து கைப்பற்றிக் கொள்ள வேண்டும்,' என்றார்.

திரவியமென்ற மாத்திரத்தில், ஆளவந்தார் அரசாள்பவராகையாலும், 'பாட்டனுடைய ஸ்திதியாகிய பைதிருக தனத்துக்குப் பெயரன் உரியவன்,' என்பதனாலும், அதன்மேல் அபேக்ஷை கொண்டு, 'எதோ! அதைக் காண்பியும், வருகிறோம்!' என்று தம் பரிசனங்களுடனே பிரயாணப்பட்டார். மணக்கால் நம்பி, 'இந்தக் கூட்டத்தை நிராகரித்து நீர் மாத்திரம் வந்தாற் காண்பிக்கிறோம்' என, அப்படியே அவர் தனித்து வர, அழைத்துப்போய் அத்திருவரங்கம் பெரியகோயிலிலே சயன திருக்கோலமாயெழுந்தருளிய எம்பெருமானைக் காட்டி, 'உங்கள் பாட்டனார் நம்முடைய அடைக்கலமாக வைத்து உமது வசம் ஒப்புக்கொடுக்கும்படி நியமித்த பரமதனத்தைப் பாரும்!' என்றார்.

ஆளவந்தார், திருவரங்கநாதனைச் சேவித்துப் பரவசராய் 'இந்த மகானுபாவருடைய குணப்பிரபாவத்தை என்னவென்று வர்ணித்து ஸ்துதி செய்கிறது!' என்பதாய், அத்தியவசாயத்தோடே மணக்கால்நம்பி தம் பக்கல் எழுந்தருளியது முதல் அவர் தமக்கு அரங்கநாதனைக் காட்டிக் கொடுத்ததுவரையில் நிகழ்ந்தவை யாவையும் ஒவ்வொன்றாக நினைவுகூர்கின்றார்:

'பங்கனிருக்கு மிடத்தைத் தேடிக் கங்கை வந்தது' போல, இந்த ஸ்ரீவைஷ்ணவ சீலர் ஈஷணத்திரயமாகிய சேற்றில் அழுந்திக்கிடந்த அசேதனனென்னும் அடியேனைப் பொருள் செய்து தாமே வந்து சந்தித்து, கரும்பு தின்னக் கூலி கொடுப்பது போலத் தூதுளங்கீரையைத் தேடிக் கொண்டுவந்து கொடுத்து, எனக்குத் தத்துவஞானம் உதயமாகிப் பரிபாகம் வருமளவும் காத்திருந்து, 'மண் தின்னும் பிள்ளைக்கு மருந்தூட்டத் தின்பண்டம் காட்டிச் செல்வத்தாய் அழைப்பது' போல, 'உங்கள் பிதிரார்ச்சிதமாகிய பணப்புதையல் இருக்கின்றது, வந்து கைக்கொள்ளும்,'என்றார். அதன்கருத்து நாயேனுக்கு அப்பொழுது, சாதாரணமாகிய லோக திரவியமென்றே தோன்றிற்று. இப்பொழுதோ, சகல புவன கர்த்தாவாகிய சாக்ஷாது சுவாமியாய் விளங்குகின்றது!

பின்பு, பரமகாருணியராகிய இவரை நோக்கி, 'அந்தத் திரவியம் பொன், வெள்ளி, இரத்தினத்தோடு சம்பந்தப்பட்டதோ அல்லது நகை நாணயங்களாயிருப்பதோ?' என்ன, 'மற்ற நிதிபோல கவரப்படுவதன்று; அழியாநிதி' என்றார். அதனால், அவ்வீசுரன் நிருபாதிகனும், நித்தியனுமாமென்று பொருள்படுகின்றது. அதன்பின்பு நான் மண்ணிற் புதைத்த திரவியம் கரைந்து போகுமென்பதனால், 'அதை எவ்விதத்தாற் காண்பது?' என்ன, 'நிரஞ்சன திர்ஷ்டியாலன்றி அஞ்சன திர்ஷ்டியாற் காணப் படாதது,' என்றதனாற் சர்வாந்தரியாமி யானவன் அஞ்ஞானிகளுக்கன்றி மெய்ஞ்ஞானிகளுக்கே பிரசன்னமாவன் என்பது விளங்காநின்றது. பிறகு, 'புதைபொருளைப் பூதங்காக்கும்,' என்பதனால், 'அது எனக்கு என்ன உபாயத்தாற் கிடைக்கும்?' என்ன, 'பலியிட வேண்டுவதில்லை; பச்சிலையைக் கிள்ளியிட்டுப் பற்றிக் கொள்ளலாம்' என்றார். அக்குறிப்பு, ' அந்தப் பரமாத்துமா திருத்துழாயால் அர்ச்சித்தவர்களுக்குச் சுவாதீனப்படாமற் போகான்,' என்பது ஆயிற்று.

மற்றும், 'காடோ, மலையோ கானாறோ அது இருக்குமிடம்!' என்றெண்ணி நான், 'எவ்விடத்திலுள்ளது?' என்ன, 'இரண்டாற்றுக்கு நடுவே' என்றார். அதனால், அது தென்காவிரி வடகாவிரியாகிய உபயகாவிரிக்கு மத்தியமென்பதும், ஏழுசுற்றுக் கோட்டை என்றதனால், அது சப்த பிரகாரங்களாற் சூழப்பட்ட அரங்கக் கோயிலென்பதும்; பிரணவ பீஜயந்திரம்' என்றதனால், அது ஓங்கார விமானம் என்பதும், ஓர் இராட்சசன் வந்து பார்வையிட்டுப் போகிறான்' என்பதனால், அங்கே விபீஷண ஆழ்வான், துவாதச வருஷத்திற்கு ஒருகால் வந்து சேவித்துப் போகிறானென்பதும், இந்தத் தனத்தை உங்கள் பிதாமகனார் உமக்கு ஒப்புக்கொடுக்கச் சொன்னார்,' என்றதனால், அது சுவாமி கைங்கரியத்தை உள்ளிட்ட பிரபத்தி நிஷ்டையைக் கைக்கொள்ளும்படி ஸ்ரீமந்நாத முனிகளால் நியமிக்கப்பட்டதென்பதும் குறிப்பித்தவைகளாயிருக்கின்றன,' என்று நிச்சயித்துணர்ந்து, இவர் செய்த பரமோபகாரம் ஆர் செய்வார்கள்!' என்றும், 'யாதொரு சாதனமுமில்லாமல் தாபத்திரயாக்கினியால் தகிக்கப்பட்டுக் கேவலம் அசத்தனாயிருக்கின்ற எளியேற்கு 'முடவனுக்குக் கொம்புத்தேன் கிடைத்தது' போலப் பராமார்த்தம் சித்தித்ததே!' என்றும்,--

இது அனேக கோடி காலம் 'அகோர தபசு, அஷ்டாங்க யோகம் முதலானவைகளைச் செய்தர்களுக்குத்தான் வாய்க்குமோ?' என்றும், 'இதற்கு மேலான வாழ்வு, அல்லது இகபரசாதனம் வேறேன்ன இருக்கின்றன?' என்றும், 'தேடி வந்த சீதேவியை வேண்டாவென்று விலக்கி விடுவது போல, இதைக் கைவிட்டு எத்தனை வருஷகாலம் அரசாட்சி பண்ணினாலும் சஞ்சித, ஆகாமிய, பிராரத்தி கர்மவசத்தனாகி உழல்வதேயல்லாமல், நித்திய பாக்கியமாகிய மோக்ஷத்திற்கு அருகனாகக்கூடுமோ? கூடாது. ஆதலால், இதுதான் ஆத்துமார்த்தம்' என்று தமக்குள் உறுதியாகக்கொண்டு இராச்சியத்தை வாந்தி அசனம் போல அருவருத்துக் கைவிட்டு, கடல் நடுவில் அமிழ்கின்றவன் அங்கொரு தெப்பத்தைக் கண்டுபிடித்துக் கரையேறுவது போல, பகவத் கடாக்ஷத்தால் ஆசாரியராயெழுந்தருளிய மணக்கால் நம்பி திருவடிகளை ஆசிரயித்து, பஞ்சசம்ஸ்கார சம்பன்னராய், பிரபத்தி நிஷ்டையை அவர் உபதேசிக்கப்பெற்று, ஸ்ரீஆளவந்தார் வாழ்ந்திருந்தார்.

ஆறாவது, 'மகா பண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது' முற்றும்

பகிர்வு JKC


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!