13.1.26

சிறுகதை : கண்ணன் காட்டிய வழி - சிலிக்கான் ஷெல்ஃப் RV

Positive 1  :

மசூதி ஒலிபெருக்கி மூலம் 7 பேரை காப்பாற்றிய இமாம்

அசாமில் மசூதி ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்து தண்ணீரில் மூழ்கும் வாகனத்தில் சிக்கியிருந்த 7 பேரை இமாம் ஒருவர் காப்பாற்றினார்.

=======================================================================================

Positive 2  :



====================================================================================================================================================




கணேஷ் பாலா நடத்திய படத்துக்குப் பொருத்தமான சிறுகதைப் போட்டிக்கு சிலிக்கான் ஷெல்ஃப் RV எழுதிய கதையை, அவர் அனுமதியோடு இங்கே கொடுத்திருந்தேன்.  இந்த வாரம் அவர் எழுதிய மகாபாரதச் சிறுகதை ஒன்றை இங்கு தருகிறேன்.  இதற்கு ஏற்கனவே அவரிடம் அனுமதி வாங்கி இருக்கிறேன்!


கண்ணன் காட்டிய வழி 

RV 

துச்சாதனன் கீழ்ஸ்தாயியில் உறுமினான். “நீ சொல்வது பொய்யாக – வேண்டாம் தவறாக இருந்தால் உன் தலை இருக்காது”.

அனுகூலன் நிமிர்ந்து துச்சாதனனை நோக்கினான். அவனது கண்கள் கலங்கி இருந்தன. “தங்களிடம் நாற்பது ஆண்டுகளாக அணுக்க ஒற்றனாக பணி புரிகிறேன். இது வரை நான் தங்கள் வரை கொண்டு வந்த எந்த செய்தியும் தவறாக இருந்ததுண்டா?” என்று தழுதழுத்த குரலில் வினவினான்.

“ஆம் அதனால்தான் உன்னிடம் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறேன். உன் தலை இன்னும் உடலில் இருக்கிறது. நீ அலர் உரைப்பது யாரைப் பற்றி? கர்ணன் என் தமையனுக்கு அடுத்த நிலையில் உள்ளவன், என் தமையனுக்கு மட்டுமல்ல எனக்கும் உயிர் நண்பன்!” என்று மீண்டும் கடுமையான குரலில் சொன்னான். ஆனால் தன் குரல் அனுகூலனைத் தவிர வேறு யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வும் அவன் குரலில் இருந்தது.

“செய்தியைச் சொல்வதில் எனக்கும் வருத்தமே. எனக்கு அங்கர் தெய்வம். என் மகள் திருமணத்திற்கு நீங்களும் அரசரும் வரக் கூட இல்லை, அவர் முன்னின்று நடத்தினார். அவர் என் மகளுக்கு அளித்த பரிசுப் பொருட்களை இன்னும் அவள் கணவன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது என் கடமை. நான் இதை அறிந்திருந்தும் தங்களிடமிருந்து மறைத்தால் அவரே என்னை மன்னிக்கமாட்டார். இந்தச் செய்தியை தங்களுக்கு உரைத்தது அல்ல, இத்தனை தாமதமாக உய்த்துணர்ந்தேன் என்பதுதான் எனக்கு இழுக்கு” என்று அனுகூலன் கம்மிய குரலில் சொன்னான்.

துச்சாதனன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் தோள்கள் குலுங்கின. தன் முகத்தை தன் கைகளில் புதைத்துக் கொண்டான். அனுகூலன் “அரசரிடம் நீங்கள்தான்…” என்று ஆரம்பித்தான். துச்சாதனன் கையை ஆட்டி அவனைப் போகும்படி சைகை செய்தான். அனுகூலன் கூடாரத்திலிருந்து தளர்ந்த நடையோடு வெளியேறினான்.

துச்சாதனன் மீண்டும் புற உலகுக்கு வர இரண்டு நாழிகைகள் ஆயிற்று. வெள்ளி எழுவது ஆடிக் கொண்டிருந்த கூடாரக் கதவின் வழியே தெரிந்தது. பெருமூச்சுடன் எழுந்து மெதுவாக துரியோதனனின் கூடாரத்துக்கு நடந்தான். கூடார வாசலில் இருந்த துரியோதனின் அணுக்க சேவகன் சிவதாணு தலை தாழ்த்தினான். “அரசர் இப்போதுதான் உறங்கச் சென்றார், இத்தனை நேரம் ஆசாரியர், அங்கர், அஸ்வத்தாமர், கிருபர், சல்யர், மாமாவுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்” என்று கிசுகிசுத்தான்.

“சந்தித்தாக வேண்டும் சிவதாணு, முக்கியச் செய்தி” என்று தளர்ந்த குரலில் சொல்லிக் கொண்டே துச்சாதனன் கூடாரத்தின் உள்ளறையில் நுழைந்தான். துரியோதனன் அவனை எதிர்பார்த்து திண்டின் மேல் சாய்ந்து காத்திருந்தான். “உன் காலடியோசை கேட்டது, உன்னை ஆலோசனைக் கூட்டத்தில்  காணோமே என்று கர்ணன் மீண்டும் மீண்டும் விசாரித்தான். அயர்ச்சியில் உறங்கி இருப்பான், அழைக்க வேண்டாம் என்று அவனே விளக்கமும் சொல்லிக் கொண்டான்” என்று புன்னகைத்தான்.

துச்சாதனன் எதுவும் பேசவில்லை. கூடாரத்தில் தூண் ஒன்றில் சாய்ந்து நின்றான். அவன் கால்கள் தள்ளாடின. துரியோதனன் எழுந்து அவனை அணைத்துக் கொண்டான். அவனை திண்டில் சாய வைத்தான். “மதுவாசம் இல்லை, பின் ஏன் இந்தத் தள்ளாட்டம்? உளம் தளர்ந்திருக்கிறாயா? கர்ணனின் வில்லான விஜயம் விஜயனை வெல்லும், நமக்கு ஜெயத்தைப் பெற்றுத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று அவனைத் தேற்றினான்.

துச்சாதனன் வெடித்து அழுதான். “விஜயத்துக்கும் அதை ஏந்தும் வீரனுக்கும் சக்தி உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவனுக்கு நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் மனம் இல்லை அண்ணா!” என்று துரியோதனின் தோளில் சாய்ந்து விம்மினான்.

“இவனை நம்பித்தான் போரில் இறங்கினோம், பிதாமகரையும் துரோணரையும் அல்ல. இன்று பீமனிடம் விற்போரில் தோற்றிருக்கிறான். அவனைக் காக்க இருபத்திரண்டு தம்பியர் இறந்தனர். உன்னையே எதிர்த்து குரல் எழுப்பியவன் விகர்ணன், இந்தப் போர் அநீதியானது என்று உறுதியாகக் கருதியவன். ஆனால் முழுமூச்சுடன் போரிட்டு தன் உயிரைத் தந்துவிட்டான். இவன்? உண்மையில் இவன் உன்னை விடவும் பலம் வாய்ந்தவன். கதையெடுத்து சுழற்றினால் பலராமருக்கும் இவனை எதிர்கொள்வது கஷ்டம். இவனால் பீமனை மற்போரில் கூட வெல்ல முடியும், வெறும் தசை மலையான அவனிடம் விற்போரில் தோற்று நிற்கிறான். ஏன் தெரியுமா?” என்று ஆவேசமாகக் கேட்டான்.

துரியோதனன் எதுவும் சொல்லாமல் எங்கோ வெறித்தான். துச்சாதனன் அவன் முகவாயைப் பிடித்து நிமிர்த்தினான்.  “அவனை உயிர் நண்பனாகக் கருதினேன். உனக்கு அடுத்த நிலையில் அவனைத்தான் வைத்திருந்தேன். துருமசேனனும் லட்சுமணனும் விகர்ணனும் தம்பியரும் ஜயத்ரதனும் இறந்தது கூட எனக்கு இத்தனை வலியைத் தரவில்லை. அவன் ஏன் நம் சார்பாக முழு மூச்சுடன் போரிடவில்லை என்று அறிவாயா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.

“ஏனென்றால் அவன் கௌந்தேயன்” என்று துரியோதனன் முனகினான்.

அதிர்ச்சியில் துச்சாதனனின் கை தன்னிச்சையாக கீழிறங்கியது. துரியோதனன் மெதுவாக துச்சாதனனின் தலை முடியைக் கோதினான். “ஆம், அவன் சிற்றன்னைக்கு வாக்களித்திருக்கிறான். அர்ஜுனனைத் தவிர வேறு எந்த இளையோனையும் கொல்லமாட்டேன் என்று சொல் அளித்திருக்கிறான். இதைக் கூட நான் அறியவில்லை என்றால் நான் அரசனாக இருக்கவே தகுதி அற்றவன் துச்சா! அப்புறம் எனக்கு மணிமகுடம் எதற்கு, எதற்கு நமக்கு ஒரு ஒற்றர் படை?” என்று புன்னகைத்தான்.

“அதனால்தான் அவன் வில் இன்று பீமனின் எதிரில் தள்ளாடிவிட்டது. இன்றைய தோல்வி அவனுக்கு ஒரு பாடம். நாளையிலிருந்து அவன் அர்ஜுனனை எதிர்த்து முழுமூச்சுடன் போரிடுவான். இனி கண்ணனைத் தவிர யாரும் அவனை வெல்ல முடியாது. அந்த மாயவனின் சதிகளிலிருந்து நாம் அவனைக் காத்தால் போதும், நம் வெற்றி நிச்சயம். கவலை கொள்ள வேண்டாம்” என்று மிருதுவான குரலில் சொன்னான்.

துச்சாதனன் ஈரம் ததும்பும் விழிகளால் தமையனை நோக்கினான். “உன் உயிர் நண்பன், மதனி அவனை சொந்தச் சகோதரனாகத்தான் கருதுகிறாள். நம் மகள் கிருஷ்ணை என்னை விட, ஏன் உன்னை விடவும் கூட அவனைத்தான் தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறாள். அவன் எப்படி நமக்கு துரோகம் செய்யத் துணிந்தான்? அவன் என்ன அவமானம் ஏற்பட்டாலும் சரி என்று பீஷ்மரின் கீழ் போரிட்டிருக்க வேண்டும். முதல் நாள் போரில் அவன் பாண்டவர்களில் ஒருவரைக்  கொன்றிருந்தால் போர் அத்தோடு முடிந்திருக்கும். நாம் இன்றும் நூற்றுவராக இருந்திருப்போம்” எண்று அழுதான்.

“அவனுக்கு நாம் செய்யாத துரோகமா?” என்று துரியோதனன் விரக்தியோடு நகைத்தான்.

“என்ன துரோகம் செய்துவிட்டோம்? குதிரை மேய்க்க வேண்டியவனை அரசனாக்கினோம், சூதனை ஷத்ரியனாக்கினோம். நம் அனைவருக்கும் மூத்தவன் என்று முழுமனதாக ஏற்றோம். நம் அந்தப்புரங்களிலும் அனுமதி உண்டு. உனக்கு சமமான நிலையில் வைத்தோம், நம் மனைவியர் அவனிடம் மட்டும்தான் கணவனைப் பற்றி அலுத்துக் கொள்கிறார்கள், குடிமூத்தவனான உன்னிடமும் என்னிடமும் அல்ல. நம் பிள்ளைகள் மனதில் அவனுக்குத்தான் முதலிடம், பக்கத்தில் நாம் இருந்தால் அவன் பெரிய தந்தை, அம்மாக்க்கள் இருந்தால் அவன் மாமன். இதுதான் துரோகமா?”

“அவன் நம் படைகளுக்கு தளபதியாக இருக்க வேண்டியவன். மூத்தவர் என்ற மரியாதைக்காக மட்டுமே பிதாமகரைத் தளபதி ஆக்கினோம், அதுவும் அவன் பரிந்துரைத்ததினால்தான். அவனைப் போய் சூதன், அதிரதன் மட்டுமே என்று பீஷ்மர் ஒதுக்கினார். நான் அரசன், நீ இளவரசன். என்ன கிழித்துவிட்டோம்? அவரை எதிர்த்து நா ஒரு வார்த்தை பேசவில்லை. அதைக் கூட விட்டுவிடலாம். ஆனால் பீஷ்மர் விருஷகேதுவுக்குக் கூட போரில் ஈடுபட அனுமதி தரவில்லை, அவன் குதிரைகளைப் பரிபாலித்தான். நான் ஏன் பீஷ்மருக்கு ஆணையிடவில்லை? அதை எதிர்த்து நீயும் தம்பியரும் ஏன் சங்கை அறுத்துக் கொள்ளவில்லை? காலமெல்லாம் அவனை குதிரைச்சூதன் என்று இழிவுபடுத்தினார்கள், அவன் தளரவில்லை. அவன் மகனையும், அங்கநாட்டு இளவரசனையும், குதிரைச் சூதனாக பணி புரிய வைத்தபோது நாம் என்ன கிழித்துவிட்டோம்? எந்த ஷத்ரியனுக்கு குதிரை பராமரிக்கும் பொறுப்பு தரப்பட்டிருக்கிறது? விருஷகேது  ஷத்ரியன் என்று நானோ நீயோ மாமாவோ தம்பியரோ மெல்லிய முனகலைக் கூட வெளிப்படுத்தவில்லையே?”

துரியோதனனுக்கு மூச்சிரைத்தது. அருகில் இருந்த மதுக் குவளையை எடுத்து இரண்டு மிடறு பருகி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். “அவன் ஷத்ரியன் என்ற அங்கீகாரத்துக்காக காலமெல்லாம் ஏங்குகிறான். திரௌபதி சூதனை மணக்க மாட்டேன் என்று சுயம்வரத்தில் இழிவுபடுத்திய பிறகு அவன் சுயம்வரம் பக்கம் தலை வைத்துப் படுக்கவே அஞ்சினான். அவனுக்கு ஒரு ஷத்ரியப் பெண்ணை நாமாவது பேசி மணமுடித்து வைத்தோமா? அண்ணன் அண்ணன் என்று கொண்டாடும் நம் வீட்டுப் பெண்களுக்கே அவரவர் குடும்பத்தில் சூதனுக்கு எப்படி பெண் கேட்பது என்று ஆயிரத்தெட்டு யோசனை. சுப்ரியை பானுவின் தங்கை மாதிரி என்று சொல்லி ஒரு சேடியைத்தான் மணமுடித்து வைத்தோம். அது என்ன தங்கை மாதிரி? பானு, அசலை, மற்ற தம்பிகளின் மனைவியருக்கு சகோதரிகளே இல்லையா, சகோதரிகள் மாதிரி சேடிகள்தான் இருந்தார்களா? வெறும் சோற்றுக் கடனுக்காக குருதி உறவுகளைத் துறந்து தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். துரோணரும் பிதாமகரும் அல்ல, அவன் ஒருவனால் மட்டுமே பார்த்தனைக் கொல்ல முடியும். கண்ணன் ஒருவனால் மட்டுமே இவனிடமிருந்து பார்த்தனைக் காக்க முடியும். அந்தக் கண்ணனின் சதிகளிலிருந்து இவனைக் காப்பாற்றினால் நம் வெற்றி நிச்சயம். நமக்கிருக்கும் ஒரே வழி அதுதான்” என்று இரைந்தான்.

துச்சாதனன் ஈரக் கண்களோடு துரியோதனனை நிமிர்ந்து நோக்கினான். “நீ என்ன சொன்னாலும் எனக்கு சமாதானம் ஆகவில்லை. முழுமூச்சாகப் போரிட்டாலே அர்ஜுனனை வெல்வது இவனுக்கும் எளிதல்ல. விராட நாட்டில் பார்த்தன் ஒருவனே இவனையும் பிதாமகரையும் ஆசாரியரையும் வெல்லவில்லையா? அர்ஜுனன் போராடுவான் என்று எதிர்பார்க்கவில்லை என்று சாக்குபோக்கு சொன்னான். இப்போதோ அர்ஜுனன் ஒருவன் அல்ல, தேரோட்டும் மாயவனும் துணை நிற்பதால் அவன் பலம் இன்று இரண்டு மடங்காக இருக்கிறது, இல்லாவிட்டால் ஜயத்ரதனை அவன் கொன்றிருக்க முடியாது. இன்று பாண்டவர்களை வெல்ல ஒரே வழி மிச்ச நால்வரில் ஒருவரைக் கொல்வதுதான், இல்லை தருமனை சிறைப்பிடிப்பதுதான். ஆனால் இவன் தன் தம்பியரைக் காக்க நம் தம்பியரை பலி கொடுக்கிறான். உன்னையும் என்னையும் கூட இவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இன்று அவன் பீமனை கொன்றிருந்தால் உன் தலை மேலும் என் தலை மேலும் ஆடிக் கொண்டிருக்கும் கத்தி உடைந்திருக்கும். பாண்டவர்களில் ஒருவன் இறந்தாலும் அவர்கள் ஐவரும் இறந்த மாதிரிதான், நமது வெற்றி இன்றே உறுதி ஆகி இருக்கும்” என்று அழுதான்.

துரியோதனன் கடகடவென்று சிரித்தான். “பலே பலே! நீயும் யோசிக்க ஆரம்பித்துவிட்டாய்! மூடா, இதை நீ உணர்ந்திருப்பது உண்மையானால் நீயே இந்தப் போரை முதல் நாளே முடித்து வைத்திருக்கலாமே!” என்று நகைத்துக் கொண்டே கேட்டான்.

துச்சாதனன் குழம்பிய விழிகளுடன் அண்ணனைப் பார்த்தான். “என்னாலும் – என்னை விடு – உன்னால் யுதிஷ்டிரனையோ இரட்டையரையோ வெல்ல முடியாதா? ஏன் நீ முதல் நாளே நகுலனைத் தேடிச் சென்று கதையைப் பயன்படுத்தி இருக்க வேண்டியதுதானே? உனக்கெதிராக அவனால் இரண்டு நாழிகை நிற்க முடியுமா? நீயே சொன்ன மாதிரி அவர்களில் ஒருவன் இறந்தாலும் அவர்கள் ஐவரும் இறந்த மாதிரிதானே! நாம் அன்றே வெற்றிவாகை சூடி இருக்கலாமே!” என்று துரியோதனன் கேட்டான்.

துச்சாதனன் மௌனமாக நின்றான்.

“உண்மையில் நம் தரப்பில் எல்லாருக்கும் அடிமனதில் பாசம் இருக்கத்தான் செய்கிறது துச்சா! எத்தனை வஞ்சம் இருந்தாலும் என்னால் பீமனைத் தவிர்த்து வேறு எந்த பாண்டவனையும் கொல்ல முடியாது. முதல் நாள் போரில்தான் நானும் இதை உணர்ந்தேன். உன்னை அறைகூவினால் ஒழிய நீயும் பீமன் தவிர்த்த பிற பாண்டவர்களைத் தவிர்க்கத்தானே செய்கிறாய்? பீமனை விடு, பாண்டவர்களின் மகன்களைக் கொல்வது கூட நமக்கு சுலபமல்ல. லட்சுமணன் இறந்திருக்காவிட்டால் அபிமன்யுவை துரத்தி இருப்போம், அவ்வளவுதான். நமக்கும் பிதாமகருக்கும் ஆசாரியருக்கும் பெரிய வித்தியாசமில்லை, ஒன்று விட்ட சகோதரர்களுக்கு எதிராகவே நம்மால் முழுமூச்சுடன் போரிட முடியவில்லை. கர்ணனுக்கும் நம் நிலைதான். அவனுக்கு அர்ஜுனன் எதிரி, எனக்கும் உனக்கும் பீமன். மற்றவர்கள் எல்லாரும் சகோதரர்கள்தான். ஆனால் திரௌபதியில் முடியப்படாத கூந்தல் பீமன் மனதில் பாசத்தை முற்றிலும் துடைத்தெறிந்திருக்கிறது, அவனுக்கு நாம் இருவர் மட்டும் எதிரிகள் அல்ல, அவனால் நம் தம்பியரை இரக்கமில்லாமல் கொல்ல முடிகிறது. அர்ஜுனன் மனதில் மிச்சம் மீதி ஏதாவது துளிர்த்தால் அதை கண்ணனின் உபதேசம் அழிக்கிறது.” என்று பெருமூச்செறிந்தான்.

துச்சாதனன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவன் எங்கோ வெறித்தான்.

துரியோதனன் துச்சாதனனின் தலைமுடியைக் கோதினான். அவன் முதுகில் தட்டிக் கொடுத்தான். “இது அத்தனையும் கண்ணனின் திட்டம். இத்தனை நாள் வாயைத் திறக்காத சிற்றன்னை போர் என்று வந்ததும் புதல்வனைத் தேடி வருகிறாள். கர்ணன் தங்கள் பக்கம் வருவான் என்று கண்ணனுக்கு எதிர்பார்ப்பு இருந்திருக்காது, ஆனால் இந்த ரகசியம் அவனை பலவீனப்படுத்தும் என்று அறிந்துதான் செய்திருக்கிறான். பலவீனப்பட்டிருந்தாலும் கர்ணனால் பார்த்தனை வெல்ல முடியும், ஆனால் கிருஷ்ணார்ஜுன ஜோடி அவனை விட பலமானது. அவனுக்கு நல்ல தேரோட்டி வேண்டும்…” என்று துரியோதனன் மிருதுவான குரலில் சொன்னான்.

“கர்ணன் நம்மில் ஒருவன். எனக்கும் உனக்கும் அண்ணன். நமக்கு இருக்கும் அதே தளைகள்தான் அவனுக்கும், இன்னும் சொல்லப் போனால் அவன் நம்மை விட இறுக்கமாகத் தளைப்பட்டிருக்கிறான். அப்படி தளைப்பட்டிருந்தும் இந்தப் போரை நமக்கு சாதகமாக திருப்பக் கூடியவன் அவன் ஒருவனே. இன்று பீமனிடம் தோற்றது அவன் மனதை உறுதிப்படுத்தி இருக்கும், அவனுக்கு இனி எந்தத் தயக்கங்களும் இருக்காது. கண்ணன் காட்டிய வழி நமக்கும் பொருந்தும், தயக்கங்கள் இல்லாமல் நம் அண்ணன் காட்டும் வழியில் நடப்போம், கடமையைச் செய்வோம், பலனை எதிர்பார்க்க வேண்டாம்!”

துச்சாதனன் பதில் பேசவில்லை. துரியோதனன் தம்பியை அணைத்துக் கொண்டான். “வா, இன்று இந்தக் கூடாரத்திலேயே படு, இரண்டு நாழிகையாவது தூங்கு. அப்புறம் மறக்காமல் அனுகூலனுக்கு பெரிய பரிசாக வழங்கு” என்று சொல்லிக் கொண்டே அவனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான்.

26 கருத்துகள்:

  1. வித்தியாசமான சிந்தனையினால் அருமையான கதையைத் தந்திருக்கிறார்.

    இதுபோல பல வித்தியாசமான சிந்தனைகளோடு மகாபாரதச் சிறுகதைகளைப் படித்திருக்கிறேன்.

    இப்படி இருந்திருந்தால், என்ற அளவில் சிறுகதை மனதைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   எனக்கும் இது மாதிரி கதைகள் பிடிக்கும்.  ஒன்றிரண்டு நானும் எழுதியிருக்கிறேன்.  ஒன்றிரண்டு படித்ததை பகிர்ந்திருக்கிறேன்.

      RV யிடம் முதலிலேயே அனுமதி வாங்கி விட்டேன் என்றாலும், இப்போது மறுபடி   மெயில் அனுப்பி இருந்தேன்.  "பத்திரிகை பாணி'யில்  சொல்லவேண்டுமென்றால் "இந்த இதழ் அச்சேறும்வரை பதில் வரவில்லை!!

      நீக்கு
  2. இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் (வரலாற்றில் சொல்லப்பட்டவைகள், அல்லது இதிகாசங்களில் எழுதப்பட்டவைகள்) சிறிது மாறுதலாகச் சிந்தித்து படைப்புகள் எழுதுவதற்கும், கர்ணபரம்பரைக் கதைகள் என, ரசனைக்காக புதுக் கதைகள் சேர்த்து, பிற்காலத்தில் நடந்த வரலாற்றைக் குழப்புவதற்கும் வித்தியாசம் இருக்கிறதா?

    நிகழ்வு நடைபெற்றபோது நாம் இல்லை. ஆனால் எழுதிய வியாசர் சொல்வதைத்தானே வரலாறு என்ற அளவில் எடுத்துக்கொள்ளணும்?

    ரசனையாக எழுதப்பட்ட சிறுகதையை வரஙாற்றுடன் தொடர்புபடுத்த அவசியமில்லைதான்.

    சிறுகதை, உரையாடல்கள் நன்றாக இருந்தது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. இனிய நற்காலை வணக்கம், பெருமக்களே!

    பதிலளிநீக்கு
  4. முதல் பாசிட்டிவ் செய்தி மனதைக் கவர்ந்த செய்தி. இமாம் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    காரில் இருந்தவர்கள் எந்த மதத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலென்ன மனிதர்கள். ஆனால் பாருங்க ஒரு செய்தி கொடுப்பதிலும் கூட மதத்தைச் சொல்லுவதாகியிருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் இதைக் கூட குறிப்பிட வேண்டாம். சட்டென அவர் மனதில் உதித்த ஐடியாவைப் பாராட்டுவோம்.

      வாங்க கீதா...

      நீக்கு
  5. இரண்டாவது செய்தியும் நல்ல செய்தி

    கீதா

    பதிலளிநீக்கு
  6. //ஆனால் எழுதிய வியாசர் சொல்வதைத்தானே வரலாறு என்ற அளவில் எடுத்துக்கொள்ளணும்?// நெல்லைஜி, வணக்கம்.
    வ்யாசர் (#29), அதாவது க்ர்ஷ்ண த்வைபாயனர் எழுதியவை 18,000 ஸ்லோகங்களே (ஜய என்ற பெயரில்). இப்பொழுது 1,00,000 ஸ்லோகங்கள் (மஹாபாரதம் என்ற பெயரில்). அவர் ஆன்மீக த்வனியுடன் எழுதினார். இப்போதுள்ளதில் ஆன்மீகம் நாலாம் பக்ஷம்தான்! உலகம் போற போக்க பாரு டிங்கிரி டிங்காலே! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த 18,000 ஸ்லோகங்கள் தனியாக எதுவென்று தெரிந்து அச்சிட்டிருக்கிறார்களா TVM?

      நீக்கு
  7. கதை மிக அருமை. கர்ணனை நினைத்து என் மனதி ல் எப்பவும் தோன்றும் சிந்தனைகள் சிலிகான் ஷெல்ஃபில் கதையாக.....முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. மிகவும் வித்தியாசமான கோணத்தில் அழகாக எழுதியிருக்கிறார். வார்த்தைக் கோர்வைகள்.

    மஹாபாரதக் கதை முழுவதுமே உளவியல் ரீதியாக ஆராய முடியும். அப்படி மனதில் தோன்றுவதை கற்பனையில் அசத்திவிட்டார் ஆர் வி!...

    //கண்ணன் காட்டிய வழி நமக்கும் பொருந்தும், தயக்கங்கள் இல்லாமல் நம் அண்ணன் காட்டும் வழியில் நடப்போம், கடமையைச் செய்வோம், பலனை எதிர்பார்க்க வேண்டாம்!”//

    அருமை. மிகவும் ரசித்து வாசித்தேன்.

    நான் மேற்கொண்டு ஏதேனும் சொன்னால் பலரும் என்னை அடிக்க வந்துவிடுவாங்க. எனவே அப்பீட்டு கதையைப் பற்றி மட்டும் சொல்லிவிட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் மேற்கொண்டு ஏதேனும் சொன்னால் பலரும் என்னை அடிக்க வந்துவிடுவாங்க. // சும்மா தைரியமா சொல்லுங்க, நாச்சியாரே! நான் பாத்துக்கறேன் :-)

      நீக்கு
    2. ஹாஹாஹா திவமா...வாங்க....அண்ணன் உடையாள் படைக்கு அஞ்சாள்!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. அண்ணன் காட்டிய வழியம்மா என்று ஒரு பாடல் இருக்கிறது. ஆனால் அது சோகம் கலந்தது.

      நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம தளத்துல கொடுத்தேன்னு நினைச்சது இங்க கொடுத்திருக்கிறேன் அதான் டெல்! என்னடா காணலையே நம்ம தளத்துல கொடுத்ததுன்னு பார்த்து குழம்பி....இப்ப இங்க வந்தப்பதான் தெரிந்தது.

      கீதா

      நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்தும் ஆசிரியரால் அகற்றப்பட்டது!

      நீக்கு
  11. இரண்டு பாஸிட்டிவ் செய்திகளும் மனதைத் தொட்டன. கேரளா இமாமும் மதுரை மாநகராட்சிப் பணியாளர்களும் பாராட்டுதலுக்குரியவர்கள். நகையைக் குப்பையில் போட்டவர்கள், ஆட்டோவில்/தெருவில் தொலைத்தவர்கள் திரும்பப் பெற்றவர்கள் பற்றி எங்கள் ப்ளாக்லியே பல தடவை படித்தாகி விட்டது. ஒவ்வொரு நல்ல பாஸிட்டிவ் முடிவு கேஸுக்கும் குறைந்த பக்ஷம் பத்து நெகட்டிவ் முடிவு கேஸ்கள் இருக்கக் கூடும். அவர்களை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. இன்றைய விலையில் 25 பவுன் என்றால் 25 லக்ஷம் ஆயிற்றே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று தங்கம் விற்கும் விலையில்.. அம்மாடி பெரிய காரியம்தான்.

      'இங்கேயும் மனிதர்கள்.. இதயம்தான் உள்ளவர்கள்' என்ற பாடல் கேட்டிருக்கிறீர்களா சூர்யா? வாங்க...

      நீக்கு
  12. ஆர்.எஸ். மனோகர் எப்படி துரியோதனனை விட்டு வைத்தார்? அவர் ஸ்டைலில் அதை ஒரு பாஸிட்டிவ் கேரக்டராக மாற்றி ஒரு ட்ராமா போட்டிருப்பாரே! ஒரு வேளை போட்டாரோ! எனக்குத்தான் தெரியாமல் இருக்கின்றதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'துரி'யை ஆதரித்து அவர் பக்கமாக வழக்காடி எழுதப்பட்ட ஒரு கதையை நான் இங்கு முன்பு பகிர்ந்திருக்கிறேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!