பம்பர பரிமளா
பத்து நாள் லீவு போட்டு படுக்கையில் உடம்பு சரியில்லாமல் படுத்து இருந்தான் பத்மநாபன். படுக்கையில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் பரிமளாவின் இன்னொரு பரிமாணம் தெரிந்தது. காலை எழுந்து தன்னுடைய சிறு வேலைகளை பார்ப்பதே மிகவும் அலுப்பாகத் தெரிந்த அவனுக்கு , காலை எழுந்தது முதல் பம்பரமாய் சுழலும் பரிமளா புதிய கோணத்தில் தெரிந்தாள். இந்த நான்கு வருடங்களில் இதுவரை அவன் கவனித்திராத பரிமளா!
பல் விளக்கி பாத்ரூமில் இருந்து வெளிவந்ததிலிருந்து கோலம் போட்டு நிமிர்ந்து, பாலை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, காபி கலப்பதிலிருந்து, காய்கறி நறுக்கி கொண்டே, சமையலையும் கவனித்துக் கொண்டே, இவனையும் கவனித்துக் கொண்டு, குழந்தையும் கவனித்துக் கொண்டு, நடுவே 'வீட்டிலிருந்து வேலை' என்று ஆபீஸ் வேலையும் பார்த்துக் கொண்டு குப்பையை பெருக்கி ஓரமாக கொட்டி, வேலைக்காரியை சமாளித்து…..
எப்போது குளித்தாள், எப்போது பூஜை செய்தாள் என்று தெரியாத அளவுக்கு நடுவே அதுவும்…
பல கைகளை உடைய அம்மனின் சொரூபம் போலவே இவன் கண்களுக்கு தெரிந்தாள்.
பத்து நாள் படுக்கை பத்மநாபனை மாற்றி இருந்தது. இப்போது எல்லாம் அவன் பாத்திரம் தேய்ப்பதில் இருந்து காய்கறி நறுக்குவது வரை தன்னால் முடிந்த உதவிகளை தினமும் செய்கிறான்.
=========================================================================================
சில துளிகள் தேவன் பற்றி அவர் உறவினர் கே வி விசுவநாதன்
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தேழாம் வருஷம், மே மாதம் ஐந்தாம்தேதி ஞாயிற்றுக்கிழமை. இன்று ஐந்து வருடங்கள் உருண்டோடி விட்டன.
தேனாம்பேட்டையில் ஒரு பங்களா வின் மாடி அறை. சில மாதங்களாகவே உடல் நலமில்லாமல் அவர் படுத்து இருந்தார். நெஞ்சம் கனக்க ஏங்கித் தவித்த உறவினர்களுக்கும், பரிவும் பாசமும் பொங்க வந்து விசாரித்த அன்பர்களுக்கும் தைரியமூட்டும் சில சொற்களை, அவரைக் கவனிக்கும் வைத்தியர்கள் சொல்லியிருந்தனர்.
பெரிய வைத்தியர் ஒருவர்,காலை எட்டு மணி முதல் பகல் பன்னிரண்டு மணி வரை அவர் உடலில் 'பிளாஸ்மா' வைச் செலுத்தியபடி இருந்தார்; அலுப்பு மிகுதியில் சோர்வு பொங்க அமர்ந்திருந்தவரிடம் விடை பெற்றுக் கொண்டு டாக்டர் தெரு முனையைத் தாண்டியிருக்க மாட்டார்; ‘நன்கு ஓய்வு பெறட்டும்' என ஜன்னல்களின் திரைச் சீலைகளை இழுத்து மூடி விட்டு மாடியிலிருந்து நான் கீழே இறங்கக்கூட இல்லை. முருகனிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்து விட்டது. பல்லாயிரக்கணக்கான 'விகடன்' நேயர்களுக்குப் பேரதிர்ச்சியாக — பக்கத்தில் நின்ற உறவினர்களுக்குத் தாங்கவொண்ணாத பேரிடியாக வாழ்விலே `தேவனாக' உலவியவர் நிரந்தரமாக ‘அமரர்' ஆனார்.
என் மனத்தில் உள்ள ஏடுகளை நான் புரட்டிப் பார்க்கும் போது பல பசுமையான அத்தியாயங்கள் தெரிகின்றன. என்னால் மறக்க முடியாதவை அவை. உறவினன் என்ற நிலையில் என்ற நிலையில் மட்டுமில்லாமல் - அவருடன் பழகக் கொடுத்து வைத்தவன் என்ற நிலையிலே, என் பரம்பரையினர் எவருமே அவரை மறக்க முடியாது.
மே மாதம் முதல் தேதி என்று நினைக்கிறேன். என்னை அவர் கூப்பிட்டு அனுப்பினார்.
" டில்லி பிரிட்டிஷ் கௌன்ஸிலிலிருந்து நண்பரைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள்..லண்டனில் வேலை பார்க்க அவரை அழைக்கிறார்கள்.. இரண்டு வார்த்தை சொல்கிறேன், எழுதிக் கொள்கிறாயா?...” என்று கேட்டார்.
படுக்கையில் சாய்ந்தபடியே, மெலிர்க் குரலில் தன் நண்பரின் தகுதிகளைத் திறம்பட எடுத்துரைத்த அந்தக் சுடிதத்தை அவர் சொல்ல, நான் எழுதிக் கொண்டேன். பின்னர் அதை 'டைப்' செய்து கையெழுத்துக்கு வைத்தேன். மிகவும் சிரமத்துடன் அதில் கையெழுத்திட்டு அன்றே அதைத் தபாலில் அனுப்பி வைத்தார்.
நண்பர் திரு தேவன் நோய்வாய்ப் பட்டிருப்பதை அறியாதவர், விவரம் தெரிந்ததும் பிரிட்டிஷ் கௌன்ஸி லுக்கு இவரைத் தொல்லைப் படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர்கள் மன்னிப்புக்கோரி எழுதிய கடிதம், அவர் இறந்த மறு தினம் வந்து சேர்ந்தது.
இந்த சம்பவத்தைத் திரு 'சுந்தா' அவர்கள் ஸெயிண்ட ஸெயிண்ட் மேரிஸ் மண்டபத்தில் நடந்த அனுதாபக் கூட்டத்தில் கூறியபோது, கண்ணீர் விட்டார்:
என்னை அறிந்தவர்கள் பலர் என்னைக் கேட்கும் கேள்வி இதுதான்."திரு தேவன் எப்படிக் கதை எழுதினார்? எப்போது எழுதினார்?...''
எப்படி என்பதற்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. அவர் தொடர் நாவல்களின் அந்த அந்த அத்தியாயங்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எழுதப்படும். காலை ஆறுமணிக்கு எழுத உட்கார்ந்தாரானால் பகல் பத்து மணிக்கு முடித்து விட்டு ஆபீசுக்குக் கிளம்பி விடுவார். தனிமையை அவர் அச்சமயம் விரும்பியதால் எவருக்கும் அனுமதி கிடைக்காது. அந்த வேளையில் அவர் முன்னிலையில் போகக் கூடிய நபர் ஒருவர் உண்டு என்றால் - அவர் சைத்திரிகர் 'கோபுலு' ஒருவரேதான். சித்திரப் பகுதிகளைப் பற்றி உரையாட அவர் மட்டும் கண்டு போவார்.
பல வருடங்களுக்கு முன்னால், ஆனந்த விக்டன் காரியாலயம் அப்போது பிராட்வேயில் இருந்தது. திரும்பி வரும்போது தன் சைக்கிளில் ஏதோ நாய் வழியில் அகப்பட்டுக் கொண்ட பிரமை ஏற்பட்டு விட்டது.
திரும்பவும் கையில் விளக்கை ஏந்திக் கொண்டு, பிசைந்த அமுதுடன் நாயைத் தேடிப் போனார்.எங்கள் வீட்டுச் சோறு அதற்கு அன்று தலையில் எழுதப்பட்டிருந்ததால்தான், அது இவர் சைக்கிளின் குறுக்கே வந்திருக்க வேண்டும். அந்த நாய் திருப்தியுடன் சாப்பிட்ட பிறகு - அதன் மேனியில் ஒரு கீறல்கூட இல்லை என்று மனம் அமைதி அடைந்த பின்னர் அவர் அன்று உணவருந்தினார்.
பொதுக் கூட்டங்களுக்கும் பல விழாக்களுக்கும் தலைமை தாங்க அழைப்புக்கள் அடிக்கடி வரும். ஒரு நாட கத்தைப் பார்க்க இவர் போயிருந்த போது, திடீரென்று பேச அழைத்து விட்டார்கள். எழுந்தவர் 'மைக்' முன் போய் "நான் பொழுது போகவில்லை என்று நாடகம் பார்க்க வந்தேன். என்னைப் போய் நடிக்கச் சொல்லுகிறார்கள்.." என்றார். அந்த நாடகத்திலேயே ரஸிகர்கள் வாய் விட்டுச் சிரித்த முதல் கட்டம் அதுதான்.
எங்கள் வீட்டில் இரண்டு செல்வங்கள் இருந்தன. ஒருவன் முருகன். இன்று காளைப் பருவம் எய்தி வட பழனி ஆண்டவருக்குச் சேவை செய்து வருகிறான். மற்றவள் உமா; இன்று தன் குழந்தைகளுடன் சென்னையிலேயே இருக்கிறாள்.
உமாவும் அவள் லட்சுமியும் முதன் முதலாக வந்திருந்தனர். உமா பிற ந்து ஏழு நாட்கள் கூட ஆகவில்லை. தொட்டிலில் கட்டினால் பயந்துவிடும். என்று, ஒரு ஹாலில் அவளைப் படுக்க வைத்திருந்தனர். தீபாவளி சமயமாதலால், நான் ஏதோ வெடியைக் கொளுத்திப் போட்டேன். சத்தத்தைக் கேட்டுத் அந்தச் திடுக்கிட்ட இளம் கன்றான உமா தவிப்பதைக் கண்ட திரு தேவன், அந்த வருடத்தில் ‘பட்டாஸே வெடிக்கக் கூடாது' என்ற கடும் உத்தரவைப் பிறப்பித்து விட்டார்!
பிறர் தன் படைப்புக்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். தன் நாடகங்களில் பின் வரிசையில் ஜனங் களோடு கலந்து உட்கார்ந்து கொண்டு மற்றவர்கள் பேசுவதை ரஸிப்பார். "ஜஸ்டிஸ் ஜகந்நாதன்" தொடங்கப் பட்டு மூன்றாவது வாரத்தில், பேராசிரியர் கல்கி அவர் முயற்சியைப் பாராட்டிப் பேச அவருக்கு எழுந்தஆர்வம், அந்த நாவலின் மகத்தான வெற்றிக்கு ஒரு காரணமாகும்.
அவர் அயல்நாட்டிலிருந்து எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் ரஸம் மிக்கவை. அழகு நிரம்பியவை. பொன் வாத்து எங்களுடன் இருந்த துணிவில், அந்த இறகுகளை நாங்கள் பத்திரப்படுத்தவில்லை. அதற்காக இன்று வருந்துகிறோம்; பச்சாதாபப்படுகிறோம்.
"ஜஸ்டிஸ் ஜகந்நாதன்'' எழுதுவ தற்கும் முன்பு அவர் வாய் விட்டுச் சொல்லிய ஆசை இதுதான்.
''எனக்கு நீதிபதியாக இருக்க வேண்டும் என்று விருப்பம் உண்டு! என்று அடிக்கடி சொல்லி யிருக்கிறார். இந்த ஆசைகூட ஒரு கொலை வழக்கில் 'ஸ்பெஷல்' 'ஜூரியாக இருந்ததில் எழுந்ததுதான்.
அவர் விருப்பம் ஒருநாள் பலித்தது. சக ஊழியர்கள் நடத்திய நாடகத் தின் கடைசிக் காட்சியில் இவருக்கு நீதிபதி வேடம் தரப்பட்டது. ஆபீஸ் அலுவல் காரணமாக ஒத்திகைக்குச் சரியாகப் போகாததால், குற்றமற்றவனுக்குத் தண்டனையும், போக்கிரிக்கு விடுதலையுமாகப் பெயரை மாற்றிச் சொல்லி விட்டார். ஒலி பெருக்கி சரியாக அமையாததால், இந்தத் தவறு முன் வரிசையில் இருந்த சிலருக்கு. மட்டுமே தெரிந்தது.
இது பற்றி அவரைக் கேட்டபோது, "நீதிபதி முழு வழக்கையும் விசாரித்துத்தானே தண்டனை கொடுக்கிறார். அதேபோல் இந்த நாடகத்தை நான் முதலிலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். யாருக்குத் தண்டனை அவசியமோ கொடுத்து விட்டேன்!'* என்று சொன்னார்.
என் நெஞ்சிலிருந்து அலைகள் ஒவ்வொன்றாக எழுப்பி வந்து கொண்டிருக்கின்றன. அவருடன் நான் இருக்கக் கொடுத்து வைத்த பதினெட்டு ஆண்டுகளிலே, பற்பல நிகழ்ச்சிகள்- வித விதமான சம்பவங்கள்: எல்லாமே சுவையானது. உதட்டில் புன்னகையைத் தருவிக்கும் நிகழ்ச்சிகளுக்குப் பின்னால், இதயத்தைக் கீறிக் குருதி யைக் கொட்டவைக்கும் சம்பவங்களும் இருந்திருக்கின்றன.
சுருங்கச் சொல்லப் போனால்— அவர் மிஸ்டர் வேதாந்தத்தின்' கடைசி அத்தியாயத்தின் இறுதியில் எழுதியதுபோல் - அது ஒரு பெரிய கதை !
- 1962 ஆம் வருட விகடனிலிருந்து -
பம்பர பரிமளா அரைப்பக்கச் சிறுகதை.
பதிலளிநீக்குஎல்லாப் பெண்களும் கடுமையாக உழைக்கின்றனர். ஆண்களுக்கான இந்த உலகத்தில் முன்காலகட்டத்தில் அவர்கள் உழைப்பு தெரியாமல் இருந்தது. மனைவியின் வேலைகளை அவதானிக்கும் ஒவ்வொரு கணவனும் மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.அதை எடுத்துச் சொல்லும் வித்த்தில் அமைந்த கதை நன்று.
வாங்க நெல்லை... எப்போதும் ஒரு இல்லத்தில் பெண்களின் பங்கு, உழைப்பு அதிகம்தான், இல்லையா?
பதிலளிநீக்குவீட்டு வேலைகள் மட்டுமல்ல ஶ்ரீராம், பசங்களை வளர்ப்பது உறவுகளைப் பேணுவதிலும் அவங்க பங்கு ரொம்ப முக்கியம். பசங்க மனதுல பெரும்பாலும் அப்பாவைவிட அம்மாதான் நிறைந்திருப்பார்கள். (ஆனால் அப்பாவிடமிருந்துதான் நிறைய கற்றுக்கொள்வார்கள், எப்படி நடந்துகொள்கிறார் என்றெல்லாம் பார்த்து). இதை எழுதுவதால் மனைவியின் அருமை அறிந்து பெருமைப்பனுத்தி நடந்துகொள்வார் போலிருக்கு என எண்ணிவிடாதீர்கள், நானும் சராசரி ஆண்தான்.
நீக்குநானும் எல்லாவற்றையும் சேர்த்து தான் சொல்லி இருக்கிறேன். நான் பாஸின் பெருமைகளை புரிந்து கொண்டிருக்கிறேன். உரிய மரியாதையை தந்து விடுகிறேன்!
நீக்குஎழுத்தாளர் தேவன் பற்றிய பகுதி புதிது. நிறைய தெரிந்துகொள்ள உதவியது. இதைப் படித்ததும் தேவன் அவர்களின் பிற படைப்புகளையும் படிக்கும் ஆவல் வருகிறது.
பதிலளிநீக்குஇந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஜஸ்டிஸ் ஜெகநாதன் புத்தகம் ஸ்பெஷல். என்ன ஸ்பெஷல் என்றால், கதை விகடனில் வெளியான போது அதில் இருந்த கோபுலு படங்களுடன் புத்தகம் வெளியிட்டு இருக்கிறார்கள் அலையன்ஸ் பதிப்பகத்தார். படங்களை அவர்களுக்கு தேடி கொடுத்தவர் நம்ம கணேஷ் பாலா.
பதிலளிநீக்குபுத்தக்க் கண்காட்சி பற்றிய பகுதி வியாழனில் வரும் என நினைக்கிறேன். கண்காட்சி ஒர்த்தா?
நீக்குநானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கணினி சரியாக வேண்டும். கணினி இல்லாமல் ஸ்ரீராம் இல்லை!! எப்படித்தான் செல்வா அண்ணாவும், கமலா அக்காவும் மொபைலிலேயே எல்லாவற்றையும் முடிக்கிறார்களோ...
நீக்குகணினி சரியாகாத காரணத்தினால் மொபைலில் இருந்து பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
பதிலளிநீக்குபம்பரப் பரிமளா (சந்தி வரவேண்டுமோ இங்கு?) சிறுகதையை ரசித்தேன்.
பதிலளிநீக்குஒரு வாரம் முழுக்க காய்ச்சலுடன் படுக்கையிலே கிடந்த கணவர், அந்த நாட்களில் தன்னுடைய “CEO, COO, CFO, ஹவுஸ்கீப்பிங் மேனேஜர்” எல்லாமே ஒரே மனுஷி—மனைவி—என்பதை கண்கூடாக பார்த்துக் கற்றுக் கொள்கிறார். டீ வைக்குறதிலிருந்து டஸ்ட் பின் காலியாக்குறது வரை, “இது எல்லாம் தானா நடக்குது”ன்னு நினைத்த அந்த அப்பாவிக் கணவர், மனைவி one woman armyயா ஓடிக்கொண்டிருக்கிறதைக் கண்டதும், குணமடைந்த மறு நாளே அவருக்கு ஞானோதயம் வருவது இந்த கதையின் அழகான திருப்பம். அரைப் பக்கத்தில் இவ்வளவு விஷயத்தையும் அடைப்பது சிரமம். வாழ்த்துகள் ஸ்ரீராம்.
வாங்க சூர்யா... உங்கள் அங்கதம் புரிகிறது!! நன்றி. படத்துக்குப் பொருத்தமாக இருபது வரிகளுக்குள் கதையை அடக்க வேண்டும். என்னதான் செய்ய! வேறு ஏதாவது யோசிக்கலாம் என்றால் அங்கு போட்டி போட்டுக் கொண்டு வேறு எதையாவது முன்னரே எழுதி விடுகிறார்கள்...
நீக்குஅங்கதமா?
நீக்குஅட தேவுடா! அசல் அக்மார்க் பாராட்டு ஸ்ரீராம். அங்கதம் என்று ஏன் எடுத்துக்கொண்டீர்கள்? இந்தப் படத்தைக் கொடுத்து என்னைக் "கதை எழுது" என்று சொன்னால் பேந்தப் பேந்த முழித்திருப்பேன்.
ஆ.... அப்போ மனமார்ந்த நன்றி.
நீக்குதேவன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அடப் பாவமே! 44 வயதெல்லாம் ஒரு வயதா மரணம் அடைவதற்கு? சைக்கிளில் அடிபட்டிருக்குமோ என்று நினைத்து நாயைத் தேடிச் சென்று உணவு கொடுப்பதற்கெல்லாம் எத்தனை பேருக்கு மனம் வரும்?
பதிலளிநீக்குஉண்மைதான். 50 களின் சென்னையை, தமிழ்நாட்டை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
நீக்குதேவனைப் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். இளம் வயதிலேயே இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். ராகுகாலம் பார்ப்பதில் நம்பிக்கை கொண்டவர் என்று படித்த நினைவு.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... நன்றி. ஆம். 44 வயதிலேயே மறைந்து விட்டார்.
நீக்குநானும் ராகுகாலம் பார்ப்பதில் நம்பிக்கை கொண்டவன். முக்கியமான விஷயங்களை அப்போ ஆரம்பிக்க மாட்டேன். ஒன்றைச் செய்ய ஆரம்பித்தால் அதிலிருந்து மீண்டு வெளியே வருவது கடினம். பசங்களுக்கும் இது தெரியும். ஆனால் இதுக்கெல்லாமா என்று அலுத்துக்குவாங்க, கடைப்பாவாங்க. அதனால் இந்த மனோபாவத்தை அவங்கள்ட கடத்தலை.
நீக்குசும்மா வெளியில் சென்று வருவதற்கு கூட பாஸ் இப்போதெல்லாம் ராகு காலம், எமகண்டம், ஹோரை என்று எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்து விட்டார். பொதுவாக நான் அதைக் குறித்து பெரும் பெரிய அளவில் அலட்டிக் கொள்வதில்லை!
நீக்கு