20.2.26

பாம்பு பால் குடிக்குமா? பாம்பிடம் இருக்கும் மாணிக்கக் கல்

 

2025 விஜயபாரதம் தீபாவளி மலரில் விமலா ரமணி எழுதிய சிறுகதை "புற்று"

கதைக்கு காலுண்டா என்று கேட்கலாம்.  ஆனால் சில விஷயங்கள் இயற்கையோடு ஒத்துப்போகவேண்டும் அல்லவா?  அங்கே அபப்டி நடந்ததது என்று வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லலாம்.  அந்தக் கருத்தை முறியடிக்கிறது கதையின் கடைசி வரிகள்!

பாம்பு பால் குடிக்குமா?

குடிக்காது.  உண்மையில் இணை சேரும் காலத்தில் இணையை அழைக்க அது உண்டாக்கும் ஒரு வித மணத்தை அடக்க பால் பயன்படும் என்று படித்த நினைவு.  கதையைக் கொஞ்சம் பார்க்கலாம்...

வாசுகி அம்மாள் புற்றுக்கு பால் ஊற்றிவிட்டு, விளக்கேற்றிவிட்டு கண் மூடி ஒரு திமிடம் நின்றாள்.  அவள் முன் கடந்த காலம் இரவு பகல் ஒளி மாதிரி மாறி மாறி சந்தியா பொழுதின் ஒரு நொடிப்பொழுதாக | தோன்றி மறைந்தது..

பாம்புக்கு மகுடி இறுதி இசை. மீனுக்கு தூண்டில் புழு லாஸ்ட்

இவளுக்கு? எதுவுமில்லை. அதனால தான் இறுதியின் இலக்கு தெரியாமல். அல்லாடிக் கொண்டிருக்கிறாள். வாழ்வின் கடைசி பக்கம் எங்கோ ஒளிந்து இருக்கிறது.

அன்பான பெண்ணுமாக மகன். மருமகள். இரண்டு அருமை ஆணும் பேரப் பிள்ளைகள். ஆனால் ஒரு வெற்றிடமுண்டு. அது இவளின் நெற்றி.

கணவன் உயிரோடு இருந்தபோது இந்த புற்றுக்கு பால் விட்டு இருவருமாக பூஜை பண்ணி இருக்கிறார்கள். வாழும் பாம்பு. இந்த புகுந்த வீட்டோடு வாழும் பாம்பு.

"அம்மா பயமா இருக்கு. நீ புற்றுக்கு பாலூத்தறேன்னு போகும்போது அந்த பாம்பு வெளியில வந்தா...?" மகன் பயப்படுவான். இவள் சிரிப்பாள். "போடா மக்கு நானே அந்த பாம்பைப் பார்த்தது இல்ல. வாழும் பாம்பு அது. யாருக்கும் கெடுதல் பண்ணாது. நான் பால் மட்டும் ஊத்திட்டு போயிடுவேன். அது எப்ப வந்து குடிக்குதுன்னு தெரியாது. ஆனா யால் காணாம போயிருக்கும்.

அடுத்த கதை இந்த மாணிக்கக் கல்!  அப்படி ஒன்று கிடையாது என்பதுதான் நிஜம்.

பாட்டி "பாட்டி பாம்ப பாக்கணும் என்பார்கள் அந்த பாட்டி" பேரக் குழந்தைகள். "பாட்டி வயசான பாம்பு கிட்ட மாணிக்கம் இருக்குமாமே?  இந்த பாம்புகிட்டே இருக்குமா பாட்டி? "பேரக் குழந்தைகள் கேட்பார்கள்..

"வேண்டாமடா கண்ணே. அது அதோட சொத்து நமக்கு எதுக்கு ? வயசான பாம்பு கக்கிட்டு இரை தேட போகும் போது இருக்கும் மாணிக்கத்தை ஒளியில்தான் இரை தேடுமாம்.  மாணிக்கத்தை எடுக்கிறதுக்காக பேர் அது மேல சாணியை போட்டு மூடி கண் தெரியாமல் பாம்பு தவிக்கும்போது சில | பாம்பையும் கொன்னு மாணிக்கத்தையும் எடுத்துப்பாங்களாம். நிறைய கதைகள் இது மாதிரி நான் கேள்விப்பட்டு இருக்கேன். ஏதுக்கப்பா மாணிக்கமும் நமக்கு | வைடூரியமும். அது பாம்போடு சொத்து. 1 அது பாம்போடயே இருக்கட்டும். பாம்பு புற்றுக்கு பால் விட்டா தோஷமெல்லாம் போயிடும்."

குழந்தைகள் இவள் சொல்லும் கதைகளை வியப்போடு கேட்பார்கள். இவள் புற்றுக்கு பால் ஊற்றுவதையும் நிறுத்தவில்லை. நிறுத்தவில்லை. அந்த பாம்பு வெளியே வந்து யாரும் பார்க்கவும் இல்லை. 

இந்த இடத்தில் மட்டும் 'குழந்தைகள் இவள் சொல்லும் "கதைகளை" என்று எழுதுகிறார்!  அப்புறம் கதையை இப்படி முடிக்கிறார்...

சில நாட்களாக யாரும் புற்றுக்கு பால் ஊற்றாத காரணத்தால் வெளியே வந்த அந்த கிழட்டுப் பாம்பு  வாழும் பாம்பு புற்றின் வாயிலிலேயே இறந்து கிடந்தது.

இப்போது அவர் சொல்லும் கருத்து நிஜம், குழந்தைகளுக்கானது அல்ல என்று வாசகர்களுக்கு சொல்கிறார்!

அடுத்து சுபா என்று அழைக்கப்படும் சுரேஷ் பாலகிருஷ்ணன் எழுதிய 'பாரதநாடு என் வீடு' கதையில் நடுவில் ஓரிடத்தில் கல்யாணி, வசந்தி ஆகிறாள்!!

பசு. தனபாலன் எழுதிய ஒரு சிறுகதையில் குன்றத்தூரில் இருந்து அம்பத்தூர் செல்பவர்கள் முகலிவாக்கம் வழியே செல்கிறார்கள்.  கதைதானே என்று சொன்னாலும் இது சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!  அதுவும் முகலிவாக்கத்தில் லாரி சர்வீஸ் சென்டர் இருப்பதாக அஃதை.  கதையும் அம்புலிமாமா ரகம்!  

======================================================================================

நமக்கு எப்போதுமே ஒரு விஷயத்தில் சுவாரஸ்யம் உண்டு.  இப்போது இருக்கும் ஒரு இடம் சில வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்திருக்கும்?  கத்திப்பாரா வருவதற்கு முன் என்று கிண்டியை ஒரு போட்டோ எடுத்து வைத்திருந்தேன்.  அதேபோல மெட்ரோ வருவதற்குமுன் உதயம் தியேட்டர் சந்திப்பை ஒரு போட்டோ எடுத்து வைத்திருந்தேன்.  இந்த எண்ண ஓட்டத்தில் "இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் போகலாம்" என்று ஒரு கவிதை வடிவமும் எழுதி பகிர்ந்திருந்தேன்!  அப்படியான முன் மெட்றாஸ், இப்போதைய சென்னை பற்றிய V. ஸ்ரீராம் அவர்களின் ஒரு காணொளி.  அது சரி, உதயம் தியேட்டர் இப்போது இல்லை தெரியுமோ?

====================================================================================================

சனிக்கிழமையில் வரும் நான் படிச்ச கதைக்கு ஒரு உதாரணம்.  சிலிக்கான் ஷெல்ப் RV  எழுதி இருக்கும் ஒரு நான் படிச்ச கதை பாணி பதிவு..

அம்புப் படுக்கை – சுனில் கிருஷ்ணன்

ஜெயமோகன் தனது உரை ஒன்றில், ஒரு புனைவுக்கதை எழுத்தாளன் தன் படைப்பில் கொண்டு வர வேண்டிய மூன்று முக்கிய விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.

Subconcious

Philosophical View
Vision


எழுத்தாளனின் ஆழ்மனம் படைப்பில் வெளிப்பட்டிருக்க வேண்டும். அவனது தத்துவப் பார்வை கதையில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவற்றின் விளைவாக அவன் கண்டடைந்த தரிசனம் கதையில் எழுந்து வர வேண்டும் என்கிறார். அவ்வாறன்றி, அவன் தன் நேரடி அனுபவங்களையும் நடைமுறை யதார்த்தத்தையும் மட்டும் முன்வைக்கும்போது தனது குறுகிய வாழ்வின் குமாஸ்தா அனுபவங்களை மட்டுமே எழுத்தில் கொண்டு வர முடியும்; வாசகனுக்கும் அந்த குமாஸ்தா அனுபவங்களே சென்று சேரும் எனவும் தெளிவாகக் கூறுகிறார்.
இந்தப் பின்னணியில் ஆசிரியர் சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை தொகுப்பு வெறும் நடைமுறை யதார்த்தத்தை மட்டும் முன்வைக்கும் வறண்ட படைப்பாக இல்லாமல் "விடுதலை என்பது உண்மையில் என்ன?", "மரணம் என்பது விடுதலையா?" என்ற தத்துவக் கேள்விகளை திறமையாக புனைகதை எழுத்தாளனின் கற்பனைத் திறனோடு முன்வக்கும் சிறந்த படைப்பாக அமைகிறது. இந்தத் தொகுப்பிலிருக்கும் கதைகள் வேறு வேறு காலகட்டங்களைச் சேர்ந்ததாக இருப்பினும் அவை யாவும் மரணம், மரணத்தைக் காட்டும் அறிகுறிகள், மரணப் படுக்கையில் இருப்பவரின் வலி, மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வி ஆகிய பொதுச்சரடால் இணைக்கப்பட்டுள்ளன.


அம்புப் படுக்கை என்ற இந்த குறிப்பிட்ட சிறுகதையில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் - ஆனாரூனா, அவரது நண்பர் நாடி வைத்தியர் தாத்தா, மற்றும் நாடி வைத்தியரின் பேரன் சுதர்சன். சுதர்சனின் பார்வையில்தான் இந்தக் கதை சொல்லப்படுகிறது. இவர்களைத் தவிர நான்காவது கதாபாத்திரம் ஒன்றுண்டு - தர்மா எனும் ஆனாரூனாவின் உதவியாள். கதையின் முதல் வரியிலும் கடைசி வரியிலும் மட்டுமே வந்தாலும், தர்மாதான் மற்ற மூன்று பாத்திரங்களையும் இணைக்கும் மையப்புள்ளி. ஒரு வகையில் இந்தக் கதையே கூட தர்மாவைப் பற்றியது எனக் கூறிவிடலாம். ஏனெனில் இதில் தர்மன் என வருவது எமதர்மன்தான். காலனுக்குரிய பச்சை நிறத்தில், பல காலமாக துருவேறி ஓசை எழுப்பும் ஒரு சைக்கிளில் எலும்புகள் உடையும் ஓசையுடன் அவன் வந்திறங்கும் முதல் வரியிலேயே கதை மரணத்தைப் பற்றியது என்பது தெளிவாகிறது.

ஆனாரூனா வாழ்வின் மீது பெரும் பற்றும் இச்சையும் கொண்ட மனிதர். வாழ்நாள் முழுவதும் அவருடைய உயிருக்குத் தொடர்ந்து ஆபத்துகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஜப்பானிய குண்டுவீச்சிலிருந்து தப்பி பர்மாவிலிருந்து ஓடி வருகையிலும், தண்ணீரில் நீந்தும் பாம்பிடமிருந்தும், பிரிட்டிஷ் கண்காணிப்பிலிருந்தும் என ஒவ்வொரு முறையும் அவர் மயிரிழையில் உயிர் தப்புகிறார். அதைப் பற்றிய கைதகைள அவர் மிகப் பெருமிதமாக ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

ஆனாரூனாவிற்கு நாடி வைத்தியர் தாத்தாவின் மீது அபார நம்பிக்கையும் நெருங்கிய நட்பும் உண்டு. தாத்தா மரணக் குறிகளில் மிகத் தேர்ந்தவர். நாடி பிடித்து மிகத் துல்லியமாக மரணம் எப்பபோது நிகழும் எனச் சொல்லக் கூடியவர். ஆனாரூனா தெய்வம் திட்டமிட்டு தன் உயிரைக் குறிவைத்து அம்பெய்வதாகப் புலம்புகையில், தாத்தா “அதற்கெல்லாம் ராவணனைப் போல பெரிய ஆகிருதி வேண்டும். நமக்கெல்லாம் பொத்தாம் பொதுவான அம்புமாரிதான்” எனக் குறிப்பிடுகிறார்.

மரணத்தைப் பற்றி அத்தனை தெளிவான பார்வையிருந்தும், அடுத்தவர் மரணத்தைக் கணிக்க முடிந்தும், வாழ்வின் அபத்தமான முரணாக, மிகக் கொடுமையான தண்டுவட டி.பி. நோய் வந்து மரணப்படுக்கையில் விழுகிறார். அம்புப் படுக்கையின் உண்மையான வலி என்ன என்பதை உணர்ந்து இறுதியில் உயிர் விடுகிறார். நேர்மாறாக, ஆனாரூனா வாழ்நாள் முழுவதும் அம்புமாரியிலிருந்து தப்பி, இறுதியில் ஒற்றை ஒரு அம்பை மட்டும் ஏந்தி மரணப் படுக்கையில் விழுகிறார். அவரது நாடியைப் பிடித்துச் சொல்லுவதற்காக சுதர்சன் வேண்டாவெறுப்பாக அங்கு வந்து சேருகிறான்.
சுதர்சனின் கதாபாத்திரத்தை மிகத் திறைமயாக இந்தக் கதையில் பயன்படுத்தியுள்ளார் ஆசிரியர் சுனில். சுதர்சன் நவீனக் காலக்கட்டத்தைச் சேர்ந்தவன். மரபின் மீதும் ஆயுர்வேதத்தின் மீதும் நம்பிக்கையின்றி, தாத்தாவின் கட்டளையின் பொருட்டு மட்டுமே ஆயுர்வேதக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் மாணவன். அவனது பார்வையில் கதையைச் சொல்வதன் மூலம், மரபுக்கும் நவீனத்துவத்திற்குமான முரண்பாட்டையும், ஒன்றையொன்று மறுக்கும் இடத்தையும் ஆசிரியர் காட்டுகிறார். கடந்த காலக் கதையையும் நிகழ்காலக் கதையையும் மாறி மாறிச் சொல்லும் யுக்தியாகவும் சுதர்சனைப் பயன்படுத்துகிறார்.  

மரபின் மீது நம்பிக்கையின்றி, ஆனாரூனாவின் நாடியைப் பிடிக்கும் அந்தக் கணத்தில், சுதர்சனின் ஆழ்மனம் அவனது மரபுத் தொடர்ச்சியைத் தொட்டெழுப்புகிறது. சிற்றலையென, அமைதிக்குப் பின் வரும் பேரலையென எழுந்து வரும் நாடித்துடிப்பை அவன் முதன்முறையாக உணர்கிறான். ஆனாரூனாவின் நாடித்துடிப்பில் நாகப்பாம்பையும், கடலாழத்தில் நீந்தும் ஆமையையும் அவன் கண்டுகொள்கிறான். நம் மரபில் நாகம் வாழ்வின் மீதான இச்சையைக் குறிக்கிறது. நீள்வாழ்வின் குறியீடாக ஆமையைக் கொள்ளலாம் எனில், ஆனாரூனாவின் நாடி அந்த அம்பிலிருந்தும் தப்பி வாழ விழையும் அவரது உயிர் வேட்கையைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

ஒரு வைத்தியனாக, ஆனாரூனா இறந்து விடுவார் என்ற உண்மையைச் சொல்லுவதா, இல்லை “ஒன்றுமில்லை” என்று கூறி அவருக்கு நிம்மதி அளிப்பதா என்ற அறச்சிக்கலை சுதர்சன் இங்கு எதிர்கொள்கிறான். முடிவில், “அவருக்கு எந்த உயிர் அச்சமும் இல்லை; அவர் சொல்ல வேண்டிய கதைகள் இன்னும் மீதமுள்ளன” என்று கூறி வெளியேறுகிறான்.

அவன் கூறியது உண்மையா, பொய்யா என்பதை வாசகனின் முடிவிற்கே விட்டுவிடுகிறார் சுனில். ஆனால் அவன் எடுத்த முடிவு சரியானது என்பதை, வெளியில் காத்திருக்கும் தர்மன் தன் வழக்கமான புன்னகையோடு சுதர்சனைத் தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தயக்கமின்றி செல்வதிலிருந்து நாம் ஊகிக்க முடிகிறது.

இதே அம்புப்படுக்கைத் தொகுப்பில் முதல் கதையான வாசுதேவனிலும் ஒரு பயிற்சி மருத்துவர் வருகிறார். ஒவ்வொரு நாளும் மரண வேதனையை அனுபவித்து, அம்புப்படுக்கையில் இருக்கும் அந்த வாசுதேவனின் நிலையையும், அவன் பெற்றோர் படும் கவலையையும் எண்ணி, “ஒரு நாள் சிகிச்சை போடத் தாமதமானாலும் உயிர் போய்விடும்” என்ற உண்மையை அப்பட்டமாக எடுத்துக் கூறும் இடத்திலிருந்து, இந்தக் கதையில் சுதர்சன் ஆனாரூனாவிற்கு “ஒன்றுமில்லை” என்று கூறும் இடத்துக்குச் செல்லும் மாற்றத்தை ஆசிரியர் இந்தக் கதைகளின் மூலம் அடையும் தரிசனமாக நான் காண்கிறேன்.

ஆசிரியரின் ஆழ்மனமும் தத்துவ வெளிப்பாடும் நிகழ்ந்து, அவரது தரிசனம் எழுந்து வரும் இந்தக் கதைகள் நம் மனதிற்கு என்றும் நெருக்கமானவையாக நின்றிருக்கும்.

என் குறிப்பு: அம்புப்படுக்கை சிறுகதை என்னைப் பொறுத்த வரை சுதர்சனுக்கு ஆனாரூனாவின் நாடி பிடிபடும் இடம் மட்டுமே. அது மிகச் சிறிய பகுதியாக இருக்கிறது, இன்னும் விரித்துச் சொல்லப்பட்டிருந்தால் இன்னும் நல்ல சிறுகதையாக உருவாகி இருக்கலாம் என்று கருதுகிறேன். இப்போது படிக்கலாம்தான், ஆனால் படித்தே ஆக வேண்டிய சிறுகதை அல்ல என்றுதான் கருதுகிறேன்.

=====================================================================================

பட்டிமன்றத் பேச்சாளர் பர்வீன்  சுல்தானா பேசும் பாணி சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது.  ஆனால் சில சுவாரஸ்யமான விஷயங்கள் அவ்வப்போது அகப்படும்.  அதில் ஒன்று...  வைக்கம் முகமது பஷீர் பற்றி சொல்லி இருக்கிறார்.  அதுவே ஒரு சிறப்பான சிறுகதை போல இருக்கிறது பாருங்கள்..


=========================================================================================================

பாடலுக்கு வரிகள்தான் பலம் என்று வைரமுத்து உள்ளிட்ட சிலர் கொஞ்ச காலம் முன்பு கொடி பிடித்தனர்.  இசைதான் பலம் என்று சிலர் சொன்னார்கள். நான் இசையின் கட்சி.  இந்த வாதமெல்லாம் இப்போ இல்லை..  முன்னாலேயே இருந்திருக்கிறது.  இதோ இங்கே இளையராஜா முன்னர் சொன்ன விஷயம்...

==========================================================================================

80 கருத்துகள்:

  1. வெள்ளிச் சிதறல் என்ற Tag இந்த வார வெள்ளிப் பதிவுக்குப் பொருந்துது.

    சிறுகதை பற்றிய விமர்சனம், தரிசனம் என்றால் வாசகர் முழுக் கதையையும் படிக்கும்படி இருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. நன்றி. நான் இங்கு செய்திருக்கும் புற்று கதை போன்றவை விமர்சனம் அல்ல.. அதிலிருக்கும் குறைகள். எனவே கதை முழுவதும் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. உங்க விமர்சனம் சரியா, அது வேறு ஒரு வாசகருக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துது என்று அறிய கதைச் சுட்டியோ இல்லை முழுக் கதையோ வேண்டாமா?

      நீக்கு
    3. இது கதை பற்றியோ, அதன் கரு பற்றியோ விமர்சனம் இல்லை நெல்லை.  அவர் சொல்லி இருக்கும் கருத்து பற்றி.  அதற்கு அவர் மாற்றுக்கருத்தும் சொல்லவில்லை.  அந்த வரிகளை நான் இங்கு கருப்பு நிற எழுத்துகளில் கொடுத்திருக்கிறேன்.

      நீக்கு
  2. காணொளிகள் பிறகுதான் பார்க்கணும்.

    தான் வியந்து அண்ணாந்து பார்த்தவர்களோடு வேலை செய்யும் சூழல் வருவதே பெரும் பாக்கியம்தான்.

    சிவாஜி, கண்ணதாசன், எம்எஸ்வி, எஸ்பிபி, ஜானகி.... எனப் பல்வேறு ஸ்டார்களுடன் சிறுவனாக இருக்கும்போதே வேலை செய்யும் வாய்ப்பு, அவங்கள்ட இருந்து வேலை வாங்கும் வாய்ப்பு கிராமத்துச் சிறுவனுக்குக் கிடைத்தது ஆச்சர்யம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதோடு அவருக்கும் திறமை இருக்க வேண்டும். பின்னாட்களில் இவ்வளவு பெரிய உயரம் அடைவதற்கு.

      நீக்கு
  3. இதற்கு முன் இந்த இடம் எப்படி இருந்தது? இதுவே சுவாரசியம்தான். பழைய படங்களில் சென்னையைப் பார்க்கும்போது அப்படித் தோன்றும்.

    க ராசாராம் கருணாநிதி நகர் அசோக் நகரை வடிவமைத்தபோது அடையார் காடாக இருந்ததாம். புதிய இடத்தின் நில மதிப்பு அதிகம் என எழுதியிருந்தார்.

    நம் மனதின் நினைவுகளுக்கு, கால மாற்றத்தால் இடங்கள் மாறுவதை ஏற்றுக்கொள்ள இயலுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  சுவாரஸ்யமான தகவல்கள்தான்.  அப்போதைய சென்னை தனித் தனி கிராமங்களாக தான் இருந்தது.

      நீக்கு
    2. மாம்பலத்தில் நான்கைந்து கிராமங்கள் இருந்தன என்பதை இப்போதுள்ளவர்களால் நம்ப முடியாது. லேக் வியூ சாலை என்பதே தற்காலத்தில் மாம்பலம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் அபத்தமாக இருக்கிறது. இருக்கிற நீர்நிலைகளை சொந்த லாபத்துக்காக ஆக்கிரமித்துவிட்டு, உலகம் கிரீன் , விலங்குகள் பாதுகாப்பு, காட்டு பாதுகாப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு என்று போலியாக்க் கவலைப்படுகிறது.

      நீக்கு
    3. மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணம்.  நகர மயமாக்கல், நகரை விரிவு படுத்துதல் என்று ஆக்க வேண்டியதாயிருக்கிறது.  பள்ளிக்கரணை அருகில் இப்போதும் சதுப்பு நிலம் இருக்கிறதே...

      நீக்கு
    4. 1986-90கள்ல நான் பெருங்களத்தூரில் இருந்தேன். அது எவ்வளவு பெரிய நீர்நிலை தெரியுமா? நல்ல வெயில் காலத்துல சுவிசேஷக் கூட்டம்னு ஆரம்பிச்சு, மெதுவா பாதி இடங்களுக்கு மேல ஆக்கிரமித்துவிட்டார்கள். இப்போ உள்ளது முப்பது சதம் கூட இல்லை.

      நீக்கு
    5. அந்த இருவரும் தான் அதிகம் ஆக்கிரமிக்கிறார்கள்!

      நீக்கு
  4. கால மாற்றங்கள் - எப்படி இருந்த இடம் எப்படி மாறிப் போகிறது என்று யோசனை வருகிறது. நான் பார்த்து நினைவில் இருந்த சில இடங்கள் சுவடில்லாமல் மாறிப் போயிருக்கிறது.

    பதிவில் இருக்கும் காணொளிகள் பிறகு தான் பார்க்க வேண்டும். இசை - பாடல் வரிகள் - எது முக்கியம்? இரண்டுமே தேவை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க வெங்கட்.

      இரண்டுமே தேவைதான். எது ரொம்ப முக்கியம்?!!! வார்த்தைகளே இல்லாமல் MSV, இளையராஜா பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவை பெரும்பான்மை இல்லை!

      நன்றி.

      நீக்கு
  5. //கத்திபாரா வருவதற்கு முன் அந்த இடம்... //
    அடடா! அந்த அருமையான இடத்தின் பழைய படத்தை வெளியிட்டிருக்காமில்லையா?... புறாவை சிறகடித்துப் பறக்க விட ஒரு சரித்திர புருஷரின் படம் கிடைத்திருக்குமில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தால் வெளியிட்டிருக்க மாட்டேனா...  எப்பவோ காணாமல் போய்விட்டது அது!

      வாங்க ஜீவி ஸார்...

      நீக்கு
  6. அட! விஜயபாரதம் எல்லாம் வாங்கறீங்களா, என்ன?

    பதிலளிநீக்கு
  7. விமலாரமணி ஆகச் சிறந்த எழுத்தாளர். கோயம்புத்தூர்காரர். பிற்கால ராஜேஷ்குமார் மாதிரி. பள்ளித்தல ஆசிரியை. எழுத்து, எழுத்தாளர்கள், வாசிப்பு, விமரிசனம் என்று அர்ப்பணிப்பு உணர்வுடன் எபி இழந்த பெருமைகளையெல்லாம் மீட்டெடுத்துக் கொண்டு வெளிவருவதைப் பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார்...   பகிர நிறைய இருக்கும்போது குறைந்த இடம் போதவில்லை!  அதுதான்.

      சிறந்த எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை.  ஆனால் அவர் சொல்லி இருக்கும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை.  அதுவும் ஆசிரியராக இருப்பவர் இப்படி தவறான தகவலை பரப்பக் கூடாது என்று நினைக்கிறேன்!!

      நீக்கு
  8. 'யார் அந்த ஸ்ரீராம். V...?' என்று யாராவது கேட்கமாட்டார்களா என்ற நினைப்பு மேலோங்குகிறது! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. யார் அந்த ஸ்ரீராம் . V?

      நீக்கு
    2. வி. ஸ்ரீராம் (Sriram V) (பிறப்பு 1966) என்பவர் சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியர், பாரம்பரிய ஆர்வலர் (heritage activist), பத்திரிகையாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். அவர் 'History Times with Sriram' என்ற யூடியூப் சேனல் மூலம் சென்னையின் வரலாறு, கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரம் குறித்து பல ஆவணப்படங்களை வெளியிட்டுள்ளார்.

      ஸ்ரீராம் . V பற்றிய முக்கிய தகவல்கள்:

      வரலாற்றுப் பணி: சென்னை மற்றும் அதன் பாரம்பரிய இடங்கள், இசை வரலாறு, மற்றும் சமூக வரலாறு குறித்து விரிவாக எழுதி, 'Heritage Walks' எனப்படும் பாரம்பரியப் பயணங்களை நடத்துகிறார்.
      பத்திரிக்கை & எழுத்து: பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார், மேலும் 'Madras Musings' என்ற இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

      கல்வி & பின்னணி: தில்லி பொறியியல் கல்லூரியில் பொறியியலும், தில்லி பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம் (Marketing and Advertising) முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
      யூடியூப் சேனல்: Sriram V - YouTube என்ற சேனலில், "கீழ்ப்பாக்கம் வரலாறு", "சென்னை 600002" போன்ற தலைப்புகளில் வீடியோக்களை வெளியிட்டு, சென்னை மக்களின் வரலாற்று உணர்வை மேம்படுத்துகிறார்.

      தொழில்: தொழில்முறையாக, அவர் குடும்ப வணிகமான இண்டஸ்ட்ரியல் ஹைட்ராலிக்ஸ் மற்றும் மென்பொருள் துறையில் ஈடுபட்டுள்ளார்

      சென்னை வரலாற்றைக் கற்பதற்கும், பாரம்பரியத்தைப் புரிந்துகொள்வதற்கும் இவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

      நீக்கு
  9. ஜெயமோகனின் கதை விமரிசனமும் அதற்காண தேர்வுக் கதைகளும் என்றைக்குமே அலாதி தான். அந்தக் கடைசி வரியை அவர் தவித்திருக்கலாம் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அந்த கடைசி வரி எல்லாவற்றுக்குமே போருந்தும்தானே!

      நீக்கு
  10. எதுவும் யாரும் உயிர் இல்லாமல் உலாவ முடியாது.
    உலாவுதல் இசை என்றால் உயிர் உள்ளார்ந்திருக்கும் பாடலின் வரிகள்.
    -- என்ற கட்சிக்கு கொடி பிடிப்பவன் நான். !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான கருத்து. ஒத்துக்கொள்ளக்கூடிய கருத்து. ஆனால் அதே சமயம், இசை இல்லாத எத்தனை கண்ணதாசன் பாடல்கள் மக்களுக்கு பரிச்சயம்? கண்ணதாசன் என்றில்லை, பொதுவான கவிஞர்களின் வரிகள்...

      நீக்கு
    2. பாடல் வரிகளை கன்னாப்பின்னா என்று பந்தாடும் இசையும்
      பாடுபவர் பாடல் வரிகளைத் தவறாக உச்சரித்துப் பாடுவதும் உறுத்தும் இல்லையா,?..

      நீக்கு
    3. தமிழைத் தவறாக உச்சரித்தால் உறுத்துகிறது என்று சொல்பவர்கள் பழைய தலைமுறை. புதிய தலைமுறைக்கு தமிழைத் துப்புத் துப்பிப் பேசுவது, பரோட்டாவைப் பிரிப்பதுபோல கன்னாபின்னா என்று பிரிப்பது, ல ள ழ வித்தியாசம் இல்லாமல் பேசுவது, அதிலும் பேசுவது அழகிய பெண்ணாக இருந்தால் இன்னும் சுவாரசியம் ஜீவி சார்.

      நீக்கு
    4. அந்தநாள் பாடல்களில் ( அந்தநாள் பாடல்களே இல்லாத படம் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!)  வரிகள் தெளிவாக புரியும்.  இப்போது சத்தங்கள்தான் அதிகம்.

      நீக்கு
    5. தெருக்கோயிலே ஓடிவா உட்பட பாடல் உச்சரிப்பில் தவறு செய்தால் பளிச் என்று தெரியும்.

      நீக்கு
    6. பில்லைத் தமிழ் பாடுகிறேன்.... ஒரு பில்லைக்காக பாடுகிறேன்...!!

      நீக்கு
  11. பதில்கள்
    1. முருகா..   வாங்க செல்வாண்ணா..  வணக்கம்.

      நீக்கு
  12. பாடல்களின் இடங்களுக்கு, இசைக்குத் தகுந்தவாறுதான் ஒரு பாடலுக்கு வரிகள் முக்கியமா இல்லையா என்றே தெரியும்.

    கொலைவெறி பாடல், சம்போ சிவ சம்போ, டார்லிங் டார்லிங், போன்ற பல பாடல்களுக்கு வரிகள் முக்கியமல்ல. அதிலும் பொருத்தமான வரிகள் இருந்தால் பாடலை உயரத்துக்குக் கொண்டுசெல்லும்.

    கர்ணன் படப் பாடல்கள் (சமீப கர்மாந்திர கர்ணனைச் சொல்லவில்லை), பா வரிசை கதையுள்ள படங்களுக்கு, கற்பகம் போன்ற படங்களின் பாடல்களுக்கு அர்த்தமுள்ள வரிகள் இருந்திருக்காவிட்டால் ரசிக்க இயலாது. த்த்துவப் பாடல்களுக்கு அடிப்படையே வரிகள்தாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 50 : 50 என்று வைத்துக் கொள்ளலாம்!

      நீக்கு
    2. இந்த தலைப்பில் நெல்லை டாக்ரேட் பட்டம் வாங்கி விடுவார் போலிருக்கே! அதுவும் இந்த ல,ள,ழ -- சமாச்சாரங்களில் டி.வி. செய்திவாசிக்கும் ஆரணங்குகள், தொகுப்பாளினிகள் தமிழ் உச்சரிப்புகளைப் பார்த்தால் .... இதற்கெல்லாம் தேர்வுக் குழுவே இருக்காதோ என்ற எரிச்சல் தான் ஏற்படுகிறது.

      நீக்கு
  13. நேற்று மாலை கல்லூரி நண்பன் பெண் திருமண வரவேற்பு.  இன்று ஒரு பூணூல் கல்யாணத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டயட் இருக்கக் கூடாது என நீங்கள் கங்கணம் கட்டியிருக்கிறீர்களா இல்லை உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அப்படி நினைக்கிறார்களா?

      நீக்கு
    2. எக்ஸாக்டாக காலை இதை தான் நானும் நினைத்தேன். எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை.

      நீக்கு
  14. புதுமையான வெள்ளிப் பதிவு...
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  15. மனதில் பதிந்திருக்கும் எபியின் பிம்பம்
    மாறுவதற்கு சில மாதங்கள் ஆகலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் எதிர்பார்ப்பின் ஏமாற்றம் புரிகிறது.  மன்னிக்கவும் செல்வாண்ணா...

      நீக்கு
  16. பதில்கள்
    1. கவனியுங்கள் செல்வாண்ணா...   நானும் ஒரு விழாவுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்!

      நீக்கு
  17. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அக்கா வந்தாச்சு... வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    சில நாட்களாக பதிவுகளுக்கு வர முடியவில்லை. வெளியில் சற்று அலைச்சல், அனைவரின் பதிவுகளையும் படிக்கிறேன். நேற்றைய பதிவில் என்னைத்தேடிய நலம் விசாரித்த சகோதரிகள் கீதா சாம்பசிவம் கீதாரெங்கன் அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி. உங்கள் அனைவரின் அன்பிற்கும் மிக்க நன்றி சகோதரரே. பதிவுகளை படித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. ஸ்ரீராம் முதல் பகுதியை மிகவும் ரசித்தேன். அதாவது கதைக்கான ஒரு சின்ன அறிமுக வரி, இடையில் கதை போகும் போக்கைச் சொல்லும் வரி இறுதியில் முடிவின் போக்கைச் சொல்வது என்று உங்கள் கருத்துடன் நல்லாருக்கு.

    கதை ஸோ ஸோதான் குழந்தைகள் கதை போன்று அதாவது குழந்தைகளுக்கு இட்டுக்கட்டி சொல்லும் கதை போன்று இருக்கிறது. இட்டுக்கட்டிய கதைகளில் வரும் ஒரு மூடநம்பிக்கைக் கருத்தைச் சார்ந்து எழுதப்பட்டக் கதை. மிகப் பெரிய எழுத்தாளர் இவர். அவருமே இப்படி எழுதியிருக்கிறாரே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... கதை வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகள் பற்றியது. இந்தக் கதையில் ஸ்லோ பாய்சனிங் கொடுத்து, பாம்பை கடிக்க விட்டு என்று மகன் தாயை கொல்ல நினைக்கிறான்.

      நீக்கு
  20. முடிவிலேனும் குழந்தைகளுக்குச் சொல்லும் இடத்தில் மாற்றிச் சொல்லப்போகிறாரோ என்று நினைத்தால்....முடிவு ரொம்பவே சொதப்பியிருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல வந்த கருத்துக்கு ஓகே. ங ஆனால் அது தவறான கருத்து. நீங்கள் குவிகம் கதையில் ஒரு குறை சொன்னீர்கள் இல்லையா? அது போல...

      நீக்கு
  21. 'பாரதநாடு என் வீடு' கதையில் நடுவில் ஓரிடத்தில் கல்யாணி, வசந்தி ஆகிறாள்!!//

    யெஸ்! தெரியும் ஸ்ரீராம், இது நான் அப்பாவுக்கு எடுத்துக் கொடுத்த போது வாசித்த போது தெரிந்தது.

    இதே போன்று வேறு ஒரு சிலவற்ரிலும் (இவர்கள் எழுதியதல்ல) பார்த்திருக்கிறேன்.

    முகலிவாக்கம் பகுதி போரூர் பக்கத்தில் இல்லையா? மழைக்காலத்தில் ரொம்பவே தண்ணி தேங்கும் பகுதி! கனமழையின் போது 6 அடி வரை கூடப் போகும்னு செய்திகளில் வாசித்ததுண்டு.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரத நாடு என் வீடு கதை நீங்கள் வாசிக்க வாய்ப்பில்லை கீதா... இது கடைசி தீபாவளிக்கு வந்த கதை.

      நீக்கு
    2. அவர் சொல்லும் இடத்திலிருந்து அம்பத்தூர் போகிறவர்கள் கண்டிப்பாக இப்படி சுற்றிக்கொண்டு போக மாட்டார்கள். வானகரம் பைபாஸில் தான் செல்வார்கள்.

      நீக்கு
  22. கதைகளில் ஊர்ப் பெயர், உடல் உபாதைகள், மருத்துவம், நம்பிக்கைகள், இராணுவம் இப்படி அமைத்தால் அதில் உண்மைத்தன்மை இருப்பது சிறப்பு...ஃபிக்ஷன்/புனைவு என்பது வேறு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனையாக இருந்தால் கூட லாஜிக் பொருந்த வேண்டும் இல்லையா?

      நீக்கு
  23. V. ஸ்ரீராம் அவர்கள் தனி யுட்யூப் சானல் வைத்திருக்கிறார்.

    வல்லிம்மா இவரது வீடியோக்களை ஆர்வத்துடன் பார்ப்பாங்க அவங்க தளத்திலும் பகிர்ந்திருக்காங்க.

    சினிமா பத்தியும் காலகட்டம் பத்தியும் வரலாறு என்று நிறைய தகவல்கள் சொல்வார் அதே போன்று இக்காணொளியிலும். நிறைய தகவல்கள்.

    1930களிலேயே சப் அர்பன் ரயில்கள் வந்துவிட்டது என்ற தகவல்..சென்னை ஒரு கிராமம் போன்று இருக்கும் அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நானும் நிறைய பார்த்திருக்கிறேன். ஜே கே சி சார் இவரை நான்தானோ என்று சந்தேகப்பட்டார்!!

      நீக்கு
    2. நினைவு இருக்கு. ஜெ கே அண்ணா சந்தேகப்பட்டது..

      கீதா

      நீக்கு
  24. என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
    என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…
    ​வெள்ளி வியாழன் ஆகிறது, சனி வெள்ளி ஆகிறது, இனி சனி என்னவாகும்? பாசுரத்தில் நிக்காம?
    ஜெ மோ பொதுவே எல்லாம் அறிந்தவர் என்றாலும் ஒரு குழப்பவாதி என்று எனது கருதல். ஆனால் அம்புப் படுக்கை விமரிசனத்தில் கொஞ்சம் தெளிவாகவே எழுதியிருக்கிறார்.
    பாடலா இசையா என்ற கேள்வி சரியில்லை. பாடல் தனித்திருந்தால் கவிதை, இசை இசை மட்டும்தான். இவை இரண்டும் சேரும்போதுதான் சாம்பார் சாதம் உருவாகிறது. இதுவே ருசி அதிகம் உள்ளது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, அட, அடடா... சந்தோஷம் பொங்குதே... சந்தோஷம் பொங்குதே

      நீக்கு
    2. என்னமோ நடக்குதே ஒரு சினிமா பாடல். நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.

      நீக்கு
    3. ஆஹா... காற்று போன பலூன் ஆனேன்!

      நீக்கு
  25. சிலிகான் ஷெல்ஃபிலிருந்து வந்திருக்கும் நேற்றைய பதிவில் அம்புப்படுக்கை இக்கதை - வாசித்தேன், ஸ்ரீராம். நேற்று சிலிகான் ஷெல்ஃபில் பதிவில் நான்கு சிறுகதைகள் பற்றிய பதிவு மெயிலுக்கு வந்ததே அப்ப பார்த்தப்ப...அந்த நான்குகதைகளும் பே ஏரியா விஷ்ணுபுரகுழுவில் பேசப்பட்டவை என்றும் பத்மநாபன் என்பவர் இக்கதையைப் பற்றிய கருத்துகள் சொல்லியதையும்

    நான்கில் இது மட்டும் வாசித்தேன். அடுத்த மூன்றும் இனிதான். மிக நல்ல கதை.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ஆனால், ஸ்ரீராம் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஜெ மோ அவர்களின் கருத்தை அங்கு வாசிக்கலை இங்குதான் தெரிந்து கொள்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. வைக்கம் முகம்மது பஷீரின் இக்கதையை வாசித்திருக்கிறேன் ஸ்ரீராம். மொழிபெயர்ப்புக் கதைகள் இருக்கிறது. பர்வீன் சுல்தானா அதை அப்படியே அழகாக உணர்வுபூர்வமாகச் சொல்கிறார்! வசனவரி கூட அப்படியே! நினைவாற்றலை வியந்து பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கதை இல்லை கீதா . அவரது அனுபவம் என்று சொல்கிறார்.

      நீக்கு
  28. இளையராஜாவின் பேச்சை ரொம்ப ரசித்தேன். போனால் போகட்டும் போடாவைச் சொல்வதும்...

    உண்மையில் வார்த்தைகளுக்கு ஒரு அழகியல், ரிதம் கொடுப்பது இசை.

    நான் படிக்கும் காலத்தில் எனக்கு மனப்பாடச் செய்யுளை ஒரு ரிதத்தோடு அல்லது மெட்டோடு படித்தால் மனதில் எளிதாக நிற்கும்! எனக்கு.

    வார்த்தைகளின் உணர்வுகள் இசையில் கண்டிப்பாகச் ஜொலிக்கும் தான்.

    ராஜாவுமே கடைசில சொல்கிறார் இந்தக் கேள்வியே முட்டாள்தனமானது என்று அந்த உதாரணம்..ட்யூன் இல்லாமல் வார்த்தை எங்கருக்கு வார்த்தை இல்லாமல் ட்யூன் எங்கருக்கு என்று...

    என்றாலும் நான் கேட்கும் பாடல்களில் எனக்கு முதலில் மனதில் படிவது இசைதான். அப்புறம் தான் வார்த்தைகள். மாமியிடம் தமிழ்க்கீர்த்தனைகள் கற்ற போது முதலில் ராகம் மனதில் பதிந்துவிடும். அப்புறம் வார்த்தைகளைப் பிடிப்பேன்!

    கீதா
    கீதா

    பதிலளிநீக்கு
  29. எனக்கும் முதலில் மனதில் அமர்வது இசை தான். பிறகு தான் வரிகள். இசை மனதைக் கவராமல் எந்த பாடல், வரிகளால் மனதில் நிற்கிறது என்று யோசித்துப் பார்க்கிறேன். தேடித்தான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  30. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  31. //சில நாட்களாக யாரும் புற்றுக்கு பால் ஊற்றாத காரணத்தால் வெளியே வந்த அந்த கிழட்டுப் பாம்பு வாழும் பாம்பு புற்றின் வாயிலிலேயே இறந்து கிடந்தது.//

    வாழும் பாம்பு பால் ஊற்றாத காரணத்தால் இறந்து விட்டது என்கிறார்.

    பால் குடிக்குமா பாம்பு என்ற கேள்விக்கு குடிகாது என்றுதான் சொல்கிறார்கள்.
    தாகம் ஏற்பட்டு நீரை பருகுவது போல பாலை குடித்தால் செரிமான கோளாறு ஏற்பட்டு பாம்பு இறந்து விடும் என்கிறார்கள்.

    காலம் காலமாக கதைகளில், சினிமாக்களில் காட்டப்படுவது போல இப்போதும் நாக புற்றுகளுக்கு பால் முட்டை வைக்கிறார்கள்.
    பால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  32. V. ஸ்ரீராம் அவர்களின் ஒரு காணொளி பார்த்தேன் இந்த படமும் வசந்த் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன் நல்ல நகைச்சுவை கதை.
    குன்றத்தூர் கோயில், திருநீர்மலை எல்லாம் முன்பு அடிக்கடி சினிமாக்களில் வரும். இப்போது வை நிறைய மாற்றம் பெற்று இருப்பது உண்மை.
    என் மனைவி சினிமாவில் திருநீர்மலையை பற்றி நாலயிர திவய் பிரபந்ததில் வர்ணனை செய்தது போலவே அப்போது இருந்தது என்கிறார். மலையும், செடி, கொடிகளும் அழகும் அப்படியே இருந்தது. இப்போது தேடினால் கிடைக்காது என்கிறார்.

    பதிலளிநீக்கு
  33. அம்பு படுக்கை படிக்க தூண்டும் விமர்சனம்

    பதிலளிநீக்கு
  34. பர்வீன் சுல்தானா வைக்கம் முகமது பஷீர் பற்றி சொல்லி இருப்பது அருமை.
    அறம் அல்லது கருணை அருமை.

    பதிலளிநீக்கு
  35. இளையராஜா பாலசுப்பிரமணியத்தோடு பேசியதை கேட்டேன்.
    நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!