ஏன் இந்த மயக்கம்..
பானுமதி வெங்கடேஸ்வரன்
"என்னாச்சு?" நன்னாத்தானே
இருந்தார்..? பதறினார்கள் அம்மாவும், அப்பாவும்.
"தெரியலை, இதுக்கு முன்னால
இப்படி நடந்திருக்கா?" என்று கேட்டான் ராகுல்.
"இல்ல.. என்னாச்சுனு தெரியலையே?" தாத்தா மெல்ல கண்விழித்தார். அவருடைய கண்களைத் துடைத்து, கொஞ்சமாக தண்ணீர் அருந்தச் செய்து, மின்விசிறியை சுழல விட்டு, ஜன்னல் கதவை திறந்தான் ராகுல். தாத்தாவின் பார்வை அவன் மீதே நிலைத்தது.
"ராகுல்.." என்று அவர் என்னவோ சொல்லத்
தொடங்க ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.
"ஆம்புலன்ஸெல்லாம் எதுக்கு? ஐயாம் ஆல்ரைட்"
என்றார் பலவீனமாக.
நான் ஆம்புலன்ஸில் போறேன், நீ பின்னால வா"
என்ற அப்பா, சட்டையை மாட்டிக் கொண்டார்.
ஆஸ்பத்திரியில் வழக்கமான பரிசோதனைகள் எல்லாவற்றையும்
செய்தார்கள். "பி.பி. நார்மல். இஸ் ஹி டயபடீக்?"
"நோ.."
"குட்! தேவையான அளவு தண்ணி குடிக்கறாரா?,
டீ ஹைட்ரேஷனால் கூட மயக்கம் வரும்"
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல், ராகுலின்
அப்பா தன் அப்பாவை பார்த்தார். அவர் தேவையான அளவு தண்ணீர் குடிக்கிறேன் என்பது போல
தலையசைத்தார்.
"கவலப்படும்படி எதுவும் இருக்கறதாக தெரியவில்லை.
அப்சர்வேஷன்ல இருக்கட்டும். ரிசல்ட் வரட்டும் பார்க்கலாம்" என்ற டாக்டர். நர்ஸிடம்
"N S மட்டும் ஸ்லோ ஐ.வி.ல குடுங்க" என்று கூறி விட்டு, இவர்கள் பக்கம் திரும்பி, "வெயிட்
பண்ணுங்க," என்று சொல்லிவிட்டு, தன் அறைக்குத் திரும்பினார்.
ராகுலும், அவன் அப்பாவும் வெயிட்டிங் லவுஞ்சில் போடப்பட்டிருந்த ஜில்லென்றிருந்த மெட்டல் நாற்காலிகளில் அமர்ந்து, தங்கள் செல் ஃபோன்களை எடுத்துக் கொண்டனர். சற்று நேரத்தில் நீரஜா அழைத்தாள். ராகுல் ஃபோனை எடுத்துக் கொண்டு சற்று தள்ளிச் சென்றான்.
எதிர் முனையில் "என்ன சொல்லிட்டயா?"
என்றாள் ஆர்வ நீரஜா.
"எங்க..? தாத்தாக்கு உடம்பு சரியில்லை,
ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கோம். இப்போ நானும், அப்பாவும் ஹாஸ்பிடலில்தான் இருக்கோம்."
"அடப்பாவமே என்னாச்சு?"
"நான் தாத்தாகிட்ட.." என்று அவன்
ஆரம்பிக்க, அவன் அப்பா, அவனை கையசைத்து அழைத்தார். "அப்பா கூப்பிடறார், ஐ வில்
கால் யூ லேட்டர்" என்று செல்ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அப்பாவை நோக்கி
நடந்தான்.
"ரிசல்ட் எல்லாம் வந்துடுத்தாம், டாக்டர்
கூப்பிடறார்" என்றபடியே அப்பா டாக்டரின் கன்சல்டேஷன் அறையை நோக்கி நடக்க, ராகுலும்
பின் தொடர்ந்தான்.
உள்ளே நுழைந்தவர்களை உட்காரச் சொல்லி கை காட்டிவிட்டு, மூக்கு கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார். மேஜையில் இருந்த ரிப்போர்ட்டுகளை பிரித்துப் பார்த்தவர், "நத்திங் அலார்மிங். அவர் வயசுக்கு ஹீ இஸ் குட்! ட்ரிப்ஸ் ஏத்தி முடிச்சதும் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்" என்று மருத்துவ ரிப்போர்ட் ஃபைலை இவர்கள்பால் தள்ளினார். பிறகு நர்ஸை அழைத்து, பேஷண்ட் சுந்தர்ராஜன் டிஸ்சார்ஜுக்கு ரெடி பண்ணுங்க" என்றார்.
இவர்கள் டாக்டருக்கு நன்றி கூறி, வெளியே வந்து, பணம் கட்ட காத்திருந்த பொழுது, அம்மாவிடமிருந்து
ஃபோன் வந்தது.
"என்னடா, ரெண்டு பேரும் ஃபோனை எடுக்க
மாட்டேங்கறீங்க? தாத்தா எப்படி இருக்கார்?"
"இங்க சிக்னல் பிராப்ளம் இருக்குமா, தாத்தாக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, ஹி இஸ் ஆல்ரைட், இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவோம்."
வீட்டிற்கு வந்து சாப்பிட்டு, ஓய்வு எடுத்துக்
கொண்டார்கள். மாலை காபி அருந்தும்போது தாத்தா அவனிடம், "நீ எங்கிட்ட சொன்ன விஷயத்தை
உங்க அப்பா, அம்மாவிடம் சொன்னாயா?" என்றார்.
'என்னது' என்பது போல அம்மாவும், அப்பாவும் பார்க்க,
தாத்தா குறும்பாகச் சிரித்தபடியே, "அவன் சொன்ன விஷயத்தை கேட்டுதான் எனக்கு மயக்கமே
வந்தது" என்றார்.
"அப்படி என்னடா சொன்ன?' என்றார் அப்பா.
ராகுல் தர்மசங்கடமாய் நெளிந்தான். "என்னடா
அசடு வழியற? லவ் மேட்டரா? தைரியமா சொல்லு, நீ ஜாதி விட்டு ஜாதில கல்யாணம் பண்ணிக்க
போறதா இருந்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்ல" என்று ரொம்ப பரந்த மனதோடு சொல்ல,
"யெஸ், நோ." என்ற ராகுல் தொடர்ந்து,
தன் செல்ஃபோனைத் திறந்து, "ஷி இஸ் நீரஜா, நான் இவளதான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு
இருக்கேன்" என்றவன் சிறிது இடைவெளி விட்டு "இவளும் நம்ம ஜாதிதாம்பா"
என்றான்.
"என்னது? எனக்கே மயக்கம் வரும் போல இருக்கே.."
என்றதும், தாத்தா, "எனக்கு மயக்கம் வந்ததில் என்ன ஆச்சர்யம்? என்னோட பேரக் குழந்தைகளில்
இண்டர்காஸ்ட் மேரேஜ் பண்ணிக்காத முதல் ஆசாமி இவன்தான். சரி, சீக்கிர்ம் நிச்சயதார்த்ததிற்கு
ஏற்பாடு பண்ணுங்க" என்றார்.
ராகுல், "சக்ஸஸ்" என்று நீரஜாவிற்கு மெசேஜ் அனுப்ப, அவள் முத்த ஸ்மைலி ஒன்றை பதிலாக அனுப்பினாள்.



வித்தியாசமான கதை. தாத்தாவை தூக்கிட்டு ஹாஸ்பிடல் ஓடுற குடும்பம், எல்லாருக்கும் வரும் பதற்றம், கடைசில எல்லாம் நல்லபடியா முடிகிறது—இந்த எல்லாமே கதையை லைட்டா, ஆனால் சொல்ல வர்ற விஷயத்தை ஸ்ட்ராங்கா கொண்டு போகுது. பெரிய உபதேசமோ, கனத்த பேச்சோ இல்லாம, சும்மா சாதாரண குடும்பக் கதையா சொல்லிக்கிட்டே சமூக விஷயங்களை நம்ம மனசுல நுழைய வைக்கிற இந்தக் கதை ரொம்ப அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கு. பேரன் “அதே சாதியைச் சேர்ந்தவரை காதலிக்கிறேன்”ன்னு சொன்ன உடனே தாத்தா மயங்கிப் போறது—இதிலேயே கதையின் ட்விஸ்ட் அட்டகாசமா வேலை செய்கிறது. படிச்சதும் சிரிச்சுக்கிட்டே “நாம இன்னும் இப்படி யோசிக்கிறோமா?”ன்னு ஒரு நிமிஷம் நின்று யோசிக்க வைக்கிறது—that’s the beauty of it.
பதிலளிநீக்குஉற்சாகமூட்டும் பாராட்டுக்கு மிக்க நன்றி.
நீக்குஒரே ஒரு ஊர்லே என்ற கதையை எழுதிய "ஸ்கை" யார் என்ற விவரம் வெளியிடப்பட்டதா? சமயத்தில் நான் ஒரிரண்டு வாரங்கள் எங்கள் ப்ளாக் பக்கம் வராமல் இருந்ததுண்டு. "என்னது? எம்ஜியார் செத்துட்டாரா" என்று கேக்கிறியே என்று காலை வாராதீர்கள்(: ஸ்கை மர்மம் விடுபட்டதா இல்லையா? இரண்டாம் பாகம் வருகின்றதா இல்லையா?
பதிலளிநீக்குஸ்கை அவர்களுக்கு உங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறோம். அவர் பதில் அனுப்பினால் சொல்கிறோம்.
நீக்கு@ஸுர்யா: உங்களுடைய ஞாபக சக்தியை பாராட்டுகிறேன். எனக்கு மறந்து விட்டது.
நீக்குஎனக்கும் இந்த கதையைப் பற்றி (ஸ்கை அவர்கள் எழுதிய கதை) கேட்க மறந்து விட்டது. ஆனால், நினைவாக கேட்ட சகோதரர் சூர்யா அவர்களின் ஞாபக சக்திக்கு உளம் கனிந்த பாராட்டுக்கள். ஸ்கை அவர்களின் பதிலை நானும் எதிர்நோக்குகிறேன். நன்றி.
நீக்குநான் அப்பவே ஒரு யூகத்தில் வந்ததை க்ளூவாகக் கொடுத்த நினைவு. வானத்தை அண்ணாந்து பார்த்து எல்லாரும் கொஞ்சம் யோசித்துப் பாருங்க ஸ்கை விடை சொல்லும்னு!!!!
நீக்குகீதா
அவன் அவன் பொண்ணு கிடைக்கலியே என்று நித்ய பிரம்மச்சாரியாய் இருக்கிறான். நீங்க என்னடான்னா சேம் கேஸ்டீல் லவ் என்று 'கதை' விடுகிறீர்கள்!
பதிலளிநீக்குJayakumar
ஹஹாஹா! அதுதான் முதலிலேயே இது ஒரு ஜாலி கதை என்று disclaimer போட்டு விட்டேனே.
நீக்குஜெ கே அண்ணா உங்க கருத்து வாசித்து சிரித்துவிட்டேன். ஆனா பாருங்க இப்பலாம் பெற்றோர் பையன் யாரையேனும் பார்த்துக் கொண்டால் நல்லது ஹப்பாடா என்று ஆசுவாசப்படத் தொடங்கியாச்சு!
நீக்குஅதே சமூகத்தைச் சார்ந்த பெண்ணை லவ் இப்ப சமீபத்தில் கூடக் கேள்விப்பட்டேன், அண்ணா.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய கதை வித்தியாசமான கதை. ஆரம்பம் முதற் கொண்டு நம்மையும் பதற்றத்துடன் ஆஸ்பத்திரி ஓட வைத்து, இறுதியில் சுபமாக முடிய வைத்த கதை. குடும்பத்தில் எல்லோருமே , லவ் மேரேஜுக்கு எதிர்பார்ப்புடன் ரெடியாக இருந்த போதிலும், கடைசியில் தாத்தா தன் மயக்கத்திற்கு சொன்ன காரணமான வார்த்தைகள் கதைக்கு நல்லதொரு ட்விஸ்ட். வித்தியாசமாக யோசித்து சுருக்கமாக கதைகள் எழுதும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி. சில சமயங்களில் காணாமல் போய் விடுகிறீர்களே? என்னுடைய வலைப்பூவிற்கும் கூட கடைசி இரண்டு பதிவுகளுக்கு வரவில்லை.
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குஹா ஹா ஹா. அடிக்கடி நான் மாயமாவதற்கும், அந்த "மாயவன் மாதவன்தான்" காரணம். உங்களின் பதிவுகளுக்கு மட்டுமல்ல.. எல்லோரின் பதிவுகளுக்கும் இப்போது உடனுக்குடன் என்னவோ என்னால் வர இயலாமல் போய் விடுகிறது. மன்னித்துக்கொள்ளுங்கள். (அனைவருமே) ஆயினும் தாமதமாகவும் வந்து விடுகிறேன். அதற்கு "அவனுக்கும்" நன்றி. இப்போது விடுபட்ட பதிவுகளை படித்து (சகோதரி கோமதி அரசு, கீதாரெங்கன் அவர்களது பதிவுகளை) கருத்திட்டு கொண்டிருக்கிறேன். உங்களின் கனடா டைரியையும் ரசித்துப் படித்து விட்டேன். இதோ வருகிறேன். .நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பானுக்கா, சூப்பர் கதை. நல்ல ட்விஸ்ட்! கடைசில அடுத்த ட்விஸ்ட்!
பதிலளிநீக்குஇப்ப பலருக்கும் பழகிய ஒரு விஷயம் மாறி நடந்தால்தான் ஆச்சரியம்! என்கிறது கதை.
நல்லாருக்கு பானுக்கா
கீதா
நன்றி கீதா. பொருத்தமான, அழகான படங்களை இணைத்ததற்கும் நன்றி.
நீக்குபயங்கர டுவிஸ்ட்தான்!
பதிலளிநீக்கு:)) __/\__
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குதாத்தாவுக்கு வந்த மயக்கம் அற்புதம்...
பதிலளிநீக்குஅழகான சிறுகதை... இப்படித்தான் வேண்டும்
பாராட்டுக்கு நன்றி __/\__
நீக்கு/அழகான சிறுகதை... இப்படித்தான் வேண்டும்/
நீக்குஎனக்கு எப்பவுமே பாசிட்டிவ் எண்டிங்க் இருக்கும் கதைகள்தான் பிடிக்கும். அந்த வகையில் துரை செல்வராஜ் அவர்களின் கதைகளை மிஸ் பண்ணுகின்றேன். மாமியாரையோ மருமகளையோ வில்லாதி வில்லியாக்கி நாலு பேரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ரெண்டு பேரைக் கொன்னு வாசகர்களைப் பிழியப் பிழிய அழ வைக்கும் கதைகள் எனக்குப் பிடிக்காது. வகுப்பறை இணையதள வாத்தியார் சுப்பையாவும் துரை செல்வராஜ் போல் சுபமாக முடியும் சிறுகதைகளை எழுதுவதில் வல்லவர். அவரும் இப்போது சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டார். சிம்பிள் ஜாலியான கதைகள்தான் (இன்றைய கதை போல்) என் சாய்ஸ்.
பானு அக்காவின் One of the Best என்று.படித்ததுமே தோன்றி, உடனே அவருக்கு ஃபோனில் அதை சொல்லியும் விட்டேன்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம். ரொம்ப நாளைக்கப்புறம் பானுக்கா ஸ்டைலில் கதை. அவங்களும் எங்கிட்ட சொல்லிட்டிருநாங்க, "நீங்க நான் இப்ப எழுதறதுல உங்க ஸ்டைல் இல்லைன்னு சொல்லிட்டே இருந்தீங்க" என்று சொன்னார்.
நீக்குஅதான் இப்ப மீண்டும் அக்கா பழைய படி!!!
அக்கா உங்க பாணியை யாருக்காகவும் மாத்திக்காதீங்க வேற வேற ஜெர்னர் முயற்சி செய்தாலும்..அதிலும் உங்க பாணிதான் இருக்கணும்னு அடிக்கடிச் சொல்வேன்.
கீதா
அதானாலேயே கூட வேறெதுவும் இன்று இணைக்கவில்லை.
பதிலளிநீக்கு//அதானாலேயே கூட வேறெதுவும் இன்று இணைக்கவில்லை.// ஆஹா! மிக்க நன்றி.
நீக்குகதையை வெளியிட்ட எ.பி.க்கும், பொருத்தமான படங்களை இணைத்த கீதாவிற்கும் மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குஓ அக்கா!!! பானுக்கா....!!!!! ஓகே வெல்கம்னு சொல்லிக் கொள்கிறேன் ஹாஹாஹா
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய கதைக்கு பொருத்தமான படங்களை ரசித்தேன். இதை கருத்துடன் கூற நினைத்தும் மறந்து விட்டது. சிறப்பான படங்களும் நல்ல கதைக்கு உடன் நின்று பொலிவூட்டுகின்றன. இதை அமைத்தவர் சகோதரி கீதாரெங்கன் என்பதை தெரிந்து கொண்டேன். திறமைகள் மிக்க சகோதரி கீதாரெங்கனுக்கும், உங்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். இருவருக்கும், என் மனமார்ந்த வாழ்த்துக்களும். பாராட்டுக்களும். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹோ கமலாக்கா!!! ஹாஹா சரி சரி உங்களுக்கும் வெல்கம்!!
நீக்கு...இதில் திறமை எதுவும் இல்லைக்கா...பெரிசா. நாம் என்னன்னு போடுறோமோ அதை ஜெமினியோ சாட்ஜிபிடி யோ தரும் அவ்வளவுதான். அதுங்க மூளைய ரொம்பக் குழப்பிக்கிடறது இல்ல!! நாமதான் அதுக்குப் புரியறா மாதிரி கொடுக்கணுமா இருக்கு.
அதற்கும் அயற்சி வந்துவிடுகிறது போலும். கொஞ்சம் நேரம் ஆனதும் நாம் மாற்றிக் கொடுத்தாலும் அதே படத்தைத் திரும்பத் திரும்பக் கொடுத்துக் கொண்டே இருக்கும். நாம அதை விட சலிப்புடன் மூடிவிடுவோம்!!!! எனவே இதற்கு நேரமும் பொறுமையும்தான் இருக்க வேண்டும். வேறொன்றும் இல்லைக்கா...
கீதா