வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் இனிய போகி & பொங்கல் வாழ்த்துகள் !
எங்கள் கேள்விகள் :
1) பொங்கல் திருநாள் என்றதும் உங்கள் நினைவுக்கு வருபவை என்னென்ன?
2) இந்தப் படத்தைப் பார்த்தவுடன், உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன் :
1. சட்டத்தினால் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு, பல வருடங்கள் கழித்து அவர்கள் குற்றவாளி அல்லர் என்று தெரிந்தால், அதற்கு அரசு என்ன தீர்வை வைத்திருக்கிறது? வைத்திருக்கவேண்டும்?
# இதற்கு சட்டத்தில் நஷ்ட ஈடு கொடுப்பதற்கு உண்டான விதிகள் இருக்கும் என்று நினைக்கிறேன் - சரியாகத் தெரியவில்லை. அதற்கான இடம் இல்லாவிடில் கொண்டு வர வேண்டும்.
2. பாவம் பார்த்து ஏமாந்த தருணங்கள் உண்டா?
# உண்டு. அதற்காக பாவம் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்க முடியாது அல்லவா ?
3. இந்த சோஷியல் மீடியா, தொலைக்காட்சிகள் வந்த பிறகு உறவுக்குள் பேச்சுவார்த்தைகள் குறைந்துவிட்டதா? எல்லோரும் மீடியாவில் மூழ்கிவிட்டார்களா?
# மொபைல் கைபேசி வந்த பின், நிச்சயம் குறைந்து விட்டது.
4. மனித மனம் ஏன் தன்னுடைய வயதை ஒத்துக்கொள்ளாமல், இன்னமும் பிறர் அண்ணன், அக்கா, மாமா என்று அழைக்கவேண்டும் என்று விரும்புகிறது? எனக்கு வயதாகவில்லை என்று சொல்லத்தானே எல்லோரும் விரும்புகிறார்கள்.
# அப்படி விரும்புகிறார்களா என்ன ? நான் என் வயது பற்றி பெருமைப் படும் ஆள். அதுவும் சரியல்ல என்பது புரிந்தாலும் ...
5. கோயில்களுக்குச் செல்லும் வழக்கம் உண்டா? நீங்களாகச் செல்வீர்களா அல்லது வீட்டில் உள்ளவர்கள் விருப்பத்துக்காகச் செல்வது உண்டா?
# வழக்கம் உண்டு. நானாக செல்வது மட்டுமில்லாமல் இன்னும் சிலரையும் அழைத்துக் கொண்டு செல்வது இன்னும் அதிகம் பிடிக்கும்.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 'பராசக்தி' என்று ஒரு படம் வரப்போகிறது. உங்கள் மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?
& இந்தி எதிர்ப்புப் போராட்டம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பரவிய 1965 கால கட்டத்தில் என்னுடைய சிறிய அண்ணன்தான் எஸ் எஸ் எல் சி படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் இ எ போராட்டத்தில் கொஞ்சம் பங்குகொண்டார் என்று ஞாபகம்
நான் ஜூனியர் டெக்னிகல் ஸ்கூல் படித்த காலத்தில், (1965/66) பாலிடெக்னிக் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எங்களையும் சேர்த்துக்கொண்டு ஊர்வலமாக சென்றார்கள். (குள்ளன் சாஸ்திரி - ஒழிக என்பது போன்ற கோஷம் எழுப்பிய ஞாபகம்) பாலிடெக்னிக் அருகே ஊர்வலம் சென்றவுடன் பாலிடெக்னிக் & ஜே டி எஸ் ஒரு வாரமோ அல்லது 10 நாட்களோ லீவு என்று அறிவித்தார்கள். போராட்டம் வெற்றி என்று சொல்லி எல்லோரும் வீடு திரும்பினோம்.
சின்ன வயதில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வல கார்களிலும், கல்யாணத்தில் மணமக்களை உட்கார வைக்கும் ஊஞ்சலிலும் அடித்து,பிடித்து இடம் பிடித்ததுண்டா?
# இல்லை. காரணம் என் இளவயதில் கார் ஊர்வலத் திருமணம் அபூர்வத்திலும் அபூர்வம். என் பதினெட்டு வயது சமயத்தில்தான் உறவுக் கல்யாணத்தில் கார் ஊர்வலம் நடந்தது. காரே கிடைக்காமல் இரவு 9க்கு மேல் ஜானவாசம் .
நான் முதலில் காரில் பயணித்தது என் இருபது வயதில்.
கே. சக்ரபாணி சென்னை:
இவ்வளவு வருடங்களாக தங்கத்தை பேங்க்கில் வைத்து லோன் வாங்கியிருந்தார்கள். ஆனால் இனிமேல் தங்கம் வாங்குவதற்கே லோன் வாங்கவேண்டும் போலிருக்கிறதே!
# கருக்காத பித்தளை என்ற பெருமைக்குரிய தங்கம் இவ்வளவு விலை உயர்வது ஒரு சுவாரசியம்.
கருப்புப் பணம் தங்கமாக சேமிக்கப் படுகிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது.
= = = = = = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
சமீபத்தில் மதுரையில் ஹோட்டல் சபரீஷில் ஐந்து வகை ஊத்தப்பம் வாங்கிச் சாப்பிட்டேன். அவர்களிடம் ஏழுவகை ஊத்தப்பம் என்றொரு ஐட்டம் இருக்கிறது, ராகி மற்றும் மில்லட் ஊத்தப்பம் என்று நினைவு. அப்போது மாவு தயாராக இருந்திருக்கவில்லை. ஐந்து ஊத்தப்பத்தில் கேரட், கீரை, பொடி, ஆனியன் மற்றும் இன்னொரு வகையும் இருந்திருக்கும். நான் இரண்டு ஆனியன் ஊத்தப்பமாக இருக்கட்டும் என்று கேட்டதால் இப்படித் தந்தார்கள். விலை அதிகமில்லை (முருகன் இட்லியில் ஒரு ஆனியன் ஊத்தப்பமே 155 ரூபாய்). ஆனியன் என்றால் சிறிய வெங்காயமே உபயோகிக்கின்றனர். நான் இட்லி மி.பொடி வாங்கிக்கொண்டேன். அவ்வளவு ருசியாக இருந்தது.
நெல்லையில் தங்கியிருந்த ஹோட்டலில் பஃப்ஃபே முறையிலான காலை உணவு. ஹோட்டலிலேயே செய்வதால், தினமும் நெல்லை புகழ் அல்வாவையே இனிப்புக்கு வைத்திருந்தார்கள். (எப்படித்தான் கட்டுப்படியாகின்றதோ). நான் (ங்கள்) ஒவ்வொரு முறையும் பல அல்வாத் துண்டுகளை எடுத்துக்கொண்டோம் (எண்ணிக்கையைச் சொல்லி, எதற்கு வயிற்றுவலியை வாங்குவானேன்). ரொம்ப ருசியாக இருந்தது. நெல்லையில் சுவையான அல்வா, பல கடைகளில் கிடைக்கும். அதிகபட்சம் கிலோ 400 ரூபாய்.
= = = = = =
உங்களுக்கெல்லாம் மகாபாரத யுத்தம் நடந்தது குருக்ஷேத்திரத்தில் என்பது தெரிந்திருக்கும். அது சுமார் 20 மைல் சுற்றளவுள்ள பகுதி. மஹாபாரதம் குறிப்பிடும் அத்தகைய பெரிய சேனைகள் யுத்தம் புரிந்த இடம் என்பதால் மிகப் பெரிய பரப்பளவுள்ள இடம். நான் துரியோதனன் ஒளிந்திருந்த மடு, அபிமன்யூ சக்ரவியூகத்தில் மாண்ட இடம் என்று பல இடங்களுக்குச் சென்றேன். அதில் ஒன்று மேலே உள்ள, கர்ணன் தேர் அழுந்திய இடமும் ஒன்று. இந்த இடமே பல ஏக்கர் கணக்கில் விரிந்திருக்கிறது, தொல்லியல் துறை வசம் இருக்கிறது. இங்கு நடந்துசென்று, கர்ணன் தேர் அழுந்தியதாகக் கருதப்படும் இடம், அருகிலிருந்த கிணறு போன்ற பகுதிகளைப் பார்த்தேன். இதுபற்றி ஒரு தொடரில் எழுதுவேன் என்றாலும், புதனில் ஓரிரு படங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது.
இந்த இடத்திற்கு நான் சென்றதே கொஞ்சம் அதிசயம்தான். ஆறு பேர்கள் கொண்ட குழுவாக ஆட்டோக்களில் எங்களை வேறு பல இடங்களுக்கு அனுப்பினார்கள் (கீதா உபதேசம், பீஷ்மர் அம்புப்படுக்கை, பாலாஜி கோயில் என்றெல்லாம்). எங்கள் ஆட்டோ கடைசியாக வந்துகொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக்கொடுத்து, பல்வேறு இடங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, கர்ணன் தேர் அழுந்திய இடம் நான்கு கிமீ தூரத்தில்தான் இருக்கிறது, போய் வருவதற்கு 500 ரூபாய் அதிகம் ஆகும் என்றார். உடனே எல்லோரும் சம்மதித்து அங்கு சென்று பார்த்து படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம். எங்கள் ஆறு பேருக்கு மாத்திரம் அந்த வாய்ப்பு கிடைத்தது. (என் மனைவி உடம்பு சரியில்லாததால் அன்று அறையிலேயே தங்கிவிட்டார்)
தேர் அழுந்திய பகுதி (இங்குதான் கர்ணன் இறந்தான்)
= = = = = = = =
KGG பக்கம்.
முன்பெல்லாம் (1970, 71 etc ) டிசம்பர் / ஜனவரி மாத காலங்களில், சென்னை விழாக்கோலம் பூண்டிருக்கும்.
1) கர்நாடக சங்கீத இசை விழாக்கள்.
நேத்திக்கி அகாடெமில சந்தானம் பாடினார் பாருகோ ஒரு மோகனம் - அடடா பிச்சு ஒதறிட்டார்!
" என்னவோ இந்த ரவி ரகு மாலி போல ஃப்ளூட் வாசிக்கிறாங்க என்று சொல்லறாங்க.. ஆனா இவங்க மாலியினுடைய பிணத்தின் நிழல் பக்கம் கூட நெருங்கமுடியாது " (என்னுடைய சித்தப்பா சொன்னது)
2) பொங்கல் டிரேட் ஃபேர் என்னும் பொங்கல் சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சி.
" டேய் ஏதுடா இந்த ட்ரான்சிஸ்டர் ரேடியோ ?"
" பொங்கல் டிரேட் ஃபேர் கடையில வாங்கினேன் "
" டிரேட் ஃபேர் கடையில் மட்டும் எப்பிடிடா இவ்வளவு பெரிய அப்பளம் பொரிச்சு விக்கிறாங்க ?"
" டெல்லி அப்பளமாம். மேலே ஏதோ காரப்பொடி தூவி தருகிறார்கள்! டேஸ்ட் சூப்பர் !"
3) பொங்கல் சீசனில் நிச்சயம் ஒரு சர்வ தேச கிரிக்கட் - 5 நாள் போட்டி நடைபெறும்.
" என்ன இருந்தாலும் ஃப்ராங்க் வோரல் போல ஷாட் அடிக்க ஒரு ஆள் பிறந்து வரணும். "
" அதெல்லாம் நம்ம என்ஜினீயர் கிட்ட நடக்காது. ஒரே விநாடியில stumping பண்ணி வீட்டுக்கு அனுப்பிடுவான் ! "
" ஐயோ சர் தேசாய் விளையாட வந்துட்டான்டா ரன் எடுக்காம டொக்கு வெச்சிக்கிட்டே இருப்பான்டா .."
4) காணும் பொங்கல் அன்று நகரப் பேருந்துகளில் இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு (விடுமுறைப் பயண) டிக்கெட் வாங்கிக்கொண்டுவிட்டால் அதை அன்று முழுவதும் நகரப் பேருந்துகளில் அந்த பயணச் சீட்டைக் காட்டி எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
காணும் பொங்கல் அன்றைக்கு மியூசியம் (சென்னை நகர slang பாஷையில் செத்த காலேஜ் !) அல்லது ஜூ (சென்னை நகர slang பாஷையில் உயிர் காலேஜ் !) பக்கம் போனோம் என்றால் நம்மால் எதையும் உருப்படியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது. பாமர மக்களின் கூட்டத்தில் நம்மை அவர்களே பிழிந்து தூக்கிக் கொண்டுபோய் எங்காவது மூலையில் ஒதுக்கிவிடுவார்கள்!
ஆக, மார்கழி மாதம் முழவதையும் உற்சாகமாக கழிக்கலாம்!
இப்போது அப்படி எந்தக் கொண்டாட்டங்களும் இரசிக்கும்படியாக இல்லை என்று நினைக்கிறேன்.
= = = = = = = = = = =

இனிய பொங்கல் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி. உங்களுக்கும் வாசகர்களுக்கும் வாழ்த்துகள்.
நீக்கு//உங்கள் மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?// பொறக்கலீங்கோ. பள்ளிக்கூட காலத்ல ஹிந்தி படிச்சேன்- ப்ரவீண் வரை. உண்மையை சொல்லணுமானா, படிக்காட்டி எங்கப்பா விட்டிருக்க மாட்டார். :-)
பதிலளிநீக்குஹிந்தி டீச்சர் மேஜையில் ரமண பகவான் ஃபோட்டோ இருக்கும். அப்டிதான் அவர் அருள் வலையில மாட்டினேன். ஆனால் அந்த டீச்சரிடம் ஒரு முறை கூட பாடம் தவிர்த்த எதுவும் பேச அனுமதியில்லை!! ரொம்பவே முசுடு :-)
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு//சட்டத்தினால் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு, பல வருடங்கள் கழித்து அவர்கள் குற்றவாளி அல்லர் என்று தெரிந்தால், அதற்கு அரசு என்ன தீர்வை வைத்திருக்கிறது? வைத்திருக்கவேண்டும்? // அமெரிக்காவில் பல மில்லியன் டாலர்களுக்கு கேஸ் போட்டு பென்னம்பெரும்பாலும் ஜெயித்து விடுவார்கள்! என்னைப்பொறுத்தவரை அதுதான் சரியும் கூட.
பதிலளிநீக்கு//பாவம் பார்த்து ஏமாந்த தருணங்கள் உண்டா? // ஐயோ பாவம்! ;-)
பதிலளிநீக்குபதிவுத் தலைப்பு எதிர்மறையாக இல்லாமல் 'பாவம் பார்க்காமல் வருத்தப்பட்ட தருணங்கள் உண்டா?' என்றிருந்தால் தன்னைத் தான் உணர்ந்து வருந்துகின்ற உன்னதமாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு நன்றி என்று சப்பையாக பதிலளிக்காமல் உணர்வு பூர்வமாக உங்கள் அனுபவத்தில் உணர்வாக நான்கு வரிகள் எழுதவும். இது எபி வாசகனின் அன்பான வேண்டுகோள்.
நீக்குபோதை என்ற வார்த்தையைப் பார்த்து டாஸ்மாக் நோக்கி நடக்கும் மக்கள்தாம் தமிழகத்தில் அதிகம். அதிலும் இப்போதுதான் 3000 கிடைச்சிருக்கும். இதில் போதை ஒழித்து என்ற வார்த்தைகளைப் படிக்கும் பொறுமை இருக்குமா?
பதிலளிநீக்குகமுகு (பாக்கு) மரங்கள் படம் ஒன்றையும் தோற்றவில்லை.
பதிலளிநீக்குசிறு வயதில் ஒரு பொங்கலுக்கு காட்டு பாளையம் என்ற கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்ததும், கொண்டாடியதும் ஞாபகத்தில் வருகிறது.
தண்டிக்கப்படாவிட்டாலும் தவறுதலான கைதுக்கு எதிராகப் பல வருடங்கள் போராடி 50 லக்ஷம் இழப்பீடு வாங்கினார் நம்பி நாராயணன்.
Jayakumar
பொங்கல் திருநாள் என்றதும் மூன்றாம் வகுப்பு படித்த சமயத்தில் பரமக்குடியில் அப்பாவுடன் சந்தைக்குச் சென்று நானும் சகோதரனும் கரும்பைத் தூக்கி வந்த நினைவு வருகிறது..
பதிலளிநீக்குமற்றபடி பொங்கல் என்றதும் வேறு நினைவுகள் இல்லை. பெங்களூர் வந்த பிறகு, போகி, பொங்கல் அன்று மாத்திரமே மஞ்சக் குலை கிடைக்கும் என்பதால் மறக்காமல் வாங்கி வந்துவிட வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு மாத்திரம் மனதில் இருக்கும். தபிழர்கள் மாத்திரமே இந்தப் பழக்கம் கொண்டுள்ளதால் அதற்குப் பிறகு பசுமஞ்சள் மாத்திரமே கிடைக்கும், இலை நஹி
தங்கம் வாங்குவதற்கே..... உலக நாடுகள் மத்தியில் டாலர் மீதான நம்பகத் தன்மையும் அதனைக் கட்டுப்படுத்துபவர் மீதான நம்பகத் தன்மையும் குறைந்ததால், தங்கத்தை வாங்கி வைக்கறாங்க. அதுவே கடந்த பதினைந்து மாதங்களில் எண்பது சத்த்திற்கைம் அதிகமான விலையேற்றத்திற்குக் காரணம். வெள்ளியும் 80 ருபாயிலிருந்து 160-200 பக்கம் சென்றுவிட்டது.
பதிலளிநீக்குஇனி பஞ்சலோகச் சிலை என்றால் பஞ்சம் என்பதால் தங்கம் வெள்ளி இல்லாது செய்த சிலை என்றுதான் பொருள் கொள்ளணும் போலிருக்கு.
படத்தில் உள்ள தண்டுகளைப் பார்க்கும்போதெல்லாம் பல குடியிருப்பு வளாகங்களில் (எங்களதும் உட்பட) ஏகப்பட்ட அளவில் தென்னை/ஈச்சை இலை போன்று நிறைய இலைகளுடன் வளர்க்கும் குறு மரங்கள் நினைவுக்கு வருகிறது. நிழல் இல்லாமல் ஆனால் பச்சைப் பசேலென்று காட்சி கொடுக்கும் இவைகளினால் என்ன லாபம்?
பதிலளிநீக்கு